ஜனவரி-2018
எதைப்பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது
வ.ஸ்ரீநிவாசன்
கட்டுரைகள்
பக்கங்கள் 176 விலை 160 /-
ISBN 978-81-940780-7-4
*********************************************************************************************************
சிறுவாணி வாசகர் மையம் நடத்திய வாசகர் எழுத்தாளர் சந்திப்பு நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீடு 21 1 2018 ஞாயிறு மாலை 4 மணி முதல் கோவை ஆருத்ரா ஹாலில் நடைபெற்றது. சிறுவாணி வாசகர் மைய வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தி சுபாஷிணி, வ. ஸ்ரீநிவாசன்,லா.ச.ரா சப்தரிஷி,சித்தார்த்தன்சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து செல்வி .அஞ்சனா நாட்டியத்துடன் நிகழ்வுகள் துவங்கின.
நாஞ்சில் நாடன் அவர்களின் அனுமதியுடன் சிறுவாணி வாசகர் மையத்தால் நிறுவப்பெற்ற
" நாஞ்சில் நாடன் விருது" (எதனெதனாலோ இயங்கும் உலகில் அதைப்பற்றிக் கவலைப்படாமல் கலை, இலக்கியம் ,சமூகம் ஆகிய பல்வேறு துறைகளில் நேர்மையாகவும் உண்மையாகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அளிக்கப்படும்)இவ் விருது முதல் வருடம் ஓவியர் ஜீவா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
. மூத்த வழக்கறிஞரும் (புதுடெல்லி உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் )திரு கே எம் விஜயன் விருதினை வழங்கினார். திரு ஆர் ரவீந்திரன் (பாரதி பாசறை), இரத்தினவேல் (ராயல் தியேட்டர் உரிமையாளர்), திரு.கண.சிற்சபேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இவ்விழாவிற்கு திரு நாஞ்சில் நாடன் தலைமை ஏற்று நடத்தினார் .திரு ஜீவா ஏற்புரை வழங்கினார்.
அடுத்து எழுத்தாளரும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவருமான திரு.வ.ஸ்ரீநிவாசன் எழுதிய
" எதைப்பற்றியும் அல்லது) இது மாதிரியும் தெரிகிறது "காணக்கிடைத்தவை"
ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன நூல்களை திரு நாஞ்சில் நாடன் வெளியிட திரு கே எம் விஜயன் பெற்றுக்கொண்டார். திரு .வ.ஸ்ரீநிவாசன் ஏற்புரை வழங்கினார்.
இவ்விழாவில் கண. சிற்சபேசன், ஆடிட்டர் கிருஷ்ணகுமார் , சித்தார்த்தன் சுந்தரம், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பா.மா.மனோகரன் நிகழ்வுகளை ஒருங்கமைத்தார்.
****************************************************************************
கோவையில்
செயல்பட்டு வரும் சிறுவாணி வாசக மையம் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறது.
இவ்வாண்டுமுதல் நூல்களையும் வெளியிடுகிறார்கள். நாஞ்சில்நாடன் விருது ஒன்றை நிறுவி
இவ்வாண்டு நண்பர் ஓவியர் ஜீவா அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
JEYAMOHAN.IN
***************************************************************************************
Suresh Venkatadri
எதைப்பற்றியும்
அல்லது இது மாதிரியும் தெரிகிறது:
வாழ்வனுபவங்கள்
மிகப் பெரும்பாலானோருக்கு ஒரே மாதிரிதான் அமையும்.சிற்சில வேறுபாடுகள் தவிர, மிகச் சிலருக்கே மிக
வித்தியாசமான அனுபவங்கள் வாய்க்கின்றன.20ம்,21ம் நூற்றாண்டு
பெருநகர மத்தியதர வாழ்க்கை ஒரே மாதிரி தான் அனுபவங்களைத் தர வல்லது. அதிலும் 'குமாஸ்தா வாழ்க்கை'.சொல்லவே வேண்டாம்.ஆனால், அந்த சாதாரண அனுபவங்களை
ரசனை எனும் ஒரு மாயக்கண்ணாடி மூலம் பார்க்கும்போது, பல அசாதாரண திறப்புகளை அடைய முடியும். வாசிப்பு,பயணம் இவை இரண்டும்
அப்படிப்பட்ட மாயக்கண்ணாடிகள்,.
