Tuesday, November 6, 2018

பாதை காட்டும் பாரதம் - ஜி.ஏ.பிரபா



















அக்டோபர்(2018) "பாதை காட்டும் பாரதம்"

எழுத்தாளர்  ஜி.ஏ.பிரபா-

புதிய கோணத்தில் மகாபாரத மாந்தர்கள்பற்றிய கட்டுரைகள்- 


பக்கங்கள் 182     விலை 160 /-
ISBN 978-81-940988-3-6
********************************************************************************************************************
Mutharasi Ramasamy
சிறுவாணி வாசகர் மையத்தின் உறுப்பினர் என்ற முறையில்,

வாசிப்பை நேசிக்கும் உள்ளம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்....
********************************************************************************************************************
Nandhu Sundhu is with G.a. Prabha.·
"சுருக்கமாக சொன்னால் ஒரு விஷயத்தை நீ பகிரங்கமாக பலரிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தால் அது ஒழுக்கமான செயல். முடியவில்லை, கூசுகிறது, பயப்படுகிறது என்றால் அது ஒழுக்கமற்ற செயல்"

எழுத்தாளர் G.a. Prabha அவர்களின் பாதை காட்டும் பாரதம் புத்தகத்திலிருந்து.....
மக்களை நல்வழிப் படுத்தும் இதுபோன்ற புத்தகங்கள் நிறைய வர வேண்டும். படிக்கப் வேண்டும்.
********************************************************************************************************************
Akila Alexander is reading "பாதை காட்டும் பாரதம்".

அதீத வாசிப்பின் காலம் இது எனக்கு. தொழில்நுட்பம் சார்ந்த வாசிப்பு மாரத்தான். இளைப்பாறுதல் வேறு என்னவாக இருக்க முடியும் விஷத்தின் மாற்று விஷம் என்பதைப்போல். வாசிப்பின் களைப்பை தீர்க்க வாசிப்பு.

கூரியரில் வந்த சிறுவாணி வாசகர் மாயம் அனுப்பி இருந்த ஜி. ஏ. பிரபா அவர்கள் எழுதிய "பாதை காட்டும் பாரதம்" பெற்றுக்கொண்டு புரட்டிப்பார்த்தேன். பொருளடக்கம் ஈர்த்தது. மகாபாரதத்தில் வரும் பெண் பாத்திரங்களும் அவர்களின் மனதில் உறைந்து கிடைக்கும் கேள்விகளுக்கான பதில் உணரும் இறுதி காலமும் என நூல் விரிகிறது. எளிமையான நேர்சிந்தனை எழுத்து ஆசிரியருடையது.

முழுமையான சுதந்திரம் இல்லாவிடினும் மகபாரத பெண்கள் ஓரளவிற்கேனும் சுய சிந்தனையுடனும் செயலுடனும் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கு விருப்பமானதை சரியென்று படுவதை செய்கிறார்கள் விளைவுகளின் சாதக பாதகம் காவியமாக விரிகிறது. பதில்களற்ற கேள்விகளுக்கு எப்பொழுது பரந்தாமனை கைகாட்டுவது தவிர்க்க இயலாத ஒன்று.

அத்தனை பெண்களிலும் என்னை கவர்ந்தவர் இடும்பி. எத்தனையோ காதல் கதைகளை பக்தியோடு, பரவசத்தோடு, உணர்வுப் பெருக்கோடு, ஏக்கத்தோடு லயித்துக் கொண்டாடிய பக்தி இலக்கியமோ சங்க இலக்கியமோ அதிகம் பேசாத காதல் இடும்பியின் பீமன் மேலான காதல். இடும்பியின் கேள்வி ஒன்றே ஒன்று. அதற்கான விடை நறுமணமாக நம்மை சுற்றியும் வீசிக்கொண்டே இருக்கும்.

மனதில் அடியாழத்தை தொட்டு இதயத்தை கசக்கிப் பிழியவேண்டும் அது தான் இலக்கியம் என்றில்லாமல், இதமான வாசிப்பிற்கு உகந்த புத்தகம். மாற்றுக்கருத்துகள் இருக்கலாம் புத்தகத்தில் வரும் கருத்துக்களோடு நீங்கள் முரண்படலம். மிகப்பெரிய விவாதத்தை முன்னெடுக்காத ஆனால் அத்தகைய கருத்துக்களை சில புள்ளிகளாக காட்டும் சுற்றியும் "பாதை காட்டும் பாரதம்"
********************************************************************************************************************
02.11.2018
நூல்வழிச்சாலை  / மைல்கல் : 72

பாதை காட்டும் பாரதம்

பல நூல்களை நாம் படித்தாலும் வித்தியாசமாக எழுதப்பட்ட நூல்கள், புதுமையான முறையில் நூல்களின் உட்கருத்துக்களை, வேறு கோணத்தில் பார்வையிடும் எழுத்துக்கள், நம் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பலகாலம் நினைவில் நின்று நம்மை அசை போட வைக்கும்!
அப்படி எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான, பிரமாதமான நூல் இந்த பாதை காட்டும் பாரதம்.

இதிகாசங்களை பல நோக்கில், பல அறிஞர்கள் எழுதி மனிதகுலத்துக்கு அறிவுச்சுடரை சுடர்மிகு வடிவில் ஒளி வீச உதவி புரிந்திருக்கிறார்கள். 
இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் உண்மையில் நடந்த நிகழ்வுகள் இல்லை என்றுகூட இன்று பல "பகுத்தறிவு வாதிகள்" வாதிடுவதுண்டு! 
ஆங்கிலத்தில் "Perception" என்ற ஒரு வார்த்தையுண்டு! 
அவரவர் பார்க்கும் பார்வையில் அது நடந்த கதையாகவோ, அல்லது நடக்காத "கதை" யாகவோ புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த பாரதம் மூலம், கதை என்ன சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொண்டால் படிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது எமது தாழ்மையான கருத்து.

நன்னெறி

"மகாபாரதம்" ஒரு இதிகாசம் என்பர். 
இதிகாசம் என்றால் "இப்படியாக நடந்தது" எனப் பொருள்படும். ஆக, பெயரிலேயே உண்மையை தாங்கி வரும் இந்த "மகாபாரதம்" மனிதகுலத்துக்கு பல உயர்ந்த நன்னெறிகளை பொன்னெழுத்துக்களில் பதிய வைத்திருக்கிறது.  இந்தக் கதையை பல முறை நம்மில் பலரும் வாசித்திருக்கலாம். அது கூறும் கதை ஒன்று. கதையில், பல கிளைக்கதைகளும் உண்டு! 
கதைகளுக்குள் நேரிடையாக சொல்லப்படாமல், மறைபொருளாக சொல்லப்பட்ட நன்னெறிகள் ஏராளம்!

ஆனால், கதை முடிந்த பிறகு, இந்த மாபெரும் இதிகாசத்தில் பாத்திரமாக உலவிய பெண்கள் மனநிலை, அவர்கள் செய்த நன்மைகள், செய்த தவறுகள் அதற்கான காரண காரியங்கள் இவற்றை கற்பனையோடு கலந்து ஆனால், கதையின் உட்கருத்து மாறாமல், நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நன்னெறிகளை போதிக்கும், சிந்திக்க வைக்கும் ஒரு ஆய்வு நூல் இது! 

கதாபாத்திரங்கள் இப்படி ஏன் பேசி இருக்க மாட்டார்கள்? என்ற தீவிர சந்தேகத்தை எழுப்பி, கேள்விக் கணைகளைத் தொடுத்து, அதற்கான பதில்களை அழகுற நெறிப்படுத்தி உண்மைகளை உரக்கச் சொல்கிறது, இந்நூல். 

இதை எழுதியவரும் பெண். இந்நூலில் கையாண்ட கதாபாத்திரங்கள் அனைவரும் மகாபாரதத்தில் வரும் பெண்கள் எனும் போது ஒரு சுவாரசியம் ஏற்படுகிறது. 

மங்கையர் திலகம்

சிறுவாணி வாசகர் மையத்திற்காக "பவித்ரா பதிப்பகம்" வெளியிட்ட இந்நூலை எழுதியவர்  ஜி.ஏ. பிரபா அவர்கள். கணித ஆசிரியையாகப் பணிபுரிபவர். கோபி செட்டிப்பாளையம் பள்ளியில் பணி! விகடன் முதல் தினமணி மற்றும் கலைமகள் வரை இவரது தேர்ந்த படைப்புகள் தாங்கி வெளிவந்துள்ளன. 

இதுவரை 120 சிறுகதைகள், 200 மாத நாவல்கள், 10 தொடர்கள், 5 குறுநாவல்கள் என ஏராளமான எழுத்துகளால் பெரும் புகழும், நற்பெயரும் வாங்கி, அதே சமயம் நிறைகுடம் தளும்பாது என்பது போல் தன் கடமையை செவ்வனே செய்து வரும் மங்கையர் திலகம் இந்த ஜி.ஏ. பிரபா அவர்கள். 

இவர் தன் முன்னுரையில், இப்படி எழுதுகிறார்!

*அனுபவங்களால் நிறைந்த வாழ்க்கையில் தங்கள் மனதின் குரலை உள்வாங்கி, தர்மம், நியாயம் என்பதை இதிகாசங்கள் வாயிலாக பதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள், பெரியோர்கள்! 
மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு உயர இவை தேவைப்படுகின்றன. 

தர்மத்தின் வழி நடப்பதால் வரும் நன்மையை இராமாயணமும், பாதை மாறுவதால் ஏற்படும் விபரீதங்களை மகாபாரதமும் நமக்கு படிப்பிக்கிறது* என்று ஒற்றை வரியில் "நச்சென" மனதில் தைக்கிறார் பிரபா! 

ராமனுக்கு தர்மமும், பாண்டவர்களுக்கு ஒற்றுமையும் சொல்லித் தருகிறார்கள், முறையே கெளசல்யாவும், குந்தியும். தர்மமும், ஒற்றுமையும் தான் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள். இவை இருந்தால் மற்ற நல்ல பண்புகளும், பழக்கங்களும் இயல்பாக நமக்கு வந்துவிடும் என்று முதல் பந்தில் 'சிக்ஸர்' அடித்து நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். 

பல கிளைக்கதைகளுடன் பயணித்து மனிதகுலம் அனைத்தும் ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் சந்ததியினருக்கு நல்ல குணங்கள், பண்புகள் இவற்றை சொல்லித் தந்து செல்ல வேண்டும் என பாட்டி சொல்லும் கதைகளைப் போல மகாபாரதம் தர்ம நெறி சொல்லும் ஒப்பற்ற காவியம் என்றால், பிரபா அவர்கள் அதில் பெண்கள் கதாபாத்திரங்கள் 25 பேரை தெரிவு செய்து அவர்கள் மூலம் நியாயங்களை உணர்த்த வைப்பதில் பெறும் வெற்றி பெற்றிருக்கிறார், என்பதை உரக்கக் கூறலாம்.

மனிதனுக்கு நல்வழியை சுட்டிக் காட்ட இந்த பாதை காட்டும் பாரதம் நூல் ஒரு முக்கிய ஆவணம் என்று வலியுறுத்தி நரன் எனும் நரகாசுரன் அழிந்து வாழ்வில் ஒளி பெற வைக்கும் தீபாவளித் திருநாளில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்நூலில் முதல் பெண்மணி பூமாதேவி நமக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதை அடுத்த பதிவில் வாசிப்போம்! 

அன்புடன்
நாகா

02.11.2018
********************************************************************************************************************
அனைவர்க்கும் இனிய தீபாவளி
நல் வாழ்த்துக்கள் !
தீபாவளிச் சீராக என் மகள்களுக்கும்
மருமகள்களுக்கும் பாதை காட்டும் பாரதம்
புத்தகங்களை அளித்தேன்.
என் பேத்தி எனக்கு அபிதான சிந்தாமணி
புத்தகத்தை அனுப்பியிருக்கிறாள்.

Happy Book-Reading Diwali !
Thirumalaiyappan
********************************************************************************************************************

 09.11.2018
நூல்வழிச்சாலை  / மைல்கல் : 73

பாதை காட்டும் பாரதம் - 2

என்னுடைய வாசிப்பிற்கு "கிரியா ஊக்கி" (catalyst) என் தாயார். நான், அவ்வப்போது கொத்தாக புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். வாங்கிய புத்தகங்களைப் படிக்க எடுப்பதற்கு சில சமயம் நாட்கணக்கிலும், சமயத்தில் மாதக்கணக்கில் கூட ஆகும். காரணம் priority. ஆனால், நான் வாங்கி வரும் அனைத்து புத்தகங்களையும் ஸ்கேன் செய்வதைப் போல ஒரு பார்வையிட்டு அவர்களுக்குப் பிடித்த புத்தகத்தை தெரிவு செய்து முழுதாகப் படித்து இரண்டொரு நாட்களில் "இந்தப் புத்தகம் படித்தாயா?" என்று அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கேள்விக்கணை வரும். அப்படியெனில் உடனே படி என்று அர்த்தம். புத்தகம் நன்றாக உள்ளது எனவும் அர்த்தம்.

உடனே, படித்துக் கொண்டிருக்கும் மற்ற புத்தகங்களை ஓரம் கட்டி விட்டு அவர் சிபாரிசு செய்யும் புத்தகத்தை காலம் தாழ்த்தாமல் படித்து விடுவேன்.
அப்படி சிலாகித்து கூறினார் இந்த "பாதை காட்டும் பாரதம்" நூலைப் பற்றி!
மிகப் பிரமாதம் என்றார்.
உண்மைதான்!
அம்மா சொன்னா கேட்டுக்கணும் இல்லையா?!

