Tuesday, February 28, 2023

"தவிப்பூ" -மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)-மார்ச் -2023





மார்ச் -2023 

"தவிப்பூ" -

மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)

------------------------------------------------------------------

மகேஷ் குமார் செல்வராஜ், இந்த 'தவிப்பூ' சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ்ப் புனைவுப் புலத்தில் புது நாற்றாகப் பதியமாகிறார். தமிழ் இலக்கியத் தட்டகத்தில் வளம் கூட்ட முனையும் பல புதிய இளம் படைப்பாளிகளுள் ம.செ.யும் அணி சேர்கிறார்.                                                              

 -நாஞ்சில்நாடன் 


**                                                                                                                                                               

நிம்மதியான காலங்களில் இந்தக் கதைகள் இவற்றை வாசிப்பவர் மனதுக்குக் குதூகலத்தைத் தரும்; பொய்மையாலும், பகைமையாலும் வருந்தி மனம் சோர்வுற்ற காலங்களிலும் இவை வாசிப்பவருக்கு அமைதியை, நம்பிக்கையைத் தரும். அவ்வாசகர் எங்கிருந்தாலும் அவ்விடத்தில் சற்று நேரத்துக்காவது சாந்தி நிலவும். 

-வ. ஸ்ரீநிவாசன்.




 

"ரசிகமணியின் நாத ஒலி"-தீப.நடராஜன்-பிப்ரவரி-2023

 


பிப்ரவரி-2023 

"ரசிகமணியின் நாத ஒலி"-

தீப.நடராஜன்






#ரசிகமணி டிகேசி விழா

—————————————


 (11-2-2023)  மாலை ரசிகமணி டி.கே.சி.யின் 141 ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் காந்தி கல்வி நிலையம்-

டக்கர்பாபா அரங்கில் நடந்தது. ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் எழுதிய ‘ரசிகமணியின் நாத ஒலி ’ என்ற நூலை வெளியிட்டேன். நூல் வெளியீட்டு விழாவுக்கு திருப்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஜஸ்டிஸ் எஸ்.மகராஜனின் புதல்வர் எம்.சிதம்பரம், டி.கே.சி.யின் கொள்ளுப் பேரன் இரா.தீத்தாரப்பன்,செல்லையா, டில்லி காந்தி அறநிலையத்துறையின் அண்ணாமலை,டிதிருமலை அவர்களின் புதல்வி சுபாஷினி, கிரா புதல்வர் திவாகர் மற்றும் டி.கே.சி குடும்பத்தார் உட்பட பலர் இந்த இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றனர். விழா இனிதே நடந்தது.

 தொற்று நோய் பாதிப்புக்கு பின்,இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும், சென்னையில் உள்ள திருநெல்வேலி வட்டார மக்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இன்றைய மாலைப் பொழுது நல்ல நிகழ்வுகளுடன் இனிதாகக் கழிந்தது.


#KSR_Post

1-2-2023

------------------------------------------------------

"இராமாயணத்தில் 627 பாடல்களை இடைசெருகல் என்று போராடி நீக்கியவர் ரசிகமணி" என்று ரசிக மணி பேரன் தீப நாடராஜனின்’ நாத ஒலி’ புத்தகத்தை வெளியிட்டு ரசிகமணி பற்றிய பல அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.கே எஸ் இராதாகிருஷ்ணன். அவரின் சிறப்புரை இதோ.....

#ரசிகமணி 

https://youtu.be/1kwiKOA-fx4

#ksrvoice #ksr #TKC  

follow for more information

#KSR_Post

 (22-2-2023)தினமணியில் #ரசிகமணி டிகேசியின் அன்றைய குற்றாலம் குறித்த‘ குற்றால முனிவர் ரசிகமணி’ என்ற கட்டுரை வெளி வந்துள்ளது.

*---------------------------------------------

ரசிக மணியும் திருக்குற்றாலமும்!

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

 

“குற்றாலத்துக்கு வந்தவர்கள் எல்லாரும் மலை, செவ்வானம், மேகம், மலை ஓடைகள், குரங்குகள், கோவில் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். அந்த அனுபவங்களைத் தாளத்திலும், தமிழிலும் வைத்துப் பரிமாறும்போது மனம் இழுபட்டுக் கூத்தாடவே ஆரம்பித்துவிடுகிறது. பாடலை அனுபவிக்கிறது என்றால் அதுதானே?” என்கிறார் ரசிக மணி டி.கே.சி. நீதிபதி மகராஜனுக்கு 23.07.1945 - இல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.  

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த டி.கே.சி.யின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஊர் குற்றாலம். குற்றாலம் பகுதியில் போல இயற்கையாக எழும் ஒலிகளையும் தமிழ் பாடல்களின் ராக, தாளங்களையும் இணைத்துக் காண்கிற இந்த அவருடைய ரசனை உணர்வே அவரை ரசிகமணியாக்கி இருக்கிறது. 

இதை, டி.கே.சி. எழுதிய கட்டுரையில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். 

“கவி என்பது உணர்ச்சி உலகத்தில் ஊடாடுகிற காரியம். லகுவான முரையில் விஷயத்தை ஒரு தாளத்தில் வைத்து அது பேசும். அப்படிப் பேசும்போது எதிர்பாராத முறையில்  அரிய உணர்ச்சி ஒன்று பிறந்துவிடும். அதிசயமாய் இருக்கும்.

கவியிலும் அதாவது உண்மை ததும்பும் உருவத்தோடு கூடிய கவியிலும் ஈடுபட்டுவிட்டால், வார்த்தை, தாளம், தமிழ்ப் பண்பு இவைகளில் அப்படியே கரைந்துவிடுகிறோம் நாம். பாஷைக்கு ஒரு மந்திர சக்தி இருக்கிறதாகவே தெரிய வருகிறது. கவியிலுள்ள உணர்ச்சி வசமாய்ப் போய், வார்த்தை, தாளம், செய்யுள்கோப்பு இவைகளால் ஆகிய உருவமாகவே மாறி விடுகிறோம். கவிக்கு விஷயம் அல்ல, உருவமே பிரதானம் ” என சொல்கிறார். 

வழக்கறிஞரான டி.கே.சி. நெல்லைவண்ணார்பேட்டையில் வாழும்போது, வட்டத் தொட்டி என்ற பெயரில் இலக்கியக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். ஜஸ்டிஸ் மகராஜன், வையாபுரி பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், மீ.ப.சோமு, ல.சண்முகசுந்தரம், பாஸ்கரதொண்டைமான், அ.சீனிவாச ராகவன், பெ.நா.அப்புஸ்வாமி, கே.பி.கணபதி, டி.டி.திருமலை, நீலாவதி சுப்பிரமணியம், மு.அருணாசலம், ஜி.சி.பட்டாபிராம் மற்றும் பல இலக்கியவாதிகள், ஆர்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் அது. தமிழ்க் கவிதைகளில் புதைந்து கிடந்த ஆழமான கருத்துகளை எல்லாம் தனது சுவையான பேச்சுகளின் மூலம் வெளிக்கொண்டுவந்து அவற்றின் சுவையை ஏராளமானோரை அனுபவிக்கச் செய்திருக்கிறார்.

ரசிகமணி நெல்லையில் இருந்தபோதும் சரி,திருக்குற்றாலத்தில் இருந்தபோதும் சரி அவர் வீட்டில் கூடும் தமிழ் அன்பர்களிடம் கம்பனின் கவியாற்றலையும் கம்பரின் பெருமைகளையும் டி.கே.சி விவரிக்கும்போது எல்லாரும் மெய்மறந்து கேட்பார்கள். 

வாரம் ஒருமுறை ஒவ்வொருவரும் நேர்முகமாகப் பார்க்கும் விதத்தில் வட்ட வடிவமான முறையில் அமர்ந்து நடத்தப்பட்ட இந்த வட்டத்தொட்டி இலக்கிய முற்றம் ‘டி.கே.சி. வட்டத்தொட்டி’ எனப் பிரபலமடைந்தது. இந்த வட்டத் தொட்டி நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல்,எழுத்தாளர் லா.ச.ரா. திருநெல்வேலி வண்ணார்பேட்டைடி.கே.சி. வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கமாகஇருந்திருக்கிறது. லா.ச.ரா தென்காசியில் 3 ஆண்டுகள் வங்கி மேலாளராக பணிபுரிந்த காலம் அது.

டி.கே.சி 1926- இல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து இந்து அறநிலையத்துறை ஆணையராகவும் பொறுப்பேற்றார்.

நெல்லையில் டி.கே.சி. இருந்தபோதே ராஜாஜி, கல்கிகுடும்பத்தினர் அவருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்திருக்கின்றனர். நெல்லை வீட்டுக்கு அவர்கள்குடும்பத்தோடு வந்து தங்கி டி.கே.சி.யுடன் குடும்ப நண்பர்களாகப் பழகியிருக்கின்றனர். கல்கி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி என கல்கி குடும்பத்தினரும் அடிக்கடி இங்கே வருவதுண்டு.

ராஜாஜியும் கல்கியும் எப்போதும் டி.கே.சி.யுடன் நல்ல நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ராஜாஜி, கல்கி, டி.கே.சி. மூவரும் பழகத் தொடங்கிய காலத்தில் ராஜாஜியும் கல்கியும் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். நீதிக் கட்சியில் சிறிது காலம் தொடர்பு வைத்திருந்தார் டி.கே.சி. ஆனால் அவர்களுடைய நட்பை அவர்கள் சார்ந்திருந்த கட்சி எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. அவர்களுடைய நட்பு இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரையொருவர் உண்மையாகப் புரிந்து கொண்ட, தூய அன்பை அடித்தளமாகக் கொண்டது.

டி.கே.சி. நெல்லையில் இருக்கும்போதே குற்றாலத்துக்கு அடிக்கடி வந்துவிடுவார் வருவதற்கு முன்பு ராஜாஜியையும், கல்கியையும் குற்றாலத்துக்கு வரச் சொல்லி கடிதம் எழுதிவிடுவார். குற்றாலத்தில் டி.கே.சி. தங்குவது கோவிலுக்கு அருகே உள்ள 1 ஆம் எண் பங்களாவில்தான். டி.கே.சி. ஐந்தாண்டுகள் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக பணியாற்றியவர் என்பதால் அங்கே தங்குவதற்கு அவரிடம் வாடகை கேட்க மாட்டார்கள்.

அதற்குப் பிறகு நிரந்தரமாகவே குற்றாலத்துக்கே குடிவந்துவிட்டார். குற்றாலம் தேவஸ்தானத்தினரிடத்தில் இருந்து 1942 -ஆம் ஆண்டு குற்றாலம் ஐந்தருவிச் சாலையில் அருகருகே உள்ள எட்டறை என்ற வரிசை வீடுகளில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். ஒரு வீட்டில் குடும்பத்தார் தங்கினார்கள். அந்த வீட்டில் சமையல், சாப்பாடு, விருந்தினர்களை உபசரிப்பது எல்லாம் நடக்கும். இன்னொரு வீட்டில் டி.கே.சி. தங்கியிருந்தார்.  படிப்பது, எழுதுவது, நண்பர்களுடன் உரையாடுவது எல்லாம் அங்கேதான். தமிழ்க் கவிதைகளைப் பாடுவது, அவற்றுக்கு விளக்கம் கூறுவதும் இங்கேதான்.  

டி.கே.சி. வீட்டில் தினமும் 20 பேர் , 25 பேர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அவர்களுடைய  ஒரே மகன் செல்லையா என்கிற  தீத்தாரப்பன் 32 வயதில் மறைந்தார். அந்த மறைவை டி.கே.சி.யாலும் அவருடைய துணைவியாராலும் தாங்கிக் கொள்ள முடியாதநிலையில் பல விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதும், வந்த விருந்தினர்களை நன்கு உபசரிப்பதும் அந்த கவலையில் இருந்து அவர்கள் மீள உதவியிருக்கிறது.

டி.கே.சி. தரையில் சம்மணம் போட்டு அமர்ந்துஇலையில் சாப்பிடுவது வாடிக்கை. பின் தரையில் அமர்ந்து எழ இயலாத காலத்தில் நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிடுவார். ரசிகமணி கையில் உணவை எடுத்துச் சாப்பிடுவதே தனி அழகாக இருக்கும். பருப்பு,நெய் எப்படி குழைய வேண்டும்? சாம்பாருடன் எப்படி சாதத்தைப் பிசைந்து சாப்பிட வேண்டும்? ரசத்தைச் சாப்பிட்ட பின் ரசநீர் பருக்கையோடு  கைவிரல்களால் எப்படி சுவையாக உறிஞ்சிச் சாப்பிடுவது? பாயசத்தில் பொரித்த அப்பளத்தை, காராபூந்தியையோ விட்டுச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் சொல்வார். கட்டித் தயிராக விரும்பிச் சாப்பிட்ட ரசிகமணி.பிற்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட்டதால், தயிரைத் தவிர்த்து மோரைச் சாப்பிட்டார். ஊறுகாயை ஆள்காட்டி விரலின் ஓர் ஓரமாகச் சற்று எடுத்து நாக்கில் வைப்பார்.சிறு கரண்டியில் எடுத்து வாயில் வைப்பதைப் போல துவையலை இரண்டு விரல்களில் எடுத்து வாயில் வைக்க வேண்டும் என்று சொல்வார். சாப்பிடுவதை ஒரு கலை என்று சொல்வார். 

இன்றைக்கு இட்லி, தோசைக்கென்று தனி அரிசி வாங்குகின்றோம். அப்போது இட்லி தோசைக்குஎல்லாம் ஒரே அரிசிதான். ரசிகமணி வீட்டில் அப்போதேசோறு பொங்க தனி அரிசிதான். இட்லி, தோசை, வடை போன்ற சிற்றுண்டிகளுக்கு சரியான அளவில் அரிசியும் உளுந்தும் போட வேண்டும் என்று அவரே சொல்வார். மோர் மிளகாயும், ஊறுகாயும் இத்தனை நாள் சூரிய வெப்பத்தில் வைக்க வேண்டும் என்பதையெல்லாம் அவரே சொல்வதுண்டு. ரசிகமணி வீட்டுத் தோசை அன்றைக்கு எல்லாராலும் சிலாகிக்கப்பட்டது. 

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் டிகேசி இருந்த வீடு மாளிகை போன்றிருக்கும். ஆனால் குற்றாலத்தில் இருந்த வீடு அந்த அளவுக்குப் பெரியதில்லை. 

டி.கே.சி. குற்றால வீடுகளுக்கு குடியிருக்க வரும்போது வீட்டில் மின் இணைப்பு இல்லை. அரிக்கேன் விளக்குதான். இரண்டு மாடுகள் பூட்டிய வில்வண்டியில்தான் பயணம் செய்ய வேண்டும். வில்வண்டிகள் தவிர, சைக்கிள்தான் அப்போது போக்குவரத்துச் சாதனமாக அங்கிருந்தது. இன்று உள்ளதைப் போல அன்றைக்கு தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. ராஜாஜி, கல்கி ஆகியோரிடம் இருந்து வரும் தகவல்கள், செய்திகள் எல்லாம்கடிதங்கள், தந்தி மூலமாகத்தான் வரும். குற்றாலத்தில் சாரல் தொடங்கி, அருவிகள் பெரிய அளவில் வழியத் தொடங்கும்போதுதான் குற்றாலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கும். அது வரை ஒரு கிராமத்தைப் போல, குறைவாக மக்கள் நடமாட்டம் இருக்கும்.  

அப்போது குற்றாலத்தில் உணவகங்கள் கூட மிகவும் குறைவாகவே இருந்தன. கடைத் தெருவில் இருந்த போத்தி ஹோட்டல், மண்டபம் ஹோட்டல், பாம்பகோயில் பிள்ளை உணவகம், அய்யங்கார் உணவகம் என்று ஒருசில உணவகங்களே இருந்தன. 

குற்றாலநாதர் திருக்கோயிலின் வடக்கு வாசலில் இருந்து அருவிக்குப் போகும் வழியில் வலது பக்கம் மலையின் அடியில் கசிந்து வரும் நீரை தொட்டியில் நிரப்பி, கோயிலின் மடப்பள்ளிக்கு பயன்படுமாறு ஒரு குழாயும், கோயிலுக்கு வெளியே மக்களுக்குப் பயன்படுமாறு இன்னொரு குழாயும் அமைக்கப்பட்டிருக்கும். வடக்கு வாசல் பக்கத்தில் வரும் தண்ணீரை தென்காசி பகுதியில் வாழ்பவர்கள் எல்லாம் பிடித்துக் கொண்டு சென்று பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம், தென்காசியில் அப்போது தண்ணீர் சற்று சவராக இருக்கும். 

இந்த நீர் விழும் பகுதிக்கு அருகில் இருந்த சிறு வீடுஒன்றில் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள் தங்கியிருந்தார். நாட்கள் செல்ல பக்தர்கள் வருகை அங்கேஅதிகரித்ததால், செங்கோட்டை சாலையில் ஸ்ரீமத்மௌன ஸ்வாமிகள் மடம் அமைக்கப்பட்டது.  

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், என்னகாரணத்தாலோ ராஜீவ்காந்தியால் இந்திரா படுகொலைக்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டார். இதனால் மிகவும் மனவேதனை அடைந்த நரசிம்மராவ்,தன்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்துக்குசென்றுவிடுவோம்; இனிமேல் அரசியல் வேண்டாம் என்றுமுடிவெடுத்துவிட்டார். அதன் பின் குற்றாலத்தில் உள்ள தற்போது இருக்கும் ஸ்ரீமத் மௌன ஸ்வாமிகள்மடத்திலேயே இறுதிக் காலம் வரை தங்கிவிடலாம் என்று தீர்மானித்தார். ஆனால் எதிர்பாராதவிதமாகஅவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு 1991- இல் கிட்டியது. 

 

டி.கே.சி. வீட்டுக்கும் ஐந்தருவிச் சாலைக்கும் நடுவே வாய்க்கால் ஓடும். தெளிந்த நீர் அதில் பளிங்குபோல் எப்போதும் ஓடிக் கொண்டு இருக்கும்.டி.கே.சி.குடியிருந்த எட்டறை வரிசை வீடுகளுக்குஎதிரில் சிற்றருவிகளுக்குப் போகும் பாதை மலைமேல்ஏறத் தொடங்கும். எப்போதும் வண்டுகளின் ரீங்காரம், காட்டுமல்லியின் நறுமணம், பேரருவியின் ஓசை என மனதுக்கு மகிழ்ச்சி தரும் சூழல் நிலவியதால், அனைத்து வசதிகளும் இருந்த நெல்லை வண்ணார்பேட்டையை விட்டுவிட்டு டி.கே.சி. குற்றாலத்துக்கு குடிபெயர்ந்திருக்கிறார்.

குற்றாலத்துக்கு டி.கே.சி.குடியேறிய பிறகும், ராஜாஜி, கல்கி குடும்பத்துடன் குற்றாலத்துக்கு வருவார்கள். பிச்சம்மாள் அண்ணிக்கு அதாவது டிகேசியின் மனைவிக்கு விருந்தினர்களை உபசரிப்பதுதான் வேலை. அண்ணி என்பது பெண்களைக் குறிக்கும் சொல்லாக அன்றைக்கு இருந்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பாட்டியை குழந்தைகள் அண்ணி என்றே கூப்பிடுவார்கள். ராஜாஜி, கல்கி, எம்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி எல்லாரும் அண்ணி என்றே பிச்சம்மாளை அழைப்பார்கள். 

குற்றாலத்தில் மலைமேல் திறந்தவெளி இருந்தது. அதில் டி.கே.சி.யும் அவருடைய நடைப்பயிற்சி செய்தும் அமர்ந்தும் தமிழ் இலக்கியத்தைக் குறித்து எப்போதும்போல மாலை நேரங்களில் பேசுவது உண்டு. 

ராஜாஜி கேட்டுக் கொண்டதற்கிணங்க 1953 இல் சென்னை ஆளுநர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்துக்குவந்திருக்கிறார். ஆங்கிலத்தில் விளக்கமளித்து பின்னர் தமிழ் கவிதைகளை டி.கே.சி. பிரகாசாவுக்கு பாடிக் காட்டினார். இதுபோன்று இதற்கு முன்பு காந்தி,வினோபா பாவே அவர்களுக்கும் டி.கே.சி. இதுபோன்று பாடிக் காட்டியிருக்கிறார். அதற்குப் பின்பு ஒருமுறை ஆளுநர் பிரகாசா வந்தபோது, டிகேசி காலமாகிவிட்டார். ஆளுநர் பிரகாசா டிகேசி இல்லம் சென்று ரசிகமணியின் மறைவைக் குறித்து விசாரித்ததும் உண்டு. அன்றைய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் சிவசண்முகம் பிள்ளையும் குற்றாலம் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

அறிஞர் அண்ணா 1947 இல் கம்பராமாயணம் குறித்து ‘கம்பரசம் ’ என்ற நூலை எழுதினார். கம்பராமாயணத்தில் காணப்படும் காமம் தொடர்பான பாடல்களை அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். 

அதற்கு முன்பிருந்தே  கம்பனின் கவியுள்ளத்தை வெளிப்படுத்தும் பணியில் டி.கே.சி. ஈடுபட்டிருந்தார். ‘கம்பர் தரும் காட்சி’ என்னும் தலைப்பில் கல்கி இதழின் ஆரம்ப இதழில் 1941 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கம்பராமாயணத்தை விளக்கப்படுத்தி எழுதி வந்தார் டி.கே.சி. சுமார் பத்து ஆண்டுகள் ஒவ்வொரு இதழிலும் அந்த கட்டுரைகள் இடம் பெற்றன. அதன் மூலம் சாதாரண படிப்புள்ள வாசகரையும் கம்பர் கவியை அனுபவிக்கச் செய்ய முடிந்ததே என்ற எல்லையில்லா மகிழ்ச்சி கொண்டார் டி.கே.சி.

கம்பராமாயணத்தில் ஆழமாக மூழ்கிய இவர், அந்தக் காவியத்தில் சேர்க்கப்பட்டிருந்த 627 இடைச்செருகல்களை அடையாளம் கண்டார். அவற்றை எல்லாம் டி.கே.சி. நீக்கினார்.  கம்பர் கவிதைகளில் சிலவற்றை திருத்தம் செய்து அவற்றை அர்த்தம் பாவம் பொலிந்த கவிதைகளாகப் பதிப்பித்தார். இதற்கு நிறைய எதிர்ப்புக் கிளம்பியது. அது 1953 ஆம் ஆண்டு ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற நூலாக வெளிவந்தது.‘கம்பர் தரும் ராமாயணம்’ நூலின் முதல் தொகுதிவெளியீட்டு விழா குற்றாலத்தில் நடந்தது. அதில் ராஜாஜிபங்கேற்றார். 

இதன் முதல் தொகுதி திருநெல்வேலி டவுனில் உள்ள அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அதன் முதல் தொகுதியின் பிரதி டி.கே.சி.யால் கையெழுத்திடப்பட்டுபிரதி கிராவுக்கு அனுப்பப்பட்டது. அதை கிரா என்னிடம் கொடுத்தார். கடந்த வருடம் திரும்பவும் டி.கே.சி.யின் ராமாயணத்தை அல்லயன்ஸ் பதிப்பகம் மூன்று தொகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தொகுப்பாக வெளியிட்டது. அதற்கு ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன், கி.ரா., மாலன், அடியேனும் வாழ்த்துரை வழங்கினோம். வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தீப.நடராஜன் விரும்பினார். அவர் மறைந்த இரண்டு நாள்களுக்குப்பிறகுதான் அச்சடிக்கப்பட்டு, பைண்டிங் செய்யப்பட்டு நூல் கைக்கு வந்தது. நூலைப் பார்க்காமலேயே கிராவும் மறைந்துவிட்டார். இந்த இருவரும் இந்த மூன்று தொகுதிகளையும் ஒருங்கிணைந்தமுறையில் பார்க்க விரும்பினார்கள். இதற்காகப் பொறுப்பெடுத்து பணியாற்றிய என்னால் உரிய நேரத்தில் நூலை அவர்களுக்கு வழங்க முடியவில்லையே என்பதுஎன்னுடைய வாழ்க்கையில் தீராத கவலையாக உள்ளது.

ரசிகமணி டி.கே.சி. என்று மனத்துள் எண்ணும் போதே கவிதை நினைவுக்கு வரும். அதே போல் அடுத்து நினைவுக்கு வருவது இசையாகும். கவிதையை எப்படி அனுபவித்தாரோ அதுபோன்றே இசையையும் அனுபவித்தவர் டி.கே.சி. 

 இசை அறிவும் ஈடுபாடும் டி.கே.சி.க்கு அதிகம். தமிழ்க் கவிதைகளை எல்லாம் தனக்கேயுரிய பாணியில் இசையோடு பாடித்தான் பிறருக்கு வழங்கி வந்தார்.

சென்னையில் டி.கே.சி. இருந்தபோது வீணை தனம்மாளை அடிக்கடி சந்தித்து தனது இசையறிவை வளர்த்துக் கொண்டார். டி.கே.சி. வீட்டில் வீணை தனம்மாளின் படம் இருந்தது.

 சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஜே.ராமானுஜாச்சாரி ஓராண்டு விடுமுறை எடுத்துக் கொண்டு குற்றாலத்துக்கு வந்தார். டி.கே.சி.வீட்டில் தங்கி டி.கே.சி.பேரப்பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தார். இதெல்லாம் கல்கியின் ஏற்பாடு. இதற்குக் காரணம்,கல்கிக்கும் இந்த கருத்து உண்டு. குழந்தைகள் புத்தகமூட்டையைச் சுமந்து செல்வது, வேண்டாத பாடங்களை அவர்கள் மூளைக்குள் திணிப்பது, ஆசிரியர்கள் கடுமையுடன் பிள்ளைகளிடம் நடந்து கொள்வது ஆகியவற்றிற்கு எதிரான கருத்துகளை பெற்றோன் என்ற புனைபெயரில் கல்கியில்  தொடர்ந்து எழுதியிருக்கிறார். 

கல்கி குடும்பத்தினர் குற்றாலம் வந்தால் டி.கே.சி. வீட்டில்தான் தங்குவார்கள். சென்னைக்கு டி.கே.சி. குடும்பத்தினர்  சென்றால் கல்கி வீட்டில்தான் தங்குவார்கள். 1937 முதல் குற்றாலம் செல்வதை கல்கி வழக்கமாக வைத்திருந்தார்.  ஆஸ்த்மா நோயாளியான கல்கிக்கு குற்றாலம் குளியலால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.  சிவகாமியின் சபதத்தில் குற்றாலம் தொடர்பான காட்சிகள் பல இடம் பெற்று இருக்கின்றன. புரச மரங்கள் பூத்துக் குலுங்குவதை எழுதியிருக்கிறார். 

கல்கியில் நன்கொடை வசூலித்து எட்டையபுரத்தில் பாரதி மணிமண்டபம் கட்டியதும், திறப்பு விழா நடத்தியதும் கல்கிதான். ‘பாரதி ஸ்பெஷல்’ என்ற ரயில் கோவில்பட்டிக்கு விடப்பட்டது. இந்த பாரதி மண்டபம் கட்டும் பணிகளுக்கான அலுவலமாக டிகேசியின் குற்றால வீடு இரவும் பகலுமாக காட்சி தந்தது. 

ரசிகமணி டி.கே.சி. 1954-ஆம் ஆண்டு 73-ஆம் வயதில் மறைந்தார்.

‘கம்பனைப் போன்று ஒரு ரசிகன் கிடைப்பதற்கு வள்ளுவர் 700 ஆண்டுகள் காத்திருந்தார். டி.கே.சி.யைப் போன்ற ஒரு ரசிகன் கிடைப்பதற்கு கம்பன் 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது’ என டி.கே.சி.க்கு புகழ்மாலை சூட்டியுள்ள ஜஸ்டிஸ்மகராஜன், “நவீன குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் சாலையில்தான் டி.கே.சி வாழ்ந்த வீடும் அவரது நினைவாய் அமைந்துள்ள நூலகமும் உள்ளது என்கிற விஷயமே அங்கிருக்கும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. தன் உற்ற நண்பர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்த சமயத்தில் கூட தனக்கென எதையும் பெற்றுக் கொள்ள முனையாது குற்றால முனிவராகவே வாழ்ந்த டி.கே.சி தனது இறுதிகாலத்தில் வசித்த இரண்டு வீடுகளும் இன்று சுற்றுலாப் பயணிகள் வாடகைக்குத் தங்கும் விடுதிகளாக இருப்பதைப் பார்க்க சங்கடமாயிருந்தது. அவரது நினைவாக உள்ள நூலகத்தின் ‘பெயர் பலகை’கூட நிறம் மங்கி நிற்பது டி.கே.சிக்கு பெருமை தருவதாயில்லை.

இதற்கு மாறாக பழைய குற்றாலத்துக்கு செல்லும் பாதையில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நம் மனச்சோர்வை அமைதிப்படுத்துவதாய் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் திரிகூட மலையின் நீலச் சிகரங்களின் நிழலில் பசுமை கொஞ்சும் வயல்வெளிகளின் புறத்தில் எளிமையாக அமைந்துள்ளது அவரது சமாதி ” என்கிறார்.

பொருநை ஆற்று ஞானியாகவும், திருநெல்வேலி கன்னல் தமிழின் காவலராகவும் வாழ்ந்தவர் டி.கே.சி. கம்பனின் கவியுள்ளத்துக்கும், தமிழுக்கும், கடிதஇலக்கியத்துக்கும், தமிழிசைக்கும் உழைத்த.டி.கே.சி.க்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டியதுநமது கடமையாகும்.

 

கட்டுரையாளர்: அரசியலாளர்

ஆசிரியர், கதைசொல்லி


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#KSR_Post

22-2-2023.


கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....