Thursday, October 22, 2026

கதவைத் திறக்கும் வெளிச்சம் - மாலன்

 




                                                        கதவைத் திறக்கும் வெளிச்சம்  

                                                                                மாலன்

                                                            தேர்ந்தெடுத்த சிறுகதைகள்


உலகெங்கும் பரவிக் கிடப்பவை வசீகரமான அரசியல் பொய்களும், வசதியற்ற ஏழைகளும்

                                                                        - அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர் 


சூடிக்கொள்ளப்படும் கிரீடம் எல்லாம் யாரோ எவரையோ வருத்திப் பெற்றவைதான்

                                                                        - அம்மாவின்  கிரீடம்


நமது அரசியல், உணர்ச்சிகள் சார்ந்தது. சட்டம், அறிவு சார்ந்தது. ஒரு சமூகத்தை வழிநடத்த வேண்டியது உணர்ச்சிகளா? அறிவா?

                                                                                                        - அறம்


ஆயுதம்னா கத்தி கபடாவா ? காகிதம்னா வழவழவென்று வெள்ளைக் காகிதமா ?  பாரதி சொல்லுக்கு, எழுதுவது நம் ஆயுதம். (Writing is our weapon)  என்றல்லவா அர்த்தம் ?  

                                                                                                        - ஆயுதம்


புரட்சிக்காரர்களின் வீடுகளிலும்  அடிமைகள்  சிறைப்பட்டிருக்கிறார்கள். அநேகமாகப் பெண்களாக.

                                                                                                        - எங்கள் வாழ்வும் 


பிடித்த  புத்தகம் பிடித்த பெண்ணைப் போல மறுபடி மறுபடி அழைக்கும். விடுமுறைப்  பிற்பகலில்,  நள்ளிரவில்  புரட்டக்  கூப்பிடும்..அதைத் தேடிப் புறப்பட்டவன் கையில் கவிதை சிக்கும். தத்துவம் பிடிபடும். வாழ்க்கைப்  பந்தைப்  பிரித்து  வீசிய  கேள்விகள்  இடறும். பதிலும், திகிலும் எதிர்ப்படும்.

                                                                                                        - யோசனை


"நாம் மாறியிருக்கிறோம்.ஆனால் வளர்ந்திருக்கிறோமா?"

                                                                                            - புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே


------------------------------

இந்தத் தொகுப்பை குறித்து இங்கே நான் சொல்லியிருப்பது முழுக்க முழுக்க நான் உணர்ந்தது.

விமர்சனம் என்பது நுணுக்கங்கள் தெரிந்தவர்களுக்கானது. எனக்கு நுணக்கங்கள் தெரியாது. ஆகவே விமர்சிப்பது எனக்கு வராது. நான் சராசரி வாசகன். அவ்வளவே!


வார்த்தைகளுக்கு அதிக கனம் கொடுக்காமல் இயல்பாக எளிமையாக வாசிப்பை உணர வைக்க ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது. அறிவுஜீவித்தனமாக நினைத்தக்கொண்டோ முற்போக்குத்தனம் என நினைத்துக்கொண்டோ எதையாவது கிறுக்கிப்போட்டு இதைப் படித்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தத்தைக் கொடுப்பவர்களின் மத்தியில் மாலனின் எழுத்து நளினம்.


இந்த நளினம்தான் கதைப்போக்கை ரசிக்க வைக்கிறது. இலகுவாக நம்மை கதையின் நிழ்வுகளோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. கதை நிகழ்வுகள் நம் வாழ்க்கையின் சில பக்கங்களை பிரதி எடுத்தது போலவும் உணரமுடிகிறது.   


விட்டேத்தியாக கதைகளை முடிப்பது போலிருக்கிறது. இது யுக்தியா இல்லை வாசககனை யூகிக்க வைக்கும் முயற்சியா ? இல்லை இது ஒரு பாணியா ? சராசரி வாசகனுக்கு எப்படி கதை துவங்கவேண்டும் அது எப்படி முடியவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அது ஆளாளுக்கு மாறுபடும். முடிவு புரியாத சில கதைகளை புரிந்து கொள்ள இனிமேலாவது நான் முயற்சிக்க வேண்டும்.


