Tuesday, January 15, 2019

"நினைவில் நின்ற கவிதைகள்"- எம்.கோபாலகிருஷ்ணன்






நவம்பர்(2018)- 
"நினைவில் நின்ற கவிதைகள் "
எம்.கோபாலகிருஷ்ணன் 

-கவிதைகளும் வாசிப்பனுபவமும் சார்ந்த நூல்-
பக்கங்கள் 166     விலை 160 

ISBN   978-81-940988-4-3
-----------------------------------------------------------------------------------------------------
அழகழகான, ஆழமான, எந்தக் காலத்திலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் கவிதைகளை அடையாளம் காட்ட வேண்டும். கவிதைகள் குறித்த உரையாடலுக்கு பங்களிக்கும் விதமாய் நூல் அமைய வேண்டும். அந்தப் புத்தகம்தான் இந்தப் புத்தகம்.
சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கும் "நினைவில் நின்ற கவிதைகள்" புக்கிலிருந்து...

கல்யாண்ஜியின் (அதாங்க, நம்ப வண்ணதாசன்தான்) வாழ்வின் எளிய அற்புதங்களை உணர்த்தும் ஒரு அழகான கவிதை...(இதில் குறிப்பிட்ட ஒரு இரண்டு வரி எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் அதை அப்படிச் சொல்லத் தெரிய வேண்டுமே...! )

(கூட ரெண்டு வரி எனக்கு மட்டும் பிடிக்கும்)

கவித....கவித....
******************
தாத்தாதான் எங்களுக்கு
நிறைய காட்டினார்
பாபநாசத்து ஆற்று மீன்கள் முதல்
நெல்லையப்பர் கோயில் யானை வரை.
பொருட்காட்சியும்
தசராச் சப்பரமும்
ஆனித் திருவிழாத் தேரும்
அம்மா காட்டியவை
பாம்பன் பாலம், பாப்பநாதசாமி
கன்யாகுமரிக் கடல்
எல்லாம்
காட்டியது ஆச்சி
எதுவும் காட்டாமல்
அப்பா எங்களை
அடைத்துப் போட்டது
புத்தகங்களுக்குள்.
இவள் வந்து காட்டியது
இருக்கவே இருக்கிறது
மூத்த பெண்ணுக்கு
மலைகளைக் காட்டினோம்
இவன் பார்க்க
இப்போது
திராட்சைத் தோட்டம்,
கட்டுபடியாவதைக்
காட்டும் வாழ்க்கை
விட்டு விடுதலையாவது
அவரவர் வேட்கை.
*************************

நன்றி Ushadeepan Sruthi Ramani,
-------------------------------------------------------------------------------------------------------

#நினைவில் நின்ற கவிதைகள்


கவிதைக் கடலைக் கண்டேன்.
ஆரவாரத்துடன் இறங்கி
மீன்பிடித்தல் கற்றேன்.
கற்றது கைம்மண் அளவு
கற்க நினைப்பதோ
இமயமலை அளவு.

கவிதைகள் படிக்கப் படிக்க
பொழுது தெரியவில்லை. 
காப்பியை மறந்தேன் சாப்பாட்டை மறந்தேன்,
ஏன் மனைவியையே மறந்து விட்டேன்.
வாழ்த்துக்கள்,
மீண்டும் வேண்டும் கவிதைப் படைப்புக்கள்.

நன்றி திரு.M.R.Venkateswaran
-------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையம் வெளியீடாக வந்திருக்கும் 
"நினைவில் நின்ற கவிதைகள்"
- எம்.கோபாலகிருஷ்ணன்.

// நான் வாசிக்க நேர்ந்த கவிதைகளை என் நினைவில் இருந்தபடி எழுதினேன்.பிறகு தேவைப்படும் இடங்களில் தேவையான தொகுப்புகளிலிருந்து குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக்கொண்டேன்.
இதில் தர வரிசை ஏதுமில்லை. சில மூத்த கவிஞர்களின் கவிதைகளுக்கு முன்னால் காலத்தால் பிந்தைய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருக்கலாம்.சில கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டும் இருக்கலாம்.முடிநத வரையிலும் அவ்வாறன்றி எழுதியிருக்கிறேன்.//
என்று அவர் தன் முன்னுரையில் சொல்லி விட்டாலும் விடுபட்ட பல நல்ல கவிதைகளை எழுதிய கவிஞர்களை ' அச்சச்சோ விட்டுட்டாரே!' என நினைக்கத்தோன்றியது.( இரண்டாம் பாகம் வெளிவருமோ !?)

இதுவரை நானறியாத நல்ல கவிதைகளை/ கவிஞர்களை அறிந்து கொண்டேன்.
* பாதசாரி
* சி.மணி
* ஸ்ரீநேசன்
* சு.வில்வரத்னம்
* சேரன்
*இரா.மீனாட்சி
* சுகந்தி சுப்ரமணியன்
* திரிசடை
* தென்றல்(!?)
*ரமேஷ் பிரேம்
* குணா கந்தசாமி
*தீபு ஹரி
* பாலை நிலவன்.
* முகுந்த் நாகராஜன்.

புத்தகம் கிடைத்த தினத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படித்துக்கொண்டிருக்கிறேன்
மெல்லிசை கேட்டபடி ஐஸ்க்ரீமை மெதுவாய் ...மிக மெதுவாய் சுவைத்து சாப்பிடுகிறார் போன்ற நிதானத்துடன்...

கல்யாண்ஜியின் கவிதைகளை
கையெழுத்துப்பிரதியாகவே படித்ததை,

கலாப்ரியாவின் பிரபல கவிதைகளை,

ஞானக்கூத்தனின் சைக்கிள் கமலத்தை

நினைவிலிருந்து சிலாகித்து எழுதியிருக்கிறார்.

// முட்ட முட்ட
பால் குடிக்கின்றன
நீலக்குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள் //
என்கிற பாலகுமாரனின் கவிதையை,( யாருக்குத்தான் மறக்கும்!?)

விரிந்து கிடக்கும் கவிதைவெளி..இன்னாருக்கு இது பிடிக்கும்; புரியும் என்பதை
எளிதில் வகைப்படுத்த முடியாது.இருந்தும் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுகிற கவிதைகள் அத்தனையும் எளிய வாசகியான எனக்குப் பிடித்திருக்கின்றன.( புரிகின்றன.) இதுவே இந்நூலுக்கான சிறப்பென நினைக்கிறேன்.

வாழ்த்துகள்.

*

நினைவிலிருந்து ஏகப்பட்ட கவிதைகளை சொல்லக்கூடிய நபர்களில் ஒருவராக எழுத்தாளர் ஜெயமோகனை சொல்கிறார்.

( எனக்கு எத்தனை கவிதைகளை மனப்பாடமாக சொல்லத் தெரியுமென நினைக்கத் தொடங்கி விட்டேன்.)😊

எனக்கும்

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதனை
பிறர்மேல் விடமாட்டேன்.

- ஞானக்கூத்தன்.
***********************************
கையில் அள்ளிய நீர்
அள்ளி,
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு.
இது நிச்சலனம்.
ஆகாயம் அலைபுரளும் அதில்.
கைநீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?
- சுகுமாரன்.
***********************************
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப்
படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து கொண்டிருக்கிறது.
- தேவ தச்சன்.
**********************************
கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒரு பெயர் நீ!
- பிரமிள்.
***********************************
பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே!
பெண் யார்?
பெற்றுக்கொண்டாள் மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை.
- பிரான்சிஸ் கிருபா.
***********************************
கைகளற்ற ஒருவன்
தன் காலால்
திருவள்ளுவரை வரைந்து காட்டி விட்டான்.
இதில் ஒரு சுவாரஸ்யம் கிட்டி விட்டது
எனவே
அவனுக்கு நமது நாளிதழ்களில்
ஒரு போட்டோவும் கிடைத்து விட்டது.
சுவாரஸ்யமற்ற முடவர்கள்
சுவாரஸ்யமற்ற குருடர்கள்
சுவாரஸ்யமற்ற ஊமைகள்
மூத்திர சந்துகளில்
ஒளிந்து கொள்கிறார்கள்.
- இசை.
***********************************

பூச்சேர்ந்து தான் மணக்கும்
சுகந்த வைபவம்
நார் கண்ட சொப்பனம்
பூக்காம்பு பற்றியதே
கிட்டாத பாக்கியம்.
சூடிய சுந்தரி
காரிருள் கூந்தலில்
சூடிய அனுபவம்
மற்றொரு மகத்துவம்.

- மகுடேசுவரன்.

***********************************
Jeeva Nanthan அவர்கள் வரைந்த அட்டைப்படம் - ஓவியம் ☝ super.
Saraswathi Gayathri
December 12, 2018
-------------------------------------------------------------------------------------------------------
Suresh Venkatadri updated his status.
December 5, 2018 ·

சென்ற நூற்றாண்டின் 80களில் தமிழ்க் கவிதை படிக்கத் துவங்கிய என் போன்ற பலருக்கு,சுஜாதா, கணையாழியின் கடைசிப்பக்கங்களில் அறிமுகப்படுத்திய கவிதைகள் தாம் ஒரு Launching Pad. பின் கணையாழிக் கவிதைகள் என்ற ஒரு நூல் வெளியானது.கணையாழி இதழில் வந்த சிறந்த கவிதைகள் அதில் இருந்தன.ஒரு பாராயணப் புத்தகம் போல் அதை வைத்திருந்தோம்.அதற்கு நீண்ட காலத்துக்குப் பின் வந்த ஒரு நல்ல கவிதை அறிமுக நூல்,ஜெயமோகனின்,உள்ளுணர்வின் தடத்தில் எனும் நூல்.அதன் பின் இப்போது,கோவை சிறுவாணி வாசகர் மையம் கொண்டுவந்திருக்கும்,எம்.கோபாலகிருஷ்ணனின்,'நினைவில் நின்ற கவிதைகள்' முக்கியமான ஒன்றாக வந்திருக்கிறது.

புதிதாக தமிழின் நவீனக் கவிதைக்குள் வருபவர்களுக்கு ஒரு நல்ல அறிமுக நூலாகவும்,மற்றவர்களுக்கு ஒரு நல்ல இனிமையான நினைவு மீட்டலையும் அளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.கவிதையை,கவிஞர்கள்,கவிதை இயக்கங்கள் கருத்தாக்கங்கள்,என்ற பல அலகுகளின் அடிப்படையில் பகுத்து,தன் ரசனயையும் சேர்த்து,மிக அழகாக எழுதியிருக்கிறார் கோபால்.

பிரமிளிலிருந்து இன்று எழுதிக்கொண்டிருக்கும் தீபு ஹரி வரை தமிழின் நவீனக் கவிஞர்களை பற்றி ரசனையோடு பேசும் நூலில் சில பிரபல கவிஞர்களின் பெயர்களோ கவிதைகளோ இல்லாததும் சற்று வியப்பளிக்கிறது.உதாரணமாக, ஆண்களிில்,ந.பிச்சமூர்த்தி,மயன் ( க.நா.சு.),எஸ்.வைத்தீஸ்வரன், நா.விச்வநாதன்,இளங்கோ கிருஷ்ணன்,லிபி ஆரண்யா.பெண்களில்,கிருஷாங்கினி,பெருந்தேவி.

ஆனால்,அவரது நினைவில் நின்ற கவிதைகள் என்பதால்,இதைக் குறையாகச் சொல்லமுடியாது. இன்று தமிழின் நவீனக் கவிதைக்குள் நுழையும் ஒரு இளம் வாசகனுக்கு ஒரு கையேடாகவே இதை நான் பரிந்துரைப்பேன்.

ஒவியர் Jeeva Nanthan அவர்களின் எளிமையான அழகுடன் கூடிய அட்டைப்படமும் அழகு.வாழ்த்துக்கள், Murugesan Gopalakrishnan ,Prakash GR..
-------------------------------------------------------------------------------------------------------

S R Viswanathan
December 12, 2018 ·
படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆரம்பமே அசத்தல்.
--------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

  தென்றல் பேசுகிறது... Jan 2024 கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி...