Saturday, March 27, 2021

April-2021- சிறுவாணி சிறுகதைகள்-2020


                                            சிறுவாணி சிறுகதைகள்-2020


சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020 இல் பரிசுபெற்ற கதைகள்.










11.04.2021 அன்று நடைபெற்ற நாஞ்சில்நாடன் விருது-2021 விழாவின் புகைப்படத் தொகுப்பு-1
நன்றி- திரு Iyyappa Madhavan


--------------------------------------------------------------------------------------------------------------------

11.04.2021 அன்று நடைபெற்ற நாஞ்சில்நாடன் விருது-2021 விழாவின் புகைப்படத் தொகுப்பு-2
நன்றி- திரு Abi bhaskar                                                                                                                                                                                      https://photos.app.goo.gl/DgZvVXCFQ979vqqL7

--------------------------------------------------------------------------------------------------------------------

நாஞ்சில்நாடன் விருது 2020

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்புரை


எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை


டாக்டர் ஜெ.பாஸ்கரன் வாழ்த்துரை


விருதாளர் மு.ஹரிகிருஷ்ணன் ஏற்புரை


-----------------------------------------------------------------------------------------------------------------
பெருந் தீ-   

எழுத்தாளர்  @SS Manimala Mathiyazhagan

பெருந் தீ கதையை தற்பொழுது வாசித்து முடித்தேன். கிராமத்து நடையில் கடலூருக்கும் பாண்டிக்குமான பயணத்தில் பதைபதைப்போடு வாசிப்பனுபவமாய் தந்தது. நல்ல எழுத்து நடை. கணநேரம் கூட வாசகனை யோசிக்க விடாமல் அந்த சூழலுக்குள் இங்குமங்குமாய் அலைக்கழித்த வண்ணமிருந்தது. சட்டென அந்த கடைசி முடிச்சை செவ்வந்தீ என்று பெருந் தீ யாக மாறிவிட்டது.

சமீபத்தில் ஒரு இளவயது பெண் எலிமருந்தை குடித்து விட்டு மாலையே உப்புத்தண்ணீரைக் குடித்து வாந்தி எடுத்துள்ளார். ஒருவாரம் வாந்திக்கு மட்டும் வைத்தியம் பார்த்து  உண்மை தெரிந்து உறவினர்கள் சேலம் மருத்துவமனைக்கு  அழைத்து வந்து சிகிச்சைத் தர கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. தெரிந்த ஸ்டேன்லி மருத்துவரிடம் பேசும்போது அவர்கள் டாக்ஸிகாலஜி டிபார்ட்மெண்டை பற்றி சொல்லி விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் போன்ற மாவட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்வதால் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொண்டார்கள். இந்த கதை அந்த சம்பவத்தையே நினைவுபடுத்தியது. அந்த பெண் இப்பொழுது நலமாக உள்ளார்.

வாழ்த்துகள் 

Maheshkumar selvaraj
-----------------------------------------------------------------------------------------------------------------------
வெயில் அணிந்தவன்

@SS 2 Rama Balajothi

சற்றுமுன் உங்களின் வெயில் அணிந்தவன் சிறுகதையை வாசித்தேன். வெயில் அணிந்தவன் எனத் தலைப்பிட்டு மழையினூடாக நனைய வைத்துள்ளீர்கள். ஒரு சேர குற்றாலத்திற்கும் தேவிப்பட்டிணத்திற்கும் மழையின் இடுக்குகளில் கனவுகளைப் போல் அழைத்துச் சென்றுள்ளீர்கள். உங்கள் விவரணைகள் வாழ்வின் பாடுகள் என இவற்றை எதிர்கொள்ளும் தருணமுமாய் நீண்ட நெடியதொரு போராட்ட வாழ்வியலை பேசி கடைசியாக ஒரு பதைபதைப்பை கூட்டி கடவுளை குறியீடாக காட்டி தொலைந்த நண்பர்களுக்காய் ஏங்கி கடைசி புன்னகையில் உதிர்த்த கணத்தில் உறைந்து விட்டேன். கதையின் நடை விறுவிறுப்பாக இருந்தது. வாழ்த்துகளும் பேரன்பும்...

Maheshkumar selvaraj
-----------------------------------------------------------------------------------------------------------------------
சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர்கள் புலனக் குழு ஆரம்பித்துள்ளீர்கள். கதைகளைப்பற்றிய தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்தும் வருகிறீர்கள்.
எங்களுக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.பல்வேறு போட்டிகள் பற்றியும் பகிர்ந்து ஒருவரோடொருவர் நட்பாக இணைந்து பரிமாற்றம் செய்துகொள்வது நன்று. வேறெந்தப் போட்டியிலும் இவ்வாறெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை.

மகிழ்ச்சி
#Mahesh kumar selvaraj
#Rama.Balajothi

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ்
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஐயா....இது பெரிய பாராட்டு......சக மனிதனை நேசிக்க சொல்லித் தராத வாசிப்பும் எழுதுகிற எழுத்தும் இருந்து என்ன செய்துவிடப் போகிறது. ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்ததற்கு ஒப்பானதொரு உணர்வையே இந்த குழு எனக்குத் தருகிறது. உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதல்கள. ஊக்கத்தை தாண்டி உற்சாகப்படுத்துகிறது. உங்களிடம் இருந்து பரிசு பெற்ற பின் எழுத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்கிற சமூக அக்கறையை உண்டு பண்ணுகிறது. இப்பொழுதெல்லாம் எழுதியே ஆகவேண்டும் என்கிற அவசரம் குறைந்து அவதானிக்கும் பக்குவம் வந்துள்ளது. சிறந்த படைப்புகளை தர வேண்டும் என்கிற பக்குவத்தை உண்டு பண்ணுகிறது. அதற்கான பயிற்சிகளை மனம் தன்னியல்பில் தயாரித்த வண்ணமுள்ளது. உண்மையில் மனதின் அடியாழத்தில் இருந்து சொல்கிறேன் ஒரு தாய் தன் பிள்ளையின் மீது கொள்ளும் அக்கறைக்கு ஈடானது  உங்கள் கனிவும் பாராட்டும். நாளை நாங்கள் நிற்கப்போகும் மேடைகளில் நிச்சயம் சொல்வோம் சிறுவாணி வாசகர் மையம் வார்த்தெடுத்த வார்ப்பு என பெருமையாக. இது உயர்வு நவிற்சி அணி அல்ல. உள்ள பூரிப்போடு உணர்ந்ததே. மிக்க மகிழ்ச்சி

Maheshkumar selvaraj
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு சடங்கு போல் இல்லாமல் உயிப்புடன் தொடர் ரேகை கொண்டு தடம் பதித்து பயணிப்பதே சிறுவாணி அமைப்பின் வெற்றி. தொகுப்பு நூல் பரவலாக கவனம் பெறுவதற்கு தொடர் அக்கறை எடுத்து வரும் அனைவரின் உழைப்பும்  பாராட்டுக்குரியது. 

Durai Arivazhagan
-------------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த வருடத்தில் கொரானா போராட்டத்தில், மக்கள் வீடுகளில் ஒடுங்கிக்கிடந்தபோது, சகமனிதர்களின் மீதான அன்பு தழைக்கவும் இளைக்கவும் செய்தது. அந்தச் சமயத்தில் எல்லோருடைய மனமும் வெறுமையும் வெறுப்பும் பீதியும் சூழ்ந்துக்கொண்டிருந்தது. அப்போது சிறுவாணி வாசகர் மையம் முன்னெடுத்த முதல் சிறுகதைப் போட்டியில் 525-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துகொண்டு, வாழ்வின் பல்வேறு சிக்கல்களை, சிடுக்குகளை கதைக்களமாக வைத்து, தங்களது படைப்புகளை அனுப்பி பங்களித்தார்கள். அந்தச்சூழலில் இது ஒரு பெரிய முன்னெடுப்புதான். ஒரு சிறுகதைப் போட்டியில் பங்குபெற்று, அந்தக்கதைகள் நூலாக வெளியிடுவதும் அது பரவலாக கவனப்படுத்தப்படுவதும் வழமையான ஒன்றுதான். 

ஆனால், சிறுவாணி சிறுகதைகள், ஐயா நாஞ்சில்நாடன் அவர்கள் விழா மேடையில் குறிப்பிட்டு இருப்பது போல், இது சமீபத்தில் வெளியான சிறுகதைத்தொகுப்புகளில் சிறந்த இலக்கியத்தரம் வாய்ந்தவை என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை என்பதை உள்ளடக்கியதாக உள்ளது. இதனை சாத்தியமாக்கிய சிறுவாணி வாசகர் மையத்தை பரவலாகக் கொண்டுச்செல்வதும். சக எழுத்தாளர் நண்பர்களை ஊக்குவிப்பதும் எங்களின் கடமையாக நன்றி நவிழலாகக் கருதுகிறோம். அந்தப்பணியை இந்தப் புலனக்குழு செம்மையாகச் செய்யும். அதற்காகவே, நண்பர் மகேஷ்குமார் செல்வராஜ் இதனைத் தொடங்கியும் இருக்கிறார்.

நன்றிகளும் பேரன்பும்.

இராம.பாலஜோதி,
புதுக்கோட்டை.
----------------------------------------------------------------------------------------------------------------------
பாதுகா
@மீரா செல்வகுமார்.

கோடை வெயில் எப்படியெல்லாம் உள்நுழைந்து பூமியின் பாதம்பட  விழைகிறது என்பதை இலைகளின் தூசுத்தடிமன் வழி எழுதியிருப்பது அத்தனை அழகு.

