பொழுதுபோக்கு
தி.ஜ.ர
ரூ. 250/-
தேடித் தேடி வாசிக்கும் புத்தக நேசர்களுக்காக குறைந்த வருடக் கட்டணத்தில் "மாதம் ஒரு நூல்" என வீடுதேடி வரும் புத்தகங்கள்
தாமரைக்குளம் சுத்தானந்த பாரதியார் |
128 Pages |
ரூ 150/- |
கதவுக்கு அப்பால் -ராஜம் கிருஷ்ணன் |
176 Pages |
ரூ 180/- |
தற்கால நிகழ்வுகளில் நான் நம்பிக்கை இழந்து
சோர்ந்து விழும் போதெல்லாம் ராஜம்கிருஷ்ணன்
எழுதியதைப் பார்த்து மீண்டும்
மீண்டெழுகிறேன்.
- அம்பை
---------------------
பெண்கள் மிகக்குறைவாகவே எழுதிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தமிழ்ப்புனைவெழுத்தில் கால் பதித்து வழக்கமான வணிகப்போக்குக்கு மாறான தீவிரம் கொண்ட சமூக விமரிசனங்களாகத் தன் நாவல்களை உருவாக்கியவர் ராஜம் கிருஷ்ணன் . பெண் எழுத்தாளர்களில் அவரைப்போல அகலவும் ஆழவும் உழுதிருப்பவர்கள் வேறு எவரும் இல்லை.
தமிழ் இலக்கியத்தின் பல களங்களிலும்
தமிழ்ச்சமூகத்தின் பல தளங்களிலும்
அழுத்தமாய்ச் சுவடு பதித்திருக்கும்
காலடிகள் ராஜம் கிருஷ்ணனுடையவை.
- எம்.ஏ.சுசீலா
----------------
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.ஓவியர் ஜீவா புத்தக அட்டைப்படங்களை வடிவமைத்துத் தருகிறார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500+ உறுப்பினர்கள் உள்ளனர்.
தொடர்புக்கு -
9940985920
8778924880
siruvanivasagar@gmail.com
siruvaniprakash@gmail.com
https://siruvanivasagarmaiyam.blogspot.com/?m=1
----------------------------
https://drive.google.com/file/d/1ZQNwaihLBaIXhwO9x8kDzXtPoitrteAy/view?usp=drivesdk
Books List
----------------------------
நேர்காணல்:
'சிறுவாணி வாசகர் மையம்'
ஜி.ஆர். பிரகாஷ்
புத்தக வாசிப்பு: இன்று
இக்காலத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது போல ஒரு கருத்து உள்ளது. அது சரியில்லை என்று நினைக்கிறேன். ஆங்கிலப் புத்தகங்கள், சர்ச்சைக்குரிய புத்தகங்கள், நடிக, நடிகையர் பரிந்துரைகள் என ஆவலாக இளைய தலைமுறை பெரும்பாலும் வாசிக்கிறார்கள். அவர்களுக்கு நமது கிளாசிக் எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்ய நமது கல்வித்திட்டத்தில் இடமில்லை. பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கோ விருப்பமும் நேரமுமில்லை.
அந்த இளைய தலைமுறைக்கு நமது சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை மறுஅறிமுகம் செய்வதே மையத்தின் முக்கியப்பணி. ஒரு புத்தகத்தை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதன் மூலம், அந்த எழுத்தாளரின் மற்ற படைப்புகளை அவர்கள் தேடி வாசிக்க வேண்டுமென்பது எங்கள் ஆசை. வணிகநோக்கமில்லாத இந்த வாசிப்பு இயக்கம், தொடர் இயக்கமாய் மாற வேண்டும். தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு, புத்தக வாசிப்பால் மனித மனங்களைப் பண்படுத்தும் எங்களது முயற்சிகளுக்கு, வாசகர்களின் ஆதரவு வேண்டும்.
- ஜி.ஆர். பிரகாஷ், சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர்
- - - - -
இதழை தென்றல் இணைய தளத்தில் வாசிக்கலாம்/கேட்கலாம்.
வாசிக்க:
http://www.tamilonline.com/mobile/article.aspx?aid=15465
ஒலி வடிவில் கேட்க:
நீலவானம்
ரமணன்
வெளியீடு March 2025 விலை ரூ 150/-
தமிழில் த்ரில்லர்கள், துப்பறியும் கதைகள் புதியன அல்ல. ஜே.ஆர். ரங்கராஜு காலம் (1875-1959), வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலம் (1880-1942) முதல் இன்று வரை அவை வந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால் பல தகவல்களுடன், அதே நேரம் பரபரப்பும், திகிலும் நிறைந்த ரமணனின் இந்தக் கதைப் பாணி தமிழுக்குப் புதிது.
எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என முதல் பக்கத்தைத் திறந்தால் மொத்தப் புத்தகத்தையும் படித்து முடித்துவிட்டுதான் கீழே வைப்பீர்கள்.
இந்த நூலைப் படித்துப் பாருங்கள். நான் சொல்வதில் சற்றும் மிகையில்லை என்பது தெரியும்.
-சிவசுப்பிரமணியன்
--------------------------------------
நீலவானம் நூல் பற்றி
'கல்கி' ரமணன் அவர்கள் எழுத்தாளர், பத்திரிகையாளர், பொதுத்துறை வங்கியின் முன்னாள் மூத்த அதிகாரி, தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் சரளமாக பேசவும் எழுதவும் செய்கிறவர். எப்போது சந்தித்தாலும் மாறாத புன்னகை, உற்சாகம் இவற்றோடு சுழன்று வருகிற இவர் எனக்கு தனது நீலவானம் என்கிற தனது 'திரில்லர்' புத்தகத்தை பரிசளித்தார். சோதனையாக அதனை நான் கையில் எடுத்து வாசிக்க சில நாட்கள் ஆகிவிட்டன.
வியத்தகு தகவல்கள், பரபரப்பு, திகில் என்று இப்படியான நூலை நான் நிச்சயம் வாசித்ததில்லை. இவர் ஒரு பயிற்சியாளர் என்பதால் விமான நிலையம், எத்தனை விமானங்கள் ஒரு நாளைக்குப் பறக்கும், எத்தனை சர்வதேச நிறுவனங்கள் இயங்குகின்றன, விமான நிலையப் பணியாளர்கள், விமானக் கம்பெனி (பைலட்கள், பணிப்பெண்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள்) போன்ற விவரங்கள் எல்லாமே கண்முன்னே பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கி நம்மை கைப்பிடித்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
MAA மெட்ராஸ் ஏர்போர்ட் அத்தாரிட்டி போன்ற விளக்கங்கள், 'பே' என்றால் என்ன? விமான நிலைய கண்ட்ரோல் டவர் பற்றிய விவரம், உள்ளே பயணிகளுக்கு உணவு எங்கிருந்து வருகிறது, அவை எப்படி உள்ளே ஏற்றப்படுகிறது போன்ற விவரங்கள், போர்டிங் பாஸ் வழங்கும் விவரம், பயணிகள் நடக்கும் ஏரோ பிரிட்ஜ், அதிகாரிகள் என்ன செய்யலாம் மற்றும் செய்யக்கூடாது போன்ற நடைமுறை விளக்கங்கள், என்ன விதிப்படி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆணையிடும், இப்படி கடினமான தொழில்நுட்ப விஷயங்களை அதிகம் படிப்பறிவு இல்லாதவர் கூட புரிந்து கொள்ளும் விதத்தில் ஆங்காங்கே குறிப்பிடுவது இந்த நூலின் மதிப்பைக் கூட்டுகிறது.
