Sunday, September 1, 2019

செப்டம்பர் 2019 ஒரு சிற்பியின் சுயசரிதை- எஸ். தனபால்

செப்டம்பர் 2019 
ஒரு சிற்பியின் சுயசரிதை! - எஸ். தனபால்

நண்பர்களுக்கு வணக்கம்.

கலை, இலக்கியம், ஆளுமைகள் எனப் பல பிரிவுகளிலும் பதிப்பில் இல்லாத புத்தகங்களைத் தேடிக் கண்டெடுத்து மீண்டும் அச்சாக்கி வெளியிடுவதும், கவனம் செலுத்த வேண்டிய புதுப் புலங்களை நோக்கி நகர்வதுமே நம் சிறுவாணி வாசகர் மையத்தின் தொடர் முயற்சியாக இருக்கிறது.

அம்முயற்சியில் நுண்கலைகள் சார்ந்த புத்தகங்களையும் அச்சில் கொண்டுவர வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பமும் கூட. இது சார்ந்து நம் தலைமை ஆலோசகர்களுடன் தொடர் விவாதமும் உரையாடலும் நிகழ்ந்தது.

அந்த வகையில் 25 வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழில் ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபால் தொடர்ந்து பத்து மாதங்களுக்கு எழுதிய "ஒரு சிற்பியின் சுயசரிதை!" தொடரைக் காலச்சுவடு பதிப்பகத்துடன் சேர்ந்து சிறுவாணி வாசகர் மையம் வெளியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நண்பர் கிருஷ்ண பிரபு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்று நூலாக்கப் பணியைச் செய்து கொடுத்திருக்கிறார்.

செப்டம்பர் மாதத்தில் மதுரை புத்தகக் கண்காட்சியில்  இந்நூலைக் காலச்சுவடு வெளியிடுகிறது.
~~
புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு:

ஒரு சிற்பியின் சுயசரிதை  நூலுக்கு இரண்டு சிறப்புகள்.

ஓவியம், சிற்பம் ஆகிய கவின்கலைத் துறைகளில் சாதனை நிகழ்த்திய தமிழகக் கலைஞர்களில் எவரும் தன்வரலாற்றை எழுதியதில்லை. ஒரு கலைஞர் அவரது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கலையையும் கலை அனுபவங்களிலிருந்து வாழ்க்கையையும் எப்படி அமைத்துக் கொண்டார் என்பதைப் பிறர் வாயிலாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. தனது வாழ்க்கையையும் கலையையும் குறித்து நேர் அனுபவங்களின் பின்புலத்துடன் தமிழில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை இதுவே.

இந்தத் தன்வரலாறு ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளியானது. அரசியல் பிரமுகர்களும் திரைப் பிரபலங்களும் உழைப்பால் உயர்ந்தவர்களும் சொல்லும் வெற்றிக் கதைகளே வெளியாகி வந்த வெகுஜன இதழொன்றில் பெருவாரியான வாசகர்களுக்கு அறிமுகமில்லாத ஒரு கலைஞரின் சுயசரிதை வெளியானதும் அது கணிசமான வாசகர்களை ஈர்த்ததும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.

ஒரு கலைஞரின் தன் வரலாறாக மட்டுமல்லாமல் விடுதலைக்கு முன்னும் பின்னுமான முக்கால் நூற்றாண்டுக் காலத் தமிழக வாழ்க்கையின் கலை,  சமூக, அரசியல் பின்புலங்களை அனுபவ அறிவுடனும் ஆழ்ந்த நோக்குடனும் சுவையாகவும்  முன்வைக்கிறது தனபாலின் சுயசரிதை.
~~
சிற்பி தனபாலின் ஓவியங்களும், சிற்பங்களும், அரிய புகைப்படங்களும் சிறப்புத் தாளில் (Art paper) அச்சாகி உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

செப்டம்பர் 2019க்கான புத்தகமாக 'ஒரு சிற்பியின் சுயசரிதை நூல், சிற்பி எஸ். தனபாலின் தேர்ந்தெடுத்த  படைப்புகளுடன் அச்சாக்கி சிறுவாணி வாசகர் மையம் தனது உறுப்பினர்களுக்கு வழங்க இருக்கிறது.

இது போன்ற  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் தொடர்ந்து கரம் கோர்க்கும் சிறுவாணி வாசகர் மைய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------------


ஒப்பற்ற கலைஞன் தனபாலின்  சுயசரிதை , சிறுவாணியின் சாதனைகளின் சமீபத்திய உச்சம். பெருமைக்குரிய வெளியீடு. ஆவலுடன் காத்திருக்கிறேன்.
jeeva nandan
-------------------------------------------------------------------------------

எங்களுக்குள் புதைந்து கிடக்கும் ரசனையைத் தட்டி எழுப்புவதில் சிறுவாணி வாசகர் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது வாழ்த்துகள். புத்தக வரவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Madavan narayanan
----------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு சிற்பியின் சுயசரிதை! - எஸ். தனபால்

"உங்க புத்தகம் எப்ப வெளிவருது?"

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இக்கேள்வி என்னைத் துரத்துகிறது. என்றாலும், இப்பொழுதுதான் நேரம் கனிந்திருக்கிறது போல. திருவிழாவில் Sight அடிக்கச் சென்றவன் கழுத்தில் பூமாலை விழுந்து கும்ப மரியாதை பெற்றதுபோல ஆகிவிட்டது கதை. இது தனபாலின் புத்தகம்தான், ஆனால் நானும் சொந்தம் கொண்டாடிக்கொள்ளலாம். ஒரு சிற்ப ஆளுமையின் குடைநிழலில் ஒதுங்க இப்போதைக்குச் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர் என நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியிலேயே இந்நூல் வெளிவந்திருக்க வேண்டும். தி.ஜாவைத் தேடித் திரிந்த முன்னிரவு நேரத்தில் சென்னையின் பரபரப்புமிக்க  சாலை விபத்தொன்றில் தூக்கி வீசப்பட்டு முப்பது நாட்களுக்கும் மேல் ஓய்வெடுக்கும் படி ஆனது. பள்ளிக் கல்வித் துறையின் கணிதப் பாடப் புத்தகத் தமிழ் நூல்களின் வேலையும் கொஞ்சம் போல அழுத்தியது. விடுபட்டு வருவதற்குள் இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. இதோ மதுரை புத்தகக் கண்காட்சியில் வெளியிட வேண்டி ஓவிய மற்றும் சிற்பத் துறை ஆளுமையான தனபாலின் தன்வரலாற்று நூல் தயாராகிவிட்டது. இத்திரு வினையில் நானும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறேன்.

ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபால் (1919-2019) சென்னையில் பிறந்தவர் என்றாலும், இவர் பெண்ணெடுத்தது மதுரையில்தான். தொடர் வெளிவந்து  இருபத்தைந்து வருடங்கள் கழித்துக் களமாட மதுரையின் மாப்பிள்ளை புத்தகக் கண்காட்சிக்கு வருகிறார். இத்தொடர் முதன்முறையாக நூலாக்கம் செய்யப்பட்டு அச்சாகி வெளியாகிறது.

தொன்னூறுகளில்
விகடனில் தனபால் தொடராக எழுதிய வாழ்க்கை அனுபவப் பதிவுகளை, அவருடைய பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டிப் புத்தகமாக்கும் முயற்சியில் காலச்சுவடு பதிப்பகமும், சிறுவாணி வாசகர் மையமும் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள்.

காலச்சுவடு ஏப்ரல் மாத (2019) இதழ் 'தனபால் சிறப்பிதழாக'வும் வெளியிட்டிருந்தார்கள். 'தடம்', 'காக்கைச் சிறகினிலே' போன்ற இதழ்களும் தனபாலுக்குச் சிறப்பு செய்து கௌரவப்படுத்தின. தி இந்து தமிழ்த் திசையும் ஒரு முழுப் பக்கக் கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள்.