வயதின்பொருட்டு மூச்சு வாங்க வைத்த லாவகம். ஆண் எப்பொழுதும் தனக்கென செய்து கொள்ளாத கஞ்சன். அறுந்த செருப்பை அழகான குறியீடுடன் ராமனின் பாதுகைகளோடு ஒப்பிட்டு சட்டென அடர்வனத்துள் அழைத்துப்போன அழகியல்.

மனைவியின் பேச்சை நிராகரிக்கிற அந்த எள்ளல்....எதிர்கால சந்ததிக்குத்தான் பயன்படும் என்கிற நக்கல். 

இன்னும் எழுதலாம் தான் எல்லாவற்றையும் எழுதிவிட்டால் இன்னும் படிக்காதவர்களின் ரசனையை கெடுத்த பாவத்திற்கு ஆளாகிவிடுவேன்.

முக்கியமாக கட்டுமான பொறியாளனாக அந்த காட்சி பிம்பங்களை நன்கு அனுபவித்தேன். அப்படியே அந்த மனைப்பிரிவின் வீடுகளை கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள்.

வாழ்த்துகள் தோழர்.

Maheshkumar Ma. se: 
-------------------------------------------------------------------------------------------------------------------
 அம்மாவின் கட்டில்...

@நந்து சுந்து.

உரையாடலுக்கு பூங்கொத்து வாழ்த்துகள்.

ஆரம்பம் முதல் இறுதி வரை எளிய  மனிதர்களின் வாழ்வியலை உரையாடலின் வழி அப்படியே நேர்க்கோட்டில் கொண்டு வந்து மனதில் கசியும் கரிசனத்தில் வீடு தேடிபோய் ஒரு ஆயிரம் தந்து விட்டு வரலாமா என்கிற ஏக்கத்தை  இந்த எழுத்து எனக்குள் தந்தது நிஜம்.

நீயே காசில்லாம தானடா அந்த லாக்டவுன சமாளி்ச்ச நிதர்சனம். வேலையில்லாத பகல் இரவை விட மிக நீளமானது.

தலைமுறை தலைமுறையா இருந்த கட்டில் ......வேண்டாம் நான் மீண்டும் கதையை எழுத ஆரம்பிக்கிறேன். அந்த மூலை உங்க ஸ்டைலா சார்.


போனில் பேசுகிறேன் சார்....ப்ளீஸ்....

கதை முடிஞ்சிடக்கூடாதுன்னு ஒரு பதைபதைப்பை உண்டு பண்ணி அம்மான்னா எல்லோருக்கும் ஆதர்சம் தானே சார்.


உங்க வலிமையும் அனுபவமும் அப்படியே எழுத்துல தெரியுது சார். கலக்கிட்டீங்க....

Maheshkumar Ma. se
------------------------------------------------------------------------------------------------------------------------
தீர்ப்புகள்
@ Suresh Venkadathri 


கதை ஒரு பயத்துடனும் படபடப்புடனும் அந்த பெரிய வீட்டிற்குள் இருந்து எப்பொழுது வெளியேறுவோம் என்கிற சூழலை நமக்கும் கடத்திவிடுகிறது.

வீடு நடுநாயகமாக இந்த கதையில் இருக்கிறது. இயலாமையின் சுவடுகள் கடந்து போகும் வெயிலைப் போல மெல்ல நம்மை சூழ்வதும் அது விலக காத்திருக்கும் தருணத்தில் எதை நோக்கி நாம் சண்டையிடுவது அல்லது சமாதானமாக போவது என்பதை அறியாமல் விக்கித்து நிற்கும் வேடிக்கை மனிதரைப் போல் வாழ்வு நம் மீது அதன் கரங்களை மாய வித்தை செய்யும் மாயக்காரனாக எல்லோர் எண்ணங்களின் மீதும் அது குவிமையம் கொள்கிறது.

சமயங்களில் வாழ்வதே அயற்சியாக இருக்கையில் சட்டென ஏதோ ஒன்றின் பால் நம்பிக்கையை தந்து போகிறது. இந்த தீர்ப்பில் எல்லோருக்கும் தேவையாய் இருக்கும் விடுதலை உணர்வை எப்படி கைக்கொள்வது என்பதை பார்வைகளே கடத்துகின்றன. நல்ல எழுத்தாளர் நல்ல வாசகனாக இருக்க வேண்டும். தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் கதையை நினைவுகூறும் தருணம் எழுத்தாளனுக்கு தான் வாசித்த ஏதோ ஒன்றின் கணத்தை தன் எழுத்தில் பிரதிபலித்து விட துடிக்கும் வேட்கையை எழுத்து உணர்த்தியது.

பிரியத்துடனான வாழ்த்துகள்
Maheshkumar Ma. se
---------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்--2020!
-----அன்புடன் ஆர்க்கே....!

வெளியீடு:-சிறுவாணி வாசகர் மையம்,பவித்ரா பதிப்பகம்,24-5, சக்தி மஹால் சின்னம்மாள் வீதி, கே கே புதூர், கோவை 641038.
தொடர்பிற்கு: ஜி ஆர் பிரகாஷ்,  9940985920/8778924880. விலை:₹200/-

***
"நூலினைப் பகுத்துணர்" என தன்னிலை  பிரகடனப்படுத்தும் பணியில் தனது ஐந்தாம் ஆண்டின் பயணத் துவக்கத்தை இந்த சிறுகதைத்தொகுப்பின் மூலம் முன்னெடுக்கிறது சிறுவாணி வாசகர் மையம். மாதம் ஒரு நூல். ஏப்ரலில் துவங்கி மார்ச் வரை.

இந்த ஏப்ரலின் வெளியீடாக சிறுவாணி வாசகர் மையம்- ரா கி ரங்கராஜன் நினைவு சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு . முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற பன்னிரண்டு சிறுகதைகள் என 15  சிறுகதைகள் அழகான அச்சுக்கோப்பில் எழுத்தாளர்களின் படைப்புலகு குறித்ததான சிறு சிறு அறிமுகக் குறிப்புகளுடன்.

கதைக் களம், மொழியினை பயன்படுத்துகிற லாகிரி, மொழி ஆளுமையின் லாவகம், விவரணைகளை விரிக்கிற நேர்த்தி, பூச்சுக்களற்ற கதைமாந்தர்கள், வட்டார வழக்கின் இயல்பான பிரயோகங்கள், ஆங்காங்கே மின்னல் சொடுக்குகளாய் பளீரிடுகிற கதையோட்டத்தின் இயல்புக்குள்ளான படைப்பாளியின் பார்வைத்தெறிப்புகள் எல்லாமுமாய் சேர்ந்து கலந்து, படிக்க விழைகிற வாசகனுக்குள் ஒரு கலைடாஸ்கோப் ரசவாதத்தை விளைவிக்கிறது இந்த சிறுகதைத் தொகுப்பு.

வானவில்லின் நிறப்பிரிகையைப்போல ஒவ்வொரு கதையும் தனித்தனி வர்ணம்.  கருப்பொருள் ஒத்திசைவு எந்த கதைகளுள்ளும் பிரதிபலிக்கவே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  அதுவே தொகுப்பின் ஆகப்பெரிய பலம்.

சிறுகதைகளின் வடிவம் எண்ணங்களை குறுக்குவதிலும் வார்த்தைகளை சுருக்குவதிலும் இல்லை. அது நிகழ்ந்துவிட நேரிடுகையில் படைப்பாளி தன் எழுத்தின் சுடர்களை மங்கிவிடச் செய்துவிடும் ஆபத்து இருக்கிறது. மாறாக, களத்தையும், கதையாட்டத்தின்  சூட்சுமத்தையும் கொஞ்சமும் விடாமல்
பூப்பூவாய் அலைந்து திரிந்து துளித்துளியாய் சேகரித்து கிளைத்த தேனடையை பிழிகையில் ருசித்துளிகளாய் வாசகனுள் வழிகிற 
தேனருவியின் ருசியானுபவத்தை 
ஒத்தது. இந்த புத்தகம் ஒரு தேனடைபோலத்தான். 

தவிப்பூ, வெயில் அணிந்தவன், பெருந் தீ,பாதுகா, அம்மாவின் கட்டில்,தீர்ப்புகள்,பெண்ணானவள், 
வெள்ளரி ஓடை, கர்ணமந்திரம், மெல்போமின் & டயோனிசஸ், கோட்டம், எங்கே என் நிம்மதி?, கடைசிப்பிண்டம், பஜகோவிந்தம், ஸ்தம்பனம்  என கதைத்தலைப்புகளிலும் தனித்துவம் மிளிர்கிறது .

கதைகளின் குறிப்புகளை, கதைப்போக்கை குறிப்பிடுவது அந்தந்த எழுத்தாளனின் பிரம்ம ரகசியத்தை பொதுவெளியில் வெளியிடுவது போல. ஒரு நல்ல விமர்சனப்பார்வை கதைகளின் உள்ளீடுகளை, மையச்சரடுகளை முதன்மைப்படுத்தி அந்த புத்தகம் படிக்காமல் விமர்சனத்தைப் படிக்க நேரிடுகிற வாசகனை புத்தகத்தை தேடிப் போய் நூலை பகுத்துணர வைக்கவேண்டும். அதுவே சரியான விமர்சன நியாயமும்கூட.  வாசகன், படைப்பாளி நடுவே ஒரு விமர்சகன் 
வாசிப்பனுப பாலத்தைக் கடக்க உதவும் கைகாட்டி மரம் மட்டுமே. 

மற்றவை யாவையும் வாசக படைப்பாளி உலகுள் நிகழ்கிற ரசனைப் பரிவர்த்தனை நிகழ்வுகள். 

ஒரு நல்ல கதை முதல் வரியிலிருந்தே வாசகனை உள்ளீர்க்க துவங்கிவிடுகிறது என்பார்கள்.

