Thursday, December 29, 2022

உடுக்கை விரல் – என். ஸ்ரீராம்- ஜனவரி 2023.



ஜனவரி 2023. வெளியீடு:

 உடுக்கை விரல் – என். ஸ்ரீராம்

சிறுகதைத் தொகுப்பு.


பக்கங்கள் 176  விலை .170/-

---------------------------------------------------

நான் படித்த புத்தகம்


உடுக்கை விரல் – என். ஸ்ரீராம்(98417 16099)

சிறுகதைத் தொகுப்பு.


வெளியீடு:

முதற்பதிப்பு – ஜனவரி 2023.

சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோயம்புத்தூர் – 641 038. 

தொடர்புக்கு:

GR Prakash –

87789 24880  //  99409 85920

siruvanivasagar@gmail.com


புத்தகத்தைப் பற்றி:

இது ஒரு அற்புதமான சிறுகதைத் தொகுப்பு.  தாராபுரம், கோவை, ஈரோடு, பழனி பகுதிகளை உள்ளடக்கிய கொங்குப்பகுதி மக்களின் வாழ்வியல் பேச்சு வழக்கு.  ஆசிரியர் திரு என். ஸ்ரீராம் பால்யத்தில் பார்த்த, பழகிய பாத்திரங்களை கதைகளில் கொண்டு வந்திருக்கிறார்.

15 சிறுகதைகளில் அற்புதமாக எழுதியிருக்கிறார்.

இவரது எழுத்தை திரு நாஞ்சில் நாடன் அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

நம் கண் முன்னும் இப்படிப் பாத்திரங்கள் புழங்கியிருப்பார்கள்.

எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் என் கண் முன்னே உலவிய சில  பாத்திரங்கள்.

வண்டு (கோவணம் மட்டும் தான் கட்டியிருப்பார், கைகளை குறுக்கே மடித்து ஊரெங்கும் நடந்து கொண்டிருப்பார்.  எங்கள் ஊர் திருமுக்குளத்தில் நீண்ட நேரங்கள் மிதந்து கொண்டுரிப்பார்).

பரஞ்சோதி (திருநம்பியாக இருப்பார்.  மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்.  இவர் எங்கோ ஓரிடத்தில் இறந்து கிடந்தார்.  இவரைப் பற்றி யாருக்கும் தெரியாது).

இப்படிப்பாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.

இவ்வளவு அற்புதமான சிறுகதைத்தொகுப்பை, நல்ல எழுத்துகளை மக்கள் படிக்கக்  கொண்டு வந்த சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர் அவர்களுக்கு பாராட்டுகள்.

அற்புதமான எழுத்து நடைக்கு பாராட்டுகள்.  நாமும் அவர்களுடனேயே இருப்பது போல் இருக்கிறது.  பாராட்டுகள் ஆசிரியர் திரு என். ஸ்ரீராம்

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்.

நன்றி நண்பர்களே.

Rathnavel ayya fb

-----------------------------------------------------

உடுக்கை விரல்-என்.ஸ்ரீராம்-

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

விலை ரூ.170/-


தள்ளுபடி போக ரூ.150/-

(+அனுப்பும் செலவு 

தமிழ்நாட்டுக்குள் ரூ. 40/-

பிற மாநிலங்களுக்கு ரூ 50/-)


NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....


Canara Bank, H .Q.Road Branch, Coimbatore - 641018,


Current A/c no. 61211010003590


IFSC :  CNRB0001204


Beneficiary : Siruvani Vasagar Maiyam. 

****

8778924880

Google pay (siruvani vasagar maiyam) number

*****

சிறுவாணி வாசகர் மையம், 

24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, 

கே. கே. புதூர், 

கோவை - 641038


9940985920 /8778924880

(ஜி.ஆர்.பிரகாஷ்)


siruvanivasagar@gmail.com



எழுத்தாளர் என்.ஸ்ரீராம் ,மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா ஆகியோருடன்...






கடவுளுக்கென ஒரு மூலை- (மொ.பெ) -அனுராதா கிருஷ்ணசாமி -டிசம்பர்-2022



 கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

-அனுராதா கிருஷ்ணசாமி

பக்கங்கள் 224   விலை  ரூ.220/-

------------------------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

-அனுராதா கிருஷ்ணசாமி


 ரூ.220/-

(+அனுப்பும் செலவு 

தமிழ்நாட்டுக்குள் ரூ. 40/-

பிற மாநிலங்களுக்கு ரூ 50/-)


NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....


Canara Bank, H .Q.Road Branch, Coimbatore - 641018,


Current A/c no. 61211010003590


IFSC :  CNRB0001204


Beneficiary : Siruvani Vasagar Maiyam. 

****

8778924880

Google pay (siruvani vasagar maiyam) number

*****

சிறுவாணி வாசகர் மையம், 

24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, 

கே. கே. புதூர், 

கோவை - 641038


9940985920 /8778924880

(ஜி.ஆர்.பிரகாஷ்)


siruvanivasagar@gmail.com

----------------------------------------------------------------

நண்பர் திருமதி அனுராதா கிருஷ்ணசாமியின் சரளமான மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது, ‘கடவுளுக்கென ஒரு மூலை’, சிறுகதைத் தொகுப்பு.

சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு.

மொத்தம் 14 கதைகள் -பஞ்சாபி, ஹிந்தி, ஒடியா, உருது, டோக்ரா, வங்காளி, குஜராத்தி, கன்னடம் என்று வரும் சிறுகதைகள் அத்தனையும்  அந்தந்த மொழியில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் எழுதியவை.

ஆங்கில, ஹிந்தி வழியே தமிழுக்கு மொழிபெயர்ப்பானவை.

கடைசிக் கதையான குஜராத்திச் சிறுகதை 

’கதவு’ இப்படித் தொடங்குகிறது - ஹிமான்ஷி ஷேலாட் எழுதியது-

//

முட்டாள்ப் பெண்ணே! இப்படியே தொடர்ந்தால் நீ உன் கையாலேயே சாவது நிச்சயம். நான்கு நாள் ஆகிவிட்டதே, உனக்கு வயிறு வலிக்கவில்லையா? அந்தப் பெண்களைப் பார். ஒரு கவலையும் இல்லாமல் எவ்வளவு சந்தோஷமாகக் குந்தியிருந்து விட்டு வருகிறார்கள்! உனக்கு மட்டும் ரொம்பவும்தான் நொரநாட்டியம்

//

கழிவறை இல்லாத கிராமச் சூழ்நிலையில் குந்த வைக்க இடம், நேரம் பார்த்துக் காத்திருக்கும் பெண்கள் பற்றிய  கதை.

அனுராதா மேடத்திடம்  ‘நொரநாட்டியம்’  இங்கே எப்படி வந்தது என்று கேட்டேன்.

‘ஹிந்தியிலே நக்ரா தான்  இங்கே மொழியாக்கமாக வந்திருக்கு”


 May your tribe increase!


நன்றி EraMurukan Ramasami sir

-----------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை

(மொழி பெயர்ப்புச் சிறுகதைகள்)

பவித்ரா பதிப்பகம்

எல்லாக் கதைகளையும் பற்றிச் சொல்வது சாத்தியமில்லை/ தேவையுமில்லை என்பதால்  சொல்வதற்கு  நான்கு கதைகள்

அங்கூரி ( பஞ்சாபி)

அம்ரிதா ப்ரீதம்


கணவனின் திருமண பந்தத்தில் அங்கூரி இரண்டாம் மனைவி. பிரபாத்தியின் ஈமச்சடங்குகளின்போது அங்கூரியின் தந்தை அவனுடைய ஈர மேல் துண்டைப் பிழிந்து காயவைத்ததன் மூலம் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துத்தர மறைமுகமாக உணர்த்துகிறான்.ஆழ்ந்த கரிய நிறம்.அவள் உடல் தசைகள் விண்ணென்று இழுத்துப்பிசையப்பட்ட கோதுமை மாவு போல இருந்தன என வர்ணிக்கப்படுகிற அங்கூரி தனக்கு தேநீரில் எதையோ ராம் தாரா கலந்து கலந்து கொடுத்ததாக முடியும் அந்தக் கதையின் ஆழமும், அது நகரும் விதமும் மனதிலேயே நின்று விடுகிறது


அடிமரம் (ஹிந்தி)

கிருஷ்ண ஸோப்தி


மெஹ்ரானோடு பயணித்து அவள் மகள்களின் திருமணத்தில் பங்கேற்று சந்தோஷமாக இருந்தாலும், அவள் மாமியார்(பாட்டியம்மா) மற்றும் மாமனாரின் முதுமை அவர்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே மனதை பிசைந்துவிட அவர்கள் தங்கியிருந்த அந்த 'சாமான்கள் அறையை விட்டு வெளியே வர மனம் வரவில்லை. பாட்டிம்மாவின் இறுதி கணங்களில் 

அவள் அருகிலேயே இருந்துவிட நேரிடுகிறது. அண்மையில் வாசித்த கதைகளில் மிகவும் நெகிழ வைத்த கதை இது. இந்தக் கதையில் இருந்து மீண்டு வர நேரம் பிடித்தது.


நீ அப்படியேதான் இருக்கப் போகிறாய்.

சுதா அரோடா (ஹிந்தி)


பெண்களின் அகபுற வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என தரப்படுகிற அறிமுகத்தின்போது தெரியவில்லை ஒரு அருமையான ஆனால் வித்யாசமான கதையை வாசிக்க வாய்த்திருக்கிறது என்பதை. பெண்ணின் நாட்குறிப்பு என்ற  புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இச்சிறுகதை முழுக்க ஆண் தனக்கு வாய்த்தவளின் மீது  வார்த்தைகளால்/ கேள்விகளால் கையாள்கிற அடக்குமுறைகள். (வன்முறை என்றும் வைத்துக்கொள்ளலாம்). 


மோதிரம் (ஒடிசா)

பிரதிபா ரே


இச்சிறுகதையில் தலையில் அடிபட்ட மகன், படுக்கை வசதியின்றி மருத்துவமனையில் தரையில் கிடத்தப்பட்டதை தனக்குத்தானே சமாதானம் சொல்லி ஏற்றுக்கொள்கிற கிழவி, மகன் உயிர்பிரிந்ததும் வாழ்நாள் முழுதுக்குமான தன் துக்கத்தை ஓலங்களின் வழியே வெளிபடுத்தியபோது, அதை வேடிக்கை பார்க்கிறவர்களோடு வாசிப்பவரையும் நெக்குருகச் செய்துவிடுகிறாள். கணவனும் மகனும் பொறுப்பைத் தவிர்த்துவிட்டு பெண்களைச் சுமக்கும்படி செய்துவிட்டு மாண்டுபோன தைரியமற்ற கோழிகள் ( கோழைகள்) என தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிற

அந்தக் கிழவி மனதில் தங்கிவிடுகிறாள்


மிக நேர்த்தியான மொழிபெயர்ப்புச்

சிறுகதைகள்  என்ற 

ஆத்ம திருப்தியோடு 

கடைசிப் பக்கத்திலிருந்து வெளியே வந்தேன்


இந்தத் தொகுப்பில் மொத்தம்

14 சிறுகதைகள், இதில் ஹிந்தி 6, உருது 3, பஞ்சாபி, வங்காளி, கன்னடம், குஜராத்தி, ஒடியா தலா ஒன்று

மாற்று மொழிக்கதைகளை மிக இயல்பான வார்த்தைகளால் மொழி பெயர்த்திருப்பது இந்தத் தொகுப்பின் கூடுதல் சிறப்பு.

வாழ்த்துகள்

அனுராதா கிருஷ்ணசாமி

***

' சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய பெண் இலக்கியவாதிகளின் வாழ்க்கை மற்றும் படைப்புச் சுதந்திரம் ஆகியவற்றின் சாரமாக இந்தக் கதைகள் விளங்குகின்றன" என்னுரையில்  அனுராதா கிருஷ்ணசாமி

Madhusudhan

------------------------------------------------

கடவுளுக்கென ஒரு மூலை - அனுராதா கிருஷ்ணசாமி :


ஆசிரியர் குறிப்பு:


சென்னையில் பிறந்து, தில்லி, மும்பை போன்ற நகரங்களில் வசித்தவர்.  மத்தியஅரசின் நிறுவனம் ஒன்றில் உயர்பதவி வகித்தவர்.  தீவிர வாசகர். இது இவரது முதல் மொழிபெயர்ப்பு சிறுகதைகளின் தொகுப்பு.


இந்த நூல், பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.  முதலாவதாகப் பணி ஓய்வுபெற்று, பல வருடங்கள் கழித்து அனுராதா, தன் முதல் மொழிபெயர்ப்புத் தொகுப்பின் மூலம் எழுத்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்.  இரண்டாவது, இவை அனைத்துமே இந்திய மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டவை.  கடைசியாக இதில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் அனைவரும் பெண்கள். பெண்கள் என்பதற்கான எந்தவித சலுகையையும் எதிர்பார்க்காமல்,  Commonraceல் கலந்து கொண்டு, பலரையும் முந்தி இலக்கைத் தொடக்கூடியவர்கள்.


அம்ரிதா ப்ரீதம், கிருஷ்ணா ஸோப்தி, இஸ்மத் சுக்தாய், ஆஷா பூர்ணாதேவி போன்ற மாஸ்டர்கள், தமிழில் பரவலான வாசகர்களால் இன்னும் அறியப்படாமலேயே இருக்கிறார்கள். இவர்களது முக்கிய படைப்புகள் தமிழுக்கு இந்நேரம் வந்திருக்க

வேண்டும்.  நம்மில் பலருக்கு வாயில் நுழையாத பெயருள்ள நாட்டிலிருந்து எழுதுபவர் நன்றாக எழுதுவார் என்ற கற்பிதம் இருக்கின்றது.


அம்ரிதாவின் அங்கூரி பல்லடுக்குகள் கொண்ட கதை.  முதலாவதாக கிராமத்தில் பெண்கள் எவ்வாறு Exploit செய்யப்படுகின்றனர், திருமண வாழ்க்கைக்கு அவர்கள் சம்மதம் தேவையில்லை, பெண்கள் படிப்பது பாவம் என்ற பிற்போக்கு நிலை குறித்துப் பெண்ணியம் பேசுகிறது.  இரண்டாவதாக பெரிதும் உரையாடல்கள் மூலம் நகரும் கதையில் வரும் இரண்டு பெண்கள், வேறுவேறு உலகத்தைச் சார்ந்தவர்கள், ஆனாலும் அவர்களுக்குள் பகிர ஒரு அந்தரங்கம் இருக்கின்றது.  அடுத்ததாக இரு ஆண்களின் உருவ அமைப்பு குறித்த ஓரிரு வரிகள் வாசகரைத் தயார்நிலைக்குக் கொண்டு வருகின்றன.  இலக்கியப் படைப்புகளில் சிறுகுறிப்புகள் முக்கியமானவை.  நான்காவதாக, ஆசைக்கும், பாவபுண்ணியத்திற்கும் நடக்கும் நித்திய போராட்டத்தில் ஆசையே வெற்றி கொள்வது. அங்கூரியை, அம்ரிதா மாவு என்றிருப்பார். சப்பாத்தி உருண்டைக்கு, இழுத்து அப்பளம் இட, எண்ணெய்யில் பொரித்தால் உப்பி வர என்று பல மாறுதல்கள் கொள்ளும் மாவு.  பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் இந்தக் கதையை எழுதுவது எளிதல்ல.  இந்தியாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று.


சாதாரண மாமியார்-மருமகள் Ego clash ஆக முடிந்திருக்க வேண்டிய கதை கிருஷ்ணா ஸோப்தியின் சரிகை வேலைப்பாடுகளால் நல்ல கதையாகி இருக்கிறது.  குர்ரத்துலைன் ஹைதரின் கதையில் மனம்போன வாழ்க்கை வாழும் பெண் அவளை நியாயப்படுத்திக் கொள்கிறாள். இஸ்மத் சுக்தாயின் போர்வை கதை பெரும் சர்ச்சைக்குள்ளாகி அவரை லாகூர் நீதிமன்றத்தில் ஆஜராக வைத்த கதை. (அது ஏன் தொகுப்பின் நடுவே முகம்மூடி போர்த்தி ஒளிந்து கொண்டிருக்கிறது?) ஆஷா பூர்ணா தேவியின் கதையில் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்வது எதற்காக என்பது கதையின் கடைசி வரியின் டிவிஸ்டில் தெரிகிறது. மன்னு பண்டாரி ஐம்பது வருடங்களுக்கு முன்னரே அருமையான உளவியல் கதையை எழுதி இருக்கிறார். உஷா பிரியம்வதாவின் கதை நிதர்சனம். லாட்டி பயங்கரம். 


பதினான்கு கதைகள் கொண்ட தொகுப்பு.  எட்டு இந்திய மொழிகளில் எழுதப்பட்டு, இந்தி மூலமில்லாதவை, இந்திக்கு மாற்றம் செய்யப்பட்டு அதிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எல்லாக் கதைகளும் ஒரே தரமானவை என்று சொல்ல முடியாது, ஆனால் எல்லாமே சராசரித் தரத்தை மிஞ்சியவை. இரண்டு மொழிகள் தெரிந்து மொழிபெயர்ப்பது வேறு, அந்தக் கலாச்சாரத்தின் நடுவே சிலகாலம் வாழ்ந்து பின் மொழிபெயர்ப்பது என்பது வேறு.  அந்த Advantage அனுராதாவின் மொழிபெயர்ப்புக்குக் கிடைத்திருக்கிறது.  மேலும் இந்தக் கதைகளின் தேர்வுக்காகவும் அனுராதாவிற்கு முதுகில் ஒரு ஷொட்டைத் தாராளமாகக் கொடுக்கலாம்.


பிரதிக்கு:


சிறுவாணி வாசகர் மையம் 99409 85920

முதல்பதிப்பு டிசம்பர் 2022

விலை ரூ. 220.

#மொழிபெயர்ப்புநூல்கள் 


http://saravananmanickavasagam.in/2023/01/05/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%a9-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81/

 Saravanan manickavasagam 

----------------------------------------------------------

Very meticulously reviewed 

Moment I received this book with the Thiru Nanjil Nadan preface I commenced reading

It had a big impact on me 

I told my wife and sisters to read

Each stories are Pearl 

What a great ladies 

Bravo to Anuradha Krishnaswamy

V N pillai IG

Chennai👆

-----------------------------------------------------

இது வரை நீங்கள் மிகவும் சிரத்தை எடுத்துத் தேர்வு செய்து அனுப்பும் புத்தகங்களுக்கு நான் விமர்சனம் அனுப்பியதில்லை. போன மாதம் தாங்கள் அனுப்பிய அனுராதா கிருஷ்ணசாமி அவர்களின் கடவுளுக்கென ஒரு மூலை புத்தகத்திற்கு நான் அனுப்பும் விமர்சனம்:

முத்தான கதைகளைத் தேர்ந்தெடுத்த அந்தக் கணமே அவரின் வேலை பாதி பூர்த்தியாகி விட்டது. இத்தனை புகழ் பெற்ற எழுத்தாளர்களின் கதைகளை எத்தனை அழகாக மொழி பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு என்றே தெரியவில்லை. பெண் எழுத்தாளர்கள் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளையும் மீறி இவ்வளவு நேர்த்தியாக உணர்வுகளை வெளிப்படுத்த முடிகிறதென்றால் அது இறைவன் கொடுத்த வரம் அல்லாது வேறென்ன?


பத்மா சச்தேவின் தாதி மனதை விட்டு நீங்க மாட்டேனென்கிறது. அருமையான பாத்திரங்கள். கதை சொல்லும் பாங்கு, உயிரோட்டமான நடை அனைத்தும் உன்னத நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. 

புத்தகங்கள் உலகத்தின் சாளரங்கள்தாமே.

திருமதி அனுராதாவின் கைபேசி எண் குறிப்பிடப் படவில்லை. முடிந்தால் இந்த விமர்சனத்தை அவருக்கு அனுப்புங்கள்.

திருமதி.சாந்தி, திருவனந்தபுரம்

----------------------------------------------------------




கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்- வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)-November-2022

 



நவம்பர்-2022

கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்-

வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)


பக்கங்கள்  144  விலை 140 /-

------------------------------------

https://solvanam.com/2022/12/11/%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/

கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

குஅழகிரிசாமி (23/9/1923 – 5/7/1970)

ஒரு கதை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது வாசிப்பவரின் மனப்பாங்கையும், மனோ நிலையையும் பொருத்தது. விவரம் தெரிந்து அனுபவ பாசி, சார்பு மாசுகள் படிந்த பின் அவையும் பார்வையின் கூர்மையை, நேர்மையைப் பாதிக்கும். இலக்கிய அனுபவ சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவும் குழந்தைகளைப் போல மாசற்ற கவனமும், எதிர்பார்ப்பில்லா குதூகலமும் வேண்டும். ஒருவர் தன்னை எந்த சிதறலுக்கும் ஆளாக்கிக் கொள்ளாமல் தூய்மையான கவனத்தோடு வாசிப்பு சுகத்துக்காகவே வாசித்து, தனக்குக் கிட்டியவற்றை பகிர்கையில் பிறருக்கும் அவை பயன் தரும். அத்தகைய பகிர்தல், தேவைப் பட்டால் ஓர் உரையாடலுக்கும் – நல்ல கதையைப் போலவே – இடம் தரும்.

எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் பலதரப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. ஓர் எழுத்தாளர் பற்றிய விமர்சனங்கள் தவிர, இரண்டு எழுத்தாளர்களை ஒப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளதுதான். சார்லஸ் டிக்கன்ஸா – டால்ஸ்டாயா, தஸ்தாயெவ்ஸ்கியா – டால்ஸ்டாயா ஆய்வுகளெல்லாம் நூல்களாகவும், யூட்யூப் பதிவுகளாகவும் இருக்கின்றன. நவீன தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான, நூற்றாண்டு காணும் கு. அழகிரிசாமி பற்றியும் பல்வேறு எடை போடல்கள் உள்ளன. வாசிப்பு வானில் நிம்மதியாக முழு ஈடுபாட்டுடன் பறந்து கொண்டிருக்கும் வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு இவற்றால் தொடப்படாதது. அந்த உறவால் மலரும் இன்பத்தை அழகிரிசாமியின் முகம் தெரியா வாசகர்கள் பலரும் கால காலமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம். இவற்றில் அவரது நூற்றாண்டு என்னும் இச்சந்தோஷமான தருணத்தில் அவர் தொட்டு நம் இதயங்களில் இட்ட ஆனந்தம் பற்றிய கதைகளில் மூன்றைப் பற்றி சில வரிகள் :-

வனஜம்

வனஜம் என்கிற இந்தக் கதை, கு. அழகிரிசாமி பற்றிய நகுலனின் “ அவருடைய கதைகளை ஒரு முறைக்கு இரு முறையாகப் படிப்பவர்களுக்கு சௌந்தர்ய உணர்ச்சி என்பதன் அர்த்தம் தெளிவாக விளங்கும்” என்கிற கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இக்கதை சொல்லப்பட்ட விதம், விஷயம், வர்ணனைகள் சுகானுபவம்.

14 வயது சிறுமி, 17 வயது வளர்ந்த சிறுவன் இவர்கள் இடையே நிகழ்பவை. கோவில்களுக்கு அருகாமையில், மாட வீதிகளில், திருவிழா, உற்சவ காலங்களில் இருக்க வாய்ப்பு பெற்றவர்கள் இந்தக் கதையில் தவழும் குளுமையை, இனிமையை மீண்டும் அனுபவிக்கலாம். அத்தகு வாய்ப்பு கிட்டாதவர்களும் இக்கதையைப் படிக்கையில் அதைப் பரிபூரணமாக அனுபவிக்கலாம்.

காதலா அது? பாரமில்லாத இன்பப் பிரவாகம். அப்பாவிக் குழந்தைகளின் ஊடாகச் சொரியும் அன்பு ஊற்று. கோவில் சார்ந்த ஊர்க் கூட்டம், அக்காடாவென்று பொறுப்பேதுமில்லாத நிம்மதியும், ஆனந்தமும், களியும் ததும்பும் உல்லாசச் சூழல், அதற்கு உயிரேற்றும் இசை. அங்கு சிவராமன் சிறுவன் போலவா பேசுகிறான்? வாலிபனைப் போல் தன்னை நாஸ்திகன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன் கவிதையாய் நினைப்பதில், பேசுவதில் என்ன ஆச்சர்யம்? வனஜம் என்கிற அந்தக் குழந்தை. அதன் அப்பாவித்தனம். அழகு. வெள்ளைப் போக்காக படபடவென்ற பேச்சு. அகன்ற கண்களில் பொருந்தியிருந்த, அளவிற்கு அதிகமான மடப்பம். ஒரு மாற்றம் நிகழ்கையில் அதில் கொஞ்சம் குடியேறும் கள்ளப் பார்வை. மனிதர் என்னவாகவெல்லாம் அனுபவிக்க வைக்கிறார் !

