Wednesday, June 12, 2019

ஓவியர் ஜீவா


இந்து தமிழ்திசை நாளிதழ்...30.04.2019
படைப்பாளி வரிசையில்:

சினிமா பேனரிலிருந்து தேசிய விருது வரை...
ஓவியங்களில் மிளிரும் ஜீவா என்கிற ஜீவானந்தன்.
--------------
தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் திரைப்பட குறிப்புகள் நூலுக்கான விருது என்பது குறிஞ்சிப்பூ  பூப்பது போல் எப்போதாவது அளிக்கப்படுவது. 1983 ஆம் ஆண்டில் அறந்தை நாராயணன் எழுதிய, ‘தமிழ் சினிமாவின் கதைஎன்ற தலைப்பிலான நூலுக்கு அளிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அதே விருது 28 ஆண்டுகள் கழித்து, 2011 ஆம் ஆண்டு திரைச்சீலைஎன்ற நூலுக்கு வழங்கப்பட்டது. இந்த நூலை எழுதியவர் ஓவியர் ஜீவா என்கிற ஜீவானந்தன்.

கோவை என்.எச். ரோட்டில் சினி ஆர்ட்ஸ்என்ற பெயரில் ஓர் ஓவியக்கூடம் நடத்தி வரும் 62 வயதுக்காரர். இவரின் ஓவியங்களை இந்து தமிழ் திசை வெளியீடுகள் உள்பட அனைத்து வெகுஜன பத்திரிகைகளிலும் காண முடியும். மணியம், மணியம் செல்வம், ராமு, செல்லம், ஜெயராஜ், மாருதி, ஜமால், ராமு போன்ற சராசரி ஓவியர்களோடு மட்டுமல்லாது, ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, பூனை பாஸ்கர் போலவே நவீன ஓவியர்கள் வரிசையிலும் மறுக்க முடியாத, மறைக்க முடியாத படைப்பாளியாக மிளிர்கிறார்.

எம்.ஏ அரசியல் படித்து சட்டம் பயின்று வழக்கறிஞராகவும் விளங்கிய இவர் ஓவியவெளிக்குள் வந்த விதம் ஒரு சினிமா கதையை மிஞ்சும் சுவாரஸ்யம் மிக்கது. அதை அவர் ஒரு மாலைப் பொழுதில் பகிர்ந்து கொண்டார்.

‘‘என் அப்பா வேலாயுதம். குமரி மாவட்டம் பூதப்பாண்டிதான் அவரின் சொந்த ஊர். அப்பா விவசாயக்கூலியாகத்தான் இருந்திருக்கிறார். ஆனா என்ன காரணமோ தெரியலை. அவருக்கு ஓவியத்துல அவ்வளவு நாட்டம். வீட்டுக்கே தெரியாம நாகர்கோயில் போய் ஒரு ஓவியப் பள்ளிக்கூடத்துல ஓவியம் கத்துருக்கார். அதுக்காக கல் உடைக்கறது, கிழங்கு தோண்டறது, நெசவு நெய்யறதுன்னு நிறைய கூலி வேலைக்கு போய் அதுக்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கார். ஓவியத்துல தேர்ந்தவர் ஆனாலும் ஏழாவதுதான் படிச்சிருக்கார். நல்லா வரைஞ்சாலும் ஓவிய வாத்தியார் வேலை கிடைக்கல. ஆனா சினிமா பேனர்க அறிமுகமாகி அதை வரைய ஆள் தேவை இருந்திருக்கு.

அந்தக்காலத்துல திருச்சி ஸ்ரீரங்கத்தில் கலைவாணர் என்.எஸ்.கே, என்எஸ்கே பிலிம்ஸ் என்று பேனர்கள் வரையும் பட்டறை வச்சிருந்திருக்கார். அங்கே போய் சேர்ந்து 10 அடிக்கு 20 அடி சைஸ் சினிமா பேனர் எல்லாம் வரைஞ்சிருக்கார். ரெண்டு வருஷம்தான். அப்ப ஒரு நண்பர் கோவைக்கு கூப்பிட்டிருக்கார். கோவையில் அஞ்சுமுக்குல குடியிருந்தவர் பக்கத்துல இருந்த ராயல் தியேட்டர்ல போய் சினிமா பேனர் வரைய கேட்டிருக்கார். அந்த காலத்துல கோவைக்கு சினிமா பேனர் எல்லாம் சென்னையில இருந்துதான் வரும். ராயல் தியேட்டர் முதலாளியும், ஆனந்தா பிலிம்ஸ் சினிமா விநியோகஸ்தரும் இவரை ஒரு படம் வரையச் சொல்லியிருக்கின்றனர். அப்ப சிவாஜி கணேசனோட தூக்கு தூக்கி ரிலீஸ் ராயல்ல ரிலீஸ். இவர் அதுல வர்ற பாலைய்யா படத்தை தத்ரூபமா வரைஞ்சிருக்கார். அதுல முதலாளிகளுக்கு படு திருப்தி. அங்கேயே தனியா இடம் ஒதுக்கி சினிமா பேனர்களை வரைய அனுமதிச்சிருக்காங்க.

இப்படி ரெண்டு வருஷம். அப்புறம் அஞ்சு முக்குலயே சொந்தமா பட்டறை வச்சு சினிமா பேனர்களை வரைஞ்சிருக்கார். அப்ப எல்லாம் ஆர்டர்கள் குவியும். குறைஞ்ச தொகைதான் பேசியிருப்பார். ஆனா பணம் பேசினபடி வராது. நாங்க பசங்க நாலுபேர், பொண்ணுக ரெண்டு பேர். அதுல மூத்தவன் நான். என்னை கலெக்டர் ஆக்கணும்ன்னு ஆசைப்பட்டார். அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில(சிபிஐ) தீவிர ஈடுபாடு. திராவிட எதிர்ப்பு சிந்தனை வேறு. அதனால் தமிழ் படிக்கக்கூடாதுன்னு இங்கிலீஸ், இந்தியிலயேடிக்க வச்சார். தமிழா நானாத்தான் தேடித் தேடி படிச்சேன். கோவை அரசுக்கல்லூரியில்  பி.ஏ.,அரசியல். சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ., அரசியல். சட்டக்கல்லூரியில் சட்டம் படிச்சேன். அப்பத்தான் திடீர்ன்னு நோய்வாய்ப்பட்ட அப்பா இறந்துட்டார். மூத்த பிள்ளை என்பதால் குடும்பப் பொறுப்பு மொத்தமும் நானே கவனிக்க வேண்டியதாயிற்று!’’

என்றவர் கொஞ்சம் பேச்சை நிறுத்தி செருமி விட்டு, பிறகு தொடர்ந்தார்:

‘‘நான் ஸ்கூல் படிக்கிற காலத்துலயே மூத்த பிள்ளை என்பதால் என்மேல ரொம்ப அட்டாச்மெண்ட். கட்சிக்கூட்டம்ன்னாலும், தியேட்டர்கள்ல சினிமா பேனர் வைக்கிறதானாலும், ஓவியப்பட்டறைக்கு ஆனாலும், கலை இலக்கிய பெருமன்றம் ஆனாலும் என்னை கூடவே கூட்டீட்டு போவார். கம்யூனிஸ்ட்  தலைவர் தோழர் ஜீவா அப்பாவுக்கு மாமா முறை ஆவார். அதனால அவரைப் பற்றியும், அவர் தியாகத்தை பற்றியெல்லாம் சொல்லி, சொல்லியே வளர்ப்பார். அப்பா கூடவே இருப்பதால அவர் ஓவியம் வரையறதை பார்ப்பேன். நானும் பிரஸ் எடுத்து இஷ்டம் போல படம் வரைவேன். பள்ளிக்கூடத்துல ஏ,பி.சி,டி எழுதறதுக்கு முந்தியே ஓவியம் போட்டிருக்கேன். மூணு, நாலு வகுப்புப் படிக்கும்போதே வகுப்புல ஓவியம் வரைஞ்சு டீச்சர்ஸ் பாராட்டுக்களை வாங்கியிருக்கேன். கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் வரைக்கும் கூட அப்பாவோட சினிமா பேனர்கள்தான் ஒவ்வொரு பட ரிலீஸிற்கும் போகும்.

சிவாஜி படம் ஒண்ணு எட்டு தியேட்டர்ல ஒரே நேரத்துல ரிலீஸ் ஆகுதுன்னா அதுக்கு ஒரே மாதிரி பேனர்கள் எல்லா பக்கமும் அனுப்ப வேணும். அதுக்கு ரீப்பர், கட் அவுட், கட்டைக, மரங்கள் எல்லாம் இங்கேதான் அடிச்சு அனுப்பணும். அந்த பேனர்களுக்கு அப்பா தலை மட்டும் வரைவார். மற்றவங்க அதுக்கு உடம்பு, கைகால் எல்லாம் போடுவாங்க. நானும் அதுல ஒருத்தனா இருப்பேன். தலை வரைவது சாகசம். ஒவ்வொருத்தருக்கும் நாம எப்ப முகம் வரையறது; முழு ஓவியர் ஆகறதுங்கிற கனவு இருக்கும். எனக்கும் அதே கனவு இருந்தது. மூன்று முடிச்சு படம் வந்த சமயம். அந்த பிளாக் &ஓயிட் ஸ்டில்லில் இருந்த நடிகர் கரு,கருன்னு மூஞ்சி. ஸ்டைலா வாயில் சிகரெட். குளோசர் லைட்.  குறும்புத்தனமான சிரிப்போட இருந்ததை பார்த்தப்ப அவரை நான் வரையணும்னு தோணுச்சு. அப்பாகிட்ட கேட்டேன். சரின்னுட்டார்.

அதுதான் நான் வரைஞ்ச முதல் தலை. ராயல் தியேட்டர் வாசல்ல வச்சோம். ரசிகர்கள்கிட்ட அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு. ரஜினிங்கிற பேரு எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது. இப்படி ஓவியத்துல இயல்பா புகுந்த நேரத்துலதான அப்பா இறந்துட்டாரு. அப்பவே சென்னை வரைக்கும் சினி ஆர்ட்ஸ் வேலாயுதம் இறந்துட்டார். அதை மூடீட்டாங்க. அதனால நாம் வேற ஆளுககிட்டத்தான் பேனர்க கொடுக்கணும்ன்னு சினிமாக்காரங்க பேசிட்டாங்க. அதுல நான் ரொம்பவும் உடைஞ்சு போனேன். அடுத்தநாளே எங்க ஓவியப் பட்டறையை திறந்தேன். எந்தந்த வேலை அரைகுறையா இருந்ததோ அதையெல்லாம் நானே முன்னின்று முடிச்சுக் கொடுத்தேன். புது ஆர்டரும் எடுத்தேன். பத்து வருஷம் வக்கீலா பிராக்டீஸ் பண்ணீட்டு, இதையும் கவனிச்சேன். இரண்டு குதிரையில சவாரி செய்யறது கஷ்டமான வேலைன்னு வக்கீல் தொழில விட்டுட்டு முழு மூச்சா இதுல எறங்கீட்டேன்!’’

என்று சொல்லி நிறுத்தியவர், பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைய வந்த கதைக்கு அடுத்தது தாவினார்.

‘‘சினிமா பேனர் வரையறது ஒரு கலைன்னா நவீன ஓவியம் இன்னொரு அதிதீவிர கலை. அதில் எனக்கு ஆரம்பகாலத்துலயே பற்று. 1978ல் சித்ரகலா அகடாமின்னு ஓர் அமைப்பு கோவையை சேர்ந்த ஓவியர்கள் குழு ஏற்படுத்தினாங்க. அதில் போய் நான் சேர்ந்தேன். அவங்க நடத்தின ஓவியப் போட்டியில் கலந்துகிட்டு முதன்முறையா ஆறுதல் பரிசு வாங்கினேன். அப்புறம் அங்கே நடந்த  கண்காட்சியில் ஓவியக்கல்லூரியில் படிச்சவங்க எல்லாம் தான் வரைஞ்ச ஓவியத்தை காட்சிப்படுத்தினாங்க.

நானும் 1979ல் நான் வரைஞ்சதை வச்சேன். நல்ல வரவேற்பு. அடுத்த வருஷமே அந்த அமைப்பில் என்னை இணைச் செயலாளரா ஆக்கீட்டாங்க. அதுக்கு அடுத்த வருஷம் செக்ரட்டரி. இன்னெய்க்கு 42 வருஷமா தொடர்ந்து அதன் தலைவரா இருக்கேன். வருஷா வருஷம் கிக்கானி ஸ்கூல்ல 2 நாள்  ஓவியப்பட்டறை நடத்தறோம்.

அதுக்கு ஓவியர்கள் ஆதிமூலம், அல்போன்ஸோ, அந்தோணிதாஸ், தனபால் என பலரும் வந்திருக்காங்க. இந்த ஓவியப்பட்டறையில் பங்கேற்றவங்க மணிராஜ், முத்துராஜ் போன்றவங்க நிறைய பேர் சினிமாவில் ஆர்ட் டைரக்டர்ஸா இருக்கிறாங்க. இப்படியான சூழலில் பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைய வந்தது எப்படி, எப்போ என்பது எனக்கே சரியா நினைவு இல்லை.

மனிதன் என்கிற எம்.எல் பத்திரிகை படிச்சிருக்கேன். அதற்கு வரைஞ்சிருக்கேன். மாலன் திசைகள்ன்னு ஒரு பத்திரிகை நடத்தினார். 1980களில். அதுல வரைஞ்சேன். கனடாவிலிருந்து வரக்கூடிய தாய் வீடுங்கிற பத்திரிகையில் தொடர்ந்து ஏழு வருஷம் வரைஞ்சேன். அவங்க என்னை கனடாவுக்கே கூட்டீட்டுப் போய் கெளரவிச்சாங்க. அங்கே பட்டறையும் நடத்தினேன். போஸ்டர் கலர், வாட்டர்கலர்ன்னு வச்சுட்டு நான் கையிலயே வரையறதை பார்த்துட்டு அவுங்கதான் எனக்கு கம்ப்யூட்டர் Wacom பேடு கொடுத்தாங்க. அதை வச்சு வரைஞ்சா கம்யூட்டர்ல சுலபமா ஓவியம் வந்துடும். அதை வச்சுத்தான் இன்னெய்க்கு எல்லா பத்திரிகைக்கும், பேனர்களுக்கும் ஓவியங்கள் போட்டுத் தர்றேன்!’’

என்றவரிடம், ‘இன்றைக்கு டிஜிட்டல் வந்து விட்டதால் ஓவியக்கலையே அழிவின் விளிம்பில் உள்ளதே. அது உங்களை பாதிக்கவில்லையோ?’’ எனக் கேட்கிறேன். கொஞ்சம் யோசனையில் ஆழ்கிறார்.

‘‘ஓவியக்கல்லூரியில் படிக்காமல் தொழில் முறை ஓவியர்களாக வந்தவர்கள் முப்பது நாற்பது பேர் என்னுடன் மட்டும் இருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு அடிக்கவும், வேற, வேற கூலி வேலைக்கும் போயிட்டாங்க. சிலர் செத்தும் போயிட்டாங்க. அப்பா இறந்துட்டாரு, அவரோட எங்க ஓவியக்கூடமும் அழிஞ்சிடுச்சுன்னு பேசினாங்களே. அது மாதிரிதான் இதுவும்ன்னு என்னளவில் இப்ப நான் நினைக்கிறேன்.

இன்னைய்க்கு வந்திருக்கும் டிஜிட்டல் யுகத்திற்கு தகுந்த மாதிரி என்னை நான் கணினி மயப்படுத்திக் கொண்டது, போட்டோ ஷாப், கோரல் ட்ரா போன்ற சங்கதிகளை கையாள்றதுனால இந்த நவீன யுகம் எந்த அளவுக்கு ஓவியத்துடனும் ஒத்துப் போறதை பார்க்க முடியுது. முந்தி ஒரு பத்திரிகையில் ஓர் ஓவியம் வரையச்சொல்லி ஆர்டர் கொடுத்தாங்கன்னா, ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு நேரம் காய வைக்கவே எடுத்துட்டு கண், காது, மூக்கு எல்லாம் வரையணும். அதுக்கு ஒரு நாள் ரெண்டு நாள் கூட ஆகும். ஆனா இப்ப அரைமணி நேரத்துல செஞ்சு கொடுத்துட முடியுது!’’ என்று தெளிவு படுத்தினார்.

எல்லாம் சரி, திரைச்சீலை நூலும், அது உருவான விதமும்,  தேசிய விருது வாங்கின கதையும் சொல்லவே இல்லையே?

‘‘அதுதான் நான் எழுதிய ஒரே நூல் சினிமா குறித்த எனது அனுபவச்சிந்தனைகள்தான் அந்த நூல். ரசனை என்ற இதழில் தொடராக எழுதியது. அறந்தை நாராயணனுக்கு பிறகு இந்த விருது என்னை வந்தடைந்தது பெருமிதப்படக்கூடிய விஷயம்தான். அடுத்ததாக சினிமா பேனர் அனுபவங்களை நூலாக எழுத உள்ளேன்!’’

என்று தன் பேட்டியை முடித்துக் கொண்ட ஜீவாவின் மனைவி பெயர் தமிழரசி. இவர்களுக்கு ஆனந்த், மீனா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். ஜீவாவின் சகோதரர் வே. மணிகண்டன் பிரபல ஒளிப்பதிவாளர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஓவியர் ஜீவானந்தன்

அவர் ஓவியக் கல்லூரியில் கற்றவரல்ல. ஆனால், தமிழகத்தின் மிக முக்கியமான ஓவிய ஆளுமைகளில் ஒருவர். பள்ளியில் தமிழ் பயிலாதவர். ஆனால், அவர் எழுதிய முதல் நூலுக்கு - அதுவும் தமிழ் நூலுக்கு - இந்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில்நாடன் விருது, கோவை பார் அசோசியேஷனின் சாதனையாளர் விருது, ரத்னம் கல்லூரி வழங்கிய ‘ஐகான் ஆஃப் கோவை’ விருது உட்படப் பல்வேறு சிறப்புகளும், பாராட்டுகளும் பெற்றிருக்கும் அவர், ஓவியர் ஜீவானந்தன். கோவையில் ‘சினிஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஓவிய ஆசிரியர், ஓவியப் பயிற்சியாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், திரைப்பட விமர்சகர், நடிகர் எனப் பல முகங்களில் மிளிர்பவர். வாருங்கள், அவரோடு பேசிப் பார்க்கலாம்....

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்


http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12863
-----------------------------------------------------------------------------------------------------------------


No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....