Saturday, June 15, 2019

ஜுன் 2019- தாகூர் கதைகள் - பாரதியார்




2019 ஜுன் மாத நூல்
"தாகூர் கதைகள்"
மகாகவி பாரதியார் மொழிபெயர்ப்பில்...



பக்கங்கள்   விலை 130 /-




ISBN 978-81-940988-8-1

-------------------------------------------------------------------------------------------------------------




"காலவரிசைப் படுத்திய பாரதி படைப்புகள்" பெரியவர் சீனி.விசுவநாதன் ஐயா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட "தாகூர் கதைகள் -பாரதி மொழிபெயர்ப்பு"நூல்.
----------------------------------------------------------------------------------
ஸ்மார்ட் போன் சூழ் உலகில் வாசிப்பு அனுபவத்தை நாம் மெல்ல மெல்ல இழந்து வரும் சூழலில் ஒரு நல்ல சிறுகதையை வாசிக்கக் கொடுத்த சிறுவாணி வாசகர் மையத்திற்கும் , அதற்காக தனது உடல் பொருள் ஆவியை அர்ப்பணிக்கும் Prakash GR   அவர்களுக்கும் நன்றி.



தாகூரின் அற்புதமான சிறுகதை இது. மொழிபெயர்த்திருப்பது மகாகவி பாரதியார்.

"நஷ்ட பூஷணம் அல்லது காணாமற் போன நகைகள்" இது கதையின் தலைப்பு.

மிகச் சாதாரண ஒற்றை இழை கதைதான். சொல்நேர்த்தி, தத்துவ விசாரம், ஒரு சிறுகதைக்குண்டான முடிவு எல்லாமுமாகச் சேர்த்து சிறுகதையை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது.

ஒரு பெரிய வியாபாரி. ஆஸ்தி பூஸ்திகளுடன் இருப்பவன்.- பூஸ்தி என்ற வார்த்தையை அச்சில் பார்த்து எத்தனை நாளாகிறது?-  வியாபாரம் நொடித்துப் போகும்போது அந்த வியாபாரி தன் மனைவியிடம் நகைகளைக் கேட்கப் போக மனைவி நகைகள் மீதான தீராத பற்றுதலால் தனது ஒன்று விட்ட சகோதரனுடன் மாளிகையை விட்டு கங்கை நதியில் படகில் தனியாகச் செல்கிறாள்.  தம்பி மீது இருக்கும் அவநம்பிக்கை காரணமாக பெட்டியில் நகைகளைக் கொண்டு செல்லாமல் அத்தனை நகைகளையும் மேனி முழுவதும் சொரிந்து கொண்டு முழுவதும் போர்த்திக் கொண்டு கிளம்புகிறாள். அவளுக்கு துர்மரணம் நேர்கிறது. மாளிகையும் பாழடைகிறது.

இவ்வளவுதான் கதை ஆனால் இதற்கு நடுவில் தாகூரின் எண்ண ஓட்டங்களும் அதனை பாரதியாரின் கூரிய பேனாவும் அதி உன்னதமான சிறுகதையாக மாற்றி விடுகிறது.

"ஒரு மனிதன் தனது மனைவியின் காதலை இழக்க வேண்டுமாயின் குரூபியாகவும், ஏழையாகவும் இருக்க வேண்டிய கட்டாயமில்லை: ஸாதுவாக இருந்தாலே போதும்"

" ஆணும் பெண்ணும் இரண்டு பாலாகப் பிரிந்த காலம் முதலாகப் பெண் ஆணை மயக்கி வசப்படுத்தும் பொருட்டாகத் தனது சக்தியை எல்லாம் செலவிட்டு எத்தனையோ தந்திரங்கள் செய்து வருகிறாள் "

"பனிக்கட்டி போலே அன்பில்லாத ஹிருதயம் பெண்ணுக்கிருந்தால் யௌவனம் மாறாமலிருக்குமென்று தோன்றுகிறது"

"முதல் தரமான கற்பனைக் கதையிலே கதாநாயகனாக இருப்பவன் கூட சில ஸமயங்களில் மிகவும் நெருக்கடி உண்டாகும்போது, தனது பிரிய காந்தையினிடம் அடமானப் பத்திரங்கள், கடன் சீட்டுக்கள் முதலிய கவிதா சூனியமான விஷயங்களைப் பேசும்படி ஆகிறது"

கவிதா சூனியமான விஷயங்கள். என்ன அட்டகாசமான எள்ளல்.

"அவளுடைய அன்பிற்குப் பாத்திரமாய் குழந்தை வளர்ப்பது போல வருஷா வருஷம் வளர்த்து வந்த நகைகளை விட்டுப் பிரிவது என்பதை நினைத்த மாத்திரத்தில் அவள் உடம்பு ஜில்லிட்டது"

"யாதொரு காரணமுமில்லாமல் மனுஷ்யன் காட்டுத் தீ போலே சினம் போன்கும்படியாகவும், ஸ்திரீ நிஷ்காரனமாக மழை போல அழும்படிக்கும் பகவான் ஏற்பாடு செய்திருக்கிறார்"

ஆஹா என்ன அழகான உதாரணம்.

கதை சொல்லிய விதத்திற்காகவே அவசியம் படிக்க வேண்டிய கதை.

சிறுகதை இடம் பெற்ற நூல் :தாகூர் கதைகள்- பாரதியார் மொழி பெயர்ப்பில்
அச்சிட்டோர்- சிறுவாணி வாசகர் மையம், கோவை

பி.கு: 
வருடம் ரூ. 1600-ஐ பெற்றுக் கொண்டு மாதமொரு நூல் வழங்கி படிக்கும் உந்துதலை முன்னே கொண்டு செல்லும் சிறுவாணி வாசக மையத்தின் சேவை அளப்பரியது.

நல்ல நூல்களுக்கு சிறுவாணி வாசகர் மையம்  சிறந்த உத்திரவாதம்.

நன்றி-Prabhakar sharma. Fb
---------------------------------------------------------------------------------
பள்ளிப்பருவத்தில் பாரதியின் மொழியாக்கத்தில் தாகூர்  கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன்.அந்த வாய்ப்பை மீண்டுமொருமுறை தந்திருக்கிறது கோவை சிறுவாணி வாசகர் மையம் அண்மையில் வெளியிட்டிருக்கும் 'தாகூர் கதைகள்' என்னும் தொகுப்பு நூல். பாரதியின் உரைநடை அவனது கவிதைகள் போலன்றி மணிப்பிரவாளமாக இருந்தாலும்..மந்திரம் போன்ற வாக்கு வன்மையால் படிக்கப்படிக்கத் திகட்டாமல் திரும்பத்திரும்பப் படிக்கத்தூண்டும் கவித்துவ வரிகள்,உவமைகள்..!

பாரதத்தின் இரு மகாகவிகள் இணைந்தால் மொழி எந்த அளவுக்கு ருசிக்கும் என்பதற்கு இந்த நூலே சாட்சி.பதச்சோறாய் ஒரு சில..

"அவள் நண்பகலின் தனிமை போன்றிருந்தாள்,மௌனமாக,ஒரு துணையின்றி.."

"மூடுபனியில் மறைந்திருந்த குன்றுகளைப்பார்த்தால் சித்திரக்காரன் எழுதிப் பின் அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்த படம் போலே தோன்றிற்று"

"ஆகாச வாணத்தைப்போல எரிய எரிய மேலே பறக்கலானேன்"

"எனது நெஞ்சம் எல்லாப் புலன்களாலும் பூமி தேவியை இறுகத்தழுவி அவளுடைய பாலுண்டு போஷணை பெற விரும்பிற்று"

"பூலோகமே மூச்சு முட்டிப் பொருமும் ஒலி போல் கேட்டது"

"யௌவனத்தின் ரஹஸ்யத்தையும் ஆனந்தத்தையும் சோகத்தையும் ஊடுருவி அங்ஙனமே அந்தத் தனி வெளியின் இறுதி எல்லைகள் வரை பரவியதாய் ஒரே மோனம்-ஒற்றைச் சொல்லென்னும் பேசத் திறனில்லாமை- திகழ்ந்தது"

"கரியவிழிகளோ சில சமயம் அஸ்தமிக்கும் சந்திரன் போல் வெறித்து நோக்குகிறது; சில வேளை விரைவு கொண்ட சாந்தியற்ற மின்னல் போல் தசை வெளியில் மின்னிச்செல்கிறது"

"அகன்ற ஜ்வாலாமயமான வானத்தின் கீழே எதிர் எதிராக ஓர் ஊமைப்பெண்ணும் ஊமைப் பிரகிருதியும் இருந்தனர்.....ஆசை ததும்பிய அந்த ஊமையான ப்ரக்ருதியின் கரையில் ஆசை ததும்பிய அந்த ஊமைப்பெண் நின்றிருந்தாள்"
Prof.M. A.Susila
------------------------------------------------------------------------------
#தாகூர்கதைகள் #பாரதியார் #மொழியாக்கம் #சிறுவாணிவாசகர்மையம்

தாகூர் எழுதிய சிறுகதைகள் சிலவற்றை பாரதியார் மொழியாக்கம் செய்திருக்கிறார். அவற்றில் எட்டுச் சிறுகதைகளைத் தொகுத்து  `தாகூர் கதைகள் பாரதியார் மொழி பெயர்ப்பில்’ என்கிற பெயரில் கோவையைச் சேர்ந்த `சிறுவாணி வாசகர் மையம்’  அதனுடைய உறுப்பினர்களுக்கு ஜூன் மாத புத்தகமாக வழங்கியிருக்கிறது. 

இந்த மொழியாக்கம் குறித்து நாவலர் சோமசுந்தர பாரதியார், 

“ ரவீந்திர நாதரின் சிறுகதைகளுக்கு பாரதியார் செய்துள்ள மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது, மொழி பெயர்ப்பாக இல்லாமல், தானே முதனூலும், தாகூரின் ஆங்கிலமே மொழிபெயர்ப்பாகவும் தோன்றும்படியாக அத்தனை அழகு பெற்று அமைந்துள்ளது”

மூலத்தை மிஞ்சிய மொழியாக்கமா...? ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை... 

இப்போதுதான் புத்தகம் கைக்குக் கிடைத்தது. இனிதான் வாசிக்க வேண்டும்.

இப்புத்தகத்தோடு ஜூலை மாத நூலாக திரு ரமேஷ் கல்யாணின் சிறுகதைகள் தொகுப்பான `திசையறியாப் புள்” ளும் வந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகளில் பெரும்பாலனவை பரிசு பெற்றவை. இது ஆசிரியரது முதல் நூல்... வாழ்த்துகள் 

பல நூறு வாசகர்களை உறுப்பினர்களாகக் கொண்டு மாதமொரு தரமான புத்தகத்தை வழங்கி வரும் சிறுவாணி இது வரை 27 புத்தகங்களை வழங்கி மூன்றாவது ஆண்டில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது... இன்னும் பல நூறு பேர்கள் சேர்ந்தால் சிறுவாணி இன்னும் சிறப்பாக பெருக்கெடுத்து ஓடும்...!!
sidtharthan sundaram
-------------------------------------------------------------------------------





No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....