Saturday, June 15, 2019

ஜூலை 2019 திசையறியாப் புள்- ரமேஷ் கல்யாண்

ஜூலை 2019 வெளியீடு



"திசையறியாப் புள்"

ரமேஷ் கல்யாண்  (சிறுகதைகள்)
பக்கங்கள் 146   விலை 140/-



ISBN 978-81-940988-9-8
---------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களுக்கு காலை வணக்கம்.

நான் சற்று மகிழ்வாக உணர்வதால் அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த பதிவு.

எனது முதல் சிறுகதை தொகுப்பு 'திசையறியாப் புள்' சிறுவாணி வாசகர் மைய வெளியீடாக அதிகாரபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது என்பதே அந்த செய்தி. முன்பே பல இதழ்களில் வெளியானவற்றின் தொகுப்பே இது என்றாலும் 'என்னமோ' நிறைவாக தோன்றுகிறது. 

காரணம் யோசித்துப்பார்த்தால் சிறுவாணி என்ற அமைப்பின் மூலமாக நான் வெளிப்பட்டிருப்பது என்று கருதுவேன்.  வணிக நோக்கமின்றி இலக்கியச்செயல்பாட்டின் மீது பிரியப்பட்டவர்களின் குவிகம் அது என்பதே அது. நான் எழுதியவற்றை பொருட்படுத்தி அதை தொகுப்பாக தரம் உயர்த்தியது இந்த குவிகத்தின் கைகள்தான். Siruvani Vasagarmaiyam Prakash GR Subashini Tirumalai - எனது மனதார்ந்த நன்றிக்குரியவர்கள். 

எனது இலக்கிய ஆர்வம் துரு ஏறிப்போகாமல் என்னை உசுப்பிவிட்டுக்கொண்டே இருந்த லாசரா கண்ணன் Saptharishi Lasara இந்த தொகுப்புக்கு முன்னுரை எழுதியதில் எனக்குண்டான பெருமையை, அவரோடு ரெகுலராக தொடர்பில் இருக்கும் நட்பின் சாதாரணத்தினால் குறைத்துவிட முடியாது. அந்த மனிதனுக்கு உடம்பு பூரா மனசு. அதை அவரை அறிந்தவர்கள் அறிவர்.

 தவிர என்னை தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் ஊக்குவித்த நண்பர்கள் பட்டியல் நீண்டது. எனது முன்னுரையில் நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறேன். அனைவருக்கும் இந்த சமயத்தை எனது நன்றியை தெரிவிக்க பயன்படுத்திக்கொள்கிறேன். 

அமுதசுரபி, தினமணி, கணையாழி, தளம், இருவாட்சி, நாடகவெளி  வார்த்தை  கீற்று, சொல்வனம், ஆம்னிபஸ் - நெய்வேலி புத்தக கண்காட்சி அமைப்பு, விந்தன் அறக்கட்டளை, காரைக்குடி புத்தக திருவிழா அமைப்பு , ராஜம் அறக்கட்டளை, எம்விவி-அவ்ராம்  அறக்கட்டளை, கோவை சரசு அறக்கட்டளை - என் நன்றிக்குரியன.

அட்டைப்பட ஓவியம் JeevaNanthan கைகளால் ! டேய் ரமேஷ் உனக்கு அதிஷ்டம்தாண்டா ...... 

இந்த தொகுப்பை வெளியிடும் இந்த நிமிடத்தில் எனது எழுத்தின் போதாமையை உணர்ந்தவண்ணமே இந்த பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நான் தொடுவிரும்பும் இலக்கியப்புள்ளி இந்த தொகுப்புக்கு மிக மேலே இருக்கிறது. ஆனால் அதை நோக்கிய பயணத்துக்கு இந்த தொகுப்பை ஒரு இனிய சமாதானமாகவே கொள்வேன்.

ஒரு ஞாயிறு காலையில் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது. " ரொம்ப யோசிக்காதீங்க ..ஒரு தொகுப்பு கொண்டுவந்தால்தான் அது அதை விட நல்ல தொகுப்பை உண்டாக்கும் நம்பிக்கையை  உண்டாகும்" என்று சொன்னார் பா வெங்கடேசன். 
அது நிஜம்தான் போலிருக்கிறது!

நன்றி நண்பர்களே !
ரமேஷ்  கல்யாண
-------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்த்துகள் இதை நீங்கள் முன்பே செய்திருந்தால் இந்நேரம் தங்களின் பல புத்தகங்கள் வெளிவந்திருக்கும்...(எண்ணிக்கை மட்டுமல்லாமல் தரமான சிறுகதைகளும் தமிழ் கூறு நல்லுலகைச் சென்றடைந்திருக்கும்). இருப்பினும், மோதிரக் கையால் `குட்டு/ஆசிர்வாதம்’ - சிறுவாணி, லாசாரா சப்தரிஷி, ஓவியர் ஜீவா - வாங்கியிருக்கிறீர்கள்... அடுத்த தொகுதி கொண்டுவர தயாராகவும்.

வெளிமாநிலத்தான் என்பதால் இன்னும் என் கைக்கு சிறுவாணி வெளியிட்டிருக்கும் ஜூன், ஜூலை புத்தகங்கள் வரவில்லை...வந்தவுடன் படித்துவிட்டு, கருத்தைப் பதிவிடுகிறேன்... பயணம் தொடரட்டும்... பாராட்டுக்கள்!!
Sidharthan sundaram
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அண்மையில் சிறுவாணி வாசகர் மையம் அனுப்பிய ரமேஷ்  கல்யாணின்"திசையறியாப் புள்"தொகுப்பின் முதல் கதை ஒரு முத்தான கதை.இதுவரை யாரும் தொடாத தளம். கிளிஜோசியக்காரரின் கூண்டில் உள்ள கிளிதான்கதையைச்சொல்கிறது. அது அடைபட்டிருக்கும் சதுர இடத்தை அருமையாக வர்ணிக்கிறது. "சதுரத்தின் மூலைகளில் திரும்பும் போதெல்லாம் என் வால் இடித்துக் கொள்வது எனக்கு மிகக் குடைச்சலாக இருக்கிறது"என் யதார்த்தமாக க் கூறுகிறது. .

உரிமையாளர் சாமிக்கண்ணுவின் மகன் ரங்காவை அதற்கு மிகவும் பிடிக்கும்.அவன் அதற்கு அவ்வப்போது மா,கொய்யா,இலந்தை போடுவான். எல்லார்க்கும் எப்படியும் உதவும் பரோபகாரி அவன்.
ஒருநாள் ஒரு வெடிவிபத்து நேர்ந்தது.அதிலிருந்து இரண்டு பசங்களைக் காப்பாற்றி ஒரு கிழவியைக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இறந்து போகிறான். உரிமையாளர் மனம் வெறுத்த நிலைக்கு ஆளாகி விடுகிறார். 

எல்லார் எதிர்காலத்தின் மீதும் பூச்சொரியும் முதலாளி என்ன பாவம் செய்தார்எனக் கிளியும் வருந்துகிறது. கடைசியில் உரிமையாளர் கூண்டைத் திறந்து விடுகிறார்.'எனக்கு எஜமானரையும் ரங்காவையும் தவிர யாரையும் தெரியாது.பறக்கவும்முடியவில்லை.தெரியவில்லை.அர்த்தமெதுவமற்று செய்வதறியாது"க்கீ,க்கீ"என்று கத்திக்கொண்டிருக்கிறேன் நான்"என்று கிளி கூறுவதுடன் கதை முடிகிறது.

விடுதலை கிடைத்தும் அனுபவிக்க முடியாத மனநிலையில் வாடும் கிளி நம் மனத்தைக் கனக்க வைக்கிறது.
Valava duraiyan
-------------------------------------------------------------------------------------------------------------
இதை விட அதிகம் நெகிழ வைக்கும் கதை `ந்யூரான் கொலைகள்’.. ஒரு கதையை மிஞ்சி அடுத்த கதை... அருமையான சிறுகதைகள் தொகுப்பு... சிறுவாணிக்கும், ரமேஷுக்கும் பாராட்டுக்கள்... ரமேஷின் அடுத்த தொகுப்பு எப்போது...?!
Sidharthan sundaram
--------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையம் அனுப்பி உள்ள ரமேஷ் கல்யாணின் திசையறியாப் புள் தொகுப்பின் இரண்டாம் சிறுகதை 'போன்சாய் மனங்கள். போன்சாய் என்பது தன் விருப்பப்படி வளரவிடாமல் தடுக்கும் முறையாகும்.கதையில் மோகன் மற்றும் மாலினி ஆகியோர் கணவன் மனைவியாக வலம் வருகின்றனர்.மாலினியை தூரத்துச் சொந்தமென்று மனைவியாக்கியபோது சொந்தங்களே தூரமானது என்ற வரி பல பக்கங்கள் எழுதச் சமமானது.

மாலினிக்கும் மாமனார் மாமியாருக்கும் விழும் இடைவெளியை நிரப்ப மோகனால் முடியவில்லை.மோகன் அவன் கனவுகளை,ஏக்கங்களை,ஆசைகளைவெட்டிப் பிரச்சனைகளைத்தள்ளிப்போட போன்சாயாகிறான்ஆறேழு மாதம் வெளிநாடு சென்று திரும்பும் மோகனுக்குப் பெற்றோர் காணாமல் போயிருப்பது தெரியவருகிறது.இந்த இடத்திலும் மோகன் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் லேசாக அதை எடுத்துக்கொள்வது அவனை முழுபோன்சாயாகக் காட்டுகிறது. 

கணவன் மனைவி இருவரும் பணிக்குப் போவதால் வீட்டில் சமையல் வேலைக்கு ஒரு பெண்மணியை வரச்சொல்கிறார்கள்.அவர் வரும்போது இருவரும் வீட்டில் இல்லை.வந்த பெண்மணி அந்த ஒரு நாள் மட்டும் சமைத்து வைத்துவிட்டு மறுநாளிலிருந்து வரமாட்டேன் என்று சொல்லி விட்டு ப் போய்விடுகிறார்.வந்த பெண்மணி,"பொங்கல் சாப்பிடும்போது எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டா நல்லாயிருக்கும்"னு சொன்னாங்க என்று வேலைக்காரி கூறும் போது"வந்தது அம்மாவோ"என்று நினைத்து மோகன் உடனே பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டு விசும்பும் சத்தம் வெளியே கேட்காதபடி குலுங்கிக் குலுங்கி அழுதான் என்று கதை முடிகிறது. 

வெளியே தெரியும்படிஅழககூட முடியாத அந்த போன்சாய் இல்லறத்தில் சச்சரவு வேண்டாம் எனத் தன்னையே  வெட்டிக்கொள்வது பரிதாபமாக இருந்தது.

Valava duraiyan
------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையம் அனுப்பியுள்ள "திசையறியாப்புள்"
தொகுப்பின் மூன்றாவது கதை
"விருந்தினர்கள்".இது இக்காலத்தில் நிகழும் நாகரிக,பண்பாட்டு மாற்றங்களைச் சுட்டிக்காட்டிக்கேள்வி கேட்கிறது.தலைமுறை இடைவெளியும் இககதையில் லேசாக மறைமுகமாகச் சொல்லப் படுகிறது.

ஒருநாள் தன் வீட்டிற்குத் தன் நண்பர்களான இரு பெண்களையும் ஒரு இளைஞரையும் குணசேகர் அழைத்து வருகிறான்.இரண்டு பெண்களில் ஒருத்தி கணவனின் தம்பியோடு தொடர்பு வைத்திருப்பவள்.மற்றொருத்தி கணவனிடம் விவாகரத்து வாங்கிக்கொண்டு வாங்க உதவி செய்த வக்கீலுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள்.இளஞனோ அண்ணனுக்குத் தவறான உறவில் பிறந்த குழந்தைக்கு உதவுபவன்.

 விருந்தினர் போனபின் குணா இச்செய்திகளை வீட்டில் சொல்ல,"ஃப்ரண்ட்ஸ் அப்படீன்னு இதுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வரே. அவங்க டிரஸ்ஸும் அவர்களும்"என்று அத்தை பொரிந்து தள்ளுகிறார். குணா பதிலுக்கு "நான் இன்னிக்கு ஒரு நாள்தான் அழைச்சிட்டு வந்தேன்.ஆனா இந்த மாதிரி ஆளுங்களை தினமும் நீங்க அழைச்சிட்டு வர்றீங்க"என்று தொலைக்காட்சி ரிமோட்டைத் தொலைக்காட்சித்தொடரைக்  காட்டுகிறான்.

வீட்டின் உள்ளே வந்து எல்லா அந்தரங்கங்களையும் அலசும் நிகழ்ச்சிகளுக்கும் அவற்றைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இக்கதை கன்னத்தில் அறைவது போல இருக்கிறது.கடைசியில் தன் நண்பர்களான அவர்கள் நல்லவர்கள். "நான் சொன்னதுல துளியும் நிஜமில்லை"என்கிறான் குணா. 

சிறிது தவறினாலும் பிரச்சாரம் ஆகக்கூடிய கதையை ரமேஷ் கல்யாண் வாசிக்கக் களைப்பின்றி நேர்த்தியாகக் கொண்டு சென்றுள்ளார்.
Valava duraiyan
----------------------------------------------------------------------------
ரமேஷ் கல்யாணின் திசை அறியாப் புள் படித்தேன்.
அது பற்றி.

எல்லா கதைகளும் அருமை.
சிக்கல் இல்லாத எளிய இனிய அதே சமயம் அடர்த்தியான நடை.
குறிப்பட்டுச் சொல்ல நிறைய இருக்கிறது.
பெருச்சாளி கதையின் குறியீடு உணர்ந்து மகிழ
வேண்டிய ஒன்று.

Muruganantham 
------------------------------------------------------------------------------------------------------------------
படித்தது பிடித்தது

சாதாரண மனிதர்கள், அசாதாரண சூழல்களைக் கண்டு அஞ்சிப் போவதில்லை. அதனோடு முரண்டிக்கொண்டும் நிற்பதில்லை. அதனோடு நகர்ந்து கொண்டு ஏதோ ஒரு புள்ளியில் சமரசப் பட்டு பிறகொரு நாள் அதிலிருந்து ஒரு கொடியென முளைத்தெழுகிறார்கள்.

ரமேஷ் கல்யாண் -திசையறியாப்புள்
சிறுவாணி வாசகர் மையம்.
SR Viswanathan 
-------------------------------------------------------------------------------------------------------------------
திசையறியாப் புள்- ரமேஷ் கல்யாண்
சிறுவாணி வெளியீடு

நாம் இதுவரை ஒருபோதும் படித்திராத அறிமுகமற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டுமென்கிற நினைப்பு இருந்தாலும் ,அதற்கான சந்தர்ப்பமோ ,உந்துதலோ  அவ்வளவு சீக்கிரம் வாய்க்காது .

 எழுதினவர் எங்கள் ஊர் மாப்பிள்ளை ( ஆம். எங்கூர் பாக்யலட்சுமி அக்காவை மணமுடித்தவர் .அப்போது அவர் பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர் என்று மட்டுமே தெரியும்). என்கிற தகவல் தெரிந்தவுடன் படித்தே ஆக வேண்டுமென்கிற ஆர்வம் அதிகமானது.

இத்தொகுப்பிலிலுள்ள பதினேழு கதைகளில் ஏழு கதைகள் பரிசு பெற்றவை .மற்றவை பத்திரிக்கைகளில் பிரசுரமானவை.

எல்லாக்கதைகளில் வரும் சம்பவங்களும்( ஒன்றிரண்டைத் தவிர ) மத்திய தர குடும்பங்களில்  நடப்பவை ,நடந்தவை தான்.
பணம் சார்ந்த மதிப்பீடுகள் உறவின் அருமையை புறந்தள்ளி மனிதர்களை பேதம் பார்ப்பதால் ஏற்படும்  உளச்சிக்கல்கள் நேர்மையாக சொல்லப்பட்டிருக்கின்றன.
பெற்றோர் மற்றும் துணை இவர்களுக்கிடையே யாரை பரிந்து  பேசுவது என்றறியாமல்  சிக்குண்டு உள்ளக்கொதிப்போடு மௌனித்து வாழ்க்கையை ஓட்டும் மனிதனின் பார்வையில்
நடக்கும் சம்பவங்கள் துணுக்குற வைக்கின்றன.

வார்த்தைகளைத் தேடித்தேடி கதைக்குள் கொண்டு வந்து அமைப்பது ஒரு கலையெனில் ,
ஒரு சிறுகதை அதற்கான நடையை ,வார்த்தைகளை தானே வரவழைத்துக்கொள்வதைப் போலத்தான் இவரின் சிறுதைகள் இருக்கின்றன.
துடைத்து விட்டது போன்ற ' பளிச்' அழகுக்கு தேவைப்படாத அலங்காரங்கள் போலவே கதைகளின் களத்துக்கு வேறேதும் தேவைப்படவில்லை.

'கல்லுப்பிள்ளையார்' நம்மை
கரைக்கிறாரெனில்,போன் சாய் மனங்கள்,கால சர்ப்பம், நெனப்பு, ஒளியின் நிழல்,திசையறியாப் புள்,அபேதம்,காற்றின் விலகல்,ந்யூரான் கொலைகள்
சால மிகுத்து, நெனப்பு ,அபேதம் எல்லாம் வாசகனை சிந்தனையில் மூழ்கவைத்து பல கேள்விகளைக் கேட்கின்றன.

சுழன்று சுழன்று முட்டிக்கொள்கிற பிறழ்ந்த மனநிலையோ , எதையோ நினைத்து  எங்கேயோ பார்த்துக்கொண்டு நினைவுள் மூழ்குகிற நிமிடங்களில் நம் செயலின் நல்லது ,கெட்டதுகள்
பளீரென்று எதிரில் மின்னுகிற
விநாடிகளைப் புறக்கணித்து வேறொன்றும் செய்ய முடியாதிருக்கும் துன்பநிலை எல்லோர் வாழ்விலும் வருமெனும் உண்மையை சொல்லுகின்ற கதைகளால் உறைந்து போகலாம்.

தொல்லை தருகிற பெருச்சாளியை அடித்து இழுத்துக்கொண்டு போய் போடும்போதான மனநிலைக்கும், காரில் அடிபட்டு அது இறந்து போவதால் அதே  மனிதனுக்குள் ஏற்படுகிற பரிதாப உணர்ச்சிக்கும் இடையிலான வேறுபாடுகளை அழகாக  எழுத முடிந்திருக்கிறது.( வாதை)

நான் புழங்கிய ஊரான ' தேன் கனிக் கோட்டை ' பெயர்க்காரணத்தை அறிய வைத்த கல் நயனங்கள்.

பாலகுமாரனின் 'மரக்கால் 'தந்த ஒரு நேர்மறை உணர்வை வாழ்க்கைப்பாடத்தை ஒளியின் நிழல் கற்றுத்தருகிறது.
// சாதாரண மனிதர்கள் அசாதாரண சூழல்களைக் கண்டு அஞ்சிப்போவதில்லை.அதனோடு முரண்டிக்கொண்டும் நிற்பதில்லை அதனோடே நகர்ந்துகொண்டு ஏதோ ஒரு புள்ளியில் சமரசப்பட்டு பிறகொருநாள் அதிலிருந்து ஒரு கொடியென முளைத்தெழுகிறார்கள் என்று அவருக்குத்தோன்றும்//

' போன்சாய் மனங்கள்' கதையில்,
// உறவுகள் மனித நாற்றுக்கள்.இடமாற்றிப் பொருத்திக்கொள்ளா விட்டால் செழித்து வளர்வது களைகளும் தான்.செழிப்பின் களையில் களைகள் தெரியா//வரிகள்

கிளியின் பார்வையில் சொல்லப்படுகிற ' விடுதலை'
 கதை தேர்ந்த சொற்களால் பின்னப்பட்டிருக்கிறது .உண்மையில் கிளிக்கு சிந்திக்கும் ஆற்றலிருந்திருந்தால் இப்படித்தான் நினைத்துக்கொள்ளும் .கூண்டிலிருந்து விடுதலை பெறுகிற
கிளி பறப்பதறியாது / செய்வதறியாது ' கீ ' ' கீ' எனக் கத்திக்கொண்டிருக்கிற
மாதிரி நம்மால் தேர்ந்த ஜோஸியராலும் கணிக்க முடியாத நம் வாழ்வின் திடுக்கிடும் சம்பவங்களை பார்த்து இப்படித்தான் இருக்கிறோம்.

கதைகளில் இவர் காட்டுகிற வித்தியாசமான ஆனால் சரியான உதாரணங்களில் ஒன்று // தற்போதைய வசதியான வாழ்க்கையானது பத்திகள் பிரிக்கப்படாதவொரு நீண்ட கட்டுரையைப் போல ஆயாசமளித்தது//
ஆம். அந்த வசதியை தக்கவைத்துக் கொள்வதற்காகப் போராடுவதும் அப்படியான ஒன்றுதான்.

வாழ்த்துகள் ரமேஷ் கல்யாண்!
மிகச்சிறந்ததொரு வாசிப்பனுபவத்தை தந்தமைக்கு.

இப்புத்தகத்தை வெளியிட்ட சிறுவாணி க்கும் , அட்டைப்படத்தை வரைந்திருக்கும் ஜீவானந்தன் சாருக்கும், முன்னுரை எழுதியிருக்கும் சப்தரிஷி சாருக்கும் வாழ்த்துகள்.

Saraswathy Gayathri

வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்
---------------------------------------------------------------------------------------------------------
https://padhaakai.com/2020/07/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/



சிதைக்கப்படும் சிறகுகள் – திசையறியாப்புள் சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து எஸ்.ஜெயஸ்ரீ 

புள்ளில் தொடங்கி புள்ளில் முடியும் ஒரு சிறுகதைத்தொகுப்பு ரமேஷ் கல்யாண் அவர்களின் ”திசையறியாப் புள்” தொகுப்பு. ஊரில் ஓர் காணியில்லை; உறவு மற்றொருவரில்லை என்ற ஆழ்வாருக்கு பரமனின் பத்ம பாதமே தன் துணை என்ற தெளிவு இருந்தது. ஆனால், எத் திசையில் செல்வது என்ற எவ்விதத் திட்டமும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல், தன் சிறகுகளையும் இழந்த நிலையில் ஒரு பறவை என்ன செய்யும்? ரமேஷ் கல்யாணின் தொகுப்பில் முதலில் இடம் பெற்றிருக்கும் விடுதலை கதையில் வரும் சிறகுகள் வெட்டப்பட்ட (ஜோசியம் சொல்லும்) கிளியும், தொகுப்பின் கடைசிக் கதையில் வரும் சிறுமியும் அடுத்து என்ன செய்வது எனத் திசை தெரியாது தவிக்கும் திசையறியாப் புட்கள்தான். பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாய்த் திரிந்து கொண்டிருக்கும்போது அவை தங்கள் வாழ்வாதாரத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மனிதன் தனக்காக இழுத்து வந்து வைத்துக் கொண்டு, வேண்டும்போது பயன்படுத்திக் கொண்டு, வேண்டாமெனும்போது கை விட்டு விடும்போது, அவை தங்கள் பழைய வாழ்க்கையையும் வாழ முடியாமல், குறைப்பட்டுப்போன அவற்றுக்கு ஓர் ஆதரவையும் தேடிக் கொள்ள முடியாமல் செல்லும் திசை தெரியாமல் அபலை நிலையில் நிற்கின்றன.
மனிதன் ஒரு சமூக விலங்கு. ஒருவரை மற்றவர் சார்ந்த வாழ்க்கை வாழவே பழகியிருக்கிறான். சொந்தம், பந்தம், பாசம், அன்பு, அரவணைப்பு, ஆதரவு என்னும் சிறகுகளால் ஆன பறவையாயிருக்கிறான். இந்தச் சிறகுகள் வெட்டப்படும்போது அவனும் வாழ்க்கையில் திசை தெரியாமல்தான் தவிக்கிறான்.
முதல் கதையில் வரும் கிளியைத் தன் வயிற்றுப் பிழைப்புக்காக அழைத்து வந்த சோதிடன், பால் பழம் கொடுத்து வளர்க்கிறான். தன்னுடைய மகனைத் தான் இழக்கப் போகிறோம் என்பதைத் தன்னால் கணிக்க முடியாத வருத்தமோ, கிளி மீது ஆசையாக இருந்த தன் மகனே இறந்து விட்டான், இனிமேல் இந்தக் கிளி எதற்கு என்ற வெறுப்போ, தன் மகன் ஒரு தீ விபத்தில் மரணித்தவுடன், இந்தக் கிளியைக் கொண்டு போய் அத்துவானத்தில் விட்டு விட்டு வந்து விடுகிறான். தன் மகன் செய்து வந்த முறுக்கு வியாபாரத்தைத் தொடர விரும்புகிறான். கிளியின் மீது அவன் காட்டிய அன்பு எங்கே போனது? சோதிடத் தொழிலையே விட்டு விட்டால் கூட, அந்தக் கிளி அந்த வீட்டில் ஒரு ஓரத்தில் இருந்து விட்டுப் போகக் கூடாதா? என்ற கேள்விகள் வாசிப்பவர் மனதில் ஒரு பரிதாப உணர்ச்சியை உருவாக்குகிறது. அந்தக் கிளி திசையும் தெரியாமல், தான் செல்ல வேண்டிய இடமும் தெரியாமல், தவித்து நிற்கிறது.
தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கடைசிக் கதையில் பள்ளிச் சிறுமி ஒருத்தி, பள்ளியில் ஒரு கல்வி உதவி பெறுவதற்காக நேர்காணல் செய்யப் படுகிறாள். அந்த உதவித் தொகை தாயில்லாப் பெண் குழந்தைகளுக்கே கிடைக்கும். இவள் தந்தையுடன் இருக்கிறாள். அவளது தாய், அவர்களுடன் இல்லாமல், வேறு ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டு விட்டாள். இந்தச் சிறுமியிடம் அவள் தந்தை, தாயை இழந்தவள் என்று சொல்லச் சொல்கிறான். ஆனால், அந்தச் சிறுமி, புரியாமால் தவித்து, தன் தாய் இருக்கிறாள் என்றே சொல்கிறாள். இந்தச் சிறுமிக்கு அந்த உதவி கிடைக்குமா கிடைக்காதா? என்பது பொருட்டல்ல. தாயன்புக்கு ஏங்கும் அந்தப் பிஞ்சு உள்ளத்திற்கு தன் தாய் தங்களுடன் ஏன் இல்லாமல் போனாள் என்றோ, தன் தாய்க்கும், தந்தைக்கும் இடையேயான பிணக்கு பற்றியோ என எதுவுமே தெரியாத நிலையில், தாய் இருக்கிறாள் என்றே சொல்லத் தெரிகிறது.. அந்தப் பிஞ்சு மனது என்ன செய்வது என தவித்து நிற்கிறது. முதலில் அனாதரவாக விடப்பட்ட கிளியும், இந்தச் சிறுமியும் ஒரே மாதிரியான நிலைமையில் நம் முன் வந்து பரிதாபமாக நிற்கிறார்கள்.
காற்றின் விதைகள், ந்யூரான் கொலைகள் இரண்டு கதைகளும், பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையேயான அன்பு, பாசம், அனுசரணை எல்லாமான மெல்லிய சிறகுகள் பணம், பொருள், சொத்து, சுகம் இவற்றால் சிதைக்கப்படுகிறது.. இந்தக் கதைகளில், பிள்ளைகள்,வளர்ந்து முன்னேறி, தமக்கென ஒரு வாழ்க்கை கிடைத்த பிறகு, தம் பெற்றோர் தமக்காக பட்ட கஷ்டங்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கிய அத்துணை பேறுகளையும் மறந்து அவர்களிடமிருந்து தமக்கு வர வேண்டிய பொருள் சார்ந்த பயனையே எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதே போல. பெற்றோரின் எதிர்பார்ப்பு எப்படி பிள்ளைகளின் வாழ்க்கை சிதைய காரணமாகிறது என்பதை ”சாலமிகுத்து “ கதை பேசுகிறது. மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையில்லை என்றும், அதற்காக மட்டுமே பதற்றமாகவே இருக்க வேண்டியதில்லை என்றும், மதிப்பெண்கள் குறைந்தால் ஒன்றும் ஆகிவிடாது என்றெல்லாம் நம்பிக்கை கொடுக்க வேண்டிய பெற்றோரே, பிள்ளைகளை மதிப்பெண், மதிப்பெண் என்று ஓட விட்டு, மனச் சிதைவுக்கு ஆளாக்கி விடுகிறார்கள். பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும், மனிதன் வாழ்வில் உயர்வதற்குமே கல்வி என்பது மதிப்பெண்வயமான கல்வியாக மாறி, மகிழ்ச்சியாகக் கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் மனங்களின் ஆனந்தச் சிறகுகள் சிதைக்கப்பட்டு மதிப்பெண் கூண்டிற்குள் அடைக்கப்படுகிறது.
மனித குலத்தின் ஒரு பிரிவினர் காலங்காலமாக ஒடுக்கப்பட்டே வந்திருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேலடுக்கைத் திறந்து விட்டால், அதற்கும் கீழே எத்தனை பேர் எத்தனையோ காலமாக ஒடுக்கப்பட்டு எழும்ப முடியாமல் புதையுண்டு கிடக்கிறார்கள் என்பது புரியும். இப்படி அடிமைப்பட்டுக் கிடக்கும் சமுதாயத்தைத் தூக்கி விடுவதற்கு ஒரு யானை பலம் தேவையாய்த்தானிருக்கிறது. ஒசூரை அடுத்த பாகலூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கல் சக்கரங்கள் காணப்படுவதை வைத்து புனைவாக தேரோட்டத் திருவிழா நடக்கும் கதை ஒரு விரிவினைக் கொடுப்பதாகவே இருக்கிறது.
. இப்படிக் குறிப்பிடும்படியாக பல கதைகள் இருப்பது மகிழ்ச்சியான வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. அதோடு, பல கதைகளில் ஆசிரியர் கையாளும் உதாரணங்கள் மிகவும் ரசிக்கத்தக்கவை.
பிரமிடுகளின் படிக்கல் போல நிறைய அட்டைகள் ( விடுதலை )
வானிலிருந்து விழும் மழை மணிச்சரங்கள் ( அபேதம் )
சாமானியர்களின் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பட்டறிவுகளின்
தேய்வுக்கும், அற்புதங்களின் மீதான நம்பிக்கைக்கும் உள்ள இனங்காணவியலா இடைவெளி பெர்முடா முக்கோணம் போன்றதுதான். ( நெனப்பு )
பொசுங்கியபலாக்கொட்டைகள் போன்ற மங்கலான வறண்ட கண்கள் ( எரிகற்கள்)
ஒழுகும் மெழுகு போல கனத்த பேச்சற்ற மௌனம் ( எரிகற்கள்)
வாழைப்பழத்தை வெட்டும்போது கசியும் மௌனம் ( வுல்லன் பூக்கள் )
கல்லுப் பிள்ளையார் கதையில் மனிதம் என்பது மதம் கடந்தது என்பதை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார். கடைசி வரிகள் மட்டும் வலிந்து திணிக்கப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கிறது. மற்றப்படி, தொகுப்பிலுள்ள 17 கதைகளுமே நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கிறது. ரமேஷ் கல்யாண் அவர்கள் முதல் சிறுகதைத் தொகுப்பில் வெற்றி அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதை அழகான முறையில் வெளிக் கொண்டு வந்திருக்கும் சிறுவாணி வாசகர் மையத்தார் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
( திசையறியாப் புள் – ஆசிரியர்: ரமேஷ் கல்யாண் – பவித்ரா பதிப்பகம் – வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், கோவை )
---------------------------------------------------------------------------------
 









         திரு.பரமாத்மா என்ற மூத்த வாசகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நான்கு

 பக்க கடிதத்தில் சிறுவாணி வெளியிட்ட என் திசையறியாப்புள் தொகுப்பின்
 வாசக அநுபவத்தை தெரிவித்துள்ளார். (சிறுவாணிக்கும்).கூடவே கோவில்
 பிரசாதமும் தன் வாழ்த்துக்களோடு அனுப்பி உள்ளார். கதைகளை விட்டு
 தள்ளுங்கள். வாசகரின் மனமும் செயலும் மரியாதைக்குரியன.  என்ன
 சொல்ல..! மகிழ்ச்சியும் நன்றியும்.....

------------------------------------------------------------------------------------------------------------------------------------




No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....