வாசிப்பதும் அதைப்பற்றி யோசிப்பதும் பின் அதை எழுத்தில்
வடிப்பதும் நம் அன்றாடங்களிலிருந்து, நம் மனதை வேறொரு உயரத்தில் பறக்க வைப்பவை, அதைப்போலவே, காண்பவை கேட்பவை பற்றிய
சிந்தனையும்.அப்படி அமைந்தவைதான் திரு. வ.ஸ்ரீநிவாசன் Varadarajan Srinivasan அவர்களின், நூலான,'எதைப்பற்றியும் அல்லது
இது மாதிரியும் இருக்கலாம்" சிலகாலம் வெளிவந்த வார்த்தை இதழிலும், பின் அதன் இணைய வடிவமான
சொல்வனம் இதழிலும், வந்த அவரது கட்டுரைகளின்
தொகுப்பே இந்த நூல்.
வாழ்வில் நமக்கு
கிடைப்பவை, எவ்வளவு என்பது
முக்கியமல்ல ,அவற்றிலிருந்து நாம்
பெறுபவை, எவ்வளவு என்பதே முக்கியம்
என்று காட்டும் நூல் இது.
தொகுப்பின்
தலைப்புக்கேற்றவாறு ,
இந்தக்
கட்டுரைகளில், மிகச் சுதந்திரமாக, தான் படித்தது,, பார்த்தது கேட்டது, தனக்கு நேர்ந்தது என்று
எல்லாவற்றையும் கலந்து கட்டி மிகச் சுவாரசியமான கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது இந்த
நூல்.காந்தி, ராஜாஜி,தல்ஸ்தோய், தஸ்த்யாவஸ்கி சார்த்தர்,பெர்க்மான்,சத்யஜித் ராய்,ஜெயகாந்தன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன்,சிவாஜி கணேசன், நாகேஷ், நாகேஸ்வரராவ்,என்று இந்த நூலில் காணக்
கிடைக்கும் ஆளுமைகள் அநேகம்,மிகமிகச்
சுவாரசியமான, தெளிவும்,இதமான நகைச்சுவையும்
கலந்து எழுதப்பட்டிருக்கும் இந்த கட்டுரைகளில்," வார்த்தையும் செம்மையும்",செம்மை பற்றி மேலும் சில
வார்த்தைகள்" என்ற இரு கட்டுரைகளும் மிகச் சிறந்தவை என்று சொல்லுவேன்
.Perfection என்ற சொல்லுக்கு இணையாக செம்மை
எனும் வார்த்தையை பயன்படுத்திடும் ஆசிரியர், ஒவ்வொரு சிறு செயலிலும் அமையக்கூடிய செம்மையை விவரித்திருக்கும் விதம் மிக அழகு.
பெயரில் என்ன
இருக்கிறது,விருதுகள் பரிசுகள்
அங்கீகாரங்கள்,பலூன் மழிப்பும் ஆகிய
கட்டுரைகளும் சிறந்தவை. ராஜாஜி, சம்பந்தப்பட்ட
சில சம்பவங்கள், ஜெயகாந்தன்,அசோகமித்திரன், மற்றும் நாஞ்சில் நாடன்
ஆகியோரோடு, இவ்வாசிரியருக்கு நேர்ந்த
சில அழகான அனுபவங்கள், , திருவல்லிக்கேணி, கல்கத்தா ஆகிய இடங்களை
பற்றிய சுருக்கமான அழகான வர்ணனைகள்,,சில அற்புதமான மேற்கோள்கள்.ஆகியவை, அடங்கிய இந்தப் புத்தகம்,எப்போது வேண்டுமானாலும்
எங்கிருந்து வேண்டுமானாலும் பிரித்துப்படிக்கக்கூடிய சுவாரசியமும் ஆழமும் கொண்டது.
அப்படி அமைவது அரிதாகவே நிகழும் ஒன்று. ஒரே ஒரு குறை மட்டும் சொல்வேன். எனக்கு
ரொம்பப் பிடித்த சிவாஜி கணேசனை, வ.ஸ்ரீ சாருக்கு
அவ்வளவாக பிடிப்பதில்லை.போகட்டும்.
கோவை சிறுவாணி
வாசகர் மையத்தின் ஜனவரி மாத வெளியீடான, இந்த நூலை நணபர்களுக்கு பரிந்துரைக்கிறேன். வெளியிடட சிறுவாணி வாசகர் மையத்துக்கு வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
திண்ணை தமிழின் முதல் இணைய
வாரப்பத்திரிகை
2 ஜூன் 2019
ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது
மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]
வளவ.துரையன்
Spread the love
வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப்
பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை கோவையில்
அவரில்லத்திற்குச்சென்று சந்தித்திருக்கிறேன். நெடுநாள் பழகியவர் போல் அளவளாவியது
இன்னமும் நினைவிலிருக்கிறது. அவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அண்மையில் வெளியாகி
உள்ள “எதைப்பற்றியும் [அ] இதுமாதிரியும் இருக்கிறது”. கட்டுரைத்தொகுப்பு எனச் சொன்னாலும் இதில் உள்ளவை ஒரே கட்டுரையில் அடக்கப்பட்ட
பல்வகைப்பட்ட சிறு பகுதிகள் என்று சொல்லலாம். அதாவது பத்தி எழுத்து வகையில்
அமைந்தவை. படிக்கச் சலிப்பூட்டாதவை. இவை அனைத்துமே வார்த்தை மற்றும் சொல்வனம்
இதழ்களில் வெளிவந்தவையாகும்.
அவர் அவ்வப்போது கண்ட, கேட்ட, வாசித்த அனுபவங்களை
வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார் என்றும் சொல்லலாம். அவர் ஒரு முறை கொல்கத்தா
இரயிலில் பயணம் செய்கிறார். அப்பெட்டியில் பயணம் செய்த முப்பது வயதுக்குள்ளான
தம்பதிகளில் கணவன் ஏதோ ஒருகாரணத்திற்காக மனைவியைக் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
பார்த்துக் கொண்டிருந்த அனைவருமே ஸ்தம்பித்துவிடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து
அவர்களிருவரும் ஒன்றுமே நடக்காதது போல ஆகி விடுகிறார்கள். இதைக்காட்டும் அவர் “கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களுமே இத்தகைய ஆபாச, அராஜக , அநியாய, அவமானங்களை வாழ்வில் சந்தித்தே விடுகிறார்கள்” என்கிறார். அனைத்துப் பெண்களுமே என்ற சொற்றொடர்தான் இங்கே கவனிக்க
வேண்டியதாகும்.
கிராமப்பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் இது நடக்கிறது.
நன்கு படித்த பெண்களுக்கும் படிப்பு வாசனையே அறியாத பெண்களுக்கும் இது
நடந்தேறுகிறது. வேலைக்குச்சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும் இவ்வாறு நடக்கிறது.”எல்லாப் பெண்களுமே தாழ்த்தப்பட்டவர்கள்தாம்” என அவர் முடிக்கும்போது இதை
இன்னும் ஆண்களால் மாற்ற முடியவில்லையே என்னும் எண்ணத்தால் மனம் வலிப்பதைத்
தவிர்க்க முடியவில்லை.
ஆங்காங்கே சில அரசியல்
சிந்தனைகளையும் எள்ளல் பாணியில் அவர் விதைத்துச்செல்கிறார். சிலவற்றைத் துணிந்தும்
சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், ”வாரிசு அரசியல் இல்லாதவர்கள், ஜனநாயக முறையில் உள்கட்சித்
தேர்தல் நடத்துபவர்கள், சொத்து அதிகம்
சேர்க்காதவர்கள், தமக்கு வரும் எல்லாப் பரிசுகளையும் கட்சிக்குக்
கொடுப்பவர்கள்” எனப்பாராட்டிக் கொண்டே போகிறார். ஆனால் அவர்களது
குறைகளையும் சொல்வதுதான் முக்கியமானதாகும். அவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும்
நேரத்தில் மற்ற கட்சிகளையும் எள்ளி நகையாடும் வரிகள் இவை.
