Monday, February 17, 2020

நாஞ்சில்நாடன் விருது 2020 -Part 1


நாஞ்சில்நாடன் விருது 2020                                                   விழா நாள் 02.02.2020 .

                                                  விருது வழங்கி வாழ்த்துரை
                           நகைச்சுவை இமயம்,   பேராசிரியர் கண.சிற்சபேசன்



                                                 திரு நாஞ்சில்நாடன் சிறப்புரை


                              விஜயா பதிப்பகம் திரு மு.வேலாயுதம் வாழ்த்துரை-1


                                        "சொல்வனம்" திரு.வ.ஸ்ரீநிவாசன் வாழ்த்துரை-2


                                         விருதாளர் திரு.கா.சு.வேலாயுதன் ஏற்புரை


நன்றி. Shruti Ilakkiyam


------------------------------------------------------------------------------------------------------------------



‘‘... இவர்களுக்கு பின்னே இந்த சிறுவாணி வாசகர் மையத்தை ஏற்படுத்தி, விருதுத்தொகை ரூ. 50 ஆயிரம் வருடந்தோறும் நல்கி திரைமறைவில் நிற்கும்  ஆடிட்டர் திரு. கிருஷ்ணகுமார், சென்னையை சேர்ந்த திரு.கிருஷ்ணகுமார் ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். முகந்தெரியாமல் எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் அந்த மனிதர்களை இருந்த நேரப் பிழையில், பரபரப்பில் மேடையிலேயே நன்றி சொல்லாமல் விட்டு விட்டேனே என்ற சோகம் லேசாக எட்டிப் பார்க்கிறது. அப்படியானவர்களின் உந்துதலில்தானே இந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும், பெரும் கூட்டத்தின் சந்தோஷமும் ஓரிடத்தில் நிறைந்து நகர்கிறது... ?!’’

😋சிறுவாணி வாசகர் மையத்தின் ‘நாஞ்சில் நாடன் விருது விழா’ பற்றி  விருது பெற்றவனின் முழுமையான நேர்முக வர்ணனை,

https://writterkasuve.blogspot.com/2020/02/blog-post.html?spref=fb&fbclid=IwAR2KfK-lxhd-RfPhE-VRMVsgh4zFkgsDbuI7uXpFg5JIOh-Lrylt9H5WG74

----------------------------------------------------------------------------------------------------------------------


                      நாஞ்சில்நாடன் விருது விழா புகைப்படத் தொகுப்பு -1


நன்றி-ஓவியர் மணிராஜ்

-----------------------------------------------------------------------------------------------------------------------

26/01/2020
விருது பெறும்
கா.சு. வேலாயுதன்
அவர்களுக்கும்
சிறுவாணி வாசகர் மையத்திற்கும்
வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும் 😊🌺🙏
நடிகர் சிவக்குமார் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி.
-----------------------------------------------------------------------------------------------------------------------
27/01/2020
அழைப்பிதழ் வந்தது. விருது பெற்றவருக்கும் சிறப்பாக ஆண்டுதோறும் விழாவை நடத்தும் உங்களுக்கும் வாழ்த்துகள்!

பாரதிமணி சார்

------------------------------------------------------------------------------------------------------------------------

‘தனித்திரு, பசித்திரு, விழித்திரு...!’’
இது எனக்கான விருதுகளின் பயண தூரம்... 

அந்த கலை, இலக்கிய விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் தூள் கிளப்பியது. இறுதியில் மேடையில் பலர் பேசினர். மேடைக்கு முன்னே நிறைய கேடயங்கள், நினைவுப்பரிசுகள். கடைசி வரை கூட்டம் கலையாதிருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

இறுதியில் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்கள், மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள், ஊர்ப் பெரியவர்கள், இளைஞர்களுக்கு அவரவர் துறையில் முத்திரை பதித்ததற்காக நினைவுப்பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்ட போதுதான் எதற்காக கூட்டம் காத்திருந்தது என புரிந்தது.

ஒரு கட்டத்தில் பார்ததால் என்னைத் தவிர அந்த விழா அரங்கில் இருந்தவர்கள்  நினைவுப்பரிசுகளோ, கேடயங்களோ, பரிசுப் பொருட்களோ வைத்திருந்தனர். அதைப் பற்றி பின்னாளில் என்னுடன் வந்திருந்து நினைவுப் பரிசு பெற்றவரிடம்  சிலாகித்தபோது அவர் சொன்னார்: ‘அந்த நிகழ்ச்சிக்கு பரிசு பெற நிறையபேர் வராமல் கேடயங்கள் மீதமிருந்தனவே. அதில் ஒன்றை நீங்களும் எடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கலாமே!’ என்றார் வேடிக்கையாக.

நான் அதற்கு பதிலை வேடிக்கையாகவே  இப்படி சொன்னேன்:

‘‘விருதுகள் வாங்கினவர்கள் சபையில் விருது வாங்காமல் தனித்திருப்பவனே விருதாளன். அது நானாக இருந்துட்டுப் போகிறேனே!’’

ஆம். இன்றைக்கு நடக்கும் விருது விழாக்களில் கலந்து கொள்பவர்களில் விருது பெறுபவர்களே அதிகமாக இருக்கிறார்கள். ஒரு அமைப்பு குறைந்தபட்சம் 30-40 பேருக்காவது விருது கொடுத்தால்தான், அந்த விருது பெறுபவரின் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என தலா 5-6 பேராவது நிகழ்ச்சிக்கு வந்து அரங்கை நிரப்புகிறார்கள். இதைப் பற்றி இப்போது எதற்கு இப்போ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதை கடைசியில் சொல்லுகிறேன். அதற்கு முன்பு நான் இந்த விருது/பரிசு/பாராட்டுகளுக்காக நாயாய், பேயாய், பிசாசாய் திரிந்த காலங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

ஆறாம் வகுப்பில் பள்ளி ஆண்டுவிழா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், ‘அரசு ஆரம்பப்பள்ளி- ஒண்டிப்புதூர்’ என்ற புத்தகம், தீபம் ஏந்தின முத்திரை தாங்கிய புது பனியனை அணிந்து கொண்டு, பொத்தச்சுரக்காய் போல் உடம்பை வைத்துக் கொண்டு ஓடின ஓட்டம். எல்லோருக்கும் கடைசி மாணவனாக, எனக்குப் பின்னால் யாருமே வரவில்லை என்றுணர்ந்து பாதியிலேயே திரும்பினது நினைவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு உடல் மெலிந்து சருகான பின்பு கூட ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டதில்லை.

ஆறாம் வகுப்பு முதலே பள்ளி கட்டுரை, ஓவியம், ஒப்புவித்தல், பேச்சு என இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு புத்தகங்கள், சான்றிதழ்கள் பெற்று வரும் வகுப்புத் தோழன் எட்டாம் வகுப்பு காந்தி ஜெயந்தி விழாவிற்கு முன்பு வந்த இலக்கியப் போட்டி அறிவிப்பை கேட்டு பெயர் கொடுத்த வேளை. ‘டேய் வேலாயுதா, கட்டுரைப் போட்டிக்கு நீயும் பேர் கொடுடா. காந்தி அடிகளின் இளமைப்பருவம்’தான் போட்டியின் தலைப்பு. அது நம்ம பாடப் புத்தகத்திலேயே இருக்குடா, மனப்பாடம் பண்ணி எழுதிடலாம்!’’ என்று உசுப்பேற்றுகிறான். அதைப் பார்த்து என் பெயரை எழுதிக் கொள்கிறார் டீச்சர் பழனியம்மாள். அதைப் பார்த்து என்னருகில் அமர்ந்திருக்கும் பாபுவும் அதற்குப் பெயர் கொடுக்கிறான். மூவரின் கையெழுத்தும் முத்து, முத்தானது. ‘தோன்றின் புகழொடு தோன்றுக!’ குரலை ஆரம்பமாக வைத்து அப்போட்டியில் நான் எழுதிய அக்கட்டுரை இரண்டாம் பரிசு வாங்கியது.  முதல் பரிசு பாபுவுக்கு, மூன்றாம் பரிசு சிவராசனுக்கு.

முதல் பரிசு என்றால் இரண்டு புத்தகம் ப்ளஸ் சான்றிதழ், இரண்டாம் பரிசு என்றால் ஒரு புத்தகம் ப்ளஸ் சான்றிதழ், மூன்றாம் பரிசுக்கு சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்ட காலம் அது. எப்படியும் ஒரு புத்தகமும் சான்றிதழும் காந்திஜெயந்தி இலக்கிய மன்ற விழாவில் கிடைக்கும். மேடையேறி கைதட்டலுக்கு இடையே பெறலாம் என கனா. ஆனால் அந்த சமயம் பள்ளியில் மூத்த மாணவர்கள் ஸ்டிரைக். விழா தள்ளிப் போனது. அதற்குப் பிறகு மாதாந்திர இலக்கியப் போட்டிகளும் நடக்கவில்லை. காந்தி ஜெயந்தி இலக்கியப்போட்டிக்கு பரிசு கொடுப்பீர்களா? என அதற்கான பொறுப்பு ஆசிரியரிடம் நடந்து நடந்து பிஞ்சுப் பாதம் வலி கண்டிருக்க வேண்டும். இறுதியில் பள்ளி இலக்கிய மன்ற ஆண்டு விழாவில் நடந்த போட்டியில் (இதிலும் நாங்கள் மூவரும் கலந்து கொண்டோம். பரிசுதான் கிடைக்கவில்லை) வென்றவர்களுக்கு பரிசு கொடுக்கும்போதுதான் நாங்கள் பெற்ற பரிசுக்கு வெறும் சான்றிதழ் மட்டும் கொடுத்தார்கள்.

அதற்குப் பிறகு எங்கள் பள்ளியில் மட்டுமல்ல, கோவை நகரில் எந்த பள்ளியில் கட்டுரைப் போட்டி நடந்தாலும் நானும், பாபுவும், சிவராசனும் இருப்போம். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் அப்போட்டிகளில் பரிசு கிடைக்காமல் திரும்புவது சர்வசாதாரணமானது. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போதுதான் மீண்டும் கட்டுரைப் போட்டியில் பரிசுகள் வாங்க முடிந்தது. அதில் எனக்கு முதன் முதலாக கிடைத்த பரிசுப் புத்தகத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ‘தோல்விகளை வெற்றிகளாக்குவது எப்படி?’ அடுத்ததாக கிடைத்த பரிசு, கோவை காந்தி அமைதி நிறுவனம் மாவட்ட அளவில் நடத்திய கட்டுரைப் போட்டியில் ‘சத்தியசோதனை!’

இதோ இப்போது கதை எழுத வந்து விட்டேன். கோவை வானொலியில் கதைகள் ஒலிபரப்பு. கூடவே பிலிப்பைன்ஸ் வெரிதாஸ் வானொலியில் மாதாந்திர கட்டுரைப் போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொள்கிறேன். பரிசு பெற்றதற்கான சான்றிதழ்கள் air Mail -ல் வந்து குவிகின்றன. ஆனால் பரிசு மட்டும் காணோம். ஒரே ஒரு முறை Sea mail-ல் ஒரு பார்சல் வருகிறது. பிரித்துப் பார்த்தால் கரிய நிறத்தில் ஒரு தென்னை மரம். எருமை கொம்பிலோ, மான்கொம்பிலோ செய்யப்பட்ட கைவினைப் பொருள். ரொம்ப காலமாக அது என் வீட்டு அலமாரியில் இருந்து, பிறகு காணாமலே போனது.  அடுத்தது பத்திரிகைகள்.  அதிலும் போட்டிகள், பரிசு பெறுதல் மட்டுமே குறிக்கோள். அப்போதுதான்  வெளியே சட்டென்று இனங் காணப்படுவோம் என்ற துடிப்பு.

வருடம் தோறும் ‘அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி’யை கல்கி வார இதழ் நடத்தும். அதற்காகவே கல்கி வாங்கி, வாங்கிப் படித்து, போட்டிக்கு கதை எழுதி அனுப்பி அவை பிரசுரமாகாது திரும்பி விடும். அதை தாண்டி 1986 ஆம் ஆண்டு. ஜனரஞ்சனி இதழ் நடத்திய இளைஞர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு. அதில் கிடைத்த ஊக்கம் பத்திரிகைகளுக்கு கதைகள் பறக்கிறது. சாவி, தாய், கல்கி, விகடன்... இப்படி நிறைய இதழ்கள். பிரசுரத்திற்கு தேர்வு பெறும் கதைகள், ஏனோ பரிசுக்கு மட்டும் நழுவியே சென்றன. ஆனால் கட்டுரைகளுக்கு மட்டும் உடனே அங்கீகாரம். இது -16 என்ற கதைகள் பற்றின ஒரு விமர்சனக் கட்டுரை விகடனில் பரிசு. தினகரன் மாலைமுரசு நடத்திய பொங்கல் விழா கட்டுரைப் போட்டியில் முதல்பரிசு.

வாசுகி இதழ், தமிழ் அரசி இதழ் நடத்திய மண்வாசனைப் போட்டியில் முதல் பரிசுகள் பெறும்போது தாவு கழன்று விட்டது. பத்திரிகை பணிக்கு வந்த பின்புதான் என் கதைகள் எப்படியெல்லாம் எங்கெங்கு புறக்கணிக்கப் பட்டிருக்கின்றன என்பதன் ஆதி அந்தம் தெரிய வர ஆரம்பித்தது.

ஒரு முறை எழுத்தாளர் ராஜேஷ்குமாரை பேட்டியெடுக்க செல்கிறேன். ‘குமுதம் போட்டியில்  கலவரம் கதை எழுதினீங்களே, அது என்னாச்சு?’ என்கிறார். ‘அதைத்தான் அன்றைக்கு நடுவர்கள் நாங்கள் பரிசுக்குரியதாக தேர்ந்தெடுத்தோம். ஆனால் ஆசிரியர் குழு அதில் மதம் வருவதால் தவிர்த்து விட்டது!’ என்றும் சொல்கிறார்.

பிறிதொரு முறை ‘புதிய பார்வை’ ஆசிரியர் பாவைச் சந்திரனை சந்தித்து கல்கிப் போட்டிக்கு சென்று திரும்பி வந்த ‘அக்கழுதை’ என்ற சிறுகதையை அவர்களின் பிரசுரப் பரிசீலனைக்கு தருகிறேன். ‘இதை நான் ஏற்கனவே படிச்சுட்டனே. கல்கி போட்டி நடுவரில் ஒருவன் நான். இதைத்தான் பரிசுக்குரியதாகவும் தேர்ந்தெடுத்தோம். அவர்கள் இதில் கொச்சையான சில வசனங்கள் வருவதால் தவிர்த்து விட்டார்கள். அந்த வசனங்களை நீக்கி விட்டோ, அந்த எழுத்தாளரிடமே கொடுத்து நீக்க சொல்லியோ பிரசுரிக்கலாமே!’ என்றும் சொன்னோம். ஆனால் அதற்கு போட்டி விதிமுறைகள் ஒப்புக் கொள்ளாது!’ன்னு சொல்லி விட்டார் ஆசிரியர்!’’ என்கிறார்.

அதே கதைதான் 1999ல் எழுதி போட்டிக்கு அனுப்பிய பொழுதுக்கால் மின்னல் நாவலுக்கும் ஏற்பட்ட கதை. பரிசுக்கு அந்நாவல் இறுதி வரை வந்த கதையை தேர்வுக்குழுவில் இருந்தவரே எடுத்தியம்பிய கதையை எழுதினால் ஒரு நாவலே ஆகும். அதை விட அந்த நாவல் புத்தகம் வடிவம் எடுத்தவுடன் முக்கியமான அமைப்பின் அந்த ஆண்டு  விருதுக்கு 5 காப்பிகள் அனுப்புகிறேன். அந்த தேர்வுக் குழுவில் இருந்த ஒரு நடுவரே பின்னாளில் வந்து கேட்கிறார்: ‘‘ஏன் பொழுதுக்கால் மின்னல் நாவலை நம் விருதுக்குழுவுக்கு அனுப்பவில்லை?’’ என்று. நான் அதை அனுப்பிய விவரம் சொல்ல, அவர் சொல்லுகிறார்:

‘‘அந்த நாவலை நான் ரொம்ப எதிர்பார்த்தேன். எனக்கு இந்த ஆண்டில் பிடித்த நாவல் அதுதான். அதை திட்டமிட்டே யாரோ விருதுப் பரிசீலனையில் பங்கு பெற விடாமல் கடத்தியிருக்கிறார்கள். விடுங்க தோழர் என்றைக்காவது ஒரு நாள் உங்க திறமைக்கு உரிய அங்கீகாரம் வந்தே தீரும்!’’

இப்படியான அடுத்தடுத்த சம்பவங்கள் என் மனதில் விருதுகளின் பால், பரிசுகளின்பால், போட்டிகளின் பால் ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தி விட்டன. அதில் எதிர்பார்ப்பும் இல்லை. தேடலும் இல்லை. அதுவெல்லாம் கடந்த நிலை. இன்னமும் சொல்லப் போனால் அன்று போல் இன்று இல்லை.

 இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி இன்றைக்கு எல்லோர் கையிலும் விருதுக் கேடயங்கள் இருக்கின்றன. அதை கொடுப்பதற்கென்றே நிறைய அமைப்புகள், நிறைய நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. விருதுகளில் கூட கார்ப்பரேட் மயம் ஊடுருவி நிற்கிறது.

விருது பெற்றவனின் எழுத்தும், சினிமாவும், சின்னத் திரையும் இவ்வளவு ஏன் விருது பெற்றவரின் காப்பித்தூள் பொட்டலமும், மிளகாய்தூள் பொட்டலமும்தான் விற்பனையாகும். அப்படி நான் விற்பனைக்காக கடை விரித்தவனில்லை. விருதுகள் என்பது தனித்து நிற்பது, பசித்து நிற்பது, விழித்திருப்பதற்கானது. இச் சமூகத்திற்காகவே என்னை நான் கடை விரித்து நீண்டநாட்கள் ஆகி விட்டது. இந்த விற்பனைக் கூட்டத்தில் கலந்து நிற்பதல்ல என் நோக்கம். இதிலிருந்து தனித்து, பசித்து, விழித்து நிற்பதே ஆகும்.

அப்படியான விருதுகளும் கூட சில உயிர்ப்புடன் இருக்கவே செய்கின்றன. அவை என்னை தேடி வந்தடையவும் செய்கின்றன. அதில் ஒன்றுதான் இப்போது என்னை தேடி வந்திருக்கும், ‘சிறுவாணி வாசகர் மையம்’ வழங்கும் நாஞ்சில் நாடன் விருது. இது எனக்கு வழங்கப்படுவதால் சிறந்ததாக நான் கருதவில்லை. நீங்களும் கருதி விடக்கூடாது என்பதற்காகவே மேற்சொன்ன விவரணைகளை எல்லாம் உங்களுக்கு தந்து வந்திருக்கிறேன்.

சிறுவாணி மையம் மாதந்தோறும் சிறந்த ஒரு நூலை தன் 450 உறுப்பினர்களுக்காக பதிப்பித்து கொடுத்து வருகிறது. அப்படியான அந்த அமைப்பில் நிர்வாகிகள் மட்டுமல்ல, உறுப்பினர்கள் கூட நிறைய கற்றுத்தேர்ந்த அறிவுஜீவிகள். உள்ளன்பு மிக்கவர்கள். அவர்களை முன்வைத்து இம்மையம் வருடத்தில் ஒரே ஒரு விழாவைத்தான் நடத்துகிறது. அதுதான் நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா. அந்த விருதும் கூட ஒரே ஒருவருக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு அமைப்பு வருடத்திற்கு ஒரே ஒரு நிகழ்வை நடத்தி, ஒரே ஒரு விருதாளரை முன் வைத்து, உயிர்ப்புடன் இருக்கும் ஒரு எழுத்தாளர் பெயரால், அவரின் கையாலேயே விருது கொடுக்கிறது என்றால் இது மட்டுமாகத்தான் இருக்கும்.

ஆம், தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்ற வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் கூற்று விருதுக்கு மட்டுமல்ல, இந்த விருதினை வழங்கும் அமைப்பிற்கும், விருதினை வழங்கும் எழுத்தாளருக்கும் பொருந்துகிறது பாருங்கள். அதை உறுதி செய்கிறது அவர்கள் இந்த விருதினை அளிக்க காரணமாக சொல்லும் கீழ் கண்ட வாக்கியங்கள்:

//🤔❤ .... அடைதலுக்கான நோக்கமும், பயணிக்கும் போது கண்ணோட்டமும், செயல்பாட்டில் நேர்மையும், உண்மையும், அதை மீறிய சத்தியமும் நிறைந்திருந்தால் எந்த இலக்கிலும் சிறப்புகள் நிறைந்தே இருக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படும் திரு.கா.சு.வேலாயுதன் அவர்களுக்கு, மண் பயனுறச் செய்யும் அறம் சார்ந்த எழுத்து மற்றும் சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் முகமாக ‘நாஞ்சில் நாடன் விருது’ வழங்கிக் கெளரவிப்பதில் ‘சிறுவாணி வாசகர் மையம், கோவை’ பெருமை கொள்கிறது...//

ஆக, எனக்காகவேனும் இல்லாவிட்டாலும் கூட அதற்காகவேனும் நீங்கள் இந்நிகழ்வில் பங்கேற்பது அவசியமாகிறது. எனவே அனைவரும் அவசியம் வாருங்கள். உங்கள் வருகையே இந்த விழாவை சிறக்க வைக்கும்.

கா.சு.வேலாயுதன் Fb
---------------------------------------------------------------------------------------------------------------------


சிறுவாணி வாசகர் மையத்தின் #நாஞ்சில்நாடன்விருது  விழாவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பல இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர். (இந்நேரம் ஊடகம் அனைத்தையும் சொல்லி முடித்து விட்டிருக்கும்).

ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஞாயிறு மாலை இருப்பதை யாருமே எதிர்பாக்கவில்லை. கூட்ட அரங்குக்கு வந்து சேர பலர் சிரமப்பட்டனர். போலீஸ் காவல் ஆங்காங்கே வழிகளை மறித்து வாகனங்களை திருப்பி அனுப்பி கொண்டிருந்தது . - சிறுவாணி விழா என்று சொல்லி சிலர் தாண்டி வந்தனர்.  திருமறைக்காடு கோவில் கதவாக இருந்தது போலீஸ் வழித்தடை கதவு.

ராக் ரவீந்திரன் விருது குறித்த அறிமுகம்,
லாசரா சப்தரிஷி குரலில் விருதாளர் பற்றிய அறிமுகத்தை
சிறுவாணி வழங்க -
வாசகர் மையத்தின் நோக்கம், சமூக இலக்கிய பண்பாட்டு நோக்கில் அமைந்த  விருதின் நோக்கம் போன்றவற்றை ஒரு நபரிடம் பகிர்ந்து கொள்வது போலவே பேசிய அனைவரும் பகிர்ந்தனர். அது ஒரு இலக்கிய இல்ல விழா போல இருந்தது. வ. ஸ்ரீனிவாசன் தனது பேச்சில் குறிப்பிட்டது போல இது வாசகர் மைய உறுப்பினர்களால் உருவாகி தன்னையே நடத்திக்கொள்ளும், தரமான ஆரோக்யமான வாசிப்பு சூழலை உருவாக்க முயற்சிக்கும் அமைப்பு.

 திரு. கண.சிற்சபேசன் அவர்களின் நகைச்சுவை முத்திரை பேச்சு (கடந்துவிட்ட தமிழ் மேடையை நினைவூட்டியது) உண்டாக்கிய  லேசான சூழலை தொடர்ந்து காத்திரமான பேச்சுக்கள் பின் தொடர்ந்தன. நாஞ்சில் நாடன் தனக்கே உரித்த நயத்தோடு பாசாங்குகள் மிகுந்த இலக்கிய சூழலை கோடிட்டு காட்டினார். சொல்லிக்கொள்ளும்படி யான விருதுத் தொகைகள் நிலவ வேண்டியதை சொல்லிக் காட்டினார். சொற்களின் காத்திரத்தை கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் சொல்லத் தவருவதில்லை அவர்.   சிலம்பு உள 'கொண்மம்', எண்திசைகளை சுட்டி 'ஆட்சியர்'  என்ற கம்பனின் சொல்லாட்சியை  குறிப்பிட்டார். (தென்திசை என்பது எமனின் திசை என்று சொல்லி  தெற்கிலிருந்து ஒரு சூரியன் என்ற நூலைப்பற்றி இணையாக குறிப்பிட்டபோது அரங்கம் புரிந்து சிரித்துக்கொண்டது ).

கா.சு.வேலாயுதம் தன் ஏற்புரையில் ஊடகத்துறை பற்றி அளவாக குறிப்பிட்டு தனது எழுத்து பயணத்தை குறித்து சொன்னதும் அதற்கு அவர் மனைவி எப்படி ஆதரவாக இருந்தார் என்றும் சொன்னது நெகிழ்ச்சியான தருணம்.

விஜயா வேலாயுதம் தற்போதைய பதிப்புலக சூழல் பாராட்டிக்கொள்ளும்படியாக இல்லை என்பதை நிதர்சமாக சொன்னார். எழுதுபவனுக்கு மட்டும் சமூக பொறுப்பு இல்லை. வாசிப்பவனுக்கும் அது உண்டு என்று அருமையாக ஒரு புள்ளியை தொட்டார். சுபாஷிணி அவர்கள் இது முழுக்க வாசகர்களின் பலம் என்றார்.

நிகழ்வின் மூன்று விஷயங்களை மட்டும் இங்கே சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் -

திரு பிரகாஷ் தனது  மனைவி லட்சுமி, மகள் பவித்ரா மற்றும் தனது அம்மா மற்றும் லக்ஷ்மியின்  அம்மா உட்பட அனைவரையும் உடன்கொண்டு சுபாஷிணி அவர்களின் துணையுடன் நடத்தி இருக்கிறார் - அனைவரும் ஒரே அர்ப்பணிப்பு உணர்வோடு இதை செய்வது ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் தருவன. இவர்தான் நிஜமான 'தனி ஒருவன்'.

வந்திருந்த அனைவருமே இலக்கியம் பற்றிய உண்மையான விழைவும் அன்பும் கொண்டவர்கள். மேம்போக்குக்காக வந்தவர்கள் அல்ல. கலையாத கூட்டம். நாஞ்சில் நாடன் ஒரு சிறுகதை போட்டி நடத்தி பத்தாயிரம் பரிசு தந்து வாசிப்பை எழுதுவதை ஊக்கப்படுத்தலாம் என்று தனது பேச்சில் சொன்னார்.

 விழா நன்றியுரை முடிவதற்குள்  ஸ்ரீனிவாச ராகவன் ஓசூர் இலக்கிய உள்ளங்களின் முனைப்பாக பரிசு தொகைக்கான ஆதரவை மேடையில் தெரிவித்தார். சந்தாதாரகளை திரட்டும் முனைப்பையும் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் வந்திருந்த மற்ற பலரும் அடுத்தடுத்த பரிசுத் தொகை தருவதற்கான ஆதரவை தாம் ஏற்பதாக பிரகாஷிடம் சொல்லி இருக்கிறார்கள் (அதிகார பூர்வமாக பெயர் அறிவிப்புகளை  பிரகாஷ் மற்றும் சுபாஷிணி அவர்கள்தான் தக்க சமயத்தில் அறிவிக்கவேண்டும்). நன்றி உரையில் - திருமண பத்திரிகையில் தங்கள் வரவை எதிர்நோக்கும் என்று பெயர் போடுவார்களே அது போல முடிந்தவரை பலரையும் நினைவு கூர்ந்து நன்றி பிரகாஷ் சொன்னார்.

நிகழ்ச்சி முடிந்து ஒருவருக்கொருவர் அளவளாவி அடுத்த இலக்கிய முன் நகர்வுகள் பற்றி தம் ஆலோசனைகளை பேசிக்கொண்டு இருக்க - இறுதியில் அனைவரும் ஒன்றாக நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும்  ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்ட போது 'சிறுவாணித்திருமணம்'  க்ரூப் போட்டோ போன்று இருந்தது.

வாசகர் அனைவரும் ஒரு குடும்பத்தினர் தானே !
விருது விழாவின் சிறந்த அம்சம்(மே) இதுதான் !

(இறுதியாக ..அதெல்லாம் சரி அதெப்படி இந்த கோவைக்காரர்கள் விருந்தோம்பலிலும் நட்பு அன்பு பாராட்டுவதிலும் அப்படி ஒரு நிறைவை உண்டாக்கி விடுகிறார்கள் ! புவிசார் குறியீட்டுக்கு முயலலாம்  )

Ramesh kalyan

03/02/2020
-----------------------------------------------------------------------------------------------------------------------

                    இமய பதிப்பகம் புத்தக பித்தனை ஓரளவு 80களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்குத் தெரிந்திருக்கும். நல்ல எழுத்தாளர்களைக் கண்டு பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் செயலைச் சிறப்பாகச் செய்தவர். சுஜாதாவின் ஆரம்பக்கால எழுத்துக்கள் இவரது பதிப்பகத்தில்தான் வெளிவந்தன. சூடாமணியின் சிறுகதைகளை இமயம்தான் கொண்டு வந்தது. நாகைப்பட்டினத்திலிருந்து ' பட்டினத்தின்' மாய்மாலம், வாய்ஜாலம் இல்லாமல் இயங்கிய நல்ல உள்ளம். எனது இரண்டு சிறுகதை தொகுப்பும் இவர் பதிப்பில் வெளிவந்தது என்பதற்குச் சொல்லவில்லை.

ஒருநாள் என் வங்கிப்பணியில் இருக்கும்போது என்னைத் தேடி என் அலுவலகம் வந்து கல்கியில் அப்போது வெளிவந்த சிறுகதைகளைப் பாராட்டி எனது சிறுகதைகளை அனுப்பித் தரச் சொல்லி வெளியிட்டார். ஆதவனின் காகித மலர்களை முதன் முதலில் வெளியிட்ட பெருமை இவரைச் சாரும்.

இவ்வளவு முஸ்தீபு எதற்கு என்றால் கா.சு.வேலாயுதன் எனக்கு முகநூலில் அறிமுகமான பின்னர் சட்டென்று என் அலமாரியில் இருந்த ஒரு சிறுகதை தொகுப்பு நினைவிற்கு வந்தது. எனது நிழல் சுடுவதுண்டு சிறுகதைத் தொகுப்பின்போது நீலா தெற்குத் தெருவில் இருக்கும் இமய பதிப்பகம் போயிருந்தேன். பொதுவாகவே இது போன்ற சந்திப்பில் கை நிறைய நூல்களை பதிப்பகத்தார் கொடுப்பது வழக்கம், except வானதி பதிப்பகம. அப்படி ஒரு நூலினை புத்தக பித்தன் கொடுத்து , "இவரும் உங்களைப் போல வளர்ந்து வரும் எழுத்தாளர்,"என்று  அறிமுகப்படுத்தி கா.சு. வேலாயுதன் எழுதிய " தணிவது " என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார். அதுதான் வேலாயுதத்தின் முதல் தொகுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நல்ல சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு அது.

 நேற்று கா.சு.வேலாயுதனுக்கு நாஞ்சில் நாடன் விருது வழங்கி சிறுவாணி வாசகர் மையம் கௌரவித்தபோது தோன்றியது.

சிறுவாணி வாசகர் மையத்திலிருந்து நல்ல புத்தகங்கள் வெளிவருவது குறித்து ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். நாஞ்சில் நாடன் சார் ஆலோசனையில் பல நல்ல உள்ளங்களின் கூட்டு முயற்சியில் Prakash GR
இன் மொத்த குடும்பத்தினரின் உழைப்பில் இந்த அமைப்பு இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாஞ்சில் நாடன் பெயரில் ஒரு விருது ஏற்படுத்தி இலக்கியத்திற்காக நிஜமாக உழைப்பவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்கள். எழுத்தாளர் ராகி.ரங்கராஜனின் பேரன் திரு. Srinivasa Raghavan R அவர்களும் இந்த இலக்கிய பணியில் இணைந்துள்ளார்.

நேற்று பத்திரிகையாளரும், எழுத்தாளருமான கா.சு. வேலாயுதன் அவர்களுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கோவையில் அண்ணா சிலை அருகில் இருக்கும் ஆருத்ரா ஹாலில் சுமார் இருநூறு பேர் அமரக்கூடிய ஹாலில் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹால் நிரம்பி வழிந்தது. Rishaban Srinivasan,  Saptharishi Lasara போன்றோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். கா.சு.வேலாயுதன்  பரிசு பெற்றதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

புத்தகபித்தன் கண்டுபிடித்த எந்த எழுத்தாளரும் சோடை போனதில்லை.

Prabhakar sharma (sathya priyan)

03/02/2020
---------------------------------------------------------------------------------------------------------------------


அகநகநட்பூக்கும் முகநூல் நட்பு: 125   சிறுவாணி ஜி.ஆர். பிரகாஷ் (Prakash GR)
----------------------------------------------------------------
விருதுகளின் மீது உங்களுக்கு எவ்வளவு விமர்சனம் உண்டோ, அதை விட அதிகமாய் எனக்கும் உண்டு. நான் சந்தித்த எழுத்தாளர்களில் மிகமிக அதிகமான கடுஞ்சின விமர்சனங்களை விருதுகளின்பால் கொண்டவர் நாஞ்சில்நாடன். அதை 20 வருடங்கள் முன்பே அவர் வெளிப்படுத்திய விதம் சுவாரஸ்யமானது. அப்படியானவர் பெயரில் இப்படியானவன் விருது பெறுவதுதான் இந்த ஆண்டின் நாஞ்சில்நாடன் விருதுக்குள் இருக்கும் சிறப்பு. அதைப் பற்றி விரிவாக விழாவில் பேசுவோம். இப்படியான சூழ்நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜி.ஆர். பிரகாஷ்.

குறுகிய காலத்தில் நெருக்க நட்பு பூணும் மனிதர்கள் சமீபகாலமாக எனக்கு அதிகரித்து வருகிறார்கள். அதது அந்த நண்பர்களுக்கே தெரியும். அந்த வரிசையில் ஆச்சர்யகரமாக நான்கைந்து மாதங்கள் முன்பு எனக்கு அறிமுகமானவர்தான் இந்த ஜி.ஆர்.பிரகாஷ். இவரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு சிறுவாணி வாசகர் மையம் என்ற பெயரில் மாதந்தோறும் ஒரு சிறந்த நூல் வீதம் வருடம் தலா 12 நூல்கள் வீதம் 3 வருடங்களாக வெளியிட்டு வருகிறார். அவற்றை மாதந்தோறும் கிட்டத்தட்ட 450 பேருக்கு கொண்டு போய் சேர்க்கிறார்.

இத்தனைக்கும் இவர் வாசகர் மட்டுமே, எழுத்தாளர் அல்ல. ஆனால் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமோ அப்படியெல்லாம் கொண்டாடுகிறார். எந்த எழுத்தாளரின் புத்தகத்தை மாத, மாதம் கொண்டு வருகிறாரோ, அவர்களுக்கு உரிய ராயல்டியை நூல் அச்சாகும்போதே கொடுத்து விடுகிறார். இதை ஒரு தனியார் கம்பெனிக்கு பணிக்கு சென்றபடியே செய்து வருகிறார் என அறிந்து அவர் வீட்டிற்கே செய்தி நிமித்தம் சென்று பார்த்தேன். அங்கே கண்ட காட்சியில் எடுத்த எடுப்பில் மலைத்துப் போனேன். ஏனென்றால் அங்கே மலை,மலையாய் புத்தகங்கள். எத்தனை ஆண்டுகள் சேகரமோ தெரியாது. அத்தனையும் படித்து வைத்திருக்கிறார். அதைப் பற்றியே நிறைய சிலாகிக்கிறார். அவர் பணிக்கு அவர் மனைவியும், தாயும், மகளும் கூட பேருதவி புரிகிறார்கள்.

அதற்குப் பின்பு ஒரு முறை விஜயா பதிப்பகத்தில் பார்த்தேன். இடைப்பட்ட காலத்தில் அவரை தேடிப் பிடித்து என் முகநூல் நட்பிலும் இணைத்துக் கொண்டேன். பிறகு ஒரு நாள் அவரிடமிருந்து அதிகாலையில் எனக்கு போன்.

‘‘சார், ரெண்டு நிமிஷம் பேசலாமா?’’
‘‘தாராளமாக, சொல்லுங்க சார்..!’’
‘‘வாழ்த்துக்கள் சார். சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது இந்த ஆண்டு உங்களுக்கு வழங்க நடுவர்கள் தீர்மானிச்சிருக்காங்க... உங்களுக்கு அதுல ஆட்சேபனையில்லையே!’’

எனக்கு ஒரு நிமிஷம் அதிர்ச்சி, அடுத்து ஆச்சர்யம்.

‘‘எப்படி இது?’’
‘‘நாஞ்சில் நாடன் சார் உட்பட சிறுவாணி அமைப்பின் நடுவர்கள் ஐவர் இந்த மண் பயனுற செய்யும் அறம் சார்ந்த எழுத்து மற்றும் உங்கள் சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் முகமாக உங்களை ஏகமனதாக இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள் !’’
உடனே தயக்கம் எட்டிப் பார்க்கிறது. ‘இதற்கு தகுதியானவனா நான்?’
‘‘எனக்கு மூத்தவங்க நிறைய பேர் இருக்காங்களே. அவங்களுக்கு கொடுக்கலாமே!’’ என்கிறேன்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். அஞ்சு பேர் ஒருமித்து எடுத்த முடிவு. உங்களுக்கு ஆட்சேபனை இருந்தா மட்டும் சொல்லுங்க!’’

‘‘நாஞ்சில்நாடன் எழுத்து பிரம்மா. விமர்சனத்திலோ துர்வாசர். சாமான்யனான நான் வஷிஷ்டர் நாவால் ரிஷிப் பட்டம் வாங்குவதை விட வேறென்ன வேணும்?’’

நான் ஒப்புக் கொண்டேன். பிறகு நடுவர்கள் குழுவில் சுபாஷிணி மேடம், ஸ்ரீனிவாசன் சார் உள்பட பலரும் பேசினார்கள். வாழ்த்து சொன்னார்கள். தொடர்ந்து பிரகாஷூம் அவர் துணைவியாரும் இரண்டு வாரங்கள் முன்பே எனக்கு அழைப்பிதழை வீடு தேடி வந்து கொடுத்து விட்டு சென்றார்கள்.
இதோ விருதுக்கான நாள் நெருங்கி விட்டது. அடுத்தடுத்து முகநூலில் அவர் பதிவுகள். அதை விட அதிகமாய் எனக்கு நிறைய நண்பர்களிடமிருந்து தொடர்ச்சியாக ஃபோன் கால்கள்.

‘‘சார், உங்க விருது விழாவுக்கு அழைப்பிதழ் வந்தது கண்டிப்பா வந்துடறேன் சார்..!’’

மகிழ்ச்சிக் குரல்கள். எப்படி இது? பணிக்குச் சென்று வந்த நேரம் போக இந்த நிகழ்ச்சிக்காக அத்தனை நேரமும் கடுமையான உழைத்திருக்கிறார் பிரகாஷ். அதை மற்றவர் சொல்லக் கேட்டு நெகிழ்ந்து போகிறேன். இதோ, இன்று பேசுகிறார். நிகழ்ச்சிக்கான தயாரிப்பு பணிகளை பற்றியெல்லாம் நிறைய சொல்லுகிறோர்.

அப்படியே பேச்சுவாக்கில், ‘‘அத்தனை பத்திரிகைகளுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பீட்டேன் சார். சென்னை இலக்கிய ஏடுகள் செய்தித் தகவல்கள் வெளியிட்டது. ஆனால் உள்ளூர் எந்த செய்திகள் எதுவும் காணோம். போன வருஷம், அதுக்கு முந்தின வருஷம் எல்லா பத்திரிகையும் நிகழ்வக்கு முன், பின் செய்திகள் வெளியிட்டது. இப்போது என்னாச்சு தெரியலை!’’ என்றும் குறிப்பிடுகிறார். ‘அதனாலென்ன, நம்ம செய்ய வேண்டிய வேலையை செஞ்சுட்டோம்!’ என்றும் அடுத்த பணியை விவரிக்கிறார்.

என் சிந்தனை அந்த இடத்திலேயே மையம் கொள்கிறது...

ஒரு காலத்தில் எழுத்தாளனை எழுத்தாளர் பாராட்டுவது, கவிஞர், கவிஞரை பாராட்டுவது என்பது அவ்வளவு சுலபமாய் நடந்ததில்லை. இதோ, இப்போது ஒரு மூத்த எழுத்தாளரே மற்ற எழுத்தாளர், கலைஞருக்கு தன் பெயரால் விருது கொடுக்கும் பக்குவத்தை நாஞ்சில் நாடன் மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அது பத்திரிகை உலகிலும் சீக்கிரமே நடக்கும். அதுவும் இவர்கள் மூலமே நடக்கும். அப்படியான குழுவின் ஒருங்கிணைப்பாளரான பிரகாஷின் அயராத உழைப்பும், உள்ளன்பும், நேசிப்பும், பிரதிபலன்பாரா கர்மமும் என்னை உள்ளபடியே மனதை கசிய வைக்கிறது.

அப்படியானவரை நான் இங்கே இப்பவும் என் அகநக நட்பூக்கும் முகநூல் நட்பில் சொல்லா விட்டால் சொல்வதற்கான சரியான காலம் வாய்க்காது. அவர் மேன்மை மேன்மேலும் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.

(புகைப்படம்: ஜி.ஆர். பிரகாஷ் தன் தாய் மற்றும் மகளுடன்)

கா.சு.வேலாயுதன் Fb
------------------------------------------------------------------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையத்தின் நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா,

இன்று மாலை 5.30 க்கு  கோவை ஆர்த்ரா அரங்கில் நடைபெறுவதாக சென்ற மாதமே சிறுவாணி வாசக மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஜி.ஆர்.பிரகாக்ஷ் அவர்கள் புலனத்தின் மூலமாகவும், முகநூல் மூலமாகவும்,  மாதந்தோறும் அனுப்புகிற புத்தகங்களுடன் வைத்து அனுப்பிய அழைப்பிதழ் மூலமாகவும்,,, அறிந்து,,,,

மிக மிக சாதாரணன் ஒருவர் !
நேற்றைய பஞ்சாலைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்,,,

பத்திரிக்கை உலகின் மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் பழகிப் பேசி,,,

இப்பொழுதும், தன் தனித்தன்மை மாறாமலிருக்கிற கொங்கு நாட்டுச் சகோதரர்
 திரு . கா(ளியம்மாள்). சு(ப்பிரமணியன்). வேலாயுதம் அவர்கள்  விருது பெறும் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டுமென்பதனால்,,, சில பயணங்களை ஒதுக்கி விட்டு இன்றைய ஞாயிறின் மாலைப் பொழுதினில்,,,

கிருக்ஷ்ணம்மாள் கல்லூரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தேறினேன் !

    மாலைச் சூரியன் !
என்னைப் படம் பிடியடா ! பிள்ளாய்,,,,
இன்று முகநூலில் ,ஒரு ஐம்பது லைக்குகளுக்கு,,நான் கேரண்டி என்று உத்திரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்  ?

ஒடும் பேருந்திலிருந்து,,ஜன்னலுக்கு வெளியேவா ?,,,,
பொன்னந்தி மாலைப் பொழுதிலா,,,,? என்று நானும்,,அலைபாய்ந்து கொண்டிருந்த போது,,,,

நான் பயணித்த கோவையின் தனியார் பேருந்தானது,,,

 ஐந்து சிக்னல்களைத்தாண்டி,,,,
ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும்,,,
முன் சென்ற பேருந்தினைத் துரத்தாமல்,,,
பின்னால் வருகிற பேருந்தின் முகம் கண்டபின்னும் நகராமல்,,,,
பின்னால் வந்து முட்டுவது போல நின்ற பின்னே,,, மெல்ல நகரவேண்டும் என்கிற கோவையின் தனியார் பேருந்துகளின் விதிகளுக்குட்பட்டு நகர்ந்து கொண்டிருந்தது !

ஆறு மணிக்குள்ளாவது சென்று விடுவோமா ? என்று அலை பாய்ந்து கொண்டிருந்த போது,,,,
மூன்று முன்னாள் முதல்வர்கள் கைகாட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும்,,,

அட,,,
நாம,,இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம்,,வந்தே விட்டது,,,என்றபடி,, பேருந்திலிருந்து இறங்கினேன்,,,,

விழா அரங்கம் செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்தது !

காவல் துறை,,தன் பணியினைச் செய்து கொண்டிருந்தது !

கட்டுக்கடங்காத பெருங்கூட்டம் !
சாலை முழுவதும் ஆக்ரமித்திருந்தது !

அட !,,
சகோதரர் கா.சு.வேலாயுதன் கலக்குகிறார் !

இவ்வளவு கூட்டம்,,,!
அதுவும்,,
ஒரு பத்திரிக்கையாளருக்கு,,,,
ஒரு எழுத்தாளருக்கு,,வருகிறதென்றால்,,,,,,?

அடடா,,,,!
நேற்று முகநூலில் பார்த்த விளம்பர சுவரொட்டிகளில் மைக் பிடித்து சிரித்துக் கொண்டிருந்த  சகோதரர் !
கொடுத்து வைத்தவர் தான் !

எத்தனை இரு சக்கர வாகனங்கள் ?
எத்தனை மகிழுந்துகள் ?,,,
 மனசு சந்தோக்ஷப்பட்டது,,,,,,!
கூடவே,,,இது கூடிய கூட்டமா ?
கூட்டிய கூட்டமா ?,,, மனசு கேட்டது ?

ஆனாலும்,,,
கொங்கு நாட்டுக் காரர் !
அதிலும்,,,,சற்றுப் பொதுவுடமைப் பேசுகிறவர் கூட்டிய கூட்டமாக இருக்காது !

அப்படியெல்லாம்,,செய்பவராக இருந்தால்,,,,
அந்த கரங்களின் பேனா முனை,,,
எப்பொழுதோ,,,,வளைந்திருக்கும்,,,,?
சற்றும்,,நெருடலில்லாத மனிதரல்லவா !

அடேய்,,பிள்ளாய்,,,!
இது,,
இதுதான்,,உண்மையடா !
உள்மனசு இடித்துரைத்தது !

சாலைத் தடுப்பினைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்த போது,,,,
இப்படி,,இல்ல,,,,
அப்படி,,,வேறு வழி காட்டினார்கள் !

ம்ஹீம்,,,
இவிங்க,,முன்னாடிச் செல்ல முடியாது,,,,
வந்த பாதைக்கே சென்று,,,,
கோவை மக்கள் பெரும்பான்மையானவர்கள்,,,,யாரும்,,,,,
நடக்காத,,, கோவை பழைய தபால் நிலைய  நடைபாதை வழியாக,,,, நடக்கலானேன்,,,,

அங்கேயும்,,,
இரு போக்கு வரத்துக் காவலர்கள்,,,,
காற்றில் மாசு கலந்து கொண்டிருந்தார்கள் !,,,
நடைபாதையில்  மெல்ல   நடக்கலானேன்,,,,,,,,

விழா அரங்கம்,,,தாண்டியும்,,,
கூட்டம்,,,?
விழா,,,அரங்க வாயிலை மறித்தும்  மகிழுந்துகள் !

விழா அரங்கம்,,சிறியதென்பதனால்,,,,
பக்கத்தில்,,,,உள்ள
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,மாளிகையில் வைத்து விட்டார்களோ ?
நெசமாகவே பொறாமைப் பட்டேன் ?

ஆனால்,,,,
எதிர்ப்புற சுவரில்,,,,
பேரறிஞரும்,,புரட்சித் தலைவரும்,,,
சிரித்துக் கொண்டிருந்த சுவரொட்டிகளால்,,நிறைந்திருந்தது,,,!
சந்தேகம்,,தெளியவாரம்பித்தது,,
பொறாமை விலகவாரம்பித்தது !

அமைச்சர் ! கட்சி அலுவலகத்துக்கு வர்றதுக்கே,,இவ்வளவா ?
வாழ்க தேசம்,,என்றபடி,,,, நோக்க,,,

ஆனால்,,,
விழா அரங்கம் செல்லும் கட்டிடத்தின் உள்ளேயும்,,,காவலர்கள் !
அதிலும்,,பெண் காவலர்கள் !
சுண்டல் சாப்பிட்டு,,தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர் !

கொஞ்சம் ,,,
கொஞ்சமென்ன ? கொஞ்சம்,,,நிறையவே,,,
சந்தேகத்துடன் தான்,,,, மகிழுந்துகளைத் தாண்டி,,இருசக்கர வாகனங்களை விலக்கி நடக்கையில்,,,
விருது வழங்கும் விழா நெகிழி விளம்பர பதாகை கண்ணில் பட்டது !

கொஞ்சம் வெண்சுண்டலும்,,,
கொஞ்சம் தேநீரும் அருந்திய படியே,,
என்னை நானே,,,ஆசுவாசப்படுத்திக் கொண்டேன் !

விழா அரங்கின் படிக்கட்டுகளில் இறங்கவாரம்பித்தேன் !

படிக்கட்டுகளின் விளிம்பில் நின்றபடி,,,அரங்க வாயிலில்,
’’எழுத்தாளர் காசு.வேலாயுதனின் இரண்டு சிறுகதைகள் ‘’ என்கிற சிறு புத்தகமொன்றினை நண்பர்கள் கொடுத்தார்கள் !

முன் அட்டையில்,,,,
சகோதரர் காசு.வேலாயுதன்,,நம்மைப் பார்க்காமல்,,,,?
வானம் பார்த்துக் கொண்டிருந்தார் !

பின் அட்டையில்,,,,
நாஞ்சிலின் படத்துடன் விருதுக்காய் விஜயா பதிப்பகம் மகிழ்ந்து கொண்டிருந்தது !

குளிர்சாதன வசதிக்காய் அடைத்திருந்த கதவினைத் திறந்தேன் !

திருப்புகழ் ஒலி !
குறிஞ்சி நிலக் கடவுளை,,,
குமரனை,,,,
முருகனை,,வேலனை,,வேலாயுதனை,,,,,,,
 செல்வி ஸ்வேதா தன் தீந்தமிழ்க் குரலால் போற்றிப் பாடிக் கொண்டிருந்தார் !

இருக்கை  ஒன்றில்  அமர்ந்தேன் !
அமர்ந்து நோக்க,,,
என் முன்னே,,,வெள்ளைத்தலைகளும்,,, சாயக் கறுப்புத் தலைகளும்,,,
பின்னோக்க,,,,,  கோவை ராக் அமைப்பின் ரவிந்திரன் அண்ணா எப்பொழுதும் போல புன்னகைத்தபடியே,,,,
கரங்குவித்து விட்டு,,,
அட்டையைப் புரட்டினேன் !

‘’ அடைக்குந்தாழ் ‘’  என்றது ! தலைப்பு !
ஆம்,,,,
பல,,அடைக்குந்தாழ்களைத் திறந்த சகோதரர் காசு.வேலாயுதன் அவர்களின்  ’’அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ‘’

[ விழா நிகழ்வுகள்  அடுத்த பதிப்பில்,,,,,,,,? ]

Velupillai

-----------------------------------------------------------------------------------------------------------------------


 Kottiappan Shanmugam விருதினை வழங்பவர்கள் கோவை சிறுவாணி வாசகர் மையத்தினர். அதற்குரிய பரிசை வழங்குபவர் சென்னையை சேர்ந்த திரு. கிருஷ்ணகுமார் அவர்கள். சிறுவாணி மையம் வருடத்திற்கு ஒரே ஒரு நிகழ்ச்சியையே நடத்துகிறது. அது இந்த விருது நிகழ்ச்சி மட்டுமே. அதிலும் ஒரே ஒருவருக்கு மட்டுமே விருதளிக்கிறது. இந்த விருது பெறுபவரை தேர்ந்தெடுப்பது ஐவர் கொண்ட நடுவர் குழு . இதில் இறுதி முடிவு எடுப்பது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்.

வாழும் எழுத்தாளரின் எழுத்துக்கும், நேர்மைக்கும், உள்ளன்புக்கும், அவர் எழுத்துக்கும் சிறப்பு  செய்யும் நோக்கோடு, குழு மனப்பான்மையின்றி அவ் எழுத்தாளர் பெயரால் வருடம்  ஒருவருக்கு தரப்படும் விருது இது ஒன்றாகத்தான் இருக்கும். இது வெறுமனே ஒருவரின் எழுத்துக்கும், எழுத்தாளர் கொடுக்கப்படும் விருது அல்ல. விருது பெறுபவர் அவர் செய்த செயல்களில் எவ்வளவு நேர்மையாக, சமூக நோக்கோடு, உறுதியான உழைப்போடு செயல்பட்டிருக்கிறார் என்பதை தெளிந்து வழங்கப்படுவதாகும்.

இந்த விவரணைகள்  எல்லாம் எனக்கும் தெரியாது. இந்த விருது எனக்கு அறிவித்த பின் அது சம்பந்தப்பட்டவர்கள் பேசப் பேச எனக்கு கிடைத்த தகவல்கள். மற்றபடி என்னைப் பொறுத்தவரை இந்த விருதில் நாஞ்சில் நாடன் பெயருக்கே முக்கியத்துவம் தருகிறேன்.

அவர் எழுத்தில் மட்டுமல்ல, அதை உச்சரிக்கும் உச்சரிப்பில், மொழியை எடுத்தாளும் பாங்கில், செய்யும் விமர்சனத்தில், செயலில், நடவடிக்கையில் எல்லாமே தன் எழுத்து போலவே ஆற்றொழுக்காக செயல்படுபவர். அப்படியானவரிடம்  அவர் பெயரிலேயே விருது பெறுவது என்பதுதான் எனக்கான பெரும் பேறு.

 கா சு வேலாயுதன்

--------------------------------------------------------------------------------------------------------------------- சிறுவாணி வாசகர் மையம்

நாஞ்சில் நாடன் விருது விழா   02.02.2020 மாலையில்.

வாசிப்பு பல அற்புதங்களை நிகழ்த்தவல்லது ..மிகச் சிறந்த மனிதர்களை நம்மிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது என்பது என் வாழ்வில் மீண்டுமொருமுறை நிரூபணமான தருணம்.

தமிழுக்கு மிகப் பெருந்தொண்டாற்றியவர்கள் , பற்பல சாதனைகளைப் படைத்தவர்கள் எளிய தோற்றத்துடன் மேடையேறும் போது உடல் சிலிர்க்கத்தான் செய்கிறது.

நாலு வரி எழுதுவதற்கே மெனக்கெட வேண்டி இருக்கிறதே , வாழ்நாளெல்லாம் எழுதிக்கொண்டும்,வாசித்துக்கொண்டும் இருக்கிற இவர்களின் தீரா இலக்கிய தாகம் பிரமிக்க வைக்கிறது.

பேரணி,ஊர்வலம் என்கிற இக்கட்டான மாலைப்பொழுதில் சிரமம் பாராது வந்து அரங்கை நிறைத்த பெருமக்கள்.கோவைக்குப் பெருமை சேர்க்கும் பிரமுகர்கள் பலர் அவர்களுள்.

பதட்டத்திலும் அனலைக் கக்காத வார்த்தைகள் பேச கோவைக்காரர்களால் முடிகிறதென்றால் அந்த ஊரின் இதத்துக்கு இதம் சேர்க்கும் காலநிலை தான் காரணமாக இருக்கக் கூடும்.

RAAC foundation னின் ரவீந்திரன் சார் ரத்தினச்சுருக்கமாக உரையளித்துத் கூட்டத்தைத் தொடங்கினார்.

நாஞ்சில் நாடன் விருது பெற்ற  எழுத்தாளர் , பத்திரிக்கையாளர்
கா.சு.வேலாயுதன் அவர்களின்   நொய்யல் இன்று புத்தகம் குறித்தும் ,
அவரை பாராட்டியும் பேசினவர் பேராசிரியர் கண .சிற்சபேசன்.
சொற்பொழிவாற்றுகிறவர் பேசுகிற பேச்சென்றால் சும்மாவா ! பொழிந்து விட்டார்.

சிரித்து சிரித்து அனைவரின்  அகம் மலர்ந்தது முகத்தில் தெரிந்தது. எண்பத்தாறு வயதில் மனிதர் அசத்துகிறார்.
மனப்பூர்வமான வாழ்த்துரைகளை அருளுவதற்கு இவரைப் போன்ற நல்ல மனிதர்கள் வேண்டும். ..

ஸ்ரீனிவாசன் சார் உரை, முன்னவர் பேச்சில் சிரிப்பலைகள் எனில்,
இவரின் பேச்சில் ஆழ்ந்த அமைதியும் ,கவனமும் ...அரங்கில் அமர்ந்திருப்போரை இயல்பான பேச்சால் அதுவும் சிறுவாணி தொடங்கியது முதல் செயல்படுவது வரை தீர்க்கமாகச் சொல்லி கவனிக்க வைப்பதெல்லாம் ஸ்ரீனிவாசன் சார் போன்றவர்களால் மட்டுமே முடியும்.

விஜயா வேலாயுதம் அவர்கள் புத்தகங்களின் விற்பனை சரிவைச் சொன்ன போது வருத்தமாக இருந்தது.

நாஞ்சில் நாடன்  நீங்கள் இருக்கும் கோவையை ( மேற்கு திசை தானே!) வணங்குகிறேன். உங்கள் உரையை  நீங்கள் முடிக்கும் போது நேரமின்மையால் நான் கிளம்பி விட்டேன். இன்றும் ஒரு முறை shruti tv  தயவால்  உங்கள் பேச்சைக் கேட்டேன்.

விருது பெற்ற திரு. கா.சு வேலாயுதன்  தன் ஏற்புரையில் தன் மனைவியைப் பற்றி  பேசினது  நெகிழ்ச்சி. வாழும் காலத்திலேயே தொடக்கத்தில் அதிகம் சம்பாதிக்காத தன்னைத் தொந்தரவு செய்யாமல் தன்னை எழுதவும்,வாசிக்கவும் அனுமதி அளித்து உடன் வருகிற தன் மனைவியை சொன்னது நெகிழ்ச்சி.

அரங்கில் நான் அவரருகில் தான் அமர்ந்திருந்தேன்.அவர் கண்கள் கலங்கியிருந்தன.தன் கணவர் பெற்ற பரிசில் தன் கைகளுக்கு வந்தபோது சற்றே பதட்டமாக இருந்தார்.How sweet ..❤

ஸ்ரீனிவாசன் சார் சொன்னது போல இலக்கிய ஓட்டத்தில் இருப்பவர்களுக்கு இளைப்பாறத் தண்ணீர் தருகிற 
மாதிரி தான் இந்த விருதெல்லாம் என்றாலும்,
தருகிற அந்த மனது வாய்த்தவர்கள் மிகுந்த பாராட்டுதல்களுக்கு உரியவர்கள்.

முன்னதாக நாஞ்சில் நாடன் விருது பெற்ற
Jeeva Nanthan   ப.சரவணன்
நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த
Mutharasy Ramaswamy   ,GR Prakash மகள் பவித்ரா
Subhashini  Thirumalai மேம்
சிறுவாணியின் செயல்பாடுகள் பற்றிப் பேசிய
la sa ra Saptharishi   ,ரா.கி.ராவின் பேரன்
Rishaban srinivasan
சத்தியப்ரியன்  ,ரமேஷ் கல்யாண்


விழாவை மிகச் சிறப்பாக நடத்திய GR Prakash அவர் மனைவி, குடும்பத்தினர்.

வாசகர்களுக்கு இளைப்பாறுதல் வேண்டுமெனில் சிறுவாணி இலக்கிய விழாவிற்கு வருடந்தோறும் செல்லலாம்.

காணொளிகளுக்காக shruti TV  கபிலனுக்கு அன்பும் நன்றியும்.

விழாவில் காமிரா கவிதை எழுதின கவிஞர் Iyyappa madhavan அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

Saraswathy Gayathri fb

--------------------------------------------------------------------------------------------------------------------------







No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....