Thursday, January 21, 2021

தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரதி வண்ணப்படம் -

 



11.12.2021

பாரதியார் பிறந்தநாளான இன்று முதல் சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்கள் மற்றும் 2000 பேருக்கு ஓவியர் ஜீவா வரைந்த பாரதி வண்ணப்படம் (A4)வழங்கவுள்ளோம்.

 தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரதியார் படம் இருக்கவேண்டுமென்ற நோக்கத்தில் எங்களால் இயன்ற சிறு முயற்சி இது.

 இந்நோக்கம் உருவாகக் காரணமான திரு.சோ.தர்மன் ஐயா அவர்களின் சிலநாட்களுக்கு முந்தைய பதிவு கீழே.

--------------------

"என் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தும் போதே கண்ணில் தெரியும் மகாகவி பாரதியாரின் போட்டோ.வெள்ளிக் கிழமை தோறும் என் மனைவி பூ போடுவாள்.1980லிருந்து இருக்கிறது.தற்போது வீட்டைக் கொஞ்சம் மாற்றியமைத்தேன்.ஆகவே புதியதாக ஒரு போட்டோ வாங்கி மாட்டலாம் என்று கோவில்பட்டியிலுள்ள அனைத்து போட்டோ பிரேம் கடைகளிலும் கேட்டேன்.எங்கேயுமில்லை.படம் வாங்கி வாருங்கள் பிரேம் பண்ணித் தருகிறோம் என்று சொன்னார்கள்.எல்லா புத்தகக் கடைகளிலும் கேட்டேன்.பாரதியார் படமில்லை.எட்டயபுரத்தில் கிடைக்கும் என்றார்கள்.அங்கேயுமில்லை.

      நேற்று திருநெல்வேலியில் போட்டோ பிரேம் கடை முழுவதும் அலைந்தும் கிடைக்கவில்லை.

கடைசியில் ஒரு ஸ்டேஷனரி கடையில் இந்த ஒரு படம் மட்டுமே கிடைத்தது.வாங்கி போட்டோகடையில் கொடுத்து லாமினேஷன் பண்ணி வாங்கினேன்.

     எல்லா போட்டோ பிரேம் கடைகளிலும் விதவிதமான போஸ்களில் நிறைந்து கிடக்கின்றன ஜாதித்தலைவர்கள் அரசியல் தலைவர்களின் போட்டோக்கள்.அவற்றில் எழுதியிருக்கும் வாசகங்களைப் படித்தால்  தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.அடைமொழிகளும் பட்டங்களும் அடேங்கப்பப்பா.

       கடைக்காரர் சொன்னார்.பாரதி படமெல்லாம் விற்காது சார்.யார் வாங்குவாங்க.உங்களை மாதிரி வாத்தியார்மாருங்க யாராவது வாங்கி பள்ளிக்கூடத்தில் மாட்டுவாங்க என்றார்.

 ஒரு மகாகவி.

சுதந்திரப்போராட்டத் தியாகி.

ஜெயில்தண்டனை, தலைமறைவு வாழ்க்கை.

எட்டயபுரம் மன்னர் கொடுத்த ராஜ வாழ்க்கையை உதறிவிட்டுப் போனவர். 

சாஸ்த்திர சம்பிரதாயங்களை நிராகரித்த முற்போக்குவாதி..

பிராமணன் என்று ஏனையோரும் நிராகரிக்கிறார்கள்.ஆனால் காலம் பாரதியை ஒரு போதும் நிராகரிக்காது.

தமிழ் வாழ்க.

நன்றி- திரு சோ.தர்மன்,ஓவியர் ஜீவா,




தன்னை வரைந்தவரிடம் சென்று சேர்ந்த பாரதி.
(ஓவியர் ஜீவா அவர்கள்)

------------------------------------------------------------------------------------------------------------------------

எல்லா உயிரும் இன்பமெய்துக.
எல்லா உடலும் நோய்தீர்க.
எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க.
'தான்வாழ்க.
அமுதம் எப்போதும் இன்ப மாகுக.
 

பாரதி  (காட்சி)


                                                                

பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர்,முனைவர் சி.சித்ரா அவர்களிடம் வழங்கிய 

சித்திர பாரதியும், "சித்திர"பாரதியும்.

------------------------------------------------------------------------------------------------------

                      "அனைவர் இல்லத்திலும் பாரதி படம்"

என்கிற பேராசை மட்டுமல்லாது "பெரிதினும் பெரிது" கேட்கச் சொன்ன பாரதியின் படத்தை எங்களது சிறு முயற்சியாக சிறுவாணி உறுப்பினர்கள் மற்றும் பாரதி அன்பர்களுக்குக் கொடுக்கத் துவங்கிவிட்டோம்.

 

நன்றி-

ஓவியர் ஜீவா,விலையின்றி அச்சிட்டுக் கொடுத்த திரு.ரவி அவர்கள்.

 

மேலும் விவரங்களுக்கு-

https://m.facebook.com/story.php?story_fbid=2958842047679694&id=100006617824711

-------------------------------------------------------------------------------------------------------

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி

டாக்டர் உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்                                                                                                           

 6     சுப்பிரமணிய பாரதியார்

                                                                             பிறந்ததேசம், பழகும் மனிதர்கள் முதலிய தொடர்புகளால் ஒருவருடைய வாழ்க்கையில் சில பழக்கங்கள் அமைகின்றன. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் எட்டையபுரத்திற் பிறந்தவர். இவர் பிறந்த பாண்டி நாடு தமிழுக்கு உரிய நாடு. தமிழ் நாடென்று பழைய காலத்தில் அதற்குத்தான் பெயர். கம்பராமாயணத்தில் ஆஞ்சநேயர் முதலியவர்கள் சுக்கிரீவனால் தென்தேசத்துக்கு அனுப்பப்பட்ட போது அங்கே உள்ளவற்றைச் சுக்கிரீவன் சொல்லுவதாக உள்ள பகுதியொன்றுண்டு; அங்கே ஒரு பாட்டில்,

தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன்

                தமிழ்ச்சங்கம் சேர்கிற் பீரேல்

என்றுமவ ணுறைவிடமாம்

என்று அவன் கூறியதாக இருக்கிறது; “நீங்கள் பாண்டிய நாட்டை அடைந்தால், அங்கே உள்ள பொதியில் மலைக்கருகில் செல்லும் பொழுது போகும் காரியத்தை மறந்துவிடக்கூடாது; ஏனென்றால் அம்மலையில் அகத்தியருக்குரிய தமிழ்ச் சங்கத்தை அணுகினால் தமிழ் நயத்தில் ஈடுபட்டுவிடுவீர்கள்என்று அவன் சொன்னதாகத் தெரிகிறது. இதனால் பாண்டி நாட்டின் பெருமை வெளிப்படுகிறதல்லவா?

பாரதியார் பிறந்த எட்டையபுர ஸமஸ்தானத்தில் பல வித்துவான்கள் இருந்தார்கள். அந்த ஸமஸ்தானத்து வித்துவானாகிய கடிகைமுத்துப் புலவருடைய பெருமையை யாரும் அறிவார்கள். அவருடைய மாணாக்கருள் ஒருவராகிய உமறுப் புலவ ரென்னும் முகம்மதிய வித்துவான் முகம்மத் நபியின் சரித்திரமாகிய சீறாப் புராணத்தை இயற்றியிருக்கிறார். அந்நூல் ஒரு தமிழ்க் காவியமாக இருக்கிறது. எட்டையபுரத்தில் அங்கங்கே உள்ளவர்கள் தமிழ்ப் பாடல்களைச் சொல்லியும் கேட்டும் இன்புற்று வருபவர்கள். இதனால் பாரதியாருக்கு இளமை தொடங்கியே தமிழில் விருப்பம் உண்டாயிற்று. அது வர வர மிக்கது.

இவர் இளமையில் ஆங்கிலக் கல்வி கற்றார். தம்முடைய தமிழறிவை விருத்தி செய்துகொள்ளும் பொருட்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்திற் சேர்ந்து சில காலம் படித்தார். சிறு பிராய முதற்கொண்டே இவருக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டாயிற்று. அக்காலத்திலேயே தேசத்தின் நிலைமை இவருடைய மனத்திற் பதிந்தது. தெய்வத்தினிடத்திலும், தேசத்தினிடத்திலும், பாஷையினிடத்திலும் அன்பில்லாதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார். முயற்சியும் சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார். புதிய புதிய கருத்துக்களை எளிய நடையில் அமைத்துப் பாடவேண்டுமென்ற உணர்ச்சி இவருக்கு வளர்ந்து கொண்டே வந்தது.

இவர் சிலகாலம் சேதுபதி ஹைஸ்கூலில் பண்டிதராக இருந்ததுண்டு. பிறகு, சென்னைக்கு வந்தார். இங்கே ஸ்ரீ

ஜி. சுப்பிரமணிய ஐயர் இவரிடத்தில் ஈடுபட்டுச் சுதேசமித்திரன் ஆசிரியர்களுள் ஒருவராக இருக்கச் செய்தார். கட்டுப்பாடான வேலைகளைச் செய்வதிற் பிரியமில்லாத பாரதியார் அந்த வேலையில் அதிக காலம் இருக்கவில்லை.

சென்னையில் இவர் இருந்த காலத்தில், நான் இவரோடு பலமுறை பழகியிருக்கிறேன். பிரசிடென்ஸி காலேஜில் வாரந்தோறும் நடைபெறும் தமிழ்சங்கக் கூட்டத்துக்கு வருவார்; பேசுவார்; புதிய பாட்டுக்களைப் பாடுவார். வருஷ பூர்த்திக் கொண்டாட்டங்களில் புதிய செய்யுட்கள் செய்து வாசிப்பார். ஒரு முறை, வி. கிருஷ்ணசாமி ஐயர் தலைமையில் அச்சங்கத்தில் ஜி.ஏ. வைத்தியராமையர் பேசினார். கிருஷ்ணசாமி ஐயருடைய தமிழபிமானமும், தமிழ் வித்துவான்களை ஆதரிக்கும் இயல்பும் தெரியாத பலர், ‘இவருக்குத் தமிழ்ப் பாஷையில் பழக்கம் இல்லையே; தமிழில் என்ன பேசப் போகிறார்?’ என்று நினைத்தனர். அவரோ, “தமிழைப் பற்றி அதிகமாகப் பேசுவானேன்; உலகத்திலுள்ள பல பாஷைகளில் மொழிபெயர்க்கப்பட்டு விளங்கும் திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றிய பாஷை இந்தப் பாஷை. நவரஸமும் பொருந்திய இராமாயணத்தைக் கம்பர் செய்த பாஷை இது. எல்லோருடைய மனத்தையும் கரைத்து உருக்கித் தெய்வ பக்தியை உண்டாக்கும் தேவாரத்தை நாயன்மார்கள் இயற்றிய பாஷை இது. ஆழ்வார்கள் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடிய பாஷை இதுஎன்று உத்ஸாகத்தோடு பிரசங்கம் செய்தார். கேட்ட யாவரும் ஆச்சரியமுற்றார்கள். அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த பாரதியார், அந்தப் பிரசங்கத்தில் மிகவும் ஈடுபட்டார். பின்பு கிருஷ்ணசாமி ஐயர் பாஷையின் பெருமையையும், தேசத்தின் பெருமையையும் வெளிப்படுத்தி யாவருக்கும் விளங்கும்படியான  பாட்டுக்களைப் பாடியனுப்ப வேண்டுமென்று என்னிடம் சொன்னார். எனக்கு அவகாசம் இல்லாமையால் வேறொருவரை அனுப்பினேன். அவருடைய பாட்டுக்கள் அவருக்குத் திருப்தியை அளிக்கவில்லை. பிறகு பாரதியாரே அவருடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். ஸ்ரீ கிருஷ்ணசாமி ஐயரது பிரசங்கத்தில் இருந்த கருத்துக்களே பாரதியார், “கம்பன் பிறந்த தமிழ் நாடுஎன்பது போன்ற பகுதிகளை அமைத்துப் பாடுவதற்குக் காரணமாக இருந்தன.

தேசத்தின் பெருமையை யாவரும் அறிந்து பாராட்டும் படியான பாட்டுக்களைப் பாடவேண்டுமென்ற ஊக்கம் இவருக்கு நிரம்ப இருந்தது. அதனால் இவர் பாடிய பாட்டுக்கள் மிகவும் எளிய நடையில் அமைந்து படிப்பவர்களைத் தம்பால் ஈடுபடுத்துகின்றன. இவர் உண்மையான தேச பக்தியுடன் பாடிய பாட்டுகளாதலின் அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன.

பாரதியார் தேசீயப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும் பாடியிருக்கிறார். இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். இவர் சங்கீதத்திலும் பழக்கம் உடையவர்.

கவிகளின் தன்மையை உபமானமாக அமைத்து ஒரு புலவர்,

கல்லார் கவிபோற் கலங்கிக் கலைமாண்ட கேள்வி

வல்லார் கவிபோற் பலவான்றுறை தோன்ற வாய்த்துச்

செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத்

தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள இறுத்த தன்றே

என்று சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப விளங்குபவை இவருடைய செய்யுட்கள். இப்பாட்டில், “தேசத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ளஎன்றது இவருடைய பாட்டுக்களுக்கு மிகவும் பொருத்தமுடையதாகும்.

பாட்டுக்களின் பாகம் ஐந்து வகைப்படும். அவை நாளிகேர பாகம், இக்ஷு பாகம், கதலீ பாகம், திராக்ஷா பாகம், க்ஷீர பாகம் என்பனவாம். நாளிகேர பாக மென்பது தேங்காயைப் போன்றது. தேங்காயில் முதலில் மட்டையை உரிக்க வேண்டும்; பிறகு ஓட்டை நீக்க வேண்டும்; அதன் பிறகு துருவிப் பிழிந்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த வகையிலுள்ள பாட்டுக்கள் சில உண்டு. அதைப் பாடுபவர்கள் தம்முடன் அகராதியையும் எடுத்துக் கொண்டு போக வேண்டும். சில சமயங்களில் அவர்களுக்கே தாங்கள் செய்த பாட்டுக்களுக்கு அர்த்தம் விளங்காமற் போய்விடும்.

இக்ஷு பாக மென்பது கரும்பைப் போன்றது. கரும்பைக் கஷ்டப்பட்டுப் பிழிந்து ரஸத்தை உண்ணவேண்டும். கதலீ பாக மென்பது வாழைப் பழத்தைத் தோலுரித்து விழுங்குவது போலச் சிறிது சிரமப்பட்டால் இன்சுவையை வெளிப்படுத்துவது. திராக்ஷா பாகம் முந்திரிப் பழத்தைப் போல எளிதில் விளங்குவது. க்ஷீர பாகம் அதனிலும் எளிதில் விளங்குவது; குழந்தை முதல் யாவரும் உண்பதற்குரியதாகவும், இனிமை தருவதாகவும், உடலுக்கும் அறிவுக்கும் பயன் தருவதாகவும் இருக்கும் பாலைப்போல இருப்பது. பாரதியாருடைய கவிகள் க்ஷீர பாகத்தைச் சார்ந்தவை. சிலவற்றைத் திராக்ஷா பாகமாகக் கொள்ளலாம்.

ஆங்கிலம், வங்காளம் முதலிய பாஷைகளிற் பழக்கமுடையவ ராதலால் அந்தப் பாஷைகளிலுள்ள முறைகளை இவர் தம் கவிகளில் அமைத்திருக்கிறார். இவருடைய கவிதைகள் ஸ்வபாவோக்தி யென்னும் தன்மைநவிற்சி யணியை யுடையவை. பழைய காலத்தில் இருந்த சங்கப் புலவர்கள் பாடல்களில் தன்மை நவிற்சிதான் காணப்படும். அனாவசியமான வருணனைகளும் சொல்லடுக்குகளும் கவியின் ரஸத்தை வெளிப்படுத்துவனவல்ல. சில காலங்களில் சில புலவர்கள் தங்கள் காலத்திலிருந்த சில ஜமீன்தார்கள், பிரபுக்கள் முதலியவர்களுடைய வற்புறுத்தலுக்காக அனாவசியமான வருணனைகளை அமைத்ததுண்டு.

பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேச பக்தியும் ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும், நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன.

இவருடைய வசனத்தைப்பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். பாட்டைக் காட்டிலும் வசனத்திற்குப் பெருமை உண்டாயிருப்பதன் காரணம், அது பாட்டைவிட எளிதில் விளங்குவதனால்தான். பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது. வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறு வாக்கியங்களால் அமைந்தது; அர்த்தபுஷ்டி யுடையது. இவருடைய கவிகளின் பொருள் படிக்கும்போதே மனத்துக்குள் பதிகின்றது. வீர ரஸம், சிருங்கார ரஸம் ஆகிய இரண்டும் இவருடைய பாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்.

இவருடைய பாட்டுக்கள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ்நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதலிய இடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில் சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு. மணவைமன் கூத்தன் வகுத்தகவி, தளைபட்ட காலுட னேகட லேழையுந் தாண்டியதேஎன்று ஒரு புலவருடைய கவியைப் பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார். ஸ்ரீ ராமனுடைய கவியாகிய ஆஞ்சநேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன் கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது. ஸ்ரீ ராமனுடைய கவி தளையில்லாமல் தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமல்ல. இந்தப் புலவர் கவியோ, தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கின்றார். தளை யென்பதற்கு விலங்கென்றும் கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள். இந்தப் பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.

பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்ற கொள்கையை யுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ்நாட்டின் புகழாகும்.

1936இல் அகில இந்தியக் காங்கிரஸின் பொன்விழாவில்

சென்னைக் காங்கிரஸ் மண்டபத்தில் பாரதியாருடைய

படம் திறக்கப்பட்டபோது செய்த பிரசங்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------------

பாரதியார் இறந்தபிறகு 34 ஆண்டுகள் செல்லம்மா உயிர் வாழ்ந்து இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில்தான் தனது இரண்டாவது மகள் சகுந்தலாவிற்குத் திருமணம் செய்து வைத்தார். பாரதி ஆஸ்ரமத்தை உருவாக்கி அவரது பாடல்களின் முதல் தொகுதியை புத்தகமாக வெளியிட்டார். தனது இரண்டாவது மகளுக்கு கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். பாரதி பிரசுராலயம்நிறுவனத்தை நான்காயிரம் ரூபாய்க்கு விற்று, மகள் திருமணக் கடனுக்காக 2,500 ரூபாயை அடைத்து விட்டார். இறுதியாக, பாரதியார் கவிதைகளை விற்று வெறும் 1,500 ரூபாய் மட்டுமே செல்லம்மா பெற்றார்.கயிற்றுக் கட்டிலில் படுத்தபடுக்கையாக, சுயநினைவு இல்லாத சூழ்நிலையிலும் வாயைத் திறந்தால் பாரதி பாட்டு... குறிப்பாக கண்ணன் பாட்டு வரும்.

"திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்".

இந்த வரிகளை திரும்ப, திரும்பச் சொல்லி வந்தார்.பாரதியின் எழுத்துக்களை பிரசுரமாக்கிய செல்லம்மா முன்னுரை யில் எழுதினார்:

‘‘தமிழ்நாட்டு மக்களே, நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.அவர் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச

கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும்,சண்டைகளும்தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன.

எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன். அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத் திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன். நீங்கள் நீடூழி வாழ்க.பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

 ----------------------------------------------------------------------------------------------------

உயர்திரு பாரதியார்

(ஞானக்கூத்தன்)

 

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்

ஆடினார் இளம் பெண்கள் இருவரேதோ

பாட்டுக்கு. எவெரெழுதித் தந்தா ரந்தப்

பாட்டென்று நான் கேட்டேன், உம்மைச் சொன்னார்

சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்

சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்

எவெரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த

முகம் துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்

மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்

துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்

கவிஞரில்லாத் தமிழகத்தில் எவெரெல்லாமோ

கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு

அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்

கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்

பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்

நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு.

 ------------------------------------------------------------------------------------------------------------

1936-ல் உ.வே.சா. ஒரு நூலுக்கு எழுதிய அணிந்துரையில், ‘எட்டயபுரம்ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரை உலகம் நன்கறியும். பாரதியென்றால் அவரேயென்று குறிப்பிடும் பெருமை வாய்ந்தவர் அவர். பெரியோர் முதல் பாலர் ஈறாக எல்லோராலும் நன்கறியப்பட்ட தகுதிவாய்ந்தவர். எனக்கு மிக்க பழக்கமுள்ளவர்’ எனத் தனக்கும் பாரதிக்குமான தொடர்பைக் குறிப்பிட்டிருக்கிறார். உ.வே.சா.வின் அணிந்துரை பெற்ற அந்த நூலின் தலைப்பு ‘கவிச்சக்கரவர்த்தி சுப்ரமண்ய பாரதி சரிதம்’ என்பது. பாஸ்கரதாஸ் தொடங்கிவைத்த ‘கவிச்சக்கரவர்த்தி’ பட்டத்தை உ.வே.சா.வும் அங்கீகரித்திருக்கிறார். தமிழில் கம்பனுக்கு அடுத்த கவிச்சக்கரவர்த்தி பாரதிதான் என்ற உண்மை ஓங்கி ஒளிபெறட்டும்.


ய.மணிகண்டன்

https://www.hindutamil.in/news/opinion/columns/610566-bharathi.html

--------------------------------------------------------------------------------------------------------

 இப்போது 

எனது உயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன. 

எனது உடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன. 

என் உள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது. 


இது எனக்குப் போதும்.


 பாரதி

(சக்தி)


கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து 

குமையாதீர் ! 

சென்றதனைக் குறித்துக் கவலை வேண்டாம்

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி  இன்புற்றிருந்து வாழ்வீர்;

தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


பாரதி

(சென்றது மீளாது)

------------------------

 எடுத்த காரியம் யாவினும் வெற்றி !

எங்கு நோக்கினும் வெற்றி !

மற்றாங்கே,

விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி !


எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி  !

எங்கும் வெற்றி !

எதனிலும் வெற்றி !


பாரதி(வெற்றி)

—---------------

 தானம் வேள்வி தவங்கல்வி யாவும்

தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,

வானம் மூன்று மழைதரச் செய்வேன்

மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;

மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை

வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,

நான்விரும்பின காளி தருவாள்.


பாரதி

(காளி தருவாள்)

..------------------------------------------------------------------------------------------

கண்ணம்மா-எனது குல தெய்வம்


ராகம்-புன்னாக வராளி


பல்லவி

நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!

நின்னைச் சரணடைந்தேன்!


சரணங்கள்


பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)


மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்

குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்)


தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும் வணம்

(நின்)


துன்ப மினியில்லை. சோர்வில்லை,தோற்பில்லை,

அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

(நின்)


நல்லது தீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

(நின்)


இப்பாடலுக்கான சுட்டி காமெண்ட்டில் உள்ளது 


#மகாகவி_பாரதியார்

#பாரதியார்


#பாரதியார்_கவிதை

#நின்னைச்_சரணடைந்தேன் 


#பாரதியார்கவிதைநின்னைச்_சரணடைந்தேன்


..Bombay Jeyashree-Ninnai Saran Adainthen-Bharathiyar 


https://m.youtube.com/watch?v=rSKxP_UCi7o

------------------------------------------------------------------------------------------------------

பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’: பாரதி வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!

puthiyathalaimurai.com   CM Doss


'விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே' என்ற பாரதியாரின் வரிகள் மிகவும் பிரபலம். பறவைகளின் சுதந்திரம் குறித்தும் அதனிடம் இருந்து மானிடர்கள் கற்றுக்கொள்ள வேண்டி பாரதியார் எழுதிய அந்த வரிகள் இன்று காலம் கடந்து நிற்கிறது. ஆனால் அந்த வரிகள் பின்னால் நடந்த சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது. வறுமையின் பிடியில், பசியின் கொடுமையில் பிறந்த புரட்சிகரமான வரிகள் அவை.


பாரதியார் 10 வருடங்கள் புதுச்சேரியில் இருந்தார். அங்கு அவர் இந்தியா என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தார். அப்போது அந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மண்டயம் சீனிவாச ஆச்சாரியார். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள். சீனிவாச ஆச்சாரியாருக்கு யதுகிரி என்ற மகளும் உண்டு. 10வயது சிறுமியான யதுகிரி பாரதியாருக்கு செல்லப்பிள்ளை. அடிக்கடி தன்னுடைய கவிதைகளையெல்லாம் யதுகிரிக்கு படித்துக் காட்டுவார் பாரதி. 10வயதான யதுகிரி பாரதியாரின் பாடல்களை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார். இன்று பெரிய கவியாக கொண்டாடப்படும் பாரதி, அவர் வாழ்ந்த காலத்தில் வறுமையில் இருந்தவர். பசிக்கும் பட்டினிக்கும் இடையேதான் புரட்சிகளை விதைத்தார் பாரதி.


ஒருநாள் மாலை வழக்கம் போல் யதுகிரி, பாரதி வீட்டுக்கு வருகிறார். அப்போது பாரதி வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்லம்மாள் சோகமாக இருக்கிறார். அவரின் சோகத்தை முகத்தில் பார்த்த யதுகிரி, சிறுமியின் குரல் மாறாமல் 'என்ன ஆச்சு?' என கேட்டுவிடுகிறார். மழலையின் அன்பால் நெகிழ்ந்த செல்லம்மாள், அவரிடம் நடந்த கதையை சொல்கிறார். ''நான் பாரதியிடம் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்ப சொன்னேன். அவர் அனுப்பவே இல்லை. கட்டுரை அனுப்பினால் பணம் வரும்.குடும்ப நிலவரம் அவருக்கு புரியவில்லை. பால் காசு கொடுக்கவில்லை. உணவுப்பொருட்களும் இல்லை எனக் கூறுகிறார். 


பின்னர் சமையலுக்கு இருந்த கொஞ்ச அரிசியை எடுத்து வைத்துவிட்டு, குளிக்கச் சென்றுவிடுகிறார் செல்லம்மாள். திரும்பி வந்து பார்த்தால், முறத்தில் இருந்த அரிசியில் கால்பங்கை காணவில்லை. அருகில் இருந்த பாரதி அரிசியை அள்ளி முற்றத்தில் குருவிகளுக்கு தூவிக்கொண்டு இருக்கிறார். அரிசியைக் கண்ட குருவிகள் கூட்டமாக வந்து கொத்தித் திங்கின்றன. அதனை அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறார் பாரதி. அருகில் செல்லமாள் மிகவும் கோவமாக நின்றுகொண்டு இருக்கிறார். அவரைப்பாரத்து பாரதி பேசுகிறார், ''செல்லம்மா.. நாம் கோவப்பட்டு கொள்கிறோம். முகத்தை திருப்பிக்கொள்கிறோம். ஆனால் இந்த சிட்டுக்குருவிகளை பார். எவ்வளவு இணக்கமாக இருக்கின்றன. அன்பாக இருக்கின்றன. கண்கள் திறந்திருந்தும் நாம் இந்த சிட்டுக்குருவிகளை ரசிக்கவில்லை என்றால் நாம்தான் மூடர்கள். இந்த பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.


இருந்த அரிசியிலும் கொஞ்சம் வீணாய்போய்விட்டதே என்று கோவப்பட்ட செல்லம்மாள், ''உங்களுக்கு பொறுப்பு இல்லை. உண்மை நிலவரம் புரியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது சிட்டுக்குருவி பாடம் முக்கியமா? கட்டுரை அனுப்பினால் பணம் கிடைக்கும். அதை எப்போது செய்வீர்கள்? நமக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கு. ஆண்டவன் என்னை சோதிக்கிறான்'' என புலம்பித் தள்ளுகிறார். செல்லம்மாளின் வார்த்தைகளை அரைகுறையாய் காதில் வாங்கிக்கொண்டே தன்னுடைய இளையமகள் சகுந்தலாபாரதியை அழைக்கிறார், பாரதி. அந்த கணத்திலேயே ஒரு பாடலை பாடுகிறார் பாரதி. அதுதான் 'விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே' பாடல். பாடலைக் கேட்டு சிறுமி சகுந்தலாபாரதி குஷியாகி விடுகிறார். பாரதி பாட, சகுந்தா ஆட அந்த இடமே கொண்டாட்ட இடமாக மாறுகிறது. தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செல்லம்மாளும் இந்த கொண்டாட்டத்துக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்.


பசியும்,கோவமுமாக இருந்த ஒரு இடம் பாரதியின் ஒரு பாடலுக்கு பின் கொண்டாட்டக்களமாக மாறிவிடுகிறது. இரவில் பாரதி, செல்லம்மாளிடம் சொல்கிறார், ''நீ கவலைபட வேண்டாம் செல்லம்மா. இந்த குருவிப்பாட்டையே நான் பத்திரிகைக்கு அனுப்புகிறேன். பணம் வரும்'' என்கிறார். இப்படியாக குருவிகளின் பசிக்கு அரிசியை தூவினார் பாரதி, பதிலுக்கு அந்த குருவிகள் ஒரு பாடலைக் கொடுத்து பாரதியின் வறுமையை போக்க உதவின என்பது வரலாறு.வறுமையிலும், பசியிலும் தமிழை கொண்டாடிய கவிஞன் பாரதி என்பதுக்கு இந்த சம்பவம் பெரிய உதாரணம்.


இந்த சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்த யதுகிரி பின்னாளில் 'பாரதி நினைவுகள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இந்த சிட்டுக்குருவி பாடல் உருவான கதை பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த அன்று சிறுமி யதுகிரியை அழைத்து தன்னுடைய சிட்டுக்குருவி பாடலை பாடிக்காட்டிய பாரதி கூறினாராம், ''யதுகிரி நீ பார்ப்பாய்.. நான் பார்க்கமாட்டேன். என்னுடைய சிறிய பாடல்களும் புகழப்படும். போற்றப்படும், தமிழகம் இன்னும் கண் திறக்கவில்லை. அப்படியே திறந்தாலும் தமிழகம் தற்போது குழந்தை பருவத்தில் இருக்கிறது'' என்று கூறுகிறார். இந்த சம்பவத்தை தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள யதுகிரி அம்மையார், பாரதியின் எதிர்கால ஞானத்தை குறிப்பிட்டு மெய்சிலிர்த்துள்ளார்.


பாடல்:


விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

சிட்டுக் குருவியினைப் போலே


எட்டுத் திசையும் பறந்து திரிகுவை

ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை

மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்

வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு…)


பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்

பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு

முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு…)


முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்

முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்

வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு…)


நன்றி: புதிய தலைமுறை

-------------------------------------------------------------------------------------------------------------------

இன்று பாரதியார் பிறந்த நாள். இந்நாளில் அவரது பாடல்கள் உருவான விதம் பற்றித் தெரிந்து கொள்வோமே!


பாரதியார் பாடல்கள் ஒவ்வொன்றும் அவரைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாகும். ஒவ்வொரு பாடல்களும் இயற்றுவதற்கு காரணமான  சுவாரஸ்யமான நிகழ்வுகள் பல உள்ளன. 


பாரதியார் பாண்டிச்சேரியில் வசிக்கும் போது, இடி மின்னலுடன் பேய் மழை பெய்தது. இதனால் வீடு, மரம் போன்றவை பல வீழ்ந்தன. இதன் காரணமாக மக்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்து முடித்தப் பின்,  முன்பு சுற்றி வந்த மடு, தோப்பு போன்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கப் போனார் பாரதியார்.  ஒரு சின்னத் தோப்பு, நூறு மரங்களுக்கு மேல் இருக்காது. அதில் சில மரங்கள் மட்டுமே விழுந்து பாக்கி மரங்களெல்லாம் சீராக இருந்தன. அதைக் கண்டதும் ஏழையின் தோப்பைக் காத்த பராசக்தியைப் பாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதாம். 'பிழைத்த தென்னந்தோப்பு' என்ற தலைப்பில் ஒரு கவிதை செய்தார். "ஏழை என்றால் காற்றிற்குக் கூடக் கருணை உண்டு என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?" என்றார். பாரதியார் பாடிய பிறகு தென்னந்தோப்பு ஒரு கண்காட்சித் தோப்பாக ஆகிவிட்டது. ஊர் மக்களெல்லாம் போய்ப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

           

           பிழைத்த தென்னந்தோப்பு


வயலிடை யினிலே செழுநீர் 

   மடுக் கரையினிலே.

அயலெவரு மில்லை, தனியே 

   ஆறுதல் கொள்ளவந்தேன்.


காற்றடித் ததிலே, மரங்கள் 

   கணக்கிடத் தகுமோ?

நாற்றினைப்போலே சிதறி 

   நாடெங்கும் வீழ்ந்தனவே.


சிறிய திட்டையிலே உளதோர் 

   தென்னஞ் சிறுதோப்பு 

வறியவ னுடைமை அதனை 

   வாயு பொடிக்கவில்லை.


வீழ்ந்தன சிலவாம் மரங்கள் 

   மீந்தன பலவாம்; 

வாழ்ந்திருக்க வென்றே அதனை 

   வாயு பொறுத்துவிட்டான்.


தனிமை கண்டதுண்டு; அதிலே 

   சார மிருக்குதம்மா!

பனிதொலைக்கும் வெயில், அதுதேம் 

   பாகு மதுரமன்றோ;


இரவி நின்றதுகாண் விண்ணிலே 

   இன்ப வொளித்திரளாய்;

பரவி யெங்கணுமே கதிர்கள் 

   பாடிக் களித்தனவே.


நின்ற மரத்திடையே சிறிதோர் 

   நிழலினில் இருந்தேன்;

என்றும் கவிதையிலே நிலையாம் 

   இன்பம் அறிந்துகொண்டேன்.


வாழ்க பராசக்தி! நினையே 

   வாழ்த்திடுவோர் வாழ்வார்;

வாழ்க பராசக்தி! இதையென் 

   வாக்கு மறவாதே!

               *****


இதே நாளில் ஜப்பானில் ஒரு புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ராஜ்யத்தை ஒரே சமனாக பகுத்து எல்லா ஜப்பானியருக்கும் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்து விடுவது; இனி பிச்சைக்காரர்களும் சோம்பேறிகளும் தங்கள் தேசத்தில் இருக்கக்கூடாது என்று செய்தார்கள். இதைப் பார்த்த புதுவை சுதேசித் தலைவர்கள் நம் நாட்டில் ஒரு சின்னக் குடும்பம் பிழைக்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தார்கள். அதைப் பாரதியார், 'காணி நிலம் வேண்டும்' என்ற பாட்டில் பாடிக்காட்டியிருக்கிறார்.


           காணி நிலம்வேண்டும்


காணி நிலம்வேண்டும், -- பராசக்தி

காணி நிலம்வேண்டும்; -- அங்குத்

தூணில் அழகியதாய் -- நன்மாடங்கள்

துய்ய நிறத்தினவாய் -- அந்தக்

காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும்; -- அங்குக்

கேணி யருகினிலே -- தென்னைமரம்

கீற்று மிளநீரும்,


பத்துப் பன்னிரண்டு -- தென்னைமரம்

பக்கத்திலே வேணும்; -- நல்ல

முத்துச் சுடர்போலே -- நிலாவொளி

முன்பு வரவேணும்;-அங்குக்

கத்துங் குயிலோசை-சற்றே வந்து

காதிற் படவேணும்;-என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.


பாட்டுக் கலந்திடவே -- அங்கே யொரு

பத்தினிப் பெண்வேணும்; -- எங்கள்

கூட்டுக் களியினிலே -- கவிதைகள்

கொண்டு தரவேணும்; -- அந்தக்

காட்டு வெளியினிலே, -- அம்மா, நின்றன்

காவ லுறவேணும்; -- என்றன்

பாட்டுத் திறத்தாலே -- இவ்வையத்தைப்

பாலித் திடவேணும்.


யதுகிரி அம்மாள் எழுதிய 'பாரதி நினைவுகள்' நூலிலிருந்து...

----------------------------------------------------------------------------------------------------------------

 பாரதியார் இறந்தபிறகு 34 ஆண்டுகள் செல்லம்மா உயிர் வாழ்ந்து இருக்கிறார். அந்தக் காலகட்டத்தில்தான் தனது இரண்டாவது மகள் சகுந்தலாவிற்குத் திருமணம் செய்து வைத்தார். பாரதி ஆஸ்ரமத்தை உருவாக்கி அவரது பாடல்களின் முதல் தொகுதியை புத்தகமாக வெளியிட்டார். தனது இரண்டாவது மகளுக்கு கடன் வாங்கித்தான் திருமணம் செய்து வைத்தார். ‘பாரதி பிரசுராலயம்’ நிறுவனத்தை நான்காயிரம் ரூபாய்க்கு விற்று, மகள் திருமணக் கடனுக்காக 2,500 ரூபாயை அடைத்து விட்டார். இறுதியாக, பாரதியார் கவிதைகளை விற்று வெறும் 1,500 ரூபாய் மட்டுமே செல்லம்மா பெற்றார்.கயிற்றுக் கட்டிலில் படுத்தபடுக்கையாக, சுயநினைவு இல்லாத சூழ்நிலையிலும் வாயைத் திறந்தால் பாரதி பாட்டு... குறிப்பாக கண்ணன் பாட்டு வரும்.

"திண்ணை வாயில் பெருக்க வந்தேனெனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்". 

இந்த வரிகளை திரும்ப, திரும்பச் சொல்லி வந்தார்.பாரதியின் எழுத்துக்களை பிரசுரமாக்கிய செல்லம்மா முன்னுரை யில் எழுதினார்:

‘‘தமிழ்நாட்டு மக்களே, நான் படித்தவளல்ல, இந்த நூலுக்கு முகவுரை எழுதவும் நான் முன்வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியும் இல்லை.அவர் உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச

கைங்கரியத்துக்காக, முழுமனத்துடன் அர்ப்பணம் செய்தார். நமது நாடு இன்னது, நமது ஜனங்கள் யாவர், நமது சக்தியும், உணர்ச்சியும் எத்தகையது? இவைகளைப் பற்றிய விவகாரங்களும்,சண்டைகளும்தீர்மானங்களும் அவர் ஜீவனுக்கு ஆதாரமாக இருந்தன.

எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று அவருடைய புதிய எண்ணங்கள், புதிய புதிய பாட்டுக்கள், புதிய புதிய கொள்கைகள் என் இரு காதுகளும் மனமும் இருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இந்த பாக்கியத்தை மறுபடி பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் பெறத் தயாராக இருக்கிறேன். அவரது தேகத்தில் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்கு ஆதாரமாக இருந்த பாரத மாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ்நாட்டில் ஒரு மனிதனோ, குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நமக்குக் கிடைத்த ஜீவசக்தி என்றென்றும் நிலைத் திருக்கும் என்று என் இருதயம் சொல்கிறது. இதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல வந்தேன். நீங்கள் நீடூழி வாழ்க.பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் உள்ளவரை நான் வகித்து பிற்பாடு தத்தம் செய்துவிட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.

வந்தேமாதரம்.’’

-----------------------------------------------------------------------------------------------------

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....