Thursday, January 21, 2021

கிணற்றுக்குள் காவிரி-ஜெ.பாஸ்கரன்

 





வெளியீடு

கிணற்றுக்குள் காவிரி-

டாக்டர் ஜெ.பாஸ்கரன் சிறுகதைகள்

---------------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர் ஜெ. பாஸ்கரன்.

• சென்னை இராமகிருஷ்ணா உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி- அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மத்திய அரசின் ‘நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப்’ கொடுக்கப்பட்டது.

• சென்னை மருத்துவக் கல்லூரியில் எம் பி பி எஸ், மற்றும் டிப்ளமா இன் டெர்மடாலஜி (தோல் மருத்துவம்)  , லண்டன் நேஷனல் ஹாஸ்பிடல் (QUEENS SQUARE), டிப்ளமா இன் கிளினிகல் நியூராலஜி (DIP IN CLINICAL NEUROLOGY) 

• 1982 முதல் தோல் சிறப்பு மருத்துவம் (இன்று வரை),  1992 முதல் நரம்பியல் சிறப்பு மருத்துவம் (இன்று வரை)

• 2002 முதல் மேற்கு மாம்பலம் சுகாதார மையத்தின் மெடிகல் சூப்பரிண்டெண்டெண்ட் , சென்னையில் தனியார் இயன்முறை (PHYSIOTHERAPY) கல்லூரிகளில் கடந்த 15 வருடங்களாக நரம்பியல் துறை வருகைப் பேராசிரியர் மற்றும் தேர்வாளர் (examiner).

• தமிழில் எழுதுவது மனதிற்குப் பிடித்தமானது. முகநூல், இணையம், வார, மாதப் பத்திரிகைகளில் அவ்வப்போது கதை, கட்டுரைகள் எழுதி வருவது. இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். 

• சரும நோய்கள் (2008) , வலிப்பு நோய்கள் (2010), தலைவலியும் பாதிப்புகளும் (2014), அப்பாவின் டைப்ரைட்டர் (2016) , 'தேடல்' சிறுகதைத் தொகுப்பு (2017), 'அது ஒரு கனாக்காலம்' - கட்டுரைத் தொகுப்பு, ‘குவிகம்’ கடைசிப் பக்கம் - கட்டுரைத் தொகுப்பு.         

• தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையினால், வலிப்பு நோய்கள் புத்தகம், மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் 2010 ஆம் ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிக் கௌரவித்தார்கள்.(2012)

• பவித்ரம் தொண்டு நிறுவனம் ‘சேவா சக்ரா’ விருது வழங்கிக் கௌரவித்தது. (2015). உரத்த சிந்தனை - வாசக எழுத்தாளர் சங்கம் ‘தலைவலி’ புத்தகத்துக்கு என்ஆர்கே விருதும் (சிறந்த கட்டுரைத் தொகுப்பு), ‘அப்பா என்னும் உன்னதமான உதாரண மனிதர்’ கட்டுரைக்கு  சிறந்த கட்டுரைக்கான விருதையும் வழங்கிக் கௌரவித்தது.(2014 - 2015).

• அப்பாவின் டைப்ரைட்டர் - வாழ்வியல் சார்ந்த கட்டுரைகள் கொண்டது. அவ்வப்போது முகநூல், இணைய தளம், மாதப் பத்திரிகைகள், சிற்றிதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இப்புத்தகத்தை அமெரிக்காவின் 'உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம்' சிறப்பு விருது வழங்கிக் கவுரவித்தது.

• சிறுகதைகள் - கலைமகள், தினமணிக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், உரத்த சிந்தனை இதழ்களில் வெளியாகின. கலைமகளின் கி.வா.ஜ நினைவுச் சிறுகதைப் போட்டியில் (2018) இவரது 'காப்பு' முதற்பரிசு பெற்றது. லேடீஸ் ஸ்பெஷல் சிறுகதைப் போட்டியில் (2018)  'நப்பின்னையாகிய நான்' ஆறுதல் பரிசு பெற்றது.

• நூற்றுக்கும் மேலான பொதுக் கட்டுரைகள், மருத்துவக் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி, நம் உரத்த சிந்தனை, லேடீஸ் ஸ்பெஷல், இலக்கிய பீடம், மக்கள் முழக்கம், தினமணி.காம், விருட்சம்.இன், குவிகம்.காம், இன்றைய செய்தி.காம் மற்றும் முகநூல் தளங்களில் வெளியாகி உள்ளன. தமிழ் இந்துவில் தலைவலி, வலிப்பு நோய்கள் குறித்து தொடர்கள் 10 வாரங்களுக்கு வெளியிடப்பட்டன. மக்கள் குரல் (திருநெல்வேலி பதிப்பு) பத்திரிகையில், 'ஆட்டிசம்' மற்றும் நரம்பியல் கேள்வி - பதில்கள் வெளியாயின. 

• டெக்கான் க்ரானிக்கல் 'துரித உணவுகள்' பற்றிய கட்டுரையை வெளியிட்டது.  இசை, மூளை, மனம் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளை 'நாத பிரம்மம்' என்ற இசை இதழ் வெளியிட்டது.

• பொதிகை, ராஜ், ஜெயா, கலைஞர், சங்கரா மற்றும் பெப்பர்ஸ் தொலைக்காட்சிகளில் மருத்துவம் மற்றும் இலக்கிய சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றது.

• சின்னத் திரையில் ....

 ராஜ் டிவி / ராஜ் டிவி ப்ளஸ்- ல் - மக்கள் மேடை, மருத்துவக் கேள்வி பதில் நிகழ்ச்சி (நேரடி ஒளிபரப்பு) , சங்கரா டிவியில் - டயல் a doctor (நேரடி ஒளிபரப்பு),  ஜெயா டிவியில் - ஹலோ டாக்டர்  (நேரடி ஒளிபரப்பு - இருமுறை).  சிறப்புத் தேன்கிண்ணம் (2016),  கலைஞர் டிவியில் - சந்தித்த வேளையிலே, இன்றைய விருந்தினர் (விடியல் வா நிகழ்ச்சியில்),

 பெப்பர்ஸ் டிவியில் - படித்ததில் பிடித்தது (2014),  வேந்தர் டிவியில் -உணவும் உணர்வுகளும் , நியூஸ் 7 சானல் - நேர்காணல்,   பொதிகை டிவியில் - எந்தையும் தாயும்- பேச்சு (2017). நூல் நயம் - 'தேடல்' புத்தகம் பற்றி உரையாடல் (2018), குட் நியூஸ் டிவியில் (shubvarththa) - வலிப்புகள், ஸ்ட்ரோக் பற்றிய பேச்சு.

• கைபேசி எண்: 09841057047.

-----------------------------------------------------------------------------------------------------

கிணற்றுக்குள் காவிரி....!

-(-ஜெ. பாஸ்கரன்.)

---------அன்புடன் ஆர்க்கே...!

வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம்,24 -5 சின்னம்மாள் வீதி, கே கே புதூர் கோவை 38.         விலை 160/- 

தொலைபேசி:ஜி ஆர் பிரகாஷ் 8778924880/9940985920

ஜெ. பாஸ்கரனின்   21 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. எழுத்துச் செல்வர் திருப்பூர் கிருஷ்ணனின் காத்திரமான முன்னுரை, கதைகளின் 

வளத்தையும், களத்தையும், திரட்சியையும் தீர்க்கமாகவே கோடிட்டு காட்டுகிறது. 

"தற்கால இலக்கியத்தில் தடம் பதிக்கும் சிறுகதைகள்" என அவரால் முன்மொழியப்படுகிற அச்சசல் அசல் வாழ்வுநிலை வெளிப்பாடு "கிணற்றுக்குள் காவிரி!".

நூலின் வடிவமைப்பும், ஓவியர் ஜீவாவின்  கண்கவர் அட்டைப்படமும் (சொக்க வைக்கும் அழகுச் செவ்வானம், கரைபுரளும் நதி, கரை கடக்க உதவக் காத்திருக்கும் பரிசல்கள், நதிக்கரை நாணல்) அதன் நுட்பமும் ஒரு நல்ல கதைகளின் அத்தாணி மண்டபத்தின் எழில் தோரணவாயில் போல அமைந்திருக்கிறது.

"வாழ்க்கைக்கு அடிப்படையான என்றும் நிலைபேறுடைய கருத்துக்களை வைத்துக் கதை எழுதுவது குறைந்து வரும் காலம் இது.சுவாரஸ்யத்திற்காக எழுதப்படும் பொழுதுபோக்கு கதைகளே மலிந்து விட்டன. நிரந்தரமான உண்மைகளை வைத்து எழுதும்போது அந்த இலக்கியம் சாகாவரம் பெற்றுவிடுகிறது"  என்கிற திருப்பூர் கிருஷ்ணனின் விமர்சனத்தராசில் 

ஹால்மார்க்  தரம் பக்கம் நிற்கிற சிறுகதைகள்.

ஒவ்வொரு சிறுகதையின்  தரம் உரைத்துப் பார்க்குமுன் அவற்றின் பொதுவான தன்மையைப்பற்றி குறிப்பிடுகையில் கதைமாந்தர்களும் கதைக்களமும் நடைமுறை வாழ்வியல் அனுபவங்களை ஒட்டியே அமைந்திருக்கிறது என்பது பரவலாக காணக்கிடக்கிறது. அதுவும் விக்ரமன் படங்களைப்போல எல்லோரும் நல்லவரே.  ஒரு எம் என் நம்பியார்வகை பாத்திரத்தைக்கூட கிணற்றுக்குள் காவிரிக்குள் பாதாளக்கரண்டி போட்டு தேட வேண்டியிருக்கிறது.

கதைகள் லேடீஸ் ஸ்பெஷல்,நவீன விருட்சம்,கலைமகள்,அமுதசுரபி,

கல்கி,தினமணிகதிர், வலம் இதழ்களில் வெளிவந்தவை.  சில பரிசுகள் பெற்றவை.

ஆசிரியரின் எழுத்துத்திறனின் வீச்சிற்கு அவரின் என்னுரையில் நல்ல முகாந்திரம் தென்படுகிறது. 


###"சிதம்பரம் தாண்டி, கொள்ளிடம் பாலத்தின்மேல் மெதுவாகச் செல்லும் ரயிலில் கன்னம் பிதுங்க, கீழே கரைபுரண்டோடும் காவிரியை விழிகள் அகலப் பார்த்துச்

சென்றிருக்கிறேன்.  சமீபத்தில் காவிரி புஷ்கரத்திற்கு சென்றபோது, ஆற்றுமணலில் ஆழ்துளையிட்டு, நீர் இறைத்து, தொட்டி போல் கட்டிய துலாக்கட்டத்தில் முதுகு நனையாமல் மூழ்கி எழுந்தபோது, கண்களில் மட்டும்

நீர் வழிந்தோடியது. "###


காவிரியின் கையறுகோல இன்றைய வறட்சியை இதைப்படிக்கிறபோது எவ்வளவு மனவலியுடன் வாசகனுக்குள் கடத்த முடிகிறது பாருங்கள். அதுதான் தொகுப்பின் அத்தனை கதைகளிலும் பரவிக்கிடக்கிறது. படிக்கிறபோது வாசகனையும் உணர்வு ரீதியாக உடன் பயணித்து லயிக்க வைக்கிறது.


எல்லாக்கதைகளிலும் புகுந்து புறப்படுவதைவிட சில கதைகளை பகிர்வது விமர்சன பார்வைக்கும் வாசகத் தேடலுக்கும் நல்ல வாய்ப்பாக அமையும் எனத் தோன்றுகிறது. 


அண்ணாசாமியும் ஜீரா ரசமும் சிறுகதை நல்ல ருசித்தேடலுக்கான நகைச்சுவை ருசி ரகத்தீனி. கடைசி வரி முத்தாய்ப்பில் இருக்கிறது அந்த உரைப்பின் ருசி.கதையை வாய்விட்டுச் சிரிக்காமல் கடப்பது கடினச்சவால். 


இடது கை சிறுகதையில் உளவியல், மனக்கிலேசம் , கூடவே மருத்துவப் பார்வை பங்களிப்பும் இருக்கிறது.  கதையின் த்வனி "இடது கை எந்த விதத்தில் வலதுகையைவிட குறைந்தது? வலது என்ன ஒசத்தி?" என்கிற கேள்வியில் தீர்க்கமாகிறது.


உடைந்த உண்டியல் சிறுகதை ஆதர்ச ஹீரோவை உபாசனை செய்யும் தீவிர ரசிகனைப் பற்றியது. நிழல் ஹீரோ யார் நிஜ ஹீரோ யார்  எனும் எளிய முடிச்சுதான். நடையால் தனித்துவம் பெறுகிறது.  கதையின் மொத்த புள்ளியும் ஹீரோவின் தாய் சொல்லும் "உனக்குத்தான் அவன் தலைவன். நான் அவனுக்கு வேண்டாத அம்மா" எனும் வ(வி)சனத்தில் குவிகிறது. 


எமெர்ஜென்சி ஒரு குறியீட்டுக்கதையின் கூறுகளை உள்ளடக்கியது.  வாங்கிய புதிய காருக்குள் அதன் சாவி எடுக்கப்படாமல் விடப்பட்டு பூட்டிக்கொண்ட காரினுள் சிக்குண்ட குழந்தையா,  மைல்ட் அட்டாக்  வந்த அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பரபர நொடிகளா, இரண்டும் சமகாலத்தில் எதிர்கொள்ள நேர்கிற நாயகன் ரமேஷ்.  Well handled knot.  இரண்டிற்குமான தீர்வு கதைக்கு மட்டுமல்ல நமக்கும் மனநிறைவைத் தருவது. 


"ஓ.." கதையின் களம் இந்தக்கால(!!??) ஒருபால் ஈர்ப்பை பூடகமாக சொல்ல முயல்கிறது.  கத்திமுனையில் நடப்பதுபோன்ற கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது.   ஷபானா ஆஸ்மி, நந்திதா தாஸ் நடித்து 1996ல் வெளிவந்த தீபா மேத்தாவின் "ஃபயர்"

போல வெளிப்படையாக இல்லாமல் வர்ணைனை, வசனக்குறிப்புகளால் தாமரை இலைத்தண்ணீர்போல பட்டும்படாமலும் -ஆனால் அதன் குணாம்சத்தை குறிப்பிடும் அர்த்தபுஷ்டியுடன் தொட்டுச்செல்வது ஆசிரியரின் எழுத்துவன்மைக்கு நல்ல உதாரணம்.


மனிதனுக்கும் இயற்கைக்குமான பிணைப்பை, தொடர்பை காலம் கடந்தும் நிறுவ விழைகிற "ஆவி" வந்த கதை. கதையில் காப்பாக வருகிற வேப்பமரம்தான் பிரதான பாத்திரம். உள்ளீடாக வரும் பார்வதி குமரேசனும் கதைக்குள் காப்புநிலையிலேயே பங்களிக்கிறார்கள். 


தொகுப்பின் தலைப்புக்கதை கிணற்றுக்குள் காவிரி மகாபுஷ்கரத்திற்கு போகும் சுந்தராம்பாள் பற்றியது. தான் வாழ்ந்த வாழ்க்கையையும் தன் உதிர வித்தான சீமாச்சுவையும் அவன் நொறுங்கிப்போன வாழ்நிலையையும் நினைந்து மறுகும் அவள் மனம். 


"நம்ம ஊர் கிணத்துக்குள்ள கங்கையே வரும்போது காவிரி வரமாட்டாளா என்ன?" என்கிற கும்பகோண, தஞ்சை மண் வாசனையில் கமழ்கிறது எழுத்தோட்டம்.


குங்குமம்-தொகுப்பின் முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. சமூக அடையாளத்தின் அங்கீகார ஏற்பு, மறுப்பு,மறுதலிப்பு இவற்றால் ஒரு மனம் படும் அவஸ்தைகளை மனித சந்நிதிகளில் தரிசனப்படுத்துகிறது.  தொகுப்பின் ஆகச்சிறந்த கதையென இதைக் குறிப்பிடத் தோன்றுகிறது. 


ஞானம் மெட்ராஸ் பாஷையில் வரிந்துகட்டுகிற (கீதோ) உபதேசக்கதை. பெரும்பாலும் உரையாடல்களில் நகர்கிற பாணியில் எழுதப்பெற்றிருக்கிறது. சுவாரஸ்யத்திற்கு சென்னைத் தமிழ் பேச்சு வழக்கு நன்கு உதவியிருக்கிறது. 


நப்பின்னையாகிய நான் பொருளியல் தேடும் மாடர்னிச உலகை நம்முன் முழுதாக உலவவிட்டு வேர்களைத்தேடும் வேல்யூ சிஸ்டத்தை ஜெனரேஷன் நெக்ஸ்ட் மூலம் மீட்டெடுத்து தாத்தாவை பெருமிதம் கொள்ள வைக்கும் நானில் நிறைவுறுகிறது.


பிரமை உரையாடல்களற்ற உத்தியில் எழுதப்பெற்றிருக்கிற கதை. அந்தக்காலத்தில் அதிக பயன்பாட்டில் கிராமப்புறங்களில் அதிகம் உலா வந்த டெஸ்க் கம் பெட்டி தன் கதையைச்சொல்கிற வடிவத்தில் செல்கிறது. ஒரு கட்டத்தில் வீடுகளின் கட்டமைப்பு மாற்றங்களில்   மரப்பெட்டி பொருந்தா பொருளாகிறது. வேண்டாத சாமான்கள் பட்டியலில் சேர்ந்து வெளியேற்றம் பெருகையில் அதற்குள்ளிருக்கும் மரமனது வருந்துவதாக காட்சியுறுகிறது.


விசும்பல்கள்- தனியாய் தவிக்க விதிக்கப்படுகிற திருமணமான பெண்ணின் வாழ்க்கையுள் நிகழ்கிற வாழ்நிலை, அவளின் வறுமை நிலையையும் அவளின் மீது விழுகிற ஆணாதிக்க ஆளுமை பார்வை அவஸ்தையும் அதனால் அவளுக்குள் ஏற்படுகிற மனக்குமைவும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. 


புறஉலகின் தாக்குதல்கள் அவளை தன் பிள்ளையிடம் சீறுவதில் அறச்சீற்றமுறுகிறது. 


"மானத்தை விற்று ஊர் சுற்றலா? போதும் நீ படித்தது. மூட்டை தூக்கி பிழைத்து உன் சம்பளத்தில் ஊர்  சுற்று " அறைகிறது நம் மனதுள். 

சில விசும்பல்கள் ஆறுதல்படுத்த முடியாதவைதான்.


மாரி கதை அதன் முடிவில் வருகிற மாதிரி வேற மாறி கதைதான். 


பொதுவாக கதைகள் அதனதன் கருப்பொருளையும் அதை கதையாக்கம் செய்யும் உருவாக்கத்திலும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் கூறுகளை வெளிப்படுத்துகிறது. 


குங்குமம், துணை ,தொலைத்தவன், விசும்பல்கள், முடிவு போன்ற கதைகள் குறுநாவல் அல்லது நெடுங்கதைக்கான நீட்சித்தன்மையை உள்ளடக்கி இருப்பது அந்தந்த கதைகளின் வலுவான வேர்களின் ஆழத்தை காட்டுகிறது. 


துவங்கிய உடனே வாசிப்பவனை கதைக்குள் ஈர்ப்பது, செரிவான அளவான காட்சிபடுத்துதல் மற்றும் உரையாடல்கள் எதிர்பாராத அல்லது வித்தியாசமான முடிவு முடிச்சு என்று ஆரோக்கியமான விஷயங்களாக சொல்லலாம். கதைமாந்தர்கள் கதைக்களத்துக்கு தகுந்த பாஷைகளில் உரையாடல் செய்வது கவனச்செதுக்கல் ரகம். 


கதை சொல்லும் நேர்க்கோட்டு பயணிப்பில் கதைகள் நாலைந்து பக்கங்களுக்கு தாண்டாமல் இருந்துவிடுவது முடிவு முனைப்பு சுவாரசியம்தான் என்றாலும் சில கதைகள் ஏழெட்டு பக்கங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டிருக்கலாமோ எனவும் தோன்றத்தான் செய்கிறது. 


கிணற்றுக்குள் காவிரி சிறுகதைத் தொகுப்பு,நெடுங்கதை, நாவல் என்று இன்னும் விஸ்தீரணமான கங்கா நதியாக பெருக்கெடுத்தோடுவதற்கான முன்னத்தி ஏராக இருக்கட்டும் என நூல் ஆசிரியரை வாழ்த்தலாம்.!

-------அன்புடன் ஆர்க்கே...!

-------------------------------------------------------------------------------------------------------------------------

#வாசிப்பு அனுபவம்

புத்தக வாசிப்பு அரிதான இன்றைய காலகட்டத்தில் நல்ல கதைகளைப்  படிப்பது கூட ஒரு பூர்வ ஜென்ம புண்ணியம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நல்ல கதைகளை படிப்பது, கொளுத்தும் வெயிலில் திடீரென்று பெய்யும் குளிர் மழையைப்  போல. அந்த விதத்தில் இந்த இரண்டு நாளாக நான் மெதுவாகப் பொழியும், அழகான மழையில் ஆனந்தமாக நனைந்தேன். 


சிறுவாணி வாசகர் மையம் மாதம் ஒரு நூல் திட்டத்தில் இந்த மாதம் வெளியிட்ட டாக்டர் திரு J. பாஸ்கரன் அவர்கள் எழுதிய "கிணற்றுக்குள் காவிரி என்ற சிறுகதைத் தொகுப்புதான் எனக்கு இத்தகைய உணர்வைத. தந்தது. இன்னும் இரண்டு புத்தகங்கள் இருக்கிறது என்றாலும் இதை முதலில் கையில் எடுத்தேன். புத்தகத்தின் வடிவமைப்பு,  இந்தக் கதைகளைப் பற்றிய திரு .திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் முன்னுரை என்னைப் படிக்கத் தூண்டியது.


ஒரு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும், சாதாரணமான சூழ்நிலைகளில் ஏற்படும் அசாதாரணமான சம்பவங்களை தைரியமாக எதிர் கொள்வது எப்படி ? என்பதை எளிய மனிதர்கள் இதில் நமக்கு கற்றுக்கொடுக்கிறார்கள்.ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர்கள் எடுக்கும் அற்புதமான முடிவுகள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கலங்காத மனம், இது இப்படித்தான் என்று ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்க்கச் சொல்லித் தருகிறது. போதனை என்று இல்லாமல் இயல்பான வார்த்தைகளே வாழ்க்கையின் ரகசியத்தை நமக்கு கற்றுக் கொடுத்து விடுகிறது. அசத்துகிறது ஒவ்வொரு கதைகளும்.


ஒவ்வொரு கதைகளும் மிகச் சிறப்பாக இருந்தாலும் ஒரு மூன்று கதைகள் மட்டும் எனக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது அதில் ஒன்று "கிணற்றுக்குள் காவிரி"


சுந்தராம்பாள் பாட்டியிடம் தான் எத்தனை ஒரு தீர்மானம்? யாரும் இல்லாமல் ஒற்றையாக வாழ்ந்தாலும், வழிதவறிய தன் மகனை ஏற்றுக்கொள்ள அவள்  மனம் துணியவில்லை. . மாயவரத்தில் அன்னதான கூடத்தில் குடிகாரனாகத் தன் மகனைப் பார்த்த வேதனை அவளுக்குள் இருந்தாலும், அவனை ஒதுக்கி விட்டு வந்து விடுகிறாள். அவனைத்  தலை முழுகும் ஆவேசமும் பாட்டியிடம் இருக்கிறது. அதே சமயம் பெற்ற வயிறும் குலுங்குகிறது. ஒரு குடம் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டு வந்தவள்  அவனுக்காக தூணுக்கடியில் அலர்ந்து ஓவென்று பாட்டி அழும்போது. நமக்கும் ஒருதுளி கண்ணீர் துளிர்க்கிறது.


அடுத்து "துணை".வாழ்வில் நம்மைத் தவிர நமக்கு வேறு யாரும் துணை இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நமக்கு உணர்த்துகிறது. துணை என்று எதுவுமே இல்லை. இந்த உலகில்  நீயோ நானோ நிரந்தரமில்லை.  எனவே நிரந்தரமானவற்றை நேசிப்பது தான் வாழ்வின் ஆதார சுருதி என்ற அந்த தாத்தா கூறுவதுபோல்  இயற்கையும் நமக்குள் இருக்கும் மனிதநேயமும் தான் இந்த வாழ்க்கையில் நமக்குத் துணை.  இயற்கையை நேசிப்பதும் மனித நேயத்துடன் நடமாடுவதும்தான் வாழ்வதக்கான அர்த்தத்தைத் தருகிறது எனப் பளிச்சென்று கூறுகிறது இந்தக் கதை. என் மனதில் தங்கி விட்ட வார்த்தைகள்.


அடுத்து தன்னுடைய கதையைச் சொல்லும் சாய்வு மேஜை. "பிரமை". ஸ்கூல் படிக்கும்போது என்னிடமும் இப்படி ஒரு மேஜை இருந்தது. கல்லூரி வரை இருந்தது. அதில் அமர்ந்து எழுதிதான் முதல் கதை ஆனந்த விகடனில் வந்தது. எனக்கு ரொம்ப ராசியான மேஜை. ஒரு காலத்தில் உளுத்துப் போய் ,உடைந்து போய், ஊரை காலி செய்து வரும்போது அதையும் தூக்கி போட்டு விட்டு வந்தோம். இப்படித்தான் காலப்போக்கில் நம்மிடம் இருப்பதெல்லாம் மறைந்துவிடுகிறது. ஆனால் அது தரும் இனிமையான நினைவுகள் மட்டும் நம்மை விட்டுப் போவதில்லை. அதை மிக அழகாகக்  கூறியது மேஜை பெட்டி. மரத்திற்கும்  உணர்வுகள் உண்டு. உண்மைதான். நம் மனதின. வடிகால் அல்லவா சில ஜடப் பொருள்கள்.


நிறைவான கதைகளைப் படித்த திருப்தி மனதிற்குள்.  நான் இவரின் கட்டுரைகளைப் படித்து இருக்கிறேன். முகநூலிலும் சங்கப்பலகையிலும்  எழுதும் பதிவுகளையும் படித்திருக்கிறேன். அனைத்திலும் ஒரு ஆழ்ந்த, சமூகத்தின் மீதான ஆதங்கமும், சின்ன எள்ளலும், லேசான நகைச்சுவை இழையோடி  படிப்பவர்களைத் தனக்குள் இழுத்துக் கொள்ளும். அந்த வகையில் கிணற்றுக்குள் காவிரி நம்மை ஜிலுஜிலுவென்று இழுத்துக் கொள்கிறது.


எளிய,தெளிவான எழுத்து. படிப்பவர்களை அந்தச் சூழலுக்கே கொண்டு செல்கிறது.. திருப்பூர் கிருஷ்ணன் சார் சொல்லுவது போல் ஒரு மருத்துவரின் படைப்பு ஆரோக்கியமான படைப்பாகத் திகழ்கிறது. ஒவ்வொரு கதைகளும் சிறப்பான தளத்தில் அமைந்திருக்கிறது. மனதில் தங்கியவை என்றால் புத்தகம் முழுவதையும் சொல்லலாம். காப்பு,விருது,ஓ, என்று 21 கதைகள். நான் சொல்வதை விட வாங்கிப் படியுங்கள். கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதன் வாசனையோடு படிக்கும் சுகம் வேறு எதிலும் கிடையாது. படித்து, ரசிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

ஜி ஏ பிரபா Fb

-------------------------------------------------------------------------------------------------------------

"தேனருவியின் ருசியனுபவம் » Vimarsanam Web"

  http://vimarsanam.in/siruvani-sirukathaikal-2020-review/

-------------------------------------------------------------------------------------------------------------

















கலைமகள் ஜூன் 2021 இதழில்.....




No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....