Thursday, December 29, 2022

கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்- வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)-November-2022

 



நவம்பர்-2022

கு.அழகிரிசாமி-நிலை பெற்ற நினைவுகள்-

வேலாயுத முத்துக்குமார் (தொ.ர்)


பக்கங்கள்  144  விலை 140 /-

------------------------------------

https://solvanam.com/2022/12/11/%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/

கு. அழகிரிசாமி நூற்றாண்டு (23/9/1923 – 5/7/1970) – ஓர் எளிய மலர்ச்செண்டு

குஅழகிரிசாமி (23/9/1923 – 5/7/1970)

ஒரு கதை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது வாசிப்பவரின் மனப்பாங்கையும், மனோ நிலையையும் பொருத்தது. விவரம் தெரிந்து அனுபவ பாசி, சார்பு மாசுகள் படிந்த பின் அவையும் பார்வையின் கூர்மையை, நேர்மையைப் பாதிக்கும். இலக்கிய அனுபவ சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசிக்கவும் குழந்தைகளைப் போல மாசற்ற கவனமும், எதிர்பார்ப்பில்லா குதூகலமும் வேண்டும். ஒருவர் தன்னை எந்த சிதறலுக்கும் ஆளாக்கிக் கொள்ளாமல் தூய்மையான கவனத்தோடு வாசிப்பு சுகத்துக்காகவே வாசித்து, தனக்குக் கிட்டியவற்றை பகிர்கையில் பிறருக்கும் அவை பயன் தரும். அத்தகைய பகிர்தல், தேவைப் பட்டால் ஓர் உரையாடலுக்கும் – நல்ல கதையைப் போலவே – இடம் தரும்.

எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் பலதரப்பட்ட விமர்சனங்கள் உள்ளன. ஓர் எழுத்தாளர் பற்றிய விமர்சனங்கள் தவிர, இரண்டு எழுத்தாளர்களை ஒப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளதுதான். சார்லஸ் டிக்கன்ஸா – டால்ஸ்டாயா, தஸ்தாயெவ்ஸ்கியா – டால்ஸ்டாயா ஆய்வுகளெல்லாம் நூல்களாகவும், யூட்யூப் பதிவுகளாகவும் இருக்கின்றன. நவீன தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான, நூற்றாண்டு காணும் கு. அழகிரிசாமி பற்றியும் பல்வேறு எடை போடல்கள் உள்ளன. வாசிப்பு வானில் நிம்மதியாக முழு ஈடுபாட்டுடன் பறந்து கொண்டிருக்கும் வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடையேயான உறவு இவற்றால் தொடப்படாதது. அந்த உறவால் மலரும் இன்பத்தை அழகிரிசாமியின் முகம் தெரியா வாசகர்கள் பலரும் கால காலமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நாம் எப்போதும் இலக்குடனும், பெருமளவு இலக்கின்றியும் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டும், பதிந்து கொண்டும் இருக்கிறோம். அதில் கு. அழகிரிசாமி போன்ற தேர்ந்த எழுத்தாளர் அதன் எல்லா அம்சங்களையும் கூர்ந்து நோக்குகிறார். வாசகரோடு பகிர்கிறார். இதயத்தை நொறுங்க வைக்கும் தாங்கொணாத் துயரையும், நிராசையையும், சாமான்ய மனிதர்களுக்கு நிகழும் சாமான்ய சம்பவங்கள் மூலம் வாழ்வின் சாரத்தையும், அர்த்தத்தையும், அனர்த்தத்தையும், தினசரி வாழ்வில் தானாய் நிகழும் நகைச்சுவையையும் இவரது கதைகளில் நாம் காண்கிறோம். இவற்றில் அவரது நூற்றாண்டு என்னும் இச்சந்தோஷமான தருணத்தில் அவர் தொட்டு நம் இதயங்களில் இட்ட ஆனந்தம் பற்றிய கதைகளில் மூன்றைப் பற்றி சில வரிகள் :-

வனஜம்

வனஜம் என்கிற இந்தக் கதை, கு. அழகிரிசாமி பற்றிய நகுலனின் “ அவருடைய கதைகளை ஒரு முறைக்கு இரு முறையாகப் படிப்பவர்களுக்கு சௌந்தர்ய உணர்ச்சி என்பதன் அர்த்தம் தெளிவாக விளங்கும்” என்கிற கூற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இக்கதை சொல்லப்பட்ட விதம், விஷயம், வர்ணனைகள் சுகானுபவம்.

14 வயது சிறுமி, 17 வயது வளர்ந்த சிறுவன் இவர்கள் இடையே நிகழ்பவை. கோவில்களுக்கு அருகாமையில், மாட வீதிகளில், திருவிழா, உற்சவ காலங்களில் இருக்க வாய்ப்பு பெற்றவர்கள் இந்தக் கதையில் தவழும் குளுமையை, இனிமையை மீண்டும் அனுபவிக்கலாம். அத்தகு வாய்ப்பு கிட்டாதவர்களும் இக்கதையைப் படிக்கையில் அதைப் பரிபூரணமாக அனுபவிக்கலாம்.

காதலா அது? பாரமில்லாத இன்பப் பிரவாகம். அப்பாவிக் குழந்தைகளின் ஊடாகச் சொரியும் அன்பு ஊற்று. கோவில் சார்ந்த ஊர்க் கூட்டம், அக்காடாவென்று பொறுப்பேதுமில்லாத நிம்மதியும், ஆனந்தமும், களியும் ததும்பும் உல்லாசச் சூழல், அதற்கு உயிரேற்றும் இசை. அங்கு சிவராமன் சிறுவன் போலவா பேசுகிறான்? வாலிபனைப் போல் தன்னை நாஸ்திகன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன் கவிதையாய் நினைப்பதில், பேசுவதில் என்ன ஆச்சர்யம்? வனஜம் என்கிற அந்தக் குழந்தை. அதன் அப்பாவித்தனம். அழகு. வெள்ளைப் போக்காக படபடவென்ற பேச்சு. அகன்ற கண்களில் பொருந்தியிருந்த, அளவிற்கு அதிகமான மடப்பம். ஒரு மாற்றம் நிகழ்கையில் அதில் கொஞ்சம் குடியேறும் கள்ளப் பார்வை. மனிதர் என்னவாகவெல்லாம் அனுபவிக்க வைக்கிறார் !

60, 70 வருடங்களுக்கு முன்பு வந்த சினிமாக்களில் இது போன்ற காதல் ஓரளவு சித்தரிக்கப் பட்டு இருக்கிறது. பின்னால் தெரியும் வட்ட நிலா, ஓர் ஓடை, சில மரங்கள், பூக்கள், கறுப்பு வெள்ளையிலும் பிரகாசிக்கும் இரவு. வனஜத்தையும், சிவராமனையும் விட சற்று வயதில் மூத்த காதலர்கள் பெரும்பாலும் மிக நல்ல காதல் பாட்டை பாடுவார்கள். பெண்ணின் உதட்டுச் சுழிப்பிலும், ஆணின் அன்பூறும் கண்களின் ஒளியிலும் தூய காதல் பிறந்து கொட்டகைகளை நிரப்பும்.

அற்புதமான இதயப் பிணைப்புகளை, அதன் மூலம் இவ்வுலகின் இயக்க சக்தியை நமக்குக் காட்டும் இன்ப அனுபவம் இக்கதை. கதையைக் கடைசி வரை படிப்பவர்கள் நடுவில் எழும் கேள்விகளும் தானே அடங்கிவிடுவதைக் காணலாம்; உடன் பேரானந்தத்திலும் மூழ்கலாம்.

