Friday, July 15, 2022

நாஞ்சில்நாடன் விருது (2022)/அழைப்பிதழ்

 





கோவையிலிருந்து செயல்பட்டுவரும் சிறுவாணி வாசகர் மையம்,  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது (2022) இந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த சமூகசெயற்பாட்டாளர் "கௌசிகா" செல்வராஜ் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 21 அன்று கோவை கிக்கானி பள்ளியில் நடைபெறவுள்ள

விழாவில் வழங்கப்படும்.

இவ் விழாவில் "ஆயிரம்+ கதைகள் சொல்லிய கதைசொல்லி" திருமதி. ரம்யா வாசுதேவன் சிறப்புப் பாராட்டுப் பெறவுள்ளார்.


விருது பற்றி சிறு அறிமுகம் ;

**

சிறுவாணி வாசகர் மையம்  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது .


கலை, இலக்கியம்  சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000 ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .


முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;

ஓவியர் ஜீவா (2018),

ஆய்வாளரும், உ வே சா படைப்புகள் மற்றும் பலநூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப. சரவணன் ( 2019) ,

பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன்(2020),

 மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்

(2021) 

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது . 

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக

 தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக

திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (Raac)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 

தொடர்புக்கு -

9940985920,  8778924880

------------------------


சத்தியம் ஒளிரும் இடத்தில் வெற்றி சூழும் - மகாத்மா 

இந்த விருது,பரிசுத்தொகை ரூ 50,000, சான்றிதழ் மற்றும் கேடயம் அடங்கியது.

பணபலம் ,அதிகார பலம்,  ஆள் பலம் எதுவுமே இல்லாமல் எளிய கிராமியப்  பின்னணியில் இருந்து வந்து, பத்தாண்டுகளில் இன்று கோவையைச் சுற்றி உள்ள பல ஏரிகளுக்கு நீர் ஆதாரத்தை பெருக்கியும், பல நூறு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும்  திகழ்கிறார் கௌசிகா செல்வராஜ் .

அவர் உருவாக்கிய பத்துக்கும் மேற்பட்ட இளைஞர் குழுக்கள்  வாரம்தோறும் ஏரிகள் மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளாக  களப் பணியாற்றி வருகின்றனர் . அதில் பல ஏரிகளுக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  பல கிராமங்களில்  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது .

அவர்களின் உழைப்பை பார்த்து வியந்து பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களுக்கு தொடர்ந்து நிதி உதவி செய்து வருகின்றன.

இது போன்ற உன்னத லட்சியங்களை அடைய துணிச்சலும் , தியாக மனப்பான்மையும், கடும் உழைப்பும்  தேவை .

அந்த விதத்தில் கௌசிகா செல்வாராஜ் அவர்கள் தமிழகத்தில் உள்ள பல லட்சம்  இளைஞர்களுக்கு முன்னோடியாகவும், உதாரண புருஷராகவும்  உள்ளார் . 

எனவே , 2022 ஆம் ஆண்டுக்கான” நாஞ்சில் நாடன் விருதை” திரு கௌசிகா செல்வராஜ் அவர்களுக்கு  அளிப்பதில் சிறுவாணி வாசகர் மையம் பெருமிதம்  கொள்கிறது .

கோவையின் வடக்குப் பகுதியில் உள்ள குளwங்கள் அனைத்தும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட  வேண்டும் , கௌசிகா  நதி  மீண்டும் உயிர் பெற்று ஓட வேண்டும் என்ற அவரது உன்னத லட்சியங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்களையும் சிறுவாணி வாசகர் மையம் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறது .🙏

--------------------------------------



நாஞ்சில்நாடன் விருது-2022 விழாவில் சிறப்புப் பாராட்டுப் பெறுபவர்

திருமதி.ரம்யா வாசுதேவன்.


 சிறந்த கதைசொல்லி, சுயதொழில்முனைவர். கல்விசார்ந்து மாணவர்களை ஊக்குவிப்பவர். கற்பதற்கான சூழலை உருவாக்கி வாழ்வைக் கற்பவர்களாக  ஆக்கும் அவரது அனுபவம், கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு தொழில்நிறுவனங்களின் நுகர்வோர் சந்தை சார்ந்த அரங்க நிகழ்வுகளை நடத்தித் தருபவராக,  உத்தியாளராகத் திகழ்பவர்.

பெரும் தொழில் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துதல், கருத்தரங்கங்கள்,  பயிற்சிமுகாம்கள் நடத்துவதோடு  குறும்படங்கள்,  செய்திப்படத் தொகுப்புகள், விளம்பர உருவாக்கம் மற்றும் ஊடகங்கள் குறித்த  பயிலரங்குகள் நடத்தித் தருபவர்.

Under the Tree என்ற கதைசொல்லல் அமைப்பின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியச் சிறுகதைகளை ஒலி வடிவில் நிகழ்த்தியுள்ளார். அவை தமிழகத்தின்அனைத்து அரசு நூலகங்களிலும் இப்போது கிடைக்கப் பெறுகின்றன. தவிரவும் ஆன்மிகம்,சுயமுன்னேற்றம் , இதிகாச புராணங்களில் உள்ள வாழ்வியல் கதைகள்,  தொழில் மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளார்.

தினந்தோறும் இவர் பதிவிடும் ஒலிப்பதிவுகளை  50000க்கும் மேற்பட்ட நேயர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்.

வாசிப்பை,வாசிப்பின் அனுபவத்தைத் தனது குரல் மூலம் பரவலாகக் கொண்டுசொல்லும்

"ஆயிரம்+ கதைகள் சொன்ன ஆச்சர்யக் கதைசொல்லி" ரம்யா வாசுதேவன் அவர்களுக்கு சிறுவாணி வாசகர் மையம் தமது பாராட்டுகளையும்,வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.








No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....