Saturday, June 15, 2019

ஜூலை 2019 திசையறியாப் புள்- ரமேஷ் கல்யாண்

ஜூலை 2019 வெளியீடு



"திசையறியாப் புள்"

ரமேஷ் கல்யாண்  (சிறுகதைகள்)
பக்கங்கள் 146   விலை 140/-



ISBN 978-81-940988-9-8
---------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு காலை வணக்கம்.

நான் சற்று மகிழ்வாக உணர்வதால் அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

எனது முதல் சிறுகதை தொகுப்பு 'திசையறியாப் புள்' சிறுவாணி வாசகர் மைய வெளியீடாக அதிகாரபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது என்பதே அந்த செய்தி. முன்பே பல இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பே இது என்றாலும் 'என்னமோ' நிறைவாக தோன்றுகிறது. 

காரணம் யோசித்துப்பார்த்தால் சிறுவாணி என்ற அமைப்பின் மூலமாக நான் வெளிப்பட்டிருப்பது என்று கருதுவேன்.  வணிக நோக்கமின்றி இலக்கியச்செயல்பாட்டின் மீது பிரியப்பட்டவர்களின் குவிகம் அது என்பதே அது. நான் எழுதியவற்றை பொருட்படுத்தி அதை தொகுப்பாக தரம் உயர்த்தியது இந்த குவிகத்தின் கைகள்தான். Siruvani Vasagarmaiyam Prakash GR Subashini Tirumalai - எனது மனதார்ந்த நன்றிக்குரியவர்கள். 

எனது இலக்கிய ஆர்வம் துரு ஏறிப்போகாமல் என்னை உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்த லாசரா கண்ணன் Saptharishi Lasara இந்த தொகுப்புக்கு முன்னுரை எழுதியதில் எனக்குண்டான பெருமையை, அவரோடு ரெகுலராக தொடர்பில் இருக்கும் நட்பின் சாதாரணத்தினால் குறைத்துவிட முடியாது. அந்த மனிதனுக்கு உடம்பு பூரா மனசு. அதை அவரை அறிந்தவர்கள் அறிவர்.

 தவிர என்னை தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் ஊக்குவித்த நண்பர்கள் பட்டியல் நீண்டது. எனது முன்னுரையில் நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறேன். அனைவருக்கும் இந்த சமயத்தை எனது நன்றியை தெரிவிக்க பயன்படுத்திக்கொள்கிறேன். 

அமுதசுரபி, தினமணி, கணையாழி, தளம், இருவாட்சி, நாடகவெளி  வார்த்தை  கீற்று, சொல்வனம், ஆம்னிபஸ் - நெய்வேலி புத்தக கண்காட்சி அமைப்பு, விந்தன் அறக்கட்டளை, காரைக்குடி புத்தக திருவிழா அமைப்பு , ராஜம் அறக்கட்டளை, எம்விவி-அவ்ராம்  அறக்கட்டளை, கோவை சரசு அறக்கட்டளை - என் நன்றிக்குரியன.

அட்டைப்பட ஓவியம் JeevaNanthan கைகளால் ! டேய் ரமேஷ் உனக்கு அதிஷ்டம்தாண்டா ...... 

இந்த தொகுப்பை வெளியிடும் இந்த நிமிடத்தில் எனது எழுத்தின் போதாமையை உணர்ந்தவண்ணமே இந்த பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் தொடுவிரும்பும் இலக்கியப்புள்ளி இந்த தொகுப்புக்கு மிக மேலே இருக்கிறது. ஆனால் அதை நோக்கிய பயணத்துக்கு இந்த தொகுப்பை ஒரு இனிய சமாதானமாகவே கொள்வேன்.

ஒரு ஞாயிறு காலையில் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது. " ரொம்ப யோசிக்காதீங்க ..ஒரு தொகுப்பு கொண்டுவந்தால்தான் அது அதை விட நல்ல தொகுப்பை உண்டாக்கும் நம்பிக்கையை  உண்டாகும்" என்று சொன்னார் பா வெங்கடேசன். 
அது நிஜம்தான் போலிருக்கிறது!

நன்றி நண்பர்களே !
ரமேஷ்  கல்யாண
-------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்த்துகள் இதை நீங்கள் முன்பே செய்திருந்தால் இந்நேரம் தங்களின் பல புத்தகங்கள் வெளிவந்திருக்கும்...(எண்ணிக்கை மட்டுமல்லாமல் தரமான சிறுகதைகளும் தமிழ் கூறு நல்லுலகைச் சென்றடைந்திருக்கும்). இருப்பினும், மோதிரக் கையால் `குட்டு/ஆசிர்வாதம்’ - சிறுவாணி, லாசாரா சப்தரிஷி, ஓவியர் ஜீவா - வாங்கியிருக்கிறீர்கள்... அடுத்த தொகுதி கொண்டுவர தயாராகவும்.

வெளிமாநிலத்தான் என்பதால் இன்னும் என் கைக்கு சிறுவாணி வெளியிட்டிருக்கும் ஜூன், ஜூலை புத்தகங்கள் வரவில்லை...வந்தவுடன் படித்துவிட்டு, கருத்தைப் பதிவிடுகிறேன்... பயணம் தொடரட்டும்... பாராட்டுக்கள்!!
Sidharthan sundaram
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அண்மையில் சிறுவாணி வாசகர் மையம் அனுப்பிய ரமேஷ்  கல்யாணின்"திசையறியாப் புள்"தொகுப்பின் முதல் கதை ஒரு முத்தான கதை.இதுவரை யாரும் தொடாத தளம். கிளிஜோசியக்காரரின் கூண்டில் உள்ள கிளிதான்கதையைச்சொல்கிறது. அது அடைபட்டிருக்கும் சதுர இடத்தை அருமையாக வர்ணிக்கிறது. "சதுரத்தின் மூலைகளில் திரும்பும் போதெல்லாம் என் வால் இடித்துக் கொள்வது எனக்கு மிகக் குடைச்சலாக இருக்கிறது"என் யதார்த்தமாக க் கூறுகிறது. .

உரிமையாளர் சாமிக்கண்ணுவின் மகன் ரங்காவை அதற்கு மிகவும் பிடிக்கும்.அவன் அதற்கு அவ்வப்போது மா,கொய்யா,இலந்தை போடுவான். எல்லார்க்கும் எப்படியும் உதவும் பரோபகாரி அவன்.
ஒருநாள் ஒரு வெடிவிபத்து நேர்ந்தது.அதிலிருந்து இரண்டு பசங்களைக் காப்பாற்றி ஒரு கிழவியைக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இறந்து போகிறான். உரிமையாளர் மனம் வெறுத்த நிலைக்கு ஆளாகி விடுகிறார். 

எல்லார் எதிர்காலத்தின் மீதும் பூச்சொரியும் முதலாளி என்ன பாவம் செய்தார்எனக் கிளியும் வருந்துகிறது. கடைசியில் உரிமையாளர் கூண்டைத் திறந்து விடுகிறார்.'எனக்கு எஜமானரையும் ரங்காவையும் தவிர யாரையும் தெரியாது.பறக்கவும்முடியவில்லை.தெரியவில்லை.அர்த்தமெதுவமற்று செய்வதறியாது"க்கீ,க்கீ"என்று கத்திக்கொண்டிருக்கிறேன் நான்"என்று கிளி கூறுவதுடன் கதை முடிகிறது.

விடுதலை கிடைத்தும் அனுபவிக்க முடியாத மனநிலையில் வாடும் கிளி நம் மனத்தைக் கனக்க வைக்கிறது.
Valava duraiyan
-------------------------------------------------------------------------------------------------------------
இதை விட அதிகம் நெகிழ வைக்கும் கதை `ந்யூரான் கொலைகள்’.. ஒரு கதையை மிஞ்சி அடுத்த கதை... அருமையான சிறுகதைகள் தொகுப்பு... சிறுவாணிக்கும், ரமேஷுக்கும் பாராட்டுக்கள்... ரமேஷின் அடுத்த தொகுப்பு எப்போது...?!
Sidharthan sundaram
--------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையம் அனுப்பி உள்ள ரமேஷ் கல்யாணின் திசையறியாப் புள் தொகுப்பின் இரண்டாம் சிறுகதை 'போன்சாய் மனங்கள். போன்சாய் என்பது தன் விருப்பப்படி வளரவிடாமல் தடுக்கும் முறையாகும்.கதையில் மோகன் மற்றும் மாலினி ஆகியோர் கணவன் மனைவியாக வலம் வருகின்றனர்.மாலினியை தூரத்துச் சொந்தமென்று மனைவியாக்கியபோது சொந்தங்களே தூரமானது என்ற வரி பல பக்கங்கள் எழுதச் சமமானது.

மாலினிக்கும் மாமனார் மாமியாருக்கும் விழும் இடைவெளியை நிரப்ப மோகனால் முடியவில்லை.மோகன் அவன் கனவுகளை,ஏக்கங்களை,ஆசைகளைவெட்டிப் பிரச்சனைகளைத்தள்ளிப்போட போன்சாயாகிறான்ஆறேழு மாதம் வெளிநாடு சென்று திரும்பும் மோகனுக்குப் பெற்றோர் காணாமல் போயிருப்பது தெரியவருகிறது.இந்த இடத்திலும் மோகன் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் லேசாக அதை எடுத்துக்கொள்வது அவனை முழுபோன்சாயாகக் காட்டுகிறது. 

கணவன் மனைவி இருவரும் பணிக்குப் போவதால் வீட்டில் சமையல் வேலைக்கு ஒரு பெண்மணியை வரச்சொல்கிறார்கள்.அவர் வரும்போது இருவரும் வீட்டில் இல்லை.வந்த பெண்மணி அந்த ஒரு நாள் மட்டும் சமைத்து வைத்துவிட்டு மறுநாளிலிருந்து வரமாட்டேன் என்று சொல்லி விட்டு ப் போய்விடுகிறார்.வந்த பெண்மணி,"பொங்கல் சாப்பிடும்போது எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டா நல்லாயிருக்கும்"னு சொன்னாங்க என்று வேலைக்காரி கூறும் போது"வந்தது அம்மாவோ"என்று நினைத்து மோகன் உடனே பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டு விசும்பும் சத்தம் வெளியே கேட்காதபடி குலுங்கிக் குலுங்கி அழுதான் என்று கதை முடிகிறது. 

வெளியே தெரியும்படிஅழககூட முடியாத அந்த போன்சாய் இல்லறத்தில் சச்சரவு வேண்டாம் எனத் தன்னையே  வெட்டிக்கொள்வது பரிதாபமாக இருந்தது.

Valava duraiyan
------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையம் அனுப்பியுள்ள "திசையறியாப்புள்"
தொகுப்பின் மூன்றாவது கதை
"விருந்தினர்கள்".இது இக்காலத்தில் நிகழும் நாகரிக,பண்பாட்டு மாற்றங்களைச் சுட்டிக்காட்டிக்கேள்வி கேட்கிறது.தலைமுறை இடைவெளியும் இககதையில் லேசாக மறைமுகமாகச் சொல்லப் படுகிறது.

ஒருநாள் தன் வீட்டிற்குத் தன் நண்பர்களான இரு பெண்களையும் ஒரு இளைஞரையும் குணசேகர் அழைத்து வருகிறான்.இரண்டு பெண்களில் ஒருத்தி கணவனின் தம்பியோடு தொடர்பு வைத்திருப்பவள்.மற்றொருத்தி கணவனிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு வாங்க உதவி செய்த வக்கீலுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள்.இளஞனோ அண்ணனுக்குத் தவறான உறவில் பிறந்த குழந்தைக்கு உதவுபவன்.

 விருந்தினர் போனபின் குணா இச்செய்திகளை வீட்டில் சொல்ல,"ஃப்ரண்ட்ஸ் அப்படீன்னு இதுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வரே. அவங்க டிரஸ்ஸும் அவர்களும்"என்று அத்தை பொரிந்து தள்ளுகிறார். குணா பதிலுக்கு "நான் இன்னிக்கு ஒரு நாள்தான் அழைச்சிட்டு வந்தேன்.ஆனா இந்த மாதிரி ஆளுங்களை தினமும் நீங்க அழைச்சிட்டு வர்றீங்க"என்று தொலைக்காட்சி ரிமோட்டைத் தொலைக்காட்சித்தொடரைக்  காட்டுகிறான்.

வீட்டின் உள்ளே வந்து எல்லா அந்தரங்கங்களையும் அலசும் நிகழ்ச்சிகளுக்கும் அவற்றைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இக்கதை கன்னத்தில் அறைவது போல இருக்கிறது.கடைசியில் தன் நண்பர்களான அவர்கள் நல்லவர்கள். "நான் சொன்னதுல துளியும் நிஜமில்லை"என்கிறான் குணா. 

சிறிது தவறினாலும் பிரச்சாரம் ஆகக்கூடிய கதையை ரமேஷ் கல்யாண் வாசிக்கக் களைப்பின்றி நேர்த்தியாகக் கொண்டு சென்றுள்ளார்.
Valava duraiyan
----------------------------------------------------------------------------
ரமேஷ் கல்யாணின் திசை அறியாப் புள் படித்தேன்.
அது பற்றி.

எல்லா கதைகளும் அருமை.
சிக்கல் இல்லாத எளிய இனிய அதே சமயம் அடர்த்தியான நடை.
குறிப்பட்டுச் சொல்ல நிறைய இருக்கிறது.
பெருச்சாளி கதையின் குறியீடு உணர்ந்து மகிழ
வேண்டிய ஒன்று.

Muruganantham 
------------------------------------------------------------------------------------------------------------------
படித்தது பிடித்தது

சாதாரண மனிதர்கள், அசாதாரண சூழல்களைக் கண்டு அஞ்சிப் போவதில்லை. அதனோடு முரண்டிக்கொண்டும் நிற்பதில்லை. அதனோடு நகர்ந்து கொண்டு ஏதோ ஒரு புள்ளியில் சமரசப் பட்டு பிறகொரு நாள் அதிலிருந்து ஒரு கொடியென முளைத்தெழுகிறார்கள்.

ரமேஷ் கல்யாண் -திசையறியாப்புள்
சிறுவாணி வாசகர் மையம்.
SR Viswanathan 
-------------------------------------------------------------------------------------------------------------------
திசையறியாப் புள்- ரமேஷ் கல்யாண்
சிறுவாணி வெளியீடு

நாம் இதுவரை ஒருபோதும் படித்திராத அறிமுகமற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்கிற நினைப்பு இருந்தாலும் ,அதற்கான சந்தர்ப்பமோ ,உந்துதலோ  அவ்வளவு சீக்கிரம் வாய்க்காது .

 எழுதினவர் எங்கள் ஊர் மாப்பிள்ளை ( ஆம். எங்கூர் பாக்யலட்சுமி அக்காவை மணமுடித்தவர் .அப்போது அவர் பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர் என்று மட்டுமே தெரியும்). என்கிற தகவல் தெரிந்தவுடன் படித்தே ஆக வேண்டுமென்கிற ஆர்வம் அதிகமானது.

இத்தொகுப்பிலிலுள்ள பதினேழு கதைகளில் ஏழு கதைகள் பரிசு பெற்றவை .மற்றவை பத்திரிக்கைகளில் பிரசுரமானவை.

எல்லாக்கதைகளில் வரும் சம்பவங்களும்( ஒன்றிரண்டைத் தவிர ) மத்திய தர குடும்பங்களில்  நடப்பவை ,நடந்தவை தான்.
பணம் சார்ந்த மதிப்பீடுகள் உறவின் அருமையை புறந்தள்ளி மனிதர்களை பேதம் பார்ப்பதால் ஏற்படும்  உளச்சிக்கல்கள் நேர்மையாக சொல்லப்பட்டிருக்கின்றன.
பெற்றோர் மற்றும் துணை இவர்களுக்கிடையே யாரை பரிந்து  பேசுவது என்றறியாமல்  சிக்குண்டு உள்ளக்கொதிப்போடு மௌனித்து வாழ்க்கையை ஓட்டும் மனிதனின் பார்வையில்
நடக்கும் சம்பவங்கள் துணுக்குற வைக்கின்றன.

வார்த்தைகளைத் தேடித்தேடி கதைக்குள் கொண்டு வந்து அமைப்பது ஒரு கலையெனில் ,
ஒரு சிறுகதை அதற்கான நடையை ,வார்த்தைகளை தானே வரவழைத்துக்கொள்வதைப் போலத்தான் இவரின் சிறுதைகள் இருக்கின்றன.
துடைத்து விட்டது போன்ற ' பளிச்' அழகுக்கு தேவைப்படாத அலங்காரங்கள் போலவே கதைகளின் களத்துக்கு வேறேதும் தேவைப்படவில்லை.

'கல்லுப்பிள்ளையார்' நம்மை
கரைக்கிறாரெனில்,போன் சாய் மனங்கள்,கால சர்ப்பம், நெனப்பு, ஒளியின் நிழல்,திசையறியாப் புள்,அபேதம்,காற்றின் விலகல்,ந்யூரான் கொலைகள்
சால மிகுத்து, நெனப்பு ,அபேதம் எல்லாம் வாசகனை சிந்தனையில் மூழ்கவைத்து பல கேள்விகளைக் கேட்கின்றன.

சுழன்று சுழன்று முட்டிக்கொள்கிற பிறழ்ந்த மனநிலையோ , எதையோ நினைத்து  எங்கேயோ பார்த்துக்கொண்டு நினைவுள் மூழ்குகிற நிமிடங்களில் நம் செயலின் நல்லது ,கெட்டதுகள்
பளீரென்று எதிரில் மின்னுகிற
விநாடிகளைப் புறக்கணித்து வேறொன்றும் செய்ய முடியாதிருக்கும் துன்பநிலை எல்லோர் வாழ்விலும் வருமெனும் உண்மையை சொல்லுகின்ற கதைகளால் உறைந்து போகலாம்.

தொல்லை தருகிற பெருச்சாளியை அடித்து இழுத்துக்கொண்டு போய் போடும்போதான மனநிலைக்கும், காரில் அடிபட்டு அது இறந்து போவதால் அதே  மனிதனுக்குள் ஏற்படுகிற பரிதாப உணர்ச்சிக்கும் இடையிலான வேறுபாடுகளை அழகாக  எழுத முடிந்திருக்கிறது.( வாதை)

நான் புழங்கிய ஊரான ' தேன் கனிக் கோட்டை ' பெயர்க்காரணத்தை அறிய வைத்த கல் நயனங்கள்.

பாலகுமாரனின் 'மரக்கால் 'தந்த ஒரு நேர்மறை உணர்வை வாழ்க்கைப்பாடத்தை ஒளியின் நிழல் கற்றுத்தருகிறது.
// சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல்களைக் கண்டு அஞ்சிப்போவதில்லை.அதனோடு முரண்டிக்கொண்டும் நிற்பதில்லை அதனோடே நகர்ந்துகொண்டு ஏதோ ஒரு புள்ளியில் சமரசப்பட்டு பிறகொருநாள் அதிலிருந்து ஒரு கொடியென முளைத்தெழுகிறார்கள் என்று அவருக்குத்தோன்றும்//

' போன்சாய் மனங்கள்' கதையில்,
// உறவுகள் மனித நாற்றுக்கள்.இடமாற்றிப் பொருத்திக்கொள்ளா விட்டால் செழித்து வளர்வது களைகளும் தான்.செழிப்பின் களையில் களைகள் தெரியா//வரிகள்

கிளியின் பார்வையில் சொல்லப்படுகிற ' விடுதலை'
 கதை தேர்ந்த சொற்களால் பின்னப்பட்டிருக்கிறது .உண்மையில் கிளிக்கு சிந்திக்கும் ஆற்றலிருந்திருந்தால் இப்படித்தான் நினைத்துக்கொள்ளும் .கூண்டிலிருந்து விடுதலை பெறுகிற
கிளி பறப்பதறியாது / செய்வதறியாது ' கீ ' ' கீ' எனக் கத்திக்கொண்டிருக்கிற
மாதிரி நம்மால் தேர்ந்த ஜோஸியராலும் கணிக்க முடியாத நம் வாழ்வின் திடுக்கிடும் சம்பவங்களை பார்த்து இப்படித்தான் இருக்கிறோம்.

கதைகளில் இவர் காட்டுகிற வித்தியாசமான ஆனால் சரியான உதாரணங்களில் ஒன்று // தற்போதைய வசதியான வாழ்க்கையானது பத்திகள் பிரிக்கப்படாதவொரு நீண்ட கட்டுரையைப் போல ஆயாசமளித்தது//
ஆம். அந்த வசதியை தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடுவதும் அப்படியான ஒன்றுதான்.

வாழ்த்துகள் ரமேஷ் கல்யாண்!
மிகச்சிறந்ததொரு வாசிப்பனுபவத்தை தந்தமைக்கு.

இப்புத்தகத்தை வெளியிட்ட சிறுவாணி க்கும் , அட்டைப்படத்தை வரைந்திருக்கும் ஜீவானந்தன் சாருக்கும், முன்னுரை எழுதியிருக்கும் சப்தரிஷி சாருக்கும் வாழ்த்துகள்.

Saraswathy Gayathri

வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்
---------------------------------------------------------------------------------------------------------
https://padhaakai.com/2020/07/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/



சிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ 

புள்ளில் தொடங்கி புள்ளில் முடியும் ஒரு சிறுகதைத்தொகுப்பு ரமேஷ் கல்யாண் அவர்களின் ”திசையறியாப் புள்” தொகுப்பு. ஊரில் ஓர் காணியில்லை; உறவு மற்றொருவரில்லை என்ற ஆழ்வாருக்கு பரமனின் பத்ம பாதமே தன் துணை என்ற தெளிவு இருந்தது. ஆனால், எத் திசையில் செல்வது என்ற எவ்விதத் திட்டமும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல், தன் சிறகுகளையும் இழந்த நிலையில் ஒரு பறவை என்ன செய்யும்? ரமேஷ் கல்யாணின் தொகுப்பில் முதலில் இடம் பெற்றிருக்கும் விடுதலை கதையில் வரும் சிறகுகள் வெட்டப்பட்ட (ஜோசியம் சொல்லும்) கிளியும், தொகுப்பின் கடைசிக் கதையில் வரும் சிறுமியும் அடுத்து என்ன செய்வது எனத் திசை தெரியாது தவிக்கும் திசையறியாப் புட்கள்தான். பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாய்த் திரிந்து கொண்டிருக்கும்போது அவை தங்கள் வாழ்வாதாரத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மனிதன் தனக்காக இழுத்து வந்து வைத்துக் கொண்டு, வேண்டும்போது பயன்படுத்திக் கொண்டு, வேண்டாமெனும்போது கை விட்டு விடும்போது, அவை தங்கள் பழைய வாழ்க்கையையும் வாழ முடியாமல், குறைப்பட்டுப்போன அவற்றுக்கு ஓர் ஆதரவையும் தேடிக் கொள்ள முடியாமல் செல்லும் திசை தெரியாமல் அபலை நிலையில் நிற்கின்றன.
மனிதன் ஒரு சமூக விலங்கு. ஒருவரை மற்றவர் சார்ந்த வாழ்க்கை வாழவே பழகியிருக்கிறான். சொந்தம், பந்தம், பாசம், அன்பு, அரவணைப்பு, ஆதரவு என்னும் சிறகுகளால் ஆன பறவையாயிருக்கிறான். இந்தச் சிறகுகள் வெட்டப்படும்போது அவனும் வாழ்க்கையில் திசை தெரியாமல்தான் தவிக்கிறான்.
முதல் கதையில் வரும் கிளியைத் தன் வயிற்றுப் பிழைப்புக்காக அழைத்து வந்த சோதிடன், பால் பழம் கொடுத்து வளர்க்கிறான். தன்னுடைய மகனைத் தான் இழக்கப் போகிறோம் என்பதைத் தன்னால் கணிக்க முடியாத வருத்தமோ, கிளி மீது ஆசையாக இருந்த தன் மகனே இறந்து விட்டான், இனிமேல் இந்தக் கிளி எதற்கு என்ற வெறுப்போ, தன் மகன் ஒரு தீ விபத்தில் மரணித்தவுடன், இந்தக் கிளியைக் கொண்டு போய் அத்துவானத்தில் விட்டு விட்டு வந்து விடுகிறான். தன் மகன் செய்து வந்த முறுக்கு வியாபாரத்தைத் தொடர விரும்புகிறான். கிளியின் மீது அவன் காட்டிய அன்பு எங்கே போனது? சோதிடத் தொழிலையே விட்டு விட்டால் கூட, அந்தக் கிளி அந்த வீட்டில் ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போகக் கூடாதா? என்ற கேள்விகள் வாசிப்பவர் மனதில் ஒரு பரிதாப உணர்ச்சியை உருவாக்குகிறது. அந்தக் கிளி திசையும் தெரியாமல், தான் செல்ல வேண்டிய இடமும் தெரியாமல், தவித்து நிற்கிறது.
தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசிக் கதையில் பள்ளிச் சிறுமி ஒருத்தி, பள்ளியில் ஒரு கல்வி உதவி பெறுவதற்காக நேர்காணல் செய்யப் படுகிறாள். அந்த உதவித் தொகை தாயில்லாப் பெண் குழந்தைகளுக்கே கிடைக்கும். இவள் தந்தையுடன் இருக்கிறாள். அவளது தாய், அவர்களுடன் இல்லாமல், வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டு விட்டாள். இந்தச் சிறுமியிடம் அவள் தந்தை, தாயை இழந்தவள் என்று சொல்லச் சொல்கிறான். ஆனால், அந்தச் சிறுமி, புரியாமால் தவித்து, தன் தாய் இருக்கிறாள் என்றே சொல்கிறாள். இந்தச் சிறுமிக்கு அந்த உதவி கிடைக்குமா கிடைக்காதா? என்பது பொருட்டல்ல. தாயன்புக்கு ஏங்கும் அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு தன் தாய் தங்களுடன் ஏன் இல்லாமல் போனாள் என்றோ, தன் தாய்க்கும், தந்தைக்கும் இடையேயான பிணக்கு பற்றியோ என எதுவுமே தெரியாத நிலையில், தாய் இருக்கிறாள் என்றே சொல்லத் தெரிகிறது.. அந்தப் பிஞ்சு மனது என்ன செய்வது என தவித்து நிற்கிறது. முதலில் அனாதரவாக விடப்பட்ட கிளியும், இந்தச் சிறுமியும் ஒரே மாதிரியான நிலைமையில் நம் முன் வந்து பரிதாபமாக நிற்கிறார்கள்.
காற்றின் விதைகள், ந்யூரான் கொலைகள் இரண்டு கதைகளும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையேயான அன்பு, பாசம், அனுசரணை எல்லாமான மெல்லிய சிறகுகள் பணம், பொருள், சொத்து, சுகம் இவற்றால் சிதைக்கப்படுகிறது.. இந்தக் கதைகளில், பிள்ளைகள்,வளர்ந்து முன்னேறி, தமக்கென ஒரு வாழ்க்கை கிடைத்த பிறகு, தம் பெற்றோர் தமக்காக பட்ட கஷ்டங்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கிய அத்துணை பேறுகளையும் மறந்து அவர்களிடமிருந்து தமக்கு வர வேண்டிய பொருள் சார்ந்த பயனையே எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதே போல. பெற்றோரின் எதிர்பார்ப்பு எப்படி பிள்ளைகளின் வாழ்க்கை சிதைய காரணமாகிறது என்பதை ”சாலமிகுத்து “ கதை பேசுகிறது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை என்றும், அதற்காக மட்டுமே பதற்றமாகவே இருக்க வேண்டியதில்லை என்றும், மதிப்பெண்கள் குறைந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்றெல்லாம் நம்பிக்கை கொடுக்க வேண்டிய பெற்றோரே, பிள்ளைகளை மதிப்பெண், மதிப்பெண் என்று ஓட விட்டு, மனச் சிதைவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும், மனிதன் வாழ்வில் உயர்வதற்குமே கல்வி என்பது மதிப்பெண்வயமான கல்வியாக மாறி, மகிழ்ச்சியாகக் கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் மனங்களின் ஆனந்தச் சிறகுகள் சிதைக்கப்பட்டு மதிப்பெண் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறது.
மனித குலத்தின் ஒரு பிரிவினர் காலங்காலமாக ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேலடுக்கைத் திறந்து விட்டால், அதற்கும் கீழே எத்தனை பேர் எத்தனையோ காலமாக ஒடுக்கப்பட்டு எழும்ப முடியாமல் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பது புரியும். இப்படி அடிமைப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கு ஒரு யானை பலம் தேவையாய்த்தானிருக்கிறது. ஒசூரை அடுத்த பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கல் சக்கரங்கள் காணப்படுவதை வைத்து புனைவாக தேரோட்டத் திருவிழா நடக்கும் கதை ஒரு விரிவினைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
. இப்படிக் குறிப்பிடும்படியாக பல கதைகள் இருப்பது மகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. அதோடு, பல கதைகளில் ஆசிரியர் கையாளும் உதாரணங்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை.
பிரமிடுகளின் படிக்கல் போல நிறைய அட்டைகள் ( விடுதலை )
வானிலிருந்து விழும் மழை மணிச்சரங்கள் ( அபேதம் )
சாமானியர்களின் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பட்டறிவுகளின்
தேய்வுக்கும், அற்புதங்களின் மீதான நம்பிக்கைக்கும் உள்ள இனங்காணவியலா இடைவெளி பெர்முடா முக்கோணம் போன்றதுதான். ( நெனப்பு )
பொசுங்கியபலாக்கொட்டைகள் போன்ற மங்கலான வறண்ட கண்கள் ( எரிகற்கள்)
ஒழுகும் மெழுகு போல கனத்த பேச்சற்ற மௌனம் ( எரிகற்கள்)
வாழைப்பழத்தை வெட்டும்போது கசியும் மௌனம் ( வுல்லன் பூக்கள் )
கல்லுப் பிள்ளையார் கதையில் மனிதம் என்பது மதம் கடந்தது என்பதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். கடைசி வரிகள் மட்டும் வலிந்து திணிக்கப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. மற்றப்படி, தொகுப்பிலுள்ள 17 கதைகளுமே நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. ரமேஷ் கல்யாண் அவர்கள் முதல் சிறுகதைத் தொகுப்பில் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதை அழகான முறையில் வெளிக் கொண்டு வந்திருக்கும் சிறுவாணி வாசகர் மையத்தார் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
( திசையறியாப் புள் – ஆசிரியர்: ரமேஷ் கல்யாண் – பவித்ரா பதிப்பகம் – வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோவை )
---------------------------------------------------------------------------------
 









         திரு.பரமாத்மா என்ற மூத்த வாசகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நான்கு

 பக்க கடிதத்தில் சிறுவாணி வெளியிட்ட என் திசையறியாப்புள் தொகுப்பின்
 வாசக அநுபவத்தை தெரிவித்துள்ளார். (சிறுவாணிக்கும்).கூடவே கோவில்
 பிரசாதமும் தன் வாழ்த்துக்களோடு அனுப்பி உள்ளார். கதைகளை விட்டு
 தள்ளுங்கள். வாசகரின் மனமும் செயலும் மரியாதைக்குரியன.  என்ன
 சொல்ல..! மகிழ்ச்சியும் நன்றியும்.....

------------------------------------------------------------------------------------------------------------------------------------




ஜூலை 12 அபிமானம் உள்ளவர்களுக்கு நன்றி.



பாலாம்பாள் மாமி அவர்களுக்கு நன்றி!

சிறுவாணி வாசகர் மையத்தை  வளர்க்க ப்ரகாஷூம் சுபாஷிணி திருமலை மேடமும் எவ்வளவு பாடுபடுகிறார்கள்  என்று எனக்குத் தெரியும்.. அதற்கு  ஆலோசனைகளில். .நாஞ்சில் சாரும்.. வ.ஸ்ரீநிவாசன் சாரும்  ஓவியப் பங்களிப்பில் ஜீவா சாரும் எவ்வளவு உறுதுணையாக இருக்கிறார்கள்..என்பதும் நீங்கள் அறிவீர்கள்..

 இருந்தாலும் 1000 உறுப்பினர்கள் சேரும்வரை அது சவலைக் குழந்தைதான்... அதனால் அவ்வப்போது யாராவது அதை எடுத்துக் கொஞ்சிவிட்டு.. கொஞ்சம் ஊட்டமூட்டிவிட்டுப்போகிறார்கள்..
இதுவரை சிறுவாணியில் நடந்துகொண்டிருப்பதை ப்ரகாஷ் விரும்பாவிட்டாலும் பகிர விரும்புகிறேன்.

சிலபேர் சில புத்தகங்களை அவர்கள்செலவில் வாங்கி சிறுவாணிக்கு அன்பளிக்கிறார்கள்... 
அப்புத்தகங்களை  விரும்புவர்களின்..முன்னுரிமை அடிப்படையில்..அவர்களுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.
அந்தமாதிரி அன்பளிக்கப்பட்ட புத்தகங்கள்

1 யாதுமாகிநின்றாய்.....(திரு.ஆர்.ரவீந்திரன்  அன்பளிப்பு) .
2 நாமார்க்கும்குடியல்லோம்     (பாரதிபாசறை திரு.S.வேங்கடசுப்ரமணியம் அன்பளிப்பு)

3.ஹரஹர சங்கர..ஜெயகாந்தன்... (திரு.கவிதா சொக்கலிங்கம் அன்பளிப்பு.)
4. அஃகம் சுருக்கேல்.. நாஞ்சில்சார்....(திருமதி பாலாம்பாள்  அன்பளிப்பு).

சரி.. எனக்கும் ஒருஆசை ... அம்மாவின் பிறந்த... நாளைக்கு..நாமும் செய்வோம்.. என்று ஆசைப்பட்டு ப்ரகாஷ் சாரை அனுப்பி விஜயா பதிப்பகத்தில் அண்ணாச்சியைப் பார்த்து...புத்தகங்கள் வாங்கி வரச்செய்ய இருப்பதை எப்படியோ அறிந்து கொண்ட பாலாம்பாள் அம்மாள் எனக்கு உடனடியாக ஃபோன் செய்து.... 
" கண்ணன்... வாழ்கவளமுடன்.. கேள்விப்பட்டேன்...நீங்கள் வாங்கச்சொன்ன புத்தகங்களுக்கு ப்ரகாஷுடம் செக் கொடுத்துவிடுகிறேன்.. நீங்கள் என்னசொன்னாலும் கேட்கமாட்டேன்... நீங்க என்ன பண்றீங்க...நாளைக்குக் காலைல அம்மாவிடம் என் நம்பருக்கு ஃபோன் பண்ணிக்கொடுத்து ஆசிர்வாதத்தை வாங்கித்தரணும் அது மட்டும்தான் உங்கவேலை" என்று படபடத்துவிட்டு பதிலை எதிர்பார்க்காமல்... 'டொக்'.

என்னசெய்ய?...
எழுத்தின் மேலும் எழுத்தாளர்மேலும் இப்படியெல்லாம் முன் வந்து அபிமானம் உள்ளவர்களுக்கு என்னால் என்ன செய்து விடமுடியும் அவர்களை நமஸ்கரிப்பதைவிட!
நமஸ்காரம் பாலாம்பாள் மாமி!
Sabtharishi lasara fb
--------------------------------------------------------------------------------------------------------------------------



    வரும் ஜூன் 12ஆம் தேதி லா.ச.ரா  அவர்களின் மனைவியார் திருமதி.ஹைமவதி அவர்களின் 93 வது பிறந்தநாள். 
அதனை முன்னிட்டு நமது சிறுவாணி வாசகர் மைய மூத்த உறுப்பினரும் , தீவிர வாசகருமான திருமதி. பாலாம்பாள் அவர்கள்,

- ஹைமவதி அவர்கள் எழுதிய
"திருமதி லா.ச.ரா. வின் நினைவுக்குறிப்புகள்" நூலை நமது வாசகர்கள் 25 பேருக்கு அன்பளிப்பாக அளிக்க முன்வந்துள்ளார்கள்.

 இந்தக் குழுவில் முதலில் விருப்பம் தெரிவிக்கும் 25  உறுப்பினர்களுக்கு மட்டும் மேற்கண்ட நூல்  திருமதி பாலாம்பாள் அவர்களின்  சார்பில் அனுப்பி வைக்கப்படும்.

ஆகவே விருப்பமுள்ளவர்கள் நமது குழுவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருமதி.பாலாம்பாள், திரு.நாஞ்சில்நாடன் பிறந்தநாளில்
"அஃகம்சுருக்கேல்" நூலை இதேபோல வழங்கினார்.அவருக்கு நமது உறுப்பினர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி.
---------------------------------------------------------------------------------------------------------
11.05.2019
ஒரு சிறு சந்தேகம். 

உறுப்பினர்களுக்கு மாதம் 2 புத்தகங்கள் அனுப்பி வைக்கிறீர்கள். அந்த 2 நூல்களுமே அந்தக் குறிப்பிட்ட உறுப்பினரின் வாசக ரசனைக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். 

(நான் படைப்பின் தரத்தை இங்கே குறிப்பிடவில்லை; மிகத் தரமான படைப்பு, மிக அழகாக எழுதப்பட்ட படைப்பு கூட, அந்தக் குறிப்பிட்ட வாசகரின் ரசனைக்கு - அல்லது அவர் ஏற்றுக்கொண்ட சமூக, அரசியல், மதக் கோட்பாடுகளுக்கு - முரணாதாக இருக்கலாம்)

அப்படி இருப்பின் அந்த உறுப்பினர், மிகவும் கண்ணியமாக, அதே நேரம் உறுதியாக, அந்த நூல்களை 'சிறுவாணி' யிடமே திரும்ப ஒப்படைக்கலாமா? அவ்வாறு - ஒரு சில எழுத்தாளர்களின் படைப்புகளை ஏறெடுத்தும் நான் பார்ப்பதில்லை - என்ற வகையில், தபாலைப் பிரித்தவுடன் மறு தபாலில் - புத்தகத்தை எந்த வகையிலும் பயன்படுத்தாமல் (பெயர் எழுதுதல்/ அடிக் கோடிடுதல் etc) புதுக் கருக்கழியாமல் திருப்பி அனுப்பினால் 'சிறுவாணி' ஏற்றுக் கொள்ளுமா? 

நான் மிகவும் ஜனநாயக பூர்வமாகவே இதைக் கேட்கிறேன். 

ஏனெனில் நான் மிகவும் வெறுத்து ஒதுக்குகிற அல்லது 'ஏற்புடைமை' கொள்ளாத ஒரு படைப்பாளி.... 

வேறு இன்னொருவருக்கு மிகவும் 'ஏற்புடையவராக' அல்லது அவர் மிக விரும்பிப் படிக்கும் படைப்பாளியாக இருக்கக் கூடும். 

எனவே என்னிடம் அந்தப் புத்தகம் படிக்கப் படாமல் - நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் சிலரது எழுத்துக்களைப் படிக்க மாட்டேன் - எனது அலமாரியில் அந்த நூல் உறங்குவதை விட... 

அதை மிக விரும்பும் ரசனை கொண்ட வேறு யாருக்கோ பயன்படுமே? 

மேலும் நான் ஆண்டுக் கட்டணம் செலுத்திவிட்டேன் என்பதாலேயே எனக்கு ஒவ்வாத எழுத்தாளர் என் மீது ஏன் திணிக்கப்பட வேண்டும்? 

ஜெயகாந்தன் சொன்னது போல "இறந்தவர் எவ்வளவு பிரபலமானவர் ஆனாலும் என் வீட்டில் புகுந்து அழ ரேடியோவுக்கு என்ன உரிமை?" 

அவர் பிரபலமான, உண்மையிலேயே திறமையான, அற்புதமான எழுத்தாளுமை கொண்டவராகவே இருக்கலாம். 

எனினும் எனக்கு அவரது கொள்கைகளின்பால் 'ஏற்புடைமை' இல்லை என்னும் போது, எதற்காக அவரது புத்தகத்தை என் வீட்டு அலமாரியில் அனுமதிக்க வேண்டும்? 

எனவே அப்படி ஒரு வேளை, ஒரு குறிப்பிட்ட நூலை நான் திருப்பி அனுப்பினால், அது 'அநாகரிகம்' என்று கருதப்படாமல்... 

'எனது ரசனை சார்ந்த உரிமை'- என்று பார்க்கப்படுமா? 

நான் புதிய உறுப்பினன். யாரையும் காயப்படுத்தி விடவும் கூடாது; யாராலும் காயப் பட்டுவிடவும் கூடாது என்ற ஜாக்கிரதை எனக்கு உண்டு. 

அன்புடன் 
எஸ்.முரளி

--------------------------------------------------------------
 11/6/2019 
 வணக்கம் சார்.
நாங்கள் "மாதம் ஒரு நூல்"திட்டத்திற்கான நூல்களை  இலக்கிய அனுபவம் உடைய ஐவர் குழுவால் , பொதுத்தன்மையுள்ள ஆகச்சிறந்த படைப்புக்களைத்தான் தெரிவு செய்கிறோம்.தெரிவு செய்து அந்தந்த மாதம் புத்தகத்தை அறிவிக்கிறோம்.தபால் செலவு மற்றும் காலதாமதத்தைத் தவிர்க்க இரு புத்தகங்களாக அனுப்புகிறோம்.

350க்கும் மேற்பட்ட வாசகர்கள் கொண்டது நம் அமைப்பு. ஒருசில படைப்புக்கள் ஒரு சிலரின் ரசனைக்குள் அடங்காமல் போகலாம் . அவ்வாறு நேரின் அதன் தேவை உள்ள உங்கள் நண்பர்களுக்குப் பரிசளித்தால் அவர்கள் மகிழ்வார்கள்தானே.

எங்கள் இலக்கு வாசிப்பைப் பரவலாக்கும் வணிக எண்ணமில்லா முயற்சி. 
எங்கள் நோக்கத்தைப் புரிந்துகொண்டு தொடர்ந்து பயணிக்க வேண்டுமென்பதே வேண்டுகோள்.

மனம் திறந்தமைக்கும் 
எங்கள் முயற்சியை ஊக்குவிக்கும் உங்களைப்போன்ற  நல்ல உள்ளங்களுக்கும் நன்றி
--------------------------------------------------------------
11/6/2019 Padmanaban:
 The books which are going to be despatched by SIRUVANI VASAGAR MAIYAM is almost announced earlier with wrapper,writer name,content,etc... It can be stopped at that level and (if necessary) it can be diverted to some others/libraries/etc. It is a suggestion only.
--------------------------------------------------------------------------------




ஜுன் 2019- தாகூர் கதைகள் - பாரதியார்




2019 ஜுன் மாத நூல்
"தாகூர் கதைகள்"
மகாகவி பாரதியார் மொழிபெயர்ப்பில்...



பக்கங்கள்   விலை 130 /-




ISBN 978-81-940988-8-1

-------------------------------------------------------------------------------------------------------------




"காலவரிசைப் படுத்திய பாரதி படைப்புகள்" பெரியவர் சீனி.விசுவநாதன் ஐயா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட "தாகூர் கதைகள் -பாரதி மொழிபெயர்ப்பு"நூல்.
----------------------------------------------------------------------------------
ஸ்மார்ட் போன் சூழ் உலகில் வாசிப்பு அனுபவத்தை நாம் மெல்ல மெல்ல இழந்து வரும் சூழலில் ஒரு நல்ல சிறுகதையை வாசிக்கக் கொடுத்த சிறுவாணி வாசகர் மையத்திற்கும் , அதற்காக தனது உடல் பொருள் ஆவியை அர்ப்பணிக்கும் Prakash GR   அவர்களுக்கும் நன்றி.



தாகூரின் அற்புதமான சிறுகதை இது. மொழிபெயர்த்திருப்பது மகாகவி பாரதியார்.

"நஷ்ட பூஷணம் அல்லது காணாமற் போன நகைகள்" இது கதையின் தலைப்பு.

மிகச் சாதாரண ஒற்றை இழை கதைதான். சொல்நேர்த்தி, தத்துவ விசாரம், ஒரு சிறுகதைக்குண்டான முடிவு எல்லாமுமாகச் சேர்த்து சிறுகதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

ஒரு பெரிய வியாபாரி. ஆஸ்தி பூஸ்திகளுடன் இருப்பவன்.- பூஸ்தி என்ற வார்த்தையை அச்சில் பார்த்து எத்தனை நாளாகிறது?-  வியாபாரம் நொடித்துப் போகும்போது அந்த வியாபாரி தன் மனைவியிடம் நகைகளைக் கேட்கப் போக மனைவி நகைகள் மீதான தீராத பற்றுதலால் தனது ஒன்று விட்ட சகோதரனுடன் மாளிகையை விட்டு கங்கை நதியில் படகில் தனியாகச் செல்கிறாள்.  தம்பி மீது இருக்கும் அவநம்பிக்கை காரணமாக பெட்டியில் நகைகளைக் கொண்டு செல்லாமல் அத்தனை நகைகளையும் மேனி முழுவதும் சொரிந்து கொண்டு முழுவதும் போர்த்திக் கொண்டு கிளம்புகிறாள். அவளுக்கு துர்மரணம் நேர்கிறது. மாளிகையும் பாழடைகிறது.

இவ்வளவுதான் கதை ஆனால் இதற்கு நடுவில் தாகூரின் எண்ண ஓட்டங்களும் அதனை பாரதியாரின் கூரிய பேனாவும் அதி உன்னதமான சிறுகதையாக மாற்றி விடுகிறது.

"ஒரு மனிதன் தனது மனைவியின் காதலை இழக்க வேண்டுமாயின் குரூபியாகவும், ஏழையாகவும் இருக்க வேண்டிய கட்டாயமில்லை: ஸாதுவாக இருந்தாலே போதும்"

" ஆணும் பெண்ணும் இரண்டு பாலாகப் பிரிந்த காலம் முதலாகப் பெண் ஆணை மயக்கி வசப்படுத்தும் பொருட்டாகத் தனது சக்தியை எல்லாம் செலவிட்டு எத்தனையோ தந்திரங்கள் செய்து வருகிறாள் "

"பனிக்கட்டி போலே அன்பில்லாத ஹிருதயம் பெண்ணுக்கிருந்தால் யௌவனம் மாறாமலிருக்குமென்று தோன்றுகிறது"

"முதல் தரமான கற்பனைக் கதையிலே கதாநாயகனாக இருப்பவன் கூட சில ஸமயங்களில் மிகவும் நெருக்கடி உண்டாகும்போது, தனது பிரிய காந்தையினிடம் அடமானப் பத்திரங்கள், கடன் சீட்டுக்கள் முதலிய கவிதா சூனியமான விஷயங்களைப் பேசும்படி ஆகிறது"

கவிதா சூனியமான விஷயங்கள். என்ன அட்டகாசமான எள்ளல்.

"அவளுடைய அன்பிற்குப் பாத்திரமாய் குழந்தை வளர்ப்பது போல வருஷா வருஷம் வளர்த்து வந்த நகைகளை விட்டுப் பிரிவது என்பதை நினைத்த மாத்திரத்தில் அவள் உடம்பு ஜில்லிட்டது"

"யாதொரு காரணமுமில்லாமல் மனுஷ்யன் காட்டுத் தீ போலே சினம் போன்கும்படியாகவும், ஸ்திரீ நிஷ்காரனமாக மழை போல அழும்படிக்கும் பகவான் ஏற்பாடு செய்திருக்கிறார்"

ஆஹா என்ன அழகான உதாரணம்.

கதை சொல்லிய விதத்திற்காகவே அவசியம் படிக்க வேண்டிய கதை.

சிறுகதை இடம் பெற்ற நூல் :தாகூர் கதைகள்- பாரதியார் மொழி பெயர்ப்பில்
அச்சிட்டோர்- சிறுவாணி வாசகர் மையம், கோவை

பி.கு: 
வருடம் ரூ. 1600-ஐ பெற்றுக் கொண்டு மாதமொரு நூல் வழங்கி படிக்கும் உந்துதலை முன்னே கொண்டு செல்லும் சிறுவாணி வாசக மையத்தின் சேவை அளப்பரியது.

நல்ல நூல்களுக்கு சிறுவாணி வாசகர் மையம்  சிறந்த உத்திரவாதம்.

நன்றி-Prabhakar sharma. Fb
---------------------------------------------------------------------------------
பள்ளிப்பருவத்தில் பாரதியின் மொழியாக்கத்தில் தாகூர்  கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.அந்த வாய்ப்பை மீண்டுமொருமுறை தந்திருக்கிறது கோவை சிறுவாணி வாசகர் மையம் அண்மையில் வெளியிட்டிருக்கும் 'தாகூர் கதைகள்' என்னும் தொகுப்பு நூல். பாரதியின் உரைநடை அவனது கவிதைகள் போலன்றி மணிப்பிரவாளமாக இருந்தாலும்..மந்திரம் போன்ற வாக்கு வன்மையால் படிக்கப்படிக்கத் திகட்டாமல் திரும்பத்திரும்பப் படிக்கத்தூண்டும் கவித்துவ வரிகள்,உவமைகள்..!

பாரதத்தின் இரு மகாகவிகள் இணைந்தால் மொழி எந்த அளவுக்கு ருசிக்கும் என்பதற்கு இந்த நூலே சாட்சி.பதச்சோறாய் ஒரு சில..

"அவள் நண்பகலின் தனிமை போன்றிருந்தாள்,மௌனமாக,ஒரு துணையின்றி.."

"மூடுபனியில் மறைந்திருந்த குன்றுகளைப்பார்த்தால் சித்திரக்காரன் எழுதிப் பின் அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்த படம் போலே தோன்றிற்று"

"ஆகாச வாணத்தைப்போல எரிய எரிய மேலே பறக்கலானேன்"

"எனது நெஞ்சம் எல்லாப் புலன்களாலும் பூமி தேவியை இறுகத்தழுவி அவளுடைய பாலுண்டு போஷணை பெற விரும்பிற்று"

"பூலோகமே மூச்சு முட்டிப் பொருமும் ஒலி போல் கேட்டது"

"யௌவனத்தின் ரஹஸ்யத்தையும் ஆனந்தத்தையும் சோகத்தையும் ஊடுருவி அங்ஙனமே அந்தத் தனி வெளியின் இறுதி எல்லைகள் வரை பரவியதாய் ஒரே மோனம்-ஒற்றைச் சொல்லென்னும் பேசத் திறனில்லாமை- திகழ்ந்தது"

"கரியவிழிகளோ சில சமயம் அஸ்தமிக்கும் சந்திரன் போல் வெறித்து நோக்குகிறது; சில வேளை விரைவு கொண்ட சாந்தியற்ற மின்னல் போல் தசை வெளியில் மின்னிச்செல்கிறது"

"அகன்ற ஜ்வாலாமயமான வானத்தின் கீழே எதிர் எதிராக ஓர் ஊமைப்பெண்ணும் ஊமைப் பிரகிருதியும் இருந்தனர்.....ஆசை ததும்பிய அந்த ஊமையான ப்ரக்ருதியின் கரையில் ஆசை ததும்பிய அந்த ஊமைப்பெண் நின்றிருந்தாள்"
Prof.M. A.Susila
------------------------------------------------------------------------------
#தாகூர்கதைகள் #பாரதியார் #மொழியாக்கம் #சிறுவாணிவாசகர்மையம்

தாகூர் எழுதிய சிறுகதைகள் சிலவற்றை பாரதியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவற்றில் எட்டுச் சிறுகதைகளைத் தொகுத்து  `தாகூர் கதைகள் பாரதியார் மொழி பெயர்ப்பில்’ என்கிற பெயரில் கோவையைச் சேர்ந்த `சிறுவாணி வாசகர் மையம்’  அதனுடைய உறுப்பினர்களுக்கு ஜூன் மாத புத்தகமாக வழங்கியிருக்கிறது. 

இந்த மொழியாக்கம் குறித்து நாவலர் சோமசுந்தர பாரதியார், 

“ ரவீந்திர நாதரின் சிறுகதைகளுக்கு பாரதியார் செய்துள்ள மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது, மொழி பெயர்ப்பாக இல்லாமல், தானே முதனூலும், தாகூரின் ஆங்கிலமே மொழிபெயர்ப்பாகவும் தோன்றும்படியாக அத்தனை அழகு பெற்று அமைந்துள்ளது”

மூலத்தை மிஞ்சிய மொழியாக்கமா...? ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை... 

இப்போதுதான் புத்தகம் கைக்குக் கிடைத்தது. இனிதான் வாசிக்க வேண்டும்.

இப்புத்தகத்தோடு ஜூலை மாத நூலாக திரு ரமேஷ் கல்யாணின் சிறுகதைகள் தொகுப்பான `திசையறியாப் புள்” ளும் வந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகளில் பெரும்பாலனவை பரிசு பெற்றவை. இது ஆசிரியரது முதல் நூல்... வாழ்த்துகள் 

பல நூறு வாசகர்களை உறுப்பினர்களாகக் கொண்டு மாதமொரு தரமான புத்தகத்தை வழங்கி வரும் சிறுவாணி இது வரை 27 புத்தகங்களை வழங்கி மூன்றாவது ஆண்டில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது... இன்னும் பல நூறு பேர்கள் சேர்ந்தால் சிறுவாணி இன்னும் சிறப்பாக பெருக்கெடுத்து ஓடும்...!!
sidtharthan sundaram
-------------------------------------------------------------------------------





Wednesday, June 12, 2019

ஓவியர் ஜீவா


இந்து தமிழ்திசை நாளிதழ்...30.04.2019
படைப்பாளி வரிசையில்:

சினிமா பேனரிலிருந்து தேசிய விருது வரை...
ஓவியங்களில் மிளிரும் ஜீவா என்கிற ஜீவானந்தன்.
--------------
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் திரைப்பட குறிப்புகள் நூலுக்கான விருது என்பது குறிஞ்சிப்பூ  பூப்பது போல் எப்போதாவது அளிக்கப்படுவது. 1983 ஆம் ஆண்டில் அறந்தை நாராயணன் எழுதிய, ‘தமிழ் சினிமாவின் கதைஎன்ற தலைப்பிலான நூலுக்கு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அதே விருது 28 ஆண்டுகள் கழித்து, 2011 ஆம் ஆண்டு திரைச்சீலைஎன்ற நூலுக்கு வழங்கப்பட்டது. இந்த நூலை எழுதியவர் ஓவியர் ஜீவா என்கிற ஜீவானந்தன்.

கோவை என்.எச். ரோட்டில் சினி ஆர்ட்ஸ்என்ற பெயரில் ஓர் ஓவியக்கூடம் நடத்தி வரும் 62 வயதுக்காரர். இவரின் ஓவியங்களை இந்து தமிழ் திசை வெளியீடுகள் உள்பட அனைத்து வெகுஜன பத்திரிகைகளிலும் காண முடியும். மணியம், மணியம் செல்வம், ராமு, செல்லம், ஜெயராஜ், மாருதி, ஜமால், ராமு போன்ற சராசரி ஓவியர்களோடு மட்டுமல்லாது, ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, பூனை பாஸ்கர் போலவே நவீன ஓவியர்கள் வரிசையிலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத படைப்பாளியாக மிளிர்கிறார்.

எம்.ஏ அரசியல் படித்து சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் விளங்கிய இவர் ஓவியவெளிக்குள் வந்த விதம் ஒரு சினிமா கதையை மிஞ்சும் சுவாரஸ்யம் மிக்கது. அதை அவர் ஒரு மாலைப் பொழுதில் பகிர்ந்து கொண்டார்.

‘‘என் அப்பா வேலாயுதம். குமரி மாவட்டம் பூதப்பாண்டிதான் அவரின் சொந்த ஊர். அப்பா விவசாயக்கூலியாகத்தான் இருந்திருக்கிறார். ஆனா என்ன காரணமோ தெரியலை. அவருக்கு ஓவியத்துல அவ்வளவு நாட்டம். வீட்டுக்கே தெரியாம நாகர்கோயில் போய் ஒரு ஓவியப் பள்ளிக்கூடத்துல ஓவியம் கத்துருக்கார். அதுக்காக கல் உடைக்கறது, கிழங்கு தோண்டறது, நெசவு நெய்யறதுன்னு நிறைய கூலி வேலைக்கு போய் அதுக்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கார். ஓவியத்துல தேர்ந்தவர் ஆனாலும் ஏழாவதுதான் படிச்சிருக்கார். நல்லா வரைஞ்சாலும் ஓவிய வாத்தியார் வேலை கிடைக்கல. ஆனா சினிமா பேனர்க அறிமுகமாகி அதை வரைய ஆள் தேவை இருந்திருக்கு.

அந்தக்காலத்துல திருச்சி ஸ்ரீரங்கத்தில் கலைவாணர் என்.எஸ்.கே, என்எஸ்கே பிலிம்ஸ் என்று பேனர்கள் வரையும் பட்டறை வச்சிருந்திருக்கார். அங்கே போய் சேர்ந்து 10 அடிக்கு 20 அடி சைஸ் சினிமா பேனர் எல்லாம் வரைஞ்சிருக்கார். ரெண்டு வருஷம்தான். அப்ப ஒரு நண்பர் கோவைக்கு கூப்பிட்டிருக்கார். கோவையில் அஞ்சுமுக்குல குடியிருந்தவர் பக்கத்துல இருந்த ராயல் தியேட்டர்ல போய் சினிமா பேனர் வரைய கேட்டிருக்கார். அந்த காலத்துல கோவைக்கு சினிமா பேனர் எல்லாம் சென்னையில இருந்துதான் வரும். ராயல் தியேட்டர் முதலாளியும், ஆனந்தா பிலிம்ஸ் சினிமா விநியோகஸ்தரும் இவரை ஒரு படம் வரையச் சொல்லியிருக்கின்றனர். அப்ப சிவாஜி கணேசனோட தூக்கு தூக்கி ரிலீஸ் ராயல்ல ரிலீஸ். இவர் அதுல வர்ற பாலைய்யா படத்தை தத்ரூபமா வரைஞ்சிருக்கார். அதுல முதலாளிகளுக்கு படு திருப்தி. அங்கேயே தனியா இடம் ஒதுக்கி சினிமா பேனர்களை வரைய அனுமதிச்சிருக்காங்க.

இப்படி ரெண்டு வருஷம். அப்புறம் அஞ்சு முக்குலயே சொந்தமா பட்டறை வச்சு சினிமா பேனர்களை வரைஞ்சிருக்கார். அப்ப எல்லாம் ஆர்டர்கள் குவியும். குறைஞ்ச தொகைதான் பேசியிருப்பார். ஆனா பணம் பேசினபடி வராது. நாங்க பசங்க நாலுபேர், பொண்ணுக ரெண்டு பேர். அதுல மூத்தவன் நான். என்னை கலெக்டர் ஆக்கணும்ன்னு ஆசைப்பட்டார். அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில(சிபிஐ) தீவிர ஈடுபாடு. திராவிட எதிர்ப்பு சிந்தனை வேறு. அதனால் தமிழ் படிக்கக்கூடாதுன்னு இங்கிலீஸ், இந்தியிலயேடிக்க வச்சார். தமிழா நானாத்தான் தேடித் தேடி படிச்சேன். கோவை அரசுக்கல்லூரியில்  பி.ஏ.,அரசியல். சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ., அரசியல். சட்டக்கல்லூரியில் சட்டம் படிச்சேன். அப்பத்தான் திடீர்ன்னு நோய்வாய்ப்பட்ட அப்பா இறந்துட்டார். மூத்த பிள்ளை என்பதால் குடும்பப் பொறுப்பு மொத்தமும் நானே கவனிக்க வேண்டியதாயிற்று!’’

என்றவர் கொஞ்சம் பேச்சை நிறுத்தி செருமி விட்டு, பிறகு தொடர்ந்தார்:

‘‘நான் ஸ்கூல் படிக்கிற காலத்துலயே மூத்த பிள்ளை என்பதால் என்மேல ரொம்ப அட்டாச்மெண்ட். கட்சிக்கூட்டம்ன்னாலும், தியேட்டர்கள்ல சினிமா பேனர் வைக்கிறதானாலும், ஓவியப்பட்டறைக்கு ஆனாலும், கலை இலக்கிய பெருமன்றம் ஆனாலும் என்னை கூடவே கூட்டீட்டு போவார். கம்யூனிஸ்ட்  தலைவர் தோழர் ஜீவா அப்பாவுக்கு மாமா முறை ஆவார். அதனால அவரைப் பற்றியும், அவர் தியாகத்தை பற்றியெல்லாம் சொல்லி, சொல்லியே வளர்ப்பார். அப்பா கூடவே இருப்பதால அவர் ஓவியம் வரையறதை பார்ப்பேன். நானும் பிரஸ் எடுத்து இஷ்டம் போல படம் வரைவேன். பள்ளிக்கூடத்துல ஏ,பி.சி,டி எழுதறதுக்கு முந்தியே ஓவியம் போட்டிருக்கேன். மூணு, நாலு வகுப்புப் படிக்கும்போதே வகுப்புல ஓவியம் வரைஞ்சு டீச்சர்ஸ் பாராட்டுக்களை வாங்கியிருக்கேன். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் வரைக்கும் கூட அப்பாவோட சினிமா பேனர்கள்தான் ஒவ்வொரு பட ரிலீஸிற்கும் போகும்.

சிவாஜி படம் ஒண்ணு எட்டு தியேட்டர்ல ஒரே நேரத்துல ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு ஒரே மாதிரி பேனர்கள் எல்லா பக்கமும் அனுப்ப வேணும். அதுக்கு ரீப்பர், கட் அவுட், கட்டைக, மரங்கள் எல்லாம் இங்கேதான் அடிச்சு அனுப்பணும். அந்த பேனர்களுக்கு அப்பா தலை மட்டும் வரைவார். மற்றவங்க அதுக்கு உடம்பு, கைகால் எல்லாம் போடுவாங்க. நானும் அதுல ஒருத்தனா இருப்பேன். தலை வரைவது சாகசம். ஒவ்வொருத்தருக்கும் நாம எப்ப முகம் வரையறது; முழு ஓவியர் ஆகறதுங்கிற கனவு இருக்கும். எனக்கும் அதே கனவு இருந்தது. மூன்று முடிச்சு படம் வந்த சமயம். அந்த பிளாக் &ஓயிட் ஸ்டில்லில் இருந்த நடிகர் கரு,கருன்னு மூஞ்சி. ஸ்டைலா வாயில் சிகரெட். குளோசர் லைட்.  குறும்புத்தனமான சிரிப்போட இருந்ததை பார்த்தப்ப அவரை நான் வரையணும்னு தோணுச்சு. அப்பாகிட்ட கேட்டேன். சரின்னுட்டார்.

அதுதான் நான் வரைஞ்ச முதல் தலை. ராயல் தியேட்டர் வாசல்ல வச்சோம். ரசிகர்கள்கிட்ட அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு. ரஜினிங்கிற பேரு எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. இப்படி ஓவியத்துல இயல்பா புகுந்த நேரத்துலதான அப்பா இறந்துட்டாரு. அப்பவே சென்னை வரைக்கும் சினி ஆர்ட்ஸ் வேலாயுதம் இறந்துட்டார். அதை மூடீட்டாங்க. அதனால நாம் வேற ஆளுககிட்டத்தான் பேனர்க கொடுக்கணும்ன்னு சினிமாக்காரங்க பேசிட்டாங்க. அதுல நான் ரொம்பவும் உடைஞ்சு போனேன். அடுத்தநாளே எங்க ஓவியப் பட்டறையை திறந்தேன். எந்தந்த வேலை அரைகுறையா இருந்ததோ அதையெல்லாம் நானே முன்னின்று முடிச்சுக் கொடுத்தேன். புது ஆர்டரும் எடுத்தேன். பத்து வருஷம் வக்கீலா பிராக்டீஸ் பண்ணீட்டு, இதையும் கவனிச்சேன். இரண்டு குதிரையில சவாரி செய்யறது கஷ்டமான வேலைன்னு வக்கீல் தொழில விட்டுட்டு முழு மூச்சா இதுல எறங்கீட்டேன்!’’

என்று சொல்லி நிறுத்தியவர், பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைய வந்த கதைக்கு அடுத்தது தாவினார்.

‘‘சினிமா பேனர் வரையறது ஒரு கலைன்னா நவீன ஓவியம் இன்னொரு அதிதீவிர கலை. அதில் எனக்கு ஆரம்பகாலத்துலயே பற்று. 1978ல் சித்ரகலா அகடாமின்னு ஓர் அமைப்பு கோவையை சேர்ந்த ஓவியர்கள் குழு ஏற்படுத்தினாங்க. அதில் போய் நான் சேர்ந்தேன். அவங்க நடத்தின ஓவியப் போட்டியில் கலந்துகிட்டு முதன்முறையா ஆறுதல் பரிசு வாங்கினேன். அப்புறம் அங்கே நடந்த  கண்காட்சியில் ஓவியக்கல்லூரியில் படிச்சவங்க எல்லாம் தான் வரைஞ்ச ஓவியத்தை காட்சிப்படுத்தினாங்க.

நானும் 1979ல் நான் வரைஞ்சதை வச்சேன். நல்ல வரவேற்பு. அடுத்த வருஷமே அந்த அமைப்பில் என்னை இணைச் செயலாளரா ஆக்கீட்டாங்க. அதுக்கு அடுத்த வருஷம் செக்ரட்டரி. இன்னெய்க்கு 42 வருஷமா தொடர்ந்து அதன் தலைவரா இருக்கேன். வருஷா வருஷம் கிக்கானி ஸ்கூல்ல 2 நாள்  ஓவியப்பட்டறை நடத்தறோம்.

அதுக்கு ஓவியர்கள் ஆதிமூலம், அல்போன்ஸோ, அந்தோணிதாஸ், தனபால் என பலரும் வந்திருக்காங்க. இந்த ஓவியப்பட்டறையில் பங்கேற்றவங்க மணிராஜ், முத்துராஜ் போன்றவங்க நிறைய பேர் சினிமாவில் ஆர்ட் டைரக்டர்ஸா இருக்கிறாங்க. இப்படியான சூழலில் பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைய வந்தது எப்படி, எப்போ என்பது எனக்கே சரியா நினைவு இல்லை.

மனிதன் என்கிற எம்.எல் பத்திரிகை படிச்சிருக்கேன். அதற்கு வரைஞ்சிருக்கேன். மாலன் திசைகள்ன்னு ஒரு பத்திரிகை நடத்தினார். 1980களில். அதுல வரைஞ்சேன். கனடாவிலிருந்து வரக்கூடிய தாய் வீடுங்கிற பத்திரிகையில் தொடர்ந்து ஏழு வருஷம் வரைஞ்சேன். அவங்க என்னை கனடாவுக்கே கூட்டீட்டுப் போய் கெளரவிச்சாங்க. அங்கே பட்டறையும் நடத்தினேன். போஸ்டர் கலர், வாட்டர்கலர்ன்னு வச்சுட்டு நான் கையிலயே வரையறதை பார்த்துட்டு அவுங்கதான் எனக்கு கம்ப்யூட்டர் Wacom பேடு கொடுத்தாங்க. அதை வச்சு வரைஞ்சா கம்யூட்டர்ல சுலபமா ஓவியம் வந்துடும். அதை வச்சுத்தான் இன்னெய்க்கு எல்லா பத்திரிகைக்கும், பேனர்களுக்கும் ஓவியங்கள் போட்டுத் தர்றேன்!’’

என்றவரிடம், ‘இன்றைக்கு டிஜிட்டல் வந்து விட்டதால் ஓவியக்கலையே அழிவின் விளிம்பில் உள்ளதே. அது உங்களை பாதிக்கவில்லையோ?’’ எனக் கேட்கிறேன். கொஞ்சம் யோசனையில் ஆழ்கிறார்.

‘‘ஓவியக்கல்லூரியில் படிக்காமல் தொழில் முறை ஓவியர்களாக வந்தவர்கள் முப்பது நாற்பது பேர் என்னுடன் மட்டும் இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு அடிக்கவும், வேற, வேற கூலி வேலைக்கும் போயிட்டாங்க. சிலர் செத்தும் போயிட்டாங்க. அப்பா இறந்துட்டாரு, அவரோட எங்க ஓவியக்கூடமும் அழிஞ்சிடுச்சுன்னு பேசினாங்களே. அது மாதிரிதான் இதுவும்ன்னு என்னளவில் இப்ப நான் நினைக்கிறேன்.

இன்னைய்க்கு வந்திருக்கும் டிஜிட்டல் யுகத்திற்கு தகுந்த மாதிரி என்னை நான் கணினி மயப்படுத்திக் கொண்டது, போட்டோ ஷாப், கோரல் ட்ரா போன்ற சங்கதிகளை கையாள்றதுனால இந்த நவீன யுகம் எந்த அளவுக்கு ஓவியத்துடனும் ஒத்துப் போறதை பார்க்க முடியுது. முந்தி ஒரு பத்திரிகையில் ஓர் ஓவியம் வரையச்சொல்லி ஆர்டர் கொடுத்தாங்கன்னா, ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு நேரம் காய வைக்கவே எடுத்துட்டு கண், காது, மூக்கு எல்லாம் வரையணும். அதுக்கு ஒரு நாள் ரெண்டு நாள் கூட ஆகும். ஆனா இப்ப அரைமணி நேரத்துல செஞ்சு கொடுத்துட முடியுது!’’ என்று தெளிவு படுத்தினார்.

எல்லாம் சரி, திரைச்சீலை நூலும், அது உருவான விதமும்,  தேசிய விருது வாங்கின கதையும் சொல்லவே இல்லையே?

‘‘அதுதான் நான் எழுதிய ஒரே நூல் சினிமா குறித்த எனது அனுபவச்சிந்தனைகள்தான் அந்த நூல். ரசனை என்ற இதழில் தொடராக எழுதியது. அறந்தை நாராயணனுக்கு பிறகு இந்த விருது என்னை வந்தடைந்தது பெருமிதப்படக்கூடிய விஷயம்தான். அடுத்ததாக சினிமா பேனர் அனுபவங்களை நூலாக எழுத உள்ளேன்!’’

என்று தன் பேட்டியை முடித்துக் கொண்ட ஜீவாவின் மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு ஆனந்த், மீனா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். ஜீவாவின் சகோதரர் வே. மணிகண்டன் பிரபல ஒளிப்பதிவாளர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஓவியர் ஜீவானந்தன்

அவர் ஓவியக் கல்லூரியில் கற்றவரல்ல. ஆனால், தமிழகத்தின் மிக முக்கியமான ஓவிய ஆளுமைகளில் ஒருவர். பள்ளியில் தமிழ் பயிலாதவர். ஆனால், அவர் எழுதிய முதல் நூலுக்கு - அதுவும் தமிழ் நூலுக்கு - இந்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில்நாடன் விருது, கோவை பார் அசோசியேஷனின் சாதனையாளர் விருது, ரத்னம் கல்லூரி வழங்கிய ‘ஐகான் ஆஃப் கோவை’ விருது உட்படப் பல்வேறு சிறப்புகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கும் அவர், ஓவியர் ஜீவானந்தன். கோவையில் ‘சினிஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஓவிய ஆசிரியர், ஓவியப் பயிற்சியாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்பட விமர்சகர், நடிகர் எனப் பல முகங்களில் மிளிர்பவர். வாருங்கள், அவரோடு பேசிப் பார்க்கலாம்....

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்


http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12863
-----------------------------------------------------------------------------------------------------------------


கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....