அன்பளிப்பு

எழுத்தாளன் மனித மனங்களிலும், புற உலகிலும் கவனத்தோடு பயணித்து எழுதுபவன். எல்லா மனிதராகவும் ஆகும் சக்தி அவனுக்கு உள்ளது. அதனால்தான் 80 வயது ஆண் பதினாறு வயது சிறுமியை நம்முன் கொண்டுவர முடிகிறது. ஐம்பது வயது பெண்ணால் இருபத்தைந்து வயது இராணுவ வீரனை தத்ரூபமாக சித்தரிக்க முடிகிறது. இதில் குழந்தைகளை வர்ணிப்பது அலாதியான வரம். அந்த வரத்தைப் பூரணமாகப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் அழகிரிசாமி முக்கியமானவர்.

குழந்தைகளே அன்பளிப்புதானே ? நமக்கு மாசற்ற அன்பு அவர்களிடமிருந்துதானே கிடைக்கிறது. அந்தக் குழந்தைகளோடு, சந்தோஷமாய் இருக்கும் பேறு பெற்றவனின் கதை இது. அவனுக்கு ஒரு நோக்கமும் இல்லை. குழந்தைகள் உலகம் என்கிற சொர்க்கலோக வாசி அவன். இதில் அவன் குழந்தைகள் ஒருவரும் இல்லை. அவனுக்கு மணமாகக் கூட இல்லை.

சின்னஞ்சிறு சம்பவங்கள். சாதாரண வாழ்க்கை நிகழ்வுகள். குழந்தைகளின் செய்கைகள், நம்பிக்கைகள், நினைவில் இருத்தி மீண்டும், மீண்டும் துயருறாத நிகழ் இருப்பு. பயம், கட்டற்ற சுதந்திரம், உரிமை. அவனை பெரிய மனித பீடத்தில் தூக்கி வைக்காமல் சமதையான ஜீவனென்று கருதி கைகோர்த்துக் கொள்கிறார்கள். விளையாடுகிறார்கள். சண்டை போடுகிறார்கள். அடிக்கிறார்கள். தண்டிக்கிறார்கள். மன்னிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். அனைத்தும் அற்புதமாக நம் கண் எதிரே நடக்கின்றன.

இது தானாய்க் கிட்டிய பாக்கியம். அதில் மூழ்கி நீந்துகையில் அவன் கற்றுக் கொண்டே இருக்கிறான். ” உலகத்தில் எல்லோரும் குழந்தைகளிடம் பிரியமாக நடந்து கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் அன்பில் விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன. அவர்களுக்குக் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள். ஆனால் குழந்தைகள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள் ” என்கிற உண்மை என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனதில் தைத்த நாள் முதல் அவன் அவர்களை குழந்தைகளாக நடத்துவதில்லை. உள்ளன்பு என்கிற அந்தஸ்தில் அவனும், குழந்தைகளும் சம உயிர்களாகிறார்கள். மேலும் எத்தனை எத்தனை அவன் குழந்தைகளைப் பற்றி அறிந்துணர்ந்து கொண்டே இருக்கிறான். கடைசி வரை இது தொடரும். கதை முடிந்த பின்பும். அவனுக்கும், நமக்கும்.

தெய்வம் பிறந்தது

இது ஓர் ஆதர்ச இலட்சியவாதக் கதை. இது மனிதனின் முடிவுறா தூய்மைப் படுத்திக் கொள்ளும் முயற்சி பற்றியது. சமூகம் விதித்த விதிமுறைகளைக் கேள்வி கேட்காது ஏற்றுக் கொண்ட மனிதர்கள் பற்றியது. இந்த சுய சுத்திகரிப்பும், தவம் போன்ற அடைமொழிகளைப் பற்றிய பிரக்ஞையே கூட இல்லாத பயன் கருதாச் செயல்பாடுகளும் தவப்பயனுக்கு இட்டுச் செல்லும் அற்புதம் பற்றிய கதை. எழுத்தாளரின் உளத் தூய்மை மட்டுமே இது போன்ற கதைகளை எழுத வைக்கும்.

ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக வேண்டிக் கொண்ட தெய்வங்கள், யாத்திரை செய்த ஸ்தலங்கள் என்று அவர் செய்த பதிமூன்று வருட தவம். ஜென்மாந்திர வாசனையைப் போல் அவர் மனச்சுவரில் ஏதேனும் கறை இருந்தாலும் அதையும் சுட்டெரித்த அத்தவத்தின் கனல். இதில் அவரது உள்ளமே ஒரு கோவிலாகி விட்டது. தவம் செய்து பிறந்த குழந்தை புண்ணியாத்மாவாக இருக்க வேண்டும் என்று, பொறாமை, துவேஷம் இல்லாதவனாக வளர்க்கிறார். பள்ளி ஆசிரியரிலிருந்து வீட்டுக்கு முடி திருத்த வருபவர் வரை அனைவரிடமும் எப்படி அன்பாக, மரியாதையாகப் பழக வேண்டும் என்று சொல்லித் தருகிறார். ”குழந்தையாக வந்து தெய்வம் பேசுகிறது” என்று முடி திருத்தும் வேலாயுதம் சொன்ன போது “என் வயிற்றிலா? நான் என்ன புண்ணியம் செய்திருக்கிறேன்? தெய்வம் வேண்டாம். மனிதன் பிறந்திருக்கிறான் என்று உலகம் சொல்ல வேண்டும். எனக்கு அந்த ஒரு கீர்த்தி போதும் “ என்கிறார்.

உள்ளமே கோவிலாகி விட்ட பிறகு அதில் குடியிருக்க தெய்வம் எப்படி வராது இருக்கும் ? அவர் வயிற்றில் எப்படிப் பிறக்காது இருக்கும் ? தெய்வம் வந்ததை, பிறந்ததை, கண் காண அவருக்குப் பிறந்து விட்டதை, இது நடந்த விதத்தைச் சொல்லி கதை முடிகிறது.

***************

இந்தக் கட்டுரையின் தலைப்பு ‘ஓர் எளிய மலர்ச்செண்டு’. கு. அழகிரிசாமியின் கதைகளையும் அப்படியே குறிப்பிடலாம். அதில் இல்லாத மலர்களே இல்லை.

---------------------------------------

வணக்கம் சார்.. அற்புதமான கட்டுரை இது.  இக்கட்டுரையினை நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு தாங்கள் அனுப்பிக் தந்த நவம்பர் 30 அன்றிரவே எனக்கும் அனுப்பி இருந்தார். வாசித்துவிட்டு அவரிடம் என் கருத்தை பகிர்ந்திருந்தேன்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற (ஜூம் மீட்டிங்) ரசிகமணியின் வட்டத்தொட்டி - கு.அழகிரிசாமி நூற்றாண்டு சிறப்பு நிகழ்வில் அவரது மூத்த மகள் திருமதி.ராதா அவர்கள் கு.அ.வின் தெய்வம் பிறந்தது கதை குறித்து யாரும் அவ்வளவாக பேசவில்லை என்று கூறியிருந்தார். அக்கதை குறித்து இந்தக் கட்டுரையில் தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருப்பதை கு.அ.வின் புதல்வர் சாரங்கராஜன் அவர்களிடம் தெரிவித்தேன். அவரும் சகோதரியிடம் சொல்லி இருக்கிறார்.

சொல்வனத்தில் வெளியான இக்கட்டுரையினை மீள்வாசிப்பு செய்த போது இச்சம்பவம் நினைவிற்கு வந்தது.

நன்றி சார்...

.வே. முத்துக்குமார்

------------------------------------

https://bookday.in/introduction-to-the-book-velayutha-muthukumars-memories-of-g-azhagiriswamy-bhavannan/

அழகிரிசாமி வந்திருக்கிறார்
பாவண்ணன்

நவீன தமிழ் சிறுகதை ஆசிரியர்களில் புதுமைப்பித்தன், மெளனி, பிச்சமூர்த்தி ஆகியோரின் அடுத்த தலைமுறையைச் சார்ந்த எழுத்தாளர் கு.அழகிரிசாமி. அவர் எழுத்தாளராக மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். அவருக்கு இசையிலும் கம்பராமாயணத்திலும் எல்லையற்ற ஆர்வம் இருந்தது. காருகுறிச்சி அருணாசலம், விளாத்திகுளம் சுவாமிகள் ஆகியோருடன் அவர் இறுதிவரைக்கும் தொடர்பில் இருந்தார். பாரதியார், தியாகராஜர், கவிமணி தேசியவினாயகம் பிள்ளை போன்றோர் எழுதிய சில பாடல்களை ஸ்வரப்படுத்தினார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தைப் பதிப்பித்தார். கம்பராமாயணத்தின் ஐந்து காண்டங்களையும் குறிப்புகளுடன் பதிப்பித்தார். மேடையில் நடிக்கத்தக்க அளவில் கவிச்சக்கரவர்த்தி, வஞ்சமகள் ஆகிய நாடகங்களை எழுதியிருக்கிறார். கார்க்கி நூல்களை தமிழில் மொழிபெயர்த்து நல்ல மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். டி.கே.சிதம்பரம் முதலியாரின் வழியில் சிறந்த ரசனைக்கட்டுரைகளையும் எழுதினார். 1942இல் எழுதத் தொடங்கிய அவர் 1970இல் மறைவது வரைக்கும் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பாக அழகிரிசாமியின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம் தொடங்கியது. அதையொட்டி பல இடங்களில் கவனிப்பாரற்று சிதறிக் கிடந்த பல கட்டுரைகளை வேலாயுத முத்துக்குமார் தேடித் தொகுத்திருக்கிறார். அதை சிறுவாணி வாசகர் மையம் அழகிய வடிவில் நூலாக்கியிருக்கிறது. புத்தகத்தை ஒரே அமர்வில் படித்துமுடித்ததும் அழகிரிசாமி மீண்டும் வந்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றியது.

அழகிரிசாமி 05.06.1970 அன்று மறைந்தார். இறக்கும்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து. அவருடைய மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப்பற்றிய பல்வேறு நினைவுகளை கி.ராஜநாராயணன், வல்லிக்கண்ணன், தீப.நடராஜன், ஆ.மாதவன், தி.ஜ.ர., வித்வான் ல.சண்முகசுந்தரம் கி.ராஜேந்திரன், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தேடியெடுத்திருக்கிறார் வேலாயுதமுத்துக்குமார். அக்கட்டுரைகளோடு கல்கி, நகுலன், பி.எஸ்.ராமையா போன்றோர் எழுதிய சில கட்டுரைகளையும் கி.ராஜநாராயணன், வித்துவான் ல.சண்முகசுந்தரம், ஆ.மாதவன் ஆகிய மூவருக்கும் அழகிரிசாமி எழுதிய கடிதங்களையும் கண்டுபிடித்து ஒரு சிறிய தொகைநூலாக உருவாக்கியுள்ளார். இக்கட்டுரைகள் வழியாக வாசகர்கள் அழகிரிசாமியைப்பற்றிய ஒரு தோராயமான சித்திரத்தை பெறமுடிகிறது. அதுவே இத்தொகுதியின் வெற்றி.

கி.ராஜநாராயணன் தன் கட்டுரையில் இளம்வயதில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறார். கி.ரா.வும் செல்லையா என்கிற அழகிரிசாமியும் இளவயதுக் கூட்டாளிகள். அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்கள். தன் இளம்பருவத்திலேயே கனிவான பார்வையும் கருணையும் செல்லையாவின் நெஞ்சில் குடியேறியிருந்தன என்பதை அறிந்துகொள்ள அந்த நினைவுப்பதிவு உதவி செய்கிறது. அவர் வளர வளர அவருடைய கனிவும் வளர்ந்துகொண்டே சென்றதை அவருடைய வாழ்க்கை உணர்த்துகிறது.

கி.ரா. வீட்டில் ஒரு பெரிய நாய் இருந்தது. அந்த நாய் திடீரென புத்தி பேதலித்து வருவோர் போவோரையெல்லாம் கடிக்கத் தொடங்கிவிட்டது. புகார்கள் அதிகரித்ததும் கி.ரா.வின் தகப்பனார் அப்பிரச்சினைக்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அன்று மாலை அந்த நாய்க்கு வேலைக்காரர்கள் நல்ல விருந்துச்சாப்பாடு போட்டார்கள். அதுதான் தன் கடைசி விருந்து என அறியாமல் அந்த நாய் விருப்பத்தோடு சாப்பிட்டது. விருந்து முடிந்ததும், அந்த நாயின் கழுத்தில் ஓர் உறுதியான கயிற்றைக் கட்டி அழைத்து வந்தனர். பெரியவர் அதைத் தொட்டுக் கொடுத்ததும் அவர்கள் அந்த நாயோடு வீட்டைவிட்டு வெளியேறினார்கள். சிறுவர்கள் ஆர்வத்தின் காரணமாக அதைப் பின்தொடர்ந்து சென்றார்கள். கி.ரா.வும் அழகிரிசாமியும் பின்னாலேயே சென்றார்கள். ஆனால் கி.ரா.விடம் இருந்த உற்சாகம் அழகிரிசாமியிடம் இல்லை.

வழிநெடுக கிடைத்த கற்களையெல்லாம் சேகரித்து தம் பைகளில் நிரப்பிக்கொண்டே நடந்தார்கள் சிறுவர்கள். ஊருக்கு வெளியே நாயை அழைத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டிப் போட்டுவிட்டு அந்த நாயை அடித்துக் கொல்வதுதான் அவர்கள் திட்டம். அதைப் புரிந்துகொண்ட அழகிரிசாமி அவர்களிடமிருந்து விலகி வழியிலேயே ஓரிடத்தில் சோர்வோடு அமர்ந்துவிட்டார். உற்சாகமாக நாய்க்குப் பின்னால் சென்ற சிறுவர்கள் அந்த நாயைச் சூழ்ந்து கல்லாலேயே அடித்துக் கொன்றனர். நாய் செத்துவிட்டது என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு வந்த வழியே வீட்டுக்குத் திரும்பினார்கள். வழியில் சிலைபோல அமர்ந்திருந்த அழகிரிசாமியின் தோற்றம் உற்சாகத்தோடு ஓடி வந்த கி.ரா.வின் நெஞ்சைக் கரைத்துவிட்டது. அவர் நெஞ்சிலிருந்தும் அப்போது அழுகை பீறிட்டெழுந்தது. ஒருவருடைய கருணை பிறரையும் கருணையுள்ளவர்களாக மாற்றிவிட்டது.

ஆ.மாதவன் தன் கட்டுரையில் வயதில் சிறியவரானாலும் அடுத்தவர்களுக்கு உதவும் மனநிலை நிறைந்தவராகவும் இலக்கியத்தைப்பற்றி மட்டுமே எப்போதும் சிந்திப்பவராகவும் அழகிரிசாமி வாழ்ந்த விதத்தைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை தான் தயாரிக்கும் ஒரு மலருக்கு புதுமைப்பித்தனின் இறுதிக்காலம் பற்றி எஸ்.சிதம்பரம் என்பவர் எழுதி சக்தி இதழில் வெளியான பழைய கட்டுரையொன்று தேவைப்பட்டிருக்கிறது. தன் தேவையை உடனே அழகிரிசாமிக்குத் தெரியபடுத்துகிறார். உடனே அக்கட்டுரை வெளிவந்த சக்தி இதழைக் கண்டுபிடித்து அக்கட்டுரையை எழுதி பிரதியெடுத்து அவருக்கு அனுப்பிவைக்கிறார் அழகிரிசாமி. மேலும் மாதவனின் வேண்டுகோளுக்கு இணங்க பிறமொழிகளில் வெளிவந்த சில சின்னஞ்சிறு கதைகளை மொழிபெயர்த்துத் தொகுத்து அனுப்பிவைத்திருக்கிறார். அடுத்தவர்களுக்காக செய்யும் இத்தகு உதவிகளால் அவருக்குக் கிஞ்சித்தும் பயனில்லை என்றபோதும் நட்புக்காக மகிழ்ச்சியோடு அவ்வுதவியைச் செய்யும் மனம் கொண்டவராக அழகிரிசாமி வாழ்ந்தார் என்பதை மாதவனின் குறிப்புகள் உணர்த்துகின்றன.

லானா சானா என்று அனைவராலும் அழைக்கப்படும் வித்வான் ல.ச.சண்முகசுந்தரம் அழகிரிசாமியுடன் நெருங்கிப் பழகியவர். அழகிரிசாமியின் வாழ்க்கை பற்றிய ஒரு கோட்டுச்சித்திரத்தை அவர் பதிவு செய்திருக்கும் நினைவுகள் வழியாக உணரமுடிகிறது. பதினாறு, பதினேழு வயதிலேயே சிறுகதைகளும் விருத்தம், வெண்பா போன்ற மரபுப்பாடல்கள் எழுதவும் அழகிரிசாமி பயிற்சி பெற்றிருந்தார். தொடக்கத்தில் ஆரம்பப்பள்ளியில் சில மாதங்கள் ஆசிரியராகவும் பிறகு சப்ரிஜிஸ்தர் அலுவலகத்தில் எழுத்தராகவும் பணிபுரிந்தார். ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன் இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சில சிறுகதைகள் அவருக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியளித்தன. அதன் விளைவாக அதே பத்திரிகைக்கு அவர் உதவியாசிரியராக வந்து சேர்ந்தார். பிறகு அங்கிருந்து சக்தி இதழுக்குச் சென்றார். சில ஆண்டுகள் கழித்து தமிழ்நேசன் என்னும் பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மலேசியாவுக்குச் சென்றார். அங்குதான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்குப் பின் சென்னைக்குத் திரும்பி வந்து காந்தி நூல் வெளியீட்டுக்கழகத்திலும் நவசக்தி இதழிலும் பணியாற்றினார். துன்பங்களும் வறுமையும் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்த போதும் மன உறுதியுடன் எதிர்கொண்டு வாழ்ந்தார். கிஞ்சித்தும் மனம் சோர்வுறாது இலக்கியம் படைத்தார்.

அழகிரிசாமியின் அகாலமரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கித் தவித்தபோது, அதற்கொரு பதில் சொல்வதுபோல நினைவுக்கு வந்த நாலடியார் பாடலொன்றை லானா சானா பதிவு செய்திருக்கும் விதம் பொருத்தமாக இருக்கிறது.

பல்லான்ற கேளிவிப் பயனுணர்வார் வீயவும்

கல்லாதார் வாழ்வும் அறிதிரேல் கல்லார்கண்

சேதனம் என்னுமச் சேறகத்தின்மையால்

கோதென்று கொள்ளாதாம் கூற்று

அன்பும் அறிவும் நிறைந்த சாரமுள்ள உயிர்களை ருசித்து அனுபவிக்கும் கூற்றுவன் அவை எதுவுமில்லாத சக்கைகளை ஒதுக்கிவிடுகிறான் என்னும் நாலடியாரின் சொல், அழகிரிசாமியைப் பொறுத்தவரை உண்மையாகிவிட்டது.

அழகிரிசாமி பத்திரிகைகளுக்காகவோ, புத்தகங்களுக்காகவோ, வருமானத்துக்காகவோ எழுத விரும்பியவரல்ல. தன் மனநிறைவுக்காகவும் இலக்கிய ரசனைக்காகவும் எழுதவே என்றென்றும் விரும்பினார். ஒருமுறை அவர் ஒரு பத்திரிகையில் ஒரு தொடர்கதையை எழுதினார். வழக்கமாக அத்தகு தொடர்கதைகளை எழுதுகிறவர்கள் தமக்கு வகுக்கப்பட்டிருக்கும் வாரக்கணக்குக்குள் அடங்கும்படி திட்டமிட்டு எழுதி முடித்துவிடுவார்கள். ஆனால் மன இயக்கத்துக்கு இசைவாக எழுதிச் செல்லும் பண்புடைய அழகிரிசாமிக்கு அது ஒத்து வரவில்லை. குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவரால் கதையை அடக்கமுடியவில்லை. மேலும் வளர்ந்து செல்வதை பத்திரிகை விரும்பாத ஒரு கட்டம் வரும்போது மனத்தில் மிச்சமிருக்கும் மொத்த கதையையும் ஒரு சுருக்கம்போல ஒரே அத்தியாயத்தில் எழுதி முடித்துவிடுகிறார். பிற்பாடு சுருக்கிவிட்ட அப்பகுதியை மனம்போல விரித்தெழுதி முழுமை செய்துகொள்ளலாம் என அவர் திட்டமிட்டிருந்தபோதும் கடைசி வரைக்கும் அந்தச் செப்பமிடும் வேலையை அவரால் செய்யமுடியாமலேயே போய்விட்டது. வெவ்வேறு அல்லல்கள் அவரை வெவ்வேறு திசைநோக்கி இழுத்த இழுப்பில் படைப்பூக்கத்தின் திசையில் அவரால் செல்ல இயலாமல் போய்விட்டது. கல்கி ராஜேந்திரனின் சொற்கள் வழியாக அழகிரிசாமியின் மனம் அடைந்த தவிப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.

1952இல் வெளிவந்த அழகிரிசாமியின் முதல் சிறுகதைத்தொகுதிக்கு கல்கி முன்னுரை எழுதியிருக்கிறார். அம்முன்னுரையில் கதை எழுதுவதன் வெவ்வேறு கோணங்களைப்பற்றி விரித்துரைப்பதுபோலத் தொடங்கி அவர் அழகிரிசாமியின் கதையுலகத்தை வந்தடைந்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கிறது. அழகிரிசாமியின் கதைகளை மதிப்பிட்டு அவருடைய இலக்கிய இடத்தை வரையறுக்கும் விதத்தில் நகுலன் எழுதியிருக்கும் கட்டுரை, க.நா.சு.வின் இலக்கியவட்டக் கருத்தரங்கில் எதற்காக எழுதுகிறேன் என்னும் தலைப்பில் ஆற்றிய தன் உரையை அழகிரிசாமியே எழுத்து வடிவத்துக்கு மாற்றி எழுத்து இதழில் வெளியிட்ட கட்டுரை என சில அரிய கட்டுரைகளையெல்லாம் வேலாயுத முத்துக்குமார் தேடியெடுத்து இத்தொகுதியுடன் சேர்த்திருக்கிறார்.

இத்தொகுதியில் பெரும்பான்மையாக அழகிரிசாமியின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரைகளே இடம்பெற்றுள்ளன. அஞ்சலிக்கட்டுரைகள் மட்டுமன்றி, அழகிரிசாமியின் படைப்புலகத்தை முன்வைத்து அவருடைய சமகாலத்திலும் அவருடைய மறைவுக்குப் பிறகான கடந்த அரைநூற்றாண்டுக்காலத்திலும் பல்வேறு கட்டுரைகள் வந்திருக்கக்கூடும். வேலாயுத முத்துக்குமார் அத்தகு கட்டுரைகளையும் தேடித் தொகுக்கவேண்டும். எதிர்காலத் தலைமுறையினருக்கு அது நிச்சயம் நல்லதொரு ஆவணமாக விளங்கும்.

(கு.அழகிரிசாமி – நிலைபெற்ற நினைவுகள். 

தொகுப்பாசிரியர் வேலாயுத முத்துக்குமார். 

சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை – 641038. விலை. ரூ.140)

9940985920/ 8778924880

-------------------------------------

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iEZAhy3Ujtm9mEKqvFfzxYVFQccS2iGpu6LQTHBFLVyZteF6gmNyRHipM3GMho3dl&id=100006829357757&mibextid=Nif5oz

------------------------------------




No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....