Tuesday, March 5, 2019

சிறுவாணி வாசகர் மையம்பற்றி......1





தி இந்து தமிழ் (06.01.18)

வீடு தேடி வரும் இலக்கிய நூல்கள்

அசத்தும் சிறுவாணி வாசகர் மையம்

இலக்கியத்தின் இயங்குவிசை நல் வாசிப்புதான். இதை உணர்ந்ததாலோ என்னவோ, நல்ல இலக்கிய நூல்களைத் தேடிப்பிடித்து, வாசகர்களின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கின்றனர் கோவை 'சிறுவாணி வாசகர் மைய'த்தினர்.

1960-களில் தீரர் சத்தியமூர்த்தியின் மகள் திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி  "வாசகர் வட்டம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்தியுள்ளார். இதன் தாக்கத்தால் கோவையை மையமாகக் கொண்டு 'சிறுவாணி வாசகர் மைய'த்தை நடத்திவருகிறார்,இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஜி.ஆர்.பிரகாஷ்(42).

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக  இலக்கியம் சார்ந்த வாசிப்பில் மனதைப் பறிகொடுத்த இவர், 2015-ல் நண்பர்கள் உதவியுடன் 'பவித்ரா பதிப்பக'த்தைத் தொடங்கியுள்ளார். இவர்கள்  எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் கட்டுரைத் தொகுப்பான 'அஃகம் சுருக்கேல்' என்ற நூலின் மாணவர் பதிப்பைப் பிரசுரித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆயிரக்கணக்கான பிரதிகளை இலவசமாக வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளிலும், நண்பர்கள் உதவியுடன் இந்தப் புத்தகத்தை இலவசமாக வழங்கியுள்ளனர்.

நல்ல நூல்களைத் தேடிப்பிடித்து, வாசகர்களின் வீடுகளுக்கே அனுப்பும் முயற்சியைத் தொடங்கியது குறித்து விவரிக்கிறார் ஜி.ஆர்.பிரகாஷ்:

"நல்ல இலக்கிய நூல்களைத் தேர்ந்து, அவற்றை  வாசகர்களின் வீடுகளுக்கே அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தலாமே என எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஆலோசனை வழங்கினார். மேலும், நாங்கள் சந்தித்த பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியவில்லை என வேதனையுடன் கூறினர். எனவே, தரமான நூல்களை வாசகர்களுக்கு கொண்டுசேர்த்து இலக்கியஆர்வத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டோம்.

அதன்விளைவுதான், 'சிறுவாணி வாசகர் மையம்'. 2017 ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தக தினத்தில், கோவையின் அடையாளமான 'சிறுவாணி' பெயரில் வாசகர் மையத்தை தொடங்கினோம். சுவை மிகுந்த சிறுவாணி நீர்போல, சுவையான இலக்கிய நூல்கள் மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதே இதன் பிரதான நோக்கம்.

முதல் நூலாக நாஞ்சில்நாடனின் 'நவம்' என்ற எண்கள் சார்ந்த கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டோம். அதேசமயம், வாசகர் மையத்தில் உறுப்பினர்களையும் சேர்க்கத் தொடங்கினோம். கோவை, திருப்பூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வாசகர் மையத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மூலமும் வாசகர் மையத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கிறோம்.

சிறுவாணி வாசகர் மையத்தின் உறுப்பினர் கட்டணம் ரூ.1,600 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2000 /-
"மாதம் ஒரு நூல்" என அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்பிவைக்கிறோம்.

வாசகர் மையத்தின் தலைவராக காந்தியவாதி டி.டி.திருமலையின் மகளும், எழுத்தாளருமான தி.சுபாஷிணி, ஆலோசகர்களாக திரு.நாஞ்சில்நாடன், சொல்வனம் இணைய இதழ் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த வ.ஸ்ரீநிவாசன், கோவை ராக் அமைப்பு ரவீந்திரன்ஆகியோர் உள்ளனர்.

புத்தக வாசிப்பு மக்களின் சுவாசமாக மாற வேண்டும். நூல்களை தேடித்தேடி வாசித்தால்தான், வாசகரின் ஞானம் வளர்ந்து, மொழி மிளிர்ந்து, ரசனை ஒளியாய்ப் பரிணமிக்கும். நூல்களை வெளியிட்டு, வாசகர்களுக்கு அனுப்புவதில் எங்களுக்கு பொருளாதாரச் சுமை இருந்தாலும், சில நண்பர்களின் உதவியுடன் சமாளிக்கிறோம்.

இந்த வாசிப்பு இயக்கம் தொடர் இயக்கமாய் மாற வேண்டுமென்பதே எங்களின் குறிக்கோள். தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு, புத்தக வாசிப்பால் மனித மனங்களைப் பண்படுத்தும் எங்கள் முயற்சி தொடரும்".

    சிறுவாணி வாசகர் மையம் தொடர்புக்கு : 94881 85920 / 99409 85920 மின்னஞ்சல் :Siruvanivasagar@gmail.com

நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்து, அவசரகதியாய் வாழ்க்கையை நகர்த்தும்போது ஏற்படும் மூச்சுத் திணறலைப் போக்கும் ஆற்றல் வாசிப்புக்கு உண்டு. குறிப்பாக, நல்ல நூல்களை வாசிக்கும்போது, நமது சிந்தனையும், எண்ணங்களும் பொலிவுபெறுகின்றன. வாசிப்பு குறைந்து வருகிறது என்ற பரவலான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில், வாசகர்களின் வீடுகளுக்கே நல்ல நூல்களை அனுப்பி, அவற்றைப் படிக்கச் செய்யும் 'சிறுவாணி வாசகர் மைய"த்தைப் போல, இன்னும் பல அமைப்புகள் புத்தக வாசிப்புக்கு பங்களிப்பு செய்ய வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
*********
சிறுவாணி வாசகர் மையத்தில் உறுப்பினராக ,கட்டணம் செலுத்த , புதுப்பிக்க காசோலை/வரைவோலை/மணி ஆர்டர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். :

2019 ஏப்ரல்- 2020 மார்ச் கான ஆண்டுக் கட்டணம் ரூ 1600 /- ,
பிற மாநிலங்களுக்கு
ரூ 2000/-

சிறுவாணி வாசகர் மையம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, கே. கே. புதூர், கோவை - 641038
****
NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப

Syndicate Bank, Avinashi Road Branch, Coimbatore - 641018,
Current A/c no. 61211010003590
IFSC :   SYNB0006121  Beneficiary : Siruvani Vasagar Maiyam.
*****
நேரடியாகக்  கணக்கில் கட்டினால் தகவல் மற்றும் தங்கள் முகவரியை 9488185920,
9940985920 என்கிற தொலைபேசி  எண்ணுக்கோ/siruvanivasagar@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு ஈமெயில் மூலமோ தெரிவிக்கவும்.
நன்றி🙏



No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....