ஓவியர் பாலசுப்ரமணியன் குப்புசாமியால்  தனபாலின் இளைய மகன் ரவியைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு சென்ற ஆண்டின் இறுதியில் அமைந்தது. அப்படித்தான் தனபாலின்  விகடன் தொடரின் நகலைப் படிக்கும் வாய்ப்பும்  கிட்டியது. அந்நகலை சுபாஷிணி (சிறுவாணி வாசகர் மையம் - தலைவர்) ஆண்டிக்குப் படிக்கக் கொடுத்தேன். அவருக்கு தனபாலின் தொடர் மிகப் பிடித்திருந்ததால் சிறுவாணி வாசகர்களுக்காகப்  புத்தகமாக்க விரும்பினார்.

இத்தொடரை நூலாக்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. காலச்சுவடு கண்ணனிடமும் இம்முயற்சியைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அவரும் ஆர்வமுடன் இணைந்துகொண்டார். அதன் பிறகான அடுத்தடுத்த முன்னெடுப்புகளைச் சிறுவாணியும் காலச்சுவடுமே கவனித்துக்கொண்டார்கள்.

ஓரிடத்தில் இப்பணி நமக்குச் சரிவராது, ஒதுங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது. நவ கிரகங்கள் போல நாங்கள் எல்லோரும்  ஒவ்வொரு திசையில் இருந்தோம். சூழல் கனிந்து ஒரு புள்ளியில், ஓர் இடத்தில் எல்லோரும் புரிந்துணர்வுடன் இணையும்படி ஆனது. பதிப்புரையில் கொஞ்சம் போல அதையெல்லாம் மனதில் இருத்தி எழுதியிருக்கிறேன். அப்படித்தான் இப்பணி சாத்தியம் ஆனது.

தொன்னூறுகளில் விகடன் இதழில் பிரசுரம் ஆன தொடர் என்பதால், ஒரு நல்ல மழை நாளிலோ அல்லது குளிர் இரவிலோ ஒரேயோர் அமர்வில் படித்துவிடக் கூடிய புத்தகம்தான் இது. தற்போது ரேடானில் பணியாற்றும் சுபா வெங்கட்தான் தனபால் பகிர்ந்த சம்பவங்களை எழுத்தாக்கி இருக்கிறார். அவரை அன்போடு இந்தத் தருணத்தில் நினைவுகூற விரும்புகிறேன்.

தன்வரலாற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு இந்நூல் நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கும்  என்றே நினைக்கிறேன். வரலாறு, சமூக அரசியல் சார்ந்தும் சில விஷயங்கள் இதில் உண்டு. அது ஓவியத் துறையுடன் மேற்பரப்பின் மையத் தளத்தில்  பிணைந்தும் இருக்கிறது.

பின்னிணைப்பாக தனபாலின் சிற்பங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் ஆகியவை சிறப்புத் தாளில் (Art paper) அச்சிடப்பட்டுள்ளன. ஓவியர்களும், ஓவியத் துறையில் ஆர்வம் உள்ளவர்களும், கலை சார்ந்த ஆர்வம் உள்ள இளம் தலைமுறையினரும், கலைப் புரவலர்களும் இந்நூலை வாசித்துப் பார்க்கலாம்.

கொஞ்சம் கால அவகாசம் கிடைத்திருந்தால் இதனினும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் மேலெழுகிறது. எனினும் இவ்வருடம்  வெயிலின் இறுக்கம் அதிகமோ அதிகம்தான்.  புழுக்கத்தில் தலை கிறுகிறுக்க ஓவியர் பாலசுப்ரமணியனுடன் வியர்வை சொட்டச் சொட்ட தக்‌ஷிணசித்ரா, லலித் கலா அகாடமி, ஓவியக் கல்லூரி, தனபாலின் குடும்பத்தார் வீடு, ஓவியர் நரேந்திர பாபுவின் வீடு மற்றும் அலுவலகம் எனச் சக்கரம் போலச் சுழன்றது எல்லாம் நினைவில் நிழலாடுகிறது.

நடிகர் சிவக்குமார், ஆ.இரா. வேங்கடாசலபதி, கவிஞர் சுகுமாரன், பெருந்தேவி அக்கா, எழுத்தாளர் அரவிந்தன், இதழழகு கோபு ராசுவேல் ஆகியோர் முக்கியமான தருணத்தில் குழப்பங்களை நிவர்த்தி செய்தும், ஊக்கமளித்தும் உடனிருந்து உதவினார்கள்.

