Friday, July 7, 2023

நாஞ்சில்நாடன் விருது -2023 விருதாளர் திரு.அருட்செல்வப்பேரரசன்.




 கோவையிலிருந்து செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையம்,  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2023) இந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் திரு.அருட்செல்வப் பேரரசன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.


வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஆர்த்ரா ஹால்(அண்ணா சிலை அருகில்)நடைபெறும் விருது விழா பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

**

விருது பற்றி சிறு அறிமுகம் ;


சிறுவாணி வாசகர் மையம்  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது .


கலை, இலக்கியம்  சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000/- ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .


முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;

ஓவியர் ஜீவா (2018),


முனைவர் ப. சரவணன் ( 2019) ,

 பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் (2020),

 

மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்

(2021) 


சமூகச் செயற்பாட்டாளர் 'கௌசிகா' திரு. செல்வராஜ்(2022)


-------


கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது . 


இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக

தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.


 கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட  உறுப்பினர்கள் உள்ளனர். 

தொடர்புக்கு -

9940985920

8778924880

-------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2023 விருதாளர் 

திரு.அருட்செல்வப்பேரரசன்.


46 வயதாகும் இவர் சென்னை,திருவொற்றியூரில் வசித்து வருகிறார். கணினி வரைகலை அலுவலகம் நடத்தி வருகிறார்.  இந்தியாவின் மாபெரும் இதிகாசமான மஹாபாரதம் இதுவரை நல்லா பிள்ளை பாரதம், வில்லிப்புத்தூரார் பாரதம் மற்றும் ம.வீ.ராமானுஜாச்சாரியார், திருக்கள்ளம் நரசிம்ம ராகவாச்சாரியார், புரிசை கிருஷ்ணமாச்சாரியார் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.அவற்றைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் அதற்கான முழுமையான மொழிபெயர்ப்பைச் செய்துள்ளவர் அருட் செல்வப் பேரரசன். பல்கலைக்கழகங்களும் மாபெரும் வல்லுனர் குழுக்களும் இணைந்து செய்ய வேண்டிய ஒன்றை தனியே ஒருவராக செய்துள்ளார்.


அதுமட்டுமன்றி இவர் தனது மொழிபெயர்ப்பை ஒலிக்கோப்பாகவும், காணொளி கோப்பாகவும்  தன்னலமின்றி வெளியிட்டுள்ளார். அச்சு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 


கிசாரி மோகன் கங்குலி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை எடுத்துக்கொண்டு தமிழில் இவர் மொழிபெயர்க்கும் பணியைச் செய்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பை பொறுத்தவரை புத்தக வடிவில் உள்ள பதிப்புகளிலும் ஸ்லோக எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமன்றி அனைத்தும்  ஒருவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது என்பது இது ஒரு சாதனை.


மகாபாரதத்தைத் தொடர்ந்து ஹரி வம்சத்தையும் நிறைவுசெய்து ராமாயணத்தையும் மறுஆக்கம் செய்துவருகிறார்.


 கடும்உழைப்பைச் செலுத்தி முழுமையான மூல மஹாபாரதத்தை மொழிபெயர்த்துள்ள அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கு இந்த ஆண்டின் (2023)  நாஞ்சில்நாடன் விருது வழங்கப்படுகிறது.

--------------------------------------------------------------

முழுமஹாபாரதம், ஹரிவம்சம் ஆகியனவற்றையும், இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் 18ம் சர்க்கம் வரையும் முழுமையாக, பர்வ, காண்ட வாரியாக, அத்தியாய வாரியாக www.arasan.info என்ற வலைப்பூவில் படிக்கலாம். இவையனைத்தும் அனைவருக்கும் திறந்த நிலையிலேயே இருக்கிறது.


                               (Scan for Mahabharatham full translation)







ஆத்துக்குப் போகணும்-காவேரி-ஜூன்-2023



 ஜூன்-2023 வெளியீடு

ஆத்துக்குப் போகணும்-

காவேரி-

பக்கங்கள் 160   விலை 180/-


வீடு, பொதுவாக ஒரு வசிப்பிடம். ஆனால் பெண்ணுக்கு ? பெண்தான் வீட்டை அமைக்கிறாள். அது அவளுடைய சௌகரியங்களுக்கல்ல. ஆணுக்கும் குழந்தைகளுக்கும்தான் இடம்தருகிறது. ஏன்? வீட்டின் பௌதிக மதிப்பையும் பெண்தான் உயர்த்துகிறாள். ஆனால் அந்த மதிப்பில் மரபுரிமை கோர அவளுக்கு வழியில்லை. எதனால்? நாம் நமது உடலில் குடியிருப்பதுபோல வீட்டுக்குள் குடியிருக்கிறோம். எனினும் பெண்ணுக்கு அந்த இருப்பு எட்டாப் பொருள். எப்படி ?

காவேரியின் இந்நாவல் பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மையமாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிறது

குஜராத்திச் சிறுகதைகள்- டி.கே.ஜயராமன் -மே-2023



மே-2023 வெளியீடு

குஜராத்திச் சிறுகதைகள்-

டி.கே.ஜயராமன்


பக்கங்கள் 226   விலை 240/-

------------------------------------------------------

நன்றே செய்க !

“குஜராத்திச் சிறுகதைகள்” என்று தலைப்பிடப்பட்ட திரு.டி.கே.ஜயராமன் மொழிபெயர்த்துத் தொகுத்த இந்நூல் 1969-ம் ஆண்டில் முதற்பதிப்பு கண்டுள்ளது. அணிந்துரை வழங்கியவர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிக் கலைஞர் தி.ஜ.ர. என்று வழங்கப் பெற்ற தி.ஜ.ரங்கநாதன். அரை நூற்றாண்டுக்குப் பிறகு மறுபதிப்பு வருகிறது. மறுபதிப்பை முன்னெடுத்துள்ள சிறுவாணி வாசகர் மையம் நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்கள். 

நல்ல புத்தகங்கள் விற்பதில்லை, பல்லாண்டுகளுக்குப் பிறகும் மறுபதிப்பு வருவதில்லை, சிபாரிசும் சன்மானமும் இல்லாமல் அரசு நூலகங்களும் வாங்குவதில்லை என்பதைத் தீப்பேறு என்பதா சாபக்கேடு என்பதா? என்றாலும் மேடைகளில் பல கட்சித் தலைவர்களும், சொற்பொழிவாளரும், பேராசிரியர்களும், மொழி வளர்ப்போம் என்று கூறித் தம்மை வளர்த்துக் கொள்கிறவர்களும், கேட்பவர் நெஞ்சம் வெடிபட தம் தொண்டை கிழிய முழங்குவார்கள் புத்தகம் பற்றியும் வாசிப்புக் குறித்தும். உரத்துப் பேசுகிறவரையும் நீண்ட நேரம் பேசுகிறவரையும் குறித்து மலையாளத்தில் மோசமான சொலவம் ஒன்றுண்டு. அதனுள் பிரவேசிக்க விருப்பமில்லை எனக்கு.

எனது வளரிளம் பருவத்தில் இந்நூலை வாசிக்க வாய்க்கவில்லை. நூற்றிருபது வீடுகள் கொண்ட  சின்னஞ் சிறு கிராமத்தின் ஊர் வகை ‘தமிழர் நூல் நிலையம்’. நெல் அறுவடை ஆகும் பூ   தோறும் ஊர் மக்களிடம் வீட்டுக்குக் குறுணி நெல் சந்தா பிரித்துச் சேர்த்த பணத்தில் எத்தனை நூல்கள் வாங்க இயலும்? தசரத இராமனின் வனவாசம் வானவரின் நற்பேறு ஆனது போல், ஆனது பம்பாய் வாசம், வாசிப்பின் பரப்பைப் பெருக்கிற்று.

1973- ம் ஆண்டு முதல், அரை நூற்றாண்டாகப் பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர் நான். அங்கிருந்த நூலகத்தில்தான் இந்த நூலை முதலில் வாசித்தேன். அங்குதான் த.நா.குமாரசாமி, த.நா. சேனாதிபதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ, கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி, சரசுவதி ராமநாதன் போன்றோரின் மொழிபெயர்ப்பு  நூல்களை எல்லாம் தேடித் தேடி  வாசித்தேன். அந்த மொழிபெயர்ப்புகளின் தொடர்ச்சியே அண்மையில் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட ‘கடவுளுக்கென ஒரு மூலை’ என்று தலைப்பிடப் பெற்ற மொழிபெயர்ப்புச் சிறுகதைகள். மொழிபெயர்ப்பாளர் அனுராதா கிருஷ்ணசாமி. 

மொழிபெயர்ப்பின் மூலம் வேறொரு மொழியின் இலக்கியப் போக்கை அம்மொழி பேசுபவரின் மரபை, பண்பாட்டை, சிந்தனையை, இயற்கைச் சூழலை, நிலவகையை நாம் அறிந்து கொள்ளலாம்.

நம் இலக்கியவாதிகள் எவரைப் பார்த்தாலும் அன்டன் செகாவ், தாஸ்தாவஸ்கி, தோன்ஸ் தாய், மாக்சிம் கார்க்கி, இவான் துர்கேனிவ், ஜேம்ஸ் காயல் என சிலம்பித் திரிவர். நமது அறிவுச் சமவெளியைப் பெருக்கிக்கூட்ட அண்மைக்கால பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், யப்பான், ஆப்பிரிக்க எழுத்தாளர் சிலரின் பெயர்களையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால்  இந்தியப் பிறமொழி எழுத்தாளர்   குறித்து வாய் திறப்பதில்லை. இவர்கள் எவரும் மேதமை கொண்டவர் இல்லையா? அனைத்து மொழிகளின் இலக்கிய ஆளுமைகளும் நமக்கு உறவுதானே! இதிலும் தன்னாள் வேற்றாள் உண்டா?

‘குஜராத்திச் சிறுகதைகள்’ எனுமிந்த நூலுக்கு, தி.ஜ.ர.வைத் தொடர்ந்து அணிந்துரை வழங்குவதில் எனக்குக் கர்வம் உண்டு. பதினைந்து கதைகள் கொண்ட தொகுப்பு இது. நவீன இலக்கிய வாசகன், இதிலுள்ள மூல ஆசிரியரின் பெயர்களில் சிலரையாவது அறிந்திருக்கக்கூடும். அறியாமற் போனால் எவருக்கு இழப்பு?

பத்தொன்பது ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தாலும். மும்பை மாநகரின் கணிசமான மக்கட்தொகை குஜாத்தில் என்பதாலும், மும்பை சர்ச் கேட் ரயில் நிலையத்தில் இருந்து எழுபது கிலோ மீட்டரில் குஜராத் மாநில எல்லை வந்துவிடும் என்பதாலும், தொழில் நிமித்தமாக நவ்சாரி – சூரத் - வதோதரா - ஆமதாபாத்  - சுரேந்தரா  நகர் என அலைய நேர்ந்ததாலும் எனக்குக் குஜராத்தி மொழியும் கொஞ்சம் தெரியும், மராத்தி அளவுக்கு இல்லை என்றாலும்.

அந்த மூலபலம் கொண்டு மறுபடியும் இந்தக் கதைகளை நான் வாசித்தேன். அணிந்துரையில் தி.ஜ.ர. சொன்னதைத் தாண்டி என்னால் என்ன கதைத்துவிட இயலும் ? கே.எம். முன்ஷி , உமாசங்கர் ஜோஷி, பன்னாலால் படேல், சந்திரகாந்த் பக் ஷி போன்றவரின் படைப்புகளை மறுபடி வாசிப்பதே புது அனுபவம்.

இந்தத் தொகுப்பின் சிறப்பான கதைகளில் ஒன்று மதுராய் எழுதிய 'வைத்துக் கொள்ளுங்களேன்' என்பது. எழுதப் பெற்று முக்கால் நூற்றாண்டு ஆகி இருக்கலாம். குஜராத்தில் இருந்து புலம் பெயர்ந்து கல்கத்தாவுக்குப் பிழைக்கச் சென்றவனின் இடிபாடுகளும்  இடர்பாடுகளும்  பாடு பொருள். இன்று வசிக்கும் எவருக்கும் புது அனுபவம் தரும்.

சிவகுமார் ஜோஷி எழுதிய ‘கேயூரி’ என்ற கதை, மென்மையான உணர்வுகள் காலங்கடந்தும் தரும் வலியை உணர்த்துவது. ஆண், பெண் உறவென்பது, பருவ வயதினிலே ஆனாலும், கலவியில் நிறைவடைய வேண்டும் என்று கட்டாயமில்லை என்பதைச் சொல்வது. பன்னாலால் படேல் எழுதிய  'இன்பத்திலும் துனபத்திலும்’ என்ற சிறுகதை. குருடியான பெண்ணுக்கும் நொண்டியான ஆணுக்கும் இடையே மலரும் நேசம் குறித்தது. இருவருமே யாசகர்கள். குடியிருக்க வீடற்றவர்கள். இன்று வாசிக்கும் போது புதிதாக இருக்கிறது.

இந்திய – பாகிஸ்தானியப் பிரிவினையை ஒரு வரலாற்றுச் செய்தியாகவே அறிந்திருக்கிறார்கள் இளைய சமூகத்தினர். பிரிவினைகள் வலியை, வேதனையை, அவலத்தை எந்த மிகையும் ஆகுலமும் இன்றி உணர்த்தும் கதை, கிஷன் சிங் சாவ்லாவின் ‘அஸ்மத்’. வாசிப்போரின் கண்ணீர் கோரும் கதை. பிரிவினை நடக்காமலேயே கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் பேர், காணாமற் போன அரை லட்சம் பேர், தமிழ் மொழி பேசிய காரணத்தாலேயே வன்புணர்ந்து கொங்கைகள் அறுத்து வீசப்பட்ட ஆயிரக்கணக்கான பேர் என வரலாறு முழுக்க வலிகளே மிகுந்து காணப்படுகின்றன. அத்தகைய வழிகளில் ஒன்றுதான் ‘அஸ்மத்’ அனுபவித்ததும். 

டி.கே.ஜயராமன் எனும் மூத்த எழுத்தாளர், குஜராத்தி மொழியில் இருந்து தமிழுக்குப் பெயர்த்த பல கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பெற்ற தொகுப்பு இது. இன்றும் சுவையான வாசிப்பு அனுபவம் தரும் மொழியாக்கம். பகட்டில்லாத மொழிநடை. குஜராத்திச் சொற்களுக்கு சற்றும் துல்லியக் குறைவு வராத தமிழ்ச் சொல் தேர்வு. மொழி, பிரதேசம், மதம், பண்பாடு என்ற எந்த வேறுபாடும்  அவலத்தையோ ஆனந்தத்தையோ நமக்குக் குறைவாக உணர்த்துவதில்லை என்பதை நிறுவும் மொழிபெயர்ப்பு.

யாவற்றுக்கும் மேலே, ஒரு சம்பவத்தை, காட்சியை, கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை, ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்குப் பரிமாற்றம் செய்யும் போது, மொழிபெயர்க்கிறவருக்கு இயலாக ஏற்படும் பரிவும் புரிதலும் மொழிபெயர்ப்பை மேம்படுத்தும் என்பது என் துணிவு. திரு.டி.கே.ஜயராமன் அவர்களிடம் அவை இருப்பதை இந்தக் கதைகளின் மொழியாக்கம் அறியத் தரும்.

யாண்டுகள் எத்தனை சென்றாலும், புதுமை குன்றாத தீவிர வாசிப்பு அனுபவத்தை இந்தக் கதைகள் இன்றைய வாசகருக்குத் தரும் என்பது என் உறுதியான நம்பிக்கை.


நட்புடன்

நாஞ்சில் நாடன்

கோயம்புத்தூர் – 641 042

31  மே, 2023

------------------------------------------------------

"நம் இலக்கியவாதிகள் எவரைப் பார்த்தாலும் அன்டன் செகாவ், தாஸ்தாவஸ்கி, தோன்ஸ் தாய்,மாக்சிம் கார்கி, இவான்  துர்னிகாவ், ஜேம்ஸ காயல் என சிலம்பித் திரிவார். நமது அறிவுச் சமவெளியை பெருக்கிக்கூட்ட அண்மைக்கால பிரெஞ்சு,இத்தாலி, ஜெர்மன், யப்பான், ஆப்பிரிக்க எழுத்தாளர் சிலர் பெயரையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் இந்திய பிறமொழி எழுத்தாளர் குறித்து வாய் திறப்பதில்லை. இவர்கள் எவரும் மேதமை கொண்டவர் இல்லையா? அனைத்து மொழிகளின் இலக்கிய ஆளுமைகளும் நமக்கு உறவுதானே! இதிலும் தன்னாள் வேற்றாள் உண்டா?" நாஞ்சில் நாடன் அவர்களின் நன்றே செய்க என்ற தலைப்பில்  அணிந்துரையிலிருந்து


(எத்தனை நிதர்சனம்)


 1969ல்  வெளியாகி நீண்ட இடைவெளிக்கு அப்புறம் டி.கே. ஜெயராமன் அவர்களின் மொழி பெயர்ப்பில் மறுபதிப்பாகி வெளிவரும் ' குஜராத்திச் சிறுகதைகளுடன், ஒரு பறவையின் நினைவும், ஆத்துக்குப் போகணும் என்கிற புத்தகங்களில் இன்னும் சில வாரங்களில்  மூழ்கிவிடலாம்


சிறுவாணி வாசகர் மையம்

Madhusudhan sukumaran fb

------------------------------------------------------------------------------

 




இவ்வருடத்தின்(ஏப்ரல் 2023-மார்ச் 2024) முதல் மூன்று மாதங்களுக்கான புத்தகங்களோடு ஓவியர்.ஜீவா

ஏப்ரல்-ஒரு பறவையின் நினைவு-வைதீஸ்வரன்

மே-குஜராத்திச் சிறுகதைகள்-டி.கே.ஜயராமன்

ஜூன்-ஆத்துக்குப் போகணும்-காவேரி




இன்று 26.09.2023 மாலை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் சுபாஷிணி மேடம் நடிகர் சிவக்குமார் வீட்டில் சென்று "அம்மா அம்மா,இன்னொரு கனவு,குஜராத்தி சிறுகதைகள்" ஆகிய புத்தகங்களைக் கொடுத்தார்.நடிகர் சிவக்குமார் சிறுவாணியின் உறுப்பினர்.

ஒரு பறவையின் நினைவு-எஸ்.வைதீஸ்வரன்-ஏப்ரல்-2023






ஏப்ரல்-2023
ஒரு பறவையின் நினைவு-எஸ்.வைதீஸ்வரன்

பக்கங்கள் 160   விலை  ரூ.180/-

----------------------------------------------

                            வாழ்த்துக்கள்

 கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சிறுவாணிவாசகர் மையத்தைப் பற்றியும் நல்ல வாசிப்பைத் தூண்டுவதற்காக, வாசகர் வட்டத்தை மெல்ல மெல்ல விரிவு படுத்துவதற்காக அது ஏற்று நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் அறிந்து வியந்துவருகிறேன்.

தற்கால பிரசுரங்களின் சூறாவளியில் திக்குத் தெரியாத காற்றிலென "புக்குத் தெரியாத புத்தகக் காட்சிகளில் " புதிய வாசகர்கள் குழப்பத்தில் தடுமாறுவதை நான் உணர்கிறேன். அத்தகைய இலக்கிய தாகமுள்ள இளம் வாசகர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக தேர்ந்த புத்தகங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கலாம் .

என் இளம்பருவத்தில் எனக்கு மிக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி என் இலக்கிய பார்வைக்கு திசைகாட்டியாக இருந்தவர் என் சகோதரர்.. அப்படிப் பட்ட சகோதர்களின் துணை எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

அத்தகைய நல்ல பணியை சிறுவாணி வாசகர் மையம் செய்து வருவதாகஅறிகிறேன். மிகுந்த தீர்க்கதரிசனமான முயற்சி. இந்த தோழமையுள்ள மையம் மேலும் மேலும் சிறப்பாக வளர வேண்டுமென வாழ்த்துக்கிறேன்.

உங்களுடைய இந்த இயக்கத்தில் ஒப்புவமையற்ற தனித்த பார்வையுள்ள நாஞ்சில்நாடன் போன்ற மூத்த எழுத்தாளர் இணைந்து ஆதரவுடன் செயல்படுவதை அறிந்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. உங்கள் அக்கறையுள்ள இந்த வாசகர் இயக்கம் மேலும் பரவலாக வளரட்டும். வாழ்த்துக்கள்…

 -வைதீஸ்வரன்

-----------------------------------------------------

இவ்வருடத்தின்(ஏப்ரல் 2023-மார்ச் 2024) முதல் மூன்று மாதங்களுக்கான புத்தகங்களோடு ஓவியர்.ஜீவா





ஏப்ரல்-ஒரு பறவையின் நினைவு-வைதீஸ்வரன்

மே-குஜராத்திச் சிறுகதைகள்-டி.கே.ஜயராமன்

ஜூன்-ஆத்துக்குப் போகணும்-காவேரி
----------------------------------------------------------------


 

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....