ஒரு சில கதாபாத்திரங்களின் பெயர் திரும்பத்திரும்ப சில கதைகளில் வருவது ஏன் எனத் தெரியவில்லை

அனந்த் (அனந்தராமன்) தமிழ் முருகேசன்,  பாலி மற்றும் அருணா  இவர்கள் வெவ்வேறு கதைகளில் வருகிறார்கள். வேறு வேறு சூழல்கள். ஒன்று அந்தக் கதாபாத்திரங்கள் நிஜவாழ்வில் அதே பெயருடன் மாலனுடன் வழிநெடுக வந்திருக்கலாம் அல்லது கதை எழுதுகிறவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பெயர் மனதில் ஒட்டிக் கொண்டுவிடும் போலிருக்கிறது.


அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்,  அம்மாவின் கிரீடம் அறம் ,செப்டம்பர் 11,1952 

புலிவேட்டை,

இச்சிறுகதைகள் அவ்வளவாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. எங்கேயோ நடந்த ஒன்றை ஆர்வமில்லாமல் கேட்போமே அந்த மாதிரிதான் இருக்கிறது.


ஆயுதம்


சுவராஸ்யம். கதைத் தளம் 'சிவப்பு சித்தாந்த அரசியல் நெடி. கதைக் காலம் பழையது. ஆனாலும் இப்போதும் எப்போதும் பொருந்தி வரும் நிகழ்வுகள். மீண்டும் ஒரு முறை வாசிக்க வைக்கும் கரு. இயல்பான நடை.


இதெல்லாம் யாருடைய தப்பு


கமர்ஷியலான சமூகத்தில் ஒரு விஷயத்திற்கு யுடிலிட்டி இருந்தால்தான் மதிப்பு. மொழிக்கும் அப்படியே.  வாசிக்கும்போது

தமிழை வைத்து அரசியல் நடத்தி ஏமாற்றும் கட்சி மட்டுமல்ல,  என் கல்லூரி காலத் தோழனும் ஞாபகத்தில் வந்து போனான்


இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ்


மிக எதார்த்தமான  கதை.  என் வாழ்க்கையோடு ஒரு கனெக்ட் இருப்பதாக உணர்ந்ததால் என்னவோ கதை பிடித்தது.

இளஞ்செழியனின் மூர்க்கத்தனத்தோடு இளம் வயதில் இருந்த என்னைப் போன்ற பலரை காலமும் நிதர்சனமும்  மாற்றாமல் விடுவதில்லை. கொள்கை, புரட்சி சித்தாந்தகள் எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்கள். 'புத்திசாலித்தனமாக இருப்பது  மட்டுமல்ல வெற்றிகரமாக இருப்பதுதான் வாழக்கை.'


இறகுகளும் பாறைகளும்


அருணாதான் கதையின் சென்டர் பாயின்ட். அதனால் பத்மா விஷயம் அந்தரத்தில் விடப்பட்டு அருணா கதையை ஆக்ரமிக்கிறார்.  

அருணாவைப் போல கவிதா என்கிற பெண்ணை என் நாற்பதுகளில் கடந்து வந்திருக்கிறேன்.


எங்கள் வாழ்வும்


கொள்கை புரட்சி சித்தாந்தம் இவையெல்லாம் தன் வாழ்வு  என்று வரும்போது அடகு வைக்கப்படுகிற எதார்தத்தை சொல்கிற கதை.  கண்கூடாக பல அரசியல்வாதிகள் ஞாபகம் வந்து போகிறார்கள்.நல்ல கதை. சிலருக்குப் பிடிக்காது. அந்தக் காலத்தில் விமர்சனஙகளுக்கு உள்ளாகியிருக்க வேண்டும்.

' புரட்சிக்காரர்கள் வீடுகளிலும் அடிமைகள் அடிமைகள் சிறைபட்டிருக்கிறார்கள். அநேகமாக பெண்களாக' நல்ல டேக் லைன்.


கதவைத் திறக்கும் வெளிச்சம்


க்ளாஸ். வாசித்து முடித்ததும் என்னவென்று சொல்வது எனத் தெரியாத உணர்வு.

'வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ? காசா? பதவியா? புகழா? அனுபவித்துத் தீர்க்கிற உல்லாசமா? சாவா? என்ன அர்த்தம்.'

என் இருபதுகளின் நான் கேட்டுக்கொண்ட அதே கேள்விகள். . 'யுனிவர்சல் லவ் அதோட நிறம்தான் காவி'. எக்ஸெலன்ட் மாலன்.


கல்யாணம் என்றொரு ரசாயனம்


இதே தொகுப்பில் ஏற்கனவே வாசித்த சில கதைகளின் சாயல். கதைக்கருக்கள் ஏறத்தாழ ஒன்று. கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் கொண்டிருந்த கோட்பாடுகள் இவைகள்தான் வித்யாசம்

(எங்கள் வாழ்வும், இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ், இதெல்லாம் யாருடைய தப்பு)


கல்லிற்கும் கீழே பூக்கள்


சுமைகளற்ற வாழ்க்கை வாழ்க்கையே இல்லை. குறைகளைப் பெரிதாக நினைக்காமல் மிஞ்சியிருக்கிற வாழ்க்கையை மெருகு போட்டு பார்த்து சந்தோஷிக்க எல்லாராலும் முடிவதில்லை. கொஞ்சம் ஆழ்ந்து வாசித்தால்தான் புரிகிறது கதை.


களவு


இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த மூன்றாவது கதை. ஒரு கோபத்தில் திருடர்களோடு வாழவேண்டிய நிர்பந்த்தைக் கோபித்துக்கொண்டாலும் குடை விஷயத்தால் உறுத்துதலுக்கு உள்ளான அவன் மனதில் நிற்கிறான்.


காணமல் போனவர்கள்


நட்பு/ ஸ்நேகிதம் இதெல்லாம் ஒரு எல்லைக்குட்பட்டது. என்னதான் நட்பென்றாலும்  கால நதி இழுக்கும் இழுப்பில்  எங்கேயோ போய் கரை சேர்கிறோம்.  அதுதான் வாழ்க்கை.

யார் எங்கிருக்கிறோம் என்று தெரியாமல் போய்விடுகிற நட்புகளையும் இணைத்தே தான் நாமும்  கடந்துவருகிறோம் வாழ்வை. நல்ல கதை.


குழலி


வாசித்து முடித்ததும் திருப்திபடவில்லை. ஏதோ ஒன்று குறை போலப்பட்டது. ஒரு வேளை அதுதான் இந்தக் கதையின் வெற்றியா எனத்தெரியவில்லை.


கூலி


ஒரு தொழிலாளியின் பணத்திற்கான தேவை ஒரு புறம் ரெட் டேபிஸம் என்று சொல்வதா எனத் தெரியவில்லை. ஏறத்தாழ அது மாதிரியான அதிகாரித்துவ சிக்கலகள் மறுபுறம். வித்யாசமான கோணம். பிடித்துப்போன நான்காவது சிறுகதை.


சந்தான லட்சுமி


முடிவை யூகிக்க முடிந்தது. சினிமா பாணியிலான முடிவு. ஆனால்  கதை முழுவதும் மாலன் எழுத்தில் அப்படி ஒரு நளினம்.  பிடித்த வகையறாவில் ஐந்தாவது கதை.


தப்புக்கணக்கு.


குழந்தையின் தப்புக் கணக்கைவிட, அதன் உலகைப் புரிந்துகொள்ளத்

தவறும் பெரியவர்களின் கணக்கே 

இங்கு கவனத்திற்குரியது. ஆணாதிக்க சிந்தனை என்று யாரும் வராமல் இருக்கட்டும்.


புதுமைப்பித்தன் எக்ஸ்ரே


நல்ல வளமையான கற்பனை. புதுமைப்பித்தன் கதையில் வந்து போகிறார். நம் ' அனந்தராமன்' மூன்றாவது முறையோ நான்காவது முறையோ தெரியாது இந்தக் கதையிலும் வருகிறார். செய்திகள் இடைவிடாது பொழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிந்தனையில் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. புதுமைப்பித்தனின் இந்த  உரையாடலுக்கு நம்மிடம் எப்போதும் பதில் இருக்கப்போவதில்லை. இந்தத் தொகுப்பில் கவர்ந்த ஆறாவது கதை.


மா, யோசனை வடு வித்வான் இக்கதைகளை இரண்டாம் வாசிப்பின் போது வாசிப்பதற்காக மீதம் வைத்துள்ளேன்.


மொத்தத்தில் மாலனோடு இந்தத் தொகுப்பில் பயணித்தது சுக அனுபவம்.


நன்றி Madhusudhan Sukumaran sir


https://www.facebook.com/share/1QCLGJjz98/

---------------------------------





No comments:

'ரி' --அ.முத்துலிங்கம்

  சிறுவாணி வாசகர் மையத்தின்  'மாதம் ஒரு நூல்' திட்டத்தில் பெருமைமிகு அடுத்த வெளியீடு...                                             ...