ஒரு நாவலை எழுதும் முன்னர் எத்தனை ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும், எத்தனை விவரங்கள் (உண்மைத்தன்மை கலந்து) திரட்ட வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு பாடம். வெறும் கதைக்கரு, எழுத்துத்திறன், சொல் மேலாண்மை, கூகிள் கூட சொல்லாத விஷயங்களை எப்படி சுவாரசியமாக அளிக்கலாம், என்ற அடிப்படையில் அதுவும் ஒரு திரில்லர் வடிவில் தருகிற ஸ்டைல் நிச்சயம் நான் எனது பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ....'வேற லெவல் '
எங்குமே தேவையற்ற வர்ணனைகள், வார்த்தை ஜாலங்கள் கிடையாது. இந்தக் கதையை வாசிக்கும் பொழுது பயம், படபடப்பு வராது. கியூரியாசிட்டி மட்டுமே நம்மை ஆட்கொள்கிறது. சூழலை திறமையானவர்கள் எப்படி சாதுரியத்துடன், சமயோஜிதமாக கையாள வேண்டும் - கையாளுகிறார்கள் என்பதை நாமும் அறிந்து கொள்கிறோம். விமானப்பணி என்பது ஒரு தேச சேவை. தேச பாதுகாப்பு குறித்த ஒன்று. வெறும் பயணிகளை இடம் விட்டு இடம் கொண்டு செல்வது மட்டும் விமானம் அல்ல என்பதை முடிக்கிற கடைசி பத்திகளில் வெளிப்படுத்தி நிற்கிறார்.
இதில் வருகிற கதாபாத்திரங்களின் அறிவுப்பூர்வமான நடவடிக்கைகள், மன அழுத்தத்தின் இடையே எப்படி நிதானம் மற்றும் சாதுர்யம் சாகசம் இவற்றை கையாளுகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு நிர்வாக ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக நான் மிகவும் ரசித்தேன். தேவையில்லாத திரில்லர் கொடுமைகள் எதுவுமே இதில் இல்லை. தேவையான விஷயங்கள் எதுவுமே இதில் விட்டுப்போகவும் இல்லை.
வாழ்த்துக்கள் ரமணன் சார். உங்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி. (நான் அனுப்புவது கடிதம் அல்ல - என்பது போல நான் எழுதுவது கதைகள் அல்ல என்று கூட யோசிக்க வைத்தது). மேலும் நீங்கள் நிறைய எழுத வேண்டும். வாசித்து பலரும் மகிழ வேண்டும்.
பாலசாண்டில்யன்
------------------------------------
வி எஸ் வி ரமணனின் "நீலவானம்"
“A Colt .45 revolver consisting essentially of a metal tube from which a missile or projectile is shot by the force of exploding gunpowder or some other propellant….”
”அந்த சிங்கிள் ஆக்ஷன் ராணுவ கோல்ட் பீஸ்மேக்கர் துப்பாக்கியின் இருண்ட வாய் என்னை நோக்கி அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என்று அலிஸ்டைர் மக்ளீன் எழுதினது காலேஜ் வயதில் என்னைப்பாதித்த எழுத்து நடை.
ஒரு துப்பாக்கியின் உள் சமாச்சாரங்களை விலாவாரியாக எழுதிவிட்டு அதன் மூலம் கதாநாயகனை அறிமுகம் செய்து அபார ஆக்ஷன் கதையாக அந்த When Eight Bells Toll இன்று வரை என் மனதை விட்டகலவில்லை.
ஒரு நாவலில் டெக்னிக்கல் விஷயங்களை நுட்பமாக எழுதுவது அந்த கதையின் நம்பகத்தன்மையை பல மடங்கு அதிகரிக்கும் என்பதை ஆணித்தரமாக நம்பும் ஆசாமி நான். அதனாலேயே ஃப்ரெடெரிக் ஃபர்ஸைத்தின் கதைகள் – கில் லிஸ்ட், அஃப்கான், அவெஞ்சர் – மத்திய கிழக்கு மற்றும் செபியாவின் சரித்திரத்தையும் சுவாரஸ்யமாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை நல்கின.
இந்த டெக்னிக்கல் விஷயங்களை நுட்பமாக எழுதுவது லேசுப்பட்ட காரியம் இல்லை. அதற்கு தீவிர படிப்பும் ஆராய்ச்சியும் தேவை.
நில்லுங்கள் ராஜாவே கதைக்காக ஹிப்னொபீடியா பத்தி ஒரு வரி எழுதுவதற்காக அலாய்ஸ் பெஞ்சமின் சாலிகரிலிருந்து Weizmann Institute of Science ஆராய்ச்சி பேப்பர்கள், ஆல்டாஸ் ஹக்ஸ்லி, Ralph 124C 41+ என்றெல்லாம் பதினேழு புத்தகங்கள் படித்ததாகச் சொன்னார் சுஜாதா.
அந்த வாரம்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காவேரி ஹாஸ்பிடலில் இரண்டு நாள் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் பாலகுமாரன்
“ சார்! என்ன அதுக்குள்ள அலைச்சலா? உடம்புக்கு ஏதாவது..?”
“இல்ல ரகு! ஸ்வர்ண வேட்கையில் பதினெட்டாம் நூற்றாண்டில் நம்ம ஆளுங்க கூடலூருக்குப் பயணப்படும்போது பெரிய இரும்பு பெட்டி நெறைய சாமான்கள். ஃபைல், கணக்கு வழக்கு புஸ்தகங்கள்னு எடுத்துண்டு போறான்னு எழுதணும். அந்தப்பெட்டிய விவரிக்கணுமே! அதான் ஜார்ஜ் கோட்டை ம்யூசியத்துல போய்த்தேடி பார்த்துட்டு வந்தேன். என்னமா இருக்கு தெரியுமா? அந்த ரிவெட் அடிச்ச……..”
திரு வி எஸ் வி ரமணன் அந்த வேலையைத்தான் செய்திருக்கிறார்.
அவரது நீலவானம் நாவலை எனக்கு அனுப்பியிருந்தார். இதோ இங்கே ம்யூனிக்கில் துல்லிய நீலவானத்தின் கீழே கையில் ஒரு கோப்பை……சரி அது எதுக்கு இங்க…..படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்க முடியவில்லை. அந்த அளவு விறுவிறுப்பான கதைக்களம்.
ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது ஒவ்வொரு விஷயத்தின் பின்புலத்தை Authenticஆக விவரித்திருந்த பாங்கு. லண்டனின் Vauxhall Crossஉம் வாஷிங்டனின் பென்ஸில்வேனியா அவென்யூவில் எட்கர் ஹூவர் பில்டிங்கும், டெல்லியின் CGO Complex, Lodi Road உம் பெயர் சொல்லப்படாமலேயே நமக்கு அதன் வீர்யத்தை விளக்கும் அளவுக்கு உளவுத்துறை நாவல்கள் எழுதப் பட்டிருக்கின்றன.
அந்த வரிசையில் நீலவானம் நிச்சயம் வைக்கப்பட வேண்டும்.
சென்னை விமான நிலையம், ஏர் இந்தியா விமானம், ரா ஏஜன்ஸி, உள்துறை அலுவலர்கள், ரிசர்வ் வங்கியின் தங்க டெபாஸிட், ஏர் டிராஃபிக் கண்ட்ரோல், கடத்தல்காரர்களுடனான பேச்சு வார்த்தையில் கையாளவேண்டிய நெகோஷியேஷன் உத்தி எனக்கதை பயணிக்கிறது. கடைசியில் ஒரு கமாண்டோ ஆக்ஷனுடன் முடியும்போதுதான் நாம் மூச்சு விட மறந்தது நினைவுக்கு வருகிறது!
கதை ஒரு குறிக்கோளுடன் படு வேகமாக நகர்வதால் காரக்டர்களின் முழு வீச்சையும் களத்துக்குள் கொண்டு வர இயலாத நிலமையைப்புரிந்துகொள்ள முடிகிறது. ரமணன் அவர்கள் தனது அடுத்து ஆக்ஷன் கதையில் – அவர் எழுதத்தான் வேண்டும் – கதையை அறுநூறு பக்கங்களுக்கு நீட்டி காரக்டர்களின் பரிமாணங்களையும் கொண்டு வந்தால், தமிழுக்கு ஒரு ஃப்ரெடெரிக் ஃபோர்ஸைத் கிடைப்பார்.
ஜெஃப்ரி ஆர்ச்சரின் ”ஷல் வி டெல் தி பிரெஸிடெண்ட்” நாவல் பற்றி ந்யூயார் டைம்ஸ் குறிப்பிட்ட வார்த்தையான Unputdownableஐக்கடன் வாங்கி வி எஸ் வி ரமணனின் நீலவானத்துக்கும் தயக்கமில்லாமல் சொல்லுவேன்,.
கூடவே சிறுவாணி வாசகர் மையத்துக்கு நன்றி நவின்றேயாக வேண்டும்!
Jayaraman Raghunathan
--------------------------------------------------------
நேற்று வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான நாவல். விமானத்தளத்தையும் அதன் செயல்பாடுகள், விதிகளைப் பற்றி இலகுவாக நீங்கள் அறிய வேண்டுமெனில், தவறாமல் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். விமானத்தளம் மட்டுமல்ல, ரா அமைப்பு, ரிசர்வ் பேங்க்கின் பண மதிப்புக்கான நடவடிக்கைகள், க்ரைஸில் உளவுத்துறை, உள்துறை அதிகாரிகள், கமாண்டோக்கள், விமான ஊழியர்கள் என சம்பவங்களின் கோர்வையில் அது நிகழும் இடம், அதன் நுட்பமான செய்திகளுடன் “நீலவானம்” பயணிக்கிறது.
“ஹலோ கேப்டன்… ஹலோ கேப்டன்”.. என்று பதறும் ப்ரியா… இவர் தான் கதையின் நாயகி. விமானம் கடத்தப்படும்போது இவரின் பயம், பதட்டம், சாகசம், ஒருவேளை விமானப் பயணிகளுடன் ஒரு கதாநாயகன் இருந்து அவருக்கும் ப்ரியாவுக்கும் காதல் மலர்ந்து, தன் சாகஸத்தால், கதாநாயகன் வில்லன்களை துவம்சம் செய்வதைப் போன்ற கதையை யூகித்தால்…. ஸாரி நீங்கள் ஏமாறப்போவது நிச்சயம்.
இங்கே கதையின் நாயகன் என்பது சந்தர்ப்பத்தை இலாவகமாக கையாளும் திறன். பண்டோபாத்தியா ஒரு இக்கட்டான சூழ்நிலையை திறனாய் கையாளும் சாமர்த்தியம், எங்கே எகிற வேண்டும், எங்கே பணிய வேண்டும், எப்படி தகவல் சேகரிக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். இதேபோல் வழிநெடுக நிறைய கதாபாத்திரங்கள்.
விமானத்தில் சிக்கல், பயணிகளின் அதிருப்தி, அதை கடைசி நிமிடம் வரையில் தன் பேச்சாலே கையாளும் பெஸ்ட் எம்ப்ளாயி ரோகினி. அவரின் வார்த்தைகள் வாசிக்கும்போதே குரல் காதுகளில் ஒலிக்கிறது. 70வயது விமானத்துறை அமைச்சர் எந்த பரபரப்பும் இல்லாமல் ஒரு அதிகாரியுடன் பயணிக்கும் சிம்பிளிசிட்டி வியக்கும் இடம். ப்ரேக்கிங் செய்திகளுக்காக காத்திருக்கும் சுமிதா ஹெக்டே. மனித மனங்களின் விசித்திரம். சலனங்கள் மனிதர்களை வீழ்த்தும் என்பதை விமான ஊழியர் ஒருவரிடம், “இவரையும் ஒரு படம் எடுத்துக்கோ” என்று சொல்லும் இடத்தில் தன் காரியம் சாதிப்பது
ஒற்றைப் பயணியாக மாட்டிக்கொள்ளும் சோமசுந்தரராவ். அவர் கையாளும் யுக்தி, பெயர் குழப்பம், நாவலின் சுவாரஸ்யத்திற்கு மேலும் மெருகு தருகிறது. அதிகாரிகள் மனோஜ், மிஸ்ராவின் மூளைச் சாகசங்கள் என நாவல் முழுமையும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.
இந்த நாவலின் குறிப்புகளை வைத்து, நிறைய கதைகளைப் படைக்கலாம். தகவல் களஞ்சியங்களோடு ஒரு த்ரில்லர். ஆரம்பத்தில் எட்டிப்பார்த்த ப்ரியா இறுதி அத்தியாயத்தில் நீலவானத்தை ரசிப்பதோடு கதையை முடித்திருக்கிறார். நம்மையும் தகவல் நட்சத்திரங்களோடு ரசிக்க வைத்திருக்கிறார்.
‘இது யாருமற்ற வானம்
என்னோடு பேசும் வானம்
என் மொழிகள் எதிரொலிக்கும் வானம்
என் மெளனமும் படர்ந்திருக்கும் வானம்’
வானம் மெளனமாய்…. ஆனால் 127 பக்கங்கள் உடைய “நீலவானம்” விறுவிறுப்பாய் பயணிக்கிறது. வாழ்த்துகள் ரமணன் சார். அருமையான நாவலை பரிசளித்ததற்கு…!
கிராம மக்களின் வாழ்க்கையை ஊடுருவி நோக்கி, அதை வாசகர்கள் நெஞ்சில் பதிய வைக்கும் எழுத்துவன்மை பெற்ற ஆர். ஷண்முகசுந்தரம் கொங்கு நாட்டில் உள்ள கீரனூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, அந்த ஊரையே நிலைக்களமாக கொண்டு பல கதைகளைப் படைத்திருக்கிறார். அவற்றுள் சிறந்ததான இம் 'மாயத் தாகம்' கதை மூலம் அவர் வாசகர்களை நேராக கொங்கு நாட்டிலேயே கொண்டுபோய் நிறுத்தி விடுகிறார். அந்த மக்களின் வாழ்க்கை முறை, பேச்சுப் பாணி, பழக்க வழக்கங்கள், கபடமற்ற உள்ளம் இவற்றை நாம் நேருக்குநேர் காண்பதற்கு இப் புத்தகம் ஒரு நல்ல வாய்ப்பு.
கதாநாயகன் நடத்தும் பருத்தி ஆலை, நூல் வியாபாரம், சிமென்ட் வியாபாரம் இவற்றிலெல்லாம் (நம்மிடம் மூலதனம் கேட்காமலே!) நம்மைப் பங்கு கொள்ளச் செய்துவிடுகிறார் ஆசிரியர்.
-----------------------------------------------------------------------------------------
ஷண்முகசுந்தரத்தின் மாயத்தாகம்
கால சுப்ரமணியம்
ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான புதிய இலக்கிய வகை, நாவல் என்னும் நவீன இலக்கிய வடிவம். இதற் கென்று பல இலக்கண அமைதிகள் பின்பு பிறந்தாலும், கதைத் தன்மை கொண்ட உரைநடையில் அமைந்தது என்பதற்குமேல் தீர்மானமான விளக்கங்கள் இல்லை. இது காவியத்தின் தொடர்ச்சி என்றும் நுண் கதையாடலாக பிண்டத்துள் அண்டத்தைக் கொண்ட எதிர் காவிய வளர்ச்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. கவிதை, பாடல், புனைகதை, புனைகதை அல்லாதவை, நாடகம் என்ற இலக்கிய வகைகளுள், புனைகதை முன்பு கதைக் கவிதையாக, கதைப்
பாடலாக, காவியமாக இருந்து பின்பு உரைநடையின் வசப்பட்டது. உரைநடையின் வளர்ச்சியில் பிறந்ததே நவீன புனைகதை எனப்படுவதும் உண்டு. புனைகதை இன்று நாவலாக வும் சிறுகதையாகவும் பிரித்துணரப்படுகிறது. நெடுங்கதை, குறுநாவல் என்ற இடைப்பட்ட வடிவங்களும் பிறந்துவிட்டன. அறிவியல் புனைகதைகளுக்கு பரிசிலாக வழங்கும் புகழ்பெற்ற ஹியூகோ விருதை, இன்று Novel, Novella, Novelette,
Short Story என்ற நான்கு வகைகளுக்குப் பிரித்துத் தருகிறார்கள். இங்கே இப்போதைய சந்தர்ப்பத்தில், ஆர். ஷண்முகசுந்தரத்தின் ‘தனிவழி’ குறுநாவலும் பல சிறுநாவல்களும் - நெடுங்கதையா குறுநாவலா அல்லது சிறுநாவலா என்று - அதை வாசிப்பவர்கள் வசதியாகத் தாமே முடிவு
செய்துகொள்ளலாம் என்பதற்காகவே முன் உள்ள புனை கதை வகைகளைச் சொல்லவேண்டிய காரணம் எழுந்தது. Novella, Novelette என்ற வகைகளிலேயே ஷண்முகசுந்தரத்தின் பெரும்பாலான நாவல்கள் அடங்கும். பதிப்பாளருக்கு அவசர கதியில் ஒன்றை எழுதிக்
கொடுத்துவிட்டுச் சிறுதொகையைச் சன்மானமாக வாங்கவேண்டிய வாழ்நிலை இதற்குக் காரணமாகலாம்.
தமிழில் முதல் நாவல் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்னும் சாகச நாவல். குருசாமி சர்மா என்பவர் பிரேம கலாவதீயம் (1893) என்னும் காதலை மையமாகவும் கிராமியப் பின்புலத்தையும் கொண்ட புதினத்தை வெளியிட்டார். தமிழில் பத்திரிகையில் பிரசுரமான முதல் தொடர் நாவலான ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் (1896) நவீன நாவலின் அழகியல் கூறுகளை அதிகம் கொண்டது என்கிறார்கள். நவீன புனைகதைகளின் மிக முன்னோடி என்று போற்றப்பட வேண்டிய அ.மாதவையா, 1898-ல் வந்த பத்மாவதி சரித்திரம் என்ற சமூக விமர்சனத்தைக் கைக்கொண்டு மலர்ந்த நாவல் மூலமே மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இடையிடையே சில பல நாவல்கள் வெளிவந்திருந்தாலும், மேற்கூறியவர்களையெல்லாம் இணைத்து, பொழுதுபோக்கையும் போதனையையும் மர்மத்தையும் சுவாரஸ்யத்தையும் சேர்த்து, பண்டித நடேச சாஸ்திரி, தி.ம. பொன்னுசாமி பிள்ளை போன்றோரும் குறிப்பிடத் தகுந்த நாவல்களை எழுதினார்கள். இவர்களைப் புனைகதை இலக்கிய முன்னோடிகள் என்றும் பின்வந்தோருக்கான முன்மாதிரிகளை வழங்கியவர்கள் என்றும் தமிழ்கூறும் நல்லுலகம் போற்றுகின்றது.
1920-40 களில் விளங்கிய தமிழ்நாவலின் இருண்ட
காலத்தைப் போக்கியவர்கள் சங்கரராம், ஆர். ஷண்முகசுந்தரம், க.நா. சுப்ரமண்யம் ஆகிய மூவர் எனலாம்.
மக்கள் ஒன்றிணைந்து ஒரே மொழியைப் பேசினாலும், தாம் வாழும் பகுதிக்கு என்று ஓர் உச்சரிப்பு முறையையும், தனித்த சொல்லமைப்புகளையும் கொண்டது வட்டார மொழி எனப்படும். தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றின் செல்வாக்கோடு, மண் வாசனை கமழ எழுதப்பெறுவன (பிராந்திய) வட்டார நாவல்களாகும். மொழிநடை மட்டுமன்றிப் பழக்க வழக்கங்களும் தொழில்களும் வட்டாரங்களுக்கு என்று தனித்துவம் பெற்று விளங்கும். இவையும் நாவல்களின் மூலம் வெளிப்படும். தமிழில் வட்டாரப் பழக்கவழக்கங்களையும் பேச்சு நடையையும் பின்பற்றி நாவல்கள் எழுதும் வழக்கத்தைத் தமிழில் ஆர்.ஷண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். ஜனரஞ்க பத்திரிகை எழுத்தாளர்கள், சாதி, சனம், இடம் பற்றிக் குறிப்பிடாமல் பொதுப்படையாகவே எழுதுவார்கள் (மு.வ., கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி…)
நாகம்மாள்
நீண்ட காலத்துக்குப் பின் சமுதாயம் பிரசுரத்தில் மறுபிரசுரம் (1987) பெற்றபோது எழுதிய முன்னுரையில் க.நா.சு., தாம் இதற்கு முன்பே சிலசமயங்களில் உதிரியாகச் சொன்னதை அழுத்தந்திருத்தமாக விரிவாக விளக்கிக் கூறியுள்ளார்:
“தமிழ் நாவல்களில் மட்டுமல்ல, இந்திய நாவல்களிலும் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு - கிராமிய சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்து பிராந்திய நாவல் என்ற துறையை முதன்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் அவர்தான் என்று சொல்லலாம்.”
இதில், ‘கிராமிய சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்து’ என்று கநாசு அழுத்திக் கூறியுள்ளதைக் கவனிக்கவேண்டும். 1947க்கு முன், நாகம்மாள் நாவலை அடுத்து எழுந்த பிராந்திய நாவல் இலக்கணத்துக்குப் பொருந்தும் காளிந்தி சரண் பாணிக்ரஹியின் ‘மட்டிர் மனுஷே’ (மண்ணின் மனிதர்கள்) என்ற ஒரிய நாவல் பற்றியும் கநாசு குறிப்பிட்டுள்ளார். பிற இந்திய மொழிகளில் - குறிப்பாக வங்காளத்தில் பிராந்திய இலக்கியத்தின் சில கூறுகளை மட்டும் உள்ளடக்கிய புனைகதைகள் எழுந்திருக்கலாம். தமிழில் கூட கா.சி.வேங்கடரமணி (முருகன் ஒரு உழவன், 1927) கிராமியப் புனைகதைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருக்கிறார். ஆனால் அவை பிராந்தியப் புனைவு என்ற இலக்கணத்துக்குப் பொருந்தியவை அல்ல. ஷண்முக சுந்தரத்தின் சமகாலத்தவரான கநாசு, தஞ்சை வட்டார தீரவாசத்து நாவல்களை எழுதியிருந்தாலும் அவை பிராந்திய நாவல்கள் வரிசையில் சேராது. ஆனால் ஷண்முக சுந்தரத்தின் முன்னோடியான கொங்குநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பிறந்து, பிறகு திருச்சியிலும் நிலையாகச் சென்னையிலும் வாழ்ந்த சங்கரராமின் ‘மண்ணாசை’ (1941) நாவலை பிராந்திய நாவலின் பல கூறுகளை உள்ளடக்கிய புனைகதையாக மதிப்பிட முடியும். இந்நாவலுக்கு முன்னும் பின்னும் பல நாவல்களை அதுவும் கிராமப் பின்புலங்களைக் கொண்டு சங்கரராம் எழுதி யிருந்தாலும் அவை வட்டார நாவல்கள் என்ற பிரிவில் வராது. ஆனால் 1938-ல் கூடஞு ஃணிதிஞு ணிஞூ ஈதண்t என்ற பெயரில் ‘மண்ணாசை’ நாவலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார் சங்கரராம். (கலைமகள் பத்திரிகையில் 1941-ல் மண்ணாசை தொடராக வந்ததாகவும் நினைவு). ஷண்முகசுந்தரம் போல் அல்லாமல் சங்கரராம் சிறுகதைகளில் சில சாதனைகளைப் படைத்தவர்.
சமஸ்கிருதத்தில் - தெலுங்கில் - அரபுத் தமிழில் எழுதப்பட் டிருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழ்ச் சூழல்களையும் பண்பாட்டையும் வைத்து எழுதப்பட்ட படைப்புகளை தமிழ் இலக்கிய உலகைச் சார்ந்ததாகவே கொள்வது தான் இன்றைய இலக்கிய வரலாற்று வரைவியலின் போக்கு. அவ்வகையில் ‘மண்ணாசை’ நாவலை, கொங்கு வட்டார முதல் நாவலாகவோ, தமிழின் முதல் வட்டார நாவலாகவோ கொள்ள முடியும். ஆனால், மண்ணாசையையும் நாகம்மாளையும் தமிழின் சிறந்த நாவல் பட்டியலில் நிலைநாட்டிய கநாசு சொல்வதுபோல் இந்திய வட்டார எழுத்தின் முன்னோடியாக நாகம்மாளையே போற்றவேண்டும்.
இந்த ‘முதல் படைப்பு’ என்ற பெருமைகள், பீற்றல்கள் எல்லாம் ஒருவித அவலத் தன்மை கொண்டவைதான். எழுதியது ஒரு காலத்தில், பின்பு அது புத்தக வடிவில் முதல் பதிப்பாக வந்தது ஒருகாலத்தில், அப்படி வந்தும் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்து இரண்டாம் பதிப்பிலோ மறுபதிப்பிலோ முக்கியத்துவம் பெற்றவை (முத்துமீனாட்சி, நாகம்மாள், மண்ணாசை போன்று) உண்டு. பிரதாபமுதலியார் சரித்திரமே பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு, 1979-ல் வெளியாகி யாராலும் கண்டுகொள்ளப் படாமல் (அந்தக்கால முர்டாக், போப் போன்றோர் பட்டியல்களில் இது இல்லை. ஒருவிதத்தில் வேதநாயகம் கத்தோலிக்கர் என்பது காரணமாகலாம்) இருந்து, மறுபதிப்பிலோ அல்லது கமலாம்பாள் சரித்திரமும் பத்மாவதி சரித்திரமும் பிரபலம் பெற்றபிறகுதான், பரவலான கவனத்துக்கு வந்தது எனலாம். எனவே முதலில் எழுதப்பட்டது என்பதால் ஒரு படைப்புக்கு மதிப்பு வந்துவிடுவதில்லை. அங்கீகாரம் பெற்ற பின்பே அதன் வெளிப்பாடு நிகழ்ந்ததாகக் கொண்டாடலாம்.
ஷண்முகசுந்தரத்தின் முதல் சிறுகதை ‘பாறையருகே’ (1938) என்பது மணிக்கொடியில்
வெளிவந்தது. அவருக்கு இருக்கும் கிராமிய அவதானம் பற்றி, பேசிப்
பழகியதில் தெரிந்துகொண்ட மணிக்கொடி எழுத்தாள நண்பரான கு.ப.ரா.வின் தூண்டுதலால் 1939-ல் நாகம்மாள் நாவலை எழுதி தாம் தொடங்கிய புதுமலர் அச்சகத்தில் புதுமலர் நிலையம் பதிப்பகத்தில் 1942-ல் வெளியிட்டார் ஷண்முகசுந்தரம் என்று தெரிகிறது. தனது வசந்தம் பத்திரிகையில் அதைத் தொடராக வெளியிட்டாரா தெரியவில்லை.
ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகள் எல்லாமே சுமாரானவைதாம். அவைகளில் ‘தறிகாரன்’ என்ற கதை மட்டுமே குறிப்பிடத்தகுந்தது. இது, ‘தறிகாரன் ஜீவிதம்’ என்ற தலைப்பில் வை.கோவிந்தனின் சக்தி (விஷு-ஆனி 1941) பத்திரிகையில் வெளிவந்தது. பின்பு ‘தறிகாரன்’ என்று மாற்றம் பெற்று, அவரது ‘நந்தாவிளக்கு’ சிறுகதைத்தொகுதியில் (புதுமலர் நிலையம், 1944) சேர்க்கப்பட்டது. ஒரு முதலியார் இன நெசவாளியைப் பற்றிய இந்தக் கதை, ‘மாயத்தாகம்’ நாவலுக்கு முன் தூண்டலாக இருந்திருக்கலாம். ஏனெனில் சில சிறுகதைகளையே பிற்காலத்தில் பணத்தேவைக்காக சில நாவல்களாக்கியிருக்கிறார் ஷண்முகசுந்தரம்.
சிறுகதைகளை நாவலாக்கியிருந்தாலும் சிறுகதைக்கானதும் நாவலுக்கானதுமான கச்சிதத் தன்மை அவரிடம் இல்லை. மேலோட்டமான எளிய சம்பவ விவரிப்பு என்ற அளவில் சிறுகதைகள் நின்றுவிடுகின்றன. அவரது அடையாளச் சிறப்புக்குரியவை தவிர, பல நாவல்கள் சிறுகதையின் நீர்த்துப்
போன நீட்டலாக இருக்கின்றன.
கொங்குக் கவுண்டர்களைப் பற்றியே அவர் அதிகம் எழுதியுள்ளதால் அவரும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் என்றே பலரும் நினைத்திருக்கிறார்கள். (கவுண்டர்களிலும் சில வகையினங்கள் உண்டு. அது ஷண்முக சுந்தரத்தின் சித்தரிப்புகளில் தெரிவதில்லை. அவர் செங்குந்த முதலியார் இனத்தைச் சேர்ந்தவர். ஓரிரு நாவல்களில் மட்டும் சில கதைப்
பாத்திரங்கள் முதலியார் வாழ்வியலைக் காட்டுவனவாக உள்ளன.
ஆர். ஷண்முகசுந்தரம் (1917-77) திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், கீரனூரில் பிறந்தவர். தந்தை ரத்னாசல முதலியார். தாய் ஜானகி அம்மாள். தாய் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், பாட்டியிடம் வளர்ந்தார். கீரனூர் பள்ளியிலும் திருப்பூரிலும் தொடக்கக் கல்வி. பின் கோபிசெட்டிபாளையம் பள்ளியில் படிப்பு. மீண்டும் திருப்பூரில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு. தாமாகவே இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றார். நண்பரான ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் இல்ல நூலகத்தில் பிறமொழிப் படைப்புகள் பலதையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. காந்தியவாதி. கடவுள் நம்பிக்கையற்றவர். மனைவி வள்ளியம்மாள். பிள்ளைகள் இல்லை. தம்பி திருஞான சம்பந்தம் அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்தவர். இருந்த சொத்தும் கைவிட்டுப்போன பின்னும் இருவரும் கவலைப்படாமல் கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார்கள்.
திருஞானசம்பந்தத்துக்கு ஹனுமன் பத்திரிகையில் துணை ஆசிரியர் வேலை கிடைத்ததால், தந்தையுடன் சென்னை வாசம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கோவையில் குடியேற்றம். தந்தையார் இடையர் தெருவில் ஒரு புத்தகக்கடை நடத்தித் தோற்றார். தம்பியுடன் பல தொழில்கள் செய்து பார்த்தும் வெற்றிபெற முடியவில்லை. ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் உதவியுடன் வசந்தம் இதழை, தம்பியை ஆசிரியராகக் கொண்டு, இருபது ஆண்டுகள் நடத்திப் பார்த்தார். 1944-ல் கோவையில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு – கல்கி
நடத்திய பாரதி மணிமண்டபக் கொண்டாட்டத்தில் உண்மையான பாரதி அன்பர்கள் பெருமைப் படுத்தப்
படாமல் ஓரம்கட்டப்பட்டார்கள் என்று, வ.ரா முதலான அந்த பாரதியின் உண்மையான நேசர்களை ஜி.டி.நாயுடு உதவியுடன் மாநாடு நடத்தி விழா எடுத்துப் பெருமைப் படுத்தியவர் ஷண்முகசுந்தரம். புதுமலர் நிலையம் என்ற பதிப்பகமும் புதுமலர் அச்சகமும் நடத்தினார். குடும்பத் தேவைக்காக, பல நாவல் களையும் ஏராளமாக மொழிபெயர்ப்பு நாவல்களையும் உருவாக்கினார்.
நாகம்மாள், சட்டி சுட்டது, அறுவடை, தனிவழி முதலான இருபதுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம், அரசியல் பத்தி என்று ஏராளமாக எழுதியிருக்கிறார். இவை தவிர, விபூதிபூஷண் பந்தோபாத்யாய (பதேர் பாஞ்சாலி), சரத்சந்திரர், தராசங்கர் பானர்ஜி உள்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
ஆர். ஷண்முகசுந்தரத்தின் முதல் நாவலாகிய நாகம்மாள் (1942), தமிழ் நாவல் வரலாற்றில் திருப்பத்தை உண்டாக்கிய முதன்மையான நாவலாகக் கருதப்படுகிறது. கிராம வாழ்க்கையின் விரிவையும் மேன்மையையும் தூய்மையையும் படம்பிடிக்கும் வகையில் முதல் நாவல் நாகம்மாள் என்று இந்நாவலுக்கு முன்னுரை வழங்கிய சிறந்த சிறுகதை எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன் குறிப்பிட் டுள்ளார். புகழ்பெற்ற நாவலாசியரும் விமர்சகருமான க.நா.சு., ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவலின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். தமிழ் நாவல்களில் மட்டுமல்ல, பிராந்திய நாவல் என்பதை முதன்முதலாக இந்தியாவில் உருவாக்கியது இதுதான் என்று கூறி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். சிறுகதைகளின் பொற்காலத்தை உருவாக்கிய மணிக்கொடி பத்திரிகை எழுத்தாளர்களுள் முதலில் நாவல் எழுதியவர் ஷண்முகசுந்தரம்தான். சிறுகதையாசிரியராகத் தொடங்கியவர் பின்பு 20 நாவல்களுக்கு மேல் எழுதி, சிறந்த வட்டார நாவலாசிரியராகத் தம்மை அவர் நிலைநிறுத்திக் கொண்டார். நாகம்மாளுக்குப் பிறகு இரு சிறு நாவல்களை எழுதிவிட்டு, 15 ஆண்டுகளுக்குப் பின்பே மீண்டும் 1960களில் எழுதவந்தார். இந்த இரண்டாம் காலகட்டத்தில் எழுதிய நாவல் களில் தனிவழி (1967) என்ற சிறு நாவல், தனி இடம் பெற்றது. வழக்கமான கிராமியச் சூழலைத் தாண்டி, விவசாயத்தைத் தாண்டி, மில்கள் வளர்ந்து வரும் கோயம்புத்தூர் நகரச் சூழலை வைத்து எழுதப்பட்ட நாவல் இது ஒன்றே எனலாம்.
தனிவழி என்ற இந்தச் சிறுநாவல் கோவையில் பெரும் வளர்ச்சி பெற்றுக்
கொண்டிருந்த மில் தொழிலாளர் சிக்கலை முதன்மையாகக் கொண்டது எனினும் தலைமுறை இடைவெளிச் சிக்கலை அடிப் படையாகக் கொண்டது.
கிராமம் நகரம் என்பதைப் பழமை புதுமை என்பதாக பொருள் படுத்துகிறார் ஆசிரியர். கிராமத்து மதிப்பீடுகள் நகரத்தில்
உடைகின்றன. நகரத்தைக் கிராமத்துப் பார்வையில் நின்று படைத்தாலும் கால வளர்ச்சியில் நகரம் கிராமத்தை விழுங்குவதையும் புதுமை பழமையைப் புறக்கணிப்பதையும் ஷண்முகசுந்தரம் சித்தரிக்கிறார். கிராமம் சிறந்தது என்று கூறுவதோ, அதன் பண்பாட்டு மதிப்பீடுகளை மீட்டெடுக்க முயல்வதோ, பரிந்து பேசுவதோ இல்லை. ஆனால் பழையவற்றுக்கு ஏங்கும் வருத்தத்தின் சாயல் நாவல் முழுதும் இழையோடுகிறது.
தமிழில் பதிப்புலகில் சாதனைகளைப் படைத்த வாசகர் வட்டம் என்ற லஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் புத்தக சங்கத்தில் ஆண்டுக்குச் சுமார் ஆறு நூல்கள் என்ற திட்டமிட்ட வழிமுறையில் சிட்டி என்ற மணிக்கொடி எழுத்தாளரின் பதிப்பாசிரியத்துவத்தில் புனைகதைகள் (இந்திய, தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பெயர்ப்புகளும், அக்கரைத்
தமிழ் என்றும் தமிழில் புதிதாகப் படைக்கப்பட்ட நாவல்கள் என்றும்), கவிதை, பயணம், வாழ்க்கை வரலாறு, அறிவியல், மருத்துவம், விவசாயம், மானுடவியல், அரசியல், தத்துவம் என்று பல துறைகளிலும் தமிழில் இதுவரை இல்லாத விதத்தில் நேர்த்தியான அச்சில் புத்தகங்கள் வெளிவந்தன. அன்று அந்தந்தத் துறைகளில் மிகச் சிறந்தவர்கள் என்று கருதப் பட்டவர்கள் பலரையும் புதியன படைக்கத் தூண்டிக் கெடுவிதித்து, முன்தொகையும் தந்து, திட்டமிட்டபடி கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இரண்டாவது ஆண்டிலேயே வெங்கட் ராமின் வேள்வித்தீ அந்த வரிசையில் புதிய நாவலாக வெளிவந்தது. (அதுவரை தொடர்களாக எழுதிவந்த தி.ஜா. புதிய நாவல் அம்மா
வந்தாள் புத்தகமாக நேரடியாக வந்தது. லா.ச.ரா, முதல் நாவலான புத்ரா, பின்பு அபிதா நாவல்களும் அப்படித்தான் வெளிவந்தன. வேரும் விழுதும், சாயாவனம் போன்ற புதியவர்களின் நாவல்களும் பிரசுரம் பெற்றன.)
வேள்வித்தீ நாவலோடு வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் மாயத்தாகம் நாவலும் குறிப்பிடத்
தகுந்தது. ஷண்முகசுந்தரமும் மணிக்கொடி எழுத்தாளர் தான். இருபதுக்கு மேற்பட்ட நாவல்களை எழுதிய ஷண்முக சுந்தரம் தமது முதல் நாவலான நாகம்மாள் மூலமே அறியப் படுகிறார். எனவே க.நா.சு.வின் தமிழின் சிறந்த நாவல் பட்டியலில் இடம்பெற்றது அது. தொடர்ந்து அவரை கநாசு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். வெங்கட்ராமின் நித்யகன்னியை அவர் முக்கிய நாவலாகக் கருதினாலும் நாகம்மாளை புரமோட் செய்தது போல் செய்யவில்லை. புதுமைப்பித்தன் ஸ்கூலைச் சேர்ந்த அவர், அதற்கு வெளியில் இருந்த கு.ப.ரா. ஸ்கூலை விமர்சனத்துடன் பார்த்தார் போலும். இத்தனைக்கும் கு.ப.ரா.வை மிக உயர்த்தியும் தி.ஜா.வை தனது பட்டியலில் தொடர்ந்து வைத்திருந்தும் பாராட்டியவர் கநாசு. அவருடைய ரசனைக்கு வெங்கட்ராம் எழுத்து நிறைந்த திருப்தியைத் தரவில்லை என்றே தெரிகிறது. மாயத்தாகமும் ஒரு தறிக்காரன் வாழ்வைச் சொல்வதுதான். உண்மையில் தனது ‘தறிக்காரன்’ என்ற ஒரே ஒரு சிறுகதையில் மட்டுமே நெசவுத் தொழில் செய்யும் தம் முதலியார் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழை நெசவாளியின் பாடுகளைக் கதையாக்கினார் ஷண்முகசுந்தரம்.
ஒவ்வொரு நாவலையும் ஒவ்வொரு விதத்தில் எழுதும் வெங்கட்ராம், தனது சௌராஷ்டிர பிராமண இன பட்டு சரிகைத் தொழிலை வேள்வித்தீ நாவலில் தான் கதைக்களமாகக் கொண்டிருக்கிறார். நெசவையும் தறியையும் பற்றி ஷண்முக சுந்தரமும் வெங்கட்ராமும் மட்டும் எழுதவில்லை. பஞ்சுமில் தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டங்களை முற்போக்கு ரீதியில் ரகுநாதன் தன் பஞ்சும் பசியும் நாவலில் படைத்திருக்கிறார். கோவை மில் தொழில் பற்றிய சித்திரம் ஷண்முகசுந்தரத்தின் தனிவழி என்ற சிறுநாவலிலும் வருகிறது.
வெங்கட்ராம் ‘வேள்வித்தீ’ கதை போலவே ஷண்முகசுந்தரத்தின் மாயத்தாகம் நாவலிலும் கதையின் பின்பகுதி சற்று யாந்திரீகமாகவே நீளும். சம்பவ விவரிப்புகள் மூலம் கதையை நீட்டாமல் நினைவு விவரிப்புகளாக விரித்து சட்டென்று தொடங்கிய இடத்துக்கே கதையைக் கொண்டுவந்து சுபமாக முடித்து
விடுகிறார். சுமாரான நாவலாக இருந்தபோதிலும் ‘வேள்வித்தீ’யின் கட்டமைப்பு இதை விடச் சிறப்பாக இருக்கிறது.
தனது வாழ்வை, தனது இனத்து வாழ்வை கதைக்கருக்களமாகக் கொண்டிருக்கும் ‘மாயத்தாகம், அவைகளைத் திறம்படச் சித்தரித்து விட்டது என் முழுநிறைவு கிடைக்காவிட்டாலும், தமிழில் ஒரு வித்தியாசமான நாவலைப் படித்த திருப்தி ஏற்படும் என்பதே நிதர்சனம்.
மாயத்தாகத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்களான ஆறுமுகமும் வள்ளியும் ஷண்முகசுந்தரம், அவரது மனைவி வள்ளியம்மாளின் மறுபதிப்புகள்தான். வள்ளியின் பிறந்த ஊர் என வரும் தாள பாளையம் மனைவி வள்ளியம்மாளின் ஊர்தான். மைத்துனனும் ஒருவரே. பல தொழில்களைச் செய்து ஷண்முகசுந்தரம் நொடித்துப்போனார். ஆறுமுகம் ஜின்னிங் பாக்டரி நடத்தி நொடித்துப் போகிறான். ஆறுமுகத்தின் நண்பன் மாணிக்கத்தைப் போல் ஷண்முகசுந்தரத்தின் பல நாவல்களிலும் சிலர் வருவார்கள் - பெயர்கள் மட்டும் மாறியிருக்கும். ஆறுமுகத்தை மலேசியா சென்று திரும்பும் மாணிக்கம் மீட்சிபெறச் செய்கிறான். ஆனால் ஷண்முகசுந்தரத்தின் உண்மை வாழ்வில் அது நிகழவில்லை.
ஆர். ஷண்முகசுந்தரத்தின் நடை எளிய, இனிய, உணர்ச்சி கரமான கொங்கு மண்ணின் வாசனை கமழும் கிராமீயத் தமிழ் நடையாகும். வட்டாரப் பேச்சு வழக்கின் பலத்தில்தான் அவரது படைப்புகள் எழுந்து நிமிர்கின்றன. கொங்குவட்டாரத்தைச் சேர்ந்த எனக்கே, அவரது கூர்மையான சொல்வழக்கு அவதானிப்புகள் வியப்பை ஏற்படுத்துகிறது என்றால், பிற வட்டாரத்தைச் சேர்ந்த வாசகர்களின் அதிசயிப்பைச் சொல்லவேண்டியதில்லை. இன்றைய கொங்குவட்டாரக் கதையாசிரியர்களிடம் பெரிதாகத் தென்படாத வியப்புக்கள் இவை. எந்தச் சொல்லிடலையும் அவர் விளக்க முனைவதில்லை. (உதாரணமாக மாயத்தாகத்தில் வெற்றிலை பற்றிய பேச்சில் ‘இன்னைக்கு சந்தைக்
கெடுவுங்க’ என்று போகிற போக்கில் ஒரு உரைவீச்சு வருகிறது. கெடுவு வெத்தலை என்பது என்ன என்று பல கொங்கு வட்டார வாசகர்களுக்கே சரியாகத் தெரியாது. வெற்றிலைக்
கொடிக்கால் விவசாயம் செய்தவர்களுக்கோ அல்லது சந்தையில் வெற்றிலை வாங்கியவர்களுக்கோ பழக்கமான சொல் அது.)
அவருக்கு எந்த அளவு உலக இலக்கியப் பரிச்சயமும் பழந்தமிழ்ப் பயிற்சியும் இருந்தது என்றும் தெரியவில்லை. மேலும் வெங்கட்ராம், ஷண்முகசுந்தரம் போன்றோர் இந்தி வழியாகவும் ஆங்கிலம் வழியாகவுமே இந்திய - வங்க நாவல்களை மொழிபெயர்த்தார்கள் என்ற கணிப்பும் உண்டு. நூற்றுக் கணக்கில் மொழிபெயர்ப்புகளை - குறிப்பாக ஏராளமான வங்க நாவல்களை - தமிழ்ப்படுத்தி யிருந்தாலும், அவை சரளமாக இருந்தாலும் நடைச்சிறப்பு மிக்கவை என்று சொல்லமுடியாது. க.நா.சு.வின் பத்திரிகை நடை மொழி பெயர்ப்பிலும் ஒருவித நளினம் இருக்கும். எம்.வி.வெங்கட்ராமின் தழுவல் நாவல்களிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். பெரும் பத்திரிகைசார்ந்த எழுத்தாளரான கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் மராட்டி மொழிபெயர்ப்புகளில் கூட ஒரு பாவம் அமைந்திருக்கும். ஆனால் சாதனையாளரான த.நா.குமாரசாமியிடமோ, சரத்சந்திரரின் அனைத்தையும் மொழிபெயர்த்த அ.கி.ஜெயராமனிடமோ கூட நடைச்
சிறப்பை எதிர்பார்க்கமுடியாது.
ஷண்முகசுந்தரத்தின் மாலினி, எண்ணம்போல் வாழ்வு, விரிந்த மலர், மலர்கள் மலரவில்லை, கற்பனைக்கதை போன்றவை மட்டும் அவரது வழக்கமான சொந்தப்படைப்புகளாகத் தெரியவில்லை. தழுவல் பாணி புலப்படுகிறது.
ஷண்முகசுந்தரத்தின் மொழிபெயர்ப்புப் பணியின் விளைவு, அவரது சொந்தப் படைப்புகளின் நடையையோ கதைக் கட்டமைப்புகளையோ பாதித்திருப்பதாகத் தெரியவில்லை. கொங்குவட்டாரப் பேச்சு வழக்குகளை அவதானத்துடன் சிறப்பாக அவர் கையாண்டது தவிர, இயற்கை வருணனைகளிலோ நிலக் காட்சிச் சித்தரிப்புகளின் போதோ உணர்வெழுச்சிகளைக் வெளிப் படுத்தும்போதோ அவரது நடை தாக்குப் பிடிப்பதில்லை. கேள்விகளாகக் கேட்டு பாத்திரங்களின் உணர்ச்சிமயத்தையோ சிக்கலான சம்பவங்களில் எழும் மனக்கோலங்களையோ சித்தரிக்க முயல்கிறார்.
‘வள்ளியின் வதனத்தில் வெட்கம் படரும். நாணத்தின் நளினக் கோடுகள் பரவுகின்ற பரவசத்தில் பூரித்துப் புளகாங்கிதம் கொள்ளும்.’ (மாயத்தாகம்)
‘ஒன்றுமே செய்யாதபோது, எதுவுமே நிகழாத நிலையில் - ஏன் இந்த விசித்திரப் போக்கு? ‘’மனித மனது ஆராய்ச்சிக்கு அடங்காதா?” என்ற ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன்.‘ (மாயத்தாகம்)
இவை போன்ற வருணிப்புகள், அவரது வட்டாரப் பேச்சு நடைக்கு மாறாகத் துருத்திக்கொண்டு நிற்கிறது - சில இடங்களில் மட்டும்தான் இப்படி.
ஆர். ஷண்முகசுந்தரத்தின் புத்தகத் தலைப்புகள் கவனத்துக்கு உரியவையாக இருக்கும். சில தலைப்புகள் (பூவும் பிஞ்சும், அதுவா இதுவா?) போகிறபோக்கில் வைத்தவையாயும், சில நலிந்தவை யாயும் (பனித்துளி, அறுவடை, வரவேற்பு), சில மலிந்த மிகை வழக்காயும் (தேன்மழை, இதயதாகம், அழியாக்கோலம்) தென்படும். ஆனால் நாகம்மாள், சட்டி சுட்டது, காணாச்சுனை, மாயத்தாகம் போன்ற தலைப்புகள் வித்தியாசமானவையாகவும் பொருள்பொதிந்தவையாகவும் உள்ளன.
மாயத்தாகம் என்ற நாவல் தலைப்பு ஒருவித இருண்மையையும் எதிர்பார்ப்பையும் தரக்கூடியதுதான். இத்தலைப்பை பாரதியின் ஸ்வசரிதையில், “தீய மாய உலகிடை ஒன்றினில், சிந்தை செய்து விடாயுறுங்கால் அதை, வாயடங்க மென்மேலும் பருகினும், மாயத்தாகம் தவிர்வது கண்டிலம்” என்று வரும் அடிகளில் ஷண்முக சுந்தரம் கண்டிருக்கலாம். அன்பரான க.நா.சு.வின் (பொருளை ஒரு தெய்வமாகக் கொண்டாடும்) பொய்த்தேவு என்ற நாவலின் தலைப்பும் (பொருள் பற்றிய மான்தேடலின் கானல் நீர் நிலை) நினைவில் இருந்திருக்கலாம்.
“இது என்ன தாகம்?...கானலைத் தேடி ஓடும் மானுக்குத் தனக்கு ஏற்பட்டிருக்கிற தாகத்தைப் பற்றி என்ன தெரியும்?.. ஆறுமுகத்திற்கு அட்ங்காத வேட்கை உண்டாகி இருந்தது - அந்தத் தாகம் எதைப் பருகினாலும் தீராது போலிருந்தது? உள்ளத்தின் தாகவிடாய்க்கு நீர் எங்கே அகப்படுமோ? ஏதோ சுனை - அது காணாச்சுனையோ - அந்தச் சுனையின் நீரைப் பருகினால் பின்னர் தாகமே எடுக்காதாம்! காணாச்சுனை எங்கிருக்கிறதோ? அதுதான் கண்களுக்குக் காணாத தாயிற்றே? மானைப்போல அலைந்து மாய்கிறானா?” (மாயத்தாகம்)
ஷண்முகசுந்தரத்தின் படைப்புகளைக் கட்டமிட்டுச் சாதகம் கணித்தால், எத்தனை நீசப் பார்வைகள் இருந்தாலும், ஜன்ம ஸ்தானம் வலுவாக இருப்பதால் எல்லா இடர்பாடுகளையும் கடந்து அவர் எழுந்து நிற்கிறார். தம் வாழ்க்கையில் அவர் தோற்றுப் போனதைப்போல் தமிழ் இலக்கிய உலகில் அவர் தோற்றுப் போகவில்லை.
ஷண்முகசுந்தரத்தின் ‘சட்டி சுட்டது’ (2010), ‘தனிவழி’ (2016) ஆகிய இரு நாவல்களையும் நான் லயம் வெளியீடாக முன்பு கொண்டுவந்திருக்கிறேன். இதற்கு முன்பு ‘நாகம்மாள்’ நாவலை முதன்முதலாக ஒரு கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்த்து மறு பதிப்புச் செய்ய வைத்திருக்கிறேன். அந்த வழியில் சிறுவாணி வாசகர் மைய வெளியீடாக வரும் இந்த ‘மாயத்தாகம்’ நாவலின் மறுபிரசுரத்தையும் சேர்த்துக்
கொள்ளலாம்.
கால சுப்ரமணியம்
டிசம்பர் 2024.
சத்தியமங்கலம்,
(Ph.
6383675433).