Sunday, July 4, 2021

போக்கிடம்-விட்டல்ராவ்-ஆகஸ்ட்-2021




ஆகஸ்ட்-2021                             போக்கிடம்-விட்டல்ராவ்

pages 190

price 180

Isbn-978-81-952661-7-3

--------------------------------------------------------

நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு நாவல் வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்தவில்லை என்று சொல்லக் கேட்பதே அந்நாவலை எழுதியதன் பயனை ஓரளவுக்கு பெற்றதற்கான நிறைவையும் தெம்பையும் ஏற்படுத்துகிறது.

கி.விட்டல்ராவ்


காலம்தோறும் வாழ்வதற்கான வழிகளைத் தேடி, அமைதியைத் தேடி, பாதுகாப்பைத் தேடி, வெற்றியைத் தேடி, சுதந்திரத்தைத் தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே, அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே இடப்பெயர்வுகளும் உருவாகிவிட்ட சூழலில், இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒருபோதும் தன் இளமையை இழப்பதில்லை.

பாவண்ணன்

-----------------------------------------------------------------------------------------------------


எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் நாவலின் கேள்விகள் 

– எஸ். ஜெயஸ்ரீ

போக்கிடம் – நாவல். விட்டல்ராவ், சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை, 38. விலை ரூ180)

1976இல் வெளிவந்த நாவல் போக்கிடம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையைக் கடந்து வெளிவந்திருப்பதாகவே கருதலாம். ஆனாலும் அது ஒரு பழைய நாவல் என்னும் தோற்றம் தராத வகையிலும் இன்றைய சூழலுக்கும் பொருந்திப் போகும் வகையிலும் இதன் மையக்கருத்து அமைந்திருக்கிறது. 

மலை சார்ந்த ஒரு கிராமத்தில் ஒரு வேதியத் தாது கிடைப்பதை அறிந்தவுடன், அந்த இடம் ஒரு தொழில்மைய நகரமாக மாறத் தொடங்குகிறது.  அந்தக் கிராமத்து மக்களும் வேறு போக்கிடமின்றி, அந்தத் தாதுவைத் தோண்டியெடுக்க வருகைதரும் தொழிற்சாலையிடம் தம் நிலத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து, அதற்கு ஈடாக அவர்கள் தரும் ஈட்டுத்தொகையைப் பெற்றுக்கொண்டு, அருகிலிருக்கும் ஊர்களுக்கோ அல்லது அந்தத் தொழிற்சாலையை ஒட்டிய பகுதிக்கோ குடியேறுகிறார்கள்.  அதிகாரமும் பணமும் தலைதூக்கும்போது, சாமானியருக்கும் விவசாயத்துக்கும் போக்கிடம்தான் ஏது என்பதை நாவல் பேசுகிறது.

நம் நாடு சுதந்திரமடைந்த கால்நூற்றாண்டுக்குள் தொழிற்சாலைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்துவந்த நேரத்திலேயே இந்த நிலைமை தொடங்கிவிட்டது.  இன்றோ, சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டுக்காலம் கடந்த நிலையிலும் நம் நாடு இப்படித்தான் இருக்கிறது என்றால், வளர்ந்து வரும் தொழில்மயத்துக்காக நாம் மகிழ்வோமா அல்லது அழிந்துவரும் கிராமப் பொருளாதாரத்திற்காக நாம் வருத்தப்படுவோமா என்ற கேள்வியை விட்டல்ராவின் இந்த நாவல் மனத்தில் தோற்றுவிக்கிறது.

இன்று பல இடங்களில் ’செல் டவர்’ அமைப்பதற்காக எளிய மக்களுக்கு பண ஆசை காட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ கனிமவள நிறுவனங்கள் இழப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு இழப்பீடும் தராமல் அவர்களை இழுத்தடிக்கின்றன. இப்படியெல்லாம் இன்றும் நிலைமைகள் இருப்பதாலேயே இந்த நாவலின் இளமை குன்றாமல் நீடித்திருக்கின்றது.  காலங்கள் மாறினாலும் கடந்தாலும் சாதாரண எளிய மக்களுக்கு எதுதான் போக்கிடம்?

நாவலில் நடைபெறும் மற்ற இரு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, கணவனை இழந்த பேச்சி தன் பத்து வயது மகனோடு தனிமையில் வசிக்கிறாள். மற்றொன்று, டேனிஷ்பேட்டையின் பள்ளிக்கூடம்.  கிராமத்துப் பள்ளிக்கூடங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இதே நிலைமையில்தான் இருக்கின்றன. கிராமத்துப் பள்ளிக்கூடம் எனில், அந்த ஊருக்கு வரும் அலுவலர்கள் தங்கிச் செல்வதற்கான இடமாகவும் பெரிய மனிதர்கள் வீட்டுப் பொருட்களை இறக்கி வைப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்படுவதையே பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் முழுமையான அளவு ஈடுபாடும் காட்டுவதில்லை. ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் நல்ல ஆசிரியர் ஒருவர் கிடைத்தால் சிறப்பாக முன்னேறும் என நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஒரு கிராமத்தின் போக்கிடமாக, அதாவது ஒதுங்குமிடமாகவே அது கருதப்படுகிறது.

பேச்சி, கருணையுள்ளத்தோடு படைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் பாத்திரம். ஆனால் அந்தப் பெண்ணை தம் உடற்பசிக்கான போக்கிடமாகவே ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். கவுண்டர், தன் மணவாழ்க்கைக்கு அப்பாற்பட்டு பேச்சியிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும், அது வெறும் உடற்பசியைத் தீர்த்துக்கொள்ளும் உறவாகவே இருக்கிறது.  மேலும், அவர் அவளுடைய நிலங்களையெல்லாம் தானே ஏதோ ஒரு விலை போட்டுக்கொடுத்து தன் பெயரில் மாற்றிக்கொள்வதன் வழியாக பேச்சியை மறைமுகமாக ஏமாற்றுகிறார். பேச்சிக்கோ, தனக்கு கவுண்டரின் உறவு அந்தக் கிராமத்தில் தனித்து வாழ்வதால் நேரும் தொல்லைகள் நேராமல் இருப்பதற்கான ஒரு போக்கிடம். அவ்வளவுதான். பெண்ணின் பாதுகாப்பு தேடும் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆணின் மனநிலையை, இந்த உறவு கூர்மையாக வெளிப்படுத்துகிறது. நகரத்தைவிட்டு கிராமத்துக்கு வந்திருக்கும் சுகவனம் அவ்வப்போது தன் உடற்பசியை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழியாக மட்டுமே பேச்சியின் அன்பைப் பயன்படுத்திக்கொள்கிறான். அந்த அபலைக்கு உண்மையான அன்பு இத்தனை இடர்ப்பாடுகளுக்குப் பிறகே பீர்முகம்மதுவிடமிருந்து கிடைக்கிறது.

1976இலேயே விட்டல்ராவ் பேச்சி பாத்திரத்தை தன் உறவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சுயமாக யோசித்து முடிவெடுப்பவளாகப்  படைத்திருப்பது ஆச்சரியமான விஷயம். அவளும் சுகவனமும் சேர்ந்திருந்ததை, கவுண்டரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியே, சுப்புரு அவளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான்.  ஆனால் பேச்சியோ “போ. யாருகிட்ட வேணா சொல்லிக்கோ. உன்னோட வரமாட்டேன்” என்று சொல்லும் இடம் அபாரம்.  பிங்க் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. பெண் என்பவள் தன் விருப்பத்துக்கு ஒரு ஆணுடனான உறவுக்கு உடன்படவோ மறுக்கவோ உரிமையுள்ளவள் என்பதைச் சொல்லும் திரைப்படம் அது. இந்தக் கருத்தை விட்டல்ராவ் 1976இல் தன் நாவலில் பதிவிட்டிருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

“அம்மண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்பதுபோன்ற நிலை சுகவனத்துக்கு. தொடக்கத்தில் சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டும், கிராமத்துப் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்ற துடிப்போடு டேனிஷ்பேட்டை கிராமத்துக்கு வரும் சுகவனம் இந்தச் சமூகச் சீர்கேட்டில் நிலவும் சுழலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தானும் அகப்பட்டுக்கொள்கிறான். கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் அவனுக்கு வேறு என்ன போக்கிடம்? மதிய உணவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை சரியாகப் பயன்படுத்த நினைக்கும் அவனுடைய மனம், அப்படிப் பயன்படுத்தாமல், அந்தப் பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் தவறேதுமில்லை என நினைக்கும் அளவுக்கு மாற்றமடைந்துவிடுகிறது. பள்ளியில் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தவன் ப்ரைவேட் டியூஷனில் வரும் வருமானத்திற்காக ஆசைப்படுகிறான். தனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையை விட முடியாத அவன் வேறு என்ன செய்ய முடியும்? இந்த அமைப்பின் சீர்கேட்டுக்குள் சிக்கிக்கொள்வதைத் தவிர அவனுக்கென வேறு என்ன போக்கிடம் உள்ளது? அவன் தன் வாழ்க்கைப்போக்கையே மாற்றிக்கொள்கிறான்.

நேர்மை, நியாயம், தர்மம், உண்மை என வாழ நினைப்பவர்களை இந்தச் சமுதாயச் சீர்கேடுகள் நிறைந்த இந்த அமைப்பு அமைதியாக வாழ விடுவதில்லை. வேறு என்னதான் போக்கிடம் என்று அவர்களும் இந்தச் சீர்கெட்ட அமைப்புக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.

விவசாயம், கிராமம் என்று தங்கள் உயிரையே வைத்திருக்கும் மக்களுக்கு இதுபோன்ற தொழிற்சாலைகள் வந்து, வேலை வாய்ப்புகளைக் கொடுத்து நிலங்களைப் பிடுங்கினால், அவர்களுக்கு வேறு எதுதான் போக்கிடம்? தன் நிலத்துக்கு தானே முதலாளியாக இருந்தவன் கூட கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவனுக்கு வேறு என்னதான் போக்கிடம்?

பாவண்ணன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல ஆட்டின் கால்களில் ஒட்டியிருக்கும் தாரை பீர்முகம்மது அகற்றும் காட்சியும் தீப்பெட்டியில் அடைத்துவைக்கப்பட்ட வண்டு பறந்துபோகும் காட்சியும் நாவலில் மிகவும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

சேலத்து வட்டாரமொழியில் இந்த நாவலை விட்டல்ராவ் அழகாக படைத்துள்ளார். மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும், நாவலை வாசிக்கும் வாசகர்களின் மனத்தில் தோன்றவைக்கும் விட்டல்ராவ், கதையை அப்படியே சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். அவராக தத்துவங்கள், கேள்விகள் என எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை. நாவல் தெளிவாக நீரோட்டமாக ஒரே வாசிப்பில் படித்து முடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பின்னிணைப்பாக விட்டல்ராவின் நேர்காணலை (பாவண்ணனால் எடுக்கப்பட்டது) இணைத்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது. இன்று விட்டல்ராவ் எழுபது வயதைக் கடந்தவர்.  பாவண்ணனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எப்போதும் திருத்தமான உடையணிந்து, நிழற்படக்கருவியோடு சுறுசுறுப்பாக இங்குமங்கும் இயங்கியபடியே இருந்தார். அனைவரோடும் கலகலப்பாக பேசினார். போக்கிடம் நாவலை அவர் 1976இல் எழுதியிருக்கிறார் என்றாலும் அவரைப்போலவே நாவலும் புதுப்பொலிவோடு இக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. மறுபதிப்பாக, இந்த நாவலை வெளியிட்டுள்ள சிறுவாணி வாசகர் மையத்தார் பாராட்டுக்குரியவர்கள்.


நன்றி;புக்டே இணையதளம்

எஸ்.ஜெயஸ்ரீ Jayashri Raghuram 

 https://bookday.in/vittalraos-pokkidam-novel-book-review-by-jayashri-raghuraman/

-----------------------------------------------------------------------------------------------------------------

போக்கிடம்

- விட்டல்ராவ்


சிறுவாணி வாசகர் மையம்,

கோவை.

மூன்றாம் பதிப்பு: ஆகஸ்ட் 2021

விலை:ரூ.180/-

தொடர்புக்கு: 9940985920

~~~~

எழுத்தாளர் விட்டல்ராவ் கடந்த 55 வருடங்களாக இலக்கியத்தில் செயல்பட்டு வருபவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல படைப்புகளை அளித்துள்ளார். ஓவியக்கலையில் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். இவரின் வண்ணமுகங்கள், போக்கிடம், நதிமூலம், நிலநடுக்கோடு நாவல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை. ஓவியக்கலை பற்றிய இவரது நூலும், வாழ்விலே சில உன்னதங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும், தமிழகக் கோட்டைகள் என்ற இவரின் ஆவணப் படைப்பும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. BSNL துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

சேலம் அருகே சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய பழைய டேனிஷ்பேட்டையில் வாழும் மக்களின் இடப்பெயர்வையே  'போக்கிடம்' என்ற உணர்வுப்பூர்வமான நாவலாக எழுத்தாளர் விட்டல்ராவ் படைத்துள்ளார். நாவல் வெளிவந்து 45 வருடங்கள் ஆனாலும் இன்னுமே இந்நாவல் தன்னை வாசிக்கும் புது வாசகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது இந்நூலின் மகத்துவம்.

இரும்பு தயாரிப்புக்குத்  தேவையான மாக்னஸைட் தாது ஏராளமாக கிடைக்கும் டேனிஷ்பேட்டையிலிருந்து அரசாங்கத்தால் வெளியேற்றப்படும் ஊர் மக்கள் தங்களுக்கான போக்கிடத்தை அமைத்துக்கொள்வதே நாவலின் பேசுபொருள்.

பஞ்சாயத்து போர்டு தலைவர் மாரிமுத்து கவுண்டர், அவர் மனைவி ஆராயி, தம்பி சின்னகாளி, ஊரில் மாரிமுத்து கவுண்டரை எதிர்க்கும் ஒரே நபரான சுப்புரு, கணவனை இழந்து பாதுகாப்புக்காக கவுண்டருடன் உறவை பேனும் பேச்சி, அவள் மகன் பையப்பன், ஊருக்கு புதிதாக வாத்தியார் வேலைக்கு வரும் சுகவனம், கிராம சேவக் பொன்னுசாமி, ரோட்ரோலர் டிரைவர் பீர்முகம்மது .... என நாவலில் ரத்தமும் சதையுமான  ஏராளமான கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாக வளைய வருகின்றார்கள்.

பள்ளிக்கூடம் ஆங்காங்கே சிதிலமாக இருப்பது, நிறைய மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தங்கள் நிலத்து வேலைக்கு சென்றுவிடுவது, ஆசிரியர் பாடம் நடத்தும் பாங்கை ரசிக்க ஊர் மக்கள் ஜன்னல் வழியே வகுப்பை எட்டிப் பார்ப்பது என எழுபதுகளில் கிராமங்களில் இருந்த தொடக்கப்பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியருக்கு ஏற்படும் அனுபவங்களை சுகவனம் கதாபாத்திரத்தின் வழியாக  துல்லியமாக காட்டுகிறார் எழுத்தாளர். தபால் அலுவலகம் இல்லாத ஊரில் மக்களின் தேவைக்கென்றே அதிக விலையில் தபால் கார்டுகளை, இன்லேண்ட் கடிதங்களை  வாங்கி விற்கும் ராஜமாணிக்கத்தின் கடைதான் அந்த ஊரின் All under one roof சூப்பர் மார்க்கெட்.

கோலி,பம்பரம், கிட்டிப்புள், பனங்காய் வண்டி விளையாட்டு என ஒரு அசல் கிராமத்து சிறார்கள் விளையாடும் விளையாட்டு நிகழ்வுகளை நாவலில் ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருப்பது யதார்த்தமாக உள்ளது. மனைவி இருந்தாலும் ஊர் தலைவர் என்ற கெத்தால் பேச்சியிடம் உறவை வைத்துக் கொண்டிருக்கும் மாரிமுத்து கவுண்டர் அதிகாரவர்கத்தின் உதாரணங்களில் ஒன்று. விதவையான பேச்சி பாதுகாப்புக்காக மாரிமுத்து கவுண்டரிடமும், ஆசைக்காக சுகவனத்திடமும், மிரட்டலுக்கு அடிபணிந்து  சுப்புருவிடமும், புதுவாழ்க்கைக்காக பீர்முகம்மதுவிடமும் உடல் சார்ந்த உறவை வைத்துக்கொள்வது  அவள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை. அவரவர் தேவைகளுக்காக அவரவர்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

நாவலினூடே கிராமத்து மக்கள் துலுக்க சாமந்தி பறிக்க போவது, நிலங்களில் சோளக்கதிர் அறுப்பது, கரும்பு வெட்டுவது, கரும்பாலையில் வேலை செய்வது போன்ற காட்சிகள் வருவது  அவர்களின் வாழ்வாதாரத்தையும் கிராமப் பொருளாதார அம்சங்களையும் படம்பிடித்து காட்டுகிறது. மதிய உணவை மாணவர்களுக்கு வழங்காமல் வழங்கியதாக கணக்கு காட்டி அதற்கான பணத்தை பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் கையாடுவது, மாணவர்களுக்கான பால்பவுடரை வெளிமார்க்கெட்டில் விற்பது என அக்காலத்திய கல்வித்துறை சார்ந்த ஊழல்களையும் நாவல் தொட்டுச் செல்கிறது. இவ்விஷயங்களில் நேர்மையாக இருக்க முயன்றாலும் மற்றவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் வழிக்கே சென்று விடும் ஆசிரியர் சுகவனம் போன்றவர்கள் ஒரு சராசரி அரசு ஊழியருக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.

அரசாங்கம் மாக்னஸைட் சுரங்க வேலைக்காக  மக்களை ஊரை விட்டு காலி செய்ய நோட்டீஸ் அளித்தபிறகு அதற்கான லாப-நஷ்ட கணக்குகளை ஊரார் பேசுவதும் அவர்கள் அதில் ஒருவருக்கொருவர் முரண்படுவதும் இயல்பான உரையாடல்கள் வழியே நாவலில் சொல்லப்படுவது நாவலின் சுவாரஸ்யமான வாசிப்புக்கு வழிகோலுகிறது. அரசு எனும் ராட்சச இயந்திரத்தின் முன்னால் ஒன்றும் செய்ய இயலாமல் மக்கள் ஊரை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்வது பரிதாபமானது. ஆனால் புது இடத்தில் கிடைக்கும் சுரங்க வேலைகளும் அது சார்ந்த வருமானங்களும் மக்களின் போக்கிடத்திற்கான காரணத்தை நியாயப்படுத்துவதாக இடம்பெயர்ந்த மக்களே சமாதானம் அடைவது அதிகாரவர்கத்தின் வெற்றி. அவ்வளவு பெரிய இடப்பெயர்வுக்காக ஊரில் சிலர்கூட அரசுக்கு எந்தவித எதிர்ப்பையும்  தெரிவிக்காமல் போவது தர்க்க ரீதியான கேள்விகளை எழுப்புவிக்கிறது. சில எதிர்ப்பு சம்பவங்களையாவது நாவலில் எழுத்தாளர் சேர்த்திருக்கலாம்.

சுரங்க வேலைக்காக பெரிய இயந்திரங்கள் கிராமத்திற்கு கு வருவதும் அவற்றுக்காக புதிய தார் சாலை அமைப்பதும் சாலைக்காக வேண்டி கிராமத்தாரின் குலதெய்வமான முனியப்பன் குடி கொண்டிருப்பதாக நம்பப்படும் அரச மரமும் மக்களின் பயன்பாட்டுக்காக இருக்கும் புங்கை மரமும் வெட்டப்படுவதும் ஊர் ஒட்டியுள்ள காடு இயந்திரங்களால் வெட்டி அழிக்கப்படுவதும் சூழலியல் சீர்கேடுகளாக காட்டப்படுகின்றன.

நாவலை முழுவதும் ஆழ்ந்து வாசித்து முடிக்கும்போது ஊர் மக்கள் காலி செய்து விட்டுப்போன டேனிஷ்பேட்டை தெருவில் நான் மட்டும் கண்கலங்கியபடி அநாதையாக நின்றிருப்பதுபோல உணர்ந்தேன். இறுதியில் ஊர் மக்கள் அவரவர்களுக்கான போக்கிடத்தை கண்டடைந்ததைப் போல நாவலை வாசித்து அதன் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து அவர்களுடன்  பயணித்த வாசகனான எனக்கு   நாவலின் நினைவுகள்தான்  எனக்கான போக்கிடம்.

Suresh subramani

வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்

-------------------------------------------------------------------------------------------------------------------

இன்றுதான் வாசித்து முடித்தேன். வாசிக்கும்போது ஒரு விறுவிறுப்பான நாவல் தரும் உணர்வையே தந்த இந்நூல் வாசித்து முடித்ததும் ன் மனதிலிருந்த எண்ணங்களெல்லாம் துடைத்தெறியப்பட்டு ஏதோ ஒரு வெறுமை, விட்டேத்தியான சூழல் உணர்வை தந்துவிட்டது. ஊரார் காலி செய்துவிட்டு போன பழைய டேனிஷ்பேட்டையில் யாருமற்ற அநாதையாக நான் நிற்பதுபோல உணர்ந்தேன். ஒரு நாவல் வெளிவந்து 45 வருடங்கள் கழிந்தும் இன்னும் புதிய வாசகர்களை அது உணர்வு ரீதியாக  ஆட்கொள்கிறது என்றால் அதன் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?...கிரேட்.

எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏.

Suresh subramani
--------------------------------------------------------------------------------------------------------------------

நான் படித்த புத்தகம்

போக்கிடம் – நாவல்

ஆசிரியர் திரு விட்டல் ராவ்

வெளியீடு: 

சிறுவாணி வாசகர் மையத்திற்காக, 
பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் அஞ்சல் நிலையம்,

கோயம்புத்தூர் – 641 038.
siruvanivasagar@gmail.com

போன்: திரு GR Prakash – 94881 85920  //  99409 85920

பக்கங்கள் 192  //  விலை ரூ.180




முதலில் புத்தக வெளியீடு பற்றி:

கோயம்புத்தூர் சிறுவாணி வாசகர் மையம் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து புத்தக ஆசிரியரின் அனுமதி பெற்று, அவர்களுக்கு ராயல்டி கொடுத்து, குழு உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு புத்தகம் வெளியிடுகிறார்கள்.  இந்த குழுவில் சேர்வதற்கு மேலே முகவரி இருக்கிறது. 

இந்த வருட கட்டணம் வருட்த்துக்கு ரூ.1600.00 – உங்களுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் புத்தக மதிப்பு ரூ.2000 க்கு மேல் வரும்.  சிறந்த புத்தகம், எழுத்தாளரை உற்சாகப்படுத்தும் செயல், எனவே நண்பர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து சிறந்த புத்தக வெளியீட்டை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.    உங்களுக்கும் படிப்படியாக நல்ல புத்தகங்கள் சேரும்.  இவர்கள் வெளியீட்டில் இது வரை வெளியான புத்தகங்கள் பட்டியல் இருக்கும், அதில் நீங்கள் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தால் புத்தகங்கள் அனுப்புவார்கள். 

புத்தகத்தைப் பற்றி:
இந்தப் புத்தகம்  1976 ஆம் ஆண்டு இலக்கியச்சிந்தனை அமைப்பின் விருதுக்குரிய முதல் நாவலாகத் தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்டிருக்கிறது.  எழுதி 45 வருடங்கள் கழித்தும் இந்த நாவல் மிகவும் அற்புதமாக இருக்கிறது.

சேலம் அருகில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதை.  கிராமம் கிராமமாக இருக்கிறது, 
மாங்கனீஸ் என்ற தாதுப்பொருள் கண்டு பிடிக்கப்படும் வரை.  அதன் பின் ஏற்படும் தலைகீழ் மாற்றங்களை ஆச்சரியமாக இருக்கின்றன.  அந்த கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக வெளியே நகற்றப்படுகிறார்கள்.  அவர்கள் விவசாயம் முற்றிலுமாக போய் விடுகிறது.  சுரங்க வேலைக்குச் செல்கிறார்கள்.  வாழ்க்கை முறையே மாறி விடுகிறது.  

இந்த நாவலில் பாத்திரப்படைப்புகள் அத்தனையும் அற்புதம்.  புதிதாக வரும் ஆசிரியர் சுகவனம் ரயிலில் இறங்கி பையப்பன் என்ற சிறுவனுடன் ஊருக்குள் நுழைகிறார், நாமும்.  அந்த கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு தலைவர் மாரிமுத்து கவுண்டர், பேச்சி, சின்னக்காளி, பீர் முகம்மது, இன்னும் சிலர்.  பேச்சி என்ற இளம் விதவைப்பெண்ணின் வாழ்க்கை, அதில் மற்றவர்கள் எப்படி நுழைகிறார்கள், நாவலில் எந்த இடத்திலும் விரசம் இல்லை, நாமும் நம் ஊரிலும் இப்படிக் கேள்விப்பட்டிருக்கிறோமே என நினைப்போம்.  எடுத்த புத்தகத்தை கீழே வைக்க மனசில்லை.  2 நாட்களில் படித்து முடித்து விட்டேன்.

ஆரம்ப காலத்தில் கிராமங்களில் கல்வி வளர்க்க என்ன பாடுபட்டிருக்கிறார்கள் என தெரிய முடிகிறது.  அன்று போட்ட விதை இன்று கல்வி எல்லா அளவிலும் பரவியிருக்கிறது.  மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் ஊர் டாக்டர் Rameswaran அவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கும்.  அடுத்து எங்கள் அருமை மகள் புதுக்கோட்டை Devatha Tamil Geetha அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.  இந்தப் புத்தகம் பற்றி அருமையாக எழுதி பரிசு வாங்கி விடுவார்.

இந்தப் புத்தகம் படிக்க ஆரம்பித்த உடன் இந்த புத்தக ஆசிரியர் திரு விட்டல் ராவ் அவர்களுக்கு போன் செய்தேன்.  அவர் 1942இல் பிறந்தவர்.  அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுகள் சார் திரு விட்டல் ராவ்.  உங்கள் மற்ற புத்தகங்களையும் தேடிப்படிக்கிறேன்.  நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் சார்.

நன்றி நண்பர்களே.
Rathnavel srivillipudur fb

--------------------------------------------------------------------------------------------------------------

விட்டல் ராவ் அவர்களின் 'போக்கிடம்' வாசித்தேன். ஒரு புத்தகத்தை முழுசும் வாசித்த பிறகே அதன் முன்னுரை, முக வுரை, அணிந்துரை முதலானவற்றைப் படிக்க வேண்டும் என்று கி.ரா.அவர்கள் கூறியுள்ளதைப் பின்பற்றுபவன் நான்.

 'போக்கிடம்' கதை இன்றைக்கு நடப்பது போல அமைந்துள்ளது. முன்னுரையை வாசித்து, அது 45 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதை அறிந்து வியப் படைந்தேன். காலத்தை வென்ற எழுத்து என்பது இதுதான். 

கதா பாத்திரங்களுக்குப் 'போக்கிடம்' எப்படிப் பொருந்து கிறது என்று பாவண்ணன் அவர்கள் அழகாக விளக்கியிருக்கிறார்.

 அருமையான நாவல். வாசிக்கத் தந்த சிறுவாணிக்கு நன்றி !

நன்றி.திருமலையப்பன் அவர்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------
 ஓவியர் ஜீவா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையத்தின் அடுத்தடுத்த மாதங்களின் புத்தகங்களை அளித்தபோது.....


-------------------------------------------------------------------------------------------------------------------


No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....