ஜூலை-2020 வெளியீடு
"இலக்கியப் படகு"-
திருலோக சீதாராம்
பக்கங்கள் 198 விலை ரூ 200/-
எளிமையும், கம்பீரமும், இதயத்தை திறந்து பேசும் பிள்ளை மையும், மண்ணும், விண்ணும், இரண்டையும் இணைக்கும் முரண்பாட்டு ஏணிகளும், உலகியல் அறிவும் சமய உணர்வும், கவியும், அழகும், தெளிவும் ,மயக்கமும், தோழமையும், பரிவும்- இப்படியாகப் பல அரிய சரக்குகள் தாங்கி நிற்கிறது "இலக்கிய படகு".
உணர்வுடையோர் படகிலேறி மேலும் உணர்வு பெறுவார்களாக.
ஜஸ்டிஸ் .எஸ். மகராஜன்
--------------------------------------------------------------------------------------------------------------
திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திரிந்து கொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள்.
பொருள்சுழற்சியில் சிக்குண்ட நாம் அவர்களைக் கண்டு கொண்டோம். அவர்களுடைய சொற்களைக் கேட்டு அவர்களைச் சுமந்தோம். அந்த சொற்களையும் கருத்துக்களையும் இன்னும் சுமந்து கொண்டு சுவாசித்து வாழ்கிறோம். வாழ்வோம். இதிலேயே இருந்து நமது சந்ததிகள் சுடரோடு பொலிவர்.
ஜெயகாந்தன்
--------------------------------------------------------------------------------------------------------------
திருலோக சீதாராம்
(1-4-1917 – 23– 8-1973)
அறிந்த ஆளுமை அறியாத செய்திகள்.
மூலக் கருத்தின் மோனச் சிறையுள் முடமாய்க் கிடந்தேனைக்
கோலச் சுடரில் கோணமெலாம் ஏன் கொண்டு திரியவிட்டாய்?
நீண்ட வழியும் நெடுமூச்சொன்றும் நின்று எரியும் சுடரும்
ஈண்டுனதருளே என்கின்றார் அதற்கு என்னே பொருள் ஐயா?
- திருலோக சீதாராம்
தமிழ் கவிதை உலகின் ஒரு அபூர்வக் கவிஆளுமை திருலோக சீதாராம். செளந்தர்ய ஒலி உலகில் வாழ்ந்து பாடித் திளைத்தவர். அந்த இசை தந்த நுண்ணுர்வின் வழியாகவே அவர் இலக்கியத்தை, மனிதர்களைப் பார்த்தார். அந்தப் பார்வை தமிழுக்கும் சில புதிய வண்ணங்களைச் சேர்த்தது.
ஒரு கவிஞராக, சிறு பத்திரிகையாளராக, இலக்கியக் கட்டுரையாளராக, தேர்ந்த மொழிபெயர்ப்பாளாராக, மேடைதோறும் பாடி உரை நிகழ்த்தும் பேச்சாளராக, பாரதி, பாரதிதாசன் கவிதைகளைப் பாடிப் பரப்பிய குயிலாகப் பறந்து திரிந்தவர் கவிஞர் திருலோக சீதாராம். அதே சமயம் அவர் ஒரு சம்பிரதாயமான இலக்கிய உரையாளரோ, கவியரங்கக் கவிஞரோ அல்ல. இலக்கியத்தின் ஒருவித நுட்பமான தன்மையைப் பாடல்களின் மூலம் அடையாளம் கண்டு கொண்டவர். அதன் வழியாகவே அவைகளுக்கான விளக்கத்தையும் மதிப்பீடுகளையும் முன் நிறுத்தியவர்.
திருச்சி மாவட்டம் பெரம்பலூருக்கு அருகிலுள்ள தொண்டைமான்துறை என்ற ஊரில் திருவையாறு லோகநாத ஐயருக்கும் மீனாட்சி சுந்தரம்மாளுக்கும் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று பிறந்தவர் சீதாராம் என்கிற கவிஞர் திருலோக சீதாராம். இவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர். மூன்று வயதிருக்கும்போதே தந்தையை இழந்து, மாமன் வீட்டில் தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். இவருக்கு லலிதா என்ற தங்கையும் பஞ்சாபகேசன் என்ற தம்பியும் இருந்தனர்.
1936 ல் தனது 19 ஆம் வயதில் 10 வயதான ராஜாமணியைத் திருமணம் செய்துகொண்டார் திருலோகம். இவர்களுக்கு மதுரம், வஸந்தா, இந்திரா என்ற 3 பெண் குழந்தைகளும் பசுபதி, சுப்பிரமணியன், முரளிதரன், ராமகிருஷ்ணன் என்ற 4 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருலோக சீதாராம் மறைவுக்குப்பின் முப்பத்து நான்கு ஆண்டுகள் வாழ்ந்த திருலோகத்தின் மனைவி ராஜாமணி அம்மாள் 2007 ஆம் வருடம் தன்னுடைய 81 வது வயதில் மறைந்தார்.
எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த சீதாராம், தனது 14ம் வயதில் புரோகிதராகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். பள்ளிப் படிப்பு சிறு வயதிலேயே நின்றாலும், தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்கும் ஆவல் அவரிடம் இருந்தது. அதனால், தொண்டைமான் துறையில் வசித்து வந்த பெரும்புலவர் அந்தகக்கவி ராமசாமி படையாச்சியிடம் முறையாகத் தமிழ் கற்றார். கண் தெரியாத அவர், கம்பராமாயணம், நல்லாப்பிள்ளை பாரதம் போன்ற தமிழ் இலக்கியங்களைக் கதா பிரசங்கங்கள் செய்பவர். அவர் பிரசங்கத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்காகத் தமிழ்ப் பாடல்களைத் திருலோகமே வாய்விட்டுப் படிப்பார். ஓரிரு முறை எதையும் படித்துவிட்டால் மனதில் பதிய வைத்துக்கொண்டு மீண்டும் அதை எப்போது கேட்டாலும் அட்சரம் பிசகாமல் திரும்பச் சொல்லும் அபாரமான நினைவாற்றல் இளம் வயதிலேயே திருலோகத்திடம் படிய இது ஒரு காரணமாக அமைந்தது.
மிக இளம் வயதிலேயே திருலோகத்துக்குக் கவிதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டதோடு அல்லாமல், பத்திரிகைத் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் அவரது 18 வது வயதிலேயே ‘இந்திய வாலிபன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். பிறகு விழுப்புரத்திற்கு அருகில் பரிக்கல் என்ற சிற்றூரில் ஸ்ரீராம சடகோபன் என்பவர் நடத்தி வந்த ‘தியாகி’ பத்திரிகையின் துணை ஆசிரியராகச் சில மாதங்கள் பணிபுரிந்தார். மந்தஹாசன் என்ற புனைபெயரில் எழுதத் துவங்கிய திருலோகம் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருலோக சீதாராம் என்ற பெயரிலேயே தன் எழுத்தைத் தொடர்ந்தார்.
கோவை விஞ்ஞானி ஜி.டி நாயுடுவோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் திருலோகம். ஜி.டி நாயுடு அழைப்பின் பேரில் கோவைக்குச் சென்று பல தடவை பேசியுள்ளார். அவரைப் பற்றி ’தொழில் மன்னர்’, ’அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு’ என்ற பெயரில் இரு புத்தகங்களை எழுதி வெளியிட்டார். திருலோகத்தின் கவிதை வாழ்வின் சிரமங்களை அறிந்து உனக்கு எதாவது செய்ய வேண்டும், என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்று ஒரு முறை சொல்லியுள்ளார் ஜி.டி. நாயுடு. திருச்சி சீதாலக்ஷ்மி பள்ளிப் பிள்ளைகளுக்குப் பயன் தரும் வகையில் ஒரு பேருந்து வேண்டுமென்று கேட்டு வாங்கி, அதைக் கல்லூரிப் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் திருலோகம்.
நவசித்தன் பாரதி என்ற நற்பொருளை நானே பயின்று கொண்டேன் என்று சொல்லிய திருலோகம், பாரதி பாடல்கள் பிரபலமாகாத அந்த நாட்களில் அவர் பாடல்களைப் பாடுவதிலும் அவரைப் பற்றிப் பேசுவதிலுமே தன் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டு அதில் உள்ளும் புறமும் தோய்ந்து நின்றார். பாரதியின் தேசியப் பாடல்களைப் பயின்றதன் விளைவால் அவருக்கு நாட்டுப்பற்று மேலும் அதிகமாயிற்று.
பாரதியை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரை முழுமையாக அறிந்திருந்தவர்கள் வெகு சிலரே. அவர் மறைந்த பிறகு அவரைப் பற்றியும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் தமிழ்ச் சூழலில் ஒரு கனத்த மெளனம் நிலவியது. அந்த மெளனத்தை அர்த்த புஷ்டியான உரையாடல்களாக சிலர் மாற்றினர். அவர்களுள் வ.ரா, பாரதிதாசன், திருலோக சீதாராம், ஜீவா ஆகியோர் முக்கியமானவர்கள்.
எழுத்தோடும் பேச்சோடும் மட்டும் நில்லாமல், தன் வளமான குரலால் பாரதி பாடல்களைப் பாடியும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தவர் திருலோகம்.
சமூக சீர்திருத்தம் சார்ந்த பாரதியின் பார்வையை வ.ரா முன் வைத்த காலத்தில், அதற்கு இணையாக பாரதியின் இன்னொரு அழகியல் தளத்தை அதன் இசைக் கூறுகளோடு வெளிக்கொண்டு வந்தவர் திருலோக சீதாராம்.
பாரதியின் பாடல்களோடு மட்டுமில்லாமல், பாரதியாரின் குடும்பத்தாரோடும் திருலோகத்துக்கு நெருங்கியஉறவு இருந்தது. பாரதியின் ஆன்மீகப் புத்திரன் என்று அவர் தன்னை அறிவித்துக் கொண்டார்.
பாரதியார் குடும்பத்தாரோடு திருலோகம் எவ்வளவு நெகிழ்ந்த அன்பும் உற்ற உறவும் கொண்டிருந்தாரோ, அது போலவேயான அன்பையும் நட்பையும் பாரதியின் சீடரான பாரதிதாசனோடும் கொண்டிருந்தார். 1944ல் திருச்சி வானொலி நிலையம் நடத்திய கவியரங்கில் பாரதிதாசன், ச.து.சு.யோகியார், ந.பிச்சமூர்த்தி ஆகியோரோடு திருலோகமும் பங்கேற்றுள்ளார்.
திருச்சியில் ஏற்பாடான பாரதிதாசனின் மணிவிழாக் குழுவில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் தலைமை ஏற்க, அதில் செயலாளராகப் பணியாற்றியவர் திருலோக சீதாராம்.
1951ல் ஒரு முறை பாரதிதசனை நேரில் சந்திக்கும்போது, தான் நடத்திய சிவாஜி இதழின் 17ம் ஆண்டு மலருக்காக சிவாஜி இதழை வாழ்த்திக் கவிதை ஒன்று தருமாறு கேட்டிருக்கிறார் திருலோகம். அந்தக் கவிதை இதுதான்.
“எழுத்தெல்லாம் புதிய நடை
எண்ணமெலாம் தன்னுடைமை எனவே
நாட்டின் பழுத்த பொதுத் தொண்டு செய்வான்
திருலோக சீத்தாராம் பரப்பும் ஏடு
வழுத்துமோர் சிவாஜியெனில்
வண்டமிழ் நாடறியும் அந்த மைந்தனுக்குத்
தழைத்ததுவாம் பதினேழாண்டு
என்று உரைத்தால் மகிழாத தமிழருண்டோ
இவனுயர்ந்தான் அவன் தாழ்ந்தான்
என்னும் இன வேற்றுமையோர் அணுவும் இல்லான்
எவன் பொதுவுக்கு இடர் சூழ்ந்தான் அவன் தாழ்ந்தான்
அஃதில்லான் உயர்ந்தான் என்று
நுவல்வதிலே திருலோகன் அஞ்சா நெஞ்சன்
தக்க நூற்கள் ஆய்ந்தோன்
அவனெழுதிடும் சிவாஜி வாரத்தாள்
வாழிய பல்லாண்டு நன்றே
பல்லேடும் கூடியொரு பழந்தமிழின் சீர்த்தியினை
மறைக்குமாயின்
வில்லோடும் அம்போடும்
வரும் பகையைத் தனி நின்று வீழ்த்துவான் போல்
சொல்லோடும் பொருள் சிறக்கத்
தூய் தமிழின் சீர் சிறக்க எழுதுகின்ற நல்லேடாம் சிவாஜிக்கு
நல்லாசான் திருலோகன் நாளும் வாழ்க!.”
காங்கிரஸ் தலைவரும், அன்றைய தமிழக முதலமைச்சருமான காமராஜர் அவர்களோடு திருலோக சீதாராம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். திருலோகம் கவிதைகளின் மீதும் சிவாஜி இலக்கிய இதழ் மீதும் கொண்டிருந்த பெரும் மதிப்பால், அவரை அரசவைக் கவிஞராக நியமிக்க எண்ணி அதைச் சிலரிடம் வெளிப்படுத்தியும் உள்ளார் காமராஜர். அதன் பொருட்டு திருலோகம் சென்னையில் இருப்பது நல்லதென அவருக்கு தெரிவிக்கப்பட, திருச்சியில் இருந்த தனது சிவாஜி பத்திரிகை அலுவலகத்தைச் சென்னை திருவல்லிக்கேணி நல்லதம்பி முதலித் தெருவுக்கு மாற்றிக் கொள்கிறார் திருலோக சீதாராம். ஆனால் பிற்பாடு அது சில அரசியல் காரணங்களால் நடக்க இயலாமல் போனது.
தன்னை முன்னிறுத்துவதைவிடவும் தன் முன்னோர்களை,
சக படைப்பாளிகளை, இளைஞர்களை முன்னிறுத்தும் தாய்மை மனம் கொண்ட திருலோகத்தின் வாழ்வு தமிழால் ஆனது. அவர் போன்ற பாரதிப் பித்தர்கள் பாரதியின் புகழ் பரவச் செய்த தொண்டு, பாரதியின் வரலாறு எழுதும் போதெல்லாம் நினைக்கப்படும்.
தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி ஏற்பட்ட காலகட்டம் கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வி, தி.ஜானகிராமன் போன்றவர்கள் வாழ்ந்த காலகட்டம். அந்தக் காலகட்டத்தில் அவர்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டு சிறுபத்திரிக்கை மூலமாகவும் இசை வழியாகவும் தன் வழியில் இலக்கிய சலனங்களை ஏற்படுத்தியவர் திருலோக சீதாராம்.
தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு பயணம் செய்து இலக்கிய உரையாற்றியும் பாடியும் வந்த திருலோகம் டெல்லி மேற்கு வங்கம் போன்ற இந்தியாவின் சில மாநிலங்களுக்கும் இலங்கைக்கும் சென்று உரையாற்றி இருக்கிறார். எந்த சபையில் அவர் பேசினாலும் மற்றவர்கள் பேச்சு பெரும்பாலும் எடுபடாது. அப்படி பாடலோடு பேசுவதில் வல்லவர் திருலோகம்.
மாற்று கருத்து கொண்டோரிடமும் அவர் எப்படி பழகியிருக்கிறார் என்பதற்கு அவர் வாழ்க்கை ஒரு உதாரணம். மனு தர்ம சாஸ்த்திரத்தை மொழி பெயர்த்த அவர் தான் நடத்திய எழுத்தாளர் சங்கத்தில் பேச பெரியாரை அழைக்கிறார். தான் நடத்திய சிவாஜி இதழில் பெரியார் புகைப்படங்களை வெளியிட்டு அவர் பற்றி எழுதுகிறார். காமராஜரோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்த அவர் அண்ணாவோடும் பழகியிருக்கிறார். அண்ணா திராவிட நாட்டில் கவிதைகள் எழுதுங்கள் என்று இவரிடம் கேட்கிறார். எதிர் துருவ நிலைப்பாடு கொண்டிருக்கும் பலரிடமும் ஒரு கலைஞனாக கவிஞனாக எளிமையாக பழகி உள்ளார் என்று இன்றைய சூழலி நினைத்துப் பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது. பாரதியை பயின்ற பலரும் பாரதி தாசனோடு அவ்வளவு நட்பு பாராட்டியதில்லை.
கவிதைகளைப் பாடுதல் நம் பழந்தமிழ் மரபு. சங்கம் முதல் பாரதிதாசன் வரை கவிதைகளைப் பாடல்களாகப் பாடிய மரபு கொண்டவர்கள் நாம். அந்தச் சங்க பாணர்களின் நீட்சி போல இயங்கி வந்தவர் திருலோக சீதாராம். தனித்த தத்துவப்பார்வை கொண்ட தன் கவிதைகளால் அதைப் பாடும் விதத்தால் புதியதொரு செளந்தர்ய ஒலி உலகை சிருஷ்டித்தவர் திருலோக சீதாராம்.
1973இல் கடைசியாக திருலோகம் சென்னை வந்த பொழுது, அவர் சென்னை உட்லண்ட்ஸ் விடுதியில் தங்கியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அங்கேயே வந்து பார்த்திருக்கிறார் ஜெயகாந்தன். உடல் நலம் சரியில்லை, இரண்டு நாட்கள் திருவல்லிக்கேணியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதற்குமுன் ஒருநாள் உங்களுடன் இருக்க வேண்டும், முடியுமா என்று ஜெயகாந்தனிடம் கேட்டுள்ளார் திருலோகம். “உங்களோட இருக்கிறதவிட வேற எந்த பெரிய வேலையும் எனக்கில்ல. இந்த தடவை மெட்ராஸ்ல நீங்க இருக்குற வரை நான் தான் உங்களுக்கு சாரதி” என்று சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி, அன்று திருலோகம் எங்கெல்லாம் செல்ல வேண்டுமோ, அங்கெல்லாம் அவரே தன் காரில் அழைத்துச் சென்றுள்ளார். திருலோகம் யாரையேனும் சந்திக்கச் சென்றால், காரில் அமர்ந்தபடியே அவர் வரும் வரை காத்திருந்திருக்கிறார் ஜெயகாந்தன். அதைக் கண்டு ”ஒரு டிரைவர் மாதிரி ஏன் இப்படி காத்திருக்கிங்க, நீங்க போங்க, நான் பார்த்துகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் திருலோகம். “எனக்கு எந்த சங்கடமும் இல்லை. உங்களுக்கு இந்தப் பணிவிடையை எந்த டிரைவர் வேண்னாலும் செய்யலாம். என் வாழ்கைல நான் இப்படி உங்களுக்கு சேவை செய்யற வாய்ப்பு எனக்கு அமையாதில்லையா?” என்று சொல்லியிருக்கிறார் ஜெயகாந்தன்.
இப்படி திருலோகம் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் ஆச்சர்யமான அனுபவங்களாக உணர்வின் கணங்களாக சில சமயம் நம்ப முடியாததாக விரிந்து செல்கிறது. அவை வெறும் நிகழ்வுகளோ சம்பவங்களோ அல்ல. நிகழ்காலத் தலைமுறைக்கான படிப்பினைகள்.
தனது பதினெட்டாம் வயது துவங்கி தன் காலம் முடியும் வரையிலும் சிறுபத்திரிக்கை ஆசிரியாகவே வாழ்ந்த திருலோக சீதாராம் 1973ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23ம் தேதியன்று (23.8.1973) தனது ஐம்பத்தி ஆறாம் வயதில் மறைந்தார். அவர் மறைவுக்குப் பின் ஜெயகாந்தன் பேசிய இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை.
”திருலோக சீதாராம் என்பவர் சதா இங்கே திரிந்து கொண்டிருக்கும் சித்த புருஷர்களில் ஒருவர். அவர் நமக்குத் தோற்றம் காட்டியதும் நம்மிடம் துலங்கியதும் ஒரு அருள். அவர்கள் எங்கேயும் போவதில்லை. தோன்றியது யாவும் மறையும் – சூரியன் தோன்றி மறைவது போல. ஆனால் தோன்றியது யாவும் மறையும் என்றால் என்ன பொருள்? மறைந்தது யாவும் தோன்றும் என்பதுதான். எனவே இந்தப் பொருள் சுழற்சியில் சிக்குண்ட மஹா பாக்யவான்கள் நாம். அவர்களைக் கண்டு கொண்டோம்; அவர்களுடைய சொற்களைக் கேட்டோம்; அவர்களைச் சுமந்தோம். அந்தச் சொற்களையும் கருத்துகளையும் இன்னும் சுமந்துகொண்டு சுவாசித்து வாழ்கிறோம்; வாழ்வோம். இதிலேயிருந்து நமது சந்ததிகள் சுடரோடு பொலிவர்”.
ரவிசுப்ரமணியம்
(கட்டுரையாளர்,கவிஞர், "திருலோகம் என்றொரு கவிஆளுமை" ஆவணப்பட இயக்குநர்)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருலோக சீதாராம்: தேவசபையின் அகங்காரம்மிக்க அதிகாரி.
''''
ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளமுடியும்.
அதிகமாக அதிகமாக-அதைப்பகிரப்பகிர
அதிகமான பிரகாசமும் சாரமும்கொண்டு
பேரானந்தத்தை வாரிவாரி வழங்கும்.
வாழ்வின் பயனே பகிர்தல்தான்.இது ஓர்
அநுபூதி.திருவையாறு லோகநாத ஐயர்
சீதாராம் என்ற திருலோக சீதாராம் இந்த
மாதிரியான பகிர்தலின் சுகத்தை உணர்
ந்து அனைவருக்கும்வாரி வழங்கினார்.
பாவேந்தருக்குத் திருச்சியில் மணிவிழா.
கி.ஆ.பெ விசுவநாதம் ஏதோகாரணத்
தால் பொறுப்பிலிருந்து விலக, விழாக்
குழுவிலிருந்த திருலோகமும் விலகிவி
ட்டார்.விழா நடக்க வில்லை.திருலோகம்
மட்டும் அச்சமின்றி பாவேந்தரைப் பார்க்
கச் சென்றார்.கண்கள் சிவக்க இவரை
விரட்ட- வெளியேறும்போது "உங்களை
எனக்குத் தெரியாது.உங்கள் கவிதைக
ளைத்தான் தெரியும். 'நீங்கள் என்னை
அகற்றினாலும் உங்கள் கவிதைகள்
என்னிடமிருக்கும்.அவை மிகமதிப்புடை
யவை' என்றவுடன் சடாரென எழுந்த பார
திதாசன் திருலோகத்தைக் கட்டித் தழுவி
க்கொண்டு"நீ மறத்தமிழனய்யா' எனப்
பாராட்டினாராம்.பாரதியைப்பற்றி நெடுக
அறிவிப்பதையே லட்சியமாகக் கொண்
டிருந்தார்.அதையே வாழ்நாள் பணியாகா
கிக் கொண்டார்.பாரதியைக் காணாமல்
செய்ய பிரயத்தனப்பட்டதை முறியடித்த
வர்களில் முக்கியமானவர்கள்
வ.ரா,பாரதிதாசன்,திருலோக சீதாராம்
என்ற மூவருமே.
கு.ப.ரா ,ந.பிச்சமூர்த்தி,சிட்டி,சாலிவாகன
ன்,கு.அழகிரிசாமி, ரெட்டியார் என்று
தெலுங்கைத் தம் தாய்மொழியாகக் கொ
ண்ட பட்டாளத்தில் திருலோகம் என்ற
தெலுங்கரும் உண்டு.திருவையாறு- தில்
லைஸ்தானத்தில் தேவசபை என்ற அமை
ப்பு இலக்கியத்தை அமர்க்களமாகவும்
முக்கியமானதாகவும் கொண்டாடியது.
தேவ சபை: நேற்று இறந்து போனவர்க
ள் இன்று தேவர்கள்தாமே என்ற சீதாரா
மின் விளக்கம் சுவையானது.சிதம்பரநா
தமுதலியாரின் 'வட்டத்தொட்டி' மாதிரி
தான் தேவசபை.தம் பெயருக்கு முன்னா
ல் "அம்ருத "என்று போட்டுக் கொண்ட
னர்.தஞ்சாவூர் ஸ்வாமிநாத ஆத்ரேய,
தி.வே.கோபாலையர்,அசோகா செட்டியார்
கரிச்சான் குஞ்சு,கே.ஜி.சேஷாத்ரி,எம்எஸ்
நாடார் நீ.கந்தசாமிப்பிள்ளை போன்ற
ஜாம்பவான்கள் நிறைந்த சபை. முதல்
நாள் அசுரசபை மறுநாள்தேவசபை. 'நான்மட்டுமே பேச
வேண்டும்,எந்தக் கேள்வியும் கூடாது.
நடுவில் குறுக்கிக் கூடாது.முடிந்த பின்
அவரவர் இடத்திற்குத் திருப்பிவிட
வேண்டும்.கேள்விகள் இருப்பின் அடுத்த
டுத்த சபையில் கேட்கலாம்' எனக் கடு
மைகாட்டுவாராம்.அப்போது தி.ந.இரா
மச்சந்திரன் வாலிபர். குறிப்பெடுப்பது
அவர் வேலை.திருலோகம் மிகுந்த அகங்
காரத்தோடு பேசுகிறார் எனப் புகார்
வரும்.எல்லோரையும் ஆட்டிப்படைப்பது
அகங்காரம்தான்.எல்லோருடைய அகச்
காரங்களையும் என்னிடம்தாருங்கள்
அவற்றை நானே ஏற்கிறேன் என்பாராம்.
அந்த இலக்கிய விஷயங்கள் பின்னர்
சிவாஜி இதழில் வெளியிடப்படும்.
பொருளின்மை,வசதிகளின்மை திரு
லோகத்தை ஒருபோதும் சலிப்படைய
வைத்ததில்லை.திருலோகத்தின் வாழ்
க்கையில் பெரிய சாகசங்கள் இல்லை.
மௌனத்தையும் அமைதியையும் தக்க
வைத்துக் கொண்டிருந்தால் அதுவே
சாகசம்.பாரதிபற்றிப் பேசினால் முகம்
தனிச்சோபையாகிவிடும்.ஆனந்தநடனம்
அபிநயம்,ஆக்ரோஷம் கலந்த கலவை
யாக மாறிவிடுவார்."ஆடை குலைந்து
நின்றாள் அவள் ஆவென்று துடிக்கிறாள்
வெறும் மாடுநிகர்த்த துச்சாதனன் அவள்
மைக்குழல் பற்றி இழுக்கின்றான்'என்று
பாடும்போது திருலோகம் ருத்ரதாண்டவ
மாடுவார்.
திருலோகசீதாராம் வறுமையை எதிர்
கொண்ட விதம் அலாதியானது.தஞ்சா
வூரில் ஓர் எழுத்தாள நண்பர் வீட்டிற்கு
அகால வேளையில் செல்வாராம்.என்ன
இருக்கு என்று தயக்கமின்றிக் கேட்டு
விடுவார்.கொஞ்சம் சாதம் இருக்கு அதை
யும் தண்ணீர் விட்டுவைத்தாகிவிட்டது
குடமிளகாய் இருக்கு என்னும்போது
அதை ஆஹா என்று மகிழ்ச்சியோடு
சாப்பிடுவாராம்.சிலர் வீட்டிற்குச் செல்லும்
போது 'சாப்டறீங்களா' என்று கேட்டுவிட்
டால் 'அதற்காகத்தானே வந்திருக்கேன்'
என்பாராம்
கலாமோகினி,மணிக்கொடி இதழ்களோ
டு தொடர்பு ஏற்பட்டபிறகு ஒரு விஷயத்
தைப்புரிந்து கொண்டதாகச் சொல்கிறார்
"எல்லார்க்கும் நன்றாம் பணிதல்" நேரில்
பாடிக்காட்டுவதிலும் கேட்பதிலும் கவியி
ன்பம் முழுமை பெறுகிறது.பாரதியின்
பாடல்களை முறையோடுபாடவேண்டும்
என்று வலியுறுத்தினார்.பாரதியின் சொ
ற்கள் திருலோகத்திற்கு மந்திரச் சொற்
கள்.
திருலோகத்தின் படைப்புகள் சொற்பமே.
பேச்சுபேச்சு. பேச்சு. பாரதியைப்பற்றிய
பேச்சு.ஹெர்மான் ஹெஸ்ஸேஎன்பவரின்
படைப்புகளை பேரிலக்கியம் என்றார்.
ஜெர்மானிய பிரம்ம ரிஷி என்றார்.
அவருடைய' சித்தார்த்தன்' என்ற படை
ப்பை அழியாப்பேரிலக்கியம் என்றார்.
அற்புதமாகத்தமிழில்மொழிபெயர்த்தார்.
ஹெஸ்ஸே அவர்களை முனிவர் என்றார்.
ஹெஸ்ஸே மறைந்தபோது துக்கம் கொண்டா
டினார்.தீட்டு அனுஷ்டிக்க முடியலையே
என்று வருத்தமும்பட்டார்.தலை மூழ்கி
விட்டே வீட்டிற்குள் வந்தார்.
கந்தர்வகானம்,புதுத் தமிழ் கவிமலர்கள்,
இலக்கிய படகு,புதுயுகக் கவிஞர்,ஜி.டி
நாயுடுவின் வாழ்க்கை வரலாறு முதலிய
படைப்புகள் அபாரமானவை.பாரதியின்
ஆவேசம் கொண்ட ஜீவன் முக்தர் என்பர்.
'மச்சு வீடுதான்/மாடியில் கூரை/இல்லை
யெனினும் இருள் வான் உண்டே 'என்பது
திருலோகம். " சருகுகளைச் சேகரிப்பதி
லேயே என் காலம் கழிந்துவிட்டது. எனினும்
அவற்றின் அக்னி ஜ்வாலையில் குளிர்
காய முடியாமல் போனது" என்றதும் நம்
திருலோக சீதாராம் தான்.
"""
நா.விச்வநாதன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றே சிறுவாணியில் சேருங்கள்....தாமதமாக ஆக அந்தந்த மாத பொக்கிஷத்தை இழக்கிறீர்கள்
சிறுவாணியின் நால்வர்
கல்லும் மண்ணும்:/
/ வானம்அன்று நீலமாகவே இருந்தது..அதில் உயிர் இல்லை. நோயில் படுத்துவிட்ட தாயைப்பார்க்கும் குழந்தை போல வெறித்தபார்வையோடு நிலம் வானத்தைப்பார்த்தபடிஉள்ளது/
/க.ரத்னம்
எண்ணும் எழுத்தும்:
/முதல் திவ்ய தேசம் திருவரங்கம் அன்று.நம்சிறுவரங்கமான நம்உடம்பேமுதல்திவ்யதேசம்/
/மதுஸ்ரீதரன்
இலக்கியப்படகு:
/மேல்நாட்டாரைப்பார்த்து அவர்களைப்போல்எல்லாத்துறைகளிலும் பாவனை செய்யும்நம்மவர் பேச்சாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதையும் கற்றுக்கொள்ளவேண்டும்/
் திருலோக சீதாராம்
பலநேரங்களில்பலமனிதர்கள்..
./மரணோபராந்த் ( மரணத்துக்குப்பிறகான) விருது கொடுக்கமுன்வந்தால்அவர.குடும்பத்தினர் நிராகரிக்கவேண்டும்..அப்போதுதான் சுஜாதா ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கும்/
் பாரதி மணி
Saptharishi lasara
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------