தி இந்து தமிழ் (06.01.18) பேட்டியின் முழுவடிவம்
வீடு தேடி வரும்
இலக்கிய நூல்கள்
அசத்தும்
சிறுவாணி வாசகர் மையம்
ஆர்.கிருஷ்ணகுமார்
இலக்கியத்தின்
இயங்குவிசை நல் வாசிப்புதான். இதை உணர்ந்ததாலோ என்னவோ, நல்ல இலக்கிய நூல்களைத் தேடிப்பிடித்து, வாசகர்களின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கின்றனர் கோவை 'சிறுவாணி வாசகர் மைய'த்தினர்.
1960-களில் தீரர்
சத்தியமூர்த்தியின் மகள் திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி "வாசகர் வட்டம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்தியுள்ளார். இதன் தாக்கத்தால்
கோவையை மையமாகக் கொண்டு 'சிறுவாணி வாசகர் மைய'த்தை நடத்திவருகிறார்,இந்த அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் திரு. ஜி.ஆர்.பிரகாஷ்(42).
கோவை சாய்பாபா
காலனியைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில்
பணியாற்றி வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக
இலக்கியம் சார்ந்த வாசிப்பில் மனதைப் பறிகொடுத்த இவர், 2015-ல் நண்பர்கள் உதவியுடன் 'பவித்ரா பதிப்பக'த்தைத் தொடங்கியுள்ளார். இவர்கள் எழுத்தாளர் நாஞ்சில்நாடனின்
கட்டுரைத் தொகுப்பான 'அஃகம் சுருக்கேல்' என்ற நூலின் மாணவர் பதிப்பைப் பிரசுரித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு
ஆயிரக்கணக்கான பிரதிகளை இலவசமாக வழங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளிலும், நண்பர்கள் உதவியுடன் இந்தப் புத்தகத்தை இலவசமாக
வழங்கியுள்ளனர்.
நல்ல நூல்களைத்
தேடிப்பிடித்து, வாசகர்களின் வீடுகளுக்கே
அனுப்பும் முயற்சியைத் தொடங்கியது குறித்து விவரிக்கிறார் ஜி.ஆர்.பிரகாஷ்:
"நல்ல இலக்கிய நூல்களைத்
தேர்ந்து, அவற்றை வாசகர்களின்
வீடுகளுக்கே அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தாலாமே என எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
ஆலோசனை வழங்கினார். மேலும், நாங்கள் சந்தித்த பல
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு
தமிழ் படிக்கத் தெரியவில்லை என வேதனையுடன் கூறினர். எனவே, தரமான நூல்களை வாசகர்களுக்கு கொண்டுசேர்த்து
இலக்கியஆர்வத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டோம்.
அதன்விளைவுதான், 'சிறுவாணி வாசகர் மையம்'.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி உலகப் புத்தக தினத்தில், கோவையின் அடையாளமான 'சிறுவாணி' பெயரில் வாசகர் மையத்தை தொடங்கினோம். சுவை மிகுந்த சிறுவாணி
நீர்போல, சுவையான இலக்கிய நூல்கள்
மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதே இதன் பிரதான நோக்கம்.
முதல் நூலாக
நாஞ்சில்நாடனின் 'நவம்' என்ற எண்கள் சார்ந்த கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டோம்.
அதேசமயம், வாசகர் மையத்தில்
உறுப்பினர்களையும் சேர்க்கத் தொடங்கினோம். கோவை, திருப்பூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் வாசகர் மையத்தில் உறுப்பினர்களாகச்
சேர்ந்துள்ளனர். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மூலமும் வாசகர்
மையத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கிறோம்.
சிறுவாணி வாசகர்
மையத்தின் உறுப்பினர் ஆண்டுக்கு ரூ.1,200 சந்தா செலுத்தினால், அவர்களுக்கு ரூ.1,600 மதிப்பிலான 12 நூல்களை (மாதம் ஒன்று வீதம்) அஞ்சல் மூலம்
அனுப்பிவைக்கிறோம்.
வாசகர் மையத்தின்
தலைவராக காந்தியவாதி டி.டி.திருமலையின் மகளும்,
எழுத்தாளருமான
தி.சுபாஷிணி, ஆலோசகர்களாக இயக்குநர்
பாரதி கிருஷ்ணகுமார், சொல்வனம் இணைய இதழ்
ஆசிரியர் குழுவைச் சேர்ந்த வ.ஸ்ரீநிவாசன், கோவை ராக் அமைப்பு ரவீந்திரன்
ஆகியோர் உள்ளனர்.
இதுவரை சிறுவாணி
வாசகர் மையம் மூலம் 8 நூல்களை
வெளியிட்டுள்ளோம். நாஞ்சில்நாடனின் 'நவம்',
லா.ச.ராமாமிருதத்தின் 'விளிம்பில்',
ந.சிதம்பரசுப்ரமணியனின் 'இதயநாதம்',
ராய.சொக்கலிங்கத்தின் 'தேவாரமணி',
அசோகமித்திரனின் 'பூங்கொத்து',
சந்தியா நடராஜனின் 'இனி இல்லை மரணபயம்',
தி.சுபாஷிணியின் 'தக்கர் பாபா',
ரசிகமணி டி.கே.சி.யின் 'தமிழ்க் களஞ்சியம்'
ஆகிய நூல்கள்
வெளியிடப்பட்டுள்ளன. மேலும், பாரதி பிறந்த நாளையொட்டி
இளசை.மணியன் தொகுத்த 'நண்பர்கள் நினைவில்
பாரதியார்' என்ற நூலை வெளியிட்டோம்.
1953-ல் தேவாரப் பாடல்கள்
அடங்கிய தேவாரமணியை ராய.சொக்கலிங்கம் எழுதி் வெளியிட்டார். அதற்குப் பிறகு தற்போது
அந்த நூலை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ளது. அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் சிறுவாணி வாசகர் மையத்தின் நோக்கத்தை
அறிந்த அசோகமித்திரன், வெளிவராத தனது
கட்டுரைகளைக் கொடுத்து, பதிப்பிக்க அன்புடன்
அனுமதி அளித்தார். 'பூங்கொத்து' என்கிற அந்தக் கட்டுரைத் தொகுப்பே, கடந்த மார்ச் மாதம் காலமான அவரது கடைசி நூலாக ஆயிற்று.
புத்தக வாசிப்பு
மக்களின் சுவாசமாக மாற வேண்டும். நூல்களை தேடித்தேடி வாசித்தால்தான், வாசகரின் ஞானம் வளர்ந்து, மொழி மிளிர்ந்து, ரசனை ஒளியாய்ப் பரிணமிக்கும். நூல்களை வெளியிட்டு, வாசகர்களுக்கு அனுப்புவதில் எங்களுக்கு பொருளாதார சுமை
இருந்தாலும், சில நண்பர்களின்
உதவியுடன் சமாளிக்கிறோம்.
இந்த வாசிப்பு
இயக்கம் தொடர் இயக்கமாய் மாற வேண்டுமென்பதே எங்களின் குறிக்கோள். தமிழில் நல்ல
நூல்களை வெளியிட்டு, புத்தக வாசிப்பால் மனித
மனங்களைப் பண்படுத்தும் எங்கள் முயற்சி தொடரும்".
சிறுவாணி வாசகர்
மையம் தொடர்புக்கு : 94881 85920 / 99409
85920
மின்னஞ்சல் :Siruvanivasagar@gmail.com
நவீனத்
தொழில்நுட்பம் வளர்ந்து, அவசரகதியாய் வாழ்க்கையை நகர்த்தும்போது
ஏற்படும் மூச்சுத் திணறலைப் போக்கும் ஆற்றல் வாசிப்புக்கு உண்டு. குறிப்பாக, நல்ல நூல்களை வாசிக்கும்போது, நமது சிந்தனையும், எண்ணங்களும் பொலிவுபெறுகின்றன. வாசிப்பு குறைந்து வருகிறது
என்ற பரவலான குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில், வாசகர்களின் வீடுகளுக்கே நல்ல நூல்களை அனுப்பி, அவற்றைப் படிக்கச் செய்யும் 'சிறுவாணி வாசகர்
மைய"த்தைப் போல, இன்னும் பல அமைப்புகள்
புத்தக வாசிப்புக்கு பங்களிப்பு செய்ய வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
*******************************************************************************************************************
No comments:
Post a Comment