Friday, July 15, 2022

நாஞ்சில்நாடன் விருது (2022)/அழைப்பிதழ்

 





கோவையிலிருந்து செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையம்,  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூகசெயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜ் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 21 அன்று கோவை கிக்கானி பள்ளியில் நடைபெறவுள்ள

விழாவில் வழங்கப்படும்.

இவ் விழாவில் "ஆயிரம்+ கதைகள் சொல்லிய கதைசொல்லி" திருமதி. ரம்யா வாசுதேவன் சிறப்புப் பாராட்டுப் பெறவுள்ளார்.


விருது பற்றி சிறு அறிமுகம் ;

**

சிறுவாணி வாசகர் மையம்  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது .


கலை, இலக்கியம்  சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000 ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .


முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;

ஓவியர் ஜீவா (2018),

ஆய்வாளரும், உ வே சா படைப்புகள் மற்றும் பலநூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப. சரவணன் ( 2019) ,

பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன்(2020),

 மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்

(2021) 

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது . 

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக

 தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக

திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (Raac)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 

தொடர்புக்கு -

9940985920,  8778924880

------------------------


சத்தியம் ஒளிரும் இடத்தில் வெற்றி சூழும் - மகாத்மா 

இந்த விருது,பரிசுத்தொகை ரூ 50,000, சான்றிதழ் மற்றும் கேடயம் அடங்கியது.

பணபலம் ,அதிகார பலம்,  ஆள் பலம் எதுவுமே இல்லாமல் எளிய கிராமியப்  பின்னணியில் இருந்து வந்து, பத்தாண்டுகளில் இன்று கோவையைச் சுற்றி உள்ள பல ஏரிகளுக்கு நீர் ஆதாரத்தை பெருக்கியும், பல நூறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும்  திகழ்கிறார் கௌசிகா செல்வராஜ் .

அவர் உருவாக்கிய பத்துக்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்கள்  வாரம்தோறும் ஏரிகள் மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக  களப் பணியாற்றி வருகின்றனர் . அதில் பல ஏரிகளுக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  பல கிராமங்களில்  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது .

அவர்களின் உழைப்பை பார்த்து வியந்து பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி செய்து வருகின்றன.

இது போன்ற உன்னத லட்சியங்களை அடைய துணிச்சலும் , தியாக மனப்பான்மையும், கடும் உழைப்பும்  தேவை .

அந்த விதத்தில் கௌசிகா செல்வாராஜ் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல லட்சம்  இளைஞர்களுக்கு முன்னோடியாகவும், உதாரண புருஷராகவும்  உள்ளார் . 

எனவே , 2022 ஆம் ஆண்டுக்கான” நாஞ்சில் நாடன் விருதை” திரு கௌசிகா செல்வராஜ் அவர்களுக்கு  அளிப்பதில் சிறுவாணி வாசகர் மையம் பெருமிதம்  கொள்கிறது .

கோவையின் வடக்குப் பகுதியில் உள்ள குளwங்கள் அனைத்தும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட  வேண்டும் , கௌசிகா  நதி  மீண்டும் உயிர் பெற்று ஓட வேண்டும் என்ற அவரது உன்னத லட்சியங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்களையும் சிறுவாணி வாசகர் மையம் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறது .🙏

--------------------------------------



நாஞ்சில்நாடன் விருது-2022 விழாவில் சிறப்புப் பாராட்டுப் பெறுபவர்

திருமதி.ரம்யா வாசுதேவன்.


 சிறந்த கதைசொல்லி, சுயதொழில்முனைவர். கல்விசார்ந்து மாணவர்களை ஊக்குவிப்பவர். கற்பதற்கான சூழலை உருவாக்கி வாழ்வைக் கற்பவர்களாக  ஆக்கும் அவரது அனுபவம், கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு தொழில்நிறுவனங்களின் நுகர்வோர் சந்தை சார்ந்த அரங்க நிகழ்வுகளை நடத்தித் தருபவராக,  உத்தியாளராகத் திகழ்பவர்.

பெரும் தொழில் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துதல், கருத்தரங்கங்கள்,  பயிற்சிமுகாம்கள் நடத்துவதோடு  குறும்படங்கள்,  செய்திப்படத் தொகுப்புகள், விளம்பர உருவாக்கம் மற்றும் ஊடகங்கள் குறித்த  பயிலரங்குகள் நடத்தித் தருபவர்.

Under the Tree என்ற கதைசொல்லல் அமைப்பின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியச் சிறுகதைகளை ஒலி வடிவில் நிகழ்த்தியுள்ளார். அவை தமிழகத்தின்அனைத்து அரசு நூலகங்களிலும் இப்போது கிடைக்கப் பெறுகின்றன. தவிரவும் ஆன்மிகம்,சுயமுன்னேற்றம் , இதிகாச புராணங்களில் உள்ள வாழ்வியல் கதைகள்,  தொழில் மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

தினந்தோறும் இவர் பதிவிடும் ஒலிப்பதிவுகளை  50000க்கும் மேற்பட்ட நேயர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

வாசிப்பை,வாசிப்பின் அனுபவத்தைத் தனது குரல் மூலம் பரவலாகக் கொண்டுசொல்லும்

"ஆயிரம்+ கதைகள் சொன்ன ஆச்சர்யக் கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் அவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் தமது பாராட்டுகளையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.








மயக்கம் தெளிந்தது-கே.பி.நீலமணி October 2022




மயக்கம் தெளிந்தது-கே.பி.நீலமணி 

நாவலும் சிறுகதைகளும்

பக்கங்கள் 142  விலை 140/-

சோழர்குலச்சூரியன்- சி.என் மாதவன் September 2022





சோழர்குலச்சூரியன்-சி.என் மாதவன்

(512 பக்க) சரித்திர நாவல்

பக்கங்கள் 512  விலை 500/-

ஒரு பீடியுண்டோ சகாவே-ஓவியர் ஜீவா July 2022

 




ஒரு பீடியுண்டோ சகாவே-ஓவியர் ஜீவா 

திரைப்படக் கட்டுரைகள்

பக்கங்கள் 256  விலை 260/-


                                                       





Jeevananthan
பல பேருக்கு ஜீவா ஸார், கோயம்புத்தூர் பெருமை பட ஒரு ஓவியர். 80s/90s கிட்ஸ் எல்லோருக்கும் சினிமா தியேட்டர் கட் அவுட் மேல ஒரு பெரும் மோகம் எப்போதும், நம்ம சென்ட்ரல் தியேட்டர் பிரம்மாண்ட இங்கிலீஷ் பட கட் அவுட், KG தியேட்டர்ல வரிசையா இருக்கற கட் அவுட்கள் எல்லாம் படத்துக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே கதை சொல்லும், அத்தனையும் இவர் கை வண்ணம் Cine Arts அப்படிங்கற பேர்ல இவர் வரைந்த கட் அவுட்கள் தொடாத தியேட்டர்கள் இல்லை. இவர் வரையாத நடிகர்கள் இல்லை. சினிமா, சினிமா தியேட்டர் பத்தி மணிகணக்கா பேசுவார், அவ்ளோ விஷயம் வச்சு இருக்கற ஆள்.

வெறும் சினிமா கட் அவுட்கள் வரையர ஆள் இல்லை, கொறஞ்சது 2 சினிமா ஒரு நாளைக்கு பாத்திருவார், இதையே கம்மியா  சொல்லறேன்னோ என்னவோ. அவர் பாக்கறது மட்டும் இல்லாம அந்த படத்தை பத்தி அட்டகாசமா எழுதுவார்.  அப்படி அசால்ட்டா "திரைசீலை"ன்னு ஒரு புக் எழுதி இவர் வாங்கின அவார்ட் என்ன தெரியுமா.......

5000 ரூபாய்க்கு இப்போ நாலு அவார்ட் குடுக்கறாங்களே அது இல்லை. இந்திய அரசாங்கம் அந்த புத்தகத்துக்கு 2011ல நேஷனல் அவார்ட் குடுத்திச்சு. டெல்லி போய் ஜனாதிபதி கைல அவார்ட் வாங்கிட்டு வந்து, ட்ரீட் கேட்டப்போ அட இதுக்கு எதுக்கு ட்ரீட் எல்லாம்னு சொல்லிட்டு அடுத்து என்ன வரையலாம்ன்னு போயிட்டார்.

பல பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், டைரக்டர்கள், ஆர்ட் டைரக்டர்கள், பிரபல ஓவியர்கள் எல்லோருக்கும் ஓவியர் ஜீவான்னு சொன்னா தெரியும், இவர் சொந்த தம்பிதான் பிரபல சினிமாட்டோகிராபர் மணிகண்டன். ஆள் இவ்வளவு பிரபலம், ஆனாலும் எல்லார்கிட்டயும் அவ்ளோ சிம்பிளா பழகுவார், யார் வேணாலும் போய் இவரோட டவுன்ஹால் N.H. ரோட் ஆபீஸ்ல பாக்கலாம்.

இது எல்லாம் போக, குழந்தைகள், இளைஞர்களை அவ்வளவு சப்போர்ட் செய்வார். சித்ரகலா அகாடெமின்ற பேர்ல பல குழந்தைகளுக்கு சண்டே கிக்கானி ஸ்கூல்ல கிளாஸ் எடுக்கறார். பல இளைஞர்களுக்கு ஓவியதுறைல இவர்தான் மாஸ்டர். எல்லோரையும் மோட்டிவேட் செய்வார், முதல் முதல்ல நான் தமிழ்ல எதையோ எழுதி இவருக்கு அனுப்ப, நானே ஜெர்க் ஆகர அளவுக்கு என்னை பாராட்டி, எழுதினதுல அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்கு, தைரியமா எழுதுன்னு சொன்ன ஆள், இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க பாருங்க டெம்ப்ளேட்தான் சார் உங்களுக்கு.

 நேஷனல் அவார்ட் வாங்கின திரைசீலை புக்குக்கு அப்பறம், இப்போ மறுபடியும் ஒரு புக் எழுதி இருக்கார்....

"ஒரு பீடியுண்டோ சகாவே" 

இந்த புக்கும் திரைப்பட கட்டுரைகள்தான். அவர் பாஷைல சொல்லனும்னா நீங்க ஒரு மூவி பப்னாவோ, சினிமாவை விரும்பி பாப்பீங்கன்னா கண்டிப்பா வாங்கி படிங்க.

வாழ்த்துக்கள் ஜீவா சார். மீண்டும் ஒரு நேஷனல் அவார்ட் வாங்க, இந்த வாட்டியாவது அந்த ட்ரீட்......

புக் கண்டிப்பா வாங்குங்க, வாங்க....

ஒரு பீடியுண்டோ சகாவே-ஓவியர் ஜீவா/திரைப்படக் கட்டுரைகள்.
விலை ரூ.260/-

10% தள்ளுபடி போக ரூ.235/-
(+அனுப்பும் செலவு 
தமிழ்நாட்டுக்குள் ரூ. 40/-)

NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப.....

Canara Bank, H .Q.Road Branch, Coimbatore - 641018,

Current A/c no. 61211010003590

IFSC :  CNRB0001204

Beneficiary : Siruvani Vasagar Maiyam. 
****
8778924880
Google pay (siruvani vasagar maiyam) number
*****
சிறுவாணி வாசகர் மையம், 
24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, 
கே. கே. புதூர், 
கோவை - 641038

9940985920 /8778924880
(ஜி.ஆர்.பிரகாஷ்)

siruvanivasagar@gmail.com
Guhan saminathan fb
----------------------------------

கோவையில் இயங்கி வரும் சிறுவாணி வாசகர் மையம் வீடு தேடி வரும் புத்தகத் திட்டத்தை ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. இவர்களின் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இணைந்து கட்டணம் செலுத்தினால் வீடு தேடி நல்ல புத்தகங்களை அனுப்பி வைக்கிறார்கள்.

கோவை புத்தகக் கண்காட்சியில் சிறிய கடையை அமைத்திருந்த சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷை சந்தித்தேன். இரண்டு புதிய நூல்களைப் பரிசாக அளித்தார். அவரது மகள் எனது உப பாண்டவம் நாவலை விரும்பிப் படித்திருக்கிறார் என்று அறிமுகம் செய்து வைத்தார். சந்தோஷமாக இருந்தது.

சிறுவாணி வெளியிட்டுள்ள ஓவியரும் திரை விமர்சகருமான ஜீவா எழுதிய ஒரு பீடியுண்டோ சகாவே என்ற திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பை வாசித்தேன்.

கோவையில் வசிக்கும் ஓவியர் ஜீவா சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருது பெற்றவர். திரைப்படப் பேனர் வரைவதில் நிகரற்றவர். பத்திரிக்கை தொடர்கள். அட்டை ஓவியங்கள், நவீன ஓவியங்கள். சுவரோவியங்கள் வரைவதில் தேர்ந்தவர்.

இந்தத் தொகுப்பில் சினிமா பேனர்கள் பற்றிய அவரது கட்டுரை சிறப்பானது. சட்டம் படித்த ஜீவா எப்படிப் பேனர் வரையத் துவங்கினார் என்பதிலிருந்து, சினிமா பேனர் வரையும் நுட்பங்கள். அதை எப்படி நிறுத்தி வைப்பார்கள். ஹாலிவுட் மற்றும் இந்தி சினிமாவிற்கு எப்படி பேனர் வரைந்தார்கள் என்பதன் சிறப்புகளையும் அவரது தந்தை வேலாயுதம் சினிமா பேனர்கள் வரையத் துவங்கிய காலம் பற்றிய நினைவுகளையும் அற்புதமாக எழுதியிருக்கிறார். இதை அப்படியே ஒரு ஆவணப்படமாக உருவாக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் சினிமா பேனர்களைப் பார்த்தே மக்கள் கதை சொல்லுவார்கள். புதுப்படப் பேனர் வைத்தவுடன் அதைக் காணுவதற்காகவே மக்கள் திரண்டு செல்லுவார்கள். மதுரையிலும் சென்னையிலும் பார்த்த அழகான சினிமா பேனர்கள் நினைவில் நிழலாடுகின்றன.

அந்தத் திரை விளம்பரக் கலையின் நுட்பங்களையும் தனித்துவத்தையும் ஜீவா உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பிளக்ஸ் பேனர்களின் வருகை அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையை எப்படி முடித்துவிட்டது என்ற கட்டுரையின் கடைசி வரி மனதைத் தொடுகிறது.

ஒரு கட்டுரையில் சினிமாவில் ஏற்பட்ட மாற்றம் பற்றி ஜீவா இப்படி எழுதியிருக்கிறார்

சினிமா தியேட்டர் அனுபவம் என்பது வாலிப வயதைக் கடந்தவர்களுக்கும் மத்திய வயதுக்காரர்களுக்கும் மறக்கமுடியாத கடந்த கால அனுபவம். இன்று பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. பல, தரைமட்டமாகிவிட்டன. இன்னும் பல,வேறு வடிவங்கள் எடுத்து வெற்றிகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. தியேட்டர் இடைவேளையில் சோடா கலர் விற்ற காலத்திலிருந்து, மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களில்,ஏற்கனவே தந்த ஆர்டரின்படி மசாலா மணக்க உணவுப்பொருட்களை இருட்டில் பணியாளர்கள் கொண்டு வந்து நம் மடியில் வைக்கும் காலம் வரை பார்த்தாயிற்று. தியேட்டர்களில் நீண்ட வரிசையும், சைக்கிள் கியூவும், டூவீலர் டோக்கனும் எல்லாமே பழங்கதை ஆயின

கியூப் முறையில் சாட்டிலைட் மூலம் படங்கள் திரையிடல் தொடங்கியது. ஃபிலிம் என்பதே ஓர் அதிசயப்பொருள் ஆனது. பழைய கருப்பு வெள்ளைப் படங்கள் வண்ணமடிக்கப்பட்டன. ரங்காராவ் கலர் கடோத்கஜனாக மாறி சமையலறையில் கல்யாண சமையல் சாதம் சாப்பிட்டதை மக்கள் பார்த்தனர். பழைய படங்களை ஃபிலிமிலிருந்து டிஜிட்டலாக மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். பெரும்பாலும் எம்ஜியார், சிவாஜிபடங்கள் இந்த மாற்றத்துக்குள்ளாயின. திரைப்பட விநியோகமென்ற தொழில் பெரும் பாதிப்புக்குள்ளானது. தொழில்நுட்ப மாற்றங்களால் ஃபிலிம் லேப்கள் மூடப்பட்டன. பல பிரம்மாண்ட ஸ்டுடியோக்கள் அபார்ட்மெண்டுகளாகவும் மருத்துவமனைகளாகவும் உருமாறின.

திரையுலகம் சந்தித்த மாற்றத்தை இதைவிடச் சிறப்பாக எழுதிவிடமுடியாது.

ரங்காராவ் கலர் கடோத்கஜனாக மாறி சமையலறையில் கல்யாண சமையல் சாதம் சாப்பிட்டதை மக்கள் பார்த்தனர் என்பது போன்ற ஜீவாவின் கிண்டல் தனித்துவமானது. இது எல்லாக் கட்டுரைகளிலும் அழகாக இழையோடுகிறது.

மலையாள திரைப்படவுலகின் முக்கியத் திரைப்படங்களையும் திரை நட்சத்திரங்களையும் பற்றிய அவரது ஞாபக சக்தி வியப்பூட்டுகிறது. அந்தக்  கால மலையாளப்படங்கள் துவங்கி இன்று வெளியான பகத்பாசில் படம் வரை மலையாள சினிமாவின் தனித்துவத்தையும் அழகியலையும் நுட்பமாக எழுதியிருக்கிறார். அரசியல் சினிமாவைப் பற்றிய அவரது பார்வை முக்கியமானது.

சர்வதேச சினிமாவைத் தொடர்ந்து பார்த்து வருபவர் என்ற முறையில் ஆங்கிலம் அயல்மொழிப்படங்களைப் பற்றிய அவரது பார்வைகளை சிறப்பாகப்  பதிவு செய்திருக்கிறார்.

ஒவியர் என்பதால் அரங்க அமைப்பு மற்றும் கலை இயக்கம் குறித்து ஆழ்ந்து அவதானித்து எழுதியிருப்பது சிறப்பு.

பழைய இந்திப்படங்கள், பாடல்கள் பற்றிய அவரது நினைவுகள் நம்மையும் அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.

தேர்ந்த சினிமா ரசனை கொண்ட ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது போன்ற நெருக்கத்தைத் தருகிறது இந்நூல். ஜீவாவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

-----------------------------------------------------------------------------------------

வணங்குகிறேன்  ஜீவா சார்.

இந்த ஒன்றரை வருடப் பென்சில் உறவிலேயே ஓவிய முகங்கள் எனக்கு இவ்வளவு நிறைவு அளிக்கும் போது, உங்கள் தந்தையார் காலத்தில் இருந்து உங்களின் வாழ்நாள் காலத்தும், ஏன் உங்களின் மகனின் விரல்கள் வரைக்கும், ஓவியங்களோடே மூச்சுவிடும் உங்களுக்குள் எவ்வளவு ஆனந்தம் ததும்பும்.! ஒவ்வொரு ஓவியம் வரையும் போதும் நாம் கசடறக் கழுவப்படுகிறோம் தானே. நம் சிரிப்பின் களங்கமின்மை, நாம் போன கணத்தில் வரைந்து முடித்த முகம் அருளிச் செய்ததே அல்லவா?  சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டில் எங்கள் ஊர் ஓவியர் A..செல்வம், பேசின பேச்சு, என் பேச்சின் அலங்காரங்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து உதிர்த்த எளிமையுடனும் ஒளியுடனும் இருந்த காரணம் இது வரை அவர் வரைந்த ஓவியங்களால் அவர் சொற்கள் துலக்கப்பட்டு இருந்ததே என நம்புகிறேன்.

நீங்களும் அப்படித்தான் ஜீவா. சற்றே கன்னம் ஒதுங்கியது போன்ற உங்கள் சிரிப்பின் அழகு, நீங்கள் வரைந்த ஓவியங்கள் உங்களுக்குக் கொடுக்கும் கொடை தானே.


நல்லா இருங்க.

%

கல்யாணி.சி

--------------------------------------------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையம்  அனுப்பித் தந்திருக்கும் மூன்று புத்தகங்களில் ஒன்று, ஓவியர் ஜீவா எழுதிய திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பான ," ஒரு பீடியுண்டோ சகாவே".


மலையாளக் கவிஞர் அய்யப்பனின் ஒரு வரி போல ஒலிக்கும் இந்தத் தலைப்பு, ஒரு மலையாள உச்சரிப்பின் பிரத்யேக வசீகரத்தோடு  அழைக்கிறது. 


நான் அவ்வப்போது கையில் கிடைத்த வாக்கில்  வாசித்திருக்கும் ஷாஜியின் கட்டுரைகள் போல, சாம்ராஜின் ' நிலைக் கண்ணாடியுடன் பேசுகிறவன்' கட்டுரைத் தொகுப்பு போல ஒருவேளை இதுவும் மலையாளத் திரைப்படங்கள் குறித்து அதிகம் பேசக்கூடும். படித்தால் தெரியும்.


நான் , தேசீய விருது வாங்கிய, ஜீவாவின் ' திரைச் சீலை' வாசித்ததில்லை. என் அளவில் இதுதான் எனக்கு திரைச் சீலை. ஜீவா ஒரு ஓவியர். ஒரு ஓவியன் பேசினாலும் எழுதினாலும் அதில் ஓவியத்தின் வண்ணத் தடங்கள்  இல்லாமல் போகாது. சீலை அல்லது கித்தான் தவிர்த்து அவனால் வேறு எங்கும் எழுத முடியாது.


தண்ணீர்க் குடம் எடுத்துப் போன வழிச் சிந்துதலைத் தொடர்ந்து ஒரு வீட்டு வாசலை அடைவது போல, நான் மறைந்து தெரியும் ஓவியங்களின் பின்னால் போய்  ஜீவாவை அடைவேன்.


'ஒரு பீடியுண்டோ சகாவே ' என்று ஜீவாவிடம் கேட்பேன். எனக்கு செய்யது பீடி என்றால் அவருக்கு இஷ்டம் மங்களூர் கணேஷ் பீடியாக இருக்கும்.  நிச்சயம் தருவார். 


Vannadasan



------------------------------------------------------------------------------------------------------------

ஒரு பீடியுண்டா சகாவே ....

============================

'லால் சலாம்'  என்ற மலையாளப்படத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு (1990), சென்னை சபையர் தியேட்டரில் பார்த்ததேன். 'ஒரு பீடி உண்டா சாவே.. தீப்பெட்டி எடுக்கான்' என்று மோகன்லாலும், முரளியும் அவ்வப்போது கேட்டுக் கொள்வார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இருந்த காலத்தில் நிலவும் தோழமையின் வெளிப்பாடாக இந்த வசனம் இருக்கும். வேணு  நாகவள்ளியின் இயக்கத்தில் கேரளாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தலை மறைவு காலத்தில் தொடங்கி,  ஆட்சியைப் பிடிக்கும் வரையில் நடக்கும் கதை. 


'ஒரு பீடி உண்டா சகாவே' என்ற தலைப்பில் உள்ள நூலை அக்களூர் இரவி இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் கொடுத்தார். சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட இந்த நூலை அதன் தலைப்பிற்காகவே வாங்கி வந்தேன். ஓவியர் ஜீவா எழுதிய திரைப்பட கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. 


இதிலுள்ள கட்டுரைகளின் ஊடாக பல்வேறு திரைப்படங்களை தமிழிலும், மலையாளத்திலும், மற்ற மொழிகளிலும்  அறிமுகப்படுத்துகிறார். நெடுமுடி வேணுவின் மேதமை எத்தகையது, அவரோடு இணைந்த நடித்த நடிகர்கள், அந்தப் படங்களின் இயல்பு போன்றவைகளை சுவாரசியமாகத் தருகிறார். அதே போல அண்ணன்- தம்பி உறவை வைத்து, அம்மா பாசத்தை வைத்து எப்படிப்பட்ட படங்கள் , நீதிமன்ற காட்சிகளை வைத்து,  யார் நடித்துள்ளார்கள் என்பது போன்றவைகளை  சொல்கிறார். 


இந்தப் புத்தகத்தை நேற்று  யதேச்சையாக படித்துக் கொண்டிருக்கும் போது, இந்த நூலை  வாசகசாலை விருதுக்கு தேர்வு செய்த செய்தி அறிந்து மகிழ்ந்தேன். பொருத்தமான ஒரு நூலுக்கு வாசகசாலை விருது தர உள்ளது. இதன் ஆசிரியர் ஜீவாவை அழைத்து வாழ்த்துச் சொன்னேன். கோயமுத்தூர் செல்கையில்  இவரைச் சந்திக்க வேண்டும். 🌹🌹🌹

பீட்டர் துரைராஜ்

------------------------------------



வாசகசாலை தமிழ் இலக்கிய விருது - 2022


'சிறந்த கட்டுரைத் தொகுப்பு' பிரிவில் இம்முறை ஓவியர் Jeeva Nanthan அவர்களின் 'ஒரு பீடியுண்டோ சகாவே...' நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


ஜீவா அவர்கள் அடிப்படையில் ஓவியர் என்பதோடு, அவரது தந்தையார் வேலாயுதம் அவர்களைப் போன்றே  தமிழ் சினிமாவில் முக்கியமான பேனர் ஆர்ட்டிஸ்ட்டாக விளங்கியவர். அவர்களது நிறுவனத்தின் பெயராலேயே, 'சினி ஆர்ட்ஸ்' ஜீவா எனப் பலராலும் அன்புடன் அறியப்பட்டவர். அவர் தனது தொழில் சார்ந்து என்றில்லாமல், சிறு வயது முதலே திரைப்படங்கள் மீது வெகுவாக ஆர்வம் காட்டிய ஒருவராக இருந்திருக்கிறார். அந்த  ரசனையானது, தமிழ் சினிமாவோடு நில்லாமல் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்கள் எனத் தொடர்ந்து சர்வதேசத் திரைப்படங்கள் எனப் பரந்து விரிந்து சென்றிருக்கிறது. 


தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு சினிமா என்பது மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்காகவே இன்றுவரை திகழ்ந்து வருகிறது. அவர்கள் எந்த வயதுக்காரராக இருப்பினும், தங்களது பால்யத்தை நினைவுகூரும்போது, விரும்பிப் பார்த்த திரைப்படங்களையும், தங்கள் அபிமான நடிகர்களையும்,  வாழ்வோடு ஒரு அங்கமான சினிமா தியேட்டர்களையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ஏனென்றால், அவை கடந்த வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமல்ல; நம் உணர்வோடு ஒன்றாகக் கலந்தவை.  அப்படியான நமது பல்வேறு நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு நூலாகவும் இது திகழ்வது தனிச்சிறப்பு எனலாம். 


இந்நூலில் பல்வேறு விதமான விஷயங்களை முன்வைத்துப் பேசும் கட்டுரைகளிருக்கின்றன  என்றாலும், மலையாளத் திரையுலகமும், முன்பிருந்து இப்போது வரை அதன் முக்கிய ஆளுமைகளும்  சிறப்பானதொரு இடம் பிடித்துள்ளனர். தலைப்புக் கட்டுரையான 'ஒரு பீடியுண்டோ சகாவே...' - இல் கேரள அரசியலும், குறிப்பாக கம்யூனிசமும், மலையாளத் திரைப்படங்களும் எவ்வாறு தொடர்புடையவை என்பதை அழகாகக் கூறுகிறார். இத்தகைய அரசியல் சினிமாக்களைப் பற்றிய அவரது பார்வை ரொம்பவே முக்கியமானது.


அத்துடன் பல்வேறு கட்டுரைகளின் வழியாக அவர் தரும் மலையாளத் திரையுலகின் முக்கியத் திரைப்படங்களையும் திரை நட்சத்திரங்களையும் பற்றிய தகவல்களை வாசிக்கையில், அவரது ஞாபக சக்தி நம்மை வெகுவாக வியப்புக்கு உள்ளாக்குகிறது. அந்தக்  கால மலையாளப் படங்கள் தொடங்கி, புதிய அலை படங்கள் வழியாக, இன்று OTT தளங்களில் வெளியாகும் பகத் பாசில் படம் வரை மலையாள சினிமா ஏன் இந்த தனித்துவத்தைப் பெற்றுள்ளது என்பதையும், அதன் அழகியலையும் ரொம்பவே நுட்பமாக ஆய்ந்துள்ளதுடன், அத்தகைய இடத்திற்கு விரைந்து செல்ல தமிழ் சினிமா செய்ய வேண்டியவற்றையும் கட்டுரையின் உள்ளே கோடிட்டு காட்டியிருக்கிறார் ஓவியர் ஜீவா.


அடிப்படையில் அவர் ஒரு ஒவியர் என்பதால் காலங்காலமாக திரைப்படங்களின் அரங்க அமைப்பு வரலாறு மற்றும் கலை இயக்கம் குறித்து கூர்மையாக அவதானித்து எழுதியிருப்பது சிறப்பு. அத்தோடு  திரைப்படங்களின் விளம்பர உத்திகள் குறித்த, 'பிங்க் நிறக் கன்னங்களும் பச்சை நிற தாடைகளும்...' கட்டுரையில், அவரது தந்தைக்கும் அவருக்கும் பெயரளித்த பேனர் தொழில் பற்றி விரிவாக பதிவு செய்திருப்பதோடு, 'மங்கிப்போன ப்ளக்ஸ் பேனரை யாரும் தலையை உயர்த்திக் கூடப்பார்ப்பதில்லை என்பதில் இருக்கிறது இன்று வேலையற்ற ஓவியனின் கடந்தகாலப் பெருமிதம்' என்னும் கடைசி வரிகள் நம் மனதை ரொம்பவே கனக்கச் செய்கின்றன. அதேபோல் சகோதர பாசம் பேசும் தமிழ் படங்கள் குறித்த கட்டுரையில் நெய்வேலியில் 28 வயதில் விபத்தில் அகால மரணமடைந்த தனது தங்கையின் கடைசி காரியங்களுக்குப் பிறகு, பேருந்தில் ஊர் திரும்பும்போது. 'மலர்ந்தும் மலராத' பாடல் கேட்டு உடைந்து அழுத ஜீவா அவர்களைக் குறித்து வாசிக்கையில் பாடல்களின் மகத்துவம் புரிகிறது. 


ஆளுமைகள் என்ற வகையில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் மற்றும் நெடுமுடி வேணு குறித்த கட்டுரைகள் அத்தனை அழகாக வந்திருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல் பல்வேறு கட்டுரைகளின் உள்ளே எத்தனை எத்தனையோ ஆளுமைகள் பற்றிய தகவல்கள் அப்படியே நம்மைக் கடந்து செல்கின்றன. ஒரே கருவைக் கொண்டு வெளியான படங்களைப் பற்றிய தகவல்கள் (தெய்வமகன் - தாயின் கருணை), அதுபோல பிறமொழிகளில் வெற்றிகரமாக ஓடி, தமிழில் ரீமேக் செய்யும்போது கண்டுகொள்ளப்படாமல், காணாமல் போன படங்கள் என நமக்குத் தெரியாத  அத்தனை தகவல்களைத் தருகிறார். அதேசமயம் சுவாரஸ்யத்திற்காக தகவல்களை முன்னிறுத்தி எதையும் அவர் எழுதவில்லை; எல்லாமே போகிற போக்கில்தான்... 


ஆழ்ந்த சினிமா ரசனை கொண்ட ஒரு நண்பர் நம்முடன் நமக்கான மொழியில் பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது இந்நூல் என்றால் அது மிகையில்லை. இறுதியாக, சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்வதற்காக தந்தையோடு வந்திருந்தபோது, மவுண்ட் ரோடு அண்ணா தியேட்டரில் ஒட்டியிருந்த, சத்யஜித்ரேயின் 'சோனார்கெல்லா' திரைப்பட   போஸ்டரை கண்கள் பளீரிட பார்த்த அந்த இளைஞனின் திரைப்பட ஆர்வம்தான், ஜீவா அவர்களை இத்தனை வருடங்கள் கழித்தும் OTT வரையிலான தளங்களிலும்  ரசனைப் பயணத்தை தொடர வைக்கிறது. அவர் இன்னும் பல்லாண்டுகள் இதனைத் தொடர வாசகசாலையின் வாழ்த்துகள்! சிறப்பான முறையில் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கும், ’சிறுவாணி வாசகர் மையம்’ க்கு பாராட்டுகள்…நன்றி. மகிழ்ச்சி! ❤️


நூல்: 'ஒரு பீடியுண்டோ சகாவே...' 

வகைமை: கட்டுரை 

ஆசிரியர்: ஓவியர் ஜீவா 

வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம்


தினமலர்-கோவை இணைப்பில்  24-12-2022....

---------------------------------


"ஒரு பீடியுண்டோ சகாவே" 

சிறந்த கட்டுரைத் தொகுப்புக்கான

வாசகசாலை விருது பெற்றமைக்கு 

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் .....

----------------------------------









பூலோக ரகஸ்யம் -(தொ-ர்) அரவிந்த் சுவாமிநாதன்-August 2022

  



பூலோக ரகஸ்யம் -தொகுப்பாசிரியர் அரவிந்த் சுவாமிநாதன்-

தேசபக்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் 

பக்கங்கள் 176  விலை 180/-

உயிரளபெடை- எஸ். சங்கரநாராயணன் June 2022

 










உயிரளபெடை- எஸ். சங்கரநாராயணன்- 

வாழ்வியல்  சிறுகதைகள்

பக்கங்கள் 160  விலை 150/-

கருணாகரத் தொண்டைமான்- குடவாயில் பாலசுப்பிரமணியன் May 2022

 








கருணாகரத் தொண்டைமான்- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் 

பக்கங்கள் 96  விலை 120/-

43 ஆண்டுகளுக்கு பிறகு மறுவெளியீடு காணும் நூல்




பிஞ்ஞகன்- நாஞ்சில்நாடன் 2022 April








 பிஞ்ஞகன்- நாஞ்சில்நாடன்-  கட்டுரைகள் 

பக்கங்கள் 168 விலை 160/-








கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....