பதினைந்து கதைகளுமே அந்த அளவீட்டை தொடுகின்றன. 

தவிப்பூ --பெண்மையின் விடலைத்தனத்தையும் தாய்மையின் ஓய்விலாத குடும்பப் பங்களிப்பின் உழைப்பினையும் கூழ் ஊற்றும் விழாவின் முனைப்பையும் ஒரு சேர எடுத்துச்செல்கிறது.  வார்த்தைக்கு வார்த்தை பரிமாறிக்கொள்ள வேண்டியிராத அன்பை,பாசத்தை உள்ளீடாக ததும்பும் கூழ் பானையைப்போல நிறையவே நிரப்பி வைத்திருக்கிறது--
எல்லோர்க்குமான விநியோகித்திற்காகவும்.  அன்பும் ஒரு பிரசாதம்தானே.!

வெயிலை அணிந்தவன்- மாறுபட்ட கோணத்தில் மழையை பார்க்கிற பார்வையில் நகர்கிற கதை.சொக்கவைக்கிற எழுதுவிதம்.
ஒரு சிறுகதைக்குள் பல வாழ்நிலைகளை சிமிழியிலடைத்து தருகிற செப்பிடு வித்தை. எல்லாமும் இருக்கிறது மழையும் வெயிலும் மனமும் சமயங்களில் அதன் உள்ளீட்டு வலிமையும் சேர்த்து. 

பெருந் தீ--கிராமிய வாழ்க்கையை,அதன் அச்சு அசல் மனிதர்களை,மண்மணம் கமழக்கமழ விவரித்துச்செல்கிறது . மனித குணத்தைப் பற்றி குறிப்பிடுகையில் 
லா ச ரா அவர்கள் "அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி"என்பார் . இக்கதையில் தவிப்பு, இயலாமை, வெறுப்பு, வம்பு, நற்குணம், துர்க்குணம் என எல்லா உணர்வு நிலைகளும் சாதுர்யமாக கையாளப்படுகிறது. அது படைப்பாளியின் வனைவுதான்.

பாதுகா--நிகழ்கால  கஷ்ட நஷ்டங்களை, அலைக்கழிப்புகளை  வாழ்வின் நிச்சயமற்ற போக்கினை புரிந்துகொள்ள முடியாத அவஸ்தையை குறியீட்டுக்கதையாக்கி விவரிக்கிறது. எதிர்கால பாதுகாப்பிற்கு செருப்பாக தேய்ந்து உருக்குலையும் மானிட யத்தனங்கள் தீர்வைத்தொட்டுவிட முனைவது எழுத்தின் கூர்மையை காட்டுகிறது.

அம்மாவின் கட்டில்--எளிமையான நடை. சிறு சிறு உரையாடல்களில் கதையின் சூழல் பட்டென மனதில் அறைகிறது.  கதைப்போக்கு கீழ் நடுத்தரவர்க்க தின ஜீவன போராட்டத்தை குறிப்பிட்டாலும் கதைமாந்தர்களுக்குள்ளான அன்பையும் கம்பீரத்தையும் ஏன் கௌரவத்தையும் விட்டுவிடாத நேர்த்தியில் பின்னப்பட்டிருப்பது தேர்ந்த எழுத்தின் அடையாளம்.  முடிவுப் பகுதி கதைப்போக்கிற்கான நீரோட்ட வெளிப்பாடு .

தீர்ப்புகள்-உறவுச்சிக்கல்களை, உரிமை நிலைநாட்டல்களை வாழ்வின் அவஸ்தைகளை முன்னிறுத்தி பயணிக்கிறது.  தேடல் எல்லோர்க்கும் உள்ளதுதான்.  ஆனால் தீர்ப்புகளில் இருக்கிறது தராசுத்தட்டின் சாய்தலும் மேலெழுச்சியும் . கதையில் காத்திரமாக உலா வருகிற அம்மா எடுக்கிற முடிவுத்தீர்மானத்தில் நிறையவே தெளிவு பிறக்கிறது- தீர்ப்புகளின் உக்கிரம்தாண்டி.

பெண்ணானவள்- அயல்தேச வாழ்க்கைமுறை கதைக்களன். நேரிடையாக கதைக்குள் சென்றுவிடுகிற உத்தி. உளவியலை அலசிச்செல்லும் விவாதநிலை படிமங்கள்.  கட்டுக்கோப்பான எழுத்து நடை.  பெண்மையின் சாதனை முயல்வுகளை உரத்து ஒலிக்காத ஆனால் பலமாய் நிறுவுகிற தன்மை.
தந்தை மகள் நேசநிலை சிறப்பாக வெளிப்படுகிறது. 

வெள்ளரி ஓடை-தொகுப்பின் தனி அடையாளச் சிறுகதைகளில் முக்கியமானது. காட்சிப்படுத்துதல் இக்கதையில் பலமாக காணக்கிடைக்கிறது. வறண்ட பூமியின் ஆதார வளங்கள் வறுமையும் விளிம்புநிலை வாழ்வும்தானே! பனைமரமும் அதையும் விழுங்க நினைக்கும் செங்கல் சூளையும் ஆண்டான் அடிமை என உலவும் மனித வாழ்வின் குறியீடு. வாழ்ந்துகெட்ட அவலம் பஞ்சம் பிழைக்க நகர்வதில் முடிகிறது. "இருவருக்கும் பின்னால் வெள்ளரி ஓடை நிழலாக மறைந்துகொண்டிருந்தது" வலிமிகுந்த வேதனையை வரிகளில் கடத்துகிறது. வறண்ட வாழ்க்கையை போகிறபோக்கில் சொல்லிச்செல்கிற கதைப்போக்கில் குளிர்ச்சியை தருகிற "வெள்ளரி"யும் "ஓடை"யும் சற்றே வெளிக்காட்டுவது நகைமுரண்.

கர்ணமந்திரம்.-- உளச் சிக்கலை, ஆணாதிக்கத்தை, சந்தேகச்சங்கிலிகளில் பிணைத்து உலவ விடுகிறது.  பெண்மனம் படும்பாடு கதையில் தீவிரமாக விரவிநிற்கிறது . போராட்டங்களின் ரணங்கள் ஆழமானவை. அதன் முடிவுநிலை முன்னெடுப்பில் வெளிப்படுவது விடுதலையா, தண்டனையா என்கிற புள்ளியில் வாசகனை நிறுத்துகிறது கதை. 

மெல்போமீன் & டயோனிசஸ் 

இருநிலை படிம குறியீட்டுக்கதை. 
சிறுகதைக்குள் விரிபடுகிற கனவுலகின் சிறகடிப்பும், இருவித உருவக கதைப்போக்கும் தொகுப்பின் முக்கிய கதைகளில் இதனை நிற்கவைக்கிறது.  மாட்சியும் வீழ்ச்சியும் காதலும் புறக்கணிப்பும் வெற்றியும் தோல்வியும் ரயில் பயண ஜன்னலோர காட்சிகளாக நகர்த்திச்செல்கிறது.  தொய்வின்றி பின்னலுறுகிற packed story  எனலாம். 

கோட்டம்--மேலோட்டமாக சைக்கிளை சுழன்று சுற்றி உலவுகிற கதைபோல் தோன்றினாலும் அதன் ஆழமான நீரோட்டம் வாழ்வின் கற்றல் பெற்றல் வாழ்பவனுங்களை உள்ளடக்கியது. 
வாசிக்கும்போது நேர்கிற மனநிறைவே கதையின் வெற்றிச்சூத்திரம். 

எங்கே என் நிம்மதி--அனைத்துமே முடங்கிவிடுகிற ஊரடங்கு காலத்தில்  கதைநாயகி ஜானகியின் நிம்மதி உலகம் எங்கே மையம்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அங்கே கொண்டுசேர்க்கிற அனுசரணைக் கணவன்.  அன்புச்சரடுகளில் கோர்க்கப்பட்ட கதை.

கடைசிப் பிண்டம்-- உறவுகளின் இருப்பையும் மேன்மையும் நினைவலைகளில் உருவேற்றம் செய்து அவ்வுறவுகளின் கடைத்தேற்றுதலை கடைசிக்கடமையாக நிறைவேற்றும் நீத்தார்கடன் தீர்க்கும் கதை.  சோமுத்தாத்தாவின் பாத்திரப்படைப்பு 
கதையில் முக்கிய இடம் வகிக்கிறது.

பஜகோவிந்தம்-- சிறுகதையின் இலக்கணத்தை முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்தப்பட்ட படைப்பு. சபலம், சலனம்,ஒரு சம்பவம் ,குறைவான கதாபாத்திரங்கள் என பல காரணிகள் கதைக்கு வலு சேர்க்கிறது. மனைவி மீனாட்சி சூழலை சாதுர்யமாக கையாண்ட விதம் கதையின் சைலண்ட் ஹைலைட். 

ஸ்தம்பனம்-பள்ளிக்கால வாழ்க்கையை மறுபடி வாழமுடியாதுதான். ஒரு நாவலுக்கான கதையை சிறுகதைக்குள் கொண்டுவருவது அசாத்தியமான விஷயம்.  ஒரு  மீள்தேடல் முயற்சியில் அதை ஒரு புள்ளியில் ஒருங்கிணைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் கதாசிரியர். 

மொத்தமாக தொகுப்பை படிக்கையில் ஒரு முழுமையான பயண அனுபவத்தை தருகிறது. 

அன்புடன் ஆர்க்கே...!
----------------------------------------------------------------------------------------------------------------------------
விமரிசனம்;1

சிறுவாணி சிறுகதைகள் -2020 

தொகுப்பு இன்று தூதஞ்சலிலில் வந்து சேர்ந்தது. தொகுப்பு எனது கைகளுக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது, சிலதினங்களுக்கு முன்பாகவே நான் எந்தக்கதையை முதலில் படிக்கவேண்டும் என்றும் அது குறித்தே எனது  முதல் கருத்தைப் பதிவு செய்வதென்றும் முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த முடிவுக்கு என்னைக் கொண்டுச்சென்றது...ஜி.ஆர். பிரகாஷ் அவர்கள். அந்தச் சிறுகதைக் குறித்து சிலாகித்துப் பேசியிருந்தார். 

 அந்தச் சிறுகதை,  நண்பர் விஜய ராவணன் எழுதிய 'மெல்போமீன் & டயோனிசஸ். தொகுப்பில் பத்தாவது சிறுகதையாக, பக்கம்-123-ல் இடம்பெற்றுள்ளது.

கதை தொடக்கம் கிரேக்க இலக்கியத்தின் இசை தேவதையின் வழியாக ஆரம்பிக்கிறது. அந்நியமாக ஆரம்பத்தில் மனதில் பட்டாலும் கதையை மிகச் சரியாக கதை மாந்தர்களோடு  லாகவமாகக் கோர்த்து, வியப்பு நாணேற்றுகிறார் விஜய ராவணன். அதன்பிறகு, கதைக்குள்ளாக இழுத்துச்சென்றுவிடுகிறது மொழிநடையும்  உருவகக் கதாநாயகன்  கதாநாயகியின் பாத்திரப் படைப்பும். 

வயலின் வாத்தியக் கருவியின் தந்திகளை மீட்டி, இசையை பிரவாகமெடுக்க வைப்பது போல,  கதையை சொல்லிச் செல்கிறார்.

தவிட்டுக்குருவி தத்தித் தத்தி இரையை சேகரிப்பது போல, வார்த்தைகளை எடுத்துத் தொடுத்து இருக்கும் லாவகம் வியப்பிலாற்றுகிறது.

 பழைய சுவரொட்டியை போலானாள் ,  அப்போ, இப்படித்தான் மாடு சாணி போட்ட மாதிரி படம் வரும் என்ற சொற்தெறிப்புகள் மனதில் பதிகின்றன. கதாநாயகியின் தீர்மானமும் கதாநாயகன் உயரத்துக்கு ஏற்ற -ஏற்கவியலாத அந்த முடிவும்  கதையை நிலைநிறுத்தி விட்டது.  கிரேக்க இலக்கியத்தை எடுத்தாண்ட  யுத்தியின் மூலம் தனது படைப்பை  உச்சியில் ஏற்றி கொலு வைத்துவிட்டார்...நண்பர் விஜய ராவணன். 

ஒரு கூடை வாழ்த்துப் பூக்கள் நண்பரே.

Rama.Balajothi

----------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020

விமரிசனம் ; 2

கதை; பெருந் தீ  படைப்பாளர்; மணிமாலா மதியழகன்

முதலில் சகோதரி மணிமாலாவுக்கு நல்வாழ்த்துகள். இங்கே நான் கதையைச் சொல்லப்போவதில்லை. அது வாசகனின் வாசிப்பனுபவத்துக்கு செய்யும் துரோகம் ஆகும்.  பெருந் தீ துவக்கம் முதல் முடிவு வரை 'அங்கிட்டு இங்கிட்டு' நகரமுடியாமல் உள்ளிழுத்து விடுகிறது. கதை சொல்லும் யுக்தி அப்படிபட்டதாயிருக்கிறது. 

 மடிந்துவிட்ட,-மறைத்துவிட்ட ஓர் உண்மை , பொரணி பேசும் கதையின் போக்கு மாந்தர்களால் மீண்டுமாக உயிர்பெறுகிறது. அது நன்மை பயப்பதா...தீமைக்கு அச்சாரமா...என்பதெல்லாம் வேறு. இந்தக்கதையில் வரும் எளிய மனிதர்களின் குணமும் வாழ்வின் சூழலியலும் அப்படித்தான் இருக்கும் என்பதை திருத்தமும் அழுத்தமுமாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். 

இங்கு  குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டிய மற்றொரு விசயம்...கதை சொல்லும் செல்லும் பாங்கு. கிராமிய நடையில், ஆங்காங்கே மூதோர்மொழிகளை உதிர்த்து, பாத்திரக் கோர்ப்பும் மொழி லாவகமும்  செய்நேர்த்தியும் பூர்த்தியுமாகக் கதையை படிப்பவர் மனங்களில்  உழவு மாடுகளைப் போல் ஓட்டிச் செல்கிறார் ஆசிரியர். ரெங்கம்மாவும் செவ்வந்தியும் கதைவழியே  புடைப்பு ஓவியமாகி நிற்கிறார்கள். ஆணோ, பெணணோ தன்னொழுக்கம் தவறின், பெருந் தீ அவர்களின் இருப்பை இல்லாததாக்கி, அவப்பெயரையும் செவிப்பேச்சாக விதைக்கும் என்பதை மிகத் தீர்க்கமாக சொல்லிய சிறந்தக்கதை இது. நன்றி.

Rama.Balajothi
-----------------------------------------------------------------------------------------------------------------------

விமரிசனம் ; 3

கதை; பஜகோவிந்தம்  படைப்பாளர்; ஜெ. பாஸ்கரன்

முதல் முன்று வாக்கியங்களிலேயே நமுட்டு சிரிப்பை வரவழைத்து, கதைக்குள் காந்தமாக நம்மை இழுத்துவிடுகிறார் படைப்பாளர். 'அட, நல்லா இருக்கே'  என்ற எதிர்பார்ப்பை கொஞ்சமும் குறையவிடாமல், நகர்த்திசென்று, தடக்கென்று தடம் மாறும் ரயிலைப் போல, கதையின் போக்கை வேறு திசையில் மாற்றிவிடுகிறார்.

கதை நாயகன் பெயர் குறிப்பிடப்படாததால், அவ்விடத்தில் ஆசிரியரையோ...அல்லது, நம்மையோ பொருத்திப் பார்க்க வைக்கிறது. கதையின் துவக்கத்தில் செய்தித்தாளில் எதை கவனிக்கிறவராக அறிமுகப்படுத்தப்படும் கதாநாயகன், பிறகு எதை கவனிக்கிறவராய் மாறிப் போகிறார்..அதனால், ஏற்படும் விளைவூட்டங்கள் மனப்புயல்கள் என்ன என்பதையெல்லாம் கத்திமுனைக் கீறிச் செல்வது போல சொல்லிச் செல்கிறார்.. 

மனதில் சாந்தி- அமைதி வருவதில்லை என்ற வார்த்தையில் ஆசிரியரின் நுட்பம் தட்பவெப்ப நிலையாய் வீசுகிறது. கதையின் முடிவில், கடைக்காரர் முருகன் புத்தகம் என்ற சொல்லை பயன்படுத்தாதது போல் இருக்கிறது. ஆனால், நம்ம கதாநாயகன் "என்ன மீதி..என்ன புத்தகம்?"  என்பதாகக் கேட்கிறார். மேற்படி உரையாடலில் ஏதோ சிறு வார்த்தை விடுபட்டு போயிருப்பது புலனாகிறது. அது, "அம்மா, புத்தகம் வாங்கிட்டு மீதி சில்லறை வாங்காம போயிட்டாங்க" என்பதாக இருக்கலாம்.

இங்கே இரண்டு விசயங்களைக் குறிப்பிடாவிட்டால், நான் குற்றவாளி ஆகிவிடுவேன்.

பூஜை சாமான்கள், ஆன்மீகப் புத்தகங்கள் விற்கும் கடைக்காரர் பெயர் முருகன்.

நம்ம கதாநாயகனுக்கு வயது அறுபது.

 இதனைத்தாண்டி, ஆசிரியர் கடைசிவரியில் ஒரு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார் பாருங்கள்...

ஆஹா! பஜகோவிந்தம்.

Rama.Balajothi
--------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணானவள்

என்னா கதைங்க......செம பரபரப்பா பம்பரம் சுத்துற மாதிரி அபி ரூம்லேர்ந்து டைனிங் ஹாலுக்கு அங்கிருந்து கிச்சனுக்கு  அப்புறம் பெட்ரூமுக்கு அப்படியே பால்கனிக்குன்னு திலகா கூடவே காலு ஓடிச்சா இல்ல கண்ணு ஓடிச்சான்னு தெரியல......

அவ்ளோ பரபரப்பும் பதட்டமும் எதுவும் செய்ய முடியாத இயலாமையும் ஏதாவது அதிசயம் நடந்துடாதாங்கற எதிர்பார்ப்பும் சரிக்கு சரியா நிக்குற அபியும் ஆதரவா யார் பக்கம் நிக்குறதுங்குற அப்பாவு(வி)ம் கணவனும்னு கதை மாந்தர்கள் அப்படியே கண்ணுக்குள்ள நிக்கிறாங்க...செமையா இருக்கு கதை.....ஆரம்பம் முதல் இறுதி வரை தட தட தடகள ரணகளம்......ராணுவகளம் இல்லையா....


அனுபவ எழுத்தாளருக்கு ரத்தின கம்பள வரவேற்பு.....

வாழ்த்துகள்.....
Maheshkumar Selvaraj
---------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020

விமர்சனம் ; 4

கதை; ஸ்தம்பனம்  படைப்பாளர்; சத்யா. GP

தன்னைக் கண்டதும் தனது பால்ய வயது நண்பர்களை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று 16-வருடங்களுக்குப் பிறகு வரும் நண்பனுக்கு நேரிடுகிற சம்பவங்களெல்லாம் அவனை ஸ்தம்பிக்க வைக்கின்றன. இதுதான் கதை. சத்யா மாயவலையில் இந்தக்கதையை பின்னி இருப்பதால், படிக்கிற நாமுமே ஸ்தம்பிக்கிறோம்.

அழகிய விருந்தோம்பல் பண்பாட்டுடன் துவங்கும் கதை 2001 ஆரம்பிக்கிறது. பத்தாம் வயது படிக்கும் நண்பர்கள் மூவர். அவர்களுக்கு சீனியராக அக்கா ஒருத்தி. அவர்களுக்குள்ளான பொதுத்தேர்வு குறித்த விவாதங்களூடே, ஹாரிஸ் ஜெயராஜ் இசை பற்றிய சிலிர்ப்பும் சிலாகிப்பும் தொடர்கிறது. உண்மைதான். 'மின்னலே' படத்தில் வரும் அந்தப் புகழ்பெற்ற பிஜியெம் இன்னமும் மனசுக்குள் சுருண்டுக்கிடக்கிறது. நவீன இசைக்கருவிகளோடு புல்லாங்குழலும் கூட்டணிப் போட்டுக்கொண்டு, நம் இருதயத்தை ஆளுகைச் செய்த இசைக் கோர்வை அது. அவரின் இசைக்காகவே, சென்னை தேவி தியேட்டரில் 12-தடவை பார்த்தப் படம் அது.

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கனடா செல்லும் நண்பனில் ஒருவன், 2019-ல் ஊர் திரும்புகிறான்.  தனது நண்பர்கள் இருவரையும் அக்காவையும் பார்க்க திருச்சி வருகிறான். கே.கே.நகர் செல்கிறான். அங்கே அவனுக்கு அடுத்தடுத்து ஏற்படும் திகைப்புணர்வுகள் நமக்குள்ளாகவும் இறங்குகின்றன. இதற்கு முன்பாகவே, காவிரி சூப்பர் மார்க்கெட்டில் சீனியரான அக்காவைச் சந்திக்கிறான். அப்போது ஏற்படும் அதிர்வுகள். வடை கடை ஆசாமி சொல்லும் தகவல்கள்...ஆனால், நிஜம் வேறாக இருப்பது என்று மின்சார கம்பியில் தொங்குவது போல் இருக்கிறது நமக்கு.

2001-ல் மூன்று நண்பர்களும் ப்ளஸ் டூ முடித்துவிட்டு எந்தெந்த படிப்பை எடுக்கிறார்கள் என்ற விவரணையில் (பக்கம் 189-ல் நான்காவது பத்தி) கதைநாயகன் பெயரே இரண்டுமுறை வருகிறது.

காற்சட்டை நிறத்திற்காகவே நேஷனல் ஸ்கூலில் சேர்ந்தான் என்றவரி கவனிக்க வைக்கிறது.

ஹோட்டல் ராஜசுகத்தில் காஃபி மட்டுமல்ல...இரவில் தரும் இளஞ்சூடான பொங்கலும் அருமையாக இருக்கும்.

கதையோட்டத்தை ஆரூபத்தில் பின்னி, நம்மை மலைக்கவும் திகைக்கவும் வைக்கிறார் ஆசிரியர்.

வாழ்த்தினும் வாழ்த்துகள் நண்பரே!

Rama.Balajothi
-------------------------------------------------------------------------------------------------------------------------
"தேனருவியின் ருசியனுபவம் » Vimarsanam Web"


--------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளரி ஓடை
@SS Durai Arivazhagan


எழும் வெக்கையின் ஊடாக வெள்ளரி ஓடை நம்மை வேடிக்கைப் பார்க்க பனையேறிகளின் பாடுகளை காவனூரின் செங்கல் சூளையில் பொசுங்கும் வாழ்வாக இருக்கிறது  இந்த கதை.

மெல்ல மெல்ல பனையின் வீழ்ச்சியோடு பனையேறிகளும் அவர்களின் யதார்த்த வாழ்வும் அதனூடாக நுட்பமாக நாம் தொலைத்த ஆரோக்கியத்தையும் இந்த வாழ்வும் கதையின் மாந்தர் வழி சுட்டி மனதில் கசியும் பனைப்பாலை போல அழைத்து செல்கிறது.

பெண்ணெடுக்க முடியாத சோகத்தில் உறவுகள் ஒதுங்கி ஓடுவதை அதுவும் பனையேறிக்கு வாக்கப்பட்டனும்னு என்ன தலையெழுத்தா.....சமூகம் எல்லோருக்கும் சமம் என்பதைத் தாண்டி ஏற்றத்தாழ்வுகளை மனதில் புதைத்து வைத்து தன் கோர முகத்தை அப்பட்டமாக காட்டுவது முகத்திலறையும் உண்மை.

தோழர் உங்க கதை எனக்கு ஒரு கதையை தந்துள்ளது வேறு கோணத்தில். அதுதான் எழுத்தின் பலமும் எழுத்தாளனின் பலமும். 

எழுதிவிட்டு சொல்கிறேன்.

வாழ்த்துகள் தோழர்

Maheshkumar selvaraj
------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020

விமர்சனம் ; 5

கதை; தவிப்பூ  படைப்பாளர்; மகேஷ்குமார் செல்வராஜ்

தொகுப்பில் முதல் பரிசினை வென்றெடுத்தக் கதை. அதனாலேயே இந்தக்கதை மீதும் இதனை எழுதிய படைப்பாளர் மீதும் கூடுதல் கவனக்குவிப்புக் குவிகிறது.

கட்டுரையாகட்டும் கதையாகட்டும் கவிதையாகட்டும் தேங்காயை உடைப்பது போல, சட்டென்று விஷயத்துக்குள் நுழைவது வாசகனை படைப்புக்குள் நேரடியாக அழைத்துவரும் யுக்தி. அதை இந்தக் கதையில் சிறப்பாகவே செய்திருக்கிறார் எழுத்தாளர்.

தோழிகளோடு சுனையைப் பார்க்கச் செல்லும்  அன்புச்செல்வியின் கொண்டாட்ட மனநிலை நம்மையும் தொற்றி, ஒற்றிக்கொள்கிறது. அன்புச்செல்வியின் அம்மா, வாக்கப்பட்டுச் சென்று, புக்ககத்தில் வாழும் பெண்களின் பிரதிநிதியாக மிளிர்கிறார்.

தன் நெருக்கமாக ஒரே தோழியின் வருகையை ஒவ்வொரு கொடைக்கு எதிர்பார்த்து ஏமாறும் அன்புச்செல்வி, அவள் தனது திருமணத்துக்காவது வரமாட்டாளா...என்பதாக ஏங்குகிறாள். 

திருமணத்துக்காக கறவை மாடுகளை அப்பா விற்க முடிவு செய்கிறபோது, அன்புச்செல்வி கதறியழுது, சொல்லும் வார்த்தைகள் மனதைத் தைக்கிறது.

பின்னிரவில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வதை கேட்கும்போது, பெண்களுக்கு நியமிக்கப்பட்ட வாழ்க்கையின் எதார்த்தத்தை உணருகிறாள். அம்மாகாரி, தன் கணவனிடம் "எம்பாடே தேவலாம் போல" என்று சொல்லும் வார்த்தையில், அவளின் ஒட்டுமொத்த உணர்வுகளின் அடர்த்தியையும்  கடத்திச் செல்கிறார் ஆசிரியர்.

மேலும், 'உற்சாகத்துக்கு ஒரு குணமிருக்கிறது' என்பதாகட்டும் கிராமங்களில் பெண்பார்க்கும் நிகழ்வை எப்படியாக கட்டமைக்கிறார்கள் என்பதை விவரிப்பதிலாகட்டும். ஆசிரியர் தான் ஒரு கதைச்சொல்லி என்பதை நிறுவுகிறார்.

மல்லாட்டைப் பூக்கள் மலரும் நிலப்பரப்பிலிருந்து மற்றொரு கதைச்சொல்லி உருவாகி இருக்கிறார்

அப்புறம், அன்புச்செல்வி என்பது நான் வைத்தப் பெயர். அது ஒரு குறியீட்டுப் பெயர். ஏன் என்பதை  தவிப்பூ வை வாசித்து முடித்தப்பிறகு உங்களுக்குப் புரியும்.

முதல் பரிசு பெற்றதற்கும் சிறந்த கதையைத் தந்ததற்கும் வாழ்த்துகள் மகேஷ்.

Rama.Balajothi
-------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020

விமர்சனம் ; 6

கதை; பாதுகா  படைப்பாளர்; மீரா செல்வக்குமார்

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில்  நறுக்கென்று, மூர்த்தியின் ஆற்றாமையை, இயலாமையையை, வேதனையை, வலியை, சமூகச் சூழலை, மனிதர்கள் மன ஓட்டங்களை படம் பிடித்துவிடுகிறார் மீரா.

பேரனுக்கும் பேத்திக்கும் பயன்படுமே  என்று நகரின் புறவெளியில் இடம் ஒன்றை வாங்கிப்போடும் மூர்த்திக்கு, காதருந்த தனது சப்பாத்துகளை மாற்ற முடியவில்லை. அதனை மீண்டும் மீண்டுமாகத் தைத்துப் போட்டுக்கொள்ளுகிறார்.

போன இடத்தில் மீண்டுமாக அறுந்துக்கொள்ளும் அந்தச் சப்பாத்துகளை தூக்கி வீசாமல், தனது பையில் போட்டு, வீடுவரை பத்திரமாக கையில் சுமந்து வருகிறபோதே, நமக்கு இருதயம் கனத்து விசும்புகிறது.

தனது பிள்ளைகளின் நல்வாழ்க்கைக்காக பாடுபடும் தகப்பன்மார்கள், அதன்பிறகும் பேரப்பிள்ளைகளின் நலனுக்காகவும் தங்களின் குறைந்த அளவுத் தேவையைக்கூட நிறைவேற்றிக்கொள்வதில்லை என்பதை மூர்த்தி பாத்திரம் வழியாக வார்த்தெடுத்திருக்கிறார் ஆசிரியர்.

அதுமாத்திரமல்ல...மரங்களற்ற சூழலும் வெயிலின் வெப்பமும் மனித உணர்வுகளில் எவ்வளவு பெரிதான அயர்ச்சியையும் கோபத்தையும் எரிச்சலையும் குவித்துத்துவிட்டுச் செல்லுகின்றன.

பலவருடங்களுக்கு முன்பு வாங்கிப்போட்ட இடம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவர புறப்படும் மூர்த்தியோடு நாமும் செல்லும்போது, பாத்திரப்படைப்பின் அத்துனை உணர்வுகளும் நமக்குள்ளும் ஊடுருவுகின்றன. அவர் வீட்டுக்கு வந்து மனைவியின் கையால் தண்ணீர் வாங்கிக் குடித்தப் பிறகுதான் நாமும் ஆசுவாசமாகிறோம்.

பேரன் பேத்திக்குமான இந்த இடம் அவர்களின் பிள்ளைகளுக்குத்தான் பயன்படும் போலிருக்கிறது என்ற வாக்கியத்தில்,  நடுத்தரவர்க்கத்தின் கனவின் வலியை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுகிறார்.

6-பக்கங்கள்தான் கதை. ஆனால், அது தருகிற உணர்வுகளின் அழுத்தம் பக்கங்களுக்குள் அடைக்கமுடியாதவை.

காதருந்த மூர்த்தியின் சப்பாத்துகளைப் போலவே, அவர்  வாங்கிப்போட்ட மனையும் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லும் இடத்தில், மீரா தனது நெஞ்சை நிமிர்த்துகிறார்.

வாழ்த்தான வாழ்த்துகள் மீரா செல்வக்குமார்

Rama Balajothi
--------------------------------------------------------------------------------------------------------------------------
கர்ண மந்திரம்
@SS Sridurai S

வாரே வாவ்.....செம பழிவாங்கல்.....எனக்கு சுஜாதாவின் முதல் மனைவி கதை படிக்கிற மாதிரியே இருந்துச்சி....இதுக்கு பெருசா விமர்சனம் எழுத வேணாம்னு பாக்குறேன். ஏன்னா அதுலயும் கதைய சொல்லிடற மாதிரி ஆயிடும். நல்ல எழுத்து.....அனுபவ தேர்ச்சிங்கறது இது தானா..


வாழ்த்துகள் சார்......

Maheshkumar selvaraj
--------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020

விமர்சனம் ; 7

கதை; அம்மாவின் கட்டில்  படைப்பாளர்; நந்து சுந்து

தலைப்பே சமயங்களில் கதையின் ஒட்டுமொத்த போக்கையும் உணர்வையும் முடிவையும் சொல்லிவிடும். அப்படியாக, கருதிக்கொண்டுதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், வாசகனின் இப்படியானதொரு முன்தீர்மானத்தை கதையின் முடிவில் அடித்து நொறுக்கிவிடுகிறார் நந்து சுந்து. அதுதானே தேர்ந்த படைப்பாளரின் தனித்தன்மை.

கதை, சோகமும் துயரமுமாகத்தான் துவங்குகிறது. வர்ணனைகளற்ற- கதை மாந்தர்களின் இயல்பான  உரையாடல் மூலம் சூழலையும் கதையின் போக்கையும் விவரித்துச் செல்லுகிறார் ஆசிரியர்.

வழக்கமான சம்பவங்களின் கோர்ப்புகள்தான். ஆனால், திடுதிப்பென ஒரு யூ வளைவு போட்டு, நம்மை அட! போடவைக்கிறது கதை. அம்மாவின் சொல்லாடல்களில் மெலிதான நகைச்சுவைத் தெறிக்கிறது. பரம்பரை..பரம்பரையாக பயணிக்கும் அந்த தேக்குமரக்கட்டில், ' தன் பேத்தி வாக்கப்பட்டுப் போகும் வீட்டிற்கும் சீதனமாக  பயணிக்க வேண்டும் ' என்பது அந்த அம்மாவின் ஆசை. அது நிறைவேறமுடியாமல், வந்துவிடுகிறது பேரிடர் விளைவின் பெருவறுமை.  பென்ஷனுக்காகவாவது அம்மா உயிரோட இருந்திருக்கலாம் என்கிற வரியில் வலி வழிகிறது.

நம் அம்மா, அப்பா உயிரோடு இருக்கும் போது, பயன்படுத்திய உயிரற்றப் பொருள்கள், அவர்கள் இறந்தப் பிறகு அவர்களின் நினைவுகளால் உயிர்பெறுகின்றன என்பதை அற்புதமாகச் சொல்லிச் செல்லும் கதைதான் அம்மாவின் கட்டில்!

நகைச்சுவை எழுத்தாளரான நந்து சுந்து உணர்ச்சி பெருக்கெடுக்கும் கதையைத் தந்தமைக்காக எல்லோர், நல்லோர் சார்பில் நன்றிகள்.

Rama Balajothi
----------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020

விமர்சனம் ; 8

கதை; பெண்ணானவள்  படைப்பாளர்; தமிழ்ச்செல்வி

சிங்கப்பூரை கதைக்களமாகக் கொண்ட படைப்பு. அந்த நாட்டின் சட்டத்தின்படி, கல்லூரிக்குள் கால் வைப்பதற்கு முன்பாக, இளைஞர்கள் இரண்டுவருடம் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்றவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. பெண்களுக்குக் கட்டாயம் அல்ல...விரும்பினால் சேரலாம். இதனை மையமாக வைத்துக்கொண்டு, கதையை பின்னியிருக்கிறார் தமிழ்ச்செல்வி.

செல்லமாக வளர்க்கப்படும் ஒரே பெண் திடுதிப்பென "நான் ராணுவத்தில் சேரப்போறேன்" என்று முடிவெடுத்து, புறப்பட்டால், எந்தத் தாயால்தான் தாங்கிக்கொள்ள முடியும். அபியின் அம்மாவும் அப்படியானவள்தான். தன் மகள் ராணுவத்தில் சேருவதைத் தடுக்க எத்தனையோ முயற்சிகளை அந்த இளந்தாய் செய்கிறாள். ஆனால்...மகளோ, விடாக் கண்டி...கொடாக் கண்டி பாணியில் சாதித்துவிடுகிறாள். இந்த இருவருக்குள்ளும் நடக்கும் பாசப் போராட்டத்தை அழகாக வடிவமைத்துக் கொண்டுச்செல்கிறார் எழுத்தாளர். 

தேசபத்தி நிரம்பிய மகள்...மகள் மீதான பாசபத்தி நிரம்பியதான தாய். இவர்கள் இருவருக்கிடையே அல்லாடி, ஆலோசனைத் தரும் கணவன் என்று மூன்று பாத்திரங்களைக் கொண்டே சிற்றோடையின்  அலைரேகைப் பின்னலாகக் கதை நகர்கிறது.

அம்மாக்களின் மகள் மீதான பாசமும் அன்பும் ஆழியின் பேரலைகள் போன்றது. சதாநேரமும் ஆர்ப்பரித்து, கவனத்தை ஈர்த்துக்கொண்டே இருக்கும். மாறாக, மகள்களைக் கொண்டாடும் அப்பாக்களின் பாசம் எப்போதும் ஆழ்கடல் நீரோட்டம் போல. கண்களுக்குத்தெரிவதில்லை. ஆனால், அவ்வளவு உயிர்ப்பும் துடிப்பும் கொண்டது. அதனை வெகு நேர்த்தியாக, பூர்த்தியாக சொல்லி மனதில் நிறைகிறார் எழுத்தாளர்.

நமக்கு வசதி செஞ்சு தந்த நாட்டுக்கு திருப்பி செய்யணும்னா..ஏன் மனசே வரமாட்டேங்குது? என்று அபி திலகாவைப் பார்த்துக் கேட்கும் கேள்வி எல்லா அம்மாக்களுக்குமானதுதான்.

அதேசமயம், மகளின் இலட்சியத்துக்கு தடையாக இல்லாமல், மனைவியின் கண்ணீருக்கும் விலகி ஓடாமல் இருவருக்குமிடையே...சமாதானத்தை உருவாக்கும் அந்த அப்பா பாத்திரம்....மகளைப் பெற்ற எல்லா அப்பாக்களின் அசலான வார்த்தெடுப்புதான்.

மனதில் நிற்கும்படியான முடிவுடன் கதையைப் படைத்த சகோதரி தமிழ்செல்விக்கு  வாழ்த்தான வாழ்த்துகள்!

Rama Balajothi
----------------------------------------------------------------------------------------------------------------------------


----------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020

விமர்சனம் ; 9

கதை; வெள்ளரி ஓடை  படைப்பாளர்; துரை. அறிவழகன்

பனங்காட்டுக் கதை. பனையேறிகளின் வாழ்வின் அவலத்தை விவரிக்கும் தனித்துவம் மிகுந்தச் சிறுகதை.

விவசாயம் பொய்த்துப் போனதால், விவசாயிகளும் நெசவுத்தொழில் நசிந்துப்போனதால், நெசவாளிகளும் மீன்பிடித்தொழில் அற்றுப் போனதால் மீனவர்களும்  முற்றிலுமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெருநகரங்களில் கூலிவேலைகள் செய்தும் பிச்சையெடுத்தும் தங்களது எஞ்சிய வாழ்வை ஈனஸ்வரத்தோடு நகர்த்துகிறார்கள் என்று பரவலாக அறியப்படும் தரவுகள் நம்மிடம் உண்டு. அவர்களைக் காட்டிலும் இன்னும் சொல்லப் போனால், விவசாயிகள், நெசவாளிகளள் மீனவர்களுக்கு முன்பதாகவே, நகரங்களை நோக்கி நகர்ந்த முதல் பாத அடிகள் பனையேறிகளுடையதுதான்.

 பனையேறிகளின் வாழ்வியலும் அவர்கள் தலைமுறைத்தலைமுறையாக வாழ்ந்து செழித்த பனங்காட்டு நிலப்பரப்பும்  வறண்டு, சுருண்டு உருமாறிவிட்டது. 
இந்த அவலத்தை கண்முன்னே கொண்டுவந்துக் காட்டுகிறார் ஆசிரியர். தன் மகனுக்குப் பனைமரங்களின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்து, ஒரு நாளைக்கு ஐம்பது பனையேறி இறங்கும் திறமையனாக வளர்க்கிறாள் தாய் வெள்ளமாத்தி. இத்தனைக்கும் பனை உச்சியிலிருந்து தவறி விழுந்து உயிரை விட்ட  பனையேறிக்கு வாக்கப்பட்டவள் வெள்ளைமாத்தி. 

அவளுக்கு இன்னொரு பெருமையும் உண்டு... "பதினைஞ்சு கருப்பட்டிக்குக் குறையாம செஞ்ச கையாக்கும்" என்று வெள்ளரி ஓடைப் பெண்களிடம் சதா பெருமைகாட்டுகிறாள். அதை வார்த்தைகளைக் கொண்டே, கதையை முடித்திருக்கும் இடத்தில் படைப்பாளரின் திறன் ஒளிர்கிறது. 

தன் மகனுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தை செய்துவைத்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் வெள்ளைமாத்திக்குக் கிடைப்பதெல்லாம்...வசவுகளும் முகச்சுளிப்புகளும் ஏளனப்பார்வைகளும்தான்.

தொப்புள் கொடி உறவாக இருந்த பனங்காட்டைவிட்டு தாயும் மகனுமாக பிரிய மனமற்று, மனம்மடிந்து புலம்பெயர முடிவெடுக்கிறார்கள். சோகமும் துயரமும் வலியும் வேதனையும் வார்த்தைகளற்ற நிகழ்வுமாக நமது நெஞ்சொடித்து நகர்கிறது அவர்களது பாதங்கள். 

மகனின் திருமணத்துக்காக ஆசையாசையாக செய்து பத்திரப்படுத்தி வைத்திருந்த அரச இலை வடிவிலானத் தாலியை ஊரைவிட்டு நகரும் முன்பாக, வேத கோவில் உண்டியலில் போட்டுவிடுகிறாள் வெள்ளைமாத்தி. 

பேரேழைகளுக்கு  எந்த ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றித் தந்துவிடாமல் காலம் அவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கும் அவலம் இன்னுமாக வலுபெற்றுக்கொண்டுத்தான் போகிறது.

ஆனாலும் என்ன....வாழ்ந்த இடம்...நேசித்த பனைமரங்கள்...சுவாசித்த பதனிமணம் கமழும் காற்று என்று சகலத்தையும் உதறிப்போட்டுவிட்டு, நெஞ்சில் உரத்தோடு வேறிடம் சென்றாவது வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்ளலாம் என்ற பெருநம்பிக்கையைச் சுமந்து செல்கிறார்கள் வெள்ளமாத்தியும் தாளமுத்துவும்.

வெகுநேரம் இருதயத்தை கனக்கவைத்தச் சிறுகதை.

வாழ்த்துகள் துரை. அறிவழகன் சார்.

Rama Balajothi
----------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி சிறுகதைகள்-2020*

விமர்சனம் ; 10

கதை; எங்கே என் நிம்மதி?  படைப்பாளர்; பூபதி பெரியசாமி

சில கதைகளின் தலைப்பைப் படித்ததுமே, சோகமும் துயரமுமாக இருக்குமோ...அவலச்சுவையினை முடிவாகக் கொண்டதாக இருக்குமோ..என்ற முன்முடிவுக்கு வந்துவிடுவோம். அப்படியானதொரு முன்முடிவெடுத்து, படிப்பதற்குத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தச் சிறுகதைதான் எங்கே என் நிம்மதி?

ஆனால், அது தவறு என்பதை பருந்து தன்சிறகுகளால் நம் தலையிலடித்துவிட்டுப் பறப்பது போல, கதையை படைத்திருக்கிறார் எழுத்தாளர். 

கொரானா காலத்தில் பிள்ளைகளைப் பார்க்கவேண்டுமென்று தனது உடல் உபாதைகளையும் பொருட்படுத்தாமல் பிடிவாதம் பிடிக்கிறார் வயதான ஜானகி. தாய்க்குரிய தவிப்பும் பாசமுமாக அவள் உணர்வுகள் வெளிப்படுகின்றன. 

பேரிடரின் நிலைமையை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக இருக்கும் மனைவியை, பிள்ளைகளைப் பார்ப்பதற்காக அழைத்துச் செல்லும் முடிவுக்கு வருகிறார் கணவர் ராகவன்.

அதற்காக மாவடட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஈபாஸ் விண்ணப்பிக்கிறார். மகிழுந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்துகிறார். கைநிறைய செலவழித்து பைகள் நிறைய பிள்ளைகளுக்குத் தேவையான திண்பண்டங்களையும் வாங்குகிறார்.

மறுநாள் பயணம். அவர்களோடே மகிழூந்தில் நாமும் பயணிக்கிறோம். நீண்ட பயணத்துக்குப் பிறகு, மகிழுந்து வந்து நிற்கும் இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. ஓட்டுனர் வியந்து கேட்கும் கேள்விகள் நமக்குள்ளும் எழுகின்றன. ஆனால், அந்தத் தம்பதிகள் பதிலேதும் கூறாமல் ஓட்டுனரை வழியனுப்பி வைத்துவிட்டு, அந்த அடர்வனமும் மலையும் சூழ்ந்த ஆரண்யத்துக்குள் நுழைகிறார்கள்.

சரிதான். ஜானகி பிள்ளைகள் என்று சொன்னது அவர்கள் பெற்றப் பிள்ளைகளை இல்லை போலும். வனத்தில் சஞ்சரிக்கும் விலங்குகளைத்தானோ? என்ற மனவோட்டத்தை நமக்குள் துவக்கிவைத்து விட்டு கதையை நகர்த்துகிறார் ஆசிரியர்.

இதில் அழகு என்னவென்றால், கதையின் துவக்கத்திலேயே யார் அந்தப் பிள்ளைகள் என்பதற்கான துப்பைக் கொடுத்துவிடுகிறார் ஆசிரியர். அதனை கவனமற்ற விசாரணைக் காவலரைப்போல நாம்தான் தவறவிடுகிறோம்.

இறுதியில், ஜானகி பிள்ளைகளைச் சந்திக்கிறார். மகிழ்வுறுகிறார். தான் வந்த நோக்கத்தையும் அங்கு நிறைவேற்ற கணவருடன் பலநாள்கள் தங்குகிறார். ஜானகியின் பரிதவிப்பு, பிடிவாதம் இவற்றின் பின்னணியில் இருந்ததான உயரியக் காரணத்தை அறிந்து நாமும் நெகிழ்ந்துப் போகிறோம்.

தற்கால நிலையை விவரித்த அற்புதமான சிறுகதை. விறுவிறுப்பான மொழிநடையில்  தந்த படைப்பாளர் பூபதி பெரியசாமிக்கு ஒரு கூடை நிறைந்த வாழ்த்துப் பூக்கள்.

Rama Balajothi
-------------------------------------------------------------------------------------------------------------------------

நாஞ்சில்நாடன் விருது-2021 / திரு.மு.ஹரிகிருஷ்ணன்









சிறுவாணி வாசகர் மையம் 

வழங்கும் 

நாஞ்சில்நாடன் விருது 2021


வரவேற்புரை

திருமதி தி சுபாஷிணி


விருது பற்றிய அறிமுகம்

திரு.ரவீந்திரன் 


தலைமை/வாழ்த்துரை

திரு நாஞ்சில் நாடன் 


விருது பெறுபவர்

திரு.மு.ஹரிகிருஷ்ணன்


விருது வழங்கி உரை

பேராசிரியர் க.ரத்னம்


வாழ்த்துரை

திரு.வ ஸ்ரீநிவாசன்                          திரு.ஜெ.பாஸ்கரன்


5.30-6.00 மணிக்கு 

செல்வி ஸ்ரீயா பாட்டும்,                செல்வி.வெ.ஸ்ரீநிதி பரதமும்...


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

திருமதி.சுதா கிருஷ்ணமூர்த்தி உடன் செல்வி.பி.பவித்ரா.


கடந்த ஆண்டுகளில் நாஞ்சில்நாடன் விருதுபெற்றவர்கள்

ஓவியர் ஜீவா(2018)                       முனைவர் ப.சரவணன்(2019)

                      திரு.கா.சு.வேலாயுதன்(2020)


நாள் 11.04.2021

ஞாயிறு மாலை 5.30 முதல்....

-------------------------------------------------------------------------------------------------------------------


திரு.மு.ஹரிகிருஷ்ணன்


1974ல் சேலம் மாவட்டம்  மேட்டூர்  வட்டம் ஏர்வாடியில் பிறந்தவர்   மு.ஹரிகிருஷ்ணன்.

எளிய பின்புலத்தில் வந்த இவர், மேட்டூர் அரசு தொழிற் பயிற்சி மையத்தில் , ஐடிஐ, படித்து,  தற்போது சேலம் இரும்பாலையில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றி வருகிறார்...


தவசி கருப்புசாமி என்றறியப்படும் இவர் கட்டுரையாளர்,  தொகுப்பாசிரியர், சிறந்த சிறுகதையாளர்,  இதழாசிரியர், தொன்மைக்கலை மீட்பாளர், ஆவணப்பட இயக்குனர் ,நிகழ்த்து  கலைஞர் , தனித்துவமான படைப்பாளி போன்ற பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.


கலையும்,இலக்கியமும்   சமூகத்தை செழுமைப்படுத்தவும், கட்டமைக்கவும் பெரிதும் உதவும் என்ற திண்ணிய எண்ணத்தோடு கலை,இலக்கியத் துறைகளில் பெரும் பங்கு ஆற்றி வருகிறார்..


 இலக்கியப் பங்களிப்புகள் :-

மயில்ராவணன், நாயிவாயிச்சீல, குன்னூத்தி  நாயம்  ஆகியன  அவரது  சிறுகதைத் தொகுப்புகள்.


அருங்கூத்து  கொங்குமண்டல  நிகழ்த்துக் கலைஞர்களின்  நேர்காணல்கள்  அடங்கிய  தொகை  நூல் .  


அழிபசி, தாண்டுகால், அங்குசம் ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள்.


•மணல்வீடு என்ற சிற்றிதழை கடின உழைப்போடும் அர்ப்பணிப்போடும் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.


மணல் வீடு பதிப்பகம் மூலம் நவீன இலக்கியத்தின் முக்கியமான நூல்களை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் .


மணல் வீடு இலக்கிய வட்டம் மூலமாக இலக்கிய விருதுகளும் வழங்கி வருகிறார்


தொல்லியல் கலைப் பங்களிப்புகள்:-


கூத்து மகத்தான கலை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் வாய்ந்தது மாத்திரமல்ல, அது நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளமுமாகும். மனிதனுக்கு மண் அளித்த மாபெருங்கொடையென்று திடமாக உணர்ந்திருக்கும் திரு மு.ஹரிகிருஷ்ணன் -  கூத்து, பாவைக்கூத்து, மரப்பாவைகூத்து, தோற்பாவைக் கூத்து கட்டபொம்மலாட்டம்,சேவாட்டம் உள்ளிட்ட கொங்குமண்டல  நாட்டார் நிகழ்த்துக்கலைகள், தொல்கலைகளை அதன் மரபார்ந்த கலைத்தொன்மத்தோடு தொடர்ந்து நிகழ்த்தியும், மறுஅறிமுகமும் செய்து வருகிறார்.


வளர் தலைமுறையினருக்கு நமது தொல்கலைகள் குறித்த கவனத்தையும் விழிப்புணர்வையும் உண்டாக்கும் முயற்சியாகவும், ஆதாரப்படிவம் மாறாது அவற்றை அவர்களுக்கு பயிற்றுவிக்கவும் கூத்துப்பள்ளி ஒன்றினை சேலம் மாவட்டம்  ஏர்வாடியில்  தொடங்கி நடத்தி வருகிறார்.


தொன்மக் கலையான கூத்து நிலைபெற்று நிற்க வேண்டுமெனில் அதன் நிகழ்த்துனர்கள் வாழ்வியல் பொருளாதார மேம்பாடுடையதாகவும், கலைஞர்கள் உளப்பாங்கு இடுக்குகள் சிணுக்கங்களற்றதாகவும் இருக்கவேண்டுமென்பதைத் தெளிந்து - அதன் வழி அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்கும் பொருட்டும் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு  ஒப்பற்ற நமது அடையாளங்களாக வளர் தலைமுறையினர்க்குக் கையளிக்கும்  பொருட்டும் கடந்த 2007-ம் ஆண்டு “களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையத்தைத் துவக்கினார்.


சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல், பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வரும் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கச்செய்வதுடன், அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச் சூழலை உருவாக்குவதும் நமது இன்றியமையாத கடப்பாடு  ஆகும்.கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுக்கும் முனைப்புடன்  களரி தொல்கலைகள்& கலைஞர்கள் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.


முதற்கட்டமாக கொங்கு மண்டல கலைவடிவங்களான கூத்து, பாவைக்கூத்து, கட்ட பொம்மலாட்டம் ஆகியனவற்றை கலைநுகர்வு பரப்பில் கவனப்படுத்தும்படியாக சங்கீத் நாடக அகாதமி சார்பில் சென்னை, டில்லி, கௌஹாத்தி உட்பட பிற மாநிலங்களில் நிகழ்வுகள் நடத்தப்பட்டது .


சேலம் மண்டல கலைபண்பாட்டு மையம் வாயிலாக ஈரோடு மாவட்ட கூத்துக்கலைஞர்கள் நாற்பது பேர்களுக்கு வீட்டு மனை பெற்றுத் தந்தது.


கலைஞர் பெருமக்களை உத்வேகப்படுத்தும்  நோக்கில்  கடந்த ஐந்து வருடங்களாக விழா எடுத்து பாராட்டுக்களோடு பரிசுத்தொகைகள் வழங்கி கௌரவித்திருக்கிறது.


மூத்த கலைஞர்களுக்கு அரசு வழங்கும் நல உதவிகள் பெற்றுத்தருவது உட்பட எண்பதுக்கும் மேற்பட்ட  நிகழ்த்துக்கலைஞர்களை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில்  உறுப்பினர்களாகச்சேர்த்து கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் பெற களப்பணி ஆற்றியிருக்கிறது.


கலைகளோடு கலைஞர்கள் வாழ்வியலையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் “அருங்கூத்து” என்றதோர் தொகைநூற்பிரதியையும், வெளியிட்டிருக்கிறது.


பெண் பொம்மலாட்டக்கலைஞர் பெரிய சீரகாப்பாடி சரோஜா-முத்துலட்சுமி அவர்கள் குறித்த ஆவணப்படத் தயாரிப்பு.


முகவீணை, மிருதங்கம் தாளம், ஹார்மோனியம் முதலிய  பக்க இசைக்கலையில் விற்பன்னரான கூத்திசை மேதை அம்மாபேட்டை செல்லப்பன் அவர்களை குறித்த "விதைத்தவசம்" என்றதோர் ஆவணப்படத் தயாரிப்பு.


ஆதியில் புழக்கத்தில் இருந்து தற்பொழுது அருகிவிட்ட கூத்து அனுபவங்களை சேகரித்து பிரதியாக்கம் செய்யும் முயற்சியில் சபையலங்காரம், உடாங்கனையின் கனவு நிலை முதலிய பிரதிகளின் அச்சாக்கப் பணிகள் போன்ற பணிகளை இடையறாது செய்துவருகிறார். 


விருதுகள்


2007-ல் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு விருது 


2011-ல் சேலம் எழுத்துக்களம் சார்பில் "அருங்கூத்து" விருது

 

2011-ல்  கரிசல் அறக்கட்டளையின் சார்பில், மணல்வீடு-க்கு சிறந்த இலக்கிய சிறுபத்திரிக்கை விருது 


2011-ல் மணல்வீடு-இதழுக்கு சிறந்த இலக்கிய சிறுபத்திரிக்கைக்கான "சுஜாதா நினைவு விருது"


சென்னை தக்ஷிண சித்ரா விருது 


2014-ல் தொல்லியல் கலைப்பங்களிப்புகளுக்காக வாடா அமெரிக்கா FETNA விருது 


2015-ல் "அழிபசி-க்கு  சிறந்த கவிதை நூலுக்கான த.மு.எ.ச விருது 


2013-ல் சிறந்த எழுத்தாளருக்கான "தினமணி விருது"


இவர் தம் கலை, இலக்கிய, தொல்லியல் மீட்பு முனைவுகளை அங்கீகரிக்கும் முகமாகவும், இத்தகு அரிதான பணிகளை அயராது தொடர்ந்து முனைப்போடு செய்வதற்கான ஊக்கியாக செயல்படும் முகமாகவும் திரு மு. ஹரிகிருஷ்ணன்  அவர்களுக்கு  "நாஞ்சில்நாடன் விருது"   வழங்கிக் கௌரவிப்பதில் "சிறுவாணி வாசகர் மையம்" பெருமை கொள்கிறது.


--------------------------------------------------------------------------------------------------------------------

11.04.2021 அன்று நடைபெற்ற நாஞ்சில்நாடன் விருது-2021 விழாவின் புகைப்படத் தொகுப்பு-1

நன்றி- திரு Iyyappa Madhavan


https://photos.google.com/share/AF1QipPn3_4crVCqs47_lSZhpsdhWyLDGqQdflN7ia4NvuFBPY7S7RpfuCNLKwnAwWbmFw?key=NXZEa3BDdTRSa2tjeTZBZ2VPM0VGX29CRXZhb0VR


---------------------------------------------------------------------------------------------------------------------

11.04.2021 அன்று நடைபெற்ற நாஞ்சில்நாடன் விருது-2021 விழாவின் புகைப்படத் தொகுப்பு-2

நன்றி- திரு Abi bhaskar                                                                                                                                                                                      https://photos.app.goo.gl/DgZvVXCFQ979vqqL7


----------------------------------------------------------------------------------------------------------------------

                                       நாஞ்சில்நாடன் விருது 2020


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்புரை


https://www.youtube.com/watch?v=PlPvUYISwdI

பேராசிரியர் க.ரத்னம்  விருது வழங்கி உரை

https://youtu.be/7hybF0nOq9c


எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் வாழ்த்துரை


https://www.youtube.com/watch?v=1Deyf6fIHLY


டாக்டர் ஜெ.பாஸ்கரன் வாழ்த்துரை


https://m.youtube.com/watch?v=rZgPv_IZIy4


விருதாளர் மு.ஹரிகிருஷ்ணன் ஏற்புரை

 https://m.youtube.com/watch?v=mR9TLYpRxyE


----------------------------------------------------------------------------------------------------------------






கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....