மதுரை புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில்  இன்னும் ஓரிரு நாட்களில் இப்புத்தகம் வாங்கக் கிடைக்கும்.

விலை: ரூபாய் 180/-

புத்தகம் சார்ந்த நிறைகுறைகள் இருப்பின் காலச்சுவடு பதிப்பாளரின் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்:

publisher@kalachuvadu.com

Krishnaprabhu
-----------------------------------------------------------------------------------------------------------------




























வாசக நண்பர்களுக்கு,
வணக்கம்.
ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினைப் போற்றும் விதத்தில் காலச்சுவடு (மார்ச் 2019) சிறப்பிதழைச் கொண்டுவந்து கௌரவம் செய்தது.

அதன் தொடர்ச்சியாக, தனபாலின் சுயசரிதையும் நூலாக்கம் பெற்றிருக்கிறது. ஆனந்த விகடன் இதழில் தொன்னூறுகளின் மத்திய ஆண்டுகளில் - தொடர்ந்து பத்து மாதங்களுக்கு 'ஒரு சிற்பியின் சுயசரிதை!' என - அவரெழுதிய தொடர் வாசகர்களிடம் பரவலான கவனமும் பெற்றுள்ளது. சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம் அத்தொடரைப் பதிப்பித்துள்ளது. சிற்பி தனபாலின் தேர்ந்தெடுத்த படைப்புகளும் புகைப்படங்களும் 'Art Paper'இல் பின்னிணைப்பாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நவீன ஓவிய ஆளுமை குறித்த முதல் புத்தகம் இதுவென்பது கூடுதல் சிறப்பு.

பரிந்துரை சுட்டி:

https://www.thehindu.com/society/remembering-s-dhanapals-lost-sculpture-of-periyar-the-arch-iconoclast/article29409497.ece

ஓவியம் சார்ந்து காலச்சுவடு பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ள புத்தகங்களின் பட்டியல்:

1. தமிழக ஓவியங்கள் – ஐ. ஜோப் தாமஸ்
2. அர்ச்சுனன் தபசு – சா. பாலுசாமி
3. நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் – சா. பாலுசாமி
4. மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் – சா. பாலுசாமி
5. சோழர் காலச் செப்புப் படிமங்கள் – ஐ. ஜோப் தாமஸ்
6. சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள் – எஸ். ஏ. வி. இளஞ்செழியன்
7. மேற்கத்திய ஓவியங்கள் பகுதி I & II - பி. ஏ. கிருஷ்ணன்

நவீன ஓவியம், நவீன கலைகள் சார்ந்த மேலும் சில புத்தக வேலைகளும்  முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வாசகர்களின் ஆதரவின்றி இதுபோன்ற நுண்கலை சார்ந்த ஆவணப்படுத்தும் எழுத்துப் பணிகள் சாத்தியமே இல்லை.


காலச்சுவடு பதிப்பகம்.

------------------------------------------------------------------------------------------

                         காலச்சுவடும் சிறுவாணி வாசகர் மையமும் இணைந்து வெளியிட்டுள்ள நூல் ’ஒரு சிற்பியின் சுயசரிதை.’ ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபால் (1919-2000), 1993-ல் ஆனந்த விகடனில் தம் கலை வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் குறித்த  தொடர் ஒன்றை எழுதினார். அத்தொடரின் தொகுப்பாகவும் அவர் வாழ்க்கைக் குறிப்புகள், அவருடைய முக்கிய ஓவியங்கள், சிற்பங்கள், அவர் பங்கேற்ற நாட்டிய நாடகங்களின் சில காட்சிகள் ஆகியவற்றைப் பின்னிணைப்பாகக் கொண்டும் இந்நூல் வெளியாகியிருக்கிறது. கிருஷ்ண பிரபு பதிப்பாசிரியர். தமிழ்ச் சூழலில் ஒரு ஒவியரின், சிற்பியின் சுயசரிதை என்ற நிலையில் இது முதல் நூல். அதனால் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.

1970களில் சிறுபத்திரிகைகளோடு, குறிப்பாக நடை, கசடதபற, பிரக்ஞை, அஃக் போன்றவற்றோடு, சென்னைக் கலைக் கல்லூரியின் ஓவியர்கள், சிற்பிகள் கொண்ட நெருங்கிய உறவு நினைவுக்கு வருகிறது. அவ்விதழ்களின் மேலட்டைகளிலும் உள்பக்கங்களிலும் அவர்களுடைய படைப்புகள் வெளியாகும். அவர்களைக் குறித்த கட்டுரைகளும் அவர்களுடனான பேட்டிகளும் கூடுதல் சிறப்பு. ஆதிமூலம், பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன், அச்சுதன் கூடலூர் (இவர்களில் பலரும் தனபாலின் மாணவர்கள். பாஸ்கரன் அவருடைய மருமகனும்கூட.) போன்றோரின் படைப்புகள் அக்கால வாசகர்களுக்குப் பரிச்சயமானவை. பிரக்ஞை இரண்டாவது இதழில் (நவம்பர் 1974) தனபால் (அப்போது அவர் சென்னைக் கலைக் கல்லூரியின் முதல்வர்) குறித்த ஒரு கட்டுரையை விஷ்வம் (வீராச்சாமி?) எழுதியுள்ளார். ’ஒரு சிற்பியின் சுயரிதை’யில் இல்லாத அவருடைய இன்னொரு ’தாயும் சேயும்’ சிற்பத்தின் பதிப்பு இவ்விதழில் உண்டு. ’மேற்கத்தியக் கலையின் பாதிப்பு என்று எதுவும் நமக்கு இல்லை. அதன் அறிமுகத்துக்கு முன்பே நமது ஓவியமும் சிற்பமும் உச்ச கட்டத்தை அடைந்திருந்தன. ஆயில், கான்வாஸ் போன்ற உத்திகளைத்தான் நாம் அவர்களிடமிருந்து கற்றோம்,’ என்ற அவருடைய பார்வை இக்கட்டுரையின் முக்கிய அம்சம். சில குறிப்பிட்ட இதழ்களை ஓவியர்களே வடிவமைத்ததும் உண்டு.

தம்முடைய மாணவப் பருவம், கலைக் கல்லூரி அடைந்த மாற்றங்கள், சக மாணவர்கள், தம்முடைய மாணவர்கள் என்று பல வரலாறுகளையும் தனபால் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். கூடவே 1930கள் தொடங்கி 1960கள் வரையிலான சென்னை நகரின் வரலாறும் இணையாகப் பயணிக்கிறது. மயிலாப்பூர் கச்சேரி வீதியின் ட்ராம் வண்டி தொடங்கி, மயிலைக் கோயில்கள், எழும்பூர் புனித ஆண்ட்ரூஸ் சர்ச் வரை பரவியிருந்த கல்லூரியின் நிலம், இடையே பாலம் வந்து இரண்டையும் பிரித்த கதை என்று பலவும் விரவிக் கிடக்கின்றன இந்நூலில். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நிறுவப்பட்ட கல்லூரியில் தொடக்கத்தில் மர வேலை, பருத்தித் துணியில் அச்சிடப்படும் டிசைன்கள், கார்பெட் உருவாக்கம், நகை செய்தல், அலுமினியப் பாத்திரங்கள் செய்தல் என்று பெரிதும் கைவேலை தொடர்பான திறன்களே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. பிறகுதான் ஓவியம், சிற்பம், செராமிக் கலை என்பவை அறிமுகப்படுத்தப்பட்டன. அரசின் தொழில் துறையால் நிர்வகிப்பட்ட நிறுவனம் என்பதால் அது சார்ந்த நல்லவையும் கெட்டவையும் உண்டு.

தனபாலின் ஓவிய ஆர்வத்தைக் கண்ட அவருடைய தமிழாசிரியர் தமிழறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமிதான் அவரை ஓவியக் கல்லூரியில் சேரத் தூண்டியிருக்கிறார். கல்லூரியின் முதல் இந்திய முதல்வரான ராய் சவுத்ரியின் மாணவர் தனபால். கே.ஸி. எஸ். பணிக்கர் தனபாலின் வகுப்புத் தோழர். ஓவியப் பிரிவில் படித்த தனபாலை சிற்பக் கலைமீது கவனம் கொள்ள வைத்தவர் ராய் சவுத்ரி. முறையான பயிற்சியை ஓவியத்தில் பெற்றாலும் ராய் சவுத்ரி போன்றோரைக் கவனித்தே சிற்பக் கலையைக் கற்றிருக்கிறார் தனபால். காமராஜ், பெரியார், திரு.வி.க. ராதாகிருஷ்ணன், பாரதிதாசன் ஆகியோரின் சிலைகளைச் செய்திருக்கிறார். அவை தொடர்பான பல சுவாரசியமான தகவல்கள் நூலில் உண்டு. ப. ஜீவானந்தமும் பாரதிதாசனும் குடும்ப நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். அந்தக்கால அரசியல்வாதிகள் கலைஞர்களைக் கௌரவமாகவே நடத்தியிருக்கிறார்கள். கலையின் அருமையையும் உணர்ந்தே இருந்திருக்கிறார்கள். மிகக் கறாரான ஆளுமையான ராஜாஜி தொடர்பான நெகிழ்வான ஒரு சம்பவம் நூலில் உண்டு.

மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம் தனபாலுக்கு இசை, நடனம், நாடகம் ஆகியவற்றின் மீதிருந்த ஈர்ப்பும் பயிற்சியும். இசையின் அடிப்படைகளைக் கற்றிருக்கிறார். நாட்டிய நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். இந்தக் கலைகளின் கலவை மிக அபூர்வமானது.

தனபாலை நான் சந்தித்தது கிடையாது. ஆனால் அவருக்கு நெருக்கமான இரண்டு ஆளுமைகள் தொடர்பான அனுபவங்கள் உண்டு. 1986-ல் நான் தொகுத்த லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் நூலின் அட்டைப் படத்துக்குத் தன் ஆந்தை ஓவியத்தைக் கொடுத்ததுடன் நூலின் தலைப்பை அடுத்த நாள் அதில் எழுதியும் கொண்டுவந்து அன்புடன் தந்தவர் ஆர்.பி. பாஸ்கரன். இது நிகழ உதவி செய்தவர் வசந்தகுமார். இன்னொரு ஆளுமை தனபாலின் மாணவரான க. மு. கோபால். எனக்குத் தூரத்து உறவினர். கலைஞனுக்கே உரிய சில விசேஷ குணங்கள் கொண்டவர். சேலத்தில் ஆர்ட் ஹவுஸ் என்ற பெயரில் திரைப்பட பேனர் வரையும் கூடம் ஒன்றை வைத்திருந்தார். வட்ட வடிவில் இருந்த ஓலைக் குடிசை அது. பலமுறை அதை சைக்கிளில் கடந்து போயிருக்கிறேன். மாலை வேளைகளில் வெளியே உட்கார்ந்திருப்பார். பேசியதில்லை. நான் அப்போது பள்ளிச் சிறுவன். சில ஆண்டுகள் கழித்து இயற்கை உணவு, உள்ளூர்ப் பதார்த்தங்கள் மட்டுமே விற்கும் ஒரு ஹோட்டலையும் சேலத்தில் நடத்தினார். அதுவும் ஓலை வேய்ந்த கூரையைக் கொண்டதுதான். நண்பர்களோடு அங்கு போன நினைவிருக்கிறது. ஈஞ்சம்பாக்கம் ஓவியர் கிராமத்தில் பின்னாளில் தங்கி உலோக சிற்பங்கள் செய்தார் என்று அறிந்தேன். தனபால் கோபாலைப் பற்றி இந்நூலில் எழுதியிருக்கிறார்.

நான் பெரும் மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கும் நூல் இது.

ஆர். சிவகுமார், மொழிபெயர்ப்பாளர்  (Krishnaprabu)

-----------------------------------------------------------------------------------------------------------------







"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

  தென்றல் பேசுகிறது... Jan 2024 கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி...