Saturday, April 11, 2020

மார்ச்-2020 அர்த்தங்கள் ஆயிரம்-ஆர்.சூடாமணி


மார்ச்-2020  வெளியீடு

அர்த்தங்கள் ஆயிரம்
-ஆர்.சூடாமணி

( எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதி முதல்முறையாக நூல்வடிவமாகும் 
4 குறுநாவல்கள் )

பக்கங்கள்    166                           விலை ரூ 160 /-



சிறுவாணி வாசகர் மையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவில் வெளிவரும் நூல்.........


அர்த்தங்கள் ஆயிரம்
"ஒருத்தர்கிட்ட அன்பு இருந்தால் நம்ம சுய புத்தியையும் மனசாட்சியை அடகு வச்சுடணும்னு அர்த்தமா?"

அர்த்தநாரி
"வீட்டுவேலைகளை ஆண்களும் பகிர்ந்துகொள்வதில் என்ன தவறு?"


நம் குழந்தைகள்
பெண் என்பவள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரமா என்ன?

ஓ!குழந்தைக்காக
பாலுணர்வு இல்லையென்றால் ஒருபெண் உடனே சகோதரியாகிவிடுகிறாளா?ஆண்-பெண்ணிடையே பால்கலப்பற்ற உறவுகள் நிலவமுடியாதா என்ன?

முதல்முறையாக நூலாக வெளிவரும் ஆர்.சூடாமணி குறுநாவல்கள்


சமூகப் பிரச்சினைகள், குறிப்பாக பெண்கள் எதிர் கொண்டவற்றைப் பற்றித் தமது கவனிப்பு களை 500க்கும் மேற்பட்ட படைப்புகளில் வெளிப்படுத்தியவர் ஆர்.சூடாமணி.

எண்பதுகளில்  வெளிவந்த அவரது இக் குறுநாவல்களின் கதைக் களன்கள் அக்காலகட்டத்தில் இருந்த சமூக, குடும்ப, பெண் மற்றும் ஆண் சந்தித்த பொறுப்புகளின் சுமை, அக, புறச் சிக்கல்கள் பற்றியவை;

சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை "மாதம் ஒரு நூல்"என வாசகரிடம் கொண்டுசேர்க்கும் சிறுவாணி வாசகர் மையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவில் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான  ஆர்.சூடாமணி அவர்களின் இந்நூல் வெளிவருவது நிறைவைத் தருகிறது.

ஆர்.சூடாமணியின், நூலாக வெளிவராத இக் குறுநாவல்களை வெளியிட அனுமதி தந்த அவரது பெயரிலான டிரஸ்ட்-க்கும்,அணிந்துரை தந்துள்ள திருமதி.பாரதிக்கும் மனமார்ந்த நன்றி.அழகான அட்டை வடிவமைத்துள்ள
ஓவியர் ஜீவாவுக்கும்  நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------

வாசிப்பின் வாசம் - ஆர்.சூடாமணி

“நாப்பத்தஞ்சு வயசுல ஒருத்தி பாட்டியாகலாம் ! கிழவியாக முடியாது”  - ஆர் சூடாமணி !


ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்திருந்த எழுத்தாளர் ஆர் சூடாமணி - அவரது படைப்புகள் இன்றைக்கும் வாசிப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வுகள் அதே வீச்சுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பது, அவரது காலம் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும் எழுத்துக்கும், சமூக சிந்தனைகளுக்கும் சான்றாகும்.


சூடாமணியின் பெண்ணீயம் ஆண்களை எதிர்ப்பதோ, தூற்றுவதோ அல்ல! அவரது கதை நாயகிகள்

“தன்னைத் தான் உணர்ந்து கொள்ளுதல்”,  “தன் நெஞ்சிற்கு சரியெனத் தோன்றுவதை, நேர்மையுடனும், துணிவுடனும் சொல்வதும், செயல்படுத்துவதும்” என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்!

தன் கதைகளில் பெண்ணீயத்தை, அதற்கே உரிய மென்மையுடனும், கண்ணியத்துடனும் வெளிப்படுத்தி யிருக்கிறார் ! பெண் விடுதலை முதலில் வீட்டில் – பெண்ணாலேயே ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமைதியாக, ஆனால் ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார் !


‘ஆண்களுடன் அனுசரித்துப் போவதும், பெண்கள் சுதந்திரமாக இருப்பதுவும் அவர்கள் மனது மற்றும் சூழல் பொறுத்தது’ என்பதைச் சூடாமணி, ஒவ்வொரு கதையிலும் மெளனமாக உரைத்த வண்ணம் இருப்பது அவரது தனித்துவம்!


அனுசரித்துப் போனாலும், ஆழ்மனதில் தேக்கி வைத்துள்ள கோபம், ஆதங்கம், சுதந்திர உணர்வுகள் எல்லாம் சரியான சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு, தான் அடங்கிப் போக அல்லது அடங்குவதைப் போன்ற தோற்றம் ஏற்படக் காரணமான ஆண்மகனை அமைதியாகத் தன் பெண்மை என்னும் வலுவான உரம் கொண்டு பூமியில் புதைக்கும் வசீகரம், வாசிக்கும் எவரையும் திகைப்பில் ஆழ்த்தும்!


சூடாமணியைப் பற்றி…


சென்னையில் 1931ல் பிறந்து, எழுத்தாளராகவும், சமூக சிந்தனையாளராகவும், ஏழை எளியவர்களுக்கு உதவுபவராகவும் வாழ்ந்து, 2010ல் மறைந்தார். சின்ன வயதில் அம்மை நோயால் தாக்கப்பட்டு, கை கால்களின் இயல்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வீட்டிற்குள்ளேயே வாழும் நிலை - இதனை அவர் எதிர்கொண்ட விதமும், ஆக்கபூர்வமான அவரது பணிகளும் வியக்க வைப்பவை! விரிவான வாசிப்பு, ஓவியத்தில் தேர்ச்சி, இசை ஞானம் என தன்னை ஒரு தேர்ந்த படைப்பாளியாக மாற்றிக்கொண்டார் - இதில் அவரது அன்னையின் பங்கு முக்கியமானது. ‘மகரம்’ அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தார்.


சூடாமணியின் முதல் கதை ‘காவேரி’ (1957) வெளியான அதே வருடம் அவருக்கு கலைமகள் வெள்ளிவிழா விருது கிடைத்தது. ‘மனதுக்கினியவள்’ (1960) நாவல், கலைமகள் நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. இவரது ‘இருவர் கண்டனர்’ நாடகம் பலமுறை மேடையேறியது; சிறந்த நாடகத்துக்கான ஆனந்த விகடன் பரிசையும் வென்றது. 1966 ல் தமிழ்நாடு அரசு விருது, 1982 ல் கலைஞர் மு.கருணாநிதி விருது, மற்றும் இலக்கிய சிந்தனை விருது எனப் பல விருதுகள் - ஆனாலும் விருதுகளை ஒரு பொருட்டாகவே அவர் கருதியதில்லை.


‘பிஞ்சுமுகம்’ (1959), ‘புன்னகைப் பூங்கொத்து’ (1965), ‘மகளின் கைகள்’, ‘இரவுச்சுடர்’ (1974) - ( ஆங்கிலத்தில் “YAMINI” என மொழிபெயர்க்கப்பட்டது (1996) போன்ற நாவல்களை எழுதிய போதிலும், 500 க்கும் அதிகமான சிறுகதைகளே இவரை சிறந்த படைப்பாளி என்ற உயரத்திற்கு எடுத்துச்சென்றன.


தமிழச்சி  தங்கபாண்டியன் , கணையாழியில் எழுதியிருந்த  ‘தனிமைத் தளிர்’ கட்டுரை மற்றும்

அம்பை அவர்கள் சூடாமணி குறித்து காலச்சுவடில் எழுதியிருந்தவை இப்படைப்பாளி பற்றிய ஓர் உருவகத்தை என்னுள் எழுப்பியிருந்தன. அவரது படைப்புகள், சமூகப் பார்வைகள் எல்லாம், அவர் வாழ்நாளில் ஒரு வித மன இறுக்கத்துடன் இயங்கியிருப்பாரோ என்று கூட எண்ண வைத்தன.

அன்னை, சகோதரி, தோழி, என நம்மிடையே வலம் வரும் பெண்களின் மூலமே பாரதியின் புதுமைப் பெண்ணையும், இன்றைய தீவிர பெண்ணீய ஆர்வலர்களையும் மிகவும் சிறப்பாகக் கண் முன் நிறுத்துவது சூடாமணியின் சிறப்பெனப் படுகிறது.


செல்வம், கல்வி வளம், அரவணைப்பான குடும்ப சூழல் இவை எல்லாவற்றிலும் துய்த்த, கலாபூர்வமான ஓர் உயிர் ஒரு போதும் தன்னை ஓர் உயரத்தில் உயர்த்திக் கொண்டதில்லை என்கிறார் –  அவர் தன் வாழ்வானுபவத்தில் கண்ட உண்மை அது!


’நான்காம் ஆசிரமம்’ சங்கரி, முதிர் கன்னி சோபனா, மற்றும் கோமதி, வள்ளி இன்ன பிற பெண் கதை மாந்தர்கள் மூலம், நான்கு சுவர்களுக்குள் ஒரு பெரும் புரட்சியே செய்திருக்கிறார், சூடாமணி – விமலையின் தன்மானம் மெளனமாகக் கணவனைப் பழி வாங்குவது ‘பெருமையின் முடிவில்’  -  அதே தன்மானம் தன் கணவனின் மேதமையை மட்டும் மதிப்பிடக் குரலெழுப்பும் கெளரியால் வெளிப்படுவது ‘மேதையின் மனைவி’யில் !


“நாப்பத்தஞ்சு வயசுல ஒருத்தி பாட்டியாகலாம் அருண்! கிழவியாக முடியாது” மிக அருமையாகப் புனையப்பட்ட வரிகள் – மறுக்கவோ, மறைக்கவோ முடியாத – கூடாத வரிகள் !


 சூடாமணியின் படைப்புகள், அவரது படைப்பாற்றலுக்குச் சிரம் சாய்க்க வைக்கின்றன !


‘சாம்பலுக்குள்’ சிறுகதை நாயகி ராஜாமணி -‘ வீனஸ் உடம்பின் மேல் சோளக்கொல்லை பொம்மையின் முகம் வந்து உட்கார்ந்து கொண்டது’  போன்ற தோற்றமுடையாவள்! வறுமையும் மேற்சொன்ன தோற்றமும் கொண்ட ராஜாமணியின் எதிரிநீச்சல் வாழ்க்கைதான் கதை! நல்லவர்களும், கயவர்களும், கடினமான சூழல்களும் ராஜாமணியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டாலும், சாம்பலுக்குள் கனன்றுகொண்டிருக்கும் தீப்பொறியாய் வாழ்கிறாள் ராஜாமணி!


“ ராஜாமணி மாமியின் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?

   ராஜாமணி பதினெட்டு வயது வரை பெருமாள் கோயில் ஏழைப் பரிசாரகரின் தாயற்ற மகள். பதினெட்டு வயதில் தனியார் கம்பெனி குமாஸ்தாவின் மனைவி. பத்தொன்பது வயதில் ஓர் ஆண் குழந்தையின் தாய். பத்தொன்பதரை வயதில் குழந்தையை இழந்த தாய். இருபத்தொரு வயதில் இரண்டு அபார்ஷன்களைத் தாண்டி வந்த நலிவுற்ற சீக்காளி. இருபத்தொரு வயது மூன்று மாதங்களில் வாழாவெட்டி.
   ஐம்பத்தொரு வயதில் இதோ என்னெதிரே பிணமாய்க் கிடக்கும் இப்போது வரை வாழாவெட்டி”

நான்காம் ஆசிரமம் கதையும் சொல்லப்பட்ட விதமும் வித்தியாசமானவை. முதல் கணவன் லுகீமியாவில் இறக்க, விதவையை மணம் புரிந்து, விவாகரத்து செய்த இரண்டாம் கணவனுக்கும், உடன் வாழ்ந்த மூன்றாம் கணவனுக்கும் - அவர் அவளுடைய கல்லூரி ப்ரொஃபசர் - இடையில் நடக்கும் உரையாடலே கதையை நகர்த்துகிறது. “அவள் ஒவ்வொரு உறவையும் வாழ்ந்து களைந்து அதிலேர்ந்து விடுபட்டுண்டே வெளிவந்துட்டாள். என்னால அவளைப் பிரிய முடியாம, அதீதப் பற்றுதலும்,பேராசையும் என் கண்களை மறைச்சிடுத்து” என்னும் ப்ரொஃப்சர், அவள் விரும்பிய விடுதலையில் , நான்காவது ஆசிரமத்தில் , வாழ அனுமதிக்கவில்லை” என்கிறார். அவள் ஒரு சுதந்திரப் பிறவி - அவளை எதுவும் கட்டுப் படுத்தி வைக்க முடியாது. இதிலிருந்து தப்பிக்கும் வழியை அவள் அறிவாள் - முதல் மூன்று ஆசிரமங்களில் அடைய வேண்டியவைகளை அடைஞ்சு முடித்துவிட்டாள் சங்கரி - நான்காவதுக்கு வழி மறுக்கப்பட்டபோது, தானே தேடிக்கொள்கிறாள். ’தானாக மட்டும் இருப்பதில்தான் யாரும் தன் உண்மையான மோட்சத்தைக் காணமுடியும்’ என்பதை சங்கரி மூலம் அழுத்தமாகச் சொல்கிறார் சூடாமணி! கதை படித்து முடித்து, பல நாட்கள் சங்கரி என் நினைவுகளில் சுழன்று கொண்டிருந்தாள்!


நாகலிங்க மரம் - பெண் பார்க்கும் படலம் சிறுகதையாய் - பெண் பிருந்தா, அவள் அம்மா, பையனின் அம்மா மூன்று பெண்கள் - பேராசை பிடித்த பெண், அமைதியாய் எல்லா அவலங்களையும் கையறு நிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் அம்மா, எதிலுமே கவனமில்லாமல், நாகலிங்கப் பூக்களை எண்ணிக்கொண்டிருக்கும் பிருந்தா - எதையும் மாற்ற முடியாமல், மூன்று ஆண்கள் - திருமணம் என்ற சந்தையில் நடைபெறும் வியாபாரம்!


‘இணைப்பறவை’யில், மனைவி இறந்த துக்கத்தை வெளியில் காட்டாத, பிறர் கேட்க வரும் துக்கத்தைக் கூட பகிர்ந்துகொள்ள விரும்பாத தாத்தா - உள்ளுக்குள் மருகி உயிரை விடும் அருமையான மனிதர்.


‘நீலதயாட்சி அம்மாள். வயது அறுபது’ - முதுமையை ஏற்க மறுக்கும் மனதுடன், பேரன்,பேத்திகள், மகன், மருமகள் ஆகியோருடன் மல்லுக்கு நிற்கும் பாட்டி - அறைக்குள் தனிமையில், தலைக்குச் சாயம், மோவாயின் வெள்ளை முடியை களிம்பினால் எடுப்பது - தன் தோல் சுருக்கங்களையும், கடற்கரை மணலில் நடக்க முடியாமல் வீழ்வதையும் கூறும் கதை. உடலுக்கு வயது ஏறும் வேகத்திற்கு, மனதுக்கு வயது ஆவதில்லை என்பதை இடித்துரைக்கிறது சூடாமணியின் சிறுகதை.


சொல்லிக்கொண்டே போகலாம் - ஆனாலும் ஒவ்வொரு கதையையும் படித்து அனுபவிப்பது போல் ஆகுமா?


சூடாமணி தமிழ் இலக்கியத்தில் தனக்கென ஒரு பக்கத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ள அருமையான படைப்பாளி என்றால் அது சிறிதும் மிகையில்லை!!


டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 http://puthu.thinnai.com/?p=40288


கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)

எஸ்.ஜெயஸ்ரீ

  பெண்ணுரிமை பற்றி முண்டாசுக் கவிஞன் பேச ஆரம்பித்தான். பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று. ஆனால், உடனடியாக இந்த தைர்யம் பெண்களுக்கு வந்ததா என்றால் அப்படி இல்லை. ஒரு இந்திரா காந்தி, ஒரு சரோஜினி நாயுடு, ஒரு ஜெயலலிதா சட்டங்கள் இயற்றும் நிலைக்கு வந்து விட்டதாலேயே, பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று இந்த தேசம் முழுக்கவே ஒரு உற்சாகம் கொப்பளிக்க மேடைதோறும் முழக்கம் கேட்டது. ஆனால், உண்மையில் பெண்களுக்கான சுதந்திரம் என்பது  முதலில் அவளும் ஆணுக்குச் சரியாக சக உயிராக மதிக்கப்படுவதும், ஆண்கள் போன்று இந்த சமுதாயத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவதும், அவளுடைய உணர்வுகளும் மதிக்கப்படுவதுமாகும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் அவளும் ஆண்களுக்குச் சரி நிகர் சமானமாக மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான பெண் சுதந்திரம் ஆகும். ஆங்காங்கே பெண் சுதந்திரக் குரல்கள் எழுந்து வந்தாலும், அது சரியான விஷயமாக வெளிவரவில்லை. அது ஏதோ பெண்கள், அவர்களுடைய வெளித் தோற்றத்திற்கான சுதந்திரம் என்றோ, பழக்க வழக்கங்களில் ஆணுக்குச் சரியாக தாங்களும் இருக்க வேண்டும் என பெண்கள் விழைகிறார்கள் என்பதாகவுமே புரிந்து கொள்ளப் பட்டது.  

  
மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட பெண்ணியப் பார்வை என்பது பெண்களை ஒரு இரண்டாந்தரக் குடியாக அவளைப் பார்க்கிறது, பெற்றோர் தம் மகளின் வீட்டில் இறுதி காலத்தைக் கழிக்க நேர்ந்தால், சாக்கடை வழியாகத்தான் அந்த ஆத்மா நரகம் போகும், எனவே ஆண் வாரிசு என்பதே பெரிய சம்பத்து, பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்றால் பெரும் வரதட்சிணை கொடுக்க வேண்டும், பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள், அவள் மேல் ஆணுக்கு அதிகாரம் உண்டு, ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது என்றெல்லாம் காலம் காலமாக சமூகப் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டே குழந்தை வளர்ப்பு இங்கே நடைபெறுகிறது. எனவே, பெண் சுதந்திரம் என்பதும் இங்கே தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

     பெண் சுதந்திரம் என்பது கருத்தால், உணர்வுகளால், அறிவால், மனதால், கண்ணியாமாக நடத்துவதால், மரியாதையாக நடத்துவதால் என் இவற்றின் மூலம்தான் வெளிப்பட வேண்டியது. ஆனால், இந்தப் புரிதல் இன்றளவும் கூட இந்தச் சமுதாயத்தில் இல்லை என்றே சொல்லலாம். பெண்கள் என்பவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே பார்க்கும் பார்வை என்பதே நிலவி வருகிறது. மகளிர் இயக்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் கூட பெண்களுக்கெதிரான வன்முறையை எல்லாம் முழுவதுமாக இந்தச் சமுதாயத்தில் ஒழித்து விட முடியவில்லை. மனித மனங்களின் சிந்தனை மாறாத வரைக்கும் இவற்றை முற்றிலுமாக ஒழித்து விட முடிவது எளிதானதுமல்ல. இன்றளவும் ஆணாதிக்கச் சிந்தனைதான் பெண்களுக்கெதிரான பாகுபாட்டிற்கான காரணம். ஆணாதிக்கச் சிந்தனைகள் என்பதைப் பலரும் அது ஆண்கள் மத்தியில் நிலவுவது என்று நினைத்துக் கொண்டு, ஆண்களை எதிரிகளாகப் பார்க்கும் பார்வை இருக்கிறது. ஆனால், அது அப்படியல்ல. பெண்களை அடிமையாக நினைக்கும், அவர்களுக்கெதிராக செயல்படும் எவருமே,( அது ஆணோ, பெண்ணோ) அப்படிப்பட்டவர்கள்தான். இந்த ஆணாதிக்கச் சிந்தனை மாற வேண்டும் என்பதுதான், உண்மையான பெண் சுதந்திரம் வேண்டுபவர்கள் முன் வைப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஆர். சூடாமணி அவர்கள் எழுதியுள்ள நான்கு கதைகள், சமீபத்தில், “ அர்த்தங்கள் ஆயிரம் ” என்ற தலைப்பில் சிறுவாணி வாசகர் மையத்தின் மூலம், பவித்ரா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.


       ”அர்த்தங்கள் ஆயிரம்”  கதையில் வரதட்சிணைக் கொடுமையால் அவதியுறும் சவீதாவைக் காட்டுகிறார் சூடாமணி. அதைக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவளுடைய அண்ணன் உபேந்திரன் அதை எதிர்த்த போராட்டத்தின் குறியீடாக வாசகரால் உணர முடிகிறது. ஒரு அளவு வரை கணவனும், மாமியாரும் படுத்தும் கொடுமைகளையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் சவீதா, அவர்கள் தன்னைக் கொல்வதற்காக சதித் திட்டம் தீட்டுவது தெரிந்த போது, தப்பித்து வந்ததுதான், பெண் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இடம். கணவனே கண் கண்ட தெய்வம், அவன் கையால் சாவதே மேல் என்றெல்லாம் நினைக்காமல், தானே தன் விடுதலையைத் தேடிக் கொள்ளும் இடம் மிகவும் அருமை. தன் தாய் வீட்டுக்கே வந்த பிறகு,, “ என் அன்புக்குப் பலன் இருக்கும்னு கொடுமையையெல்லாம் சகிச்சுண்டு காத்திருந்தேன். அந்த அன்பைப் புறக்கணிச்சுட்டு, கட்டின புருஷனே கேவலம் ஒரு காருக்காகக் கொலை செய்யத் துணிஞ்சப்புறம், கல்யாணம் பவித்ரமானதுன்னும், புருஷன் தெய்வம்னும் சொல்றதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” சவீதா சொல்லும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை. அன்பால் கட்ட முடியாத வாழ்க்கை வெறும் பணத்தாலும், பொருட்களாலும் எப்படி நிலைக்கும்?


 நிறைய கதைகளில், வீட்டில் பெண் குழந்தைகள் சம்பாதிப்பவர்களாக இருந்தால், அந்தப் பெண்ணிற்குத் திருமணம் செய்யத் தயங்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். சூடாமணியோ இந்தக் கதையில் உபேந்திரன் என்கிற ஆண் பாத்திரத்தை அப்படிப் படைத்துக் காட்டுகிறார். உபேந்திரனை அவருடைய தாயார், உணர்வுச் சித்திரவதை ( EMOTIONAL TORTURE) செய்கிறார். தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு தாம் செய்ய வேண்டிய கடமைகளை  செய்து முடிக்க, தன் ஒன்றுக்கும் உதவாத, குடிகாரக் கணவனைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், தன் மகனை இப்படி உணர்வுச் சித்திர வதையின் மூலமே பயன்படுத்திக் கொள்கிறார். கடைசியில் மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட, கொள்ளி போட ஆண்பிள்ளை என்ற சிந்தனை கொண்டே இருக்கிறாள் அந்தத் தாய். அவனுடைய திருமணம் பற்றியெல்லாம் அந்தத் தாய்க்கு கவலையே இல்லை. ஆண் என்பவன் ஒரு குடும்பத்துக்கு உழைத்துக் கொட்டவும், பெற்றோருக்குக் கொள்ளி வைக்கவும் மட்டுமே என்றும், பெண் என்பவள் திருமணம் செய்து கொண்டு, கணவன் வீட்டில் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியவள் என்றுமாக இந்த சமுதாயத்தின் ஆணாதிக்கச்  சிந்தனையை அந்தத் தாயார் பாத்திரத்தின் வழியே சூடாமணி மிக அழகாகப் படைத்துக் காட்டுகிறார்.


பூமாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய  பண பலத்தை வைத்துக் கொண்டு உபேந்திரனை விலைக்கு வாங்க நினைக்கும் சிறிய மனம் படைத்தவராக இருக்கும்போது, அவருடைய மகள் மனுஷ தர்மத்தைப் பற்றிப் பேசுபவளாக இருப்பது நல்ல முரணான பாத்திரப்படைப்பு. தன் மகளுக்குச் சுதந்திரம் கொடுப்பது போல அவள் வங்கிக் கணக்கில் பணம் போட்டு வைக்கும் கிருஷ்ணமூர்த்தி, அதை அவள் அடுத்தவர்க்குக் கொடுக்க முன் வரும்போது தடுக்கும் நடவடிக்கை, ஆணாதிக்கத்தை உணர வைக்கும் நல்ல இடம். தன் தந்தையின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், கட்டுடைத்து, பூமா உபேந்திரனுக்கு உதவும் இடம் அழகானது.

அன்புள்ள மனம் வாய்க்கப் பெறுவதுதான் பாக்கியம். அன்புக்கு சாதி, மதம், இனம் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. அப்படி ஒரு அன்பான மனுஷியாக, பக்குவமாக மனிதர்களைப் புரிந்து கொள்பவளாக இருப்பவள் மாலதி, உபேந்திரனின் மனம் கவர்ந்தவள். தன் குலவழக்கம் மீறுவது, தன் தாயின் வார்த்தை என்ற கட்டுக்குள்ளும் அடங்காமல், உபேந்திரன் மாலதியைக் கரம் பிடிக்கத் துணிந்து முடிவெடுப்பது,  அன்பு என்பது வேறு எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காமல், தான் மட்டுமே வெல்லும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் இடம். அம்மாவின் அத்தனை உணர்வுவதைகளையும் தாங்கிக் கொண்டு, உபேந்திரன், அம்மா மேல் அன்பு காட்டுவது அன்பு மட்டுமே. அன்பு மட்டுமே எதை விடவும் பெரியது என்பதை சூடாமணி மீண்டும் மீண்டும் சொல்ல வருகிறார்.

ஓர் உயிர் ஆபத்தில் இருக்கும்போது உதவி செய்வதற்கு, இரு உயிர்களுக்கிடையில் கண்டிப்பாக ஏதோ ஒரு உறவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற எவ்விதக் கட்டாயமுமில்லை. அந்த இடத்தில் உதவி செய்வது மட்டுமே மனுஷ தர்மம் என்ற பூமாவின் வார்த்தைகள் மிகவும் உயர்ந்தது


     அர்த்தநாரி கதையில் ஆண்களும், பெண்களும் வீட்டு வேலைகளப் பகிர்ந்து கொண்டு செய்வதில் தவறே இல்லை என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். அப்பா செய்தித்தாள் படிக்கவும், அம்மா சமையல் கட்டுக்குள் இருக்கவும் மட்டும்தான் என்ற சிந்தனையை மாற்றி, குடும்பம் என்பது இருவரும் சேர்ந்தது என்பதையும், வீட்டு வேலைகளையும் ஆண்களும் பகிர்ந்து செய்வதில் தவறே இல்லை என்பதையும், சமையல் உட்பட வீட்டு வேலைகள் எதுவாயினும் இருபாலரும் பகிர்ந்து செய்ய வேண்டியது என்பதையும், பெற்றோரே முன்னுதாரணமாக இருந்து   இவற்றை தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டியவர்களாக இருக்க வேண்டியதையும் குழந்தைப் பாத்திரங்கள் வழியாகவே சொல்லி விடுகிறார். ஆண்களும் சமைக்கலாம் என்று ஆண்களுக்கு இப்போது சொல்லித்தர வேண்டியிருக்கிறது. ஆண்கள் பலர் தாங்கள் சமையலறைப் பக்கமே போனதில்லை என்றும், தங்களுக்கு காப்பி கூட போடத் தெரியாது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொள்வதை இப்போது கூட கேட்கலாம். அர்த்தநாரி கதையில், தன் வீட்டில் தாயும் தந்தையும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வதைப் பார்க்கும் ஒரு பையன் தன் சிநேகிதன் வீட்டுக்குப் போகும்போது, தனக்காக அவன் அம்மா, சாப்பபாடு தயாரிப்பதைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். ஆனால், அதெல்லாம் பொம்பளைகளுக்கு கஷ்டமே இல்லடா என்கிறான் இவன். இதை அவன் தன் தந்தையைப் பார்த்தே கற்றுக் கொள்கிறான். இவன்  தந்தை,  தாயை அவர்  சிநேகிதர்களுக்காக, வீட்டில் உணவு தயாரிக்கச் சொல்லி வற்புறுத்துகிறான். அவள் உடம்பு முடியவில்லை என்று சொன்ன பிறகும் கூட அவன் வற்புறுத்துகிறான்.  அவள் எல்லாம் செய்து முடித்து, பரிமாறி உடம்பு சுத்தமாய் முடியாமல் படுத்து விடுகிறாள். அடுத்த நாள், காய்ச்சலும், தலை சுற்றலுமாக இருப்பவளை எழுப்பி காப்பி தயாரித்துத் தரச் சொல்லி வற்புறுத்துகிறான். எழுந்தவள் தலை சுற்றி விழுந்ததில் தலை இடித்து, அது அவளுடைய மரணத்திற்கே காரணமாகி விடுகிறது. ஒரு சிறிய விஷயம், காப்பி தயாரித்து குடிக்கத் தெரியாத, அல்லது தெரியாது என்று நடித்து, பெண்கள்தான் செய்ய வேண்டும் என்கிற பிடிவாதத்தோடு இருக்கும் ஓர் ஆண்மகனின் செயல், ஒரு மரணத்திற்கே காரணமாகி விடுகிறது.  வீட்டு வேலைகளைப் பெண்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகளும் எழுத வேண்டியிருக்கிறது. ஆனால், சூடாமணி,  ஒரு சின்ன விஷயம் மரணத்திற்கே இட்டுச் செல்வதைக் காட்டி, மண்டையில் உரைக்கும்படி சொல்கிறார்


     ஆண் வாரிசு மட்டுமே ஒருவரின் மண வாழ்க்கையின் லட்சியம் என்பதைப் பலரும் கொண்டிருக்கிறார்கள்.    இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, அடுத்த பெண்ணைத் தேடுவதும், அந்தப் பெண்ணை இணங்க வைக்க அவன் செய்யும் ஜாலங்களையும் மிகவும் யதார்த்தமாக விவரிக்கிறார் “ ஓ…குழந்தைக்காக” என்ற கதையில். தன் மனைவிக்குத் தெரியாமல், வேறொரு பெண்ணை தன்வசப்படுத்த ஓர் ஆண் செய்யும் அத்தனை திருகுதாளங்களையும் அழகாக விவரிக்கிறார் சூடாமணி. சுகுமாரின் மனைவி அவனுக்கு இருக்கும் இன்னொரு பெண் தொடர்பு பற்றிக் கண்டிக்கும்போது, “ இன்னொரு பெண்ணைக் கட்டணும்னா என்னை எரிச்சுட்டு அப்புறம் கட்டுங்க “ என்று சொல்கிறாள்.அப்போது, அவன், “ உன்னைக் கொன்னாலும் நாந்தான் எரிக்கணும்; அதுக்கு உன் பிள்ளை கிடையாது “ என்று சொல்வது ஒரு ஆண் வாரிசு என்பதற்காக ஈரமற்ற வறட்டு இதயம் கொண்டவனாக இருப்பதைக் காட்டும் இடம்.  இந்த இடத்தில், ” அர்த்தங்கள் ஆயிரம் “ கதையில் உபேந்திரனின் அம்மா கடைசித் தருணத்தில், ”என்னம்மா வேணும்?’ என்று கேட்கும்போது,” என் பிள்ளை…எனக்குக் கொள்ளி போட வேண்டியவன்; வேற யாரும் எனக்கு வேணாம்” என்று சொல்வதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. காலம் பூராவும், தான் பெற்ற பெண்களுக்காகச் செய்ய வேண்டியவன் தன் மகன் என்றவள், மரணிக்கும் தறுவாயில், தனக்குக் கொள்ளி போட மகன் மட்டுமே போதும் என்பது ஆண் வாரிசு என்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்பது எந்த அளவுக்கு மனிதர்கள் மனங்களில், ஆண், பெண் பாகுபாடின்றி ஊன்றப்பட்டிருக்கிறது என்பதை சூடாமணி அழகாகப் பதிவு செய்திருப்பதை வாசிப்பவர்களால் உணர முடிகிறது.  

  
   ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது, அப்படி இருவர் பழகினால் அவர்கள் இருவரும் காதலர்களாகவோ, அல்லது தவறான உறவு கொள்பவர்களாகத்தான் இருக்க முடியும் என்பது இன்றும் கூட பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்தச் சிந்தனை, குழந்தைகளாக இருக்கும்போதிலிருந்தே ஊன்றப்படுகிறது. “ஆம்பிளையும் பொம்பிளையும் எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும்” என்று குழந்தை கேட்பதிலிருந்து இதை நம்மால் உணர முடியும். அப்படிக் கேட்கும் குழந்தைக்கு குழந்தையின் தந்தை முரளி குழந்தை மனது ஏற்றுக்க்கொள்ளும்படியாகச் சொல்லும் பதில் குறிப்பிடத்தக்கது. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்பதை இப்படிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் ஆண் பெண் உறவு பற்றிய தெளிவோடு வளர்வார்கள். இன்னொரு இடத்தில் துரைராஜுவிடம் அனுபமா  “, ஓர் ஆண் பெண் மேல் அன்பு காட்டுவதாலேயே அவளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவனில்லை”  என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்கிறார். “ அன்பு இருக்கிறதால நீங்க என் விஷயங்களிலெல்லாம் தலையிட்டு அதிகாரம் செய்யலாம்னு அர்த்தமில்லையே “ என்று அனுபமா சொல்வது ஒட்டு மொத்தப் பெண் குலத்தின் குரலாகவே அது ஒலிக்கிறது. “ பாலுணர்வோடு பார்க்கவில்லை என்றால் உடனே ஒரு பெண் சகோதரியாகத்தான் ஆகி விட வேண்டுமா?ஆண் பெண்ணிடையே வேறு வகையான பால் கலப்பற்ற உறவுகள் நிலவ முடியாதா என்ன? “ என்ற அனுபமாவின் வார்த்தைகள் நட்புக்காக மட்டுமே ஆண்களோடு பழகும் பெண்களின் குரல் என்றே சொல்லலாம். “ கல்யாணம் என்றால் கணவன் – மனைவி இருவருள் யாரேனும் ஒருவரின் ஆளுமை மற்றவரை அமுக்கி விடத்தான் வேண்டுமா? என்ற  கேள்வியை சூடாமணி, அனுபமாவின் மூலம் கேட்கும்போது வாசிக்கும் எல்லாப் பெண்களின் மனமும் உடனே சூடாமணியின் கைகளைப் பிடித்துக் குலுக்கவே ஆசைப்படும்.’ இருசாராரும் ஒருவரால் மற்றவர் நிறைவு பெற்று மேலே மேலே ஒன்றாய் வளர்ந்து பூர்ண சமத்துவத்தில் உண்மையான தாம்பத்யம் நடத்துபவர்களாக விளங்க முடியாதா? இது அனுபமாவின் மனதில் தோன்றும் அடுத்த கேள்வி. இந்த வரி படிக்கும்போது சூடாமணியுடன் கை கோர்த்துக் கொண்டு தட்டாமாலை சுற்றலாம் போல இருக்கிறது.

இப்படித் தெறிக்கும் வரிகளில் கட்டிப் போடும் சூடாமணி, பாலுறவு என்பதே குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும்தானா என்ன? அது ஏன் ஓர் அழகான அனுபவமாக இருக்கக் கூடாது என்று கேட்பதைகூட இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமோ ஏற்றுக் கொள்ளாதோ, ஆனால், சுதந்திரச் சிந்தனைகள் உள்ள பெண்கள் ஏற்பார்கள்.


இந்தக் கதையிலும், அவர் முடிக்கும்போது “ வாழ்க்கையில எத்தனையோ துன்பங்கள் வருது. மனுஷங்களுக்குப் பரஸ்பரம் இருக்கற அன்பின் பிணைப்பினால்தான் அதையெல்லாம் எதிர்த்து நின்னு சமாளிக்கணும்”  என்று சொல்வது ஆண், பெண் ,உறவு இவை எல்லாம் அன்பு என்ற சொல்லில் மட்டுமே அடங்கிப் போகிறதே தவிர இதில் யார் பெரியவர், யார் இளையவர் என்ற கேள்விகளே தேவையில்லை என்பதை ஒவ்வொரு கதையிலும் வலியுறுத்துகிறார்.


   இந்தக் கதைகள் நான்குமே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதாக அமைந்திருக்கிறது. இவைகள் அவருடைய கதைகளின் முழுத் தொகுப்பில் இடம் பெறாதவை. இந்தக் கதைகளை அவர் எழுதிய காலம் என்பது பெண்கள் ஏற்கனவே திணிக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக்கத்தில் மூழ்கித் திளைத்திருந்த காலம். அப்போது இந்தக் கதைகள் நிச்சயம் ஒரு புதிய சிந்தனையை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்போதும், இவற்றைப் படிக்கும்போது, ( நிலைமைகள் கொஞ்சம் பரவாயில்லையே தவிர) உயிர்ப்புடனேயே இருக்கின்றன. பெண்கள் என்றொரு இனம் இருக்கும் வரை இந்தக் கதைகள் வாசிக்கப் பட்டுக் கொண்டேயிருக்கும். வெளிக் கொணர்ந்த சிறுவாணி வாசகர் மையத்தாரும், சிறந்த முறையில் அச்சிட்டிருக்கும் பவித்ரா பதிப்பகத்தாரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

                         
(அர்த்தங்கள் ஆயிரம் – 4 குறுநாவல்கள் – ஆர். சூடாமணி – வெளியீடு…பவித்ரா பதிப்பகம், சிறுவாணி வாசகர் மையத்துக்காக) – விலை ரூ.160/-)                          

நன்றி. எஸ்.ஜெயஸ்ரீ அவர்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பயிற்சிவகுப்பு ஒன்று நடந்தது. பயிற்சி நிறைவுறும் தருணம் இறுக்கம் தளர்ந்து மனம் திறந்து பேசத் துவங்கியிருந்தனர் ஆசிரியைகள். பயிற்சியின் இறுதியில் அமைந்த ஓர் செயல்பாடு ஆண், பெண் உறவு, திருமண சடங்குகளில் நிகழும் மாற்றங்கள், ஆசிரியப் பணியில் ஏற்படும் மனச்சோர்வு என நடைமுறை சிக்கல்கள் குறித்த விவாதத்திற்கு இட்டுச் சென்றது. சொல்லி வைத்தது போன்று பெண் ஆசிரியர்கள் பலரும் "பொம்பளைகளுக்கெல்லாம் வெளி வேலையெல்லாம் ஆகாதுங்க; கம்முன்னு வீடோட இருந்து குடும்பத்த பாத்துக்கறதுதான் சரி" என்கிற வகையில் பேசத் துவங்கினர். மெல்ல உரையாடலானது பெண் குழந்தை வளர்ப்பு, திருமண உறவுகளில் ஏற்படும் சிதைவு என ஒவ்வொன்றாகத்  தொட்டு வளரத் துவங்கியது. கேட்போர்  கூட தமக்குள் உச் கொட்டியபடி இப்படியொரு காலத்தில் வாழ்வது குறித்த வருத்தத்தில் இருப்பது போலத் தோன்றியது எனக்கு.

உரையாடலின் இடையே எனக்கான வாய்ப்பின் போது சில மாற்று சிந்தனைகளை முன்வைத்து பேச முயற்சித்தேன். எனது கருத்தை முழுதாக ஏற்க இயலாவிட்டாலும் ஆங்காங்கே சிலவற்றை மட்டும்  அவர்கள் உள்வாங்கியது போலத் தோன்றியது. இன்னும் அழுத்தமாக பேச முடியாத வருத்தம் என்னை இன்னும் அதிகமாக தேடச் சொல்லியது.

இதோ இப்போது நான் வாசித்து முடித்த ஆர். சூடாமணியின் " அர்த்தங்கள் ஆயிரம்" எனும் நூல் (சிறுவாணி வாசகர் வட்டம்) சில மாதங்கள் கடந்திருந்த இவ்வுரையாடலை என்னுள் மீண்டும் நினைவூட்டுகிறது. சூடாமணியின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இந்நூல் பெண்களின் உலகம் குறித்து பேசுவதாக உள்ளது. அசந்தர்ப்பமாக ஏற்கனவே அறிமுகமாகியிருந்த இரண்டு சிறுகதைகளின் வழியே அவரின் தடத்தை அறிந்திருந்த எனக்கு இந்நூல் நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கியது.

திருமண பந்தம் மூலமாக வேறிடத்தில் நடப்படும் பெண்களின் நல்ல வாழ்க்கைச்சூழலுக்குப் பிறந்தவீட்டினரே பொன்னும் பொருளோடும் பொறுப்பேற்கும் சம்பிரதாயங்களை நழுவாது பின்பற்ற நினைக்கும்  தாயிற்கும் அதை சுரண்டலாகப் பார்க்கும் மகனுக்குமான வாழ்வினை பேசுவதாக அமைகிறது. அதில் இன்னும்  எத்தனை எத்தனையோ அர்த்தங்களை புரிய வைக்கிறார் சூடாமணி (அர்த்தங்கள் ஆயிரம்).

" புருஷன்தான் ஒருபெண்ணின் மதிப்புக்கு சின்னம்னு குறித்து வைத்திருக்கிற ஒரு சமூகத்தில் அந்த சின்னத்துக்கு அவசியம் முடிஞ்சு போன பிறகு அதை இனி வேண்டாம்னு சொல்ற பொண்ணும் அதே சமூகம் உருவாக்கிய விளைவுதானே?  புருஷன் - பொண்டாட்டி பிணைப்பு வெறும் சமூகப் பிணைப்பாயில்லாம தனிமனிதப்  பிணைப்பாய் இருக்கட்டும். ஒரு பெண்ணின் கல்யாண அந்தஸ்து அவள் வாழ்வை மற்ற விதங்களில் பாதிக்காமல் இருக்கட்டும். அப்போ வெறும் உறவுமுறையை வைத்து இல்லாம மனிதத் தன்மை அடிப்படையில் அன்பும் மத்த மென்மையான உணர்ச்சிகளும் ஏற்பட அதிகமான வாய்ப்பு இருக்கலாம், இல்லையா?"

திருமணத்திற்குப் பிறகு சிரமத்தில் இருக்கும் தனது குடும்பத்திற்கே தனது வருமானத்தை அளித்துவிடும் உறுதியோடிருக்கும் மாலதி கூடுதல் வருமானம் தேவைப்படும் சூழலில் இருந்தாலும் அதையே சரியென ஏற்கும் காபணி் உபேந்திரனிடம் கூறும் வார்த்தைகள் இவை. திருமணம் எனும் சடங்கை படோடாபமாகக் கொண்டாடிவிட்டு அதன் அர்த்தத்தை உணராத போக்கைக் காட்டிலும் திருமண வாழ்வில் அவரவர் விருப்பங்களை இழக்காது போதிய புரிதலோடு வாழும் முறையை கற்றுக் கொள்வது தேவையாயிருக்கிறது. இளம் தலைமுறையின் இவ்விருப்பங்களை புரிந்து கொள்ள சிரம்ப்பட வேண்டியிருக்கிறது நம்மில் பலருக்கு.

எப்போதும் உயர்வானதை ஆக்கப்பூர்வமானதை மட்டுமே சிந்திப்பவர்களாக காட்டிக்கொள்ளும் ஆண் மனம் பெண்கள் தினந்தோறும் புழங்கும்வெளியை அற்பமாக கருதிக் கொள்கிறது. பலன்களை மட்டும் அறுவடை செய்ய விரும்பும் ஆண்கள் பலியாடுகளாகும் பெண்களின் வலியை பொருட்படுத்துவதே இல்லை. ஆண்மனதின் இப்போக்கின் வெளிப்பாடுகளே இரண்டு கதைகளாக இந்நூலில் அமைகிறது. 

பணி அழுத்தம் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போக நினைக்கும் ஆசிரியைகளுக்கு வீட்டிலுள்ள மற்றுமொரு போராட்டக்களத்தை நினைவுபடுத்துவதாக அர்த்நாரி கதை அமைந்துள்ளது

அர்த்தநாரி கதையில் தன் வயதொத்த வகுப்புத் தோழனிடம் கோபு " உங்கப்பாவை புடவை கட்டிக்கச் சொல்லுடா" என்கிறான். " சமையலறை பணிகளை பற்றிய உரையாடலில் "பொம்புளைகளுக்கு இதெல்லாம் கஷ்டமே இல்லடா. இது அவுங்க வேலை தானே? " என்கிறான். இந்த கோபுவின் அப்பா இராமலிங்கம் தன் மனைவியிடம் " எனக்குச் சரியா வராது. இதெல்லாம் உன் டிபார்ட்மெண்ட். கொஞ்சம் எழுந்து காப்பி மட்டும் போட்டுக் கொடுத்துட்டு வந்து படுத்துண்டுடு அகிலா! ப்ளீஸ்! எழுந்திரும்மா!" என்கிறார்.  

இராமலிங்கமும் அவரது மகன் கோபுவுமேதான் அடுத்த கதையான ' ஓ… குழந்தைக்காக ' யில் ஆண் குழந்தை வேண்டி கட்டிய மனைவியை வெறுக்கும் சுபாவம் உள்ள சுகுமாராக பரிமாணம் அடைகிறார்கள்.  

ஆண் பெண்களுக்கு இடையிலான பாலியல் தேவை என்பதே குழந்தைபேறு என்பதற்காகத்தான் என்கிற சிந்தனையையும் பாலியல் உறவற்ற ஆண் பெண் நட்பு என்பதே சகோதர உறவாகத்தான் அமைய வேண்டும் என்கிற எல்லை தாண்டி யோசிக்கிறது இந்நாவல். இக்கருத்தை உள்ளடங்கிய தொனியில் பேசுவதாக நமக்குத் தோன்றினாலும் இக்கதை வெளியான காலத்தைக் கொண்டு யோசிக்கையில் சூடாமணி அவர்களின் முதிர்ச்சியும், சரியானதை அப்படியே ஏற்கும் துணிச்சலும் நன்கு புலப்படும்.

சூடாமணியின் மனிதர்கள் பெரும்பாலும் உயர்சமூகத்தை சேர்ந்தவர்களாக அமைகின்றனர். காலம் கிழித்த கோட்டிற்குள் அடங்கி வாழும் காவேரி, அகிலா போன்றவர்களும் வாழும் காலத்தில் எதிர்படும் இன்னல்களுக்கு பெண்களுக்கே உரிய மென்குரலில் ஆனால் அழுத்தமாக பதில்களை அளிக்க முற்படும் மாலதி, பூமா, அனுபமா, காமினி, மாதங்கி என பெண்களின் எண்ணற்ற பக்கங்கள் காணக் கிடைக்கின்றன. சமூகம் நிஜத்தில் காண வேண்டியவர்களாக பல தம்பதியர்களை இந்நாவல்களில் படைத்தளிக்கிறார் சூடாமணி. 

பயிற்சி வகுப்பு பெண் ஆசிரியர்களுடான உரையாடல் இப்போது நடக்குமானால் நான் அவர்கள் கையில் இந்த புத்தகத்தை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருப்பேன். இந்த புத்தகமே அத்தனையையும் பேசிவிடும் அவர்களிடம்.

நன்றி. sambath kumar.Avinasi
---------------------------------------------------------------------------------------------------------------------------------


ஆர்.சூடாமணி: பெண் உடம்பின் 
                         புதிர்களைப்பேசியவர்.
'''
உண்மை என்பது இருக்கிறதே அது பல முகங்களை உடையது. ஒரே மனிதரைப்
பற்றித்தான் பேசுகிறோம் என்றாலும்அவர் பல முகங்களை உடையவராக, யாருக்கும் வேறுவேறு முகங்களைக் காட்டக்கூடியவராக இருக்கக்கூடும்.இது உண்மை என்ற தத்துவத்தின் குறையே தவிரஆட்களின் குறையன்று.ஒரு  ஜீவிய சரித்திரத்தை எழுதுவது சில அசௌகரியங்களை ஏற்படுத்திவிடும்.இதனால் உண்மையை விவரிக்கமுடியாமல்போய்விடும்.
எனவே இதைத்தவிர்ப்பதில் தமிழர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.ஆர்.சூடாமணியின் ஜீவியசரித்திரத்தை எழுதினால் தமிழ்ச்சூழலில் அபரிமிதமான சங்கடங்களை ஏற்படுத்திவிடக்கூடும்.குற்றஉணர்வும் எழலாம்.

பெண் என்றுமே இந்தியமரபில்அடிமைதான்.பெண்களுக்குச்   சுயசரிதை இல்லை.பெண்களின் சுயசரிதை எப்போதும்ஆண்களின் கீர்த்திகளையே பேசும்.அது ஆண்களுக்கான முகத்தைத் தருவது.ஆர் சூடாமணி யின் கதைகள் எல்லாமே அவருடைய சுயசரிதைகள்தாம்.  கலையின்
பணி உலகத்தைவிமரிசிப்பதுமட்டுமல்ல.உலகை விவரிப்பது. சூடாமணியின் கதைகள் விவரிப்புகள்அடங்கியவை.திருமணம் என்பதே இல்லாமல்போகும் நாளில்தான் ஆண்-பெண் இருவரின் வாழ்க்கையும் தூய்மையாக மாறும்.திருமணம் என்பதே  மாறிவரும் வாழ்க்கைக்கு எதிரானதுதான்.

சென்னையில் பிறந்து தனது முக்கால் நூற்றாண்டு வாழ்வை முடித்துக் கொண்டவர்.பெரியம்மை வந்து வளர்ச்சிகுன்றி நான்கு சுவர்களுக்குள் வாழும்படியாகிவிட்டது.  தனிமைச்சிறையில் இருந்து கொண்டே நான்கு சுவர்களையும் ஊடுருவி எல்லையற்ற பெரு வெளியில் வாழ்க்கையைச் செலுத்த முடிந்தது.திருமணவாழ்வு இல்லை.  என்றாலும் திருமண
உறவைத் துல்லியமாகப் பதிவு செய்தார்.574 கதைகள்,உள்ளக்கடல்,மனதுக்கினியவள் என்ற இருநாவல்கள் இருவர்கண்டனர் என்ற நாடகம் இவை அவரது படைப்புகள்.

அவர் உரத்த குரலில் உலகத்தை விமரிசனம் செய்யவில்லை.நடுத்தர வர்க்கத்துத் தமிழ்க் குடும்பங்களின் சிதைவை,மரபுகளின் விடைபெறுதலை வரவேற்கும் மனோவியலாளரின் பார்வை.  தமிழ்ப்பெண்களால் திடீரென்று உரத்த குரல் எழுப்பமுடியாது. அதற்குப் பலபடி நிலை
கள் தாண்டிவரவேண்டும்.இந்தியமரபு  கெட்டித் தன்மை வாய்ந்தது.விடுதலை எண்ணம் அரும்புவதற்கு முன்பே சிதைத் துப் போட்டுவிடும்.நமது இதிகாசங்களில் காட்டப்படும் பெண்கள் எல்லோருமேஉயர்குடிப்பெண்கள்தாம்.தடித்த சொற் களால் அறமின்மையைச் சாடியதாகச்
செய்திகள் இல்லை.திருதராக்ஷ்டிரனால் பார்க்கமுடியாது என்பதற்காக அவனது
மனைவி கண்களைக் கட்டிக்கொண்டு இருட்டில் வாழ்கிறாள். சீதை எந்தக் கேள்விகளுமில்லாமல் தீயுள் பிரவேசிக்கிறாள்.   பெண்கள்  முப்பது வயதிலேயே முதுமையடையும் மனோபாவத்திற்கு  வந்துவிடுகிறார்கள்.சூடாமணி தன் கதைகள்வழி கேள்வி எழுப்புகிறார்.இன்றுகூட எழுதத் தயங்குகிற கதைகள்தாம்.

குறிப்பாக "நான்காம் ஆசிரமம்"கனவுகள் உடலின் புதிர்கள்,அறிவுத்தேடலை முன்
நிறுத்தும் மூன்றாம் பருவம். இப்படி மூன் றாம் பருவத்தில் சிக்கிக் கொள்ளாமலே
தன்னை உணர்தல் தனிமை தேடிப் புறப்படுவதாகவே உள்ளது.ஒரு பெண் எப்படி
படைக்கப்படவேண்டும் என்ற மரபைக் கட்டுடைக்கிறார்.இவர்காட்டும் பாத்திரங்களின் விடுதலை என்பது துறவை நோக்கி ஓடுவதன்று.வாழ்வைக் கொண்டாடுவது.வெளியே செல்லவிருக்கும் பெண்மனம்,வாழ்வைக் கொண்டாடும் பெண்மனம் இருநிலைகளில் நான்காம்
ஆசிரமம் கதையின் நாயகி வடிவம் பெறுகிறாள்.உணர்வு நிறைவு,உடல்நிறைவு இவற்றோடு பெண்ணிற்கு அடிப்படைச் சுதந்திரம் தேவைதான்.சூடாமணியின்இயல்பான சொற்களே வீரியம் கொள்ளவும் வசீகரமாக இருப்பதற்கும் காரணம்.

"ஒருவர் சராசரிக்கு மேல் இருந்துவிட்டால் அந்தரங்கங்களை வச்சுக்கற உரிமை பறி
போய்விடுமோ.அவளுடைய விருப்பு வெறுப்பு தனிச் சொத்தாகிவிடுமோ.சிறப்புக்குத் தண்டனையா.சாதாரணத்தை அசாதாரணம் இப்படித்தான் பழிவாங்குமோ" என்று கேள்விகேட்டார்.வீடுகளுக்குள்ளும் தெருக்களுக்குள்ளும் நடந்த ஆத்மார்த்தமான உரையாடலே சூடாமணியின் கதைகள்.ஆண்கள் மத்தியில்தானே வாழ்கிறோம்.ஆண்கள் இறுதித்தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளாக இருக்கிகார்கள்" என்பார்.வாழ்வின் பிரதானகேள்விகளையும் சிக்கல்களையும் லூயிபோர்ஹே ஒரு குண்டூசி தலையில் உட்கார்த்தி வைக்க முடியும் என்றார்.சூடாமணியோ வாழ்க்கையில் எல்லாவற்றையும்விடப் பெரிய நல்லது,மனுஷியாக ஒருத் தர்கிட்ட காட்டக்கூடிய அன்பும் பாசமும்தான் என்று உறுதிசெய்து ஊசிமுனையிலேயே உட்கார்த்தி வைத்து விடுகிறார்.

ஆர்.சூடாமணி வாழ்வை நேசித்தார்.தனக்கு எதுவுமே கிட்டாவிட்டாலும்கூட நேசி
க்கவே செய்தார்.அதுவும் அபரிமிதமாக.


நா.விச்வநாதன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமரர் ஆர். சூடாமணி அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள் இன்று.ஜன. 10

 

1932 இல் துவங்கப்பட்ட கலைமகள்இதழ், தமிழின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வளர்ச்சிக்குப் பல நிலைகளிலும் பங்களித்திருப்பதை தமிழ் இலக்கிய வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். அதில் மிக முக்கியமான ஒரு தளம்,, பெண் எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப் படுத்தி ஊக்குவித்தமை ஆகும்.

பி ஆர் ராஜம்மா, குகப்பிரியை, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், அம்பை இந்துமதி, வாசந்தி, கமலா சடகோபன் என்ற இந்த நீண்ட வரிசையில் ஒரு மகுடமாக விளங்குபவர் இன்று தொண்ணூறாவது பிறந்த நாள் கண்டிருக்க வேண்டிய சூடாமணி ராகவன். (ஜனவரி 10, 1931 - செப்டம்பர் 13, 2010).

 தமிழில் எழுதும் போது ஆர். சூடாமணி என்றும் ஆங்கிலத்தில் சூடாமணி ராகவன் என்றும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டவர்.

 இவர் பலமுறை இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதப் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

 எழுத்தாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான திலகவதி, குமுதம் இதழில் எழுதிய அஞ்சலியில் குறிப்பிடுகிறார்:

ஆர். சூடாமணி அமைதியானவர். அவரது அப்பா ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர். இவரது வீடும் பிரிட்டீஷ் காலத்தில் உறைந்துவிட்ட வீடு மாதிரி இருக்கும். வீட்டில் ஒவ்வொரு பகுதியும் அவ்வளவு சுத்தமாக இருக்கும். அந்தக் காலத்து மர அலமாரிகள். அதில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள். சமீப காலங்களில் வந்த ஒரு புத்தகத்தைக்கூட அதில் பார்க்க முடியாது. அவர் வைத்திருந்த கார் கூட அந்தக் காலத்து மாடல்.

அவரது இயல்புகளில் மறக்கமுடியாதது, பார்வையற்றவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி தான் படித்த நல்ல புத்தகங்களை அவர்களுக்கும் படித்துக் காட்டுவார்.

1931 இல் சென்னையில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர் சூடாமணி. சூடாமணி இளம் வயதிலேயே பெரியம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றினார்.

சூடாமணி திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தம் உலகை அமைத்துக்கொண்டவர். ஏராளமாக வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். 

இவரது தாயார் பெயர் கனகவல்லி.

இவருக்கு சகோதரிகள் இருவர் மற்றும் ஒரு சகோதரர்.

பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி ஆவார். இன்னொரு சகோதரி பத்மாசனி சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர்கள் முன்னரே காலமாகிவிட்டனர்.

பாட்டி ரங்கநாயகி அம்மாளும் சிறந்த எழுத்தாளர்.

பெண் உளவியலை மட்டுமன்றி மனிதப்பொது உளவியலையே நுட்பமாக உள் வாங்கி உருவானவை அவரது பல ஆக்கங்கள்.

வெகு ஜன இதழ்களிலேயே இவரது பெரும்பாலான படைப்புக்கள் வெளிவந்தபோதும் - எந்தச் சூழலிலும் தனது எழுத்தை மலினப்படுத்திவிடாமல் கடுமையான தரக் கட்டுப்பாட்டைப் பேணி வந்தவர் சூடாமணி.

இவர் சிறந்த முறைப்படி பயின்ற ஒரு ஓவியரும் கூட. வெகுகாலம் வெளியுலகுக்கு வராத இவரது ஓவியங்கள் 2011 ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஆர்ட் சென்டரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

இவரது வீடு விற்று வந்த தொகை, 2011 ஆம் ஆண்டு ஒரு கோடியே ஐம்பது லட்சமும், 2012 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாயும் ஆக ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், ஸ்ரீராமகிருஷ்ண மடம் இலவச மருந்தகம்,வாலன்டரி ஹெல்த் சர்வீசஸ், தரமணி ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நன்றி Kannan Krishnan

 ----------------------------------------------------------------------------------------------

ஆர். சூடாமணி

1931 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். காவேரிஎன்னும் இவரது முதலாவது சிறுகதை 1957 இல் வெளியாயிற்று. சுதேசமித்திரன், கலைமகள், கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இவருடைய கதைகள் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்றன. ஒளியின் முன்என்ற இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 1959 இல் வெளியானது. சிறுகதை, நாவல், நாடகம் என படைப்புத் துறையின் சகல தளங்களிலும் தனது முத்திரையைப் பதித்த சூடாமணி, ஆங்கிலத்தில் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆக்கங்களைச் செய்திருக்கிறார். மத்தியதர வாழ்க்கையையும் அதன் மாந்தர்களையும், பெண்களது பிரச்சனைகளையும் மிகச்சிறப்பாகத் தனது படைப்புகளில் கையாண்டிருக்கும் இவர், சிறந்த உளவியல் எழுத்தாளர் என்று போற்றப்பட்டவர். தரமான சிறுகதைகளைத் தமிழில் தந்தவர். இலக்கியச் சிந்தனை விருது உட்படப் பல்வேறு விருதுகளையும், பதிப்பாளர் சங்கத்தின் சிறப்பு விருதினையும் பெற்றவர். பிரபல எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி இவரது சகோதரி. மொழிபெயர்ப்பாளர் பத்மாசனி மற்றொரு சகோதரி. பாட்டி ரங்கநாயகி அம்மாள் அக்காலத்து எழுத்தாளர்களுள் ஒருவர்.

இன்று (ஜன. 10) ஆர். சூடாமணி அவர்களின் பிறந்தநாள்.

எழுத்தாளர்: ஆர். சூடாமணி

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1361

#ஆர்_சூடாமணி #எழுத்தாளர் #தென்றல் #தமிழ்ஆன்லைன் #TamilOnline

 -----------------------------------------------------------------------------------------------------

 

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....