அப்படி ஒரே மூச்சில் அனுபவித்து படித்த நூல் இது!
நன்றி, எழுதிய எழுத்தாளர் பெண்மணிக்கும், படிக்கத் தூண்டிய என்னை ஈன்றெடுத்த பெண்மணிக்கும்!

இன்னுமொரு பெண்மணியைப் பற்றி அதுதான் பூமாதேவியைப் பற்றி முதல் அத்தியாயம் என்ன சொல்கிறது என்பதை வாசிக்க உட்புகுவோம்!

பூமாதேவி

மகாபாரதப் போர் முடிந்து விட்டது. யுத்த களத்தில் எங்கும் ரத்தக்களறி! மயான அமைதி!
பூமாதேவி அதனூடே வருத்தமுற்று நடந்து செல்கிறாள். அவள் குமுறுவதைக் கண்டு வியாசர் அவளோடு சேர்ந்து கொண்டு, "என்ன குழப்பம் தேவி? என்கிறார்.

இத்துனை அழிவுகள் ஏன்? இவர்கள் செய்த பாவம்தான் என்ன? எனக் கேட்கிறாள் பூமாதேவி!

வியாசர் கூறுகிறார். *பரம்பொருளின் செயல் இது. காரணம் யார் அறிவார்? எல்லையற்ற பரந்த வெளியில் நீயும் நானும் ஒரு தூசு! இயக்கும் சூத்ரதாரி அவன். நாம் பொம்மைகள்.
இந்த மனித உடல்தான் யுத்தபூமி!
நேர்மை, பணிவு, அடக்கம், திறமை, மரியாதை என்ற பாண்டவர்களுக்கும், பொறாமை, ஆணவம், பேராசை என்ற கெளரவர்களுக்குமான போர் இது!

ஒரு நிறைவான, முழுமையான மனிதர்கள் நிறைந்த பூமியாக மாற வேண்டி, யுகங்களாக நடக்கும் போர் முயற்சி இது, என்கிறார் வியாசர்.

எனில் என் வாழ்வின் செய்தி என்ன என்கிறார் பூமாதேவி!
வியாசர், " நீ பொறுமையின் இலக்கணம். மனிதகுலத்தின் மேல் பாசத்துடன் கண்ணீர் சிந்துபவள். மனிதர்கள் வாழ நம்பிக்கையின் சின்னம் நீ!
யார் உனக்கு தீமை செய்தாலும் நன்மையே செய்பவள் நீ! என்கிறார்.

ஆம்! பூமி நமக்கு வாழ்வை உணர்த்துகிறது என்கிறார் இந்த இடத்தில் நூலாசிரியை பிரபா!
எப்படி?
மலையைப் போல உயர்ந்தும், நதியைப் போல கரைந்தும், நாணல் போல வளைந்தும், மழை போல் அனைவருக்கும் பலனளித்தும் யார் எப்படி காயப்படுத்தினாலும் கனிவோடு இருப்பதற்கு பூமி உதாரணமாக திகழ்ந்து நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது.
பூமி, பெற்ற பிள்ளைகளைப் போல அனைவரையும் கண்போல காக்கிறாள். அரவணைக்கிறாள்.
மக்கள், தாயை காப்பாற்றுகிறார்களா? அல்லது அலட்சியப் படுத்துகிறார்களா?

பூமி நம் தாய் என்ற எண்ணம் வந்தால் போதும். வாழும் இந்த பூமி சொர்க்கமாகி விடும் என்பதாக இந்த அத்தியாயம் முடிகிறது.

வியாசரும், பூமித்தாயும் இப்படி சந்தித்து பேசியிருக்க முடியுமா? என்று வீண் வியாக்கியானம் செய்யாமல் சொல்ல வந்த கருத்துக்களை உள்வாங்கிக் கொள்வது புத்திசாலிகளுக்கு அழகு!
 புதுமையான கிரியேட்டிவ் சிந்தனையில் எழுதியிருப்பது அற்புதமான தொடக்கம்.

நல்ல தொடக்கம் பலமான அஸ்திவாரம்!

பல பெண்மணிகள் வரிசையாக காத்திருக்கிறார்கள். நமக்கு நல்லதை எடுத்தியம்ப!
அடுத்த பதிவில் தொடர்ந்து பெற்றுக் கொள்வோமா?
பாதை மிகச்சிறந்த பாதை! நீண்ட பாதை! பயணிப்போம்!!

அடுத்த பதிவில் சந்திப்போம்!

அன்புடன்

நாகா
********************************************************************************************************************
16.11.2018
நூல்வழிச்சாலை /மைல்கல் : 74

பாதை காட்டும் பாரதம் - 3    By ஜி.ஏ. பிரபா.

சத்தியவதி

சுயநலம் குடியைக் கெடுக்கும். பொதுநலம் மேன்மையானது என்பதை அழகான உரையாடல்கள் மூலம் இந்த ஒரு அத்தியாயத்தில் புரிய வைக்கிறார் ஜி.ஏ. பிரபா.

சத்தியவதியின் மகன் வியாசரோடு நடத்தும் உரையாடல் தன் தவறுகளை உணர்த்தும் வேள்வியாக விரிகிறது, சத்தியவதிக்கு. இந்த முழு புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களுமே உரையாடல் மூலம் கதை நகர்த்தும் பாங்கு! எனவே, உரையாடல்கள் மூலம் மிகச்சிறந்த எண்ண ஓட்டங்களை நம்மிடையே பரவச்செய்து சிந்திக்க வைக்கிறார், நூலாசிரியை! உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்துவது எந்த ஒரு எழுத்தாளருக்கும் சிரமமான பணி!
செவ்வனே செதுக்கப்பட்ட வரிகள் இந்த நூலில் அர்ச்சுனன் அம்பென நம் இதயத்தில் பதிகிறது.
சிரமமான பணியை சிறப்பாக செயல்வடிவம் தந்து புரிய வைப்பதில் இந்த எழுத்தாளருக்கு மாபெரும் வெற்றி கைவசமாகியிருக்கிறது.

வைர வரிகள்

1. நதியில் அடித்துச் செல்லப்படும் கற்கள் போலத்தான் மனித வாழ்க்கை

2. நல்ல எண்ணங்களை மனதில் நிறுத்தி அதையே தொடர்ந்து தியானித்தால் நம்பிக்கையோடு தவம் செய்தால் அது ஒரு எல்லையற்ற வீரியத்துடன் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி சுற்றிப் படர்ந்து செயல் பட ஆரம்பிக்கும்.

3. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும், பேசக்கூடாத இடத்தில் பேசுவதுமே பல தீமைகள் விளையக் காரணமாக இருக்கிறது.

4. சுயநலம் இரண்டு பக்கம் கூர்மையான கத்தி. அதன் சீற்றம் இரண்டு பக்கமும் தாக்கும்.

5. இன்று சுயநலத்துடன் செய்யும் ஒரு விஷயம் அந்த நேரத்தில் சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால், அது கூர் தீட்டிய கத்தியாய் பின் ஒருநாளில் நம்மையே பதம் பார்க்கும்.

மேற்கண்டவாறு உரையாடலின் ஊடே வரும் வைர வரிகள் நம்மை நமக்கு உணர்த்தி பாடம் சொல்லித் தருகிறது.
நல்ல எழுத்துக்கு அடையாளமே இப்படி நல்ல விஷயங்களை "நச்சென" பதிய வைப்பதுதான்.

சத்தியவதி பாத்திரத்தின் அலசல்

தன் தந்தை,  சாந்தனு மன்னரிடம் தனக்குப் பிறக்கும் மகனுக்குத்தான் கிரீடம் சூட்ட வேண்டும் என்ற பொருந்தா நிபந்தனை விதித்த போது அதை மறுக்காமல் இருந்ததும், வியாசர் தன் மகன் என்பதாலேயே அவர் மறுத்த பிறகும் தனது மருமகள்களுக்கு கர்ப்பதானம் செய்யச் சொல்வதும், பல விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கையை புறந்தள்ளி, தான் மகாராணி, தனக்கு சகலமும் தெரியும், தன் இஷ்டப்படியே எல்லாம் நடக்க வேண்டும், தன் சொல்லையே அனைவரும் கேட்க வேண்டும் என்ற அகந்தை- இவைகளே சத்தியவதியின் தவறுகள். அவள் நிம்மதி இழந்ததற்கான காரணங்கள்.

வியாசர் எடுத்துக்கூற சத்தியவதி இறுதியில் புரிந்து கொண்டு நதியில் கரைவதாக இந்த அத்தியாயம் முடிந்து விடுகிறது.

ஆனால், நம் கண் முன்னே இப்படியான பெண்மணிகளும் இன்றைக்கும் காணக் கிடைக்கிறார்கள்தானே!
அகம்பாவம், ஆணவம், நானே ராணி என்ற எண்ணத்தில் இருந்தவர்களும் இறந்தவர்களாகி விட்டனர்.
அவர்கள் பெயரைச் சொல்லி சுயநலத்தோடு அலையும் கூட்டமும் கண்முன்னே தெரிகிறார்கள், இன்னமும். (நான் அரசியல் எதுவும் பேசவில்லை. நிஜ வாழ்க்கையைத் தான் பேசுகிறேன்?!)

கடைசியில் புரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் மாயை என்ற உண்மையையே! புரியுமா அவர்களுக்கெல்லாம்??!

இந்த நூல் படிப்பவர்களுக்கு, மகாபாரதம் படிப்பவர்களுக்கு இது அவசியம் புரியும் என்றே நம்புகிறேன்!

பொதுநலத்தை முன்னிறுத்தி வாழ்வை அர்ப்பணித்து தொண்டு புரிந்தோர் பலருண்டு! எனது அனுபவத்தில் பலரை கண்டிருக்கிறேன். குற்றம் கடுகு முனையளவேனும் கூற முடியாத தலைவர்கள் என காமராஜ், கக்கன், நல்லகண்ணு, நம்மாழ்வார், அன்னை தெரசா, டிராஃபிக் ராமசாமி இப்படி இன்னும் பலருண்டு!

இவர்களுக்கு சுயநலம் என்றால் அதன் அர்த்தம்கூட தெரியுமா என்பது சந்தேகமே! பாடம் இப்படி பட்டவர்களிடமிருந்தும் கற்கலாம், சத்தியவதி போன்ற பாத்திரம் மூலமும் கற்கலாம்!

நாம் எதை, எப்படி, யாரிடமிருந்து பெறுகிறோம் என்பதே நமது "விருப்பத் தேர்வு". (CHOICE).

சுயநலம் இல்லாத மனிதர்கள் இன்றளவும் உலவுவதால்தான் இப்படி
 " கஜா" புயல் மூலம் மழை பெய்கிறது நம் நாட்டில்!

மகாபாரதக் கதையின் இன்னும் பல பாத்திரப் பெண்மணிகள் நம் புத்தியை கூர்மையாக்க காத்திருக்கிறார்கள். தொடர்ந்து கதை கேட்போம்!

அன்புடன்
நாகா
16.11.2018
***************************************************************************
11/12/2018 Sathyanath-Lavanya: 

சிறுவாணி வாசகர் மையத்தின் நண்பர்கள் மூலம் பல அரிய தகவல்களை அறிகிறேன். சாக்கடை அரசியல், வக்கிர சினிமா முதன்மை வகிக்கும் தமிழ்நாட்டுச் சூழலில் கலை இலக்கியத்தேடல் தொடர்பான தகவல்கள் மன நிறைவு தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
********************************************************************************************************************
9/19 Deepanatrajan

: சித்தார்த் மனம் திறந்து பேசியது என்னையும் மனம் திறக்க வைத்துவிட்டது.
நானும் டிவி.யை பார்ப்பது மிகக்குறைவு. புத்தகம் படிப்பதில்தான் நேரம் கழிகிறது.
நான் படிப்பது கட்டைவண்டி வேகத்தில். வயது மூப்பு காரணம்.
தி.க.சி. இன்லாண்டு கவரில் எனக்கு சிபாரிசு செய்தவைகளில் இதயநாதம், ஜனனிபொய்த்தேவு, நாகம்மாள் மற்றும் புதுமைப்பித்தன் கு.ப.ரா. சிறுகதைகள் உண்டு. மண்ணாசை இருந்ததா என்பது ஞாபகம் இல்லை.
இசையில் ஆர்வம் உள்ளவனாதலால் இதயநாதம் என்னை ஈர்த்தது. சிறுவாணி மூலம்படித்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இப்போது மண்ணாசை யில் இறங்கியிருக்கிறேன். அடுத்து புல்புல் பக்கம் போகவேணும்!
ரசிகமணி டிகே.சி. பெரிய மனிதர்களிடம் உரையாடுவதைக் கேட்டு  கேட்டு என் அறிவு வளர்ந்ததுதான் நான் பெற்ற கல்வி.
"காலை எழுந்தவுடன் படிப்பு" டி.கே.சி. அதிகாலை எழுதிவைத்துள்ள கடிதங்கள்தான்!
அன்று வந்த இதழ்கள் எல்லாமே தரமான படைப்புகளை உள்ளடக்கியவை.

எங்கள் வீட்டில் புத்தகக்குவியல் உண்டு. கவனம் சிதறுவதற்கு ரேடியோ கூடக் கிடையாது. புத்தகம் படிப்பது ஒன்று தான் நேரப்போக்கு.
---------------------------------------------------------------------------------------------
23.11.2018
நூல்வழிச்சாலை

மைல்கல் : 75

பாதை காட்டும் பாரதம் - 4
 By ஜி.ஏ. பிரபா.

சுயநலமின்றி வாழ வேண்டும் என்று சத்தியவதி கதாபாத்திரம் சொல்லிக் கொடுத்தது என்றால், அது போல கீழ்கண்ட கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எப்படி வாழ வேண்டும் அல்லது வாழக்கூடாது என்று சொல்லித்தருகிறது. 

குந்தி, காந்தாரி, திரெளபதி, சுபத்ரா, பானுமதி, அம்பிகா-அம்பாலிகா, அம்பை என்கிற சிகண்டி, கன்னித்தாய் (விதுரரின் தாய்), மாத்ரி, பொன்னுருவி, சுலபா, கிருபி, துச்சலை, மாதவி, இடும்பி, விஜயா, தேவிகா, கங்காதேவி, தேவயானி, சர்மிஷ்டை, கிருஷ்ணமாலா, இராதை- கர்ணனின் வளர்ப்புத்தாய், சத்தியபாமா 
இப்படி பல கதாபாத்திரங்கள் பல்வேறான வாழ்க்கை முறையை, பாடங்களை சொல்லித் தருகிறார்கள்.

சாதாரணமாக பலமுறை மகாபாரதம் நாம் ஒவ்வொருவரும் படித்திருப்போம். இந்த பெண்மணிகள் மின்னல் போல கதையின் நடுவே வந்து மறைந்து விடுவதாகத் தான் நம் ஞாபகம் இருக்கும். குந்தி, காந்தாரி, திரெளபதி போன்ற முக்கியமானவர்களைத் தவிர மற்றவர்கள் பெரிதாக நம் கவனத்தை ஈர்த்திருக்க மாட்டார்கள். 
பாண்டவர்களும், கெளரவர்களும் எல்லோரிலும் மேலாக பகவான் கிருஷ்ணருமே முக்கித்துவம் பெற்றவர்களாக இருப்பர்.

ஆனால், இந்தப் புத்தகம் மொத்தமாக 25 பெண்மணிகளுக்கும் சம வாய்ப்பும், மரியாதையும், கெளரவமும் அளிப்பதன் மூலம் நூலாசிரியரின் சமநோக்கு, சமதர்மம் வெள்ளிடைமலையாகத் தெரிகிறது. 
அனைவரையும் விவரமாக பார்த்தால் நமக்கு 25 வாரங்கள் தேவைப்படும். 
எனவே, ஒவ்வொருவரிடமும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை மட்டும் கீழே பட்டியலிடுகிறேன். 

1. வாழ்க்கைக்கு  பயன்படாத ஒழுக்க விதிகளால் எந்தப் பயனும் இல்லை.

2.கடமையை தர்மநெறி விலகாமல் செய்ய வேண்டும். பலன் கருதாதே என்று விளக்கவே இந்தப் பாரதப்போர்.

3. கர்ணனின் அத்தனை செயல்களுக்கும் காரணம் அவன் தின்ற உப்பு. நன்றிக்கடன்!

4. சுருக்கமாக சொன்னால் ஒரு விஷயத்தை நீ பகிரங்கமாகப் பகிர்ந்து கொள்ள முடிந்தால் அது ஒழுக்கமான செயல். முடியவில்லை, கூசுகிறது, பயப்படுகிறது என்றால் அது ஒழுக்கமற்ற செயல்.

மேற்கண்டவை குந்தியின் அத்தியாயத்தில் என்னை கவர்ந்த வரிகள். இறுதியில் கிருஷ்ணர் குந்தியிடம் இப்படி கூறுகிறார். 
அத்தை, உன் கனிவு, பெருந்தன்மை, மனிதாபிமானம் வருங்காலத்துக்கு வழிகாட்டியாக அமையட்டும் என்கிறார். மோட்சத்துக்கு குந்தி செல்ல வாழ்த்துகிறார். வனத்தில் இறுதியாக வாழ்ந்து வந்த குந்தி வனத்தீயில் சிக்கி சாம்பலானாள். 

காந்தாரி

1. மிகப்பெரிய தர்மம் என்பது மற்றவர்களை மதிப்பதுதான். அதுமட்டும் இருந்து விட்டால் உலகில் பொறாமை, பகை என்பது இருக்காது. 

2. மனிதனாக பிறந்தவன் தனக்கான கர்மாவை அனுபவித்தே தீர வேண்டும். நீ மூட்டிய தீயில் நீயே கருக வேண்டும் என்பதே விதி!

3. உன் உடல் உனக்குச் சொந்தமில்லை. மனிதனாகப் பிறந்தவர்கள் இவ்வுலகில் வாழும் காலத்தில் நல்லதே நினைக்க வேண்டும். அதற்குத் தான் ஞானம் என்ற ஒன்றை தந்துள்ளது.

4. பிறக்கும் எல்லா குழந்தைகளும் வளர்ப்பில்தான் மாறுபடுகிறார்கள். 

5. மானுட வர்க்கத்தில் சத்தியம், பொய், தர்மம்-அதர்மம், ஒளி-இருட்டு, சுகம்-துக்கம் என நல்லது-கெட்டது இணைந்தே இருக்கின்றன. அஞ்ஞானத்தில் பீடிக்கப்பட்டவன்தான் தொடர்ந்து அதர்மத்தில் ஈடுபடுகிறான். 

6. ஒரு தாயின் வளர்ப்பில்தான் தருமனும், துரியோதனனும் உருவானார்கள். ஒரு சமுதாயம் சிறப்பாக இருக்க பெண்ணே காரணம். 
ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குந்தியும், கூடாது என்பதற்கு காந்தாரியும் உதாரணம். 

காந்தாரியின் அத்தியாயத்தில் என்னை யோசிக்க வைத்த வரிகள் மேற்கண்டவை! 


மகாபாரதத்தில் கதாநாயகி திரெளபதி யும், கிருஷ்ணனும் பேசிக்கொண்டு இருப்பதாக வரும் சிறப்பான வரிகளை அடுத்த பதிவில் உள்வாங்கிக்கொள்வோமா?!

அன்புடன்
நாகா
23.11.2018
----------------------------------------------------------------------------------------------------------------------------------Naga-chandran: 30.11.2018
நூல்வழிச்சாலை

மைல்கல் : 76

பாதை காட்டும் பாரதம் - 5
 By ஜி.ஏ. பிரபா.

பாஞ்சாலி

போர் முடிந்தது. பாஞ்சாலியின் சபதமும் முடிந்தது. கங்கை கரையில் நின்று கொண்டு யோசனையில் இருக்கிறாள் பாஞ்சாலி. கிருஷ்ணர் அங்கு வருகிறார். 
"உன்னிடம் மகிழ்ச்சி தெரிய வில்லையே, பாஞ்சாலி, ஏன்? என்கிறார் கிருஷ்ணர்.

நான் சென்ற இடமெல்லாம் என் பெண்மைக்கு எவ்வளவு ஆபத்துக்கள். போரில் வென்ற பிறகு உடன் பிறந்த சகோதரர்களை கொன்று விட்டதாக தருமர் புலம்புகிறார். துரியோதனனை, பீமன் வஞ்சனையாக கொன்றதாகக் கூறுகிறார்கள்.ஆனால், என் அவமானத்துக்கு பதில் என்ன கிருஷ்ணா? என்கிறாள் திரெளபதி. 

துகிலுரியப்பட்டதையும், பணயம் வைத்ததையும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. 

கிருஷ்ணரின் பதில் (சுருக்கமாக)
காலம் காலமாக பெண்களின் வாழ்க்கையின் முடிவுகள் அவர்களை கேட்காமலேதான் எடுக்கப்படுகிறது

நம்முடைய செயல்கள்தான் நம் வாழ்வைத் தீர்மானிக்கிறது

ஒரு பெண்ணின், செயல்கள்தான் எல்லா விபரீத த்திற்கும் காரணமாகிறது. சின்ன செயல் கூட மிகப்பெரிய பகைக்கு காரணமாகிறது

ஒவ்வொரு மனிதனும் இறக்கும்போது அவன் வாழ்வில் நிகழ்ந்த இனிமையான, கசப்பான நினைவுகள் எல்லாம் ஞாபகத்துக்கு வரும்

*நிம்மதி, அமைதி என்பது எல்லாமே நாமாக ஏற்படுத்திக் கொள்வதுதானே. எது அமைதி? எது நிம்மதி? 
வாழ்வை ஒரு தெளிந்த நீர் நிலையாக தாமரைத்தண்டாக வாழந்து விட்டுப் போ. எதையும் எதிர்பார்க்காதே. எழுதி வைத்தது பிசகாமல் அனைத்தும் நடக்கிறது. எல்லாமே ஒரு பூரணத்தை நோக்கி நகர்கிறது. நீ வெறும் கருவி மட்டும்தான்*

நிகழ்காலம் மட்டுமே உண்மை. அந்தந்த நிமிஷத்தில் வாழ்.

நம் செயல்கள்தான் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது

கிருஷ்ணர் பாஞ்சாலியிடம் பேசினாலும் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும், மானுட வர்க்கம் அனைவருக்கும் பொருந்தும் படியே இந்த உபதேசங்கள் திகழ்கிறது.

இதைப்போலவே பல அத்தியாயங்களிலும் எனக்குப் பிடித்த மேற்கோள் வரிகளை கீழே பட்டியலிடுகிறேன்.

1. மரணம்தான் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி. இல்லையில்லை அதுவேதான் துவக்கப்புள்ளி. ஆனால், வாழும் வரை, தர்மம், நீதி, நியாயம் தவறாமல் வாழ வேண்டும். கடமைகள் முடிந்ததும் கிளம்ப வேண்டும். 

2. ஒரு நிஜமான நான் நம் உள்ளுக்குள் இருக்கிறது. அது ஆனந்தமாய், ஞானமாய் இருக்கிறது. அதை அறிய முடியாமல் ஒரு மாயை நம்மை மூடி இருக்கிறது. மாயைதான் நம்மை வாழ்க்கையில் இயங்க வைக்கிறது. 

3. உலகோடு ஒட்டி இரு. ஆனால், உலகாயுதங்களை விரும்பாதே.

4. நம்பிக்கைதான் வாழ்வு. சுபத்ரா (அருச்சுனனின் மனைவி) போல் அறிவு, விவேகம், பக்குவத்துடன் மனம் சோராமல் இந்த சமுதாயத்தில் உயர வேண்டும். நம்பிக்கையுடன் எல்லோருக்கும் உதாரணமாக வாழ வேண்டும்.

5. தன்னால் மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை என்ற விவேகம் துரியோதனன் மனைவி பானுமதியிடம் இருந்தது. 

6. சகோதர ஒற்றுமை, பாசம் விட்டுக் கொடுத்தல் என்ற பல விஷயங்கள் சொல்ல அம்பிகா, அம்பாலிகா கதை முழுதும் உதவியது. இவர்கள் இருவரின் பணிவும், மரியாதையும்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது.

7. இந்த உலகில் மனிதன் எல்லாம் தானே செய்வதாக நினைக்கிறான். ஆனால் நடப்பது எல்லாம் தெய்வ சங்கல்பம். வெற்றியோ, தோல்வியோ அது அவன் சித்தமின்றி நடவாது. 

8. வீண் கோபம், ஆணவம், விரோதம் என்று இருக்கும் பெண்களுக்கு அது தவறு, அதனால் எந்தப் பலனும் இல்லை என்று உணர்த்துபவள் அம்பை(சிகண்டி).

9. அன்பு ஒன்றுதான் இவ்வுலகில் காற்றைப் போல, நீரைப்போல நிலையானது. வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான ஆற்றல் அது. 

10. பெண்கள் அம்பாளின் அம்சம். எவன் ஒருவன் பெண்ணுக்கு மரியாதை தந்து, மதிப்பு, கெளரவத்துடன் நடக்கிறானோ அவனுக்கு சகல வெற்றியும் கிடைக்கும்.
எந்த தேசத்தில் பெண்கள் பாதுகாப்புடன் அமைதி, நிம்மதி ஆனந்தத்துடன், கெளரவமாக வாழ்கிறார்களோ, அதுவே ஆசிர்வதிக்கப் பட்ட தேசம்.

11. நேர்மையற்ற முறையில் முன்னேற்றம் பெற முயல வேண்டாம். 

12. எது தர்மம்?
பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பது. சந்தோஷம், மகிழ்ச்சி தரக்கூடியவைகளையே பிறருக்குச் செய்தல். இதுவே தர்மம்.

13. ஒழுக்கம் என்றால்?
உன் செயலை, பகிரங்கமாக பலர் கூடிய சபையில் உன்னால் சொல்ல முடிந்தால் அதுவே ஒழுக்கம். முடியவில்லை என்றால் அது ஒழுக்கமில்லாத செயல்

14. ஒருவன் தனக்குத் தானே நல்லவனாக இருக்க வேண்டும்.
தனது தரத்தை சிகரத்தில் வைத்துக் கொள்ள, தன் வாழ்க்கையை நினைத்து பெருமிதம் கொள்ளும் வகையில் தன் வாழ்க்கைச் செயல்களை ஒருவன் அமைத்துக் கொள்ள வேண்டும். 

15. மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியமில்லை. உங்களுக்கே நீங்கள் அப்படி உணர வேண்டும். 

16. பிறந்தவர் எல்லாம் பிரிய வேண்டும் என்பது விதி. யார் முதலில் என்பது மட்டுமே கேள்வி. ஏதோ ஒரு குறிக்கோளைக் கொண்டு வாழ்க்கைப் பாதையில் ஓட வேண்டும்.

17. அன்புதான் இந்த உலகின் நித்திய சத்தியம். அதுதான் வெற்றியின் ஆயுதம். அன்பு இல்லாத உலகம் பாழ். 
எங்கெல்லாம் அன்பு இருக்கிறதோ அங்கெல்லாம் சகாதேவன் இருக்கிறான். அவன் இருக்குமிடமெல்லாம் விஜயா இருக்கிறாள். வெற்றியாக.
(விஜயா, சகாதேவனின் மனைவி).

நண்பர்களே, மிகவும் சிறப்பான மேற்கோள்கள் பல இந்த நூலில் இருந்தாலும், மிகவும் சுருக்கி என்னை மிக, மிக கவர்ந்த மேற்கோள்களை வசன வரிகளை மேலே குறிப்பிட்டிருக்கிறேன். 

பொதுவாக, ஒரு புத்தகத்தில் சில பகுதிகள் மட்டுமே பிரமாதமாக அமையும். ஆனால், இந்த நூலில் பிரமாதம் என்ற தகுதிக்கு கீழே எந்த பகுதியும், அத்தியாயமும் அமையப் பெறவில்லை. அனைத்துமே "டாப் கிளாஸ்". 
அதிலும் extraordinary என்று சொல்லும் அளவிற்கு அமையப் பெற்றவை, கங்கை-பீஷ்மர் பேசிக்கொள்ளும் பகுதி, சபரி என்கிற கிருஷ்ணமாலாவும்- பகவான் கிருஷ்ணருக்குமான உரையாடல், கர்ணன்-கர்ணனின் வளர்ப்புத்தாய் இராதை இவர்களுக்கான கேள்வி பதில், முத்தாய்ப்பாக கிருஷ்ணர் மறைந்த பிறகு கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா- பாஞ்சாலி இவர்களுக்கான உரையாடல் இந்தப் பகுதிகள் இந்த நூலின் கோஹினூர் வைரங்கள். 
ஒருமுறை இதைப் படித்து விட்டேன். ஆனால், பலமுறை திரும்பவும் படிக்க வேண்டும் என்ற ஆவலை எனக்குள் விதைத்த நூல் இது! 

இறுதி " பஞ்ச்"

இந்த வாழ்கைக்கு அர்த்தம் என்ன? பாஞ்சாலி கேட்கும் கேள்வி இது..

இதற்கு சத்தியபாமாவின் பதில்:
எந்த அர்த்தமும் இல்லை. வாழ்க்கை ஒரு அனுபவம். வாழ்ந்தவர்கள், வாழப்போகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள். பாரதப்போர், பாண்டவர்கள், கெளரவர்கள் எல்லாமே இந்த வாழ்வின் குறியீடு!

மிகச்சரியான அலசல் பார்வையில் எழுதப்பட்ட இந்நூலை நான் மிகவும் விரும்பி ரசித்தேன். ருசித்தேன். உண்மையிலேயே தேன்!!!

அன்புடன்
நாகா
-------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மைய வெளியீடான
"பாதை காட்டும் பாரதம்" -எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா நூலுக்கு ,
ரசிகமணி டி.கே.சி அவர்களின் பேரர் திரு தீப.நடராஜன் 
அவர்களிடமிருந்து வந்த பாராட்டு.
*****
கோபிக்கு  நேரே  சென்று  சகோதரி  பிரபாவைப்  பார்த்து கை குலுக்க வேணும்  போல  இருக்கு.
தம்  எழுத்தில்  நம்மைக் கட்டிப்  போட்டு  விட்டார். திமிறிக்  கொண்டு  வெளியே  வர  முடியலையே!

கூடுவிட்டுக்  கூடு பாய்ந்து  பாரதம்  கண்ட மகளிர்  உள்ளத்தைப்  புரிந்து  நமக்குச் சொல்கிறாரே!
இவரது எழுத்து தரும் பூரிப்பு ஆயுளை  விருத்தி  பண்ணி  விடும்  என்றே  தோன்றுகிறது. எழுத்துக்கு  எவ்வளவோ  சக்தி  உண்டுமே. மந்திரங்கள் எல்லாம்  எழுத்துகள்தானே?

ராஜாஜி  அவர்  எழுதிய  மகாபாரதத்திற்கு "வியாசர்  விருந்து" எனப் பெயரிட்டார். பிரபாவும் மகளிரை  வைத்து  சுவையான  விருந்து  படைத்து  விட்டார்.

கல்கி மாதிரி  கற்பனையும்.
க்யூரி  அம்மையார் போன்ற  ஆராய்ச்சியும்.
மதர் தெரசாவின் கருணையும் விரவிக் கிடக்கின்றன.

என்ன எழுத்து, என்ன எழுத்து!!

பெண்கள்  போடும்  கோலத்தையும், கும்மி கோலாட்டையும் அவர்களின்  கூழ்  வடகத்தையும்  பாராட்டி ரசித்த  ரசிகமணி  இவரது  எழுத்து நடையைப்  பார்த்தார்  என்றால் எப்படி மகிழ்வார்  என்று  சிந்தனை  ஓடுகிறது.

பூமாதேவி ஒரு பாத்திரமாக வருகிறதாள். கங்கை  காவேரி முதலிய  நதிகளை எல்லாம் தாயென்றுதான்  நாம்  சொல்லி வருகிறோம்.  மலைகளைத்தான் ஆண்  வர்க்கமாய் கருதுகிறோம். இமவான்,  மலையரசன்  என்றெல்லாம்  மலைகள்  இலக்கியத்தில் பெருமைப்  பட்டுள்ளன.

பாரதக்கதையில்  பாத்திரங்கள் அநேகம் பேர் உண்டு.பெண் பாத்திரங்கள் இத்தனை  பேரா  என்று  வியப்பு ஏற்பட்டது இப்போது தான்.

"எத்தனை  அழகிய பூமி.  இதில்  வாழவேண்டும்  என்ற  ஆசையினால்தான் தேவர்களும்  இந்த பூமிக்கு இறங்கி  வருகிறார்கள். இறைவனைத் துதிக்கவும், மனம்  மகிழவும், கருணை, அன்பு, மனிதாபிமானம்  போன்ற  உணர்வுகளுடன்  வாழும் வரை  அர்த்தம்  உள்ளதாக  வாழ இந்த பூமியை  இறைவன் படைத்திருக்கிறார். ஒற்றுமையுடன் சேர்ந்து  வாழ்ந்திருந்தால்  இன்று  இந்த  மரணம்  இல்லையே" என்று  பானுமதி  ஏங்குகிறாள்.

எத்தனை  சந்தோஷங்கள்  இந்த  உலகில்.  இதைக் கேவலம், பொறாமை, வெறுப்பால் இழந்து  விட்டானே. பானுமதி  வேதனையுடன்  அவனைத்  தடவிக் கொடுத்தாள் .அவள்  கை  வழியே  அவள்  மனதின் அன்பை உணர  முடிந்தது அவனால். தலையை அசைத்து அவள் கையோடு 
தன் கன்னத்தை  அழுத்திக் கொண்டான். அந்த நிலையில் அவனைப் பார்க்கையில்  மனது  கசிந்தது

பானுமதி  மனம் கசிவது  மட்டும் அல்ல, நம்  மனத்தில்  துரியன்  மேலிருந்த வெறுப்பும், கசப்பும் அகன்று அவனிடம்  பரிதாபமும்  பரிவும் எழுவதோடு ஒரு  பிரியமும்  கூட  ஏற்படுகிறது அல்லவா?

சக்களத்திச் சண்டை, கசப்பு, வெறுப்பு  பொறாமை  இப்படித்தான்  கேள்விப்பட்டிருக்கிறோம். தேவிகா  பாஞ்சாலிமேல்  என்ன  பாசம்  வைத்துள்ளாள்! பாஞ்சாலியிடம்  நம்பிக்கை, இரக்கம், பெருமை  எல்லாமே தேவகியிடம் காண முடிகிறதே.

வியாசரிடம் தேவகி  பாஞ்சாலிக்கு வக்காலத்து வாங்கி  
வாதாடுகிறாளே !

"ஒரு பெண்ணை காப்பாற்றுவதைத் தவிர  அங்கு  வேறு  என்ன  நியாயம்தேவை  இருக்கப் போகிறது? கண் எதிரில் ஒரு பெண்ணின்  மானம் பறிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு  இருப்பதை விட  மிகப்  பெரிய  பேடித்தனம்  இருக்கிறதா?   இவர்களின் தர்மம், நியாயம் எல்லாம் அந்த  இடத்தில்  அழிந்து  விட்டது"

பெண்  உரிமைக்காகவும், கையறு நிலைக்காகவும்  உரத்த குரலில் வாதிடும் தேவகி ஓர்  அபூர்வமான  பாத்திரம். அதிசயமான பெண்ணும் கூட.

பகவத் கீதை  பிறக்கும் முன்னமேயே  அதன் தாத்பரியம் விதுரர்  மனைவி  சுலபாவிடம் இருந்து  வெளிப்பட்டு  விடுகிறது.

கிருஷ்ணர்  சுலபாவிடம் "என் பசி  அடங்கியது சுலபா, உனக்கு  என்ன  வேண்டும் சொல்" என்று  கேட்டவுடன்  "இறைவா, உன்னிடம்  நான் வரம் பெற்றால்  இதுக்காகவே  உணவிட்டேன்  என்று  ஆகி  விடும்.உன் கருணை ஒன்றே போதும்" என்று  நெகிழ்ந்து கூறினாள் சுலபா.

சுந்தரமூர்த்தி  நாயனார், காரைக்கால்  அம்மையார்  போன்ற  அடியார்கள் இறைவனிடம்  நெருங்கி உறவாடியது மாதிரி  சுலபா  கண்ணனிடம் மனம்  திறந்து  பேசுகிறாள்.

விதுரநீதி  வழங்கியவரிடமே   நீதியை  எடுத்துச்  சொல்கிறாள் சுலபா! "பிரபோ, தாய்  அடுத்து தாரம் என்று  என்று   பிறரைச் சார்ந்தே வாழப் பழகியவர்கள் ஆண்கள்.பெண் இன்றி  ஆணால் வாழ முடியாது" என்று  சொல்லிவிட்டு  முத்தாய்ப்பாக "நீங்கள்  கம்பீரமாக  அமர்ந்திருக்கும் சிம்மாசனம் மனைவிதான்" என்று  அழுத்தமாய் அறிவிப்பது  எவ்வளவு நயம்!

பாரதக் கதையில்  மிகவும்  பரிதாபத்துக்குரியவன் கர்ணன். அவன்  மனைவி  பொன்னுருவி கடைசி  நேரத்தில் அவனுக்குப் போதனைபண்ணுவது அபூர்வமான காட்சியாக அமைந்திருக்கிறது.

"உண்மையான நட்பு  என்பது நண்பனைத்  திருத்தி  நல்வழியில் நடக்கச்  செய்வது. ஆனால்,  நீங்கள் செஞ்சோற்றுக்கடன்  என்று துரியோதனனைத்  தூண்டி விட்டீர்கள். அவர்  செய்த  கெடுதலுக்கெல்லாம்  துணை நின்றீர்கள். அழிவு  நிச்சயம்  என்று  தெரிந்தும்  அவரை  அதர்மத்தின் பக்கம் அழைத்துச்  செண்றீர்கள். இதுவா நட்பு?'

இது வரையும்  கர்ணனிடம்  இவ்வாறு  யாரும்  பேச வில்லையே?

மகாபாரத   காலத்தில்  சுற்றிச்  சுழலும்  ஆசிரியரது சிந்தனையும்  சீற்றமும்  2018 ஆம்- ஆண்டு  பாரத நாட்டுக்குள் திடீரெனப்  பாய்ந்து  விடுகிறதே?

யயாதியின் மகள்  மாதவி  சாபம்  இடுவது  போல  சொல்லி விடுகிறாள். " இனி  வரும் காலத்தில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கும். தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ளும் நிர்பந்தத்தில்  பெண்கள்  தள்ளப் படுவார்கள்"

"பாதை காட்டும் பாதைகள்" காட்டும் பாதைகள் பல. நீதியின் குரல், பண்பாட்டின்  பெட்டகம், பெண்மையின் பெருமை, தர்ம  ஞாயங்களின்  வெளிப்பாடு இப்படி அநேகம் அதனுள் பொதிந்து  வைக்கப்பட்டுள்ளன.

மகாபாரதத்தில்  எத்தனையோ  துணைக் கதைகள்  உண்டு.
பாரத மகளிரின் தனித்துவங்களின்  சங்கமம் என்று  சொல்லும்படி ஆசிரியர் படைத்துள்ள  புதிய  பாரதம் இது என்பதில் எவ்வித  ஐயமும்  இல்லை.

பிரபாவின் சிந்தனையின் ஆழமும்,  பாத்திர  படைப்புகளின் அழகும், சொல்லின் நேர்த்தியும் மிக மிக உயர்வாய் இருக்கின்றன..

பிரபா வாழ்க. மேலும்  பல  அரிய படைப்புகளை அவர்  தமிழ்  இலக்கியத்துக்கு வழங்குவதற்கு அவருக்கு  நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் , உத்வேகமும்  இறையருளால் சித்திக்குமாக.


 தீப. நடராஜன்.
----------------------------------------------------------------------------------------------------------------------
02.06.2019

இன்று மாலை திருப்பூரில் நடைபெறும் விழாவில் "பாதை காட்டும் பாரதம்" நூலுக்காக எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா,  "சக்தி" விருது பெறவுள்ளார்கள்.

அவர்களுக்கும் சக்தி விருதுபெறும் மற்ற விருதாளர்களுக்கும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.

 திருப்பூர் சக்தி விருது வாங்கும் விழாவில்.......


 2/6/2019 Praba  சிறுவாணியால்தான் எனக்கு இந்த விருது. நம் அமைப்பு பற்றியும்,அதன் செயல்பாடுகள் பற்றியும்தான் பேசினேன். சிறுவாணி வாசகர் மையத்தின் நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன். வணிக நோக்கமின்றி வாசிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல் படும் அமைப்பு என்று என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன். அதே நன்றி,மகிழ்ச்சியை இங்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மையத்தின் உறுப்பினர்கள் தந்த அமோக வரவேற்பே நான் இந்நூலை விருதுக்கு அனுப்பக் காரணம். அனைவருக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

No comments:

"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

  தென்றல் பேசுகிறது... Jan 2024 கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி...