Sunday, July 4, 2021

போக்கிடம்-விட்டல்ராவ்-ஆகஸ்ட்-2021




ஆகஸ்ட்-2021                             போக்கிடம்-விட்டல்ராவ்

pages 190

price 180

Isbn-978-81-952661-7-3

--------------------------------------------------------

நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு நாவல் வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்தவில்லை என்று சொல்லக் கேட்பதே அந்நாவலை எழுதியதன் பயனை ஓரளவுக்கு பெற்றதற்கான நிறைவையும் தெம்பையும் ஏற்படுத்துகிறது.

கி.விட்டல்ராவ்


காலம்தோறும் வாழ்வதற்கான வழிகளைத் தேடி, அமைதியைத் தேடி, பாதுகாப்பைத் தேடி, வெற்றியைத் தேடி, சுதந்திரத்தைத் தேடி மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். போக்கிடம் நாவலின் பேசுபொருளான இடப்பெயர்வே, அதன் இளமைக்கும் புதுமைக்கும் காரணம் என இப்போது புரிகிறது. மானுடகுலம் உருவான காலத்திலிருந்தே இடப்பெயர்வுகளும் உருவாகிவிட்ட சூழலில், இடம்பெயர்தல் தொடர்பான ஒரு படைப்பு ஒருபோதும் தன் இளமையை இழப்பதில்லை.

பாவண்ணன்

-----------------------------------------------------------------------------------------------------


எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் நாவலின் கேள்விகள் 

– எஸ். ஜெயஸ்ரீ

போக்கிடம் – நாவல். விட்டல்ராவ், சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர், கோவை, 38. விலை ரூ180)

1976இல் வெளிவந்த நாவல் போக்கிடம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தலைமுறையைக் கடந்து வெளிவந்திருப்பதாகவே கருதலாம். ஆனாலும் அது ஒரு பழைய நாவல் என்னும் தோற்றம் தராத வகையிலும் இன்றைய சூழலுக்கும் பொருந்திப் போகும் வகையிலும் இதன் மையக்கருத்து அமைந்திருக்கிறது. 

மலை சார்ந்த ஒரு கிராமத்தில் ஒரு வேதியத் தாது கிடைப்பதை அறிந்தவுடன், அந்த இடம் ஒரு தொழில்மைய நகரமாக மாறத் தொடங்குகிறது.  அந்தக் கிராமத்து மக்களும் வேறு போக்கிடமின்றி, அந்தத் தாதுவைத் தோண்டியெடுக்க வருகைதரும் தொழிற்சாலையிடம் தம் நிலத்தையெல்லாம் விட்டுக்கொடுத்து, அதற்கு ஈடாக அவர்கள் தரும் ஈட்டுத்தொகையைப் பெற்றுக்கொண்டு, அருகிலிருக்கும் ஊர்களுக்கோ அல்லது அந்தத் தொழிற்சாலையை ஒட்டிய பகுதிக்கோ குடியேறுகிறார்கள்.  அதிகாரமும் பணமும் தலைதூக்கும்போது, சாமானியருக்கும் விவசாயத்துக்கும் போக்கிடம்தான் ஏது என்பதை நாவல் பேசுகிறது.

நம் நாடு சுதந்திரமடைந்த கால்நூற்றாண்டுக்குள் தொழிற்சாலைகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வளர்ந்துவந்த நேரத்திலேயே இந்த நிலைமை தொடங்கிவிட்டது.  இன்றோ, சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டுக்காலம் கடந்த நிலையிலும் நம் நாடு இப்படித்தான் இருக்கிறது என்றால், வளர்ந்து வரும் தொழில்மயத்துக்காக நாம் மகிழ்வோமா அல்லது அழிந்துவரும் கிராமப் பொருளாதாரத்திற்காக நாம் வருத்தப்படுவோமா என்ற கேள்வியை விட்டல்ராவின் இந்த நாவல் மனத்தில் தோற்றுவிக்கிறது.

இன்று பல இடங்களில் ’செல் டவர்’ அமைப்பதற்காக எளிய மக்களுக்கு பண ஆசை காட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ கனிமவள நிறுவனங்கள் இழப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களின் நிலங்களை அபகரித்துக்கொண்டு இழப்பீடும் தராமல் அவர்களை இழுத்தடிக்கின்றன. இப்படியெல்லாம் இன்றும் நிலைமைகள் இருப்பதாலேயே இந்த நாவலின் இளமை குன்றாமல் நீடித்திருக்கின்றது.  காலங்கள் மாறினாலும் கடந்தாலும் சாதாரண எளிய மக்களுக்கு எதுதான் போக்கிடம்?

நாவலில் நடைபெறும் மற்ற இரு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று, கணவனை இழந்த பேச்சி தன் பத்து வயது மகனோடு தனிமையில் வசிக்கிறாள். மற்றொன்று, டேனிஷ்பேட்டையின் பள்ளிக்கூடம்.  கிராமத்துப் பள்ளிக்கூடங்கள் அன்றிலிருந்து இன்றுவரை இதே நிலைமையில்தான் இருக்கின்றன. கிராமத்துப் பள்ளிக்கூடம் எனில், அந்த ஊருக்கு வரும் அலுவலர்கள் தங்கிச் செல்வதற்கான இடமாகவும் பெரிய மனிதர்கள் வீட்டுப் பொருட்களை இறக்கி வைப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்படுவதையே பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் முழுமையான அளவு ஈடுபாடும் காட்டுவதில்லை. ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம் நல்ல ஆசிரியர் ஒருவர் கிடைத்தால் சிறப்பாக முன்னேறும் என நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக ஒரு கிராமத்தின் போக்கிடமாக, அதாவது ஒதுங்குமிடமாகவே அது கருதப்படுகிறது.

பேச்சி, கருணையுள்ளத்தோடு படைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் பாத்திரம். ஆனால் அந்தப் பெண்ணை தம் உடற்பசிக்கான போக்கிடமாகவே ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். கவுண்டர், தன் மணவாழ்க்கைக்கு அப்பாற்பட்டு பேச்சியிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பது போல ஒரு தோற்றம் இருந்தாலும், அது வெறும் உடற்பசியைத் தீர்த்துக்கொள்ளும் உறவாகவே இருக்கிறது.  மேலும், அவர் அவளுடைய நிலங்களையெல்லாம் தானே ஏதோ ஒரு விலை போட்டுக்கொடுத்து தன் பெயரில் மாற்றிக்கொள்வதன் வழியாக பேச்சியை மறைமுகமாக ஏமாற்றுகிறார். பேச்சிக்கோ, தனக்கு கவுண்டரின் உறவு அந்தக் கிராமத்தில் தனித்து வாழ்வதால் நேரும் தொல்லைகள் நேராமல் இருப்பதற்கான ஒரு போக்கிடம். அவ்வளவுதான். பெண்ணின் பாதுகாப்பு தேடும் இந்த நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆணின் மனநிலையை, இந்த உறவு கூர்மையாக வெளிப்படுத்துகிறது. நகரத்தைவிட்டு கிராமத்துக்கு வந்திருக்கும் சுகவனம் அவ்வப்போது தன் உடற்பசியை ஆற்றிக்கொள்ளும் ஒரு வழியாக மட்டுமே பேச்சியின் அன்பைப் பயன்படுத்திக்கொள்கிறான். அந்த அபலைக்கு உண்மையான அன்பு இத்தனை இடர்ப்பாடுகளுக்குப் பிறகே பீர்முகம்மதுவிடமிருந்து கிடைக்கிறது.

1976இலேயே விட்டல்ராவ் பேச்சி பாத்திரத்தை தன் உறவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் சுயமாக யோசித்து முடிவெடுப்பவளாகப்  படைத்திருப்பது ஆச்சரியமான விஷயம். அவளும் சுகவனமும் சேர்ந்திருந்ததை, கவுண்டரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டியே, சுப்புரு அவளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான்.  ஆனால் பேச்சியோ “போ. யாருகிட்ட வேணா சொல்லிக்கோ. உன்னோட வரமாட்டேன்” என்று சொல்லும் இடம் அபாரம்.  பிங்க் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது. பெண் என்பவள் தன் விருப்பத்துக்கு ஒரு ஆணுடனான உறவுக்கு உடன்படவோ மறுக்கவோ உரிமையுள்ளவள் என்பதைச் சொல்லும் திரைப்படம் அது. இந்தக் கருத்தை விட்டல்ராவ் 1976இல் தன் நாவலில் பதிவிட்டிருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.

“அம்மண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்பதுபோன்ற நிலை சுகவனத்துக்கு. தொடக்கத்தில் சிறந்த ஆசிரியனாக இருக்க வேண்டும், கிராமத்துப் பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும் என்ற துடிப்போடு டேனிஷ்பேட்டை கிராமத்துக்கு வரும் சுகவனம் இந்தச் சமூகச் சீர்கேட்டில் நிலவும் சுழலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தானும் அகப்பட்டுக்கொள்கிறான். கிடைத்த வேலையை விட்டுவிடக் கூடாது என நினைக்கும் அவனுக்கு வேறு என்ன போக்கிடம்? மதிய உணவுத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை சரியாகப் பயன்படுத்த நினைக்கும் அவனுடைய மனம், அப்படிப் பயன்படுத்தாமல், அந்தப் பணத்தை பங்கு போட்டுக்கொள்வதில் தவறேதுமில்லை என நினைக்கும் அளவுக்கு மாற்றமடைந்துவிடுகிறது. பள்ளியில் ஒழுங்காக பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தவன் ப்ரைவேட் டியூஷனில் வரும் வருமானத்திற்காக ஆசைப்படுகிறான். தனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையை விட முடியாத அவன் வேறு என்ன செய்ய முடியும்? இந்த அமைப்பின் சீர்கேட்டுக்குள் சிக்கிக்கொள்வதைத் தவிர அவனுக்கென வேறு என்ன போக்கிடம் உள்ளது? அவன் தன் வாழ்க்கைப்போக்கையே மாற்றிக்கொள்கிறான்.

நேர்மை, நியாயம், தர்மம், உண்மை என வாழ நினைப்பவர்களை இந்தச் சமுதாயச் சீர்கேடுகள் நிறைந்த இந்த அமைப்பு அமைதியாக வாழ விடுவதில்லை. வேறு என்னதான் போக்கிடம் என்று அவர்களும் இந்தச் சீர்கெட்ட அமைப்புக்குள்ளேயே வந்துவிடுகிறார்கள்.

விவசாயம், கிராமம் என்று தங்கள் உயிரையே வைத்திருக்கும் மக்களுக்கு இதுபோன்ற தொழிற்சாலைகள் வந்து, வேலை வாய்ப்புகளைக் கொடுத்து நிலங்களைப் பிடுங்கினால், அவர்களுக்கு வேறு எதுதான் போக்கிடம்? தன் நிலத்துக்கு தானே முதலாளியாக இருந்தவன் கூட கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியாக மாறுவதைத் தவிர அவனுக்கு வேறு என்னதான் போக்கிடம்?

பாவண்ணன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல ஆட்டின் கால்களில் ஒட்டியிருக்கும் தாரை பீர்முகம்மது அகற்றும் காட்சியும் தீப்பெட்டியில் அடைத்துவைக்கப்பட்ட வண்டு பறந்துபோகும் காட்சியும் நாவலில் மிகவும் ரசிக்கத்தக்கவையாக உள்ளன.

சேலத்து வட்டாரமொழியில் இந்த நாவலை விட்டல்ராவ் அழகாக படைத்துள்ளார். மேலே சொன்ன அத்தனை கேள்விகளையும், நாவலை வாசிக்கும் வாசகர்களின் மனத்தில் தோன்றவைக்கும் விட்டல்ராவ், கதையை அப்படியே சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறார். அவராக தத்துவங்கள், கேள்விகள் என எந்தத் தலையீட்டையும் செய்யவில்லை. நாவல் தெளிவாக நீரோட்டமாக ஒரே வாசிப்பில் படித்து முடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பின்னிணைப்பாக விட்டல்ராவின் நேர்காணலை (பாவண்ணனால் எடுக்கப்பட்டது) இணைத்திருப்பது மிகச்சிறப்பாக உள்ளது. இன்று விட்டல்ராவ் எழுபது வயதைக் கடந்தவர்.  பாவண்ணனுக்கு விளக்கு விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். எப்போதும் திருத்தமான உடையணிந்து, நிழற்படக்கருவியோடு சுறுசுறுப்பாக இங்குமங்கும் இயங்கியபடியே இருந்தார். அனைவரோடும் கலகலப்பாக பேசினார். போக்கிடம் நாவலை அவர் 1976இல் எழுதியிருக்கிறார் என்றாலும் அவரைப்போலவே நாவலும் புதுப்பொலிவோடு இக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. மறுபதிப்பாக, இந்த நாவலை வெளியிட்டுள்ள சிறுவாணி வாசகர் மையத்தார் பாராட்டுக்குரியவர்கள்.


நன்றி;புக்டே இணையதளம்

எஸ்.ஜெயஸ்ரீ Jayashri Raghuram 

 https://bookday.in/vittalraos-pokkidam-novel-book-review-by-jayashri-raghuraman/

-----------------------------------------------------------------------------------------------------------------

போக்கிடம்

- விட்டல்ராவ்


சிறுவாணி வாசகர் மையம்,

கோவை.

மூன்றாம் பதிப்பு: ஆகஸ்ட் 2021

விலை:ரூ.180/-

தொடர்புக்கு: 9940985920

~~~~

எழுத்தாளர் விட்டல்ராவ் கடந்த 55 வருடங்களாக இலக்கியத்தில் செயல்பட்டு வருபவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரைகள் என பல படைப்புகளை அளித்துள்ளார். ஓவியக்கலையில் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். இவரின் வண்ணமுகங்கள், போக்கிடம், நதிமூலம், நிலநடுக்கோடு நாவல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை. ஓவியக்கலை பற்றிய இவரது நூலும், வாழ்விலே சில உன்னதங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பும், தமிழகக் கோட்டைகள் என்ற இவரின் ஆவணப் படைப்பும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. BSNL துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.

சேலம் அருகே சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய பழைய டேனிஷ்பேட்டையில் வாழும் மக்களின் இடப்பெயர்வையே  'போக்கிடம்' என்ற உணர்வுப்பூர்வமான நாவலாக எழுத்தாளர் விட்டல்ராவ் படைத்துள்ளார். நாவல் வெளிவந்து 45 வருடங்கள் ஆனாலும் இன்னுமே இந்நாவல் தன்னை வாசிக்கும் புது வாசகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது இந்நூலின் மகத்துவம்.

இரும்பு தயாரிப்புக்குத்  தேவையான மாக்னஸைட் தாது ஏராளமாக கிடைக்கும் டேனிஷ்பேட்டையிலிருந்து அரசாங்கத்தால் வெளியேற்றப்படும் ஊர் மக்கள் தங்களுக்கான போக்கிடத்தை அமைத்துக்கொள்வதே நாவலின் பேசுபொருள்.

பஞ்சாயத்து போர்டு தலைவர் மாரிமுத்து கவுண்டர், அவர் மனைவி ஆராயி, தம்பி சின்னகாளி, ஊரில் மாரிமுத்து கவுண்டரை எதிர்க்கும் ஒரே நபரான சுப்புரு, கணவனை இழந்து பாதுகாப்புக்காக கவுண்டருடன் உறவை பேனும் பேச்சி, அவள் மகன் பையப்பன், ஊருக்கு புதிதாக வாத்தியார் வேலைக்கு வரும் சுகவனம், கிராம சேவக் பொன்னுசாமி, ரோட்ரோலர் டிரைவர் பீர்முகம்மது .... என நாவலில் ரத்தமும் சதையுமான  ஏராளமான கதாபாத்திரங்கள் உணர்வுப்பூர்வமாக வளைய வருகின்றார்கள்.

பள்ளிக்கூடம் ஆங்காங்கே சிதிலமாக இருப்பது, நிறைய மாணவர்கள் பள்ளிக்கு வராமல் தங்கள் நிலத்து வேலைக்கு சென்றுவிடுவது, ஆசிரியர் பாடம் நடத்தும் பாங்கை ரசிக்க ஊர் மக்கள் ஜன்னல் வழியே வகுப்பை எட்டிப் பார்ப்பது என எழுபதுகளில் கிராமங்களில் இருந்த தொடக்கப்பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் ஆசிரியருக்கு ஏற்படும் அனுபவங்களை சுகவனம் கதாபாத்திரத்தின் வழியாக  துல்லியமாக காட்டுகிறார் எழுத்தாளர். தபால் அலுவலகம் இல்லாத ஊரில் மக்களின் தேவைக்கென்றே அதிக விலையில் தபால் கார்டுகளை, இன்லேண்ட் கடிதங்களை  வாங்கி விற்கும் ராஜமாணிக்கத்தின் கடைதான் அந்த ஊரின் All under one roof சூப்பர் மார்க்கெட்.

கோலி,பம்பரம், கிட்டிப்புள், பனங்காய் வண்டி விளையாட்டு என ஒரு அசல் கிராமத்து சிறார்கள் விளையாடும் விளையாட்டு நிகழ்வுகளை நாவலில் ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருப்பது யதார்த்தமாக உள்ளது. மனைவி இருந்தாலும் ஊர் தலைவர் என்ற கெத்தால் பேச்சியிடம் உறவை வைத்துக் கொண்டிருக்கும் மாரிமுத்து கவுண்டர் அதிகாரவர்கத்தின் உதாரணங்களில் ஒன்று. விதவையான பேச்சி பாதுகாப்புக்காக மாரிமுத்து கவுண்டரிடமும், ஆசைக்காக சுகவனத்திடமும், மிரட்டலுக்கு அடிபணிந்து  சுப்புருவிடமும், புதுவாழ்க்கைக்காக பீர்முகம்மதுவிடமும் உடல் சார்ந்த உறவை வைத்துக்கொள்வது  அவள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை. அவரவர் தேவைகளுக்காக அவரவர்களை பயன்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவுதான்.

நாவலினூடே கிராமத்து மக்கள் துலுக்க சாமந்தி பறிக்க போவது, நிலங்களில் சோளக்கதிர் அறுப்பது, கரும்பு வெட்டுவது, கரும்பாலையில் வேலை செய்வது போன்ற காட்சிகள் வருவது  அவர்களின் வாழ்வாதாரத்தையும் கிராமப் பொருளாதார அம்சங்களையும் படம்பிடித்து காட்டுகிறது. மதிய உணவை மாணவர்களுக்கு வழங்காமல் வழங்கியதாக கணக்கு காட்டி அதற்கான பணத்தை பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் கையாடுவது, மாணவர்களுக்கான பால்பவுடரை வெளிமார்க்கெட்டில் விற்பது என அக்காலத்திய கல்வித்துறை சார்ந்த ஊழல்களையும் நாவல் தொட்டுச் செல்கிறது. இவ்விஷயங்களில் நேர்மையாக இருக்க முயன்றாலும் மற்றவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் வழிக்கே சென்று விடும் ஆசிரியர் சுகவனம் போன்றவர்கள் ஒரு சராசரி அரசு ஊழியருக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.

அரசாங்கம் மாக்னஸைட் சுரங்க வேலைக்காக  மக்களை ஊரை விட்டு காலி செய்ய நோட்டீஸ் அளித்தபிறகு அதற்கான லாப-நஷ்ட கணக்குகளை ஊரார் பேசுவதும் அவர்கள் அதில் ஒருவருக்கொருவர் முரண்படுவதும் இயல்பான உரையாடல்கள் வழியே நாவலில் சொல்லப்படுவது நாவலின் சுவாரஸ்யமான வாசிப்புக்கு வழிகோலுகிறது. அரசு எனும் ராட்சச இயந்திரத்தின் முன்னால் ஒன்றும் செய்ய இயலாமல் மக்கள் ஊரை கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்வது பரிதாபமானது. ஆனால் புது இடத்தில் கிடைக்கும் சுரங்க வேலைகளும் அது சார்ந்த வருமானங்களும் மக்களின் போக்கிடத்திற்கான காரணத்தை நியாயப்படுத்துவதாக இடம்பெயர்ந்த மக்களே சமாதானம் அடைவது அதிகாரவர்கத்தின் வெற்றி. அவ்வளவு பெரிய இடப்பெயர்வுக்காக ஊரில் சிலர்கூட அரசுக்கு எந்தவித எதிர்ப்பையும்  தெரிவிக்காமல் போவது தர்க்க ரீதியான கேள்விகளை எழுப்புவிக்கிறது. சில எதிர்ப்பு சம்பவங்களையாவது நாவலில் எழுத்தாளர் சேர்த்திருக்கலாம்.

சுரங்க வேலைக்காக பெரிய இயந்திரங்கள் கிராமத்திற்கு கு வருவதும் அவற்றுக்காக புதிய தார் சாலை அமைப்பதும் சாலைக்காக வேண்டி கிராமத்தாரின் குலதெய்வமான முனியப்பன் குடி கொண்டிருப்பதாக நம்பப்படும் அரச மரமும் மக்களின் பயன்பாட்டுக்காக இருக்கும் புங்கை மரமும் வெட்டப்படுவதும் ஊர் ஒட்டியுள்ள காடு இயந்திரங்களால் வெட்டி அழிக்கப்படுவதும் சூழலியல் சீர்கேடுகளாக காட்டப்படுகின்றன.

நாவலை முழுவதும் ஆழ்ந்து வாசித்து முடிக்கும்போது ஊர் மக்கள் காலி செய்து விட்டுப்போன டேனிஷ்பேட்டை தெருவில் நான் மட்டும் கண்கலங்கியபடி அநாதையாக நின்றிருப்பதுபோல உணர்ந்தேன். இறுதியில் ஊர் மக்கள் அவரவர்களுக்கான போக்கிடத்தை கண்டடைந்ததைப் போல நாவலை வாசித்து அதன் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து அவர்களுடன்  பயணித்த வாசகனான எனக்கு   நாவலின் நினைவுகள்தான்  எனக்கான போக்கிடம்.

Suresh subramani

வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்

-------------------------------------------------------------------------------------------------------------------

இன்றுதான் வாசித்து முடித்தேன். வாசிக்கும்போது ஒரு விறுவிறுப்பான நாவல் தரும் உணர்வையே தந்த இந்நூல் வாசித்து முடித்ததும் ன் மனதிலிருந்த எண்ணங்களெல்லாம் துடைத்தெறியப்பட்டு ஏதோ ஒரு வெறுமை, விட்டேத்தியான சூழல் உணர்வை தந்துவிட்டது. ஊரார் காலி செய்துவிட்டு போன பழைய டேனிஷ்பேட்டையில் யாருமற்ற அநாதையாக நான் நிற்பதுபோல உணர்ந்தேன். ஒரு நாவல் வெளிவந்து 45 வருடங்கள் கழிந்தும் இன்னும் புதிய வாசகர்களை அது உணர்வு ரீதியாக  ஆட்கொள்கிறது என்றால் அதன் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?...கிரேட்.

எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏.

Suresh subramani
--------------------------------------------------------------------------------------------------------------------

நான் படித்த புத்தகம்

போக்கிடம் – நாவல்

ஆசிரியர் திரு விட்டல் ராவ்

வெளியீடு: 

சிறுவாணி வாசகர் மையத்திற்காக, 
பவித்ரா பதிப்பகம், 24-5, சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் அஞ்சல் நிலையம்,

கோயம்புத்தூர் – 641 038.
siruvanivasagar@gmail.com

போன்: திரு GR Prakash – 94881 85920  //  99409 85920

பக்கங்கள் 192  //  விலை ரூ.180




முதலில் புத்தக வெளியீடு பற்றி:

கோயம்புத்தூர் சிறுவாணி வாசகர் மையம் நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து புத்தக ஆசிரியரின் அனுமதி பெற்று, அவர்களுக்கு ராயல்டி கொடுத்து, குழு உறுப்பினர்களுக்கு மாதம் ஒரு புத்தகம் வெளியிடுகிறார்கள்.  இந்த குழுவில் சேர்வதற்கு மேலே முகவரி இருக்கிறது. 

இந்த வருட கட்டணம் வருட்த்துக்கு ரூ.1600.00 – உங்களுக்கு ஒரு வருடத்தில் கிடைக்கும் புத்தக மதிப்பு ரூ.2000 க்கு மேல் வரும்.  சிறந்த புத்தகம், எழுத்தாளரை உற்சாகப்படுத்தும் செயல், எனவே நண்பர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து சிறந்த புத்தக வெளியீட்டை ஊக்குவிக்க வேண்டுகிறேன்.    உங்களுக்கும் படிப்படியாக நல்ல புத்தகங்கள் சேரும்.  இவர்கள் வெளியீட்டில் இது வரை வெளியான புத்தகங்கள் பட்டியல் இருக்கும், அதில் நீங்கள் தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தால் புத்தகங்கள் அனுப்புவார்கள். 

புத்தகத்தைப் பற்றி:
இந்தப் புத்தகம்  1976 ஆம் ஆண்டு இலக்கியச்சிந்தனை அமைப்பின் விருதுக்குரிய முதல் நாவலாகத் தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்டிருக்கிறது.  எழுதி 45 வருடங்கள் கழித்தும் இந்த நாவல் மிகவும் அற்புதமாக இருக்கிறது.

சேலம் அருகில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதை.  கிராமம் கிராமமாக இருக்கிறது, 
மாங்கனீஸ் என்ற தாதுப்பொருள் கண்டு பிடிக்கப்படும் வரை.  அதன் பின் ஏற்படும் தலைகீழ் மாற்றங்களை ஆச்சரியமாக இருக்கின்றன.  அந்த கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக வெளியே நகற்றப்படுகிறார்கள்.  அவர்கள் விவசாயம் முற்றிலுமாக போய் விடுகிறது.  சுரங்க வேலைக்குச் செல்கிறார்கள்.  வாழ்க்கை முறையே மாறி விடுகிறது.  

இந்த நாவலில் பாத்திரப்படைப்புகள் அத்தனையும் அற்புதம்.  புதிதாக வரும் ஆசிரியர் சுகவனம் ரயிலில் இறங்கி பையப்பன் என்ற சிறுவனுடன் ஊருக்குள் நுழைகிறார், நாமும்.  அந்த கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு தலைவர் மாரிமுத்து கவுண்டர், பேச்சி, சின்னக்காளி, பீர் முகம்மது, இன்னும் சிலர்.  பேச்சி என்ற இளம் விதவைப்பெண்ணின் வாழ்க்கை, அதில் மற்றவர்கள் எப்படி நுழைகிறார்கள், நாவலில் எந்த இடத்திலும் விரசம் இல்லை, நாமும் நம் ஊரிலும் இப்படிக் கேள்விப்பட்டிருக்கிறோமே என நினைப்போம்.  எடுத்த புத்தகத்தை கீழே வைக்க மனசில்லை.  2 நாட்களில் படித்து முடித்து விட்டேன்.

ஆரம்ப காலத்தில் கிராமங்களில் கல்வி வளர்க்க என்ன பாடுபட்டிருக்கிறார்கள் என தெரிய முடிகிறது.  அன்று போட்ட விதை இன்று கல்வி எல்லா அளவிலும் பரவியிருக்கிறது.  மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் ஊர் டாக்டர் Rameswaran அவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கும்.  அடுத்து எங்கள் அருமை மகள் புதுக்கோட்டை Devatha Tamil Geetha அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.  இந்தப் புத்தகம் பற்றி அருமையாக எழுதி பரிசு வாங்கி விடுவார்.

இந்தப் புத்தகம் படிக்க ஆரம்பித்த உடன் இந்த புத்தக ஆசிரியர் திரு விட்டல் ராவ் அவர்களுக்கு போன் செய்தேன்.  அவர் 1942இல் பிறந்தவர்.  அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள், பாராட்டுகள் சார் திரு விட்டல் ராவ்.  உங்கள் மற்ற புத்தகங்களையும் தேடிப்படிக்கிறேன்.  நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் சார்.

நன்றி நண்பர்களே.
Rathnavel srivillipudur fb

--------------------------------------------------------------------------------------------------------------

விட்டல் ராவ் அவர்களின் 'போக்கிடம்' வாசித்தேன். ஒரு புத்தகத்தை முழுசும் வாசித்த பிறகே அதன் முன்னுரை, முக வுரை, அணிந்துரை முதலானவற்றைப் படிக்க வேண்டும் என்று கி.ரா.அவர்கள் கூறியுள்ளதைப் பின்பற்றுபவன் நான்.

 'போக்கிடம்' கதை இன்றைக்கு நடப்பது போல அமைந்துள்ளது. முன்னுரையை வாசித்து, அது 45 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்பதை அறிந்து வியப் படைந்தேன். காலத்தை வென்ற எழுத்து என்பது இதுதான். 

கதா பாத்திரங்களுக்குப் 'போக்கிடம்' எப்படிப் பொருந்து கிறது என்று பாவண்ணன் அவர்கள் அழகாக விளக்கியிருக்கிறார்.

 அருமையான நாவல். வாசிக்கத் தந்த சிறுவாணிக்கு நன்றி !

நன்றி.திருமலையப்பன் அவர்கள்
-------------------------------------------------------------------------------------------------------------------
 ஓவியர் ஜீவா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையத்தின் அடுத்தடுத்த மாதங்களின் புத்தகங்களை அளித்தபோது.....


-------------------------------------------------------------------------------------------------------------------


Saturday, July 3, 2021

சில நெடுங்கதைகள்- -யுவன் சந்திரசேகர்-ஜூலை 2021

 



சில நெடுங்கதைகள்

                                                             யுவன் சந்திரசேகர்

Isbn-978-81-952661-6-6

pages 268          price 260

-----------------------------------------------------------------------------------

வெவ்வேறு களங்களில், வெவ்வேறு தளங்களில், சில ஆண்டு இடைவெளியில் எழுதப்பட்டவை என்றாலும், இவை அனைத்திலுமே 'கதை பற்றிய கதை’ என்ற அம்சம் பொதுத்தன்மையாக நிலவுவது இந்தத் தொகுப்புக்கான நியாயம் என்று பட்டது - ஓரிரு கதைகள் விதிவிலக்கு என்றபோதிலும்.


யுவன் சந்திரசேகர்

------------------------------------------------------------------------------------------------------------------

இது புதுசு :

இந்த ஆண்டு (2021) யுவனின்  சில கதைகளை  “சில நெடுங்கதைகள்” என்ற தலைப்பில் தனது சிறுவாணி வாசகர் மையம் மூலம் பதிப்பித்துள்ளார் அருமை நண்பர்  ஜீ.ஆர். பிரகாஷ். G R Prakash Iyer

நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘யுவனுக்குள்’ தொலைந்து போகிறேன்.

எவ்வளவு விதம் விதமான சிறுகதைகள், பாத்திரங்கள்... சொல் வழக்குகள்... 

நனறி யுவன் & பிரகாஷ்

------------------------

வெகுநாளைக்குப் பிறகு வாசித்த, நினைவுகளை எங்கெங்கோ கடத்தி என்னை அலைக்கழித்த நல்லதொரு சிறுகதை. 

“மாயக்கண்ணாடி” - யுவன் சந்திரசேகர்  (சொல்வனம்.காம் (solvanam dot com))

கதையில் எனக்குப் பிடித்த, சிந்திக்க வைத்துச் சிறகுகளை விரிக்க வைத்த சில வரிகள்...

“கனவிலிருந்து நனவுக்கும் நனவிலருந்து கனவுக்கும் ஓயாமெ ஆடுற ஊசல்தானப்பா மனுச மனசு. இந்த அல்லாட்டம் நிக்கிறதெத்தான், உசுரு போயிருச்சுன்னு மனுசக் கூட்டம் அர்த்தம் செஞ்சுக்குது. வாஸ்தவத்துலெ, டக்குனு ஒரு ஆளெப் பிடிச்சு, “அட, எங்கப்பா இருக்கெ நீயி, கனவுலயா நெசத்துலயா”ன்னு கேட்டம்னா, தெகச்சுப் போவான். ஆமா, இங்குட்டு ஒரு காலு, அங்குட்டு ஒரு காலுன்னு ஊனித்தானே மனுசகொலம் நிக்கிது…!”


“வாயு வேகம் மனோ வேகம்ன்னு சொல்லுவாங்களே, அது இதுதான். இருந்துக்கிட்டே இருப்போம், டக்குன்னு இல்லாமெப் போயிருவோம். பாத்தா, வேற எடத்துலெ இருப்போம்.”

”செத்துப் போறதுன்னா என்ன பாட்டி?” என்ற என் சிறுவயதுக் கேள்விக்கு, பாட்டி சொல்வாள் : “ஊருக்குப் போனவா சேதி யாருக்குத் தெரியுங்கற மாதிரி, அதெல்லாம் யாருக்குத் தெரியும்? இங்கேர்ந்து அங்க தள்றதும், அங்கேர்ந்து இங்க தள்றதும் தான் பிறப்பும் இறப்புமோ என்னவோ?”

மாயக்கண்ணாடியை மட்டுமல்ல; வாசிப்பில் மூழ்கித் தன்னைத் தொலைக்க விரும்புபவர்களுக்கு Yuvan Chandrasekar யுவன் சந்திரசேகரின் “வேதாளம் சொன்ன கதை” யையும் பரிந்துரை செய்கிறேன். (காலச்சுவடு வெளியீடு).

யுவனின், இந்த ஆண்டிற்கான புதிய படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

Aravind swaminathan

--------------------------------------------------------------------------------------------------------------




அச்சமேன் மானுடவா ? -நாஞ்சில் நாடன்






யாமார்க்கும் குடியல்லோம் ! என்றார் திருவாமூர் வேளாளர் மருள்நீக்கியார் .
நான் !
இந்த மண்ணின் குடிமகன் தான் ! 
ஆனால்,,
இந்த மண் சரியாக இல்லையே ?
இந்த மண்ணை, இந்த நாட்டினை சரி செய்ய,,,
பாறக்கோலும், மம்பட்டியோடயா ? வந்து சரி செய்யணும்,,,?
இல்லை,,
இந்த வயசுக்கு,,,
என் எழுத்துக்களால் சரி செய்யப் பார்க்கிறேன் ! என,,, ஆதங்கத்தோடு மட்டுமல்ல,,,,
அங்கதத்தோடும்,,,, வந்து சொல் வீசுகிறார் ! நாஞ்சில் நாடன். அவர்கள்.

நாஞ்சில் என்றால் கலப்பை என்றொரு பொருளுண்டு !
வேளாண் மக்கள் பயன் படுத்துகிற அந்த கலப்பையானது, மண்ணைக் கிளறும்,,,
மண்னைப் புரட்டிப் போடும்,,,
இதோ,,,! நாஞ்சிலும், மனசைக் கிளறுகிறார் !
மனவெளியில்,,,நாம் சகித்துக் கொண்டே கடக்கிற நிகழ்வுகளை, மாற்றி விடத்துடிக்கிற வேளாண்மைக்காரராக,,,, அச்சமேன் மானுடவா ? என்றபடி புரட்டிப் போடுகிறார்,,,!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச்செல்வங்கள் ,
யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர் ! என்றான் மகாகவி பாரதி !

எட்டுத்திக்கு,,,எல்லாம்,,செல்ல வேண்டாம்,,,!
இங்கே,,இந்த மண்ணில்,,,
நம் தமிழ் இலக்கியங்களில்,,இருக்கிற சொற்களைப் பேசுங்கள் ! அறிந்து கொள்ளுங்கள் , அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றபடி,,பல,,,
நல்ல தமிழ்ச் சொற்களை,,,,,
நல்ல தமிழ் இலக்கிய வார்த்தைகளுடன் ஊடாடியபடியே,,,,
தண் தமிழில் 163 கவிதைகளை எழுதி விட்டேன்,,, என்று, இடையே ஒரு அங்கதமாடி, அந்த ஒளவைக்கிழவியையும், வம்பிற்கிழுத்து விட்டு,,,,,

தமிழ் வளர்க்கிறேன் என்று சொல்பவர்களும், 
தமிழ் வாழ்க என்று சொல்பவர்களும்,
பல்கலைகழகங்களும்,
தமிழ்த்துறைத் தலைவர்களும், செய்ய வேண்டிய பணியினை
வள்ளுவனிலே இருந்து,,, சமகால எழுத்தாளர்களை வரைப் படித்த ஒரு தமிழ் எழுத்தாளன் செய்கிறார்,,எனும்,,போது,,,,
அந்த தமிழ் நாற்றத்தை நுகர நமக்குச் செவி இருக்கிறதா ?
நுகர்வதற்கு செவியா ? நாசி அல்லவா ?
நாம் தான்,,, தற்போது,,நாசியை தீத்தொற்றுக் கிருமிக்காய் காப்பு செய்து மூடி அல்லவா ? வைத்துக் கொண்டிருக்கிறோம்,,,!
திறந்திருப்பது செவிதானே ?
அதன் வழியாகவாவது,,, நாஞ்சிலின் தமிழ்,,உங்கள் நெஞ்சத்தைத் தொடட்டுமே,,,,
நாற்றமா ? மணம் அல்லவா ? என்று சொல்லத் தோன்றுகிறதா ?
நாற்றத் துழாய்,,ஆண்டாள் மணமுள்ள துளசியெனச் சொல்லிய தமிழ் ஐயா !


ஒரு முப்பத்தெட்டுக் கவிதைகள்  நாற்பத்தியாறு  பக்கங்களில் விதைத்திருக்கிறார்,,,
முதல் விதை,,,!
ஆம் முதல் கவிதை முள் மரம் என்கிறது !
வள்ளுவன் சொன்ன இளையதாக முள்மரம் கொல்,,என்ற சொல்லோடு ஆரம்பித்து,,,
இப்போது முள் மரம் முறிக்க,,முடியுமா ?
முடியுமெனச் சொன்னால்,,,,,?
அழுகிய முட்டை குஞ்சு பொரித்தால்,,,?
வாக்குச் சீட்டால் முள்மரம் வெட்டலாம்,,,

தமக்கான பகையினை வேரறுக்க,,,
நிகும்பலை யாகம்,,,செய்ய புகுகிறார் ராவணன் மகன் இந்திரஜித் ! அந்த நிகும்பலை யாகம்,,,முழுதாக முடியுமுன்னே,,,, வீபிஷனன் உஇதவியால், இலக்குவனால்,,நிகும்பலை யாகம்,குலைக்கப்பட்டது,,,!
அரக்கன் நம்மை
வருந்திட மாயஞ்செய்து நிகும்பலை மருங்கு புக்கான்
முருங்கழல் வேள்வி முற்றி முதலற முடிக்க மூண்டான்’’
இது கம்பராமாயணம் !
நாம்,,, நல்லது செய்ய வேண்டுமென நினைத்துச் செய்கிற நிகும்பலை யாகங்களும்,,,இப்படித்தான்,,முடிகிறதெனச் சொல்கிறார்,,நாஞ்சில் நாடன்.

இனி என் செய்ய ? எனும் கேள்வி வரும் பொழுது,,, ?
நம் கைகளால்,,,பேன் வேண்டுமானால் பார்க்கலாம்,,,, என்கிற அங்கதம்,,, இடிக்கிறது,,,நம் நெஞ்சை,,
இதில் களைகள் இருக்குமோ ?
இல்லை,,,
முப்பத்தியெட்டு கவிதைத் தலைப்புகளுமே,,,, ! கலைகள் தான்,,
களைகள் அல்ல,,,

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே,,
என்றொரு விதை,,,,
இன்றைய நாட்டு நடப்பு,,, !
2016 ல் உயிர் எழுத்து இதழில் எழுதிய கவிதை,,,,
அன்றும், அது தான் நடப்பு,, !
‘’ அரசு மருந்தகமா ?
ஏழையான் நோய்க்கு மாத்திரை இராது !
சோதனைக் கருவி பழுதாய்க் கிடக்கும் !
சமோசா பேடா வாங்கிய வகையில் ,
அமைச்சரவைக்கு அறுபது கோடி !
நகைக்கடை துணிக்கடை கதவு திறக்க
கவர்னர் என்றொரு பதவி உண்டிங்கே !
குத்து விளக்கைக் குனிந்து ஏற்ற
குலுங்கும் கவர்ச்சி நடிகை வருவாள்  !


வாளோர் ஆடும் அமலை,,, !
இல்லையில்லை,,,
சாட்டையோடு,,ஆராசனை ஆடுகிரார் !,நாஞ்சில்,,,
பின்னும்,,
பின்னரும்,,,,
புலம்பி என்னாம் ? பொருமி என்னாம்
புகைச்சல் இருமல் பூமியைக் குலுக்குமோ ?
ஆதலினால் அறிக நீ ஒன்று !
உலகம் என்பது உயர்ந்தார் மாட்டே,, என்றபடி

எல்லோருக்கும்,,,கொடை கொடுக்கிறார்,,,
நின்று  களமாடுகிறார் !

எழுத்துலகம், முதல் அரசியல் களம் வரை,,, காணும், இடமெல்லாம்,,நீக்கமற நிறைந்திருக்கும்,,,அவலங்களையெல்லாம்,,
நின்று கிடக்கும் இலவச வரிசையில்
நாற்சந்தியை நடந்து கடக்கும்
நாதியொன்று இன்மையால்,,,,,

என்று உயிர் எழுத்தில் எழுதி விட்டு,,அமைதியாகச் சிரிக்கிறார்,,,நமக்குத்தான் பற்றிக் கொண்டு வர வேண்டும்,,,,,?
அதெப்படி,,நமக்கு,,வரும்,,,
நாம் தான்,,,
மிக்ஸி கிரைண்டர் கூட வாங்க வக்கற்று,,இலவச வரிசையில் காத்து நின்று வாங்கியவர்களாயிற்றே,,,,?

வாசிப்பு உயர்வானது தான் !
ஆனால்,,,
வாசகன் ! உயர்வானவன் தானா ?
வாசகனுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா ?
நூல் வெளியீடு என்றால் நடக்கிற கூத்தினையும்,,,பிட்டு வைக்கத் தவறவில்லை,,,, !

இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர்
புரட்சி, இமையம், சிகரம், மேடையில்
வலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார்

எத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ ?
இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள்
சிறுகடன் பெற்ற சிரு தொழிலதிபர்
அரும் பிறப்பெடுத்த ஆறு பேருக்கு
அன்பளிப்புப் படிகள்,,,,,,

வாசிக்க வேண்டும் அதற்கு வாங்கவும் வேண்டும்
சலுகை விலையே ஒன்பானாயிரம்
காசுப்பையில் கனமே இல்லை
செல்லாத்தாளும் இல்லை என்றிருந்தவன்
செல்லும் தாளும் சென்றவிடம் அறியான் !
அவன் எட்டாம் வரிசையின் மூத்த வாசகன் .

என்கிற கவிதையினைப் படிக்கிர போது,,,
தன் அணி வலைக்குள்ளேயே பந்து தள்ளுகிற நிலைதான் ! ? என்றாலும்,,
உண்மையினை இப்படி உரைக்கவும்,,
ஒரு எழுத்தாளன் வேண்டித்தான் இருக்கிறது ! 

கற்கை நன்றே கற்கை நன்றே,,, எனும் கவிதை அறச் சீற்றம் !

சாவகம், புட்பகம், இமய வரம்பு
எல்லாம் கடந்த எம்
தாதையர் முது சொம்

அசரிரீ போல அகல ஒலித்தன
தாதையர் குரல்கள் !
மலங்கள் என்னடா மயிராண்டி ?
பீ எனச் சொல்லேன் பேதீல போவான் !


என்ற வரிகளைப் படித்ததும்ம்,,,, சிரிப்பாணி,,,,வந்தது,,,சிரித்துச் சிரித்து,,புரையேறிற்று

நெருநல் உளன் இன்றில்லை,,, எனும்,,கவிதையிலும்,,,

மந்திணி நாலத்து மக்கள் யாவர்க்கும்
ஒரு துகள் உறுதி 
ஆதார் அட்டை இருந்தாலும்
இல்லாமற் போனாலும்,,

என்று சொல்லி,,,சுடுகிறார்,,,,

நாள் என்  செயும் ?
கோள் தான் என் செயும் ? எனும் கவிதையில்,,,,
தமிழ் மாதங்களின் , விசேசங்களை,பெளர்ணமிகளை வரிசைப்படுத்தி விட்டு,,,,, ஜகத்குருவினையும், வம்பிற்கு இழுத்து விட்டு,,,
எமக்கென்ன ?
வரவா செலவா ?
வாய்க்கரிசி நெல்லா ?

மழை பெய்யணும்
அதற்கென்ன செய்யணும்,,,?

என்று கேள்வி எழுப்புகிறார்,,,

பேய் அண்டாப் பிறவி கேட்கிறார்,,,
மதங்களைப் பட்டியலிடுகிறார்,,,


எதிர்வந்து அமர்ந்ததோர் வன்முகம்
அதிகாரம் வீங்கிப் புழுத்து வடிந்தது 
உடலெங்கும் ஊர்ந்தன ஊழல் புழுக்கள்,,
என மதிய வேளை ரயில் வண்டியில் வந்தமர்ந்த அரசு அலுவலரை அடையாளம் காட்டுகிறார்,,,!

அது ?
யாராக இருக்கலாம் ?
நானாக, நீங்களாகக் கூட இருக்கலாம்,,,

எப்படி அறிவாய் ? எப்படியோ தெரியும்,,!
ஆனால், ஒன்று தெரியாது

இவரெல்லாம் வாழும் நாட்டில் 
மழை பொழியுமா ?

என அறம் பாடுகிறார் !,,,
கவிதை வரிகள் தான்,,அறச்சீற்றம்,,கொள்கிறதெனப் பார்த்தால்,,,?

இக்கவிதைக்கு,,படம், வரைந்த ஓவியர் ஜீவா அண்ணா அவர்கள்,,
அந்த அரசு அலுவலருக்கு ரெண்டு பக்கமும் பாக்கெட் வைத்து வரைந்த சட்டையினைப் பார்த்ததும்,,,, 
அறத்திற்கு,,ஏற்ற,,,,,ஓவியம் தான்,,,என்றே நினைந்தேன்,,,

சட்டம் நீதி அதிகாரம் கடவுள்
என எவற்ரின் முன்பும்
நீயும் அவனும் சமமல்ல

சென்ற நிதியாண்டில் நாட்டுடமை
வங்கிகளில் மொத்த மோசடி எத்தனை கோடி
உனக்கும், எனக்கும் பங்குண்டா ?

பிறகெதற்கு , எவறை
எப்போதும் அஞ்சுகிறாய் ?
மரணம் நிரந்தரம் 
இன்றோ ? நாளையோ ?

அச்சமேன் மானுடவா  ? கவிதையில்,,கேட்கும்,,போது,,இந்த நாட்டின் மீது,,,
இந்த ஆளுமைகளின் மீது,,,
ஒரு தார்மீகக் கோபம்,,எழுந்து கொண்டிருக்கிறது !
ஒரு அறச் சீற்றம் என்பார்களே ? அது ,,,,,,,,,,,
எழுகிறது,,,!

அப்படி எழுந்தால்,,,, ஒரு எழுத்தாளன் வெற்றியடைகிறான் என்றே பொருள் 
அப்படி எழுவதே,,
எழுத்தாளன் விரும்புவதும்,,,,
ஆம் !
நாஞ்சில் நாடன் விரும்புவதும்,,அதுதான்,,,
அதனால் தான்,,,

எவர் எப்படியும் போகட்டும்
செத்துத்தான் போவேன் எனில்
கொடும்பாவம் சிலதைக்
குழிப்படுத்திப் போயேன் !

என்று எழுதுகிறார்,,,


அதிகாரம் கைக்கொள என்ன செய்யலாம் ?
அரசியல் ஒன்றே அறுவழிச் சாலை !
அடியாள் , ஆயுதம், வன்முறை, குற்ரம்
தரகு, பரத்தமை
மூலதனங்கள்
முயன்று பார் !
உத்தமனாக வாழ்ந்தென்ன கண்டாய் ?

அச்சமேன் மானுடவா ? எனும்,,,,
இந்நுலின்,,,
கடைக் கவிதை,,,

ஏதேனும்,,செய்தாக,,வேண்டும்,,,!
என்ன செய்யலாம் ?
இன்று பாரதத்திடை நாய்போலே ஏற்றமின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறிலஞ்சுவாய் போ போ போ

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா !,,, என்று பாரதியைப் பாடி,,
நாஞ்சிலைப் படிப்போம்,, !


02-07-2021 அன்புடன் என்றும்,
கோவை-4 அ.வேலுப்பிள்ளை,
------------------------------------------------------------------------------------------------------------------------


 

Tuesday, May 18, 2021

வேரும் விழுதும்.- க.சுப்ரமணியன்-ஜூன்-2021









ஜூன்-2021

வேரும் விழுதும் .- க.சுப்ரமணியன்

"வெறும் அரசாங்க அலுவல் எனத் தோன்றும் அணைக்கட்டு கட்டும்  விவகாரத்தை உணர்ச்சிச் சாயல் நிறைந்த மானிட முயற்சியாக மாற்றிக் காட்டும் ரஸமிக்க தமிழ் நாவல் -"வேரும் விழுதும்."

52 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் நூல் இது.


 ஜூன்-1970                                                    ஜூன்-2021

Sunday, April 25, 2021

"ஒன்பது குன்று" -பாவண்ணன் மே-2021



 


மே மாத வெளியீடு

பாவண்ணன் அவர்களின்

"ஒன்பது குன்று" அனுபவக் கட்டுரைகள்.

--------------------------------------------------------------------------------------------------------

......நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம் மூழ்குவதுபோல  இக்கட்டுரைகள் ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன. ஒருபோதும் சுமையாக இல்லாத நினைவேக்கம் இது. வருத்தமும் துயரமும் இல்லாதது. சில அரிய மனிதர்களின் சித்திரங்கள் மட்டுமே இவற்றில் உள்ளன. ஒருமுறை ஜெய்ப்பூரைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தபோது, ஒரு வழிகாட்டி ஓர் அரண்மனையைச் சுட்டிக் காட்டி அதில் முன்னூறுக்கும் மேற்பட்ட அறைகள் இருப்பதாகச் சொன்னார்.  ஓங்கிய அதன் பிரும்மாண்டமான தோற்றத்தைப் பார்த்தபோது அவர் சொற்களின் மீது நம்பிக்கை பிறந்தது. மனிதமனமும் அப்படிப்பட்ட ஓர் அரண்மனைதான். ஏராளமான அறைகளைக் கொண்ட விசித்திரமான அரண்மனை. ஒவ்வொரு அறையிலும் யாரோ ஒருவர் குடியிருக்கிறார். இக்கட்டுரைகள் தொகுதியாக வெளிவரும் இத்தருணத்தில் நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்.

https://writerpaavannan.blogspot.com/2021/06/blog-post_6.html?m=1

--------------------------------------------------------------------------------------------------------------

https://bookday.in/pavannans-book-onbathu-kundru-review-by-siddharthan-sundaram/

நினைவில் நின்றவர்கள் – சித்தார்த்தன் சுந்தரம்


சாகித்ய அகாதமி விருதாளர் பாவண்ணனின் புதிய நூல் `ஒன்பது குன்று’ சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடாக மே 2021 அன்று வெளியாகி அதன் வாசகர்களில் ஒருவனான என்னை சில நாட்களுக்கு முன்பு வந்தடைந்தது.

பனிரெண்டு கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூலில் அவர் வெவ்வேறு காலகட்டங்களில் சந்தித்த சில சாமான்ய ஆனால் அவரது நினைவை விட்டு அகல மறுக்கும் அரிய மனிதர்களையும், அவர்களைச் சந்திக்க நேரிட்ட சூழலையும் பற்றி எழுதியிருக்கிறார்.

அவரது வார்த்தைகளில், `நீண்ட காலமாக மூடியே வைத்திருந்த பெட்டியைத் திறந்து பழைய ஆடைகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் தொடர்பான நிகழ்ச்சிகளில் மனம் மூழ்குவது போல இக்கட்டுரைகள் ஒருவித நினைவேக்கத்தில் ஆழ்த்துகின்றன’ என்கிறார். இதை வாசிக்கும் போது நாமும் நம் வாழ்க்கையில் பின்னோக்கிச் சென்று நமக்கு அறிமுகமானவர்களை, நம்மோடு பழகியவர்களை நினைத்துப் பார்க்கும்படியான ஒரு நிலைக்கு எடுத்துச் செல்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனால் எல்லோராலும் இவரைப் போல அந்த நினைவுகளை எழுத்தில் கொண்டுவர முடியுமா என்றால் அதற்கான பதில் எதிர்மறையாகத்தான் இருக்கும்.

கல்லூரி படிப்பின் போது சக வகுப்புத் தோழியும், நல்ல குரல் வளம் கொண்டதால் வாணி ஜெயராம் என நண்பர்களால் அழைக்கப்பட்ட ஆனந்தி குறித்த நினைவை பல ஆண்டுகளுக்குப் பிறகு இரவில் படுக்கச் செல்வதற்கு முன் தனது வீட்டுக் கதவுகள் ஒழுங்காகச் சாத்தப்பட்டிருக்கிறதா, தண்ணீர் குழாய்களை மூடியிருக்கிறார்களா என சரிபார்த்துக் கொண்டே வருகையில் சமையல்கட்டு சன்னலில் தெரியும் வானத்து நிலாவைப் பார்க்கையில் ஆனந்தியின் முகம் நினைவுக்கு வர அது `காற்றினிலே வரும் கீதமாக’ இவரது முகத்தை வருடிச் செல்கிறது.



அடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஊருக்குச் சென்றிருந்த போது சந்திக்கும் செல்லமுத்துவின் அம்மா வாயிலாக ஊரின் நிலையையும், செல்லமுத்துவின் வாழ்க்கை நிலையையும் ஆயா என்று ஆசிரியர் அழைக்கும்

செல்லமுத்து அம்மாவின் வாழ்க்கையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

தனது முப்பத்தேழாண்டு பணி காலத்தில் இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்றிருக்கும் நூலாசிரியர் கர்நாடகாவில் நீண்ட காலம் வேலை பார்த்தவர் என்பதால் அவர் பணி நிமித்தம் சென்ற இடங்களில் பார்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களான ரெளடி என ஊராரால் அழைக்கப்பட்ட தேவகி, முப்பத்தேழாண்டு கால துயரமான தமிழாசிரியர் ஆக வேண்டுமென்கிற ஆசிரியரின் கனவை நினைவூட்டும் ஆசிரியர் ராமகிருஷ்ணன், எம்.ஏ. சோஷியாலஜி படித்தாலும் ஜே சி குமரப்பாவின் கிராமப் பொருளாதாரத்தால் உந்தப்பட்டு நகர வாழ்க்கையை நரகமாக நினைத்து கிராமத்திலேயே பனஞ்சாறு, மோர், தின்பண்டங்கள் விற்கும் திப்பெஸ்வாமி, ஒன்பது குன்று இருக்குமிடத்துக்கு இவரை அழைத்துச் சென்ற பசவலிங்கப்பா, வயதானாலும் தனது சுயமரியாதையை விட்டுத் தராமல் கடைசி வரை உழைத்து வாழ வேண்டுமென்கிற எண்ணம் கொண்ட கங்கய்யா, கெம்மணகுண்டியில் தொலைபேசித் துறைக்குச் சொந்தமான சர்க்கியூட் ஹவுஸில் தான் உபயோகிக்கும் ஊஞ்சல் படுக்கையை அறிமுகப்படுத்திய கேர்டேக்கர் மல்லப்பா, `என்னதான் இருந்தாலும் எருமை ஒரு ஜெண்டில்மேன் தாத்தா’ என பேரன் சொல்ல நடைப்பயிற்சியின் போது தாத்தாவுக்கும் பேரனுக்கும் நடக்கும் உரையாடலைக் கவனித்து வியந்த சம்பவம், தான் வளர்க்கும் மரங்களை நேசிக்கும் ஷிவப்பா, பெங்களூரில் மூலை முடுக்கெல்லாம் முளைத்திருக்கும் தர்ஷிணிகள் (கல்லாவில் பணத்தைச் செலுத்தி கவுண்டரில் நாமே சென்று தேவையான உணவை வாங்கி பெரும்பாலும் நின்று கொண்டே சாப்பிடக்கூடிய உணவகங்கள்) குறித்த அறிமுகமும் பெங்களூரில் விஜயநகரில் தர்ஷணி நட்த்திய ஒருவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹாசனில் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் நினைவுகூர்ந்து நெகிழ்ந்த தருணங்கள், இந்திராநகர் பார்க்கில் சந்தித்த பார்வதியின் `அப்பாவின் குர’லோடு இந்நூல் நிறைவடைகிறது.

ஒவ்வொருவர் குறித்த சம்பவத்தை நினைவுகூரும்போது தனது பணி குறித்தும், அரசு வேலையில் இருப்பவர்கள் கொஞ்சம் `மாத்தி யோசித்தால்’ என்ன மாதிரியான எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டுமென்பதையும் (இடமாற்றம், பதவி உயர்வில் தாமதம் போன்றவை) நாசூக்காக நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

தொலைபேசி இணைப்புக்கு கேபிள் புதைக்கும்போது இருக்கும் விதிகளைப் பற்றி அவர், `அளவுகோல் வைத்து கோடு இழுத்தமாதிரி நேராக இருக்க வேண்டும் என்பது முதல் விதி. பள்ளத்துக்கு இருபுறங்களிலும் காலை வைத்து எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் அது நேராகச் செல்ல வேண்டும். ஒன்றரை அடி அகலத்தோடும் ஐந்தரை அடி ஆழத்தோடும் பள்ளம் இருக்க வேண்டும் என்பதும் இரண்டாவது விதி’ என்கிறார். இது பெரும்பாலான வாசகர்களுக்கு ஒரு முக்கியமான தகவலாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அது போல, புதைக்கப்படும் கேபிள் மீது ஓரடி உயரத்துக்கு மட்டுமே முதலில் மண்ணைத் தள்ளி நிரப்ப வேண்டும். அதன் பின் அதன் மீது வரிசையாக செங்கற்களை அடுக்கிய பிறகு அடுத்த அடிக்குரிய மண்ணைத் தள்ளி நிரப்ப வேண்டும்.


ஏனெனில் எதிர்காலத்தில் யாரேனும் அந்த இட்த்தில் கடப்பாரையால் தோண்ட நேரும் சூழல் ஏற்பட்டால் அந்தக் கடப்பாரைத் தாக்குதலை செங்கற்கள் தாங்கிக் கொண்டு கேபிளைக் காப்பாற்றும். வேலை நிமித்தம் காண்ட்ராக்டர் மூலம் செங்கற்களை வாங்குவதற்குப் பதிலாக நேரடியாக செங்கல் சூளையிலிருந்து வாங்க முயன்றபோது சந்தித்தவர்தான் `ரெளடி’ தேவகி. ஆனால் அவர் உண்மையில் அப்படிப்பட்டவர் இல்லை.தொழில் போட்டி காரணமாக ஊராரல் அவதூறுக்கு உள்ளானவர் என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நூலாசிரியரின் மனிதாபிமானமும், சமூக அக்கறையும், சாத்வீக குணமும், நேர்மையும், அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணமும், இயற்கையின் மீது இருக்கும் அதீத நேசமும் ஒவ்வொரு கட்டுரையிலும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் மேலதிகரிகளின் வெறுப்புக்கு ஆளானாலும் (மாத்தி யோசிக்கும் நூலாசிரியரிடம், `ஒங்களோட இதே பிரச்சனையா போச்சு, ஏதாவது மாத்தி மாத்தி சொல்லிட்டேயிருக்கீங்க….’ என்கிற பொருளில் மேலதிகாரிகளின் உரையாடல்) பணியில் இடையூறு ஏற்படாவண்ணம் பிறருக்கு உதவும் நல்லெண்ணம் பெரும்பாலான கட்டுரைகளில் வெளிப்படுகிறது. குறிப்பாக `மலர்ந்த முகம்’, `திருநீறு பூசிய முகம்’ என்கிற கட்டுரைகளில் அவை அழுத்தமாக பதிவாகியிருக்கிறது.

இந்த நூலில் இருக்கும் பனிரெண்டு கட்டுரைகளை வாசிக்கும் போது நம்மையும் அவர் எழுத்தின் மூலம் கர்நாடகா முழுவதும் பயணிக்க வைக்கிறார் என்கிற வகையில் இதை ஒரு பயணக் கட்டுரை நூலென்றும் சொல்லலாம்.

இந்நூலை வாசித்து முடிக்கும் தருணத்தில் முன்பே ஆர்டர் செய்திருந்த இவருடைய `வற்றாத நினைவுகள்”, `நான் கண்ட பெங்களூரு’ நூல்கள் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு வந்து சேர்ந்தன.

ஒன்பது குன்று
பாவண்ணன்
சிறுவாணி வாசகர் மையம்
விலை: ரூ. 140/-

----------------------------------------------------------------------------------------------------

https://padithenpagirnthen.blogspot.com/2021/07/blog-post.html

ஒன்பது குன்று - பாவண்ணன் - சிறுவாணி

 

ஒன்பது குன்று

பாவண்ணன்

சிறுவாணி வாசகர் மையம் -
8778924880

 


பாவண்ணன் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர் என்பதில் வாசகனுக்கு எப்போதுமே சந்தேகம் இருப்பதில்லை. வாழ்க்கைக்கும் எழுத்துக்குமான உறவு, ஒன்றை இன்னொன்று மேம்படுத்துவதும், ஆதாரப்பட்டு நிற்பதும் வெளிச்சத்தில் வைத்து பார்ப்பதும்தான் என்பதை நம்பும் மனிதர். தவிரவும் அவரது வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியை காண்பது இயலாது. அதே சமயம் அது கோஷங்களாலும், உயர்வு நவிற்சிகளாலும், போதனைகளாலும் திணற அடிக்காமல் எழுதக்கூடியவர்.  பாசாங்கு இல்லாமல் எழுதக் கூடியவர். ஆரவாரம் இல்லாமல் தொடர்ந்து இயங்கக் கூடியவர்.

 என்னுடைய ஆசிரியரும், எழுத்தாளருமான சபாநாயகம் பல வருடங்கள் முன்பு இவருடைய துங்கபத்திரை கட்டுரை தொகுப்பு பற்றி விரிவாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாவண்ணனின் பங்களிப்பு குறித்து சிலாகித்தார். அதுபற்றி அவர் விமர்சன கட்டுரை எழுதி இருந்தார் என்றே நினைக்கிறேன்.

 பாவண்ணனின் புதிய தொகுப்பு ‘ஒன்பது குன்று’ – சிறுவாணி வெளியீடு. இது அனுபவக் கதைகளின் தொகுப்பு.

 இதில் கர்நாடகத்தில் பணியாற்றிய பகுதிகளின் பின்புலத்தில் உள்ள கதைகள் என்பதால் கர்நாடகத்தின் மலைப்பரப்பை, நிலப்பரப்பை நமக்கு தமிழ் மனத்தோடு அறிமுகப் படுத்தும் சில கதைகள். எல்லாமே நிஜவாழ்வின் அனுபவ வாசனைகளைக் கொண்டவை. ஆகவே வாழ்வின் அனுபவங்களை – அது இனிதோ கசப்போ – வாழ்வின் கூறாக பார்க்கும் மனநிலையை நமக்கு நினைவூட்டுகின்றன இந்த கதைகள். ஒரு வெறும் செய்தி, சம்பவம் எப்படி கலையாகிறது என்று பார்ப்பதற்கு ஒருவருக்கு தெரிய ஆரம்பிக்கும்போது வாழ்க்கையின் சாரம் பிடிபடுகிறது. அதனாலேயே பாவண்ணன் முக்கியமானவராகிறார்.

 உதாரணமாக, ஒரு மலைப்பகுதிக்கு சர்வே செய்வதற்காக உதவியாளர் ஒருவருடன் செல்கிறார். அலுவலகங்களில் – குறிப்பாக அரசாங்க அலுவலகங்களில் இலக்கியம் அல்லது வாசிப்பு குறித்த விஷயங்கள் பேசப்படாது. ஒருவருடைய எந்த மேலதிக திறமையும் அங்கீகாரம் பெறாது. அடையாளம் கூட பெறாது.  (கவிஞர் பிரும்மராஜனை பார்க்கவேண்டும் என்று கல்லூரி ஆசிரியர்கள் பலரிடம் கேட்டேன். ஒருவருக்கு கூட தெரியவில்லை. நிலைமை அதுதான்.) அதுபோல் உடன் வரும் உதவியாளரோடு இவர் செல்லும்போது வாகனத்தை நெருங்கும்போது அவர் சட்டென இவரை குறுக்கே கைநீட்டி நிறுத்தி சப்தம் போடாம இருக்குமார் சொல்லி வாகனத்துக்கும் மேலிருக்கும் பறவையை காட்டுகிறார். அது மீன்கொத்தி என்று கேட்கும்போது ஆமாம் என்று சொல்கிறார். பறவைகள் பற்றிய ரசனை அவருக்கு தெரிந்திருக்கிறது. இவர் அவரிடம் தொடர்ந்து  பேசும்போது பறவைகள் குறித்த புத்தகத்தை இருவரும் படித்திருப்பதை பரஸ்பரம் உணர்கிறார்கள். காட்டை பற்றிய ரசனையாக அவர்கள் நட்பு விரிகிறது. ஒரு மீன்கொத்தி இது வரை பழகிய உதவியாளர் ஒருவரின் வேறொரு கதவை திறந்து விடுகிறது.(ஒன்பது குன்று)  நமது நடப்பு வாழ்க்கையில் கூட இப்படித்தானே இருக்கிறது !

பூங்காவில் நடை பயிற்சி முடித்துவிட்டு உட்கார்ந்திருக்கும்போது பூங்காவின் பராமரிப்பு, நேர்த்தியான தரைப் பலகைகள் போன்றவற்றை கவனிக்கிறார். ஒரு சிறு குழந்தை கீழே விழுந்த நாவல் பழத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறது. அதன் அம்மா வாயிலிருந்து பிடுங்கி வெளியே போட்டுவிட்டு சுத்தமின்மை பற்றி சொல்லி திட்டுகிறார். சிறு குழந்தை ஏக்கத்துடன் செல்கிறது. இதை பார்த்த இவர் ரொம்பதான் சுத்தம் பாக்கிறாங்க ..குழந்தை பாவம் என்கிறார். பக்கத்திலிருந்த ஒரு நடுவயது பெண்மணி ஆமாம் என்று தன்னிச்சையாக ஆமோதிக்கிறார். நேரில் போய் இதில் என்ன சுத்தம் கேட்டுவிட்டது. ஊதி சாப்பிடவேண்டிய பழம்தானே அது என்று சொல்ல நினைத்து பிறகு சும்மா இருந்துவிட்டதை சொல்கிறார். ஒரு எதேச்சையான இந்த பேச்சில் அந்த பெண்மணியின் அப்பாதான் இந்த பூங்காவை பரமாரித்து உண்டாக்கியவர் என்றும்  எங்கிருக்கும் சில மரங்கள் தான் நட்டவை தன்சகோதரர்கள் நட்டவை என்று சொல்கிறார். அவர் தனது வாழ்க்கையில் தனிமரமாகி விட்டதையும், இந்த மரங்கள் மீது நினைவோட்டமாக தன்னுடைய அப்பாவின் குரல் தினமும் கேட்பதாகவும் சொல்கிறார். கடைசி காலத்தில் தன்னை ஒரு முறை பெயர் சொல்லி அழைப்பதற்குள் நூறு முறை இருமும் இருமல் சத்தமும் சேர்ந்து கேட்கிறது என்று முடியும் இந்த கதையில் சக மனிதரோடு பேசும் ஒரு வார்த்தை எப்படி நேயமிக்க ஒருவராக மாறுகிறது என்பதை பார்க்க முடிகிறது. (அப்பாவின் குரல் )

தொகுப்பின் மிகச்சிறந்த கதைகள் – மலர்ந்த முகம், திருநீறு பூசிய முகம் என்று சொல்லலாம்.

இரண்டு முக்கியமான அம்சங்களை மட்டும் சொல்லி பாவண்ணனின் இதயம் எங்கே இருக்கிறது என்பதை கோடிடுகிறேன்.

BSNL தொலைபேசி துறையில் கேபிள்களை பூமியில் பதிப்பது (இன்று அந்த துறையையே புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்) என்பது ராட்சச வேலை. பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் அமைக்கப்படவேண்டும். அதற்கு இரண்டு லட்சம் செங்கல்கள் வேண்டும். பொதுவாக ஊரில் முக்கியமான ஆளை கூப்பிட்டால் அவர் ஏற்பாடு செய்வார். உற்பத்தியாளருக்கு 50% தான் போய்சேரும். அரசு தரும் பணம் நேரடியாக அவர்களுக்கு போனால் கஷ்டப்படும் அவர்கள் எவ்வளவு சந்தோஷம் அடைவார்கள் என்று உயர் அதகாரியிடம் கேட்கிறார். நாம் என்ன சமூக சேவையா செய்யப்போறோம் ? இந்த இடத்தில் வேலை முடிஞ்சா கிளம்பி வேற இடம் போகபோறோம். செங்கல் வியாபாரியை யார் தேடி பிடிக்கறது ? சப்ளை ஒழுங்கா இல்லாம போனா என்ன செய்வது. மேலும் அரசு வேலை என்பதால் பணம் பின்னால்தான் வரும் .இதெல்லாம் யார் ஒத்துப்பா ? என்று சொல்ல்விட்டு – வேலை நடக்கணும் பிறகு உங்களிஷ்டம் என்று சொல்கிறார். இவர் உற்சாகமாக உதவிக்கு ஒரு ஆளை படித்துக்கொண்டு சுற்றி அலைந்து, பலர் மறுக்க, ஒரு பெண்ணை ‘ரவுடி பொம்பளை ஒருத்தி இருக்கா’ என்று சொல்கின்றனர். ஊரு அவளை அப்படித்தான் அழைக்கிறது. இவர் சூளைக்கு செல்லும்போது சற்று கறாராக இருக்கும் அவரிடம் இவர் விவரிக்கிறார். அவருக்கு வங்கி கணக்கு கூட இல்லை. இவர் எல்லாம் ஏற்பாடு செய்கிறார். செங்கல் சப்ளை ஆகிறது. இதற்கிடையே அந்த பெண்ணின் கணவன் குடிகாரன். பொறுப்பற்றவன். அவன் சரியாக கூடி வாழ்வது கூட இல்லை. ஆகவே இந்த பெண்தான் சூளையில் கூலி வேலை செய்த பெண், மெதுவாக சுயமாக தொழில் ஆரம்பிக்கிறார். ஒரு பெண் சுயமாக சம்பாதிப்பதை பொறுத்துக் கொள்ளாத பலரும் அவளை ரவுடி என்று முத்திரை குத்துகிறார்கள். எங்க ஊருக்கு கேபிள் வேலை செய்வதாக இதற்கு ஒத்துக் கொள்கிறேன் என்கிறாள் அவள். அது சரி கேபிள் புதைக்க செங்கல் எதற்கு ? என்று கேட்கிறாள்? செங்கல்லையும் சேர்த்து அடுக்கி புதைக்கும்போதுதான் அது சேதம் ஆகாமல் இருக்கும் என்று சொல்கிறார் “பொம்பளைக்கி ஆம்பளை துணையா போறானே அந்த மாதிரின்னு சொல்லுங்க” என்று தான் புரிந்து கொண்ட விதத்தில் சொல்கிறாள்.  “சேதாரமாயிட்ட அப்பிடியே விட்டுட்டு போயிடுவிங்களா?” என்று வறண்ட புன்னகையுடன் கேட்கிறாள். “அதெப்படி உட முடியும்? ரிப்பேர் பண்ணி சேத்து வைச்சிருவோமில்லே” என்று சொல்கிறார்.  எல்லோரும் சிரிக்கிறார்கள். இதில் அந்த பெண்ணின் மன அமைப்பை எளிமையாக சொல்லிவிட்டு போகிறார் பாவண்ணன. இறுதியாக அவள் ஒரு கவரை எடுத்துக்கொண்டு வருகிறாள். ஏதோ பிரச்சனை என்று இவர் நினைக்கும்போது அது காசோலை வந்த உறை. அது உங்களுக்கு வந்த கடிதம்தான். உங்களுக்கு பணம் வந்திருக்கு என்று சொல்கிறார். அது . மொதமொதல்ல வந்திருக்கு. நீங்களே பிரிங்க என்று சொல்லி தருகிறாள். அதில் இருக்கும் பணம் அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது. இடை தரகர் மூலம் செய்திருந்தால் இந்த அளவு பண அவளுக்கு வந்திருக்காது. ஆனால் அந்த வரியை இவர் எழுதுவதில்லை. அவள் கண்ணில் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. கள்ளிச்செடியில் பூவில் எழுந்து மறைந்த மின்னலை நினைவுபடுத்தியது என்று முடிக்கிறார். தரகர் இல்லாமல் நேரடி கொள்முதல் செய்து வேலையை முடிக்கும் கதையை அவர் சொல்கிறார். கதை முடிந்த பிறகு, அதில் வரும் பெண்ணின் மனத்திட்பம், ஊராரின் பொறாமையும் ஏச்சும், அவளது குடும்ப வாழ்வின் இடைவெளி, அதை அவளது தொழில் இட்டு நிரப்பும் முறை, தரகர்களை தவிர்த்தால் உழைப்பவன் பெறக்கூடிய முழு வெகுமதியின் சாத்தியம் இவை மேலே மிதந்து வருவதைப் பார்க்கலாம்.

மற்றொன்றில் பள்ளம் தோண்டும் வேலைக்கு பாதியில் படிப்பை விட்டுவிட்டு சோம்பி திரியும் இளைஞர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு இந்த பணியை தர முயற்சித்து செய்து காட்டுகிறார். பள்ளம் தோண்டும் வேலை என்று அதை குறையாக பார்க்காமல் வேலை செய்யவேண்டும்.  குறிப்பிட்ட அளவு நாட்கள் ஒரு வருடத்தில் தினக்கூலியாக வேலை செய்திருந்தால் துறைக்குள் வேலைக்கு நுழையும் சாத்தியமும் சட்டமும் இருப்பதை சொல்கிறார். அப்படி பலர் பயன் பெறுகிறார்கள். எத்தனை நேர்த்தியான அணுகுமுறை. இதெல்லாம் அவர் நிஜ வாழ்வில் செய்தவை.

புத்தக தலைப்பு கதை மிக நல்ல கதை. ஒன்பது குன்றுகள் என்று பன்மையில் இல்லாமல் ஒன்பது குன்று என்று ஏன் இருக்கிறது? கதையை வாசிக்கும்போது அது இலக்கணத்தை தாண்டிய அனுபவம் என்பதை நாம் உணரமுடியும்.

இதற்கு மேல் கதைகளை சொல்வதைவிட, தொகுப்பை வாங்கி வாசிக்கும்போது மட்டுமே முழு வாசிப்பு திருப்தியை நாம் அடையமுடியும்.


------------------------------------------------------------------------------------------------------------

https://youtu.be/1LN2U4-OWLE

 வணக்கம் சார். என்னுடைய YouTube Chennel பெயர் - மொழிவனம். தொடர்ச்சியாகப் பல்வேறு நூல்கள், கட்டுரை, புனைகதை, திரைப்படம் குறித்து உரையாற்றி வருகிறேன். இன்று பாவண்ணின் ஒன்பது குன்று நூலில் இருந்து மறக்க முடியாத மனிதர்கள் பற்றிப் பேசினேன். வாய்ப்பிருப்பின் பார்க்கவும் சார். நன்றி. தங்களது சிறுவாணி வாசகர் மையம் மூலமாக நல்ல நூல்களை வாசிக்கிறேன். நன்றி.

Dr Balasubramaniam

-----------------------------------------------------------------------------------------------------------------

ஒன்பது குன்று - ஆசிரியர் அவர்களின் மலரும் நினைவுகளாக அமைந்திருக்கும் இந்த கதைகட்டுரைகள்  நூல்,  நழுவிக் கொண்டே இருக்கும் விழுமியங்கள் குறித்து அசை போட , குறிப்பாக இந்நூலை வாசிக்கும் இளம் மற்றும் மத்திம வயதினரின் மனதில் லட்சிய வைராக்கியத்தை விதைக்க கூடிய ஒரு நேர்மறை கையேடு. இந்த கதை மனிதர்களுக்கு  அவர் தம் வாழ்வில் வென்று எடுக்க புதிய பொருளோ புதிய நிலங்களோ இல்லை, தாமே கனிந்த அந்த ஒரு கனம் முதல் மனதில் சூல் கொண்ட அந்த வைராக்கிய சுடரை துணை நிறுத்தி பகிர முடியாத ஞானத்துடன் செயல் யோகத்தில் அமர்ந்து விட்டவர்கள், அவர்கள் சுட்டவது எல்லாம் செயலயே , சமுதாயத்தால் வெற்றி அல்லது சாதனை என்று அறுதியிட்டு கூறும் தளங்கள் அல்ல இவர்கள் இயங்குமிடங்கள், தினசரி வாழ்வின் தளத்திலேயே இவர்கள் செயல் யோகம் அமைந்திருக்கிறது , காலத்தின் ஞானம் உணர்ந்து சமுதாய பெரும்போக்கிற்கு இணையான நேர்மறையான ஒரு எதிர்வினை இவர்கள் வாழ்வு , கால மாற்றங்களை தாண்டி நம்மை அழைத்து செல்லும் பகிர முடியாத ஞான சுடரை அணையாது தங்கள் வாழ்வையே செய்தியாக்கிய மாமனிதனின் தடம் பற்றிய வைராக்கிய மனிதர்கள் குறித்த கதைகட்டுரைகள் இந்நூல், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு நன்றி

நன்றி.திருமலையப்பன் அவர்கள்

------------------------------------------------------------------------------------------------------------------

நீங்கள்  இம்முறை அனுப்பிய புத்தகங்களில் பாவண்ணனின் "ஒன்பது குன்று" அருமையான புத்தகம். அதில் வரும் மனிதர்களும் இயற்கைக் காட்சிகளும் மனத்தை நிறைத்து விடுகிறது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

 எழுத்தாளர் அம்பை

---------------------------------------------------------------------------------------------------------------------

முன் பிறவிப் புண்ணியத்தால் பல நல்ல புத்தகங்களை வாசிக்கும் பாக்கியம் இப்பிறவியில் எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு சிறந்த புத்தகம் - பாவண்ணன் அவர்களின் ஒன்பது குன்று - இப்போது வாசித்துக் கொண் டிருக்கிறேன். சிறுவாணிக்கு நன்றி !

திருமலையப்பன் திண்டுக்கல்



ஓவியர் ஜீவா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையத்தின் அடுத்தடுத்த மாதங்களின் புத்தகங்களை அளித்தபோது.....
-------------------------------------------------------------------------------------------------------------



நாஞ்சில்நாடன் விருது விழா -2026

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்...