Thursday, June 18, 2020

ஜூன் 2020 "கல்லும் மண்ணும்"- பேராசிரியர் க.ரத்னம்




ஜூன் 2020 வெளியீடு

"கல்லும் மண்ணும்"-
பேராசிரியர் க.ரத்னம்

பக்கங்கள்    142                         விலை ரூ 140 /-








முனைவர் க. ரத்னம். 

13 12 1931 இல் பிறந்தவர் இவரது பெற்றோர் கபினி கவுண்டர் , பெரியம்மாள்.

 கோவை அரசினர் கலைக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பையும், சென்னை,பச்சையப்பன் கல்லூரியில்  பட்ட மேற்படிப்பையும்(1952-55) படித்துள்ளார் .

1955 முதல் 1990 வரை அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் .1960 முதல் 75 வரை மாத இதழ்களில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகின. 

 முதல் நூல் "பேதை நெஞ்சம்"(1961) என்கிற வசனகவிதை , "உருவகக் கதைகள்"(1962) என்கிற கவிதைத் தொகுதி ,"கனவுமாலை"(1967)புதினம்,
"நினைவின் நிழல் ", "கல்லும் மண்ணும்" என்கிற நாவல்கள் (1969) வெளியாகின.

 1965 ல் ஏற்பட்ட பறவைகளின் மீதான ஆர்வம் காரணமாக இவரது "தென்னிந்தியப் பறவைகள்"(1974) 500 பக்க நூல்தமிழகஅரசின் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

 1982ல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் விருப்பப்படி எட்கர் தர்ஸ்டன்(Edger Thurston) என்பவரால் எழுதப்பட்ட "The Caste and Tribes of South India"என்கிற 3500  பக்க அளவிலான ஏழு தொகுதிகளை உள்ளடக்கிய நூல் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 1988இல் அப்பணி நிறைவுற்றது. "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டது .

தமிழில் பறவைப் பெயர்கள்(ஆய்வு)(1988), 'இவர்கள் பார்வையில் அகலிகை'(2000) 'தமிழ்நாட்டுப் பறவைகள் ' அறிவியல் தொகுப்பு நூல்(2004) இவை தமிழக அரசின் முதல் பரிசான ரூபாய் 10 ஆயிரத்தை பெற்றுள்ளன. "தமிழ்நாட்டுப் பறவைகள்"-Birds of Tamilnadu" என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .

இவரது பிற நூல்கள் சிறுகதைச் சாளரம், சிறுகதை முன்னோடிகள் ஆகிய இலக்கிய விமர்சனங்கள்,

 தமிழ்நாட்டு மூலிகைகள் ,

சங்க இலக்கியத்தில் யானை என்கிற சுற்றுச்சூழல் நூல்,

 அதன் பிறகு திராவிட இந்தியா- மொழிபெயர்ப்பு

 கம்பன்  ராம காதையில் பறவைகள்- ஆய்வு 

திருக்குறள் சொல்லடைவு (தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன்)

 டப்ளின் நகரத்தார்

 செகாவ் சிறுகதைகள் ஆகியவை வெளியாகியுள்ளன.

" தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தில் பறவைகள் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு 2012ல் ஆய்வேடு சமர்ப்பிக்கப்பட்டது இது நூலாகவும் வந்துள்ளது .

தற்போது இவர் வசிப்பது கோவையில்.
தொடர்பு கொள்ள எண்:90422 95055
------------------------------------------------------------------------------------------------------------------------
டாக்டர் ரத்தினம் அவர்களுக்கு வணக்கம். 

கல்லும் மண்ணும் படித்தேன். இந்த நாவல் நாங்கள் நாவல் வரலாறு எழுதும்போது கிடைத்திருந்தால் சிறப்பாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஒரே ஒரு ஏழை விவசாயியின் ஆறு நாள் வாழ்க்கையில் அவனுடைய நனவோட்டத்தை மிகவும் நன்றாக சித்தரித்திருக்கிறீர்கள். நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி. இந்தக் கதையில் இரண்டு பாத்திரங்கள் இருப்பதாகக் கூடச் சொல்வதற்கில்லை. ஒரே பாத்திரம்தான். கரையான்கூடக் கண்ட்ராக்டர் மாதிரி அரிதாகவே தோன்றுகிறான். இந்த உத்தியை நீங்கள் மிகவும் வெற்றிகரமாகக் 
கையாண்டிருக்கிறீர்கள். இலக்கியத்தரமான முயற்சி. 

செங்காடனின் நனவோட்டத்தில் மிதந்து வரும் சம்பவங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குச் சில குறியீடுகளைக் கையாண்டிருப்பதும் பாராட்டத்தக்கது. அவன் நம்பி வாழும் மண்ணும் அவன் வாழ்க்கையைக் குலைக்க வரும் கல்லும் தவிர, அரசமரத்தின் இலைகள் இடையிடையே உரையாடல் போலவே ஒலிக்கும் பிரமையும் உங்கள் படைப்புக்குத் தனித்துவம் அளிக்கின்றன. சிறுகதைக்கும், நாவலுக்கும் இடைப்பட்ட ஒரு வடிவத்தை மிகக் கருத்துடன் உருவாக்கியிருக்கிறீர்கள். தனி மனிதனின் நனவோட்டத்தை இவ்வளவு சிறப்பாகத் தமிழில் வேறு ஒரு படைப்பாளியும் கையாண்டதாகத் தெரியவில்லை. இந்த நூல் மேலும் பல இலக்கியவாதிகளின் கவனத்துக்கும் வரவேண்டும். 

                                                                                                                                                - சிட்டி
30.10.89
கோவை
------------------------------------------------------------------------------------------------------------------------

இன்றே சிறுவாணியில் சேருங்கள்....தாமதமாக ஆக அந்தந்த மாத  பொக்கிஷத்தை இழக்கிறீர்கள்  

 சிறுவாணியின் நால்வர்

 கல்லும் மண்ணும்:/  
                                  / வானம்அன்று நீலமாகவே இருந்தது..அதில் உயிர் இல்லை. நோயில் படுத்துவிட்ட தாயைப்பார்க்கும் குழந்தை போல வெறித்தபார்வையோடு நிலம் வானத்தைப்பார்த்தபடிஉள்ளது/
                                                                 /க.ரத்னம்

எண்ணும் எழுத்தும்:

                            /முதல் திவ்ய தேசம் திருவரங்கம் அன்று.நம்சிறுவரங்கமான நம்உடம்பேமுதல்திவ்யதேசம்/
                                                           /மதுஸ்ரீதரன்

இலக்கியப்படகு:
                       /மேல்நாட்டாரைப்பார்த்து அவர்களைப்போல்எல்லாத்துறைகளிலும் பாவனை செய்யும்நம்மவர் பேச்சாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதையும் கற்றுக்கொள்ளவேண்டும்/
                   ்                         திருலோக சீதாராம்

பலநேரங்களில்பலமனிதர்கள்..
                        ./மரணோபராந்த் ( மரணத்துக்குப்பிறகான) விருது கொடுக்கமுன்வந்தால்அவர.குடும்பத்தினர் நிராகரிக்கவேண்டும்..அப்போதுதான் சுஜாதா ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கும்/
                           ்                     பாரதி மணி

Saptharishi lasara
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பறவையியல் நிபுணர், பேராசிரியர், எழுத்தாளர் க.ரத்னம் ,
சிறுவாணி வெளியீடு கல்லும் மண்ணும் நாவலுடன்......



க.ரத்னம் எழுதிய ‘கல்லும் மண்ணும்’ நாவலை முன்வைத்து...
--------------------------------------------------------------------------------------------
செங்கோடனின் பாத்திரப்படைப்பில் அந்த கடல் கிழவனே எனக்கு கண்முன் நிற்கிறான். கரையான் சிறுவனின் இடத்தில் கிழவனிடம் சாகசக்கதை கேட்கும் சிறுவன் முகிழ்க்கிறான். நிலத்தை பண்படுத்தி ஒற்றையாளாக கிணறு வெட்டி, தண்ணீர் உற்றெடுக்க வைத்து அத்தனை பேரையும் பிரம்மிக்க வைப்பதில் அந்த ராட்சஷ மீனை பிடித்த சாகசத்தை உணர்கிறேன். அதையெல்லாம் தாண்டி கல்குவாரி, வெடிச்சிதறலால் சிதைந்த கிணற்றுக்குப் பின்னால் எலும்புக்கூடாய் கரை தட்டி நிற்கும் ராட்சஷ மீன் எலும்புக்கூட்டை காண்கிறேன். அதை விட விண்ணும் மண்ணும் சந்திக்கும் மழைக்காட்சியில் துளிர்க்கும் செங்கோடனின் நம்பிக்கை வெளிச்சத்தில் அந்த ராட்சஷ மீன் எலும்புக்கூட்டை அங்க அங்கமாக அளந்து பார்த்து வியக்கும் மீனவர்களின் கண்களில் வெளிப்படும் நம்பிக்கை வெளிச்சத்தை காண்கிறேன். ஆம், க.ரத்னம் இந்த நாவலில் என் பார்வைக்கு கடலும் கிழவனும் எழுதிய ஹெர்னஸ்ட் ஹெமிங்வேயாகவே தெரிகிறார்.

கா.சு.வேலாயுதன், கோவை, 27.07.2020


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

க.ரத்னம் என்ற பெயரை இன்றைய தலைமுறையினர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் தேடினால் ‘கல்லும் மண்ணும்’ என்ற நாவலை எழுதியவர் என்று சிறு குறிப்பேதும் இருக்கலாம். கோவையைச் சார்ந்த க.ரத்னம் பன்முகக் கலைஞர். பேராசிரியர், சிறுகதையாளர், பறவையியலாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பல்துறை வித்தகர். 

எட்கர் தர்ஸ்டன் எழுதிய Castes and Tribes of South India என்ற நூலை அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.  தமிழ் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. 3500 பக்கங்களுக்கும் கூடுதலான அந்த நூல் 7 தொகுதிகள் அடங்கியது. 

ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘டப்ளினர்ஸ்’ நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார். 

தமிழகத்தின் பறவைகள் என்ற அவரது நூல் பறவையியல் வரிசையில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். அழகிய ஓவியங்களுடன் கச்சிதமான குறிப்புகளைக் கொண்ட இந் நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இவைத் தவிர ‘சங்க இலக்கியத்தில் பறவைகள்’ உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கும் க.ரத்னத்துக்கு இதுவரை அங்கீகாரங்கள் எவையும் கிடைத்ததில்லை. தமிழில் இயல்பாக உள்ளதுதானே? 

சென்ற புதன்கிழமை 19.09.2018 கோவையில் பாரத வித்யா பவன் அவருக்கு ‘தமிழ் மாமணி’ விருதளித்துச் சிறப்பித்தது. 

87 வயதில் அவருக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தந்தது.

சிற்பி பாலசுப்ரமணியம் அவரைப் பற்றி சிறப்புரை தரும்போது ரத்னத்தின் ‘கல்லும் மண்ணும்’ நாவல் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலு’க்கு இணையாக வைத்துப் போற்றத் தக்கது என்று பாராட்டுரைத்தார். 

Gopalakrishnan murugesan
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....