”’தமிழன்’ சான்றிதழ் வழங்கும் பெரியார் பல்கலைக்கழகம். ‘ ‘இந்தியர்’ பட்டம் வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சர்வகலாசாலை மாதிரி ’முற்போக்கு’ ‘மதச்சார்பின்மை’ என்கிற ‘ட்யூயல் டிக்ரி’ வழங்கும் யூனிவர்ஸிடி’ இவர்கள்.
இன்னும் கூட அவர்களில் இருக்கும் விசித்திரங்களாக ஹிரேன் முகர்ஜி தினமும்
காலையில் சம்பிரதாயமான புனஸ்காரங்கள் செய்வதையும், சீக்கிய தோற்றத்தில்
ஹர்கிஷன் சிங் இருப்பதையும், நம்புதிரிபாடு
விடியற்காலையில் பத்நாபனைத் தரிசிப்பதையும் காட்டுவார். இவையெல்லாம் கேலி
செய்வதற்காக அன்று. நாம் இருப்பவற்றிலேயே நல்ல கொள்கைப் பிடிப்புள்ள
தூய்மையானவர்கள் உள்ள கட்சி என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதிலேயே இவையும்
நடைபெறுகின்றன என வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்.
அதுபோலவே ‘மோகமுள்’ பற்றிய இவரின் கருத்து மிக முக்கியமானதக இருப்பதோடு
புதிதாகவும் இருக்கிறது. தி.ஜா வின் எழுத்துகள் பற்றிய ஜெயமோகன் கருத்திலிருந்தும்
இவர் மாறுபடுகிறார். மோகமுள்ளைப் படித்து முடிக்கும்வரை நான் வேறு உலகத்தில்
பாபு, யமுனாவோடு இருந்தேன் எனச் சொல்கிறார். “தி.ஜாவின் கதைகள் காமத்தின் பீறிடல்கள் என்கிறார் ஜெயமோகன். எனக்கு அவை ‘பொருந்தாக் காதல்’ பற்றியவை என்றே படுகிறது’ என்றெழுதுகிறார். ஆனால் அது பற்றிச்
சற்று விரிவாக எழுத பத்தி அவருக்கு இடம் தரவில்லை என எண்ணுகிறேன். மோகமுள் பற்றி
அவர் ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம்.
ஒரு சிலருக்கு இலக்கியமே வாழ்வு
என்றாகி விடுகிறது. சிலரோ தம் வாழ்வை முடிந்தமட்டும் இலக்கியத்தில்
கழிக்கிறார்கள். இருவருமே இலக்கியத்தை ஒரு வகையில் விட முடியாதவர்கள். ஆனால் பலர் ”இதுக்கெல்லாம் எங்கேங்க நேரமிருக்கு?” என்கின்றனர். அவர்களுக்கு
விடையாக இவர் எழுதுகிறார். “குடும்பம், வேலை ஆசாபாசங்களின் அலைக்கழிப்பு நடுவே ரகசியக் காதலைப் போல் இந்தப் பிரேமை, இதுதான் என்கிற தாபம், உறவு இலக்கியத்தோடு
தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது”
எல்லாருக்கும் சொந்தபந்தங்கள், குடும்பப் பிரச்சனைகள், பொருளாதாரச் சிக்கல்கள்
இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுக்கு இடையிலே நம் வாழ்வு அமைவது தவிர்க்க
முடியாதது. உண்மையான இலக்கிய ஆர்வம்தான் வேண்டும். அதைப்பெறுபவர்தாம் தேர்ந்த
வாசகராகவும் நேர்மையான படைப்பாளியாகவும் மிளிரமுடிகிறது. இதைத்தான் ஸ்ரீநிவாசனின்
எழுத்து தெளிவாக்குகிறது.
இந்நூலில் ஆங்காங்காங்கே ஒரு சில
அறிஞர்களின் வாழ்வு நிகழ்ச்சிகளையும் அவர்களின் சொற்களையும் எடுத்துக் கூறி
உள்ளார். அவற்றில் ஜே.கே பற்றிய ஒரு பதிவு முக்கியமானது. ’ஜே.கே” எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப்
பற்றி நாம் அறிவோம். தத்துவ மேதை ஆன்மிக அறிஞர்கள் என்றெல்லாம் அவரைப் பற்றிக்
கூறுவார்கள். அவர் எந்த நாட்டிலும் நிரந்தரமாகத் தங்க மாட்டாராம். இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஸ்விட்சர்லாந்து போன்ற
நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு சில மாதங்கள் தங்குவது அவர் வழக்கமாம். இதை அறிந்த
இந்தியர் ஒருவர் ஒரு முறை அவரிடம், “நீங்கள் ஓர் இந்தியர்.
அதனால் இந்தியாவில்தான் தங்க வேண்டும். அதுதான் சரி, என்றதும், அவர் சொன்ன பதில்: “என் வீடு இந்த உலகத்தில்”. [My home is in this world]
ஜே.கே போன்றவர்களை ஒரு
குறிப்பிட்ட நாட்டுக்கோ, மதத்துக்கோ சொந்தமாக்க
நினைக்கக் கூடாது. விவேகாநந்தர், ஷேக்ஸ்பியர் போன்றோரையும்
அப்படித்தான் எண்ணவேண்டும். ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டின் சில கவிஞர்களையும், தலைவர்களையும் தத்தம் சாதிச்சிமிழுக்குள் அடக்கிப் பெருமை பீற்றிக் கொள்ளும்
நிலை தலைதூக்கி வருவது வேதனைக்குரியது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
நாஞ்சில்நாடனின் நெருங்கிய நண்பராக இருப்பதனாலா என்னவோ வ. ஸ்ரீநிவாசன்
சொல்லாராய்ச்சியிலும் படுகிறார். சொல் எனப்படுவது தன் கருத்தைத் தெரியப்படுத்த
உதவும் சாதனமாகும். அதாவது கம்யூனிகேஷன் என்று கூடச்சொல்வார்கள். கம்யூனிகேஷன்
என்பதைத் தமிழில் பெரும்பாலும் தொடர்பு என்கிறோம்.
”கான்டாக்ட் என்பதற்கும் அதுவே [இன்னமும்] சரியாக இருக்கிறது” என்கிறார் நூலாசிரியர். மேலும் அவர் எழுதுகிறார் “தெரியப்படுத்தல் என்னும் சொல் இன்ஃபார்ம் என்பதற்கும் சரியாக இருக்கிறது. “ஏன் ”தெரிதொடர்பு” என்று சொல்லக்கூடாது. சொல்
சரியாக இருக்க இருக்க தெரிதொடர்பு சரியாக ஆகும்”
தெரிதொடர்பு என்னும் சொல் புதுச்சொல்தான், அது மிகவும் ஏற்றதாக
இருக்கிறது என நினைக்கிறேன்.
பல இடங்களில் சொல்லாராய்ச்சிகளைப்
பார்க்க முடிகிறது. செம்மை எனும் சொல் குறித்த கருத்துகள் [பக்-148] முக்கியமானவை. நூலகங்கள், இசை, கிரிக்கெட் போன்றவை பற்றியும் குறிப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இன்னும், ‘சிங்கப்பூரில் இட்லி’ ‘விருதுகள், பரிசுகள், பதவிகள், அங்கீகாரங்கள்’, ’பொழுதுபோக்கும் ரஜினியும்’, ‘பெயரிலென்ன இருக்கிறது?’ முதலான கட்டுரைகளும் அவசியம் படிக்க வேண்டியவை. வ.ஸ்ரீ யின் நடை படிக்கக்
களைப்பில்லாததாகும். அவ்வப்பொழுது மின்னல்
போல் தோன்றி மறையும் எள்ளல்கள் இடை இடையே அளவோடு இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
இந்நூலின் கருத்துகள் ஆழமானவை, அதே நேரத்தில் தெளிவாகச்
சொல்லப்பட்டுள்ளன. மரபில் தோய்ந்தோரும் நவீனத்தை நாடுவோரும் படித்தறிந்துகொள்ள
வேண்டிய முக்கியமான தொகுப்பு இது.
எதைப் பற்றியும் [அ] இது மாதிரியும் இருக்கிறது
வ.ஸ்ரீநிவாசன்—கட்டுரைத் தொகுப்பு
வெளியீடு: சிறுவாணி மையத்திற்காக பவித்ரா பதிப்பகம்;
24-5, சக்தி மஹால், சின்னம்மால் வீதி, கே.கே புதூர், கோவை 641038;
பக்: 176; விலை ரூ 160/-
வளவ. துரையன், 20. இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம்,
கடலூர் - 607 002
கடலூர் - 607 002
--------------------------------------------------------------------------------------------------------------
"எதைப்பற்றியும்
(அ) இது மாதிரியும் தெரிகிறது" என்ற தலைப்பே பணிவுடன் கூடிய பரிந்துரையை
செய்கிறது ஒன்றைப் பற்றி நமக்கு.
எரிந்து
கொண்டிருக்கிற விளக்கில் சிகப்புக் கண்ணாடி குடுவை மாட்டினோமானால் அந்த வெளிச்சம்
சிகப்பாகத் தெரியும்.அதே போல பல நிறத்திலும் தெரிய வைக்க முடியும்.எனவே
பார்ப்பவைகள் உண்மையல்ல என்று மாயை பற்றி விரித்துரைக்கும் உதாரணங்கள் உண்டு.
அப்படி ஒரு
உதாரணத்தை மறை பொருளாகக் கொண்டு வைக்கப்பட்ட தலைப்பு என்றுதான் இதை நினைக்கிறேன்.'ஒரு கட்டுரையோ நூலோ கூட தெரிவிக்க முடியாதவற்றை
சில மகா கலைஞர்கள் ஒரு வாக்கியத்தில் சொல்லி விடுகிறார்கள்' என்று ஒரு கட்டுரையில் அவரே சொல்வது போல
அமைந்துள்ளது புத்தகத் தலைப்பு.
திரு.ஜெயமோகன்
சலிப்புக்கு மாற்றாக அமைவது வ.ஸ்ரீயின் எழுத்துப் பத்தி என்று
அடையாளப்படுத்தியிருந்தார்.ஆம் புதுமைப்பித்தன்,சுஜாதா வகையில் இன்றைய முகநூல் எழுத்துமுறைக்கு
மிக அணுக்கமான முறைதான்.ஆனால் அந்த சலிப்பு எப்படிப்பட்டது என்பதை கவனிக்க
வேண்டும்.
அது ஒரு
விரக்தியினாலோ,கையறுநிலை
சந்தர்ப்பத்தினாலோ எழுந்த சலிப்பல்ல.எல்லாம் முடிந்துவிட்டது என்ற இலக்கண
மயக்கமுமல்ல.எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்ட பேரூழிக் காலத்துக்கு பிறகு ஒரு
துளிர்ப்பு வரும்.அட அவ்வளவுதான் இந்த உலகநீதி என்ற புரிதலும் வருமல்லவா? அந்த சலிப்பு.கணியன் பூங்குன்றனாருக்கு
இருந்தது சலிப்பு என்று சுருக்கி அடையாளப்படுத்திவிட முடியாது.
தன் பரந்துபட்ட
வாசிப்பு,பக்தி,தத்துவம்,சினிமா,அனுபவம்,மனிதர்கள்,சமூகத் தொகுதி,மொழி,பிற்போக்கு முற்போக்கு என்று வகைக்குள் அடங்கிவிடாத வாழ்வு என எல்லாவற்றையும்
பற்றி ஒரு பரிந்துரையை தன் போக்கில் நன்நோக்கில் சொல்கிறார்.
ஒரு கட்டுரையில்,"நாம் கைம்மாறு செய்யவே முடியாத,நாம் தகுதியாகவே முடியாத விஷயம் அன்பு.அது
நிகழ்கையில் நாம் ஆட்பட மட்டும்தான் முடியும்" என்று சொல்கிறார்.எவ்வளவு
சத்தியமான வார்த்தை பாரதி சொன்னதுதான் 'அன்பெனும் பெருவெள்ளம் என்னை இழுத்தால் பிழைக்க முடியுமா?' என்று கேட்டதுதான்.இதன் உள்ளடக்க வடிவம்தான்
அவரது எழுத்தும் ஆனால் எத்தனை கோடி மனிதர்களின் எண்ணங்களை தங்கள் எழுத்துக்குள்
அடைத்துவிடுகிறார்கள்.
செம்மை(Perfection)
பற்றி ஒரு கட்டுரையில்
இப்படிச் சொல்கிறார் 'கடவுளை கோவிலில்
அடைத்த மாதிரி,இந்த தூய Perfection
-னையும் இலக்கணத்துக்குள்
அடைத்து லிட துடிக்கிற மனிதன் தோற்றுக் கொண்டே இருக்கிறான்' என்று.உண்மைதானே! தான் செய்து கொண்டிருப்பது Perfection
என்று ஒரு மனிதனால்
உணரப்படும் போது அங்கே ஒரு பின்னம் நிகழ்கிறது.ஒரு உன்னதம் எங்கே பீடமேறுகிறதோ
அங்கே அது தேங்கிவிட்டது என்று அர்த்தம்.இதையே இறுதி Perfection என்று மனிதன் சொல்ல ஆசைப்படுகிறான்.
இப்படி ஒரு
புள்ளியிருந்து கோலத்தை நோக்கி விரிகிற கட்டுரைகள் இவற்றில் நிறைய உள்ளன.இந்த
புத்தகத்தை உடைத்தால் ஆயிரம் குறுங்கவிதைகள் கிடைக்கும்😊.
'வீழ்வது நாமாக
இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிறார்கள்.சூரன் வீழ்ந்தான் முருகன்
வாழ்ந்தான்,இராவணன்
வீழ்ந்தான் இராமன் வாழ்ந்தான்.எனவே ஜென்ம பகைவர்களில் ஒருவர் வீழ்ந்தால் மற்றவர்
வாழ்வார்தான்.' என்ற அரசியல்
எள்ளல்கள் இந்திரா பார்த்தசாரதியை நினைவுபடுத்துகிறது.
பல போலி
நேருவியர்களை போல எனக்கு நேருவை பிடிக்கும் அவர்தான் கடவுள் என்று பேசுபவரல்ல.நேரு,பட்டேல்,மொராஜி,ராஜாஜி,காமராஜர்,மோடி என்று தேசியத்தை அடிப்படையாக வைத்து
செயல்பாட்டின் வழி ஒரு கறாரான தீர்ப்பை வைத்திருக்கிறார்.அதன் வழியில் இத்தனை
பேர்களையும் அவர்களின் முரண்பாடுகளோடு அவரால் ஏற்றுக்கொள்ளவும்
முடிகிறது.ஒட்டுமொத்தமாக எதைப்பற்றியும் பேசுகிற மேதாவிலாசம் பரிந்துரையில்
இருந்து எழுவது ஆச்சர்யம்.
தனிப்பட்ட
முறையில் பேசுகிற போதும் அவருடைய அன்பின் வழி கொடுக்கிற மரியாதை ஆத்மார்த்தமானதாக
இருக்கிறது குரலில்.நிச்சயம் இது எல்லோருமே அடையவேண்டிய ஒரு நிலைதான்.
Sundar raja cholan in fb
11.05.2019
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
இன்று சுஜாதா
அவர்களின் பிறந்த தினம். 03.05.2019
அவர் பற்றி 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது'
நூலிலிருந்து கீழே:
"சொல்லும் கதையில்
/ எழுத்தில் இருக்கும் ஆச்சர்யங்கள், இரகசியங்கள், வெளிச்சங்கள்
என்கையில் சுஜாதா ஞாபகத்தில் வருகிறார். தமிழின் நவீன முகத்தை மேலும் மேன்மைப்
படுத்திய மகானுபாவர்களில் ஒருவர். ஒரு ஜெயகாந்தனோடும், அசோகமித்திரனோடும் சம காலத்தில் ஒளிர்ந்தவர்.
பத்திரிகை எழுத்துலகின் சூப்பர் ஸ்டார். அவரளவு தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகள்
(pioneer) யாருமில்லை.
எனக்கு (ம், என் மனைவிக்கும்
மிகவும்) பிடித்த எழுத்தாளர். புதுமைப்பித்தனுக்குப் பின் மனதின் பல
பிராந்தியங்களை எழுதிப் பார்த்தவர். அவரைப் பற்றி அசோக மித்திரன் ஒரு முறை 'இத்தனை திறமைகள் இருந்தும் அவருக்கு ஒரு
அலட்சியம்.... சமூகத்தின் மீது, வாழ்க்கையின்
மிது, எழுத்தின் மீது..... ஏன்
தன் மீதே' என்று எழுதி அவரை
'ஹெமிங்க்வே' யுடன் ஒப்பிட்டிருந்தார்.
கணையாழியின்
கடைசிப் பக்கங்களிலிருந்து, நைலான் கயிறில்
ஆரம்பித்து எவ்வளவு கதைகள், கட்டுரைகள்,
எவ்வளவு நகைச்சுவை,
சோகம் ... அடியில் ஒரு
அலட்சியம் கலந்த கோணல் சிரிப்பு.
எவ்வளவு
நூல்களைப் படித்தவர்? எவ்வளவு
ரசிகர்கள்? அவரை குருவாய்
வரித்த எவ்வளவு எழுத்தளர்கள், வாசகர்கள்?
எழுத்தின் காரணமாகவும்,
பிராபல்யத்தின்
காரணமாகவும், வெற்றியின்
காரணமாகவும், தமிழ் நாட்டிற்கே
உரிய பிரத்யேகக் காரணமாகவும் எவ்வளவு வசைகள்?
அவர் இறந்த அன்று
மாலைதான், அவர் உடல் நலம்
இன்றி இருப்பது கூட அறியாமல் நானும் சுகாவும் பேசினோம்." சுஜாதாவிற்கு
பொருத்தமில்லாத ஒரு பாபுலாரிடி இருக்கிறது. ஆனால் பொருத்தமான பாபுலாரிடி மறுக்கப்
படுகிறது. ஜெயமோகன் ஒருவர்தான் அவர் பற்றி சீரியஸ் தளங்களில் எழுதுகிறார்."
குரலெழும்பாத ஒரு நோஞ்சான் மனிதன் எழுத்துக்களால் வண்ண மயமாக வாழ்ந்து மறைந்து
விட்டான்.
அவர் மரணத்திற்கு
அடுத்த வாரம் மரணத்தைப் பற்றி ஒரு ஆழமான, புன்னகையைத் தருவிக்கிற, விஞ்ஞான, செட்டான சொற்களால் ஆன கட்டுரையோ, கதையோ ஆ.வியிலோ, குமுதத்திலோ வந்தாலும் வரலாம் என்று எதிர்
பார்த்தேன்.
அவர் ஓரிடத்தில்
கூறியிருந்தார்: "எனக்கு மறு பிறவியில் நம்பிக்கையில்லை. அப்படி ஒன்று
இருந்தால் இதே தமிழ் நாட்டில் இதே முதுகு வலியுடன் பிறக்க வேண்டும். இதே போல்
தமிழில் எழுத வேண்டும். அப்படியின்றி வேறு நாட்டில், வேறு பாஷை பேசுமிடத்தில் பிறந்தால் அது
வேறுபிறவி; மறு பிறவி அல்ல.
நான் ஸ்விஸ் நாட்டில் பிறந்தேன் என்றால் பாஷை தெரியாமல் கஷ்டப் படுவேன்."
எழுத்தில் பல
பரிசோதனைகளைச் செய்த ஸ்ரீரங்கத்து தேவதை !"
-----------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment