Tuesday, November 6, 2018

"உருமால் கட்டு" சு.வேணுகோபால்

·


செப்டம்பர்(2018)  "உருமால் கட்டு"   

சிறுகதைகள்
எழுத்தாளர் சு.வேணுகோபால்-

பக்கங்கள் 170     விலை 160 /-

ISBN 978-81-940988-2-9
 ************************************************************************************
சிறுவாணி வாசகர் மையத்தின் செப்டம்பர்-2018 வெளியீடான "உருமால் கட்டு"பற்றி.....

விவசாயத்தின் மேன்மையும் விவசாயிகள் மேற்கொள்ளும் இடர்ப்பாடுகளும் அவசர
நகரங்களில் ஆடம்பரமான மால்களில்பாக்கெட்களில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கி நுகர்ந்து கொண்டிருக்கும் மேல்த்தட்டு மாந்தர்களுக்கு அறவே தெரியாது.
கொஞ்சங் கொஞ்சம் தெரிந்த மத்தியதரக் குடியினரும் அதையெல்லாம் மறந்து
ரொம்ப காலமாச்சு.

இந்த நிலையில் உருமால் கட்டு தொகுப்பில் சு.வேணுகோபால்அவர்கள் வழங்கியுள்ள சிறுகதைகள், நமது மனச்சாட்சியைக் குத்திக் கிழிக்கின்றன.

முதலாவதாக இடம் பெற்றுள்ள 'உயிர்ச்சுனையே, வானம் பொய்த்ததாலும் வணிகர்களின் சுரண்டாலும் நன்செயும் புன்செயும் தண்ணீர்த் தாகத்தால் செத்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

அடுத்ததாய் வரும் அவதாரம்,"வாழ்க்கைகூட இம்மாதிரிப் பயணம்தானா ?...." என்று விரக்தியின் விளிம்புக்குப் போனாலும், மாற்றுத்திறனோடு பிறந்த குழந்தையை "குலம்காக்க வந்த எங்கள் தெய்வமே" எனக் காடர்கள் கொண்டாடுவதைக் காட்டிக கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. ஒரு பழையதிரைப்படத்தில் பாலையாவுக்கு நாகேஷ்வீடியோவாகப் பயமுறுத்தும் திகிலை இக்கதையில் எழுத்திலேயே ஆசிரியர் கிளப்பிவிடுகிறார்.

அடுத்த கதை 'உற்பத்தி'யும்"நீரைப் போன்ற ஜீவகளை ததும்பும் திரவம் வேறு உண்டா ?" என்று கேட்டு, அது வற்றிய கொடுமையில், பூமாதேவியின் கற்பையே சந்தேகிக்கிற அளவுக்கு வெறுப்பை உமிழ்கிறது.

இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த கதையாக என்னைக் கவர்ந்தது 'தீராக்குறை'தான். தன்மை, முன்னிலை, படர்க்கை என்று இலக்கணம் மூன்று முடிச்சுப் போடுவதை
ஒரே பாத்திரத்தின் நவரச உரையாடலில்அற்புதமாக அவிழ்த்து விட்டார் ஆசிரியர்.

'மண்ணைத் தின்றவன்' கதையைப் படித்தபோது, விவசாயத்தை விட மனம் வராமல் கிராமத்திலேயே தங்கிவிட்ட என் சித்தப்பா மகன் "ஒரு தடவை ஊருக்கு வந்துட்டுப்போங்கண்ணே" என அழைப்பது காதில்ஒலித்து என் வயிற்றைப் பிசைகிறது.

"மனம் போல நீதி மன்றம் வேறெங்கும்இல்லை. தண்டனைக்கான கைவிலங்கை
மனச்சாட்சி தூக்கிக்காட்டி 'உனக்கானதுதான்' என்று சொல்லி மறைகிறது" என
ஆசிரியர் எச்சரிப்பது உள்ளத்தை உறுத்துகிறது. அத்தனையும்ஆசிரியரின்/நம்மில் சிலரின் சொந்த அனுபவம். கற்பனையோ மிகையோ கிடையாது. ஆகையால் எல்லாக் கதை
களும் அப்படியே நமக்குள் ஊடுருவிவிடுகின்றன.

பாவண்ணன் அதிகம் கவனிக்கப்படவில்லையென நாகராஜன் அவர்கள் ஆதங்கப்
பட்டிருந்தார். சு. வேணுகோபாலும் அதே லிஸ்ட்டில்தான் இருக்கிறார். ஆனால்
நீங்கள் ஆதங்கப்படவேண்டாம் கே.பி.என். !

நாஞ்சில் நாடன் அவர்களும் சுபாஷிணி
மேடமும் சகோதரர் பிரகாஷும் சிறுவாணி நீரூற்றிக் கவனிக்கப்பட வேண்டியவர்களை நமக்கு அடையாளம் காட்டிவிடுவார்கள் !

அட்டைப் படத்தைப் பற்றிச் சொல்லாமலிருந்தால் நன்றி மறந்தவன் ஆவேன். எந்த நொடியும் உருமாலுக்குக் கீழே உள்ள முகம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் போலத் தோன்றுகிறது. பாராட்டுக்கள் ஓவியர் ஜீவா அவர்களே !

திரு.திருமலையப்பன்,திண்டுக்கல்
********************************************************************************************************************

திரு வேணுகோபால் அவர்களின்
உருமால்கட்டு “ - அப்பப்பா படிக்கப் படிக்க என்னுடைய இளையகால தினங்கள் கண்முன்னால் நிழலாடுகிறது.

சுவையோடு பேசும் கிணறு, காற்றோடு உராயும் மரக் கொம்புகள், இனிப்பின் நினைவு தரும் ஓடை- இன்று கிராமம் சிதைந்து விவசாயிகளின் வாழ்க்கையும் குலைந்து விட்டது. நவீன உலகம் கிராம வாழ்க்கையையே தடம்புரட்டிப் போட்டது .

கதைகள் படிக்கப் படிக்க மனது வெம்புகிறது. அற்புதமான படைப்பு , சிறுவாணி வாசகர் மையத்தின் இன்னொரு முத்தான வெளியீடு .

M .R.Venkateswaran

Coimbatore
சிறுவாணி வாசகர் மையம்.
புத்தகம் போட ஆரம்பிக்கும் முன் எழுத்தாளருக்கு ராயல்ட்டி. இந்த நல்லமைக்காகவே இந்த மையத்தில் சேரக்கூடாதா?

*********************************************************************************

" நீ பால குடிச்சாத்தான் தாத்தா நான் நல்லா கொளுவுவேனாம்

நான் குடிச்சா எப்படி தாத்தா நீ நல்லா கொளுவ முடியும்?

வந்து நீ என் தோளுல எடக்கையை வச்சிக்கிட்டு குடிப்பியாம். அந்த கைவழியா பாலு எனக்குள்ள போகுமாம்

தோளுல வேணாம் தாத்தா. உன் வாயில கை வச்சுக்கிடுறேன்

சரி கண்ணு. அறிவுன்னா அறிவு " //

//  தாத்தாவின் நரைத்த முடியைப் பிடித்துக் கொண்டு இடது தோளில் அமர்ந்திருந்தான் நிதின். இடக்கால் மார்பிலும் வலக்கால் முதுகிலும் உரசின.

" ஏய் நிதினு தூங்காத. இதுக்குத்தான் ஒன்ன தூக்கிட்டு வர்றதில்ல. நழுவுனா என்னாகும்

தூங்கல சித்தி ...சும்மா மூஞ்சிய தாத்தா தல மேல வச்சேன் " //

குழந்தைகளின் இயல்பான போக்கை அதன் அழகியல் தன்மையுடன் கதையினூடே எழுதியிருப்பது கதையில் காணப்படும் இருள் எனும் சோக நிகழ்வுகளுக்கிடையே அடிக்கடி தோன்றும் சந்தோஷ மின்னல்கள்.

மண்ணை நம்பி வாழும் ஒரு விவசாயியின் வாழ்க்கை போராட்டத்தை, அவமானத்தை, எதிர்பார்ப்புகளை, வேதனைகளை நம் கண்முன்னே நிகழ்வதுபோல யதார்த்தமாக காட்டியிருப்பது நெஞ்சத்தை பாரமாக்குகிறது.


எந்த மண்ணை கொண்டு மகளின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடுத்தாரோ அந்த மண்ணை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக அந்த மகளிடம் பணத்துக்காக இரந்து நின்றது...இறுதியில் அந்த முயற்சிகள் வெறும் புகையாகிப்போய் இயலாமையுடன் நிற்பது என ஒரு விவசாயக் குடியானவனின் அவஸ்தைகளை  உயிர்ச்சுனை என்ற சிறுகதையில் எழுத்தாளர் சு.வேணுகோபால் அப்பட்டமாக எடுத்துக்காட்டியுள்ளார்.
********************************************************************************************************************

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....