Thursday, June 18, 2020

ஜூன் 2020 "கல்லும் மண்ணும்"- பேராசிரியர் க.ரத்னம்




ஜூன் 2020 வெளியீடு

"கல்லும் மண்ணும்"-
பேராசிரியர் க.ரத்னம்

பக்கங்கள்    142                         விலை ரூ 140 /-








முனைவர் க. ரத்னம். 

13 12 1931 இல் பிறந்தவர் இவரது பெற்றோர் கபினி கவுண்டர் , பெரியம்மாள்.

 கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பையும், சென்னை,பச்சையப்பன் கல்லூரியில்  பட்ட மேற்படிப்பையும்(1952-55) படித்துள்ளார் .

1955 முதல் 1990 வரை அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .1960 முதல் 75 வரை மாத இதழ்களில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகின. 

 முதல் நூல் "பேதை நெஞ்சம்"(1961) என்கிற வசனகவிதை , "உருவகக் கதைகள்"(1962) என்கிற கவிதைத் தொகுதி ,"கனவுமாலை"(1967)புதினம்,
"நினைவின் நிழல் ", "கல்லும் மண்ணும்" என்கிற நாவல்கள் (1969) வெளியாகின.

 1965 ல் ஏற்பட்ட பறவைகளின் மீதான ஆர்வம் காரணமாக இவரது "தென்னிந்தியப் பறவைகள்"(1974) 500 பக்க நூல்தமிழகஅரசின் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

 1982ல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் விருப்பப்படி எட்கர் தர்ஸ்டன்(Edger Thurston) என்பவரால் எழுதப்பட்ட "The Caste and Tribes of South India"என்கிற 3500  பக்க அளவிலான ஏழு தொகுதிகளை உள்ளடக்கிய நூல் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1988இல் அப்பணி நிறைவுற்றது. "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டது .

தமிழில் பறவைப் பெயர்கள்(ஆய்வு)(1988), 'இவர்கள் பார்வையில் அகலிகை'(2000) 'தமிழ்நாட்டுப் பறவைகள் ' அறிவியல் தொகுப்பு நூல்(2004) இவை தமிழக அரசின் முதல் பரிசான ரூபாய் 10 ஆயிரத்தை பெற்றுள்ளன. "தமிழ்நாட்டுப் பறவைகள்"-Birds of Tamilnadu" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .

இவரது பிற நூல்கள் சிறுகதைச் சாளரம், சிறுகதை முன்னோடிகள் ஆகிய இலக்கிய விமர்சனங்கள்,

 தமிழ்நாட்டு மூலிகைகள் ,

சங்க இலக்கியத்தில் யானை என்கிற சுற்றுச்சூழல் நூல்,

 அதன் பிறகு திராவிட இந்தியா- மொழிபெயர்ப்பு

 கம்பன்  ராம காதையில் பறவைகள்- ஆய்வு 

திருக்குறள் சொல்லடைவு (தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன்)

 டப்ளின் நகரத்தார்

 செகாவ் சிறுகதைகள் ஆகியவை வெளியாகியுள்ளன.

" தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தில் பறவைகள் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு 2012ல் ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டது இது நூலாகவும் வந்துள்ளது .

தற்போது இவர் வசிப்பது கோவையில்.
தொடர்பு கொள்ள எண்:90422 95055
------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் ரத்தினம் அவர்களுக்கு வணக்கம். 

கல்லும் மண்ணும் படித்தேன். இந்த நாவல் நாங்கள் நாவல் வரலாறு எழுதும்போது கிடைத்திருந்தால் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஒரே ஒரு ஏழை விவசாயியின் ஆறு நாள் வாழ்க்கையில் அவனுடைய நனவோட்டத்தை மிகவும் நன்றாக சித்தரித்திருக்கிறீர்கள். நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி. இந்தக் கதையில் இரண்டு பாத்திரங்கள் இருப்பதாகக் கூடச் சொல்வதற்கில்லை. ஒரே பாத்திரம்தான். கரையான்கூடக் கண்ட்ராக்டர் மாதிரி அரிதாகவே தோன்றுகிறான். இந்த உத்தியை நீங்கள் மிகவும் வெற்றிகரமாகக் 
கையாண்டிருக்கிறீர்கள். இலக்கியத்தரமான முயற்சி. 

செங்காடனின் நனவோட்டத்தில் மிதந்து வரும் சம்பவங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குச் சில குறியீடுகளைக் கையாண்டிருப்பதும் பாராட்டத்தக்கது. அவன் நம்பி வாழும் மண்ணும் அவன் வாழ்க்கையைக் குலைக்க வரும் கல்லும் தவிர, அரசமரத்தின் இலைகள் இடையிடையே உரையாடல் போலவே ஒலிக்கும் பிரமையும் உங்கள் படைப்புக்குத் தனித்துவம் அளிக்கின்றன. சிறுகதைக்கும், நாவலுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தை மிகக் கருத்துடன் உருவாக்கியிருக்கிறீர்கள். தனி மனிதனின் நனவோட்டத்தை இவ்வளவு சிறப்பாகத் தமிழில் வேறு ஒரு படைப்பாளியும் கையாண்டதாகத் தெரியவில்லை. இந்த நூல் மேலும் பல இலக்கியவாதிகளின் கவனத்துக்கும் வரவேண்டும். 

                                                                                                                                                - சிட்டி
30.10.89
கோவை
------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றே சிறுவாணியில் சேருங்கள்....தாமதமாக ஆக அந்தந்த மாத  பொக்கிஷத்தை இழக்கிறீர்கள்  

 சிறுவாணியின் நால்வர்

 கல்லும் மண்ணும்:/  
                                  / வானம்அன்று நீலமாகவே இருந்தது..அதில் உயிர் இல்லை. நோயில் படுத்துவிட்ட தாயைப்பார்க்கும் குழந்தை போல வெறித்தபார்வையோடு நிலம் வானத்தைப்பார்த்தபடிஉள்ளது/
                                                                 /க.ரத்னம்

எண்ணும் எழுத்தும்:

                            /முதல் திவ்ய தேசம் திருவரங்கம் அன்று.நம்சிறுவரங்கமான நம்உடம்பேமுதல்திவ்யதேசம்/
                                                           /மதுஸ்ரீதரன்

இலக்கியப்படகு:
                       /மேல்நாட்டாரைப்பார்த்து அவர்களைப்போல்எல்லாத்துறைகளிலும் பாவனை செய்யும்நம்மவர் பேச்சாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதையும் கற்றுக்கொள்ளவேண்டும்/
                   ்                         திருலோக சீதாராம்

பலநேரங்களில்பலமனிதர்கள்..
                        ./மரணோபராந்த் ( மரணத்துக்குப்பிறகான) விருது கொடுக்கமுன்வந்தால்அவர.குடும்பத்தினர் நிராகரிக்கவேண்டும்..அப்போதுதான் சுஜாதா ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கும்/
                           ்                     பாரதி மணி

Saptharishi lasara
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பறவையியல் நிபுணர், பேராசிரியர், எழுத்தாளர் க.ரத்னம் ,
சிறுவாணி வெளியீடு கல்லும் மண்ணும் நாவலுடன்......



க.ரத்னம் எழுதிய ‘கல்லும் மண்ணும்’ நாவலை முன்வைத்து...
--------------------------------------------------------------------------------------------
செங்கோடனின் பாத்திரப்படைப்பில் அந்த கடல் கிழவனே எனக்கு கண்முன் நிற்கிறான். கரையான் சிறுவனின் இடத்தில் கிழவனிடம் சாகசக்கதை கேட்கும் சிறுவன் முகிழ்க்கிறான். நிலத்தை பண்படுத்தி ஒற்றையாளாக கிணறு வெட்டி, தண்ணீர் உற்றெடுக்க வைத்து அத்தனை பேரையும் பிரம்மிக்க வைப்பதில் அந்த ராட்சஷ மீனை பிடித்த சாகசத்தை உணர்கிறேன். அதையெல்லாம் தாண்டி கல்குவாரி, வெடிச்சிதறலால் சிதைந்த கிணற்றுக்குப் பின்னால் எலும்புக்கூடாய் கரை தட்டி நிற்கும் ராட்சஷ மீன் எலும்புக்கூட்டை காண்கிறேன். அதை விட விண்ணும் மண்ணும் சந்திக்கும் மழைக்காட்சியில் துளிர்க்கும் செங்கோடனின் நம்பிக்கை வெளிச்சத்தில் அந்த ராட்சஷ மீன் எலும்புக்கூட்டை அங்க அங்கமாக அளந்து பார்த்து வியக்கும் மீனவர்களின் கண்களில் வெளிப்படும் நம்பிக்கை வெளிச்சத்தை காண்கிறேன். ஆம், க.ரத்னம் இந்த நாவலில் என் பார்வைக்கு கடலும் கிழவனும் எழுதிய ஹெர்னஸ்ட் ஹெமிங்வேயாகவே தெரிகிறார்.

கா.சு.வேலாயுதன், கோவை, 27.07.2020


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

க.ரத்னம் என்ற பெயரை இன்றைய தலைமுறையினர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் தேடினால் ‘கல்லும் மண்ணும்’ என்ற நாவலை எழுதியவர் என்று சிறு குறிப்பேதும் இருக்கலாம். கோவையைச் சார்ந்த க.ரத்னம் பன்முகக் கலைஞர். பேராசிரியர், சிறுகதையாளர், பறவையியலாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல்துறை வித்தகர். 

எட்கர் தர்ஸ்டன் எழுதிய Castes and Tribes of South India என்ற நூலை அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.  தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. 3500 பக்கங்களுக்கும் கூடுதலான அந்த நூல் 7 தொகுதிகள் அடங்கியது. 

ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘டப்ளினர்ஸ்’ நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார். 

தமிழகத்தின் பறவைகள் என்ற அவரது நூல் பறவையியல் வரிசையில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். அழகிய ஓவியங்களுடன் கச்சிதமான குறிப்புகளைக் கொண்ட இந் நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இவைத் தவிர ‘சங்க இலக்கியத்தில் பறவைகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கும் க.ரத்னத்துக்கு இதுவரை அங்கீகாரங்கள் எவையும் கிடைத்ததில்லை. தமிழில் இயல்பாக உள்ளதுதானே? 

சென்ற புதன்கிழமை 19.09.2018 கோவையில் பாரத வித்யா பவன் அவருக்கு ‘தமிழ் மாமணி’ விருதளித்துச் சிறப்பித்தது. 

87 வயதில் அவருக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.

சிற்பி பாலசுப்ரமணியம் அவரைப் பற்றி சிறப்புரை தரும்போது ரத்னத்தின் ‘கல்லும் மண்ணும்’ நாவல் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலு’க்கு இணையாக வைத்துப் போற்றத் தக்கது என்று பாராட்டுரைத்தார். 

Gopalakrishnan murugesan
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மே-2020 "எண்ணும் எழுத்தும்" மது ஸ்ரீதரன்



மே-2020 

"எண்ணும் எழுத்தும்"
மது ஸ்ரீதரன்

பக்கங்கள்    152                        விலை ரூ 150 /-




அறிவியல், சங்க இலக்கியம்சினிமா என பல்வேறுபட்ட விஷயங்களைத் தன் நூதனமான பார்வையில்புதுவிதமான  எழுத்து நடையில் பகிர்கிறார்   இளைஞர் மது ஸ்ரீதரன்.  வருங்கால தமிழ் இலக்கிய உலகின் செழுமைக்கு நம்பிக்கை தரும் இவரது கட்டுரைகள் முகநூலில் பலராலும் பாராட்டப் படுபவை.

தமிழின் எண்களையும் எழுத்துக்களையும் இணைத்து அதுசார்ந்த அறிவியல்,இலக்கியத் தகவல்களோடு வெளியாகும் இக்கட்டுரைகளை ஆழ்ந்து வாசிக்கும்போது சுவாரசியம் கூடுவது நிச்சயம்.






இன்றே சிறுவாணியில் சேருங்கள்....தாமதமாக ஆக அந்தந்த மாத  பொக்கிஷத்தை இழக்கிறீர்கள்  

 சிறுவாணியின் நால்வர்

 கல்லும் மண்ணும்:/  
                                  / வானம்அன்று நீலமாகவே இருந்தது..அதில் உயிர் இல்லை. நோயில் படுத்துவிட்ட தாயைப்பார்க்கும் குழந்தை போல வெறித்தபார்வையோடு நிலம் வானத்தைப்பார்த்தபடிஉள்ளது/
                                                                 /க.ரத்னம்

எண்ணும் எழுத்தும்:

                            /முதல் திவ்ய தேசம் திருவரங்கம் அன்று.நம்சிறுவரங்கமான நம்உடம்பேமுதல்திவ்யதேசம்/
                                                           /மதுஸ்ரீதரன்

இலக்கியப்படகு:
                       /மேல்நாட்டாரைப்பார்த்து அவர்களைப்போல்எல்லாத்துறைகளிலும் பாவனை செய்யும்நம்மவர் பேச்சாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதையும் கற்றுக்கொள்ளவேண்டும்/
                   ்                         திருலோக சீதாராம்

பலநேரங்களில்பலமனிதர்கள்..
                        ./மரணோபராந்த் ( மரணத்துக்குப்பிறகான) விருது கொடுக்கமுன்வந்தால்அவர.குடும்பத்தினர் நிராகரிக்கவேண்டும்..அப்போதுதான் சுஜாதா ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கும்/
                           ்                     பாரதி மணி

Saptharishi lasara
-----------------------------------------------------------------------------------------------------------------


ஏப்ரல்-2020 "பல நேரங்களில் பல மனிதர்கள்" பாரதிமணி








ஏப்ரல்-2020  வெளியீடு

"பல நேரங்களில் பல மனிதர்கள்"
பாரதிமணி

பக்கங்கள்    204                         விலை ரூ 200 /-



 சிறுவாணி வாசகர் மையத்தின் நான்காம்ஆண்டின் (ஏப்ரல்-2020)

முதல்நூல்
---------------------------------------------------------------------------------------------------------------------------


நாடகக் கலைஞர்,திரைப்பட நடிகர் மட்டுமின்றி எழுத்தாளர் "பாட்டையா" எனப்படும் பாரதிமணி அவர்களின் அனுபவங்களின் முதல் தொகுப்பு. அக் காலகட்டத்தின் சரித்திரம்.


சிக்கலற்ற மொழிநடை,எளிய பிரயோகங்கள்,நகை ஊடாடும் வெளிப்பாடு என நுண்தகவல்களாலான, ஒரு தலைமுறையின் பிரதிநிதியின், குட்டிச் சுயசரிதை.



மனோலயங்களின் தாலாட்டு       கட்டுரை - உஷாதீபன்  
பல நேரங்களில் பல மனிதர்கள் -பாரதிமணி 
-------------------------------------------------------------------------- 
 எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிட வேண்டும் என்றால் இப்படித்தான் சொல்லியாக வேண்டும்.
 “சமீபத்தில் இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு கனமான புத்தகத்தைப் படித்ததில்லை.” 
 கனமென்றால் தடிமன் அல்ல. விஷய கனமய்யா விஷய கனம். இந்த வாழ்க்கையில் கிடைக்கும் அநாயாசமான, அற்புதமான அனுபவங்களினால்தான் இந்த விஷய கனம் ஒருவனுக்கு உகந்ததாகிறது என்பது உண்மையானால் அது இந்த ஆசிரியருக்கு சாலப் பொருந்தும். 
 மனதில் சுமையுமில்லாமல், எந்தவித கர்வமுமில்லாமல், நீங்கள்லாம் என்னய்யா ஆளு என்று மற்றவனை நினையாமல், நான்பாட்டுக்குச் சொல்லிக் கொண்டு போகிறேன், நன்றாய் இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள் என்று ஒரு மனிதன் தன் அத்யந்த அனுபவங்களை எடுத்து வைக்கப் போக, அடேயப்பா, இந்தக் குறுகிய வாழ்க்கையில் இந்த மனுஷனுக்குத்தான் எத்தனைவிதமான அனுபவங்கள், எவ்வளவு மனிதர்கள்? நமக்கெல்லாம் இப்படி எதுவுமே கிட்டவில்லையே என்ன வாழ்க்கை வாழ்ந்தோம் போங்கள் என்று இதுவரையிலான வாழ்க்கையும் வீணாய் விட்டதோ என்கிற மாதிரியான ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிகறது இந்த அரிய புத்தகம். திரு பாரதி மணி அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே நம் சிரம் தாழ்ந்த வணக்கங்களை அந்த வகையில் சொல்லிவிட்டுத்தான் இந்தக் கட்டுரையை இங்கே ஆரம்பித்தாக வேண்டும். அதுதான் உகந்த நியாயம்.  
 வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், விதம் விதமான புத்தகங்களாகத்தான் தேடுகிறார்கள். வெறும் கதை, கவிதை என்று அடங்கிவிட மாட்டார்கள். கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் , ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுகள், வரலாறுகள் என்று போய்த்தான் ஆக வேண்டும். ஒரு நவீனத் தமிழிலக்கிய வாசகன், தன்னைத் தேர்ந்த வாசகனாக அவனுக்கு அவனே ஒரு குறிப்பிட்ட தகுதியோடு நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமாயின் அவன் தன் வாசிப்புத் தளத்தைப் பலபடிகளில் விரித்துத்தான் ஆக வேண்டும். 
 புத்தகங்கள் ஏராளமாக வந்த வண்ணம் இருக்கின்றன. அவைகள் வெளிவரும் வேகத்திற்குப் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. வெளிவரும் புத்தகங்களையெல்லாம் வாங்கிக் குவிக்கவும் முடியாது. அவைகள் எல்லாவற்றையும் படித்துத் தீர்க்கவும் இயலாது. வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களையே படித்துத் தீர்க்க வேண்டுமே, ஆண்டவா, எனக்கு நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடு என்று மனம் அவாவுகிறது. 
 அப்படியாக வெளிவருபவையெல்லாம் வாசிப்புக்கு உகந்தவையாக இருந்து விடுகின்றனவா? என்று ஒரு கேள்வி விழுகிறது இங்கே! வாசிப்புக்குத் தகுதியுடையவையாக எல்லாமுமா அமைந்து விடுகின்றன? விறு விறுவென்று புரட்டுதலுக்கும், இது இவ்வளவுதான் என்று சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து, நேரத்தை வீணாக்காமல் அடுத்ததைக் கையில் எடுப்பதற்கும் என்றுதான் ஒரு நல்ல வாசகனால், ஒரு தீவிர வாசகனால் தன்னை நகர்த்திக் கொண்டு போக முடியும். 
 முதலில் வார்த்தை வார்த்தையாகப் படித்து, பிறகு இரண்டு மூன்று வார்த்தைகளைச் சேர்த்துச் சேர்த்துப் படித்து, பின்பு வாக்கியங்களாகப் படிக்க ஆரம்பித்து, பிறகு பத்தி பத்தியாக நகர்ந்து, தனது வாசிப்புப் பழக்கத்தின் வேகத்தைக் கூட்டினால்தான் ஒருவன் அதிகமான புத்தகங்களைப் படித்துத் தீர்க்க முடியும். 
 நிறையப் படிக்க வேண்டும் என்கிற ஆசை எப்பொழுது ஏற்படுகிறது. பிறவியிலேயா வந்து விடுகிறது? படிக்கப் படிக்க, படிக்கப் படிக்க அந்த ஆவலும் வேகமும் தானே கூடுகிறது.
 ஜனரஞ்சகமான இதழ்கள், அதிலுள்ள கதைகள், கவிதைகள், என்று ஆரம்பித்தவன் நாளடைவில்  அவன் வாசிப்பில் ஏற்படும் தீவிரத்தன்மையை உணர்ந்து, சிற்றிதழ்கள் பக்கம் வந்து மெல்ல மெல்ல அமிழ்ந்து பிறகு விஷய ஞானம் தேடி, விதவிதமான புத்தகங்களை நாடி, ஐயோ இத்தனை காலம் இவையெல்லாம் கண்ணுக்கும், கருத்துக்கும் படாமல் வீணடித்து விட்டோமே என்று மனம் புழுங்கி இனி அவ்வாறு விடுவதற்கில்லை என்கிற முடிவுடனே அதி தீவிரத் தன்மையை தன் வாசிப்புப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து, பரந்து பட்ட விஷய ஞானம் உள்ளவனாக, விவாதக் களஞ்சியமாக  தன்னை உருமாற்றிக் கொள்ளத் தொடர்ந்து முயன்று கொண்டேயிருக்கிறான். இப்படியான ஒரு தீவிரத் தன்மையுள்ள ஒரு வாசகன் நாளடைவில் முதிர்ச்சியடைந்து, படைப்புத் தொழிலுக்குள் புகுந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளதே! 
 எந்தவொரு வாசகனும் தன் வாசிப்பனுபவத்தில் ஏற்பட்ட உந்துதலில் தன்னாலும் முடியுமே என்பதாக மளமளவென்று ஒரு பத்திருபது சிறுகதைகளையோ, கவிதைகளையோ எழுதிவிட முடியும்தான். பிறகுதான் அவனுக்குள் ஒரு தேக்கம் ஏற்படும். 
 சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்றோ, என்ன புதிதாகச் சொன்னோம் என்றோ வேறுவகையில் சொல்லியிருக்கலாமோ என்றும் கேள்விகள் அவனுக்குள் பலபடியாய் விழும்போது அவன் எழுத்து தடைப்பட ஆரம்பிக்கிறது. 
 இந்தக் கட்டத்தில் வெறும் வாசிப்போடு நிறுத்திக் கொண்டவர் பலர். தொடர்ந்து முயன்றவர் சிலர். 
 என்னதான் முயன்றாலும், முக்குளித்தாலும், எந்த எழுத்தில் உண்மையிருக்கிறதோ வெளிச்சமிருக்கிறதோ அது, தானே நிற்கும் என்பதுதான் இன்றுவரையிலான சத்தியமான உண்மை. மற்றவையெல்லாம் நாஞ்சில் நாடன் சொல்வதுபோல் இருபது முப்பது வருடங்களுக்குப் பிறகு காற்றில் கரைந்து காணாமல் போவதுதான். மகாத்மாவின் சத்தியசோதனையே இதற்கு சான்று. எத்தனை முறை படித்தாலும் உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டே செல்லும் சக்தி அந்த நூலுக்கு உண்டு. 
 ஏராளமான உண்மைகளோடும், புனைவுகளோடும், அற்புதமான நிகழ்வுகளையும், சகிக்க முடியாத கசடுகளையும் உள்ளடக்கி ஆயிரக்கணக்கான பக்கங்களோடு புத்தகங்கள் நாளுக்கு நாள் வந்து குவிந்தவண்ணம்தான் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் எந்த அளவுக்கு மனதுக்கு நிறைவு தருகின்றன என்பதாக ஒரு கேள்வி; இருந்து கொண்டுதான் இருக்கிறது. 
அதெல்லாம் எதுக்கு? பிரத்யட்சமான நிகழ்வுகள் இந்தோ இருக்கு. இந்தா வாங்கிக்கோ... என்று பளிச்சென்று வெள்ளிடைமலையாய் (பழைய வார்த்தை) ஒரு புத்தகம் வந்திருக்கிறதென்றால் அது இதுதான் என்று உரத்துச் சொல்லலாம். அது:
 திரு பாரதி மணி அவர்கள் எழுதிய ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ 
 இந்தப் புத்தகத்தில் காணும் வாழ்வனுபவங்களை விரிவான டைரிக் குறிப்பாக வரிசையிட்டு, ஒரு மனிதனின் தேர்ந்த முதிர்ச்சியான சமூக ஆவணமாக உருமாற்றி அற்புதமான ஒரு நாவலாக இதை உருவாக்கியிருக்கலாமே என்றுதான் தோன்றியது எனக்கு. 
 ஒரு மனிதனுக்கு சொத்து அவன் சேர்த்து வைத்திருக்கும் பணமா? அவன் வாங்கிப் போட்டிருக்கும் இடங்களா? அவன் கட்டி நிறுத்தியிறுக்கும் வீடுகளா? பங்களாக்களா? அவன் வைத்திருக்கும் வாகனக் கூட்டமா? அவனிடமிருக்கும் தங்கப் பொக்கிஷமா? வித விதமான உடை வகைகளா? தேடித் தேடித் தின்னும் உணவு வகைகளா? எது? 
 எண்ணிலடங்காத சுற்றமும் நட்பும்தானய்யா ஒருவனின் அத்யந்த சொத்து. மனிதர்களைச் சேர்த்து வைத்திருக்கிறான் பார்! அதுதானய்யா மிகப் பெரிய சொத்து! அதைவிட ஒரு பெரிய சொத்து உண்டா என்ன? 
 வாழ்க்கையின் அர்த்தம் எங்கே பரிபூரணத்துவம் அடைகிறது? சுற்றமும் சூழலும் வைத்துத்தானே? 
 அடேயப்பா! இந்த மனிதனின் வாழ்க்கையில்தான் எத்தனைகள் நிகழ்வுகள்? எவ்வளவு அனுபவங்கள்? எல்லாவற்றையும் சொல்லக் கூடிய வேகம். எதையும் மறைக்காத உண்மை. இப்படி வெளிப்படும்போது எத்தனை பரிமளிக்கிறது? 
 கண்ணதாசனின் வனவாசத்திலும், மனவாசத்திலும் கிடைத்த நெருக்கம் இந்தப் புத்தகத்திலும் கிடைக்கிறதே!
 வேகமான மொழிநடை. அதற்கென்று பிரயத்தனப்படாத தன்மை. எளிமையான வார்த்தைகள், வெளிப்படையான அனுபவப் பகிர்வுக்கிடையே குதித்தோடும் நகைச்சுவை. எப்படி இவருக்கு இப்படி ஒரு எழுத்து சாத்தியமானது? 
 அது வருமய்யா. வெள்ளை மனதோடு எதையும் அணுகினால் தானே வரும்.மடியில் கனமிருநதால்தானே வழியில் பயம்.  எனக்கு யாருக்காகவும், எதையும் மறைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. விரிந்த அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன். வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். வேண்டாததை விட்டு விடுங்கள். 
 விருட்டென்று பாயை விரிப்பதுபோல் விரித்துப்; போட்டு விட்டார் பாரதி மணி. படிக்கும் வாசகன் பிரமிக்கிறான்.
 இவரின் முதல் புத்தகமா இது? 
 மாங்கு மாங்கென்று ஐநூறு ஆயிரம் பக்கங்கள் நாவலும், சிறுகதைகளுமாய் எழுதித் தள்ளுவதற்கு இம்மாதிரியான தகவல் களஞ்சியங்கள் அடங்கிய கட்டுரைகள் எத்தனை அர்த்தமுள்ளவை? – நாஞ்சிலார் அவர்களின் ஆதங்கம் இது. 
 ஏதோவோர் படத்தில் நாகேஷ் சொல்லுவார்: 
 ‘என்னதிது, எண்ண முடிலயா? எண்ணி முடிலயா? என்ன முடில? எனக்கு எதுவுமே முடில...என்று. 
 இங்கே எனக்குச் சொல்லி முடில...அவ்வளவுதான். 
 சில நேரங்களில் சில மனிதர்களைத்தான் நாம் நம் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம்.. ஏனெனில் பலருடைய வாழ்க்கையின் எல்கை மிகக் குறைவு. எனவே அவர்களின் அனுபவங்களும் குறைவு. 
 ஆனால் தலைப்புக்குப் பொருத்தமாய் பாரதிமணி அவர்களின் அனுபவ எல்கை எல்கையற்றது. ரொம்பவும் விரிவானது. பலருக்கும் கிட்டாதது. பலரையும் ஏங்க வைப்பது. 
 எவ்வளவு உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், இந்த மனிதர் செயல்பட்டிருக்கிறார் என்று நாம் பிரமிக்கத்தான் வேண்டியிருக்கிறது. 
 குறைந்தது ஐம்பது ஆண்டுகளிலான அவரது டில்லி அனுபவங்கள் மிகவும் சுவையாகவும், கவனமாகவும், கருத்தோடும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. நம் மனதிற்கும், செயலிற்கும், உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கவல்லவை அவை. 
 ராஜிவ்காந்தியைச் சந்தித்ததும், Nஉஷக் முஜிபுர் ரஉற்மானுனடான அனுபவங்களும், அவரது மகள் Nஉஷக் உறசீனாவுடனான சந்திப்புகளும், சுப்புடுவுடனான பழக்கங்களும், தேசாய் அவர்களின் மகன் காந்திதேசாய்யுடனான விபரீத சந்திப்புகளும், சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதன் இவர்களுடனான நினைவுகளும் மறக்க முடியாதவையாய் புத்தகம் நெடுகிலும் நம்மைக் கைகோர்த்து அழைத்துச் செல்கின்றன. 
 ஒவ்வொரு கட்டுரையாய்ச் சொன்னால்தான் மனசு ஆறும். பிறகு புத்தகத்தை இதுலேயே படித்து முடித்து விட்டதாகத் தோன்றி விட்டால்? 
 எனவே அனுபவப் பகிர்வை உடனிருந்து உள்ளே புகுந்து மூழ்கி முக்குளித்து வெளியே வாருங்கள். மனசுக்கு உண்மையான, சத்தியமான ஒரு நிறைவை அடைவீர்கள். 
 முதலும் கடைசியமான ஒரு புத்தகம் என்று ஓரிடத்தில் சொல்கிறார் ஆசிரியர். இந்த எழுத்து அனுபவத்தைப் பார்க்கும்போது இது முதல் புத்தகமுமல்ல, இனி வரப் போகும் புத்தகங்களும் இதற்கு ஈடாக அமையப் போவதுமல்ல என்று அனுபவச் செழுமையை நெருக்கமாகச் சொல்லத் தோன்றுகிறது. 
 டில்லியின் நிகம்போத் சுடுகாடுபற்றி இவர் கூறுகையில் மனது கனத்துப் போகிறது. எல்லாக் கட்டுரைகளையும் படித்து விட்டு கடைசியாக அதை வைத்துக் கொள்வோம் என்று நானே வகுத்துக் கொண்டு படித்து முடித்த போது உள்ளே ஒரு வெற்றிடம் தானே விழுந்து போனது. 
 எழுத்தை அடையாளம் காண்பது பதிப்பகங்களின் தலையாய பணி. உயிர்மை அதைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது. தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டுமிருக்கிறது. பதிப்பகங்களை அடையாளம் காண்பது ஒரு தேர்ந்த வாசகனின் பணி. புத்தக விரும்பிகள்  அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு அருமையான அற்புதமான நூல் இது!
 ---
Ushadeepan sruthi ramani
----------------------------------------------------------------------------------------------------------------------
நான் படித்த புத்தகம்

பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரை தொகுப்பு)

ஆசிரியர்: திரு பாரதி மணி

முதல் பதிப்பு: டிசம்பர் 2018

சிறுவாணி வாசகர் மையத்துக்காக
முதல் பதிப்பு: ஏப்ரல் 2020 – ISBN: 978-81-942051-7-3

வெளியீடு: 

பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், 
சின்னம்மாள் வீதி, 
கே.கே.புதூர் அஞ்சல். கோயம்புத்தூர் – 641 038

பக்கங்கள் 204 – விலை ரூ.200

புத்தகங்கள் தேவைக்கு தொடர்புக்கு:

திரு ஜி.ஆர்.பிரகாஷ் கோயம்புத்தூர் – 

94881 85920  //  99409 85920

siruvanivasagar@gmail.com

புத்தக ஆசிரியர் ஐயா 
திரு பாரதி மணி அவர்கள் பற்றி:

இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.  
டில்லியில் வாழ்நாளில் பெரும்பகுதி கழித்தவர். 
ஓய்வுக்காலத்தில் பெங்களூரில் வசிக்கிறார்.  இவருக்கு நாடகம் மிகவும் பிரியம்.
நிறைய சினிமாக்களில் நடித்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலில், 
டில்லி கார்ப்பொரேட் வட்டாரத்தில்
இவர் ஒரு பெரிய ஆளுமை.  

ஜவஹர்லால் நேரு அவர்களுடன் மோதிலால் நேரு நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சம்பந்தமாக பேசியிருக்கிறார்.  

இந்திரா காந்தி அப்போது மிகவும் இளம் வயது. 

 ராஜீவ் காந்தி அவர்களை டில்லி விமான நிலையத்தில் மேலிடத்து உத்தரவு காரணமாக (அப்போது அவர் பிரதமராகவில்லை)
3 மணி நேரங்களாவது தாமதப்படுத்துவதைப் பார்த்திருக்கிறார்.

இன்னும் மொரார்ஜி தேசாய் அவர்களின் மகன் காந்தி தேசாய் பற்றியும் செய்திகள்
(உவப்பான செய்திகள் இல்லை) வைத்திருக்கிறார்.  

வங்க தேச அரசியலில் முக்கியமான நபர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார், 
அரசியல் ரகசியங்களைப் பகிர்ந்திருக்கிறார், அங்குள்ள நாகப்பட்டினத்தமிழர்கள் பற்றி எழுதியிருக்கிறார்.
இந்தப்புத்தகம் ஒரு சுடுகல் போல, 
எந்தப் பக்கத்தில் எந்த சூடான தகவல் இருக்கிறது
என தெரியாது.

இந்தப் புத்தகம் பற்றி ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு நிலைத்தகவல் எழுத நினைக்கிறேன்.

இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம்.  
அனைவரும் வாங்க வேண்டிய ஒன்று.
நான் 10 புத்தகங்கள் தேவைக்கு எழுதப் போகிறேன்.

ஐயா பாரதி மணி அவர்களை அனைவரும் பாட்டையா என அழைக்கிறார்கள்.
நானும் இனிமேல் அப்படியே சொல்கிறேன்.  

இவர் சில வருடங்களுக்கு முன்
திருநெல்வேலி வந்திருந்தார்; பயணத்துக்கு ஏற்பாடு செய்தும் முடியவில்லை,
அந்த இழந்த வாய்ப்புக்காக வருந்துகிறேன்.

பாட்டையா அவர்கள் மாமனிதர்.

நாளையிலிருந்து தொடர்கிறேன்.

நன்றி  நண்பர்களே.
N.Rathnavel
-------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் படித்த புத்தகம்

பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரை தொகுப்பு)

ஆசிரியர்: திரு பாரதி மணி

முதல் பதிப்பு: டிசம்பர் 2018

சிறுவாணி வாசகர் மையத்துக்காக

முதல் பதிப்பு: ஏப்ரல் 2020 – ISBN: 978-81-942051-7-3

வெளியீடு:
பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால்,
சின்னம்மாள் வீதி,
கே.கே.புதூர் அஞ்சல். கோயம்புத்தூர் – 641 038

பக்கங்கள் 204 – விலை ரூ.200

புத்தகங்கள் தேவைக்கு தொடர்புக்கு:
திரு ஜி.ஆர்.பிரகாஷ் கோயம்புத்தூர் –
94881 85920 // 99409 85920
siruvanivasagar@gmail.com

கட்டுரை 1 – 

அருந்ததி ராயும் என் முதல் ஆங்கிலப்படமும் – பக்கங்கள் 7  - 11

ஐயா பாரதி மணி அவர்கள் ஆங்கிலப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.  திரைப்படங்களில் நடித்தால் உலகெங்கும் அறியப்படுவோம் என்பது ஒரு காரணம்.  இவர் டில்லியில் தமிழ் நாடகங்களில் நடித்திருக்கிறார்.  அது ஒரு குறுகிய வட்டம் தான்.   இவர் இந்தி சீரியலில் நடித்தபின் டில்லியில் பார்ப்பவர்கள் எல்லோரும் பேசுகிறார்கள்.  இந்த limelight இவருக்கு பிடித்து விட்டது.  

BBC நிறுவனம் தயாரித்த – இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் கதை வசனம் எழுதிய ‘எலெக்ட்ரிக் மூன்’ படத்தில் நடித்திருக்கிறார்.  இந்தப்படத்தயாரிப்பு 45 நாட்களுக்குள் திட்டமிட்டபடி (வருடம் 1991) முடிந்து விட்டது.  அவர்கள் படத்தயாரிப்புக்கான முன்னேற்பாடுகளை எழுதுகிறார் – மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.  அவ்வளவும் well  planned & executed.  இவருக்கு அந்த காலகட்டத்தில் வாங்கிய சம்பளமும் அதிகம்.

எல்லாவற்றையும் விட இவரது கட்டுரைகளில் விஷயங்களைத் தூவிக்கொண்டே போவார்.  நீங்கள் தேடிக்கண்டு பிடித்து கற்றுக் கொள்ளவேண்டும்.

அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கிடைத்திருக்கிறது.  அருந்ததி ராய் NDTV பிரனாய் ராய்க்கு ஒன்று விட்ட சகோதரி என்பதும் முக்கிய தகவல்.

அருந்ததி ராய் பற்றி கூகுளில் தேடிப்படித்தேன்.

இன்னும் சுவையான சம்பவங்களுக்கு புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டுகிறேன்.

அடுத்து அடுத்த கட்டுரைக்கு....

பாராட்டுகள் பாட்டையா.
N.Rathnavel
---------------------------------------------------------------------------------------------------------------------
நான் படித்த புத்தகம்

பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரை தொகுப்பு)

ஆசிரியர்: திரு பாரதி மணி

முதல் பதிப்பு: டிசம்பர் 2018

சிறுவாணி வாசகர் மையத்துக்காக
முதல் பதிப்பு: ஏப்ரல் 2020 – ISBN: 978-81-942051-7-3

வெளியீடு:
பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால்,
சின்னம்மாள் வீதி,
கே.கே.புதூர் அஞ்சல். கோயம்புத்தூர் – 641 038

பக்கங்கள் 204 – விலை ரூ.200

புத்தகங்கள் தேவைக்கு தொடர்புக்கு:
திரு ஜி.ஆர்.பிரகாஷ் கோயம்புத்தூர் –
94881 85920 // 99409 85920
siruvanivasagar@gmail.com

கட்டுரை 2 – பக்கங்கள் 12 – 14

ராஜீவ் காந்தியின் பொறுமை

பாட்டையா அவர்கள் விமானத்தில் இருந்திருக்கிறார், வழியில் 
ரோம் நகரத்தில் 
ராஜீவ் காந்தி மனைவியுடன் குழந்தைகளுடன் (1978 – ஜனதா ஆட்சிக்காலம் –
இவர் பைலட்டாக பணி புரிந்து கொண்டிருந்தார்) விமானம் ஏறியிருக்கிறார்.
இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.
பாட்டையாவுக்கு பிரபலங்களிடம் அறிமுகம் செய்து கொண்டு பேசும் பழக்கம் இல்லை.

ராஜீவ் காந்தியைப் பற்றி பாட்டையா சொல்கிறார் – ரோசாப்பூ மாதிரி இருந்தார் என்று.

பாட்டையாவுக்கு டில்லி விமான நிலையத்தில் செல்வாக்கு அதிகம் –
எனவே இறங்கி வெளியேறுகிறார்.  டில்லி விமான நிலையத்திலிருக்கும்
அதிகாரி (மேஜர் சுந்தர ராஜன் அவர்களின் தம்பி ரங்கராஜன் – Customs Superintendent) நானும் வேலை முடிந்த வருகிறேன், உங்கள் காரிலேயே சென்று விடலாம் என்று சொல்லியிருக்கிறார்.  இவர் அங்கு கண்ணாடி அறையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

அங்கு ராஜீவ் காந்தி அவர்களுடன் சூட் கேஸ் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு சோதனை என்ற பெயரில் காக்க வைக்கப்பட்டிருக்கிறார் – கிட்டத்தட்ட 3 மணி நேரங்கள் – யோசித்துப் பாருங்கள் – நம் தமிழ் நாட்டில் ஒரு கவுன்சிலரை 10 நிமிடங்கள் எங்காவது
காக்க வைக்கப்பட முடியுமா?  

பாட்டையா உடன் இருந்த அதிகாரியிடம் கேட்டிருக்கிறார், என்னய்யா இந்த அநியாயம்,
நான் வெளியே வந்து அரை மணி நேரமாகி விட்டது, இவர் யார் என்று தெரியாதா, ஏன் இப்படிப் படுத்துகிறார்கள் என்று,

ஐயா, 
இவர் யார் என்று தெரியும், 
இவரை 3 மணி நேரமாவது காக்க வைக்க வேண்டும்,
சிரமப்படுத்த வேண்டும் – இது நார்த் பிளாக் உத்தரவு என்றார்களாம்.
3 மணி நேரங்கள் முடிந்து – பெட்டியில் அத்தனையையும் வைக்க முடியவில்லை,
ஒரு பெட் ஷீட்டில் பொருட்களை அள்ளிப்போட்டுக் கொண்டு  தோளில் போட்டுக் கொண்டு இயல்பாக உள்ள புன்னகையுடன் கிளம்பிச் சென்றாராம் 
திரு ராஜீவ் காந்தி – 
மாமனிதர்கள் மாமனிதர்கள் தான்.

அருமையான நினைவுப் பகிர்வுகள்.

ஒவ்வொரு கட்டுரையாக திரும்பத் திரும்ப படித்து எழுதுகிறேன்.
எனது மனைவியும் இந்தப் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாராட்டுகள் பாட்டையா

சிறப்பான புத்தகங்கள் வெளியீட்டுக்கு, 
புது விதமான முயற்சிக்கு
வாழ்த்துகள் 


நன்றி நண்பர்களே
N.Rathnavel
--------------------------------------------------------------------------------------------------------------
நான் படித்த புத்தகம்

பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரை தொகுப்பு)

ஆசிரியர்: திரு பாரதி மணி

முதல் பதிப்பு: டிசம்பர் 2018

சிறுவாணி வாசகர் மையத்துக்காக

முதல் பதிப்பு: 
ஏப்ரல் 2020 – ISBN: 978-81-942051-7-3
வெளியீடு:
பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால்,
சின்னம்மாள் வீதி,
கே.கே.புதூர் அஞ்சல். கோயம்புத்தூர் – 641 038

பக்கங்கள் 204 – விலை ரூ.200

புத்தகங்கள் தேவைக்கு தொடர்புக்கு:
திரு ஜி.ஆர்.பிரகாஷ் கோயம்புத்தூர் –

94881 85920 // 99409 85920
siruvanivasagar@gmail.com

கட்டுரை 3 – பக்கங்கள் 15 – 20

சிரிப்பு தான் வருகுதையா!

இந்தக் கட்டுரை நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி,

கேள்வி கேட்க பணம் வாங்கி விபரமில்லாமல் மாட்டிக் கொண்ட உறுப்பினர்கள் பற்றி!

பாட்டையா அவர்கள் கோபத்திலும் சந்தோஷத்திலும் ஆங்கில வார்த்தைகளை
பயன்படுத்துகிறார் – 
நானும் அப்படித்தான் – 
அவர் எழுதிய வரிகள் நச்சென்று இருக்கும்.

முதலில் ஆங்கில வார்த்தைகளைக் கொடுக்கிறேன், பின் விபரங்கள் பதிவு மூலமே உங்களுக்குப் புரியும்.

Care takers

M.P.s may come and go but we are destined to stay here permanently

I am not your bloody boot leggar (இவைகள் கோபத்தில் உதிர்த்தவை)

நமது முன்னாள் முதலமைச்சர் திரு அண்ணாதுரை அவர்கள்  M.P. ஆக டில்லி சென்றபோது அவரது நட்பை,
அவரது சினிமா அனுபவங்களை, பாட்டையாவுடன் ஸ்கூட்டரில் – DLO 7727 – 
சென்றதை எழுதியிருக்கிறார்.  
அந்த ஸ்கூட்டரில் யார் யார் பயணித்திருக்கிறார்கள் என்பதற்கு பட்டியல் போடுகிறார் – 
புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இங்கிருந்து தலை நகர் செல்லும் M.P. கள் ஆங்கிலமும் தெரியாமல் இந்தியும் தெரியாமல் அவஸ்தை படுவதை எழுதியிருக்கிறார்.  

இவர்களுக்கு –

முதல் முறை உறுப்பினர்களுக்கு இரு அறை விடுதிகளும்

மூத்தவர்களுக்கு 4 அறை விடுதிகளும் உண்டாம்.

இவர்கள் தெற்கே வரும் போது அறைகளைப்  பராமரிப்பவர்கள் தான் Care takers – 
பராமரிக்கச் சொல்லி விட்டு வருபவர்களும் உண்டாம், 
உள் வாடகைக்கு விட்டு
அந்த வாடகையை வசூல் செய்பவர்களும் உண்டாம்.  
இதை செய்பவர்கள் தான் Care takers – 

எனவே உறுப்பினர்கள் வரலாம், போகலாம், 
Care takers இடம் நிரந்தரம்,

அதனால் தான் பாட்டையா சொல்கிறார் 
M.P.s may come and go but we are destined to stay here permanently

உறுப்பினர்களுக்கு 1980 வாக்கில் உள்ள சலுகைகள்:
(இப்போது மாறியிருக்கலாம்)

வீடு இலவசம்

மின்சாரம் இலவசம்

தொலைபேசி – உள் நாடு & வெளி நாடுகள் பேச இலவசம்

மாதம் ஒரு முறை AIIMS சிகிச்சைக்கு ஒருவரை பரிந்துரைக்கலாம்

ரயிலில் குடும்பத்தோடு நண்பர்களையும் (escort) AC First Class அழைத்துச் செல்லலாம், 

இது தவிர வருடத்துக்கு ஒரு அளவு விமானப்பயணம் இலவசம்

வருடத்துக்கு ரூ.2 கோடி தொகுதி 
மேம்பாட்டுத் திட்டம்
இன்னும் சலுகைகள் நிறைய, 
இவர்களுக்கு சம்பளம் உயர்த்துவது இவர்களே தான்,
நமக்கு நாமே திட்டம் தான்.

திரு சோ அவர்கள் துக்ளக் நாடகத்தில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது.
எல்லோரும் சுல்தான்களா?  அவரவர் ஊருக்கு அவரவர் சுல்தான் என்பார்.

இதிலும் மது தண்டவதே என்பவர் ரயில்வே மந்திரி ஆன பின்னும்,
அவர் மனைவி தயார் செய்த டீயை அவர் எடுத்து வந்து இவருக்கு கொடுத்திருக்கிறார் என்று எழுதுகிறார். 
 நிறைய தமிழக உறுப்பினர்கள் பற்றி நன்கு குறிப்பிடுகிறார்.

வட இந்திய உறுப்பினர் இவரிடம் போன் செய்து விஸ்கி பாட்டில்  கேட்டதை கொடுத்திருக்கிறார், நட்பின் பேரில்.  அவரது அடிக்கடி போன் தொந்தரவு தாளாமல் சொன்ன வார்த்தைகள் தான் இவை - 
I am not your bloody boot leggar

சில உறுப்பினர்கள்  கேள்வி கேட்பதற்காக கையூட்டு வாங்கி பத்திரிக்கைகளிடம் – பத்திரிக்கையாளர்கள்  வைத்த trap இல் மாட்டிக் கொண்டார்களாம்.  அதைப்பற்றி சுவைபட எழுதுகிறார்.

பாட்டையா டில்லியில் நிறைய கம்பெனிகளுக்கு lobbyiying பணி செய்திருக்கிறார்.  அதனால் சொல்கிறார், இந்த உறுப்பினர்கள் கள்ள ஓட்டு வாங்கி வந்தவர்கள் போல் தெரிகிறார்கள், இவர்கள் கட்சிக்காரர்களுக்கே இவர்களை அடையாளம் தெரியுமா என தெரியவில்லை என்கிறார்.  

நானே ஒவ்வொரு மாதமும் 6 M.P. களுக்கும் 
2 மந்திரிகளுக்கும் பணம் கொடுத்து வந்திருக்கிறேன் என்கிறார்.  தொழிற்சாலை நடத்தியவர்களுக்கு இந்த மாமூல் நடைமுறை  தெரியும்.

அழகாக முடிக்கிறார் –
பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் இந்த 10 பேர் மட்டுமே லஞ்சம் வாங்குவபர்களென்றும்,
அவர்களுக்கு  தகுந்த தண்டனை வழங்கி இந்தியப் பாராளுமன்றத்தின் 
இறையாண்மையைக் காப்பாற்றி விட்டோம் என்றும்  சத்தியமாக நம்புவோம்!
வாழ்க ஜனநாயகம்!
வளர்க இந்தியா!

ஆஹா.  ரசித்து ரசித்து மறுபடியும் படிக்கிறேன்.

பாராட்டுகள் பாட்டையா.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.  இந்தப் புத்தகம் மட்டும் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். 

 அல்லது 
கோயம்புத்தூர் சிறுவாணி வாசகர் மையம் புத்தக வெளியீட்டுக்கு திட்டம் வைத்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு மாதமும் சிறந்த புத்தகம் தேர்ந்தெடுத்து
அந்தந்த ஆசிரியர்களின் ஒப்புதலுடன் அவர்களுக்கு ராயல்டி கொடுத்து அச்சிட்டு உறுப்பினர்களுக்கு அனுப்புகிறார்கள்.  

வருட கட்டணம் ரூ.1,600.00(Rupees One Thousand Six Hundred Only) வைத்திருக்கிறார்கள்.  

ஒரு வருடத்தில் உங்களுக்கு உத்தேசமாக ரூ.2,500.00 அளவுக்கு புத்தகங்கள் வரும் – இது கொஞ்சம் முன் பின் இருக்கலாம்.  

நான் இந்த வருடம் தான் கட்டியிருக்கிறேன்.  4 மாதங்களுக்கு ரூ.700.00க்கு புத்தகங்கள் வந்திருக்கின்றன்.  இவர்கள் புத்தகத்தில்  மேல் உள்ள ஆர்வத்தில், வாசிப்பை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்கிறார்கள்.  இது லாப நோக்கில் செயல்படும் அமைப்பு இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

அந்த விபரங்கள் அடங்கிய பட்டியலை இத்துடன் இணைத்திருக்கிறேன்.  நண்பர்கள் பணம் செலுத்தி எனக்கு விபரம் கொடுத்தால் என் பக்கத்தில் அவர்களைப் பற்றி எழுதி நன்றி தெரிவிக்கிறேன்.

பாராட்டுகள் 

நன்றி நண்பர்களே
N.Rathnavel
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 'பல நேரங்களில் பல மனிதர்கள்'. --
பாரதி மணி
------------------------
10.08.2020

திரு. பாரதி மணி அவர்களுக்கு

சமீபத்தில், சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடான தங்களின் “பல நேரங்களில் பல மனிதர்கள்” படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் பாக்கியம் கிடைத்தது என்று சொல்லலாம்.  எல்லா கட்டுரைகளுமே அருமை.

வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நாம் எல்லோருமே பல்வேறு மனிதர்களைச் சந்திக்கின்றோம். பலருடன் பல விதமாகப் பழகும் வாய்ப்பும் பல விதமான அனுபவங்களும் - பல இன்பமளிக்கக் கூடியவையும் சில வருத்தப்பட வேண்டியதும் - சேர்ந்து கிடைக்கின்றன. அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதே கடினம் என்றால் அவை எல்லாவற்றையும் வாழ்வின் பின் பாதியில் இன்னொரு நாளில் மீண்டும் அசை போட்டு நினைவு படுத்தி, வார்த்தைகளில் வடிப்பது என்பது மிக மிகக் கடினம். அந்தக் கலை தங்களுக்கு கைவந்த கலையாகி இருப்பது தங்கள் கட்டுரைகளில் தெளிவாகத் தெரிகின்றது. முக்கியமாக, திருவனந்தபுரம்/திருவிதாங்கூர் நினைவுகளும், டெல்லி நிகம்போகாட் அனுவங்களும். முன்னது என்னை என் பள்ளி நாட்களுக்கு இட்டுச் சென்றது என்றால் பின்னது என்னை என் டெல்லி நாட்களுக்குக் கொண்டு சென்றது. நான் (பழைய) தஞ்சை மாவட்டத்தின் மாயவரத்தில் (இன்றைய மயிலாடுதுறை) பிறந்து, படித்து வளர்ந்தவன். அதே போல், 1984 முதல் 1988 பாதிவரை டெல்லி வாசியாக இருந்தவன் (ஃபரீதாபாத், பின்னர் இந்திரபுரி). அதனால் டெல்லி நகரைப் பற்றியும் அந்த நகர் வாழ் மக்களைப் பற்றியும் தாங்கள் எழுதி இருப்பது எனக்கு என் நினைவுகளை மீண்டும் புத்துயிர் கொள்ளச் செய்து விட்டது.

தாங்கள் கட்டுரைகளில் மூன்று விஷயங்கள் எனக்கு மிக முக்கியமாகத் தோன்றுகின்றன.

முதலாவது, இடங்கள், மனிதர்கள், நிகழ்ச்சிகள் பற்றி தாங்கள் கொடுத்திருக்கும் துல்லியமான குறிப்புகள். பங்களாதேஷ் விஜயம் பற்றிய விவரங்கள் மிக அருமை. ஒரு டைரிக் குறிப்பு போல வரிசையாக வந்து விழும் விவரங்கள்- இடங்களைப் பற்றிய வர்ணனைகள், பயணக் குறிப்புகள், சந்தித்த மனிதர்கள் பற்றிய விவரங்கள் இவற்றை (Flashback ஆக) மீண்டும் திரையில் பார்ப்பது போல எழுதி இருக்கும் பாங்கு.

இரண்டாவது, உங்களது நேர்மை மற்றும் துணிச்சல். தன்னுடைய மது அருந்தும் பழக்கத்தை கண்ணதாசனைத் தவிர இவ்வளவு நேர்மையாக, வெட்ட வெளிச்சமாக யாராவது எழுதி இருப்பார்களா என்பது சந்தேகமே. அரசியல் பிரமுகர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களையும் தைரியமாக யாராவது துணிந்து எழுதி இருப்பார்களா என்பதும் எனக்குத் தெரியவில்லை. மேலும் ‘அடல்ஸ் ஒன்லி” யான அந்த சம்ஸ்க்ருத ஸ்லோகத்தை விவரித்து எழுதவும் மிகுந்த துணிச்சல் வேண்டும்.

மூன்றாவது உங்கள் எழுத்து நடை. இவ்வளவு சுலபமாக, தெளிவான நீரோடை போல எழுதி இருக்கும் உங்கள் எழுத்துப் பாணி, நீங்கள் புதுமுக எழுத்தாளர் என்பதை சந்தேகிக்க வைக்கிறது.

இறுதியாக, நீங்கள் என் நாடக குரு திரு பூர்ணம் விஸ்வநாதனைப் பற்றி நினைவு கூர்ந்து எழுதி இருப்பதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நான் அவருடைய “பூர்ணம் நியூ தியேட்டரில்” 1979 முதல் நடித்துக் கொண்டு வருகிறேன். ‘கடவுள் வந்திருந்தாரி’ ல், மாடி வீட்டு சுந்தராகவும், நரேந்திரனின் விநோத வழக்கில் ‘பப்ளிக் ப்ராஸிகூட்டர் நாகராஜனாகவும், ‘அடிமைகளி’ல், சாமிநாதனாகவும் நடித்துக் கொண்டு இருந்தேன். இப்போது அவரின் சீடர்கள் அனைவரும் சேர்ந்து “குருகுலம் தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி” என்ற பெயரில் நாடகங்களை மேடை ஏற்றி வருகிறோம். எங்கள் குழுவிற்கு நான் இதுவரை எட்டு நாடகங்கள் எழுதி உள்ளேன். துரதிருஷ்டவசமாக, நான் டெல்லியில் இருந்த சமயம் தங்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால், அங்கும் என் நாடகப் பணி தொடர்ந்திருக்கலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நூலைப் படித்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் சென்னை வரும் சமயம், நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வேன்.

நன்றி

எஸ். கௌரிசங்கர்
S Gowrisankar
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பல நேரங்களில் பல மனிதர்கள் - சிறுவயதில் கிரீம் பிஸ்கெட் சாப்பிடும் நற்பேறு எப்போதாவது வாய்க்கும். கடக் முடக்கென்று கடித்துத் தின்றுவிட்டால் சீக்கிரம் தீர்ந்து விடுமே என்று அதை இரண்டாகப் பிரித்து, அதன் ஒரு பாகத்தில் மட்டும் ஒட்டியிருக்கும் கிரீமை கொஞ்சம் கொஞ்சமாக நக்கி நக்கித் தீர்த்துவிட்டு, பிறகு ஒவ்வொரு பாதியாக கொஞ்சமே கொஞ்சமாகக் கடித்துக் கடித்து ஒரு சின்ன பிஸ்கெட்டை ஒரு மணி நேரத்திற்கு ரசித்துச் சாப்பிட்ட அனுபவம் என் வயதொத்தவர்கள் அனைவருக்குமே இருக்கும். அப்படி ஒரு கிரீம் பிஸ்கெட்டாக பாரதிமணியின் பல நேரங்களில் பல மனிதர்களை துளித் துளியாக நான்கைந்து நாட்களாக ருசித்து ருசித்துப் படித்தேன்.- அற்புதமான மதிப்புரை.  எனது பக்கத்தில் பகிர்கிறேன்.  நன்றி எழுதித் தீராத பக்கங்கள்

Subbarao ChandraSekara Rao
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கடைசியாக எந்த புத்தகத்தை வாசித்தேன் என்று  நினைவில்லை. புதினங்கள் (புனைகதைகள்) வாசிப்பதெல்லாம் என்றோ வெறுப்பான பின், ஒரு மனிதனின் வாழ்வை வாசிப்பதே இதமாகிறது. இது மனமுதிர்ச்சியோ வயதுமூப்போ... 

ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் கற்பனை திறனை  தெரிந்து கொள்வதை விட ஒரு சாமானியனின் வாழ்வில் தெரிந்த கொள்ள ஏராளம் உண்டு. புதினங்கள் தரும் போதையை விட சாமானியனின் தினப்படி சமாளிபிகேஷன் தான் மனதோர ஜன்னலில் சாரலிடும்; நாளைக்கான வாழ்வை எதிர்கொள்ள சாமரம் வீசும். 

 பாரதி மணியின் பல நேரங்களில் பல மனிதர்கள். 

 காலஊர்தியில் பல ஆண்டுகள் அவருடன் பயணித்து பல மனிதர்களை பல சந்தர்ப்பங்களில் சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டு நாடோடிகளுக்கு இருக்கும் "போற எடத்துல எப்படி பொழைக்குறது" உட்பட பல கேள்விகளுக்கு விடைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொன்னார்.

ஒரு முறை கமலஹாசன், Woody Allen பற்றி சொல்லும் போது, "எங்க, நடுவுல சிரிச்சா அந்த நேரத்துல ரெண்டு ஜோக் போயிடுமோன்னு நகத்தை கடிச்சிகிட்டே கவனிக்கணும்" என்றார். இங்கே உள்ளூர் பிரமுகர் முதல் உலக தலைவர்கள் வரை பலரை பற்றி பேசுகிறார் மணி. யார் யாரென்று குறிப்பெடுக்கும் நேரத்தில் சில நபர்களையோ நிகழ்வுகளையோ  தவறவிடும் வாய்ப்பும் தவிர்க்கமுடியாதது.                   

படித்து முடித்து பின் அட்டையில் என் முழு வலக்கையால் மென்னழுத்தம் கொடுத்து மூடி வைத்து நகர்கிறேன். நான் அழுத்தியது புத்தகத்தின் பின்னட்டை அல்ல "It was nice travelling with you" என்று சொல்லி மணியின் இடக்கையை என் வலக்கையால் லேசாக அழுத்திவிட்டு கால ஊர்த்தியில் இருந்து இறங்கியது போல் உணர்கிறேன். 

அவரது நண்பர்கள் அவரைப்பற்றி 44 பக்கங்களில் சொல்வதை சுயநினைவுடனும் சலனமில்லா மனதுடனும்  தவிர்த்துவிட்டு வந்திருக்கிறேன். "நானே நேரா கேட்டு தெரிஞ்சிக்கிறேன்பா" என்ற எண்ணம் தான் காரணம். சாத்தியமா இல்லையா என்பது அவசியமற்றது. ஆனால் அந்த எண்ணம் எப்படி ஒரு முதல் முறை சந்திக்கும் நபரால் ஏற்படுத்தமுடிகிறது....? 


புத்தகத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் சிறுவாணி வாசகர் மையம்.9940985920

Soundarapandian  sundarrajan
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றே சிறுவாணியில் சேருங்கள்....தாமதமாக ஆக அந்தந்த மாத  பொக்கிஷத்தை இழக்கிறீர்கள்  

 சிறுவாணியின் நால்வர்

 கல்லும் மண்ணும்:/  
                                  / வானம்அன்று நீலமாகவே இருந்தது..அதில் உயிர் இல்லை. நோயில் படுத்துவிட்ட தாயைப்பார்க்கும் குழந்தை போல வெறித்தபார்வையோடு நிலம் வானத்தைப்பார்த்தபடிஉள்ளது/
                                                                 /க.ரத்னம்

எண்ணும் எழுத்தும்:

                            /முதல் திவ்ய தேசம் திருவரங்கம் அன்று.நம்சிறுவரங்கமான நம்உடம்பேமுதல்திவ்யதேசம்/
                                                           /மதுஸ்ரீதரன்

இலக்கியப்படகு:
                       /மேல்நாட்டாரைப்பார்த்து அவர்களைப்போல்எல்லாத்துறைகளிலும் பாவனை செய்யும்நம்மவர் பேச்சாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதையும் கற்றுக்கொள்ளவேண்டும்/
                   ்                         திருலோக சீதாராம்

பலநேரங்களில்பலமனிதர்கள்..
                        ./மரணோபராந்த் ( மரணத்துக்குப்பிறகான) விருது கொடுக்கமுன்வந்தால்அவர.குடும்பத்தினர் நிராகரிக்கவேண்டும்..அப்போதுதான் சுஜாதா ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கும்/
                           ்                     பாரதி மணி

Saptharishi lasara
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....