Sunday, April 25, 2021

"ஒன்பது குன்று" -பாவண்ணன் மே-2021



 


மே மாத வெளியீடு

பாவண்ணன் அவர்களின்

"ஒன்பது குன்று" அனுபவக் கட்டுரைகள்.

--------------------------------------------------------------------------------------------------------

......நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம் மூழ்குவதுபோல  இக்கட்டுரைகள் ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன. ஒருபோதும் சுமையாக இல்லாத நினைவேக்கம் இது. வருத்தமும் துயரமும் இல்லாதது. சில அரிய மனிதர்களின் சித்திரங்கள் மட்டுமே இவற்றில் உள்ளன. ஒருமுறை ஜெய்ப்பூரைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தபோது, ஒரு வழிகாட்டி ஓர் அரண்மனையைச் சுட்டிக் காட்டி அதில் முன்னூறுக்கும் மேற்பட்ட அறைகள் இருப்பதாகச் சொன்னார்.  ஓங்கிய அதன் பிரும்மாண்டமான தோற்றத்தைப் பார்த்தபோது அவர் சொற்களின் மீது நம்பிக்கை பிறந்தது. மனிதமனமும் அப்படிப்பட்ட ஓர் அரண்மனைதான். ஏராளமான அறைகளைக் கொண்ட விசித்திரமான அரண்மனை. ஒவ்வொரு அறையிலும் யாரோ ஒருவர் குடியிருக்கிறார். இக்கட்டுரைகள் தொகுதியாக வெளிவரும் இத்தருணத்தில் நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

https://writerpaavannan.blogspot.com/2021/06/blog-post_6.html?m=1

--------------------------------------------------------------------------------------------------------------

https://bookday.in/pavannans-book-onbathu-kundru-review-by-siddharthan-sundaram/

நினைவில் நின்றவர்கள் – சித்தார்த்தன் சுந்தரம்


சாகித்ய அகாதமி விருதாளர் பாவண்ணனின் புதிய நூல் `ஒன்பது குன்று’ சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடாக மே 2021 அன்று வெளியாகி அதன் வாசகர்களில் ஒருவனான என்னை சில நாட்களுக்கு முன்பு வந்தடைந்தது.

பனிரெண்டு கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலில் அவர் வெவ்வேறு காலகட்டங்களில் சந்தித்த சில சாமான்ய ஆனால் அவரது நினைவை விட்டு அகல மறுக்கும் அரிய மனிதர்களையும், அவர்களைச் சந்திக்க நேரிட்ட சூழலையும் பற்றி எழுதியிருக்கிறார்.

அவரது வார்த்தைகளில், `நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம் மூழ்குவது போல இக்கட்டுரைகள் ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன’ என்கிறார். இதை வாசிக்கும் போது நாமும் நம் வாழ்க்கையில் பின்னோக்கிச் சென்று நமக்கு அறிமுகமானவர்களை, நம்மோடு பழகியவர்களை நினைத்துப் பார்க்கும்படியான ஒரு நிலைக்கு எடுத்துச் செல்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனால் எல்லோராலும் இவரைப் போல அந்த நினைவுகளை எழுத்தில் கொண்டுவர முடியுமா என்றால் அதற்கான பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும்.

கல்லூரி படிப்பின் போது சக வகுப்புத் தோழியும், நல்ல குரல் வளம் கொண்டதால் வாணி ஜெயராம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட ஆனந்தி குறித்த நினைவை பல ஆண்டுகளுக்குப் பிறகு இரவில் படுக்கச் செல்வதற்கு முன் தனது வீட்டுக் கதவுகள் ஒழுங்காகச் சாத்தப்பட்டிருக்கிறதா, தண்ணீர் குழாய்களை மூடியிருக்கிறார்களா என சரிபார்த்துக் கொண்டே வருகையில் சமையல்கட்டு சன்னலில் தெரியும் வானத்து நிலாவைப் பார்க்கையில் ஆனந்தியின் முகம் நினைவுக்கு வர அது `காற்றினிலே வரும் கீதமாக’ இவரது முகத்தை வருடிச் செல்கிறது.



அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஊருக்குச் சென்றிருந்த போது சந்திக்கும் செல்லமுத்துவின் அம்மா வாயிலாக ஊரின் நிலையையும், செல்லமுத்துவின் வாழ்க்கை நிலையையும் ஆயா என்று ஆசிரியர் அழைக்கும்

செல்லமுத்து அம்மாவின் வாழ்க்கையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

தனது முப்பத்தேழாண்டு பணி காலத்தில் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்றிருக்கும் நூலாசிரியர் கர்நாடகாவில் நீண்ட காலம் வேலை பார்த்தவர் என்பதால் அவர் பணி நிமித்தம் சென்ற இடங்களில் பார்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ரெளடி என ஊராரால் அழைக்கப்பட்ட தேவகி, முப்பத்தேழாண்டு கால துயரமான தமிழாசிரியர் ஆக வேண்டுமென்கிற ஆசிரியரின் கனவை நினைவூட்டும் ஆசிரியர் ராமகிருஷ்ணன், எம்.ஏ. சோஷியாலஜி படித்தாலும் ஜே சி குமரப்பாவின் கிராமப் பொருளாதாரத்தால் உந்தப்பட்டு நகர வாழ்க்கையை நரகமாக நினைத்து கிராமத்திலேயே பனஞ்சாறு, மோர், தின்பண்டங்கள் விற்கும் திப்பெஸ்வாமி, ஒன்பது குன்று இருக்குமிடத்துக்கு இவரை அழைத்துச் சென்ற பசவலிங்கப்பா, வயதானாலும் தனது சுயமரியாதையை விட்டுத் தராமல் கடைசி வரை உழைத்து வாழ வேண்டுமென்கிற எண்ணம் கொண்ட கங்கய்யா, கெம்மணகுண்டியில் தொலைபேசித் துறைக்குச் சொந்தமான சர்க்கியூட் ஹவுஸில் தான் உபயோகிக்கும் ஊஞ்சல் படுக்கையை அறிமுகப்படுத்திய கேர்டேக்கர் மல்லப்பா, `என்னதான் இருந்தாலும் எருமை ஒரு ஜெண்டில்மேன் தாத்தா’ என பேரன் சொல்ல நடைப்பயிற்சியின் போது தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கவனித்து வியந்த சம்பவம், தான் வளர்க்கும் மரங்களை நேசிக்கும் ஷிவப்பா, பெங்களூரில் மூலை முடுக்கெல்லாம் முளைத்திருக்கும் தர்ஷிணிகள் (கல்லாவில் பணத்தைச் செலுத்தி கவுண்டரில் நாமே சென்று தேவையான உணவை வாங்கி பெரும்பாலும் நின்று கொண்டே சாப்பிடக்கூடிய உணவகங்கள்) குறித்த அறிமுகமும் பெங்களூரில் விஜயநகரில் தர்ஷணி நட்த்திய ஒருவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹாசனில் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்த தருணங்கள், இந்திராநகர் பார்க்கில் சந்தித்த பார்வதியின் `அப்பாவின் குர’லோடு இந்நூல் நிறைவடைகிறது.

ஒவ்வொருவர் குறித்த சம்பவத்தை நினைவுகூரும்போது தனது பணி குறித்தும், அரசு வேலையில் இருப்பவர்கள் கொஞ்சம் `மாத்தி யோசித்தால்’ என்ன மாதிரியான எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டுமென்பதையும் (இடமாற்றம், பதவி உயர்வில் தாமதம் போன்றவை) நாசூக்காக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

தொலைபேசி இணைப்புக்கு கேபிள் புதைக்கும்போது இருக்கும் விதிகளைப் பற்றி அவர், `அளவுகோல் வைத்து கோடு இழுத்தமாதிரி நேராக இருக்க வேண்டும் என்பது முதல் விதி. பள்ளத்துக்கு இருபுறங்களிலும் காலை வைத்து எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் அது நேராகச் செல்ல வேண்டும். ஒன்றரை அடி அகலத்தோடும் ஐந்தரை அடி ஆழத்தோடும் பள்ளம் இருக்க வேண்டும் என்பதும் இரண்டாவது விதி’ என்கிறார். இது பெரும்பாலான வாசகர்களுக்கு ஒரு முக்கியமான தகவலாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அது போல, புதைக்கப்படும் கேபிள் மீது ஓரடி உயரத்துக்கு மட்டுமே முதலில் மண்ணைத் தள்ளி நிரப்ப வேண்டும். அதன் பின் அதன் மீது வரிசையாக செங்கற்களை அடுக்கிய பிறகு அடுத்த அடிக்குரிய மண்ணைத் தள்ளி நிரப்ப வேண்டும்.


ஏனெனில் எதிர்காலத்தில் யாரேனும் அந்த இட்த்தில் கடப்பாரையால் தோண்ட நேரும் சூழல் ஏற்பட்டால் அந்தக் கடப்பாரைத் தாக்குதலை செங்கற்கள் தாங்கிக் கொண்டு கேபிளைக் காப்பாற்றும். வேலை நிமித்தம் காண்ட்ராக்டர் மூலம் செங்கற்களை வாங்குவதற்குப் பதிலாக நேரடியாக செங்கல் சூளையிலிருந்து வாங்க முயன்றபோது சந்தித்தவர்தான் `ரெளடி’ தேவகி. ஆனால் அவர் உண்மையில் அப்படிப்பட்டவர் இல்லை.தொழில் போட்டி காரணமாக ஊராரல் அவதூறுக்கு உள்ளானவர் என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நூலாசிரியரின் மனிதாபிமானமும், சமூக அக்கறையும், சாத்வீக குணமும், நேர்மையும், அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமும், இயற்கையின் மீது இருக்கும் அதீத நேசமும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் மேலதிகரிகளின் வெறுப்புக்கு ஆளானாலும் (மாத்தி யோசிக்கும் நூலாசிரியரிடம், `ஒங்களோட இதே பிரச்சனையா போச்சு, ஏதாவது மாத்தி மாத்தி சொல்லிட்டேயிருக்கீங்க….’ என்கிற பொருளில் மேலதிகாரிகளின் உரையாடல்) பணியில் இடையூறு ஏற்படாவண்ணம் பிறருக்கு உதவும் நல்லெண்ணம் பெரும்பாலான கட்டுரைகளில் வெளிப்படுகிறது. குறிப்பாக `மலர்ந்த முகம்’, `திருநீறு பூசிய முகம்’ என்கிற கட்டுரைகளில் அவை அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

இந்த நூலில் இருக்கும் பனிரெண்டு கட்டுரைகளை வாசிக்கும் போது நம்மையும் அவர் எழுத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பயணிக்க வைக்கிறார் என்கிற வகையில் இதை ஒரு பயணக் கட்டுரை நூலென்றும் சொல்லலாம்.

இந்நூலை வாசித்து முடிக்கும் தருணத்தில் முன்பே ஆர்டர் செய்திருந்த இவருடைய `வற்றாத நினைவுகள்”, `நான் கண்ட பெங்களூரு’ நூல்கள் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வந்து சேர்ந்தன.

ஒன்பது குன்று
பாவண்ணன்
சிறுவாணி வாசகர் மையம்
விலை: ரூ. 140/-

----------------------------------------------------------------------------------------------------

https://padithenpagirnthen.blogspot.com/2021/07/blog-post.html

ஒன்பது குன்று - பாவண்ணன் - சிறுவாணி

 

ஒன்பது குன்று

பாவண்ணன்

சிறுவாணி வாசகர் மையம் -
8778924880

 


பாவண்ணன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதில் வாசகனுக்கு எப்போதுமே சந்தேகம் இருப்பதில்லை. வாழ்க்கைக்கும் எழுத்துக்குமான உறவு, ஒன்றை இன்னொன்று மேம்படுத்துவதும், ஆதாரப்பட்டு நிற்பதும் வெளிச்சத்தில் வைத்து பார்ப்பதும்தான் என்பதை நம்பும் மனிதர். தவிரவும் அவரது வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியை காண்பது இயலாது. அதே சமயம் அது கோஷங்களாலும், உயர்வு நவிற்சிகளாலும், போதனைகளாலும் திணற அடிக்காமல் எழுதக்கூடியவர்.  பாசாங்கு இல்லாமல் எழுதக் கூடியவர். ஆரவாரம் இல்லாமல் தொடர்ந்து இயங்கக் கூடியவர்.

 என்னுடைய ஆசிரியரும், எழுத்தாளருமான சபாநாயகம் பல வருடங்கள் முன்பு இவருடைய துங்கபத்திரை கட்டுரை தொகுப்பு பற்றி விரிவாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாவண்ணனின் பங்களிப்பு குறித்து சிலாகித்தார். அதுபற்றி அவர் விமர்சன கட்டுரை எழுதி இருந்தார் என்றே நினைக்கிறேன்.

 பாவண்ணனின் புதிய தொகுப்பு ‘ஒன்பது குன்று’ – சிறுவாணி வெளியீடு. இது அனுபவக் கதைகளின் தொகுப்பு.

 இதில் கர்நாடகத்தில் பணியாற்றிய பகுதிகளின் பின்புலத்தில் உள்ள கதைகள் என்பதால் கர்நாடகத்தின் மலைப்பரப்பை, நிலப்பரப்பை நமக்கு தமிழ் மனத்தோடு அறிமுகப் படுத்தும் சில கதைகள். எல்லாமே நிஜவாழ்வின் அனுபவ வாசனைகளைக் கொண்டவை. ஆகவே வாழ்வின் அனுபவங்களை – அது இனிதோ கசப்போ – வாழ்வின் கூறாக பார்க்கும் மனநிலையை நமக்கு நினைவூட்டுகின்றன இந்த கதைகள். ஒரு வெறும் செய்தி, சம்பவம் எப்படி கலையாகிறது என்று பார்ப்பதற்கு ஒருவருக்கு தெரிய ஆரம்பிக்கும்போது வாழ்க்கையின் சாரம் பிடிபடுகிறது. அதனாலேயே பாவண்ணன் முக்கியமானவராகிறார்.

 உதாரணமாக, ஒரு மலைப்பகுதிக்கு சர்வே செய்வதற்காக உதவியாளர் ஒருவருடன் செல்கிறார். அலுவலகங்களில் – குறிப்பாக அரசாங்க அலுவலகங்களில் இலக்கியம் அல்லது வாசிப்பு குறித்த விஷயங்கள் பேசப்படாது. ஒருவருடைய எந்த மேலதிக திறமையும் அங்கீகாரம் பெறாது. அடையாளம் கூட பெறாது.  (கவிஞர் பிரும்மராஜனை பார்க்கவேண்டும் என்று கல்லூரி ஆசிரியர்கள் பலரிடம் கேட்டேன். ஒருவருக்கு கூட தெரியவில்லை. நிலைமை அதுதான்.) அதுபோல் உடன் வரும் உதவியாளரோடு இவர் செல்லும்போது வாகனத்தை நெருங்கும்போது அவர் சட்டென இவரை குறுக்கே கைநீட்டி நிறுத்தி சப்தம் போடாம இருக்குமார் சொல்லி வாகனத்துக்கும் மேலிருக்கும் பறவையை காட்டுகிறார். அது மீன்கொத்தி என்று கேட்கும்போது ஆமாம் என்று சொல்கிறார். பறவைகள் பற்றிய ரசனை அவருக்கு தெரிந்திருக்கிறது. இவர் அவரிடம் தொடர்ந்து  பேசும்போது பறவைகள் குறித்த புத்தகத்தை இருவரும் படித்திருப்பதை பரஸ்பரம் உணர்கிறார்கள். காட்டை பற்றிய ரசனையாக அவர்கள் நட்பு விரிகிறது. ஒரு மீன்கொத்தி இது வரை பழகிய உதவியாளர் ஒருவரின் வேறொரு கதவை திறந்து விடுகிறது.(ஒன்பது குன்று)  நமது நடப்பு வாழ்க்கையில் கூட இப்படித்தானே இருக்கிறது !

பூங்காவில் நடை பயிற்சி முடித்துவிட்டு உட்கார்ந்திருக்கும்போது பூங்காவின் பராமரிப்பு, நேர்த்தியான தரைப் பலகைகள் போன்றவற்றை கவனிக்கிறார். ஒரு சிறு குழந்தை கீழே விழுந்த நாவல் பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறது. அதன் அம்மா வாயிலிருந்து பிடுங்கி வெளியே போட்டுவிட்டு சுத்தமின்மை பற்றி சொல்லி திட்டுகிறார். சிறு குழந்தை ஏக்கத்துடன் செல்கிறது. இதை பார்த்த இவர் ரொம்பதான் சுத்தம் பாக்கிறாங்க ..குழந்தை பாவம் என்கிறார். பக்கத்திலிருந்த ஒரு நடுவயது பெண்மணி ஆமாம் என்று தன்னிச்சையாக ஆமோதிக்கிறார். நேரில் போய் இதில் என்ன சுத்தம் கேட்டுவிட்டது. ஊதி சாப்பிடவேண்டிய பழம்தானே அது என்று சொல்ல நினைத்து பிறகு சும்மா இருந்துவிட்டதை சொல்கிறார். ஒரு எதேச்சையான இந்த பேச்சில் அந்த பெண்மணியின் அப்பாதான் இந்த பூங்காவை பரமாரித்து உண்டாக்கியவர் என்றும்  எங்கிருக்கும் சில மரங்கள் தான் நட்டவை தன்சகோதரர்கள் நட்டவை என்று சொல்கிறார். அவர் தனது வாழ்க்கையில் தனிமரமாகி விட்டதையும், இந்த மரங்கள் மீது நினைவோட்டமாக தன்னுடைய அப்பாவின் குரல் தினமும் கேட்பதாகவும் சொல்கிறார். கடைசி காலத்தில் தன்னை ஒரு முறை பெயர் சொல்லி அழைப்பதற்குள் நூறு முறை இருமும் இருமல் சத்தமும் சேர்ந்து கேட்கிறது என்று முடியும் இந்த கதையில் சக மனிதரோடு பேசும் ஒரு வார்த்தை எப்படி நேயமிக்க ஒருவராக மாறுகிறது என்பதை பார்க்க முடிகிறது. (அப்பாவின் குரல் )

தொகுப்பின் மிகச்சிறந்த கதைகள் – மலர்ந்த முகம், திருநீறு பூசிய முகம் என்று சொல்லலாம்.

இரண்டு முக்கியமான அம்சங்களை மட்டும் சொல்லி பாவண்ணனின் இதயம் எங்கே இருக்கிறது என்பதை கோடிடுகிறேன்.

BSNL தொலைபேசி துறையில் கேபிள்களை பூமியில் பதிப்பது (இன்று அந்த துறையையே புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்) என்பது ராட்சச வேலை. பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் அமைக்கப்படவேண்டும். அதற்கு இரண்டு லட்சம் செங்கல்கள் வேண்டும். பொதுவாக ஊரில் முக்கியமான ஆளை கூப்பிட்டால் அவர் ஏற்பாடு செய்வார். உற்பத்தியாளருக்கு 50% தான் போய்சேரும். அரசு தரும் பணம் நேரடியாக அவர்களுக்கு போனால் கஷ்டப்படும் அவர்கள் எவ்வளவு சந்தோஷம் அடைவார்கள் என்று உயர் அதகாரியிடம் கேட்கிறார். நாம் என்ன சமூக சேவையா செய்யப்போறோம் ? இந்த இடத்தில் வேலை முடிஞ்சா கிளம்பி வேற இடம் போகபோறோம். செங்கல் வியாபாரியை யார் தேடி பிடிக்கறது ? சப்ளை ஒழுங்கா இல்லாம போனா என்ன செய்வது. மேலும் அரசு வேலை என்பதால் பணம் பின்னால்தான் வரும் .இதெல்லாம் யார் ஒத்துப்பா ? என்று சொல்ல்விட்டு – வேலை நடக்கணும் பிறகு உங்களிஷ்டம் என்று சொல்கிறார். இவர் உற்சாகமாக உதவிக்கு ஒரு ஆளை படித்துக்கொண்டு சுற்றி அலைந்து, பலர் மறுக்க, ஒரு பெண்ணை ‘ரவுடி பொம்பளை ஒருத்தி இருக்கா’ என்று சொல்கின்றனர். ஊரு அவளை அப்படித்தான் அழைக்கிறது. இவர் சூளைக்கு செல்லும்போது சற்று கறாராக இருக்கும் அவரிடம் இவர் விவரிக்கிறார். அவருக்கு வங்கி கணக்கு கூட இல்லை. இவர் எல்லாம் ஏற்பாடு செய்கிறார். செங்கல் சப்ளை ஆகிறது. இதற்கிடையே அந்த பெண்ணின் கணவன் குடிகாரன். பொறுப்பற்றவன். அவன் சரியாக கூடி வாழ்வது கூட இல்லை. ஆகவே இந்த பெண்தான் சூளையில் கூலி வேலை செய்த பெண், மெதுவாக சுயமாக தொழில் ஆரம்பிக்கிறார். ஒரு பெண் சுயமாக சம்பாதிப்பதை பொறுத்துக் கொள்ளாத பலரும் அவளை ரவுடி என்று முத்திரை குத்துகிறார்கள். எங்க ஊருக்கு கேபிள் வேலை செய்வதாக இதற்கு ஒத்துக் கொள்கிறேன் என்கிறாள் அவள். அது சரி கேபிள் புதைக்க செங்கல் எதற்கு ? என்று கேட்கிறாள்? செங்கல்லையும் சேர்த்து அடுக்கி புதைக்கும்போதுதான் அது சேதம் ஆகாமல் இருக்கும் என்று சொல்கிறார் “பொம்பளைக்கி ஆம்பளை துணையா போறானே அந்த மாதிரின்னு சொல்லுங்க” என்று தான் புரிந்து கொண்ட விதத்தில் சொல்கிறாள்.  “சேதாரமாயிட்ட அப்பிடியே விட்டுட்டு போயிடுவிங்களா?” என்று வறண்ட புன்னகையுடன் கேட்கிறாள். “அதெப்படி உட முடியும்? ரிப்பேர் பண்ணி சேத்து வைச்சிருவோமில்லே” என்று சொல்கிறார்.  எல்லோரும் சிரிக்கிறார்கள். இதில் அந்த பெண்ணின் மன அமைப்பை எளிமையாக சொல்லிவிட்டு போகிறார் பாவண்ணன. இறுதியாக அவள் ஒரு கவரை எடுத்துக்கொண்டு வருகிறாள். ஏதோ பிரச்சனை என்று இவர் நினைக்கும்போது அது காசோலை வந்த உறை. அது உங்களுக்கு வந்த கடிதம்தான். உங்களுக்கு பணம் வந்திருக்கு என்று சொல்கிறார். அது . மொதமொதல்ல வந்திருக்கு. நீங்களே பிரிங்க என்று சொல்லி தருகிறாள். அதில் இருக்கும் பணம் அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது. இடை தரகர் மூலம் செய்திருந்தால் இந்த அளவு பண அவளுக்கு வந்திருக்காது. ஆனால் அந்த வரியை இவர் எழுதுவதில்லை. அவள் கண்ணில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. கள்ளிச்செடியில் பூவில் எழுந்து மறைந்த மின்னலை நினைவுபடுத்தியது என்று முடிக்கிறார். தரகர் இல்லாமல் நேரடி கொள்முதல் செய்து வேலையை முடிக்கும் கதையை அவர் சொல்கிறார். கதை முடிந்த பிறகு, அதில் வரும் பெண்ணின் மனத்திட்பம், ஊராரின் பொறாமையும் ஏச்சும், அவளது குடும்ப வாழ்வின் இடைவெளி, அதை அவளது தொழில் இட்டு நிரப்பும் முறை, தரகர்களை தவிர்த்தால் உழைப்பவன் பெறக்கூடிய முழு வெகுமதியின் சாத்தியம் இவை மேலே மிதந்து வருவதைப் பார்க்கலாம்.

மற்றொன்றில் பள்ளம் தோண்டும் வேலைக்கு பாதியில் படிப்பை விட்டுவிட்டு சோம்பி திரியும் இளைஞர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு இந்த பணியை தர முயற்சித்து செய்து காட்டுகிறார். பள்ளம் தோண்டும் வேலை என்று அதை குறையாக பார்க்காமல் வேலை செய்யவேண்டும்.  குறிப்பிட்ட அளவு நாட்கள் ஒரு வருடத்தில் தினக்கூலியாக வேலை செய்திருந்தால் துறைக்குள் வேலைக்கு நுழையும் சாத்தியமும் சட்டமும் இருப்பதை சொல்கிறார். அப்படி பலர் பயன் பெறுகிறார்கள். எத்தனை நேர்த்தியான அணுகுமுறை. இதெல்லாம் அவர் நிஜ வாழ்வில் செய்தவை.

புத்தக தலைப்பு கதை மிக நல்ல கதை. ஒன்பது குன்றுகள் என்று பன்மையில் இல்லாமல் ஒன்பது குன்று என்று ஏன் இருக்கிறது? கதையை வாசிக்கும்போது அது இலக்கணத்தை தாண்டிய அனுபவம் என்பதை நாம் உணரமுடியும்.

இதற்கு மேல் கதைகளை சொல்வதைவிட, தொகுப்பை வாங்கி வாசிக்கும்போது மட்டுமே முழு வாசிப்பு திருப்தியை நாம் அடையமுடியும்.


------------------------------------------------------------------------------------------------------------

https://youtu.be/1LN2U4-OWLE

 வணக்கம் சார். என்னுடைய YouTube Chennel பெயர் - மொழிவனம். தொடர்ச்சியாகப் பல்வேறு நூல்கள், கட்டுரை, புனைகதை, திரைப்படம் குறித்து உரையாற்றி வருகிறேன். இன்று பாவண்ணின் ஒன்பது குன்று நூலில் இருந்து மறக்க முடியாத மனிதர்கள் பற்றிப் பேசினேன். வாய்ப்பிருப்பின் பார்க்கவும் சார். நன்றி. தங்களது சிறுவாணி வாசகர் மையம் மூலமாக நல்ல நூல்களை வாசிக்கிறேன். நன்றி.

Dr Balasubramaniam

-----------------------------------------------------------------------------------------------------------------

ஒன்பது குன்று - ஆசிரியர் அவர்களின் மலரும் நினைவுகளாக அமைந்திருக்கும் இந்த கதைகட்டுரைகள்  நூல்,  நழுவிக் கொண்டே இருக்கும் விழுமியங்கள் குறித்து அசை போட , குறிப்பாக இந்நூலை வாசிக்கும் இளம் மற்றும் மத்திம வயதினரின் மனதில் லட்சிய வைராக்கியத்தை விதைக்க கூடிய ஒரு நேர்மறை கையேடு. இந்த கதை மனிதர்களுக்கு  அவர் தம் வாழ்வில் வென்று எடுக்க புதிய பொருளோ புதிய நிலங்களோ இல்லை, தாமே கனிந்த அந்த ஒரு கனம் முதல் மனதில் சூல் கொண்ட அந்த வைராக்கிய சுடரை துணை நிறுத்தி பகிர முடியாத ஞானத்துடன் செயல் யோகத்தில் அமர்ந்து விட்டவர்கள், அவர்கள் சுட்டவது எல்லாம் செயலயே , சமுதாயத்தால் வெற்றி அல்லது சாதனை என்று அறுதியிட்டு கூறும் தளங்கள் அல்ல இவர்கள் இயங்குமிடங்கள், தினசரி வாழ்வின் தளத்திலேயே இவர்கள் செயல் யோகம் அமைந்திருக்கிறது , காலத்தின் ஞானம் உணர்ந்து சமுதாய பெரும்போக்கிற்கு இணையான நேர்மறையான ஒரு எதிர்வினை இவர்கள் வாழ்வு , கால மாற்றங்களை தாண்டி நம்மை அழைத்து செல்லும் பகிர முடியாத ஞான சுடரை அணையாது தங்கள் வாழ்வையே செய்தியாக்கிய மாமனிதனின் தடம் பற்றிய வைராக்கிய மனிதர்கள் குறித்த கதைகட்டுரைகள் இந்நூல், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு நன்றி

நன்றி.திருமலையப்பன் அவர்கள்

------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள்  இம்முறை அனுப்பிய புத்தகங்களில் பாவண்ணனின் "ஒன்பது குன்று" அருமையான புத்தகம். அதில் வரும் மனிதர்களும் இயற்கைக் காட்சிகளும் மனத்தை நிறைத்து விடுகிறது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

 எழுத்தாளர் அம்பை

---------------------------------------------------------------------------------------------------------------------

முன் பிறவிப் புண்ணியத்தால் பல நல்ல புத்தகங்களை வாசிக்கும் பாக்கியம் இப்பிறவியில் எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு சிறந்த புத்தகம் - பாவண்ணன் அவர்களின் ஒன்பது குன்று - இப்போது வாசித்துக் கொண் டிருக்கிறேன். சிறுவாணிக்கு நன்றி !

திருமலையப்பன் திண்டுக்கல்



ஓவியர் ஜீவா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையத்தின் அடுத்தடுத்த மாதங்களின் புத்தகங்களை அளித்தபோது.....
-------------------------------------------------------------------------------------------------------------



கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....