60, 70 வருடங்களுக்கு முன்பு வந்த சினிமாக்களில் இது போன்ற காதல் ஓரளவு சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. பின்னால் தெரியும் வட்ட நிலா, ஓர் ஓடை, சில மரங்கள், பூக்கள், கறுப்பு வெள்ளையிலும் பிரகாசிக்கும் இரவு. வனஜத்தையும், சிவராமனையும் விட சற்று வயதில் மூத்த காதலர்கள் பெரும்பாலும் மிக நல்ல காதல் பாட்டை பாடுவார்கள். பெண்ணின் உதட்டுச் சுழிப்பிலும், ஆணின் அன்பூறும் கண்களின் ஒளியிலும் தூய காதல் பிறந்து கொட்டகைகளை நிரப்பும்.

அற்புதமான இதயப் பிணைப்புகளை, அதன் மூலம் இவ்வுலகின் இயக்க சக்தியை நமக்குக் காட்டும் இன்ப அனுபவம் இக்கதை. கதையைக் கடைசி வரை படிப்பவர்கள் நடுவில் எழும் கேள்விகளும் தானே அடங்கிவிடுவதைக் காணலாம்; உடன் பேரானந்தத்திலும் மூழ்கலாம்.

அன்பளிப்பு

எழுத்தாளன் மனித மனங்களிலும், புற உலகிலும் கவனத்தோடு பயணித்து எழுதுபவன். எல்லா மனிதராகவும் ஆகும் சக்தி அவனுக்கு உள்ளது. அதனால்தான் 80 வயது ஆண் பதினாறு வயது சிறுமியை நம்முன் கொண்டுவர முடிகிறது. ஐம்பது வயது பெண்ணால் இருபத்தைந்து வயது இராணுவ வீரனை தத்ரூபமாக சித்தரிக்க முடிகிறது. இதில் குழந்தைகளை வர்ணிப்பது அலாதியான வரம். அந்த வரத்தைப் பூரணமாகப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் அழகிரிசாமி முக்கியமானவர்.

குழந்தைகளே அன்பளிப்புதானே ? நமக்கு மாசற்ற அன்பு அவர்களிடமிருந்துதானே கிடைக்கிறது. அந்தக் குழந்தைகளோடு, சந்தோஷமாய் இருக்கும் பேறு பெற்றவனின் கதை இது. அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லை. குழந்தைகள் உலகம் என்கிற சொர்க்கலோக வாசி அவன். இதில் அவன் குழந்தைகள் ஒருவரும் இல்லை. அவனுக்கு மணமாகக் கூட இல்லை.

சின்னஞ்சிறு சம்பவங்கள். சாதாரண வாழ்க்கை நிகழ்வுகள். குழந்தைகளின் செய்கைகள், நம்பிக்கைகள், நினைவில் இருத்தி மீண்டும், மீண்டும் துயருறாத நிகழ் இருப்பு. பயம், கட்டற்ற சுதந்திரம், உரிமை. அவனை பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல் சமதையான ஜீவனென்று கருதி கைகோர்த்துக் கொள்கிறார்கள். விளையாடுகிறார்கள். சண்டை போடுகிறார்கள். அடிக்கிறார்கள். தண்டிக்கிறார்கள். மன்னிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். அனைத்தும் அற்புதமாக நம் கண் எதிரே நடக்கின்றன.

இது தானாய்க் கிட்டிய பாக்கியம். அதில் மூழ்கி நீந்துகையில் அவன் கற்றுக் கொண்டே இருக்கிறான். ” உலகத்தில் எல்லோரும் குழந்தைகளிடம் பிரியமாக நடந்து கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் அன்பில் விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன. அவர்களுக்குக் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள். ஆனால் குழந்தைகள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் ” என்கிற உண்மை என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனதில் தைத்த நாள் முதல் அவன் அவர்களை குழந்தைகளாக நடத்துவதில்லை. உள்ளன்பு என்கிற அந்தஸ்தில் அவனும், குழந்தைகளும் சம உயிர்களாகிறார்கள். மேலும் எத்தனை எத்தனை அவன் குழந்தைகளைப் பற்றி அறிந்துணர்ந்து கொண்டே இருக்கிறான். கடைசி வரை இது தொடரும். கதை முடிந்த பின்பும். அவனுக்கும், நமக்கும்.

தெய்வம் பிறந்தது

இது ஓர் ஆதர்ச இலட்சியவாதக் கதை. இது மனிதனின் முடிவுறா தூய்மைப் படுத்திக் கொள்ளும் முயற்சி பற்றியது. சமூகம் விதித்த விதிமுறைகளைக் கேள்வி கேட்காது ஏற்றுக் கொண்ட மனிதர்கள் பற்றியது. இந்த சுய சுத்திகரிப்பும், தவம் போன்ற அடைமொழிகளைப் பற்றிய பிரக்ஞையே கூட இல்லாத பயன் கருதாச் செயல்பாடுகளும் தவப்பயனுக்கு இட்டுச் செல்லும் அற்புதம் பற்றிய கதை. எழுத்தாளரின் உளத் தூய்மை மட்டுமே இது போன்ற கதைகளை எழுத வைக்கும்.

ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக வேண்டிக் கொண்ட தெய்வங்கள், யாத்திரை செய்த ஸ்தலங்கள் என்று அவர் செய்த பதிமூன்று வருட தவம். ஜென்மாந்திர வாசனையைப் போல் அவர் மனச்சுவரில் ஏதேனும் கறை இருந்தாலும் அதையும் சுட்டெரித்த அத்தவத்தின் கனல். இதில் அவரது உள்ளமே ஒரு கோவிலாகி விட்டது. தவம் செய்து பிறந்த குழந்தை புண்ணியாத்மாவாக இருக்க வேண்டும் என்று, பொறாமை, துவேஷம் இல்லாதவனாக வளர்க்கிறார். பள்ளி ஆசிரியரிலிருந்து வீட்டுக்கு முடி திருத்த வருபவர் வரை அனைவரிடமும் எப்படி அன்பாக, மரியாதையாகப் பழக வேண்டும் என்று சொல்லித் தருகிறார். ”குழந்தையாக வந்து தெய்வம் பேசுகிறது” என்று முடி திருத்தும் வேலாயுதம் சொன்ன போது “என் வயிற்றிலா? நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேன்? தெய்வம் வேண்டாம். மனிதன் பிறந்திருக்கிறான் என்று உலகம் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஒரு கீர்த்தி போதும் “ என்கிறார்.

உள்ளமே கோவிலாகி விட்ட பிறகு அதில் குடியிருக்க தெய்வம் எப்படி வராது இருக்கும் ? அவர் வயிற்றில் எப்படிப் பிறக்காது இருக்கும் ? தெய்வம் வந்ததை, பிறந்ததை, கண் காண அவருக்குப் பிறந்து விட்டதை, இது நடந்த விதத்தைச் சொல்லி கதை முடிகிறது.

***************

இந்தக் கட்டுரையின் தலைப்பு ‘ஓர் எளிய மலர்ச்செண்டு’. கு. அழகிரிசாமியின் கதைகளையும் அப்படியே குறிப்பிடலாம். அதில் இல்லாத மலர்களே இல்லை.

---------------------------------------

வணக்கம் சார்.. அற்புதமான கட்டுரை இது.  இக்கட்டுரையினை நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு தாங்கள் அனுப்பிக் தந்த நவம்பர் 30 அன்றிரவே எனக்கும் அனுப்பி இருந்தார். வாசித்துவிட்டு அவரிடம் என் கருத்தை பகிர்ந்திருந்தேன்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற (ஜூம் மீட்டிங்) ரசிகமணியின் வட்டத்தொட்டி - கு.அழகிரிசாமி நூற்றாண்டு சிறப்பு நிகழ்வில் அவரது மூத்த மகள் திருமதி.ராதா அவர்கள் கு.அ.வின் தெய்வம் பிறந்தது கதை குறித்து யாரும் அவ்வளவாக பேசவில்லை என்று கூறியிருந்தார். அக்கதை குறித்து இந்தக் கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருப்பதை கு.அ.வின் புதல்வர் சாரங்கராஜன் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் சகோதரியிடம் சொல்லி இருக்கிறார்.

சொல்வனத்தில் வெளியான இக்கட்டுரையினை மீள்வாசிப்பு செய்த போது இச்சம்பவம் நினைவிற்கு வந்தது.

நன்றி சார்...

.வே. முத்துக்குமார்

------------------------------------

https://bookday.in/introduction-to-the-book-velayutha-muthukumars-memories-of-g-azhagiriswamy-bhavannan/

அழகிரிசாமி வந்திருக்கிறார்
பாவண்ணன்

நவீன தமிழ் சிறுகதை ஆசிரியர்களில் புதுமைப்பித்தன், மெளனி, பிச்சமூர்த்தி ஆகியோரின் அடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் எழுத்தாளராக மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். அவருக்கு இசையிலும் கம்பராமாயணத்திலும் எல்லையற்ற ஆர்வம் இருந்தது. காருகுறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோருடன் அவர் இறுதிவரைக்கும் தொடர்பில் இருந்தார். பாரதியார், தியாகராஜர், கவிமணி தேசியவினாயகம் பிள்ளை போன்றோர் எழுதிய சில பாடல்களை ஸ்வரப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தைப் பதிப்பித்தார். கம்பராமாயணத்தின் ஐந்து காண்டங்களையும் குறிப்புகளுடன் பதிப்பித்தார். மேடையில் நடிக்கத்தக்க அளவில் கவிச்சக்கரவர்த்தி, வஞ்சமகள் ஆகிய நாடகங்களை எழுதியிருக்கிறார். கார்க்கி நூல்களை தமிழில் மொழிபெயர்த்து நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். டி.கே.சிதம்பரம் முதலியாரின் வழியில் சிறந்த ரசனைக்கட்டுரைகளையும் எழுதினார். 1942இல் எழுதத் தொடங்கிய அவர் 1970இல் மறைவது வரைக்கும் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக அழகிரிசாமியின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் தொடங்கியது. அதையொட்டி பல இடங்களில் கவனிப்பாரற்று சிதறிக் கிடந்த பல கட்டுரைகளை வேலாயுத முத்துக்குமார் தேடித் தொகுத்திருக்கிறார். அதை சிறுவாணி வாசகர் மையம் அழகிய வடிவில் நூலாக்கியிருக்கிறது. புத்தகத்தை ஒரே அமர்வில் படித்துமுடித்ததும் அழகிரிசாமி மீண்டும் வந்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றியது.

அழகிரிசாமி 05.06.1970 அன்று மறைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து. அவருடைய மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப்பற்றிய பல்வேறு நினைவுகளை கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தீப.நடராஜன், ஆ.மாதவன், தி.ஜ.ர., வித்வான் ல.சண்முகசுந்தரம் கி.ராஜேந்திரன், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தேடியெடுத்திருக்கிறார் வேலாயுதமுத்துக்குமார். அக்கட்டுரைகளோடு கல்கி, நகுலன், பி.எஸ்.ராமையா போன்றோர் எழுதிய சில கட்டுரைகளையும் கி.ராஜநாராயணன், வித்துவான் ல.சண்முகசுந்தரம், ஆ.மாதவன் ஆகிய மூவருக்கும் அழகிரிசாமி எழுதிய கடிதங்களையும் கண்டுபிடித்து ஒரு சிறிய தொகைநூலாக உருவாக்கியுள்ளார். இக்கட்டுரைகள் வழியாக வாசகர்கள் அழகிரிசாமியைப்பற்றிய ஒரு தோராயமான சித்திரத்தை பெறமுடிகிறது. அதுவே இத்தொகுதியின் வெற்றி.

கி.ராஜநாராயணன் தன் கட்டுரையில் இளம்வயதில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறார். கி.ரா.வும் செல்லையா என்கிற அழகிரிசாமியும் இளவயதுக் கூட்டாளிகள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள். தன் இளம்பருவத்திலேயே கனிவான பார்வையும் கருணையும் செல்லையாவின் நெஞ்சில் குடியேறியிருந்தன என்பதை அறிந்துகொள்ள அந்த நினைவுப்பதிவு உதவி செய்கிறது. அவர் வளர வளர அவருடைய கனிவும் வளர்ந்துகொண்டே சென்றதை அவருடைய வாழ்க்கை உணர்த்துகிறது.

கி.ரா. வீட்டில் ஒரு பெரிய நாய் இருந்தது. அந்த நாய் திடீரென புத்தி பேதலித்து வருவோர் போவோரையெல்லாம் கடிக்கத் தொடங்கிவிட்டது. புகார்கள் அதிகரித்ததும் கி.ரா.வின் தகப்பனார் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அன்று மாலை அந்த நாய்க்கு வேலைக்காரர்கள் நல்ல விருந்துச்சாப்பாடு போட்டார்கள். அதுதான் தன் கடைசி விருந்து என அறியாமல் அந்த நாய் விருப்பத்தோடு சாப்பிட்டது. விருந்து முடிந்ததும், அந்த நாயின் கழுத்தில் ஓர் உறுதியான கயிற்றைக் கட்டி அழைத்து வந்தனர். பெரியவர் அதைத் தொட்டுக் கொடுத்ததும் அவர்கள் அந்த நாயோடு வீட்டைவிட்டு வெளியேறினார்கள். சிறுவர்கள் ஆர்வத்தின் காரணமாக அதைப் பின்தொடர்ந்து சென்றார்கள். கி.ரா.வும் அழகிரிசாமியும் பின்னாலேயே சென்றார்கள். ஆனால் கி.ரா.விடம் இருந்த உற்சாகம் அழகிரிசாமியிடம் இல்லை.

வழிநெடுக கிடைத்த கற்களையெல்லாம் சேகரித்து தம் பைகளில் நிரப்பிக்கொண்டே நடந்தார்கள் சிறுவர்கள். ஊருக்கு வெளியே நாயை அழைத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு அந்த நாயை அடித்துக் கொல்வதுதான் அவர்கள் திட்டம். அதைப் புரிந்துகொண்ட அழகிரிசாமி அவர்களிடமிருந்து விலகி வழியிலேயே ஓரிடத்தில் சோர்வோடு அமர்ந்துவிட்டார். உற்சாகமாக நாய்க்குப் பின்னால் சென்ற சிறுவர்கள் அந்த நாயைச் சூழ்ந்து கல்லாலேயே அடித்துக் கொன்றனர். நாய் செத்துவிட்டது என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு வந்த வழியே வீட்டுக்குத் திரும்பினார்கள். வழியில் சிலைபோல அமர்ந்திருந்த அழகிரிசாமியின் தோற்றம் உற்சாகத்தோடு ஓடி வந்த கி.ரா.வின் நெஞ்சைக் கரைத்துவிட்டது. அவர் நெஞ்சிலிருந்தும் அப்போது அழுகை பீறிட்டெழுந்தது. ஒருவருடைய கருணை பிறரையும் கருணையுள்ளவர்களாக மாற்றிவிட்டது.

ஆ.மாதவன் தன் கட்டுரையில் வயதில் சிறியவரானாலும் அடுத்தவர்களுக்கு உதவும் மனநிலை நிறைந்தவராகவும் இலக்கியத்தைப்பற்றி மட்டுமே எப்போதும் சிந்திப்பவராகவும் அழகிரிசாமி வாழ்ந்த விதத்தைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை தான் தயாரிக்கும் ஒரு மலருக்கு புதுமைப்பித்தனின் இறுதிக்காலம் பற்றி எஸ்.சிதம்பரம் என்பவர் எழுதி சக்தி இதழில் வெளியான பழைய கட்டுரையொன்று தேவைப்பட்டிருக்கிறது. தன் தேவையை உடனே அழகிரிசாமிக்குத் தெரியபடுத்துகிறார். உடனே அக்கட்டுரை வெளிவந்த சக்தி இதழைக் கண்டுபிடித்து அக்கட்டுரையை எழுதி பிரதியெடுத்து அவருக்கு அனுப்பிவைக்கிறார் அழகிரிசாமி. மேலும் மாதவனின் வேண்டுகோளுக்கு இணங்க பிறமொழிகளில் வெளிவந்த சில சின்னஞ்சிறு கதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்து அனுப்பிவைத்திருக்கிறார். அடுத்தவர்களுக்காக செய்யும் இத்தகு உதவிகளால் அவருக்குக் கிஞ்சித்தும் பயனில்லை என்றபோதும் நட்புக்காக மகிழ்ச்சியோடு அவ்வுதவியைச் செய்யும் மனம் கொண்டவராக அழகிரிசாமி வாழ்ந்தார் என்பதை மாதவனின் குறிப்புகள் உணர்த்துகின்றன.

லானா சானா என்று அனைவராலும் அழைக்கப்படும் வித்வான் ல.ச.சண்முகசுந்தரம் அழகிரிசாமியுடன் நெருங்கிப் பழகியவர். அழகிரிசாமியின் வாழ்க்கை பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை அவர் பதிவு செய்திருக்கும் நினைவுகள் வழியாக உணரமுடிகிறது. பதினாறு, பதினேழு வயதிலேயே சிறுகதைகளும் விருத்தம், வெண்பா போன்ற மரபுப்பாடல்கள் எழுதவும் அழகிரிசாமி பயிற்சி பெற்றிருந்தார். தொடக்கத்தில் ஆரம்பப்பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராகவும் பிறகு சப்ரிஜிஸ்தர் அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார். ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன் இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சில சிறுகதைகள் அவருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியளித்தன. அதன் விளைவாக அதே பத்திரிகைக்கு அவர் உதவியாசிரியராக வந்து சேர்ந்தார். பிறகு அங்கிருந்து சக்தி இதழுக்குச் சென்றார். சில ஆண்டுகள் கழித்து தமிழ்நேசன் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மலேசியாவுக்குச் சென்றார். அங்குதான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்குத் திரும்பி வந்து காந்தி நூல் வெளியீட்டுக்கழகத்திலும் நவசக்தி இதழிலும் பணியாற்றினார். துன்பங்களும் வறுமையும் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்த போதும் மன உறுதியுடன் எதிர்கொண்டு வாழ்ந்தார். கிஞ்சித்தும் மனம் சோர்வுறாது இலக்கியம் படைத்தார்.

அழகிரிசாமியின் அகாலமரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கித் தவித்தபோது, அதற்கொரு பதில் சொல்வதுபோல நினைவுக்கு வந்த நாலடியார் பாடலொன்றை லானா சானா பதிவு செய்திருக்கும் விதம் பொருத்தமாக இருக்கிறது.

பல்லான்ற கேளிவிப் பயனுணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வும் அறிதிரேல் கல்லார்கண்

சேதனம் என்னுமச் சேறகத்தின்மையால்

கோதென்று கொள்ளாதாம் கூற்று

அன்பும் அறிவும் நிறைந்த சாரமுள்ள உயிர்களை ருசித்து அனுபவிக்கும் கூற்றுவன் அவை எதுவுமில்லாத சக்கைகளை ஒதுக்கிவிடுகிறான் என்னும் நாலடியாரின் சொல், அழகிரிசாமியைப் பொறுத்தவரை உண்மையாகிவிட்டது.

அழகிரிசாமி பத்திரிகைகளுக்காகவோ, புத்தகங்களுக்காகவோ, வருமானத்துக்காகவோ எழுத விரும்பியவரல்ல. தன் மனநிறைவுக்காகவும் இலக்கிய ரசனைக்காகவும் எழுதவே என்றென்றும் விரும்பினார். ஒருமுறை அவர் ஒரு பத்திரிகையில் ஒரு தொடர்கதையை எழுதினார். வழக்கமாக அத்தகு தொடர்கதைகளை எழுதுகிறவர்கள் தமக்கு வகுக்கப்பட்டிருக்கும் வாரக்கணக்குக்குள் அடங்கும்படி திட்டமிட்டு எழுதி முடித்துவிடுவார்கள். ஆனால் மன இயக்கத்துக்கு இசைவாக எழுதிச் செல்லும் பண்புடைய அழகிரிசாமிக்கு அது ஒத்து வரவில்லை. குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவரால் கதையை அடக்கமுடியவில்லை. மேலும் வளர்ந்து செல்வதை பத்திரிகை விரும்பாத ஒரு கட்டம் வரும்போது மனத்தில் மிச்சமிருக்கும் மொத்த கதையையும் ஒரு சுருக்கம்போல ஒரே அத்தியாயத்தில் எழுதி முடித்துவிடுகிறார். பிற்பாடு சுருக்கிவிட்ட அப்பகுதியை மனம்போல விரித்தெழுதி முழுமை செய்துகொள்ளலாம் என அவர் திட்டமிட்டிருந்தபோதும் கடைசி வரைக்கும் அந்தச் செப்பமிடும் வேலையை அவரால் செய்யமுடியாமலேயே போய்விட்டது. வெவ்வேறு அல்லல்கள் அவரை வெவ்வேறு திசைநோக்கி இழுத்த இழுப்பில் படைப்பூக்கத்தின் திசையில் அவரால் செல்ல இயலாமல் போய்விட்டது. கல்கி ராஜேந்திரனின் சொற்கள் வழியாக அழகிரிசாமியின் மனம் அடைந்த தவிப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.

1952இல் வெளிவந்த அழகிரிசாமியின் முதல் சிறுகதைத்தொகுதிக்கு கல்கி முன்னுரை எழுதியிருக்கிறார். அம்முன்னுரையில் கதை எழுதுவதன் வெவ்வேறு கோணங்களைப்பற்றி விரித்துரைப்பதுபோலத் தொடங்கி அவர் அழகிரிசாமியின் கதையுலகத்தை வந்தடைந்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. அழகிரிசாமியின் கதைகளை மதிப்பிட்டு அவருடைய இலக்கிய இடத்தை வரையறுக்கும் விதத்தில் நகுலன் எழுதியிருக்கும் கட்டுரை, க.நா.சு.வின் இலக்கியவட்டக் கருத்தரங்கில் எதற்காக எழுதுகிறேன் என்னும் தலைப்பில் ஆற்றிய தன் உரையை அழகிரிசாமியே எழுத்து வடிவத்துக்கு மாற்றி எழுத்து இதழில் வெளியிட்ட கட்டுரை என சில அரிய கட்டுரைகளையெல்லாம் வேலாயுத முத்துக்குமார் தேடியெடுத்து இத்தொகுதியுடன் சேர்த்திருக்கிறார்.

இத்தொகுதியில் பெரும்பான்மையாக அழகிரிசாமியின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன. அஞ்சலிக்கட்டுரைகள் மட்டுமன்றி, அழகிரிசாமியின் படைப்புலகத்தை முன்வைத்து அவருடைய சமகாலத்திலும் அவருடைய மறைவுக்குப் பிறகான கடந்த அரைநூற்றாண்டுக்காலத்திலும் பல்வேறு கட்டுரைகள் வந்திருக்கக்கூடும். வேலாயுத முத்துக்குமார் அத்தகு கட்டுரைகளையும் தேடித் தொகுக்கவேண்டும். எதிர்காலத் தலைமுறையினருக்கு அது நிச்சயம் நல்லதொரு ஆவணமாக விளங்கும்.

(கு.அழகிரிசாமி – நிலைபெற்ற நினைவுகள். 

தொகுப்பாசிரியர் வேலாயுத முத்துக்குமார். 

சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை – 641038. விலை. ரூ.140)

9940985920/ 8778924880

-------------------------------------

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iEZAhy3Ujtm9mEKqvFfzxYVFQccS2iGpu6LQTHBFLVyZteF6gmNyRHipM3GMho3dl&id=100006829357757&mibextid=Nif5oz

------------------------------------




Sunday, November 13, 2022

அடுத்தடுத்த மாதங்களுக்கான நூல்கள்.

 







சிறுவாணி வாசகர் மையத்தின் அடுத்தடுத்த மாதங்களுக்கான நூல்கள்.


நவம்பர்-2022

கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்-

வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)


டிசம்பர்-2022

கடவுளுக்கென ஒரு மூலை-

(மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)

அனுராதா கிருஷ்ணசாமி 


ஜனவரி-2023

உடுக்கை விரல்-

என்.ஸ்ரீராம் (சிறுகதைகள்)


Tuesday, September 13, 2022

நாஞ்சில்நாடன் விருது (2022)விழா நிகழ்வுகள்

 



சிறுவாணி வாசகர் மையம் வழங்கிய நாஞ்சில்நாடன் விருது விழா 2022 ,(நாள்:-21.08.2002) காணொளிகளின் முழுத்தொகுப்பு.


https://youtu.be/FFDdsCC2TZ0


(தனித்தனியே)

மாவட்ட ஆட்சியர் டாக்டர் G.S.சமீரன் விருது வழங்கி உரை


https://youtu.be/6jNlmWd34UU


நாஞ்சில் நாடன் உரை

https://youtu.be/ns7fJ2qAK0o


வழக்கறிஞர் கே.சுமதி வாழ்த்துரை


https://youtu.be/Oia8qk4g36Y


"சொல்வனம்" வ.ஸ்ரீநிவாசன் வாழ்த்துரை


https://youtu.be/SpPglsP8rlA


CGS. மணியன் வாழ்த்துரை


https://youtu.be/ADwuJ6nL8nE


விழாவில் சிறப்புப் பாராட்டுப்பெற்ற கதைசொல்லி ரம்யா வாசுதேவன் ஏற்புரை


https://youtu.be/tCh7g-MFpJ8


ஆர்.ரவீந்திரன் விருது அறிமுகவுரை


https://youtu.be/nkmlrw7LtAg


நாஞ்சில்நாடன் விருது 2022

விருதாளர் கௌசிகா செல்வராஜ் ஏற்புரை


https://youtu.be/8ohytTZPHZc

----------------------------------------------------------------------------------------------


https://photos.app.goo.gl/F7boc3VEBYQWfGHq8                                                                                       நாஞ்சில்நாடன் விருது விழா -2022 photos - part 1


https://photos.app.goo.gl/Qp9DcN91tS8Gqyic8                                                                                             நாஞ்சில்நாடன் விருது விழா -2022 photos - part 2


-------------------------------------------------------------------------------------------------

நாஞ்சில்நாடன் விருது விழா 

21.08.2022இல் கிக்கானி பள்ளியில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர். G.S.சமீரன் IAS அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு விருது வழங்கிச் சிறப்பித்தார்.அவரது ஆற்றொழுக்கான உரையும்,தமிழ் உச்சரிப்பும் அரங்கை  ஆச்சர்யப்படுத்தின.சிறப்பான உரை நல்கிய அவர்  முதுகுளம் ராகவன்பிள்ளை,பத்மராஜன் கந்தர்வனோ,மானிடனோ! நூல்கள் மூலம் ஒரு படைப்பாளியாகவும் விளங்குகிறார்.

கோவைக்குக் கிடைத்த நல்லதொரு ஆட்சியர் நமது விருது விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததை, நமக்கான அங்கீகாரமாகக் கருதி மகிழ்வதோடு ஆட்சியருக்கு நன்றியையும் தெரிவிக்கிறோம்.

வணிகநோக்கின்றி வாசிப்பைப் பரவலாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும்  சிறுவாணி வாசகர் மையம் தங்களை வணங்குகிறது.

https://youtu.be/6jNlmWd34UU

இவ்வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த  திரு.ஆர்.ரவீந்திரன்,அவர்களுக்கு நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------

வழக்கறிஞர் சுமதி அவர்கள் நாடறிந்த பேச்சாளர். வழக்கறிஞராகப் பல்லாண்டுகள் அனுபவம்.சோ போன்ற ஆளுமைகளோடு பழகியவர்.ராணுவ வீரர்களைப் போற்றும் எஸ். ஃபௌண்டேஷனின் நிறுவனர்.இருந்தாலும் தமது எளிமையான அணுகுமுறையால் எங்களின் மனம் கவர்ந்தவர்.

கல் மண்டபம் என்கிற இவரது நாவலை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட அனுமதி தந்ததோடு நாஞ்சில்நாடன் விருது விழாவிற்கு அழைத்தவுடன் வருவதற்கு இசைந்து வந்திருந்து வாழ்த்துரை வழங்கினார்.

கம்பனில் துவங்கி பாரதியின் பாஞ்சாலி சபதம்,சகலகலாவல்லி மாலை எனச் சரளமாகப் பெருக்கெடுத்த தமிழை அருகிருந்து கேட்ட தருணங்களை மறத்தல் தகுமோ?

முத்துஸ்வாமி தீட்சிதர் ,பாரதி , கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல் என இவர்களிடமிருந்து துவங்கி விருதாளரைப்  பாராட்டிய பாங்கு சிறப்பு.

 https://youtu.be/Oia8qk4g36Y

சிறுவாணி இலக்கியக் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போன வழக்கறிஞர் கே.சுமதி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

-----------------------------------------------------------------------------------------------------

திரு. நாஞ்சில் நாடன்

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, மொழியின் மீது, சொல்லும் பொருளின் மீது முழுக் கட்டுப்பாடும், மோகமும், போற்றுதலும், நுண்ணறிவும் புலனுணர்வும், மொழியின் பரப்பையும் வீச்சையும் துல்லியமாய்க் கணிக்கும் திறனும் உடையவர். மிக உயர்ந்த தளத்தில் நேர்மையாகவும் அச்சமற்றும் இயங்கி வருபவர்.

"எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல, பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி: என் சுயத்தைத் தேடும் முயற்சி! 

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம். மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும் படவேண்டும் என்பது  எனது எதிர்பார்ப்பு."  என நேர்மையாக தனது வாழ்வியலை முன்வைப்பவர்.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக மட்டுமின்றி எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றன இவரது நூல்களும் எழுத்தும்.

https://youtu.be/ns7fJ2qAK0o

சிறுவாணி வாசகர் மையத்தைத் தொடங்கி வைத்து  எங்களை வழி நடத்திக் கொண்டிருக்கும்,  சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு. நாஞ்சில் நாடன் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக கருதுவதோடு  எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

----------------------------------------------------------------------------------------------

திரு.வ.ஸ்ரீநிவாசன் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.ஜே. கிருஷ்ணமூர்த்தியும், ரமணரும் இவரை ஆகர்ஷித்தவர்கள். எழுத்தாளர்கள்  அசோகமித்திரன்,  ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன் போன்ற பல ஆளுமைகளின் நண்பர். 

"Va.Srinivasan is a brilliant writer and a sterling critic" என அசோகமித்திரன் அவர்களும்,

"எளிமையான,இயல்பான,நட்பான,இணக்கமான மனிதநேயர்" என  நாஞ்சில்நாடன் அவர்களும்

"நுட்பமான மொழித் தருணங்களைத் தொட்டு எடுக்கும்திறன் உடையவர்" என ஜெயமோகன் அவர்களும் இவரைப் பற்றிச் சொன்னவை.

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது,

காணக்கிடைத்தவை என்ற இவரது இரு கட்டுரை நூல்களை வெளியிட சிறுவாணிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

https://youtu.be/SpPglsP8rlA

சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகரும் எங்கள் குடும்பத்தில் ஒருவருமான திரு.வ.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

-------------------------------------------------------------------------------------------------------------

திருமதி.ரம்யா வாசுதேவன்-

நாஞ்சில்நாடன் விருது-2022 விழாவில் சிறப்புப் பாராட்டுப் பெற்றவர்.   

சிறந்த கதைசொல்லி,  Under the Tree என்ற கதைசொல்லல் அமைப்பின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியச் சிறுகதைகளை ஒலி வடிவில் நிகழ்த்தியுள்ளார். அவை அனைத்து அரசு நூலகங்களிலும் இப்போது கிடைக்கப் பெறுகின்றன. தவிரவும் ஆன்மிகம்,சுயமுன்னேற்றம் , இதிகாச புராணங்களில் உள்ள வாழ்வியல் கதைகள்,  தொழில் மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

தினந்தோறும் பதிவிடும் ஒலிப்பதிவுகளை  50000 க்கும் மேற்பட்ட நேயர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

https://youtu.be/tCh7g-MFpJ8

வாசிப்பை,வாசிப்பின் அனுபவத்தைத் தனது குரல் மூலம் பரவலாகக் கொண்டுசொல்லும்

"ஆயிரம் கதைகள் சொன்ன ஆச்சர்யக் கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் அவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் தமது பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.

--------------------------------------------------------------------------------------------

திரு C.G.S மணியன் 

C4TN, Lead India  அமைப்புகளின் மூலம்  பல்வேறு உதவிகளைச் செய்து வருபவர். வெள்ளச் சேதங்களின் போதும்,கோவிட்-19 பாதிப்புகளின் போதும் இவர் முன்னெடுத்த சேவைகளால் பயன்பெற்றோர் ஏராளம்.

தற்போதும் "நம்ம கோவை" மூலம் தன்னார்வலர்களையும்,அரசு நிர்வாகத்தையும் ஒருங்கிணைப்பவர்.

நீர்நிலைகள் மீட்டெடுப்பு, பசுமைப் பரவல் விரிவாக்கம், திடக்கழிவு மேலாண்மை போன்ற சூழல் செயல்பாடுகளில் முன்னாடியாக இருப்பவர்.

இலக்கிய வாசிப்பாளர். பாரதியை நேசிப்பவர்.சிறுவாணி வாசகர் மையம் துவங்கியதிலிருந்து ஆதரவு தருபவர்.

   https://youtu.be/ADwuJ6nL8nE

கோவையின் சமூக செயல்பாட்டாளர் திரு C.G.S மணியன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

----------------------------------------------------------------------------------------------------

விருது அறிமுக உரை  - திரு ஆர் ரவீந்திரன். 

கோவையின் அனைத்து நற்காரியங்களிலும் முன்னிருப்பவர்.

ஓய்வில்லாமல் அடுத்தடுத்து  தன்னை எப்போதும் சமூகசேவைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்.

 உடனிருக்கும்  தன்னார்வலர்களின் உயர்வில் மகிழ்வு பெறுபவர். தன்னலமில்லாதவர். 

பாரதியின் உண்மையான ஆர்வலர்,  சமூக, இலக்கிய செயல்பாட்டாளர். உற்றுழி உதவும் பண்பாளர்.

                                              https://youtu.be/nkmlrw7LtAg

சிறந்த வாசிப்பாளரும், சிறுவாணி வாசகர் மையத்தின் கௌரவ ஆலோசகருமான திரு. ஆர் ரவீந்திரன் அவர்களுக்கு நன்றி.

--------------------------------------------------------------------------------------------------

திரு.கௌசிகா  P.K.செல்வராஜ் 

கோவைக்கு, குறிப்பாக கோவை நதிகள், குளங்கள், ஏரிகள் போன்ற நீராதாரங்களுக்குச் செய்த, செய்துவரும் தொண்டு அளப்பரியது...

கௌசிகா நதி கோவைப் பகுதி மக்களால் பல காலமாக கவனிக்கப்படாமல் கிட்டத்தட்ட அவர்கள் மறந்துவிட்ட ஒரு நீர் ஆதாரம். அந்த நதி மட்டுமன்றி அதைப்போன்ற, கைவிடப்பட்ட அல்லது பராமரிக்கப்படாத சுமார் 10 நீராதாரங்களை அடையாளம் கண்டு அவற்றை முறைப்படி அளந்து ஆவணப்படுத்தி அவற்றுக்கு உயிரூட்டியவர் P.K..செல்வராஜ். அதனால் இவர் "கௌசிகா" செல்வராஜ் என்றே மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

நீராதாரங்களைப் பாதுகாக்கும் சமூக,இயற்கை சார்ந்த செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாகவும், இத்தகைய அரிய பணிகளை அயராது தொடர்ந்து முனைப்போடு செய்வதற்கான ஊக்கியாகவும் செயல்படும் ‘கௌசிகா’ திரு செல்வராஜ் அவர்களுக்கு "நாஞ்சில்நாடன் விருது" வழங்கிக் கௌரவித்ததில்  சிறுவாணி வாசகர் மையம் பெருமை கொள்கிறது.

                                                https://youtu.be/8ohytTZPHZc

அவருக்கும், அவர்தம் குழுவினருக்கும் எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.


தி சுபாஷிணி /தலைவர்                          ஜி ஆர் பிரகாஷ்/ ஒருங்கிணைப்பாளர் 

                                        சிறுவாணி வாசகர் மையம்

                                                        21.08.2022

                                                        கோவை

-----------------------------------------------------------------------------------------------------------------------




                                                                                              




                                                                                                                                                



Friday, July 15, 2022

நாஞ்சில்நாடன் விருது (2022)/அழைப்பிதழ்

 





கோவையிலிருந்து செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையம்,  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூகசெயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜ் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 21 அன்று கோவை கிக்கானி பள்ளியில் நடைபெறவுள்ள

விழாவில் வழங்கப்படும்.

இவ் விழாவில் "ஆயிரம்+ கதைகள் சொல்லிய கதைசொல்லி" திருமதி. ரம்யா வாசுதேவன் சிறப்புப் பாராட்டுப் பெறவுள்ளார்.


விருது பற்றி சிறு அறிமுகம் ;

**

சிறுவாணி வாசகர் மையம்  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது .


கலை, இலக்கியம்  சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000 ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .


முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;

ஓவியர் ஜீவா (2018),

ஆய்வாளரும், உ வே சா படைப்புகள் மற்றும் பலநூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப. சரவணன் ( 2019) ,

பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன்(2020),

 மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்

(2021) 

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது . 

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக

 தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக

திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (Raac)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 

தொடர்புக்கு -

9940985920,  8778924880

------------------------


சத்தியம் ஒளிரும் இடத்தில் வெற்றி சூழும் - மகாத்மா 

இந்த விருது,பரிசுத்தொகை ரூ 50,000, சான்றிதழ் மற்றும் கேடயம் அடங்கியது.

பணபலம் ,அதிகார பலம்,  ஆள் பலம் எதுவுமே இல்லாமல் எளிய கிராமியப்  பின்னணியில் இருந்து வந்து, பத்தாண்டுகளில் இன்று கோவையைச் சுற்றி உள்ள பல ஏரிகளுக்கு நீர் ஆதாரத்தை பெருக்கியும், பல நூறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும்  திகழ்கிறார் கௌசிகா செல்வராஜ் .

அவர் உருவாக்கிய பத்துக்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்கள்  வாரம்தோறும் ஏரிகள் மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக  களப் பணியாற்றி வருகின்றனர் . அதில் பல ஏரிகளுக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  பல கிராமங்களில்  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது .

அவர்களின் உழைப்பை பார்த்து வியந்து பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி செய்து வருகின்றன.

இது போன்ற உன்னத லட்சியங்களை அடைய துணிச்சலும் , தியாக மனப்பான்மையும், கடும் உழைப்பும்  தேவை .

அந்த விதத்தில் கௌசிகா செல்வாராஜ் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல லட்சம்  இளைஞர்களுக்கு முன்னோடியாகவும், உதாரண புருஷராகவும்  உள்ளார் . 

எனவே , 2022 ஆம் ஆண்டுக்கான” நாஞ்சில் நாடன் விருதை” திரு கௌசிகா செல்வராஜ் அவர்களுக்கு  அளிப்பதில் சிறுவாணி வாசகர் மையம் பெருமிதம்  கொள்கிறது .

கோவையின் வடக்குப் பகுதியில் உள்ள குளwங்கள் அனைத்தும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட  வேண்டும் , கௌசிகா  நதி  மீண்டும் உயிர் பெற்று ஓட வேண்டும் என்ற அவரது உன்னத லட்சியங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்களையும் சிறுவாணி வாசகர் மையம் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறது .🙏

--------------------------------------



நாஞ்சில்நாடன் விருது-2022 விழாவில் சிறப்புப் பாராட்டுப் பெறுபவர்

திருமதி.ரம்யா வாசுதேவன்.


 சிறந்த கதைசொல்லி, சுயதொழில்முனைவர். கல்விசார்ந்து மாணவர்களை ஊக்குவிப்பவர். கற்பதற்கான சூழலை உருவாக்கி வாழ்வைக் கற்பவர்களாக  ஆக்கும் அவரது அனுபவம், கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு தொழில்நிறுவனங்களின் நுகர்வோர் சந்தை சார்ந்த அரங்க நிகழ்வுகளை நடத்தித் தருபவராக,  உத்தியாளராகத் திகழ்பவர்.

பெரும் தொழில் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துதல், கருத்தரங்கங்கள்,  பயிற்சிமுகாம்கள் நடத்துவதோடு  குறும்படங்கள்,  செய்திப்படத் தொகுப்புகள், விளம்பர உருவாக்கம் மற்றும் ஊடகங்கள் குறித்த  பயிலரங்குகள் நடத்தித் தருபவர்.

Under the Tree என்ற கதைசொல்லல் அமைப்பின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியச் சிறுகதைகளை ஒலி வடிவில் நிகழ்த்தியுள்ளார். அவை தமிழகத்தின்அனைத்து அரசு நூலகங்களிலும் இப்போது கிடைக்கப் பெறுகின்றன. தவிரவும் ஆன்மிகம்,சுயமுன்னேற்றம் , இதிகாச புராணங்களில் உள்ள வாழ்வியல் கதைகள்,  தொழில் மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

தினந்தோறும் இவர் பதிவிடும் ஒலிப்பதிவுகளை  50000க்கும் மேற்பட்ட நேயர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

வாசிப்பை,வாசிப்பின் அனுபவத்தைத் தனது குரல் மூலம் பரவலாகக் கொண்டுசொல்லும்

"ஆயிரம்+ கதைகள் சொன்ன ஆச்சர்யக் கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் அவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் தமது பாராட்டுகளையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.








9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026

  சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்)  உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.