Friday, December 31, 2021

ஆறாம் ஆண்டுக்கான அறிவிப்பு




 


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

2017  ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒருநூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச்--2022 உடன் ஐந்தாம் வருடச் சந்தா முடிவடைகிறது.

(12 புத்தகங்கள்)


ஏப்ரல் 2022- மார்ச் 2023 (ஆறாம்) ஆண்டுக்கான 

கட்டணம் ரூ 1800 /-

பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-

(தபால் செலவு உட்பட).


 தங்கள் ( ஏப்ரல் 2022-மார்ச் 2023) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களாகச்  சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி,கல்லூரிகளின் நூலகங்களோடும் கைகோர்க்க விரும்புகிறோம்.


தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 

நன்றி.


தி.சுபாஷிணி

ஜி.ஆர்.பிரகாஷ் 

சிறுவாணி வாசகர்  மையம்.

-----------------------------

"மங்கையற்கரசியின் காதல்"-வ.வே.சு ஐயர் மார்ச்-2022


 


மார்ச்-2022

"மங்கையற்கரசியின் காதல்"-வ.வே.சு ஐயர் (சிறுகதைகள்)

"கல் மண்டபம்"-வழக்கறிஞர் சுமதி பிப்ரவரி -2022

 









பிப்ரவரி -2022

"கல் மண்டபம்"-வழக்கறிஞர் சுமதி (நாவல்)

பக்கங்கள் 256   விலை 250/-

 https://clearlakes.blogspot.com/2022/02/blog-post_14.html?m=1

கல் மண்டபம் நாவல்  சிறு கட்டுரை

தேசு என்கிற வேதாந்த தேசிகன் என்னும் கதாப்பாத்திரத்தின் முப்பதாண்டு கால வாழ்க்கைப் போராட்டம்  நாவலாக அமைந்திருக்கிறது. தேசுவின் தாய், தந்தை, உறவு, சுற்றம் குறித்த எண்ணற்ற கிளைக்கதைகள் வழி ஒரு சமூகத்தின் மன ஓட்டத்தையும் அவர்கள் சந்திக்கும் அக மற்றும் புற சவால்கள் குறித்த குறிப்புகளும் நிறைந்த நாவல் கல்மண்டபம். 

வேதவிற்பன்னம் , தளிகை , ஈம சடங்குகள் - இம்மூன்று  விஷயங்கள் குறித்த சமூக உளவியல் சார்ந்த பார்வையாக நாவலை பார்க்காலம். தேசுவின் தந்தை ராமான்ஜி கற்றறிந்த வேதங்களை விடுத்து தளிகைக்கு வருகிறார் - காலம் அவர் மகனை ஈம சடங்குகள் செய்து வைக்கும் இடத்திற்கு தள்ளுகிறது. ஒப்புக்கொள்ளாவிடினும் வேத பாராயணம் விற்பன்னம் தளிகையை விட உயர்ந்த ஒன்றாகவும் , ஈமச்சடங்குகள் செய்வது இவ்விரண்டையும் விட சற்றே தாழ்ந்ததாய் சமூகத்தின் பார்வையில் இருப்பதான சித்திரம் நாவலில் வருகிறது. காலத்தால் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட தேசு மனம் உவந்து ஈம காரியங்கள் செய்யும் இடத்திற்கு வரவில்லை. வேறு வழி இன்றி அவன் தஞ்சம் அடைந்த இடம் , அவனை விட தனித்துவம் மிக்க கோம்ஸ் , மிக நிதானமான சௌமியா  கூட அவ்விடத்திற்க்கு வந்து சேர்கிறார்கள்  - மன நிறைவு என்று கூற முடியாவிடினும் ஒரு வித நிதானமான ஏற்போடு தங்களுக்கு விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள் - தேசுவின் தவிப்பு அல்லது மனத்தாங்கல் தன்னால் இவ்விதியின் போக்கை மீறி எதுவும் செய்ய முடியவில்லை என்பதே  - அல்லது அதற்கான தன்முனைப்பு தன்னிடம் இல்லை - தன்னை விதியின் சூழலிலிருந்து மீட்கும் கல்யாணியின் கரங்களை பற்ற அவனுக்கு ரொம்ப காலம் ஆகிறது - தன் சுற்றங்களிடம் இருந்தே நல்லதையும் கெட்டதையும் தேசு பெறுகிறான். நல்லதை கண்டுக்கொள்ள அவனுக்கு நாள் எடுக்கிறது.  

பிறர் துக்கத்தையும் தம் துக்கமாக சுமப்பவனே உண்மையான வைஷ்ணவன் என்கிறார் தேசுவின் மாமா மது. தன் பாட்டையே சரியாக பார்த்து கொள்ள தெரியாத தேசுவிற்கு லட்சிய வைஷ்ணவன் ஆவது எட்டாக்கனி -இவ்விடத்தில் தேசு சுந்தரேசன் மாமாவையும்  , ஹோட்டல் மணி ஐயரும் வைத்துப்  பார்க்கிறான் - இவ்விடத்தில் இவர்கள் இருவரும் தனது பாட்டையும் பார்த்துக்கொண்டு பிறரது சுமையை சிறிது முணுமுணுப்பும் இல்லாது  சுமக்கின்றனர். தேசுவின் தேம்பல் ஒரு நேர்கோட்டில் சென்றபடி இருக்க சுற்றி அமைந்துள்ள கிளைக்கதைகள் தேசுவிற்கு ஆறுதல் கூறியபடி அவனை தேற்றியபடி அவனை கரை சேர்க்க முயல்கின்றன - கிட்டுவின்  மாதவ் ராவின் விஸ்வநாதனின் அட்டுழியங்கள் சடகோபனை சௌமியாவை மணி ஐயரை ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் டைகரின் அராஜகம் ஒரளவு தேசு போன்ற ஆட்களுக்கு தேவைப்படுகிறது என்பதையும் நாவலை வாசித்து முடிக்கையில் உணர்கிறோம். 

இறைவன் இருக்குமிடத்தில் இருந்து விலகி வந்ததை சௌந்தரம் ராமான்ஜியிடம் சுட்டிக் காட்டுகிறாள். இறைவனிடத்தில் இருந்து விலகிய ராமான்ஜி வேதத்திலிருந்தும் விலகி பொருள் நோக்கி ஒரு ஓட்டம் எடுக்கிறான் - பொருள் மட்டுமே நினைவாக கொண்ட அந்த ஓட்டத்தின் முடிவு மிகவும் கோரமான ஒன்றாக மாறி தேசுவை நிர்கதியாக்குகிறது -  இறைவனிடமும்  அறத்திலிருந்தும்  விலகிய  பொருள் ஓட்டத்தின் கோரம் பரத்தைமை நாவலின் முக்கியமான இழை - இறுதியில் தேசு தனது கடைசி வாய்ப்பை  அவனது தந்தையின் பூர்வ செயல்கள் வழி அடைகிறான். 

தேசு தனது வாரிசுகளுக்கு எந்த ஒரு விஷயத்தை விட்டு செல்லப் போகிறான் ? காலம் தோறும் மாறாத பிறப்பு நடப்பு இறப்பு சட்டகத்தை குறித்த பரிச்சியம் அடைந்திருக்கும் தேசு, இம்மூன்றை குறித்த தனது பார்வையை பொது சமூக கண்ணாடி வழியே இனியும் தொடர்ந்து பார்க்கப் போகிறானா ? இறப்போர்,  முக்தி வேண்டிய பயணத்திற்கு முடிந்த  தன் பங்கை சஞ்சலத்துடன் செய்து கொண்டிருக்கும் தேசுவிற்கு "முக்தி ரதம்" வேன், அவனது புறத்தேவையை தற்போதைக்கு தீர்க்கும் ஒரு வாய்ப்பு  -ஆனால் அவன் முதலிருந்து பங்கு கொள்ளும் முக்தி பயணத்தை சௌமியா போல் சடகோபன் போல் ஏற்புடன் அமைத்துக் அப்பயணத்தில் தன் பங்கை உணர்ந்து, தன்னை உணரும் வாய்ப்பை காலம் அவனுக்கு அருளுமா ? திடீரென சீற்றமாகி கணவனை இழந்த மாமியின் கூடையை பற்றியபடி பஸ் வரை நடந்து சென்று அவள் அளித்த நாலணாவை மறுத்து  " நான் கூலியும் இல்லை கிராதகனும் இல்லை"  என்று கூறியவன் அல்லவா தேசு. 

"புனலும் மணலும்"-ஆ.மாதவன் ஜனவரி-2022

 





ஜனவரி-2022

ஆ.மாதவன் நினைவையொட்டி

"புனலும் மணலும்"(நாவல்)

பக்கங்கள் 176   விலை 160 /-



யானையின் சித்திரம்.


ஆ,மாதவனின் புனலும் மணலும் நாவலில் ஒரு அபூர்வமான காட்சி விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் தொழில் பற்றிய இந்த நாவல் சூழலியல் பிரச்சனையை அடையாளப்படுத்திய முன்னோடி நாவலாகும். திருவனந்தபுரத்திலுள்ள கோட்டையாறு என்ற ஆற்றிலிருந்து மணல் எடுக்கும் அங்குசாமியின் வாழ்க்கையோடு அந்தத் தொழிலில் ஈடுபடும் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை பாடுகளையும் மிக அழகாக மாதவன் எழுதியிருக்கிறார்.

இந்த நாவலில் ஆற்றில் மணல் அள்ளப்பட்ட காரணத்தால் பெரும் பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு நாள் ஆற்றில் தண்ணீர் பெருகியோடும் போது குளிப்பதற்காக வந்த பெண் யானை ஒன்று இந்தப் பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது. யானையின் கால் மணலில் மாட்டிக் கொண்டுவிடவே அதை மீட்க உதவி செய்ய வேண்டும் என்று பாகன் கூக்குரலிடுகிறான்

மக்கள் திரளுகிறார்கள். ஆண்யானை ஒன்றின் மூலம் கயிறு கட்டி பெண் யானையை மீட்க முயல்கிறார்கள். ஆனால் மீட்பது எளிதாகயில்லை.

ஆற்றில் குதித்து யானையின் காலடிக்குச் சென்று மணலை அகற்ற வேண்டும் என்று யோசனை சொல்கிறார்கள்.

யானையின் காலடியை நெருங்கிப்போய் மணலை அகற்ற முயன்றால் யானை மிதித்துக் கொல்லவும் கூடும். ஆகவே உயிர் போகும் ஆபத்து அதிகம். ஆயினும் துணிந்து இளைஞர் சிலர் ஆற்றில் குதித்து யானையை மீட்கிறார்கள்.

இந்தக் காட்சியினை மாதவன் மிகவும் நேர்த்தியாக, உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

பள்ளத்தினுள் சிக்கிய யானையின் பரிதவிப்பு. மீட்பவர்களின் போராட்டம். வேடிக்கை பார்ப்பவர்களின் ஆர்வம். இந்தப் பள்ளம் இருப்பதை அறியாமல் போன பாகனின் கவலை படிந்த முகம். யானையை மீட்பதை வேடிக்கை பார்க்கும் பெண்கள், சிறார்கள் என அந்தக் காட்சி முழுமையாக ஒரு ஆவணப்படம் போலச் சித்தரிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட யானைக் காலை உதறி எழுந்து கரையேறும் போது தண்ணீரில் தடுமாறி விழுகிறது. அதில் தெறிக்கும் தண்ணீர் அங்கே நின்றிருந்தவர்களை நனைக்கிறது.

இந்தக் காட்சியினை வாசிக்கும் நம் மீதும் அந்த ஆற்றுத் தண்ணீர் அடிக்கிறது. கச்சிதமான வார்த்தைகள், தேர்ந்த நடை மூலம் அந்தக் காட்சியைக் கண்முன்னே உருக் கொள்ள வைக்கிறார் மாதவன்.

ஆற்றில் பள்ளம் ஏற்படக் காரணமாக இருந்த அங்குசாமி அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் யானை உருவாக்கிய அதிர்வில் தடுமாறி விழுந்து கையில் அடிபடுகிறார். அவரது குற்றத்திற்கான தண்டனை போலவே அந்தக் காட்சி அமைகிறது

நாவலில் மறக்கமுடியாத கதாபாத்திரம் பங்கி. அவள் அங்குசாமியின் வளர்ப்பு மகள். அவருக்குப் பங்கியைப் பிடிக்கவில்லை. அவளைப் பார்த்தாலே எரிந்து விழுகிறார். அவளோ அவரைத் தந்தையாகவே நினைக்கிறாள். அன்பு செலுத்துகிறாள். என்றாவது ஒரு நாள் தன் அன்பை அங்குசாமி புரிந்து கொள்வார் என்று நம்புகிறாள். நாவலின் முடிவில் பங்கி ஆற்றோடு போய்விடுகிறாள். சந்தோஷமே அறியாத பங்கியின் வாழ்க்கை அவலமானது. அவளது கதாபாத்திரம் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிழைப்பதற்காகக் கேரளா சென்ற அங்குசாமி எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக கேரள மண்ணில் வேர் ஊன்றி அந்தஸ்து பெறுகிறார். மணல்காண்டிராக்டராக உயருகிறார் என்பதை ஒரு தளத்தில் விவரிக்கிறார் மாதவன். மற்றொரு தளத்தில் தங்கம்மையின் அழகில் மயங்கி அவளுடன் வாழுத்துவங்கி அவளது மகள் பங்கியின் வளர்ப்புத் தந்தையாகிறார் அங்குசாமி என்பதைச் சொல்கிறார்.

தங்கம்மைக்கு முன்னதாகப் போலீஸ்காரனுடன் கல்யாணம் ஆகியிருந்தது. அவளுடன் இரண்டு மாதங்கள் மட்டுமே அந்தப் போலீஸ்காரன் வாழ்ந்து இறந்து போய்விடுகிறான். அவன் இறந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தான் அங்குசாமிக்கு அவள் மீது ஈர்ப்பு உருவாகிறது.

பெரிய பற்களும் கோரையான தலைமுடியும், குள்ளமான தோற்றமும் கொண்ட பங்கியை பார்த்தாலே அங்குசாமிக்குக் கோபம் வந்துவிடுகிறது. அவளோ கடின உழைப்பாளி. தந்தையின் பணிகளுக்கு உடனிருந்து உழைக்கிறாள். அவருக்கான பணிவிடைகளைச் செய்கிறாள். தான் ஒரு போதும் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள் பங்கி. தாயை இழந்த அவளுக்கு வளர்ப்புத் தந்தையை விட்டால் வேறு துணை இல்லை.

யானையை மீட்கும் போது ஏற்பட்ட காயத்தில் அங்குசாமி வீட்டிலே இருக்கிறார். பங்கி அவருக்குத் தேவையான உதவிகள் அத்தனையும் செய்கிறாள். மெல்ல அவருக்குப் பங்கியின் மீதான வெறுப்புக் குறைகிறது. ஆனால் அகலவில்லை

ஆற்றின் வெள்ளம் வரும் போது அவர்கள் ஒரு நாட்டுப்படகில் போகிறார்கள். படகு கவிழ்ந்து போகிறது. உயிர்பிழைப்பதற்காகப் போராடுகிறார்கள். அப்போது அங்குசாமியின் கால்களைப் பங்கி பற்றிக் கொள்கிறாள். அவளை உதறித் தள்ளி அங்குசாமி கரையேறுகிறார். அவரது இந்தச் செயல் தான் பங்கியின் மரணத்திற்குக் காரணமாகிறது

மனிதர்கள் தங்களின் சுயலாபங்களுக்காக ஆற்றை அழிக்கிறார்கள். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை மாதவன் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.

திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற பாத்திரக் கடையை நடத்தி வந்தவர் ஆ.மாதவன். இரண்டு முறை அவரை நேரில் சென்று பார்த்திருக்கிறேன். தனது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மூலம் வசீகரமான எழுத்தை உருவாக்கியிருந்தார் ஆ.மாதவன்.

சாலைத் தெருவின் சித்திரம் இந்த நாவலிலும் வருகிறது. சொல்லித் தீராத கதைகள் கொண்ட அந்த வீதியைத் தனது எழுத்துகளின் மூலம் அழியா சித்திரங்களாக்குகிறார் மாதவன்.

தமிழும் மலையாளமும் கலந்த நாவலின் உரையாடல்கள் இனிமையாக விளங்குகின்றன. கதாபாத்திரங்களின் நுண்மையான சித்தரிப்பும் ஆற்றின் போக்கையும் கரையோர வாழ்க்கையினையும் விவரிப்பதில் மாதவன் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

புரிந்து கொள்ளப்படாத அன்பையும் உறவையும் அதிகம் எழுதியவர் ஆ.மாதவன். இந்த நாவலில் வரும் ஆறும் பாங்கியும் ஒன்று போலானவர்கள். இருவரும் உலகால் புரிந்து கொள்ளபடாதவர்கள். பயன்படுத்தப்பட்டவர்கள். இந்த நாவலை வாசிக்கும் போது மாதவனின் பாச்சி சிறுகதை மனதில் வந்து கொண்டேயிருக்கிறது. மிகச்சிறந்த கதையது. அதில் வரும் பாச்சி பாங்கியின் இன்னொரு வடிவமே

சிறந்த தமிழ் நாவல் வரிசையில் ஆ.மாதவனின் புனலும் மணலும்  என்றும் தனியிடம் கொண்டிருக்கும்.                                                                                      

 

நன்றி-எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து...

